விசாயத்தினைப் பாதுகாக்க அரசாங்கம் தவறுவது  ஒட்டுமொத்த மக்களையும் அபாயத்திற்குள் தள்ளிவிடும் – அச்சுவேலி போராட்டத்தில் தவிசாளர் நிரோஷ்

அரசாங்கம் உடனடியாக விவசாயிகளுக்கு எரிபொருள் விநியோகத்தை சீர்செய்வதுடன் விவசாயத்தினைப் பாதுகாப்பதற்கு முட்டாள் தீர்மானங்களை விடுத்து சிறந்த தீர்மானங்களை எடுக்க வேண்டும் என ரெலோ வின் யாழ் மாவட்ட தலைவரும் வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

அச்சுவேலி பிரதேச கமக்காரர்கள் விவசாயத்திற்கான எரிபொருள் தேவையினை வலியுறுத்தி புதன்கிழமை (15.06.2022) காலை அச்சுவேலி சந்தையில் கையெழுத்துப் போராட்டத்தினை ஆரம்பித்தனர்.

அப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும்,

நாடு மிகவும் நெருக்கடியான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டக்கணிப்பின் பிரகாரம் எதிர்வரும் வாரங்களில் உணவுப்பொருட்கள் கிடைக்கிமோ என்ற அச்சத்தில் மக்கள் வாழ்கின்றனர். அரசாங்கம் உணவுப் பாதுகாப்பினையும் அத்தியவசிய உணவுப் பொருட்களை மக்களுக்கு நியாய விலையில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற பொறுப்பினையும் நிறைவேற்ற தவறியுள்ளது. அடிப்படையில் நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கான கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது.

இத் துர்ப்பாக்கிய நிலைமைக்கு உரக்கொள்கை போன்ற விடயங்களில் அரசாங்கம் பின்பற்றிய தவறான நடவடிக்கைகள் பிரதான காரணமாகும். நாம் இயற்கை வழி உரப்பாவனையுடன் கூடிய விவசாய முயற்சிகளை நாம் வரவேற்கும் அதேவேளை குறுங்காலத்தில் இயற்கை உரப்பாவனையை அடிப்படையாகக் கொண்ட விவசாயத்தினை நாட்டில் வெற்றியடையச் செய்ய முடியுமா என படித்தவர்களிடமும் ஆய்வாளர்களிடமும் ஜனாதிபதி ஆலோசனை கேட்டிருக்க வேண்டும். விவசாயிகளுடன் கலந்துரையாடியிருக்கவேண்டும்.

இன்று எமது நிலங்களில் நாம் விவசாயத்தினை முன்னெடுப்பதற்கு உரிய தடைகள் இன்றி எரிபொருளை விநியோகிக்கக் கோருகின்றோம். காரணம் விவசாயிகள் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் அவர்களது தொழில் முயற்சிகளை மேற்கொள்வற்கான குறைந்த பட்ச எரிபொருள் விநியோகத்தை ஏனும் பெற முடியாது திண்டாடுகின்றனர் என்பதை வெளிப்படுத்தவதற்காகவே திரண்டுள்ளோம்.

விவசாயிகள் தொழில் முயற்சிகளை மேற்கொள்ள முடியாத சூழல் விவசாய உற்பத்தியாளர்களை மாத்திரம் பாதிக்கும் தொழில்சார் பிரச்சினை கிடையாது. மாறாக அத்தனை மக்களது வயிற்றுப்பசியைப் போக்குவது சார்ந்த பிரச்சினையாகும். அரசாங்கம் தாமதமின்றி இவ்விடயத்தில் பொறுப்புச் சொல்லவேண்டும்.

