ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரினால் இன்று காலை இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இந்த செயலணி பல்வேறு தரப்பினரை சந்தித்து தமது கருத்துக்களை கேட்டறிந்தது.

இதன்படி தயாரிக்கப்பட்ட அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

கந்தக்காடு தடுப்பு முகாமில் இருந்து 600 கைதிகள் தப்பியோட்டம்!

பொலனறுவை கந்தக்காட்டில் அமைந்துள்ள புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளில் 600 பேர் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு இரண்டு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலை தொடர்ந்து இவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மோதலின் போது ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தப்பிச் சென்றவர்களை தேடி கந்தக்காடு, பொலனறுவை பகுதியில் தீவிர தேடுதல்களில் இராணுவமும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் அரச நிர்வாகிகளின் கவனத்திற்கு

நிலாந்தன்

பள்ளிஹகார முன்பு வட மாகாண ஆளுநராக இருந்தவர். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் ஆணையாளர் களில் ஒருவர்.இவர் தமிழ்ப் பகுதிகளில் உள்ள நிர்வாகக் கட்டமைப்பின் வினைத்திறனை குறித்து உயர்வான அபிப்பிராயத்தைக் கொண்டிருந்ததாகத் தெரியவருகிறது. போர்காலத்தில் மிக நெருக்கடியான ஒரு சூழலில் நிர்வாகம் செய்து பழகிய தமிழ் அதிகாரிகளிடமிருந்து முழு நாடும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறுவாராம்.

அதில் உண்மையும் உண்டு.நெருக்கடியான காலகட்டத்தில் இரண்டு நிர்வாகங்களுக்கு இடையே செயல்படுவது என்பது கயிற்றில் நடப்பது போன்றது. மூத்த தமிழ் நிர்வாகிகள் பலரிடம் அந்த ஆற்றல் இருந்தது. ஆனால் அண்மை நாட்களாக தமிழ்ப் பகுதிகளில் காணப்படும் எரிபொருள் வரிசைகளை வைத்துப் பார்த்தால் அப்படியான நிர்வாகத்திறமை எங்கே போனது என்று கேட்கத் தோன்றுகிறது.

இது நாடு முழுவதற்குமான ஒரு தோற்றப்பாடு, இதில் தமிழ்ப் பகுதியை தனித்துப் பார்க்க முடியாது என்று ஒரு விவாதம் முன்வைக்கப்படலாம்.ஆனால் டெல்டா திரிபு வைரஸ் நாடு முழுவதையும் தாக்கியபோது தமிழ்ப் பகுதிகள் ஒப்பீட்டளவில் ஸ்திரமாக காணப்பட்டன. இறப்பு விகிதமும் ஒப்பீட்டளவில் தமிழ் பகுதிகளில் குறைவு என்று கூறப்படுகிறது. யுத்தமும் வைரசும் ஒன்று அல்ல என்பதனை ராஜபக்ஷக்களுக்கு உணர்த்திய ஒரு நெருக்கடி அது. டெல்டா திரிபு வைரஸின் தாக்கத்தின்போது தமிழ்ப் பகுதிகளில் மருத்துவ சுகாதார கட்டமைப்புக்கள் இயங்கிய விதம் முன்பு யுத்த காலகட்டத்தில் கிடைத்த அனுபவத்தின் விளைவு என்றும் எடுத்துக் கொள்ளலாமா?

இவ்வாறாக அனர்த்த காலங்களின்பொழுது தமிழ் மக்களின் கூட்டு உளவியலும் சரி தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய நிர்வாக கட்டமைப்புகளும் சரி முன்னைய யுத்த கால அனுபவத்தை அடியொட்டி சிறப்பாக செயல்பட முடியும். ஏனென்றால் இந்த பூமியிலே யாருக்கும் கிடைக்காத நூதனமான அனுபவங்கள் தமிழ் மக்களுக்கு கிடைத்தன. இந்தப்பூமியிலேயே யாரும் அனுபவித்திராத துன்பங்களை தமிழ்மக்கள் அனுபவித்திருக்கிறார்கள்.நவீன வரலாற்றில் மரணத்தின் ருசி மிகத்தெரிந்த மக்கள் கூட்டங்களுக்குள் தமிழ் மக்களும் அடங்குவர்.மரணத்தோடு நீண்டகாலம் உரையாடிய மக்கள் அவர்கள். மரணத்துள் வாழ்ந்து தப்பிப் பிழைத்த மக்கள் அவர்கள். அதாவது சாவினால் சப்பித் துப்பப்பட்ட மக்கள். ஒரு இனப் படுகொலையில் தப்பிப் பிழைத்தவர்கள். தமிழ் அதிகாரிகள் போரிலீடுபட்ட இரண்டு தரப்புக்களுக்கும் இடையே சான்ற்விச் ஆக்கப்பட்டவர்கள்.இக்கூட்டு அனுபவங்களின் ஊடாகவே தமிழ் மக்கள் எந்த ஒரு நெருக்கடியையும் எதிர்கொள்வார்கள்.

