மன்னார் காற்றாலை விவகாரம்: குற்றச்சாட்டை மறுத்த ஜனாதிபதி – மன்னிப்புக் கோரிய மின்சார சபைத் தலைவர்!

கோப் குழுவின் முன்னிலையில் மின்சார சபையின் தலைவர் தெரிவித்த கருத்தை தாம் முற்றாக நிராகரிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மன்னார் காற்றாலை மின் திட்டத்தை ஒரு குறிப்பிட்ட நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ வழங்குவதற்கு சர்வாதிகார அதிகாரத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் கோப் குழுவில் ஆஜராகியிருந்த மின்சார சபைத் தலைவர், கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் திகதி ஜனாதிபதி தன்னை அழைத்து இந்த செயற்றிட்டத்தை அதானி நிறுவனத்திடம் வழங்குமாறு தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டீரந்தார்.

பாரத பிரதமர் மோடி இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அழுத்தம் விடுத்ததாகவும் அவர் விசாரணையின் போது கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், காற்றாலை திட்டம் தொடர்பான மின்சார சபை தலைவரின் கூற்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நிராகரித்துள்ளார்.
இதேவேளை, கோப் குழு முன்னிலையில் தெரிவித்த கருத்து தொடர்பில் மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கோப் குழுவிற்கு நான் அளித்த விளக்கத்தில் அழுத்தம் மற்றும் உணர்ச்சிபூர்வமானதன் காரணமாக இந்தியப் பிரதமர் என்ற வார்த்தையை உச்சரிக்க நேர்ந்ததாகவும், எனவே அந்த கருத்தை வாபஸ் பெறுவதாகவும் அவர் கோப் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தின் பூரண ஏற்பாட்டில் பிக்குகளின் பங்கேற்புடன் குருந்தூர்மலையில் நாளை புத்தர் சிலை பிரதிஷ்டை : எதிர்ப்பு போராட்டத்துக்கு தயாராகும் தமிழர்கள்

இராணுவத்தின் பூரண ஏற்பாட்டில் முல்லைத்தீவு குமுளமுனை குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளைக்கு மாறாக அமைக்கப்பட்டுவரும் குருந்தாவசோக புராதன விகாரையில் கபோக் கல்லினால் செதுக்கப்பட்ட புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வும் விசேட பூசை வழிபாடுகளும் நாளை (12)காலை ஒன்பது மணிக்கு நூறுக்கணக்கான பௌத்த பிக்குகளின் பங்கேற்புடனும் இராணுவம் பொலிஸ் ,விமானப்படை ,கடற்படையினரின் பங்கேற்புடனும் இடம்பெறவுள்ளது.

இதேவேளை நீதிமன்ற உத்தரவை புறம்தள்ளி மிக பெருமெடுப்பில் அமைக்கப்பட்டுவரும் விகாரையில் புத்தர் சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குருந்தூர்மலையில் தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமையை வலியுறுத்தியும் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நாளை காலை முன்னெடுக்க தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர்.

நாளையை நிகழ்வுக்காக நூற்றுக்கணக்கான இராணுவ வாகனங்கள் குருந்தூர் மலைக்கு சென்றுவருவதாகவும் குமுளமுனை தண்ணிமுறிப்பு வீதி கடந்த சில நாட்களுக்கு முன்னர் இராணுவத்தால் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

நாளைய இந்த நிகழ்வில் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மற்றும் பௌத்த பிக்குகள் , தென்பகுதி மக்கள் இராணுவம் பொலிஸ் விமானப்படை கடற்படை உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளதாக அறியமுடிகிறது .

Posted in Uncategorized

மத்தள விமான நிலையத்தின் ஊடான மாதாந்த நட்டம் 100 மில்லியன் ரூபா

மத்தள விமான நிலையத்தின் ஊடாக மாதாந்த நட்டம் 100 மில்லியன் ரூபா என இன்று (11) தெரியவந்துள்ளது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பொறுப்பதிகாரிகள் இன்றைய தினம் மத்தள விமான நிலையத்திற்கு விஜயம் செய்து தற்போதைய நிலைமையை பார்வையிட்டார்.

இந்நிலையில் மத்தள விமான நிலையம் தனியார் மயமாக்கப்படாமல் தொடர்ந்தும் புனரமைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி, அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது, ​​விமான நிலையத்தில் ஏற்படும் செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார்.

Posted in Uncategorized

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் தினமும் குவியும் மக்கள்-கட்டுப்படுத்த முடியாது அதிகாரிகள் அவதி

இலங்கையில் கடவுச்சீட்டுகளின் தேவை பாரியளவு அதிகரித்து, பிராந்திய அலுவலகங்களில் நிலைமை கட்டுப்படுத்த முடியாத அளவிற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு நாள் சேவையின் கீழ் நாளாந்தம் வழங்கப்படும் கடவுச் சீட்டுகளின் சராசரி எண்ணிக்கை 2500 ஆகும். எனினும் ஏப்ரல் மாத இறுதியில் இருந்து நிலவும் அசாதாரண தேவையினால் இந்த சேவையை வழங்க முடியாதுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. வரிசையில் நிற்கும் பொதுமக்களுக்கு அதிகபட்ச சேவையை வழங்குவதற்காக திணைக்களம் தனது சேவைகளை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது.