Posted in Uncategorized

அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று

அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை தெளிவுபடுத்தும் விசேட கலந்துரையாடலொன்று இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலின் பின்னர் உரிய அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கு அனைத்து தரப்பினருடனும் இறுதி இணக்கப்பாடு எட்டப்படும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்துடன் அரசியலமைப்பின் 21வது திருத்தம் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் அங்கீகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியை தீர்ப்பதற்கு சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது அல்லது தேர்தலுக்கு செல்வது அத்தியாவசியமானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் மாலை 4.00 மணிக்கு இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இலங்கைக்கு Quad நாடுகள் உதவி செய்ய வேண்டும்-அமெரிக்கா

இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண Quad நாடுகள் அதிக பங்களிப்பை வழங்க வேண்டும் என அமெரிக்காவின் வௌியுறவு தொடர்பிலான செனட் குழு (Senate Foreign Relations Committee) வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமெரிக்க ராஜாங்க செயலாளர் Antony Blinken, ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் Yoshimasa Hayashi, இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அவுஸ்திரேலிய வௌிவிவகார அமைச்சர் Penny Wong ஆகியோருக்கு செனட் சபை உறுப்பினரும் வௌியுறவு தொடர்பிலான செனட் குழுவின் தலைவருமான Bob Menendez அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் இந்தியாவின் பங்கை பாராட்டுவதாகவும் அவரது கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

குருந்தூர் மலை விவகாரம் காலிமுகத்திடலில் எதிரொலிக்காதது ஏனோ?ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் கேள்வி

காலிமுகத்திடலில் முன்னெடுக்கப் படுகின்ற போராட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. அவர்களுடைய நியாயப் பாட்டினை நாங்கள் நன்றாக புரிந்து கொள்ளுகிறோம்.

ஆனால் தமிழர் பிரச்சினையை பெரும்பான்மை இனத்தினருக்கு தெளிவுபடுத்துகிறோம், விளக்குகிறோம், அவர்களோடு கலந்துரையாடுகிறோம் என்றெல்லாம் கூறியவர்கள் குருந்தூர் மலை விவகாரத்தில் எங்கு சென்றார்கள்?

குருந்தூர் மலை விவகாரம் மதப் பிரச்சினைக்கு அப்பாற்பட்டது. பௌத்த மதத்தின் பெயரால் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை அபகரித்து, அங்கு சிங்கள குடியேற்றங்களை நிறுவுவதும் அதனூடாக எங்கள் குடிப்பரம்பலை சிதைப்பதற்கும் முயல்வது இனவழிப்பு நடவடிக்கையாகவே கருதப் பட வேண்டும். இந்த நடவடிக்கைக்கு எதிராக காலிமுகத்திடலில் இருக்கும் போராளிகள் ஏன் குரல் கொடுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.

அதையும் தாண்டி தமிழர் பிரச்சினையை பெரும்பான்மை இனத்தினருக்கு தெளிவுபடுத்துகிறோம், விளக்குகிறோம், அவர்களோடு கலந்துரையாடுகிறோம் என்றெல்லாம் கூறியவர்கள் குருந்தூர் மலை விவகாரத்தில் தாங்கள் இணைந்து போராடிய பெரும்பான்மையின சகோதரர்களிடம் குருந்தூர் மலையில் பெளத்த சின்னங்களை நிறுவ முயல்வதற்கு எதிராக குரல் கொடுக்க கோரவில்லையா?

காலிமுகத்திடல் போராட்டத்தில் தமிழர்கள் இணைய வேண்டும் என்று மூர்க்கமாக குரல் கொடுத்தவர்கள் சிலர் குருந்தூர் மலை விவகாரத்தில் கள்ள மவுனம் காப்பது ஏன்?

கைதட்டல் கிடைக்காது என்பதற்காகவா அல்லது காலிமுகத்திடலில் போராடும் பெரும்பான்மை இனத்தின் மனம் நோகக்கூடாது என்பதா?
எதற்காக மௌனம் காக்கிறார்கள்?

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினையை புரிந்து கொள்ளாத எமது அடிப்படை கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாத அல்லது அங்கீகரிக்காத இந்தப் போராட்டத்தில் தமிழ் மக்களும் இணைந்து கொள்ள வேண்டும் அல்லது தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக நாங்கள் இணைந்து கொண்டு இருக்கிறோம் என்று கூறுபவர்கள் யதார்த்த நிலையை புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் கூடுகின்ற இடங்களில் எல்லாம் சென்று சத்தமெழுப்புவதன் மூலம் தமிழ் மக்களுடைய பிரச்சினையை தீர்த்து விடலாம் என்று தமிழ் மக்களை நம்ப வைக்க முயல்வது கேலிக் கூத்தாகும். அது இன்று நிரூபணமாகியுள்ளது.