யூதர்களின் வரலாற்றைக் கூறும் எக்சோடஸ் என்றழைக்கப்படுகின்ற நாவலில் அதன் ஆசிரியர் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும்போது இவர் இந்த பெயருடைய நாசி வதைமுகாமின் பட்டதாரி என்று அறிமுகப்படுத்துவார். அதாவது நாசி வதை முகாம்களில் இருந்து தப்பிய ஒவ்வொரு யூதரும் பட்டப்படிப்புக்கு நிகரான அனுபவங்களை கொண்டிருந்தார் என்று பொருள். இது தமிழ் மக்களுக்கும் பொருந்தும்.தமிழ் மக்களைப் பொருத்தவரை எல்லா இடப்பெயர்வுகளும் புலப்பெயர்ச்சிகளும் அவர்களுக்குப் பட்டப்படிப்புகள்தான். எல்லாக் கூட்டுக் காயங்களும்,கூட்டு மனவடுக்களும் சித்திரவதைகளும், அகதிமுகாம்களும் நலன்புரி நிலையங்களும் அவர்களைச் செதுக்கின. இப்படிப் பார்த்தால் இந்தப் பூமியிலேயே மிகக்கொழுத்த அனுபவங்களைக் கொண்ட மக்கள். இப்படியான அனுபவத்தைக் கொண்ட ஒரு சமூகம் இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையின்போது எப்படிச் செயல்பட வேண்டும்?

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இவ்வளவுதான் எரிபொருள் உண்டு என்றால் அந்த அடிப்படையில் வாகனங்களை முதலில் பதிவு செய்து டோக்கன் கொடுத்து ஏதோ ஒரு முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகத்தை கொண்டு வரலாம் தானே? ஏன் இப்படி நாட்கணக்காக வாகனங்களையும் சாதிகளையும் தெருவோரங்களில் நிறுத்தி வைக்க வேண்டும்?

எரிபொருளுக்காக காத்திருக்கும் மக்களில் ஒரு பகுதியினரைப் பார்த்தால், ஒரு இனப்படுகொலையில் இருந்து கற்றுக்கொண்ட மக்களாகத் தெரியவில்லை.ஒருபகுதியினர் வரிசைகளில் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறார்கள்.ஒரு பகுதியினர் திரும்பத் திரும்ப எரிபொருளை மீள நிரப்புகிறார்கள்.அதை ஒரு குழுவாகத் திட்டமிட்டு வியாபாரமாகச் செய்கிறார்கள்.அந்த எரிபொருள் கறுப்புச் சந்தையில் ஒரு லீற்றர் 1000 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. நிர்வாகம் சீர்குலைந்தால் கள்ளச் சந்தையும் பதுக்கலும் தலைவிரித்தாடும். யார் அதைக் கட்டுப்படுத்துவது? தெற்கில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் பொறுமையிழந்து மோதலுக்கு போனால் அதை போலீஸ் கட்டுப்படுத்துகிறது.ஆனால் வடக்கில், விசுவமடுவில் அதை ராணுவம் கையாண்டிருக்கிறது.

 

எரிபொருள் வரிசைகள் மட்டுமில்ல, கடந்த வாரம் பாடசாலைகளை இயக்குவது தொடர்பிலும் அவ்வாறான குழப்பத்தைக் காணமுடிந்தது.இங்கு முதலில் ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும். எரிபொருட் தட்டுப்பாடு காரணமாக அன்றாட வாழ்வின் அசைவுகளை மட்டுப்படுத்த வேண்டியிருக்கிறது. எனினும் தனியார் கல்வி நிறுவனங்கள் குறிப்பாக கல்விப் பொதுச்சாதாரணம், உயர்தரம்,மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் போன்ற தேசிய பரீட்சைகளுக்கான தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து இயங்குகின்றன.அவற்றை நோக்கி ஆயிரக்கணக்கில் தமது பிள்ளைகளை பெற்றோர் மோட்டார் சைக்கிள்களில் ஏற்றி இறக்குகிறார்கள். ஒரு நண்பர் பகிடியாக சொன்னார்…..பெட்ரோல் கியூவில் நிற்கும் ஒரு பகுதியினர் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தமது பிள்ளைகளை அழைத்துச் செல்வதற்காகத்தான் எரிபொருளைச் சேமிக்கிறார்களா? என்று.