சேவை காலத்தை அதிகரித்த போதிலும் பிராந்திய அலுவலகங்களில் நிலைமை இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். வெளிநாட்டு பயணச் சேவைகளுடன் தொடர்புடைய புகைப்படக் கலைஞர்களும் வழக்கத்திற்கு மாறான தேவை மற்றும் தொழில்நுட்ப பலவீனங்கள் காரணமாக சிக்கல்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய அரசாங்கம் மாறினால் மாத்திரமே இலங்கையை அபிவிருத்தி செய்ய முடியும் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால

தற்போதைய அரசாங்கம் மாறினால் மாத்திரமே, இலங்கையை அபிவிருத்தி செய்ய முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மேலும் இடைக்கால அரசாங்கம் அமைத்து பொதுத் தேர்தலை நடத்தினால் மாத்திரமே இலங்கைக்கு வெளிநாடுகள் மற்றும் அமைப்புகளின் ஆதரவைப் பெற முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார் .

இதேவேளை எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்டு தற்போதைய அரசாங்கம் கொண்டு வரும் அனைத்து நன்மை பயக்கும் சீர்திருத்தங்களுக்கும் தமது கட்சி ஆதரவளிக்கும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹாங் உடனான சந்திப்பின் பின்னர் பொலன்னறுவையில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

தனிக் கட்சி அமைக்கும் பொன்சேகா – கூட்டணி அமைக்கும் டலஸ்!

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினரான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தனிக் கட்சியொன்றை அமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் ஏற்கனவே ஜனநாயக கட்சியை அமைத்திருந்த நிலையில், பின்னர் அவர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொண்டு அந்தக் கட்சியை கலைத்தார்.

பின்னர் கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பாராளுமன்றம் வந்தார்.

இந்நிலையில் தற்போது எதிர்க்கட்சிக்குள் நிலவும் அதிருப்திகள் காரணமாக அவர் தனிக் கட்சியை அமைக்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த குழுவினரையும் மற்றைய கட்சிகளையும் இணைத்துக்கொண்டு புதிய கூட்டணியொன்றை அமைப்பதற்கு முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராஜபக்‌ஷக்கள் அரசியலில் இருந்து ஒதுங்கிவரும் நிலையிலேயே இவர் இந்தக் கூட்டணியை அமைக்க முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

ராஜபக்‌ஷ குடும்பத்தில் இன்னுமொருவர் பதவி விலக முடிவு!

ராஜபக்‌ஷ குடும்பத்தை சேர்ந்த மற்றுமொருவர் எம்.பி பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெருக்கடி நிலைமையில் ராஜபக்‌ஷ குடும்பத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் கடந்த மே 9 ஆம் திகதி மகிந்த ராஜபக்‌ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

இதனை தொடர்ந்து ஜுன் 9 ஆம் திகதி பஸில் ராஜபக்‌ஷ பாராளுமன்ற ஆசனத்தை இராஜினாமா செய்தார்.

இந்நிலையில் இன்னுமொரு ராஜபக்‌ஷ எம்.பி பதவியை துறக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிந்த ராஜபக்‌ஷ, சமல் ராஜபக்‌ஷ, நாமல் ராஜபக்‌ஷ மற்றும் ஷசிந்திர ராஜபக்‌ஷ ஆகியோரோ தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

இவர்களில் ஒருவர் பதவி விலகவுள்ளதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன.

Posted in Uncategorized

இராணுவத்தின் ஒத்துழைப்பில் குருந்தூர்மலையில் அமைக்கப்பட்டுவரும் விகாரையில் புத்தர் சிலை பிரதிஸ்டை

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைபற்று பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ள குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்போடு அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரையில் கபோக் கல்லினால் செதுக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை பிரதிஸ்டை செய்யும் வைபவம் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

பிரதேச தமிழ் மக்களால் வழிபட்டுவந்த ஆதிசிவன் ஐய்யனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர் மலையில் இருந்த ஐயனார் சூலம் உடைத்து எறியப்பட்டு அதன்பின்னர் அங்கு வழிபாட்டுக்கு செல்லும் தமிழ் மக்கள் அச்சுறுத்தப்பட்டு தடைவிதிக்கப்பட்ட பின்னர் அங்கு தொல்லியல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த அதே நேரத்தில் பௌத்த விகாரை ஒன்றும் புராதன காலத்தை ஒத்த வடிவில் அமைக்கப்பட்டுவந்தது.