ஆகவே தென்னிலங்கையில் நடக்கின்ற அரசியல் அதிகார சதுரங்க ஆட்டத்தில் தமிழ் மக்களை பகடைக் காயாக பயன்படுத்த இடமளித்து நேரத்தை வீணடிப்பதை தவிர்க்க வேண்டும். கடந்த கால அனுபவங்களில் இருந்து , நல்லாட்சி காலம் உட்பட நாம் பாடம் கற்றுள்ளோம். இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி தமிழர் தரப்பாக பேரம் பேசுவதே தேவையானது.

தமிழ் மக்களுக்கு பயன் தரும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுப்பது பற்றியே நமது தரப்புக்கள் சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
(தமிழ் தேசியக் கூட்டமைப்பு)

ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளருமான நிரோஷிற்கு எதிரான வழக்கு நவம்பர் 16 க்கு ஒத்திவைப்பு

நிலாவரையில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு தடையாக அமைந்ததன் வாயிலாக தொல்லியல் திணைக்களத்தின் அரச கருமங்களுக்கு தடை ஏற்படுத்தினார் என ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷிற்கு எதிராகத் தொடாரப்பட்ட வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த வருடம் தொடரப்பட்ட இவ் வழக்கில் வழக்கினை முன்னொண்டு செல்வதாயின் சட்டமா அதிபரின் ஆலோசனையினைப் பெறுமாறு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று புதன்கிழமை(15.06.2022) மல்லாகம் நீதவான் திருமதி காயத்திரி சைலவன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, அச்சுவேலி பொலிஸார் மேலதிக அறிக்கையினை சமர்ப்பித்ததுடன் சட்டமா அதிபரின் ஆலோனைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் மன்றில் தெரியப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Posted in Uncategorized

நெருக்கடிகளைத் தீர்க்க இதுவரை எவ்வித திட்டமும் தீட்டப்படவில்லை: சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிக்கை

எரிபொருள், எரிவாயு, உணவுப்பொருட்கள் தொடர்பில் நாட்டில் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக இந்தியா சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அரிசி, எரிபொருள், எரிவாயு, அத்தியாவசிய மருந்துப்பொருட்கள், பசளை போன்றவற்றை வழங்கி வருவதாகவும், அந்த உதவிகள் அடுத்த சில நாட்களில் முடிவடையும் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதன் பின்னர் ஏற்படப்போகின்ற தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு இதுவரை எத்தகைய திட்டமும் தீட்டப்பட்டுள்ளதாக தெரியவில்லை எனவும் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்த வாரங்களுக்கு எரிபொருள், எரிவாயு, மின்சாரம், அத்தியாவசிய உணவுப்பொருட்கள், உயிர் காக்கும் மருந்துகள் தடையின்றி கிடைக்குமா என்பது குறித்த நிச்சயமற்ற நிலையில், அச்சமூட்டும் சூழலே நிலவுவதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தால் எதனையும் திட்டமிட முடியாத நிலையில், அரசாங்கத்தின் மோசமான நிர்வாக சீர்கேடுகளினால் பொதுமக்களால் எதனையும் திட்டமிட முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனால் தற்போதைய ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பதற்கு தகுதியானவர்களா என்பதை அவர்களது மனச்சாட்சியிடம் கேட்க வேண்டியுள்ளதாக அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் நிலவுகின்ற நெருக்கடியை தீர்த்து, அந்நிய முதலீடுகளை உள்வாங்கி, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தேசிய இன பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு கண்டறியப்பட வேண்டியது முதற்படியாகும் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல்- ஜெனீவா அமர்வில் கவலை

இலங்கையில் அமைதியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை குறித்த ஜெனீவாவில் இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கிய பிரித்தானியா தலைமையிலான நாடுகள் வேண்டுகோள் கரிசனை வெளியிட்டுள்ளன.

ஜெனிவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 50ஆவது அமர்வில் கனடா பிரிட்டன் அமெரிக்கா ஜேர்மன் மலாவி மொன்டினீக்ரோ வடமசடோனியா ஆகிய நாடுகள் இணைந்து இந்த கரிசனையை வெளியிட்டுள்ளன.