அரசாங்கம் மாறிமாறி அறிக்கைகளை விடுகிறது.ரணில் விக்ரமசிங்க பிரதமராக வந்த பின்னரும்கூட நாட்டில் அரசாங்கம் என்ற ஒன்று உண்டா என்று கேட்குளவுக்குத்தான் நிலைமை தொடர்ந்தும் காணப்படுகிறது. எனவே இந்த விடயத்தில் அரசாங்கம் குழம்பிப் போனதால் நிர்வாக அதிகாரிகளும் குழம்பிப் போனார்கள்,நிர்வாகக் கட்டமைப்பும் குழம்பிபோய் விட்டது,என்று ஒரு விளக்கத்தை தரமுடியும்.

கடந்த வாரம் பாடசாலைகளை திறப்பதா இல்லையா என்ற விடயத்தில் முடிவெடுக்க முடியாத ஒரு நிலைமை காணப்பட்டது. முதலில் பாடசாலைகளை குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மூடப்போவதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் அது மேல் மாகாணத்துக்கு மட்டுமே பொருந்தும்,என்றும் ஏனைய மாகாணங்களுக்கு பொருந்தாது என்றும் பின்னர் தெளிவுபடுத்தப்பட்டது. அதேசமயம் கிட்ட உள்ள பாடசாலைகளில் மாணவர்கள் கல்வி கற்கலாம் என்று கூறப்பட்டது.மேலும் இணைய வழியிலும் வகுப்புகளை நடத்தலாம் என்று கூறப்பட்டது. அதாவது ஹைபிரிட் முறைமை. முடிவில் அதிபர்கள் தற்துணிவாக முடிவெடுக்கலாம் என்று கூறப்பட்டது.

ஆனால் இப்போதுள்ள நிர்வாகக் கட்டமைப்பில் நெருக்கடிக்குள் ரிஸ்க் எடுத்து துணிவாக முடிவெடுக்க எத்தனை அதிபர்கள் தயார்? அவ்வாறு ரிஸ்க் எடுத்து முடிவெடுக்கக்கூடிய ஒரு நிர்வாகக் கட்டமைப்பு நாட்டில் உண்டா? துணிந்து முடிவெடுக்கும் அதிபர்கள் அதன் விளைவுகளுக்கும் பதில் சொல்ல வேண்டும்.அவர்கள் எத்தனை பேருக்கு பதில் சொல்ல வேண்டும்?கல்வித் திணைக்களம், பெற்றோர்,பழைய மாணவர் என்று எல்லாத் தரப்பும் அதிபரைத் தான் பிடுங்குவார்கள்.கிளிநொச்சி மாவடடத்தைச் சேர்ந்த ஒரு அதிபர் பின்வருமாறு முகநூலில் எழுதியிருந்தார்…”நினைச்சு நினைச்சு கலியாணம் முடிக்கிறாங்கள்.என்னெண்டு பிரயோக முடிவுகளை எடுப்பது? சீ”.

இதுவிடயத்தில் நிர்வாகக் கட்டமைப்புக்கள் மட்டும் குழம்பிப் போயிருந்தன என்பதல்ல,ஊடகங்களும் குறிப்பாக இணையவழி ஊடகங்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு நிலைமையைக் குளப்பின என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.ஒரு செய்தியின் மூலத்தை விசாரிக்காமல் பரபரப்பிற்காக செய்திகளைப் போடும் ஒரு போக்கை சமூக வலைத்தளங்கள் வளர்த்துவிட்டிருக்கின்றன.இதனால்,உண்மையை விட வதந்தியே அதிகம் பரவலாகச் சென்றடைகிறது.இது கடந்த ஞாயிற்றுக்கிழமையும் நடந்தது.பதினோரு மணியளவில் அடுத்த நாள் பாடசாலைகள் இயங்காது என்று இணைய ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்தன.ஆனால் சுமார் அரை மணித்தியால இடைவெளிக்குள் அச்செய்தியை அதே ஊடகங்கள் மறுத்தன. நாட்டைக் குழப்புவதில் உறுதிப்படுத்தப்படாத செய்திகள்,அல்லது பரபரப்பு செய்திகளுக்கும் ஒரு பங்கு உண்டு.குறிப்பாக பொருட்கள் பதுக்கப்படுவதற்கும் விலைகள் உயர்வதற்கும் பரபரப்புச் செய்திகளும் ஒரு விதத்தில் காரணம். ஓர் அனர்த்த காலத்தில் மக்களை குழப்பாமல் இருக்க வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கும் உண்டு.