அத்தோடு குருந்தூர் மலையை சூழவுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களில் பயிர் செய்கை நடவடிக்கைக்கு பௌத்த பிக்கு மற்றும் தொல்லியல் திணைக்களத்தினாரால் தடை விதிக்கப்பட்டத்தோடு தண்ணிமுறிப்பு கிராமத்தில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலங்களையும் பௌத்த விகாரைக்குரிய நிலமாக வழங்குமாறு கோரி பௌத்த பிக்குவால் கோரிக்கையும் முன்வக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி குருந்தூர்மலையில் தொல்லியல் ஆய்வு பணிகளை ஆரம்பித்து வைக்கப்பட்டதையடுத்து அப்பகுதிக்கு தமிழ் மக்கள் யாரும் செல்வதற்கு இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் தடை ஏற்படுத்தி வந்திருந்த நிலையில் தொல்லியல் ஆய்வுப்பணிகள் இடம்பெற்றுவந்த சம நேரத்திலேயே அங்கு மிக பிரமாண்டமான முறையில் புராதன கால செங்கற்களை ஒத்த செங்கற்கள் செய்யப்பட்டு குருந்தூர் மலைக்கு கொண்டுவரப்பட்டு நூற்றுக்கணக்கான இராணுவத்தினரின் பங்கேற்புடன் இரவு பகலாக கட்டுமானம் இடம்பெற்றுவந்தது.

இந்த நிலையில் தற்போது விகாரை அமைக்கும் வேலை முற்றுப்பெறும் நிலையை அடைந்துள்ளதால் விகாரையின் உச்சியில் உள்ள கலசத்தில் பூசை வழிபாடுகளை செய்யும் நிகழ்வும் புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

முற்று முழுதாக இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த நிகழ்வில் இராணுவ உயர் அதிகாரிகள் முப்படையினர் பொலிஸ் உயர் அதிகாரிகள் பௌத்த பிக்குகள் பெருமளவான தென் பகுதியை சேர்ந்த பெரும்பான்மை இன மக்கள் கலந்துகொள்ளவுள்ளதாக அறியமுடிகின்றது.

இதேவேளை கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றில் குருந்தூர்மலையில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரை நீதிமன்ற கட்டளைக்கு மாறாக அமைக்கப்பட்டுவருவதாகவும் இதற்க்கு இடைக்கால தடைகோரியும் தமிழ் மக்களுக்கு குருந்தூர் மலையில் உள்ள வழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்துமாறு கோரி ஜனாதிபதி சட்டதரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனால் உச்ச நீதிமன்றில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு இந்த வழக்கின் மனுதாரர்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன் ,சிவஞானம் ஸ்ரீதரன் ,முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் ஆகியோர் வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.

இருந்தபோதிலும் இதுவரை இடைக்கால தடையுத்தரவு பெறப்படவில்லை என்பதோடு தடையுத்தரவு ஒன்று கிடைப்பதற்கு முன்பதாக விரைவுபடுத்தி விகாரையை கட்டிமுடிக்கும் வகையில் இரவுபகலாக நூற்றுக்கணாக்கான இராணுவத்தினர் ,சிவில் பாதுகாப்பு படையினர் சேர்ந்து இந்த விகாரையை அமைத்து நிறைவுறுத்தும் கட்டத்தில் இந்த புதிய புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யும் நிகழ்வும் நாளை மறுதினம் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

Posted in Uncategorized

1956 ஆம் ஆண்டு முதல் இதுவரை 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொலை

கடந்த 1956 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக பதவி வகித்த 45 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எஸ்.டப்ளியூ. ஆர்.டி பண்டாரநாயக்க முதல் அமரகீர்த்தி அத்துகோரள கொலை செய்யயப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களுக்கு அமைய 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

1956 ஆம் ஆண்டு முதல் இதுவரை 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொலை

1956 ஆ் ஆண்டு முதல் 19 மாதங்களுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

1980 ஆம் ஆண்டு முதல் எடுத்துக்கொண்டால், வருடத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வீதத்தில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள சம்பந்தமான இரங்கலை வெளியிட்டு உரையாற்றும் போதே அழகப்பெரும இதனை கூறியுள்ளார்.

எங்கள் நாட்டின் எதிர்காலம் பாழாகிவிட்டது – பசிலை கடுமையாக சாடிய சனத்

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் விசேட செய்தியாளர் சந்திப்பு குறித்து இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூர்ய கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

பசில் ராஜபக்ச நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பால் தான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாக முன்னாள் கிரிக்கட் வீரர் சனத் ஜயசூர்ய தெரிவித்துள்ளார்.இது சிரிக்கும் விஷயம் அல்ல. எங்கள் நாட்டின் எதிர்காலம் பாழாகிவிட்டது, இதற்காக நீங்கள் பொறுப்பேற்கவில்லை. இந்த அரசியல் நாடகங்களை நிறுத்துங்கள் என அவர் டுவீட் செய்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் உரையாற்றிய பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அறிவித்தார்.

மேலும் இதன்போது, அரசியலமைப்பின் உத்தேச 21வது திருத்தம், தற்போதைய பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட செய்தியாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.இந்நிலையில், இந்த ஊடக சந்திப்பு குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூர்ய, இந்த ஊடக சந்திப்பு குறித்து தான் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.