அமைதியான முறையில் ஒன்றுகூடுதல் கருத்துசுதந்திரம் ஆகியவற்றுக்கான தங்களது உரிமையை ஆர்ப்பாட்டக்காரர்கள் சமீபகாலங்களில் பயன்படுத்தியுள்ளனர் என்பதை நாங்கள் கருத்தில் கொள்கின்றோம்.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வன்முறை தாக்குதல் குறித்தும் அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் ஆதரவாளர்கள் மீதான வன்முறைகள் குறித்தும் நாங்கள் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளோம்.

இந்த வன்முறைகளிற்கு காரணமானவர்கள் பொறுப்புக் கூறச் செய்யப்பட வேண்டும் என மேலும் அந்நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

Posted in Uncategorized

பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதேவேளை, இலங்கை மீதான பயணத் தடைகளை நீக்குமாறு இராஜதந்திர ரீதியிலான கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆறு மாதங்களுக்கு இந்தியாவில் இருந்து சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலான திட்டத்தை வகுக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.அவ்வாறு செய்தால் 2025 ல் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை கவர முடியும் என்றும் இதனால் 3.5 பில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டக்கூடிய நிலை ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.

எனவே அதற்கான நீண்டகாலத் திட்டங்களை வகுக்குமாறும் சுற்றுலாத்துறை அதிகாரிகளிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.இந்த ஆண்டில் சுமார் 800,000 சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து 800 மில்லியன் டொலர் வருமானம் கிடைக்கும் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

Posted in Uncategorized

கடல்வழியாக ஆட்கடத்தலில் ஈடுபடுவோர் தொடர்பில் பாதுகாப்பு தரப்பு வெளியிட்ட பரபரப்பு தகவல்!

இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டை விட்டு வெளியேறும் சட்டவிரோதக் இடப்பெயர்வாளர்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்களை வேறு நாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி அவர்களிடம் இருந்து பணம் பறிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளதாக பாதுகாப்புப் படையினர் தற்போது அம்பலப்படுத்தியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக இலங்கையர்கள் சிலர் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சிப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

இவர்களில் பெரும்பாலானோர் கடற்படை உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நாட்டில் நிலவும் பிரச்சினை காரணமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

ஒவ்வொருவரிடமிருந்தும் 700,000 ரூபாய் முதல் 1 மில்லியன் ரூபாய் வரை பணத்தை கடத்தல்காரர்கள் பெற்றுக்கொள்வதாகவும் படகிற்குள் ஏறியதும் கடத்தல்காரர்களே பாதுகாப்புப் படையினருக்கு இடப்பெயர்வாளர்கள் குறித்த தகவல்களை வழங்குவதாகவும் தெரியவந்துள்ளது.

அதேபோல், சிறிய படகுகள் மூலம் கரையில் இருந்து நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகிற்கு இடப்பெயர்வாளர்களை அழைத்துச் செல்வதற்கு 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த 15 இலங்கையர்கள் கடந்த தினம் அவுஸ்திரேலிய கரையோர பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை இலங்கையில் இருந்து படகுகள் மூலம் ஆட்களை ஏற்றிச் செல்லும் போது, கடத்தல் காரர்களே அவர்களை பாதுகாப்பு தரப்பினரிடம் காட்டிக்கொடுத்து விடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதே அடிப்படையாக இருக்கும் – மீனாக்ஷி கங்குலி

பொருளாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு அரசியலமைப்பின் ஊடாக பாதுகாப்பு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதே அடிப்படையாக இருக்கும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசியப்பிராந்தியப் பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் நாடாளுமன்றில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருத்துக்களை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள மீனாக்ஷி கங்குலி, அரசியலமைப்பின் ஊடாக பாதுகாப்பை உறுதிப்படுத்தல், மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் ஆகியவையே கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கான அடிப்படைத் திறவுகோளாகும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் நாடாளுமன்றில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடு எதிர்நோக்கியுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து பாதிக்கப்பட்ட மக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து விளக்கமளித்திருந்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை, உலக உணவுத்திட்டம் மற்றும் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகிய கட்டமைப்புக்களின் மூலமான உதவிகள் என்பன தொடர்பாகவும் அவர் தெளிவுபடுத்தியிருந்ததார் என்பது குறிப்பிடத்தக்கது.