அத்தியாவசிய சேவைகளுக்குரிய நிர்வாகக் கட்டமைப்பின்படி நாட்டின் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளருக்கு கீழ் ஒவ்வொரு மாவட்டச் செயலரும் பதவி வழியாக பிரதி அத்தியாவசிய சேவைகள் ஆணையாளராகச் செயற்பட முடியும்.அதாவது மாவட்ட செயலர்களுக்கு அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக முடிவெடுக்கத் தேவையான முழு அளவு அதிகாரம் உண்டு. அவர்கள் தமது மக்களுக்காக ரிஸ்க் எடுக்கத் தயாராக இருந்தால் சரி. ஆனால் தமிழ்ப் பகுதிகளில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட சட்டமன்றங்கள் இல்லை. இதனால் கொழும்பினால் நேரடியாக நிர்வகிக்கப்படும் நிர்வாகக் கட்டமைப்பே உண்டு. இதுவும் தமிழ் நிர்வாகிகளின் சுயாதீனத்தை கட்டுப்படுத்துகிறது.

இவ்வாறான ஒரு நிர்வாகச் சூழலில்ஆளுநர் ஒருவரின் கூற்றில் தொடங்கிய இக் கட்டுரையை மற்றொரு ஆளுநரின் அறிவிப்பில் முடிக்கலாம் என்று நினைக்கிறேன்.சில நாட்களுக்கு முன் வடமாகாண ஆளுநரின் அறிவிப்பு ஒன்றை ஊடகங்களில் பார்க்க முடிந்தது. எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் மணிக்கணக்காக காத்திருக்கும் மக்களுக்கு உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இயன்றவரை நீராகாரத்தை வழங்குமாறு ஆளுநர் கேட்டிருக்கிறார்.அது ஒரு மனிதாபிமான நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒரு மாகாண ஆளுநர் அதைவிடக்கூடுதலாகச் செய்யவேண்டிய ஒரு வேலை இருக்கிறது. எரிபொருள் வரிசைகளை எப்படிப் புத்திபூர்வமாக ஏதோ ஒரு முறைமைக்குள் கொண்டு வரலாம் என்று சிந்திப்பதே அது. பதவி வழி அதிகாரமுடைய நிர்வாகிகள் துணிந்து ரிஸ்க் எடுக்க வேண்டிய ஒரு காலகட்டம் இது. தமிழ் அதிகாரிகள் மதிப்புக்குரிய,முன்னுதாரணம்மிக்க இறந்தகால அனுபவங்களைப் பின் தொடர வேண்டும்.

22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் வர்த்தமானியில்!

22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான அடிப்படைச் சட்டமூலத்திற்கு நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்டவரைஞரால் இருபத்திரண்டாவது அரசியலமைப்பு திருத்தம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு இணங்கியொழுகவில்லை என்பதை சட்டமா அதிபரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, இருபத்திரண்டாவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஒருநாள் கடவு சீட்டு சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை

கடவுச்சீட்டு ஒருநாள் சேவை துரிதப்படுத்தப்படும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.இதற்காக யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை ஆகிய பிராந்திய அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதன்முதல் கட்டமாக, யாழ்ப்பாணத்தில் உள்ள குடிவரவு, குடியகல்வு அலுவலகத்தில் தனது பிரத்தியேகப் பணத்தை முதலீடு செய்து ஒருநாள் சேவை ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

தற்போது கடவுச் சீட்டைப் பெறுவதற்கும் நீண்ட வரிசையில் காத்திருப்பதாகவும், இந்த நிலைமையை மாற்றியமைப்பதாகவும் அமைச்சர் தம்மிக்கப் பெரேரா தெரிவித்துள்ளார்.இதனைத் தவிர மேலும் ஐந்து இடங்களில் பிராந்திய அலுவகங்களையும், ஒருநாள் சேவையையும் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

அமெரிக்க தூதரகத்தின் கவனத்திற்கு? -Elanadu Editorial

இலங்கையை மீட்கும் முயற்சிகளுக்கு உதவுவது தொடர்பில் அமெரிக்கா
ஆராய்வதாக தெரிகின்றது. இதனடிப்படையில் கடந்த இரண்டு வாரங்களில்,
சிறு மற்றும் நடுத்தர வியாபார முயற்சிகளுக்கான உதவியாக 120 மில்லியன்
டொலர்களையும், பாலுற்பத்தி தொழிற்துறை மேம்பாட்டிற்காக 21 மில்லியன்
களையும், 5.75 மில்லியன்களை மனிதாபிமான உதவிக்கானதாகவும்
அமெரிக்கா அறிவித்திருக்கின்றது. இதனைத் தொடர்ந்து, நிலைமைகளை
ஆராயும் நோக்கில், அமெரிக்க உயர்மட்ட குழுவினர் இலங்கை வரவுள்ளனர்.
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவுற்றதை தொடர்ந்து பேசுபொருளான
மனித உரிமைகள் நிலவரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இப்போதும்
அது கேள்விக்குறியுடனேயே நகர்கின்றனது. கடந்த பதின்மூன்று வருடங்
களாக மேற்கொள்ளப்பட்ட சர்வதேச அழுதங்கள் தொடர்பில் தமிழ் மக்கள்
வெறுப்படைந்திருக்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி விடயத்தில்
சிறு தூரத்தைக்கூட இலங்கையின் ஆட்சியாளர்கள் இதுவரையில் கடக்க
வில்லை. இந்த அடிப்படையில் நோக்கினால், இலங்கையின்மீது இதுவரையில்
மேற்கொள்ளப்பட்ட மேற்குலக அழுத்தங்கள் வெற்றியளிக்கவில்லை.
இதனை பிறிதொரு வகையில் கூறுவதானால், அமெரிக்காவின் உலகளா
விய மனித உரிமைசார்ந்த அழுத்தங்களின் பின்புலத்தில், இலங்கையின்
மீதான அழுத்தங்கள் தோல்வியடைந்திருக்கின்றன. யுத்தம் முடிவுற்றதை
தொடர்ந்து, பொறுப்பு கூறலை வலியுறுத்தி 2012இல் முதலாவது பிரேரணையை
அமெரிக்கா முன்கொண்டுவந்தது. அன்றைய சூழலில் அது, அமெரிக்க
பிரேரணையென்றே பரவலாக அழைக்கப்பட்டது. அமெரிக்க தலையீட்டின்
மூலமாகவே, இலங்கையின் மோசமான மனித உரிமை மீறல் விவகாரம்
சர்வதேசத்தின் கவனத்தை பெற்றது. ஆனால், பிரேரணைகள் தொடர்ந்தனவே
தவிர, பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்கான கோரிக்கைளுக்கு எவ்வித வெற்றியும்
இதுவரையில் கிட்டவில்லை.
இவ்வாறானதொரு சூழலில்தான், நாடு மோசமான பொருளாதார நெருக்
கடியை எதிர்கொண்டிருக்கின்றது. இதற்கு, அமெரிக்கா உதவி செய்வது தொடர்
பில் கவனம் செலுத்துகின்றது. பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை
மீட்கும் அமெரிக்க முயற்சி நிச்சயம் வரவேற்கப்படவேண்டியதுதான்.
ஆனால், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதுடன் மட்டும் விடயங்கள்
முடிந்துவிடப்போவதில்லையென்பதை அமெரிக்க அதிகாரிகள் உணரவேண்
டும். தமிழ் மக்களுக்கான நீதி, பொருளாதார நெருக்கடிக்கு அப்பாற்பட்டது.
அமெரிக்காவின் உதவிகளுக்காக காத்திருக்கும்போதே இலங்கையின்
ஆட்சியாளர்கள், சீனாவின் ‘ஒரு சீனா’ கொள்கையை ஆதரிப்பதாகவும், ஜக்கிய
நாடுகள் சபை சீனாவின் உள் விவகாரங்களில் தலையீடு செய்யக்கூடாதென்றும்,
அண்மையில் ஜ.நாவில் வலியுறுத்தியிருந்தனர். ஆனால் மறுபுறுமோ,
தாய்வான் விடயத்தில் சீனாவின் ‘ஒரு சீனா’ கொள்கையை அமெரிக்கா கடுமை
யாக எதிர்த்துவருகின்றது. தாய்வானின் சுயாதீனத்தை அமெரிக்கா அங்கரித்
திருக்கின்றது. ஆனால், அமெரிக்காவின் டொலர்களுக்காக காத்திருக்கும்
நிலையிலிருக்கின்றபோதே, மறுபுறம் அமெரிக்காவின் மூலோபாய நிலைப்
பாட்டை வெளிப்படையாகவே கொழும்பு எதிர்கின்றது. இது, கோட்டாபயவின்
நடுநிலை வெளிவிவகாரக் கொள்கைக்கு முற்றிலும் முரண்பாடான விடய
மாகும். ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதுபோல், கொழும்பின்
சிங்கள ஆட்சியாளர்கள் எவ்வாறு பாம்புக்கு வாலையும் மீனுக்கு தலையையும்
காட்டும் அரா மீன் போன்றவர்கள் என்பதையே, அவர்களது மேற்படி
நடவடிக்கை தெளிவாக எடுத்தியம்புகின்றது. பொருளாதார உதவிகளைக்கூட
சரியாக பயன்படுத்துவார்களாக என்பதற்கும் எவ்வித உத்தரவாதமும் இல்லை.
அமெரிக்க மனிதாபிமான உதவிகள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை சரியாக
சென்றடையுமா என்பதிலும் சந்தேகங்கள் உண்டு. தமிழ் மக்கள் கொடிய
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள். சிங்கள மக்கள் இப்போது அனுபவிப்பதை,
தமிழ் மக்கள் ஏற்கனவே முப்பது வருடங்களாக அனுபவித்தவர்கள். ஆனால்,
யுத்தத்திற்கு பின்னரான சூழலில், தமிழ் மக்களின் பொருளாதார மீட்சிக்காக
அமெரிக்கா உட்பட, மேற்குலக நாடுகள் பாரிய மனிதாபிமான உதவிகளை
வழங்கியதாக சான்றில்லை. இப்போதும், அமெரிக்க உதவி நிறுவனம் மற்றும்
ஜரோப்பிய ஒன்றியத்தின் பாரியளவான நன்கொடைகள், கொழும்புமைய
அரசுசாரா நிறுவனங்களையே சேர்கின்றன. சிங்கள பகுதிகளே முக்கியத்துவப்
படுத்தப்படுகின்றன. இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பில்
சிந்திக்கும்போது, அமெரிக்க தூதரகம் இங்கே சுட்டிக்காட்டப்பட்டிருக்கும்
விடயங்கள் தொடர்பிலும் கவனம்செலுத்த முன்வரவேண்டும்.

Posted in Uncategorized

ஜப்பான் தூதுவரை சந்தித்த கூட்டமைப்பின் தலைவர்கள்

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி இன்றைய தினம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை கொக்குவிலிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் சந்தித்தார்.

இன்று மாலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட்டின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜப்பான் தூதுவர் சமகால நிலைமைகள் தொடர்பில் பல்வேறுபட்ட தரப்புக்களுடனும் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் அமைந்துள்ள பனை,தென்னை கூட்டுறவு சங்கத்தின் தலைமைக் காரியலயத்திற்கு இன்றையதினம் ஜப்பானிய தூதுவர் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இலங்கை மற்றும் ஜப்பான் நாடுகளின் கூட்டுறவின் அடையாளமாக ஜப்பான் அரசின் நிதிப்பங்களிப்பில் நன்கோடையாக வழங்கப்பட்ட தேங்காய் எண்ணை சுத்திகரிப்பு நிலையத்திற்கு இயந்திரம் ஒன்று 2 மில்லியன் ரூபா பெறுமதியில் கடந்த 2021 ஆண்டு வழங்கிப்பட்டது.

அதன் பயன்பாட்டை பார்வையிடுவதற்காக ஜப்பான் நாட்டு தூதுவர் இன்றைய தினம் நேரில் சென்றிருந்தார்.

போராளிகளை விசாரிக்காமல் மாபியாக்களை கண்டுபிடியுங்கள் – புலனாய்வு பிரிவினருக்கு ரெலோ தலைவர் செல்வம் எம்.பி. அறிவுரை

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை தொந்தரவு செய்யாமல் எரிபொருளை பதுக்கும் மாபியாக்களை கண்டுபிடிப்பதற்கு புலனாய்வு பிரிவினர் முன்வரவேண்டும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று (28) ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

அத்தியவசிய தேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிப்பது என்ற அரசின் அறிவிப்பானது குழந்தை பிள்ளைத்தனமானது. இதனால் கடற்றொழிலாளர்கள், விவசாயிகள் உட்பட பல தரப்பினர் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுவர்.

ஏசிரூமில் இருக்கும் அமைச்சர் பந்துல குணவர்த்தன சாதாரண மக்கள் வரிசையில் நிற்கும் பரிதாபத்தை உணர்ந்திருப்பாரோ என்று தெரியவில்லை.

அதிலும் பெண்கள் இந்த விடயத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒருநேர சாப்பாட்டுடன் வாழ்வை கழிக்கும் அவல நிலை பலருக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே அந்த மக்களின் பரிதாப நிலையை அறியாது அமைச்சர் பந்துல இவ்வாறு அறிவித்திருப்பது ஏற்க்க முடியாத கருத்தாகவே உள்ளது. எனவே இந்த நடைமுறையை அவர் உடனடியாக வாபஸ் பெறவேண்டும்.

அத்துடன் அனைத்து மக்களுக்கும் எரிபொருளை பெற்று கொடுப்பதற்கான வசதியினை அரசாங்கம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். எமதுமக்களை எள்ளி நகையாடுபவர்கள், துன்பப்படுத்துபவர்கள், இந்த அரசாங்கத்திலே இருக்கக்கூடாது .

இந்த அரசிடம் எந்த திட்டமும் இல்லை. ஜனாதிபதி எடுத்துள்ள முடிவில் மாற்றம் ஏற்ப்பட்டது போல எமக்கு தெரியவில்லை.

எனவே புதியவர்கள் வந்தபின்னரும் சரியான திட்டமிடல் இல்லை என்றால் எமது மக்களே எல்லாவிதத்தாலும் பாதிக்கப்படுவார்கள். இன்று அத்தியவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் எரிபொருளை கோரி ரஸ்யாவிற்கும் கட்டாருக்கும் செல்லும் அமைச்சர்கள் அந்த முஸ்தீபை முன்னமே செய்திருக்க வேண்டும்.

மக்களை நாட்கணக்கில் வீதிகளிலே காத்திருக்க செய்துவிட்டு தற்போது செல்கின்றமையானது அவர்களிடம் சரியான திட்டமிடல் இன்மையையே புலப்படுத்துகின்றது. இவர்களால் ஏன் சரியான ஒரு வழிமுறையை காணமுடியாமல் போனது என்ற கேள்வி எழுகின்றது.

இதேவேளை களவு செய்பவர்களிற்கும், பதுக்குபவர்களுக்கும் தாராளமாக எரிபொருள் கிடைக்க பெறுகின்றது. புனர்வாழ்வு பெற்ற விடுதலை புலி உறுப்பினர்களை இலங்கை புலனாய்வுபிரிவினர் ஒவ்வொருநாளும் சென்று விசாரணை மேற்கொள்கின்றனர். நான் அவர்களுக்கு ஒன்றை சொல்கிறேன்.

இவற்றை எல்லாம் இடைநிறுத்திவிட்டு எரிபொருளை பதுக்குபவர்களை கண்டறிவதற்காக இந்த புலனாய்வு உத்தியோகத்தர்களை பயன்படுத்து முடியும். என்றார்.

மூன்று பகுதிகளால் வாகரைப் பிரதேச செயலக நிலங்களைப் பிரித்தெடுக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன – ஜனா

வாகரைப் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட நிலங்களை மூன்று பகுதிகளால் பிரித்தெடுக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இதற்கு எதிராக தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்ற மாவட்டத்தின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருமித்துச் செயற்பட வேண்டும். அரசுடன் இணைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் எடுக்கும் நடவடிக்கைக்கு பூரண ஆதரவு வழங்கத் தயார் என பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தோணிதாண்டமடு பிரதேசத்தின் ஒரு பகுதி பொலநறுவை மாவட்டம் வெலிகந்தை பிரதேச செயலாளர் பிரிவினுள் இணைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் வாகரைப் பிரதேச செயலாளருடன் இது தொடர்பில் சந்திப்பினை மேற்கொண்டிருந்தார். இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த சில நாட்களாக வாகரைப் பிரதேசத்தில் இருந்து தோணிதாண்டமடு என்கின்ற பிரதேசத்தின் ஒரு பகுதி பொலநறுவை மாவட்டத்துடன் இணைக்கப்படப் போவதாகக் தகவல்கள் வந்தன. அந்த வகையில் இன்றைய தினம் வாகரைப் பிரதேச செயலாளரைச் சந்தித்து இது விடயமாக கலந்துரையாடி விபரங்களைப் பெற்றுக் கொண்டேன். எல்லை நிர்ணய சபையினால் வாகரைப் பிரதேசத்தில் நாங்கள் பாரியதொரு பிரச்சனையை எதிர்கொள்ள இருப்பதாக அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.

அதாவது வாகரைப் பிரதேசத்தில் இருந்து மூன்று பகுதியால் பிரதேசங்கள் பிரித்து எடுக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலாவதாக தோணிதாண்டமடு தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தின் ஒரு பகுதி தமிழ் மக்களுடன் சேர்த்து வெலிகந்தை பிரதேசத்துடன் சேர்க்கப்பட இருப்பதாகவும், அதே போன்று ஓட்டமாவடி மத்தி பிரதேச செயலகப் பிரிவுடன் புணானை கிழக்கு, கிருமிச்சை, காயான்கேணி, வட்டவான் உள்ளிட்ட சில பிரதேசங்கள் இணைக்கப்படுவதற்கான முயற்சிகளும், மறுபக்கம் வடக்கிலே வெருகல் இரட்டை ஆற்றை ஒட்டிய பிரதேசம் வெருகல் பிரதேச செயலகத்துடன் இணைக்கப்படுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் அறிகின்றேன்.

மூன்று பக்கத்தினால் வாகரைப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களைப் பிரித்தெடுப்பதற்கான அழுத்தங்களைக் கொடுத்து ஒரு பகுதியையாவது முழுமையாகக் கைப்பற்றக் கூடிய முயற்சியாகவே நான் இதனைக் கருதுகின்றேன். அது ஓட்டமாவடி மத்தி பிரதேச செயலகத்துடன் காயான்கேணி, வட்டவான், புணானை கிழக்கு, கிருமிச்சை போன்ற பாரியதொரு நிலப்பரப்பினை இணைத்து ஓட்டமாவடி மத்தி பிரதேச செயலகத்தினை வெலிகந்தை வரை விஸ்தரிப்பதற்கான செயற்பாடாகவே இதனைக் கருதுகின்றேன்.

அந்த வகையில் தமிழ்ப் பிரதேசம் என்பதற்கும் அப்பால் காலாகாலமாக வாகரைப் பிரதேச செயலக நிருவத்திற்குட்பட்டு வாழும் மக்களும், நிலங்களும் வாகரைப் பிரதேச செயலகத்துடன் இருந்தவாறே இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் இருவர் அரசுடன் இணைந்திருக்கின்றார்கள். ஒருவர் கடந்த காலத்தில் இராஜாங்க அமைச்சராக இருந்தவர் தற்போதும் அப்பதவியை எதிர்பாத்துக் காத்துக் கொண்டிருக்கின்றார். மற்றையவர் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்தவர். தமிழ் மக்களுக்காகப் போரடிய போராட்ட இயக்கத்தில் இருந்தவர் தற்போது இந்த அரசின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவராக இருக்கின்றார்.

இவர்கள் இந்த விடயத்தில் கூடுதலான கவனத்தைச் செலுத்த வேண்டும். தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றவர்கள். குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் இந்தப் பிரதேசத்திலே இந்த மக்களின் கூடுதலான வாக்குகளைப் பெற்றவர். அவர் இந்த விடயத்திலே இன்னும் அதிகமான கவனம் செலுத்த வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களாகிய எங்களைப் பொருத்த மட்டில் நாங்கள் இவ்விடயத்திற்கு எதிராக எப்போதும் குரல் கொடுப்போம்.

என்னைப் பொருத்த மட்டிலே இதற்கு ஒரே ஒரு தீர்வுதான் இருக்கின்றது. ஓட்டமாவடி மத்தி என்கின்ற பிரதேச செயலகப் பிரிவு நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட பிரதேச செயலகமல்ல என நான் அறிகின்றேன். குறைந்த கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளுடன் ஒரு பிரதேச செயலகம் இருக்க வேண்டிய தேவையும் இல்லை. 7 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய ஓட்டமாவடி மத்தி பிரதேச செயலகத்தை ஓட்டமாவடி மேற்குப் பிரதேச செயலகத்துடன் இணைத்துவிட்டால் அவர்களுக்கான காணிப் பிரச்சனைகளுக்கு நிரந்தரமான தீர்வு வரும் என்பதே என்னுடைய எண்ணப்பாடு.

எனவே நாங்கள் நான்கு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுடம் இந்த விடயத்தில் உறுதியாக இருக்க வேண்டும். குறிப்பாக மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சரும் இதில் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். இந்த விடயத்தில் அவர்களுக்கு நாங்கள் என்றுமே பக்க துணையாக இருப்போம். வாகரைப் பிரதேசம் பிரிக்கப்படக் கூடாது. வாகரைப் பிரதேசம் சீரழிந்து போகக் கூடாது. அது இருந்த மாதிரியே அந்தப் பிரதேச செயலகத்தில் உள்ள மக்களும் அந்த நிலங்களும் அந்தப் பிரதேச செயலகத்தின் கீழேயே இருப்பதற்கு நாங்கள் அனைவருமாக ஒன்று சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட வேண்டும் என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜூலை முதலாம் திகதி முதல் விமான சேவை மீள ஆரம்பம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜூலை முதலாம் திகதி முதல் விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

விமான நிலையத்தின் நாடுகளுக்கிடையிலான போக்குவரத்து நடவடிக்கை கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

எனினும், COVID தொற்று காரணமாக அதன் நடவடிக்கைகள் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், யாழ்ப்பாணம் விமான நிலையத்திலிருந்து தென்னிந்திய விமான நிலையம் வரையில் சேவைகளை முன்னெடுக்க சர்வதேச மற்றும் உள்ளூர் விமான நிறுவனங்களால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைவாக, எதிர்வரும் முதலாம் திகதி முதல் விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து சேவைகள் அமைச்சரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.