எம்.பி. பதவியிலிருந்து பஸில் விலகல்! அரசியல் பயணம் தொடரும்

“அரச நிர்வாகப் பணியிலிருந்து நான் விலகுகின்றேன். தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறக்கின்றேன். எனினும், எனது அரசியல் பயணம் தடைப்படாது. அது தொடரும்.”

– இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் தனது எம்.பி. பதவி விலகல் தொடர்பான கடிதத்தை இன்று கையளித்த பின்னர், ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் நடத்திய விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஊடங்கள் முன்பாக ஆங்கிலத்தில் பதிலளித்தால் மறுபடியும் ‘கப்புடா’ சர்ச்சை வந்துவிடும். சிங்கள மொழியிலேயே கதைக்கின்றேன்.

அமைச்சுப் பதவியை வகித்த காலத்தில் என்னால் முடிந்தவற்றை மக்களுக்காகச் செய்தேன். எனினும், மக்கள் எதிர்பார்த்த அனைத்தையும் செய்ய முடியாமல்போனது.

அரசமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டமூலத்தை நான் எதிர்க்கின்றேன். இது எனது தனிப்பட்ட கருத்து.

21ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் பிரதமருடன் பேச்சு நடத்தினோம். அதில் உள்ள சரத்துகளுக்குப் பொறுப்புக்கூற வேண்டியது யார் எனத் தெரியவில்லை. தற்போதைய சூழ்நிலையில் சிறு அளவிலான திருத்தங்கள் தேவையில்லை. முழுமையான அரசமைப்பு மறுசீரமைப்பே அவசியம்.

எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ள ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தயாராகவே உள்ளது” – என்றார்.

Posted in Uncategorized

ரஸ்யாவிடமிருந்து எரிபொருளை பெறுவதற்காக இரு தரப்பு பேச்சுவார்த்தைகளைஆரம்பிக்கவேண்டும் – 9 கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

தேசிய விடுதலை முன்னணி பிவித்துரு ஹெல உறுமய உட்பட 9 கட்சிகள் எரிபொருளை நீண்ட கால அடிப்படையில் பெறுவதற்காக ரஸ்யாவுடன் அரசாங்கம் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளன.

ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் 9 அரசியல் கட்சிகளும் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன.

நீண்டகால கடன் அடிப்படையில் எரிபொருளை பெறுவதற்காக ரஸ்யாவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தயங்கினால் ரஸ்யாவிடமிருந்து எரிபொருளை பெற்று எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வை காணவேண்டும் என அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக மக்களை திரட்டி போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தயார் என அந்த கட்சிகள் தெரிவித்துள்ளன.

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை விடுத்த வேண்டுகோளிற்கு ரஸ்யா சாதகமாக பதிலளித்துள்ளது என தாங்கள் அறிந்துள்ளதாகவும் ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தில் நடவடிக்கைகளை எடுத்துள்ளதா என்பது தெரியவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மோதல்கள் இடம்பெறுகின்ற போதிலும் ஐரோப்பா ரஸ்யாவிடமிருந்து ஒரு மில்லியன் பரல்களை கொள்வனவு செய்கின்றது என தெரிவித்துள்ள ஒன்பது கட்சிகளின் தலைவர்கள் இது குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி தங்களிற்கு சந்தர்ப்பம் வழங்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இந்திய அரசாங்கத்திற்கு உண்மையிலேயே நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம் – ஜனா

நாட்டின் இன்றைய நெருக்கடி நிலையில் எரிபொருளாக இருந்தாலும் சரி, எரி வாயுவாக இருந்தாலும் சரி உணவுப்பண்டங்களாக இருந்தாலும் சரி, தற்போது விவசாயிகளுக்காக யூரியா உரத்தையும் இந்தியாவே கொடுக்கின்றது. அந்த வகையில் இந்திய அரசாங்கத்திற்கு நன்றியுடையவர்களாக இருக்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த நன்றியினைத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
நாட்டு மக்கள் இன்று பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். என்னுடைய குடும்பத்திற்கு இன்று உணவு கிடைக்குமா என்றே ஒவ்வொரு நாழும் ஒவ்வொரு குழும்பஸ்தாரும் சிந்திக்கின்ற நிலைமை அரசாங்கத்தின் செயற்பாடுகளால் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு யார் காரணம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. தவறான தீர்மானங்களால் உருவாகியிருக்கின்ற இந்த நெருக்கடிக்குத் தீர்வு காண்பதே இன்றைய நிலையில் அவசியமாகும்.
தோல்வியடைந்த ஜனாதிபதியாக பதவி விலகமுடியாது. தனக்கு 5 வருடங்களுக்கு ஆணையை மக்கள் வழங்கியதாக ஜனாதிபதி கோட்டபாய தெரிவிக்கிறார். கால வரையறையை அவர் எந்தவகையில் நிர்ணயிக்கிறார் என்பது தெரியவில்லை. மக்கள் வாக்களித்துத் தெரிவு செய்தவரை வேண்டாமென்று சொல்லும் மக்களிடம் அவர் கூறும் பதில் இதுதானா.
அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் வெளியேறுமாறு இளைஞர்கள் களத்தில் இருக்கிறார்கள். இவ்வாறான நிலையில் இப்படியான ஒரு கருத்தை ஜனாதிபதியால் எவ்வாறு கூறமுடிகிறது.
நாட்டில் நடைபெற்ற யுத்தம், அதனால் ஏற்பட்ட பெரும் நிதி நெருக்கடிக்குள் நாடு இருக்கையில், உலகளவில் ஏற்பட்ட கொவிட் தொற்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுக்கு கொடுக்கப்பட்ட ஒரு பரீட்சையாகும். அந்தப் பரீட்சையில் அவர் தோல்;வியடைந்தார். ஆதனால் விலை அதிகரிப்பும் கட்டுப்பாட்டு விலை அகற்றலும் நாட்டு மக்களுக்கு அவர் கொடுத்த பரிசு.
இந்த விலை அதிகரிப்பினால் அதிகம் பாதிக்கப்படுவது அடிப்படை வாழ்வாதாரத்துக்காக அன்றாடம் சிரமப்படும் அடிமட்ட மக்களாகும்.
விவசாயம் நம் நாட்டு மக்களின் முக்கிய தொழில் துறையாகும். அது இன்று அதள பாதாளத்துக்குள் வீழ்ந்துவிட்டது. அதற்குக் காரணம் ஜனாதிபதி தனக்கு கிடைத்த 69 லட்சம் மக்களின் வாக்கு காரணமாக ஏற்பட்ட இறுமாப்பில் எடுத்த சேதன விவசாயக் கொள்கையாகும். ஒரு கொள்கைளை நடைமுறைப்படுத்த முனையும் போது அது தொடர்பில் நன்கு ஆராய்ந்து அதற்கேற்ற சூழல் அறிந்துகொள்ள வேண்டும். எந்தவிதமான ஆராய்தலுமின்றி எடுக்கப்பட்ட இந்த முடிவால் அல்லல்படுவது நாட்டு மக்களே.
கடந்த வருடத்தில் உரம் இன்மையால் நாட்டில் அரிசி விலை அதிகரித்துவிட்டது. அது தவிரவும் பல பொருட்களின் விலைகள் அதிகரித்துவிட்டன. இப்போது தொடங்கியிருக்கின்ற வேளாண்மைச் செய்கையாயினும் விளைச்சலைத்தரவேண்டும் என்று இறைவனைப்பிரார்த்திக்க வேண்டிய நிலையிலேயே விவசாயிகள் இருக்கின்றனர்.
காரணம் இம்முறையேனும் நேர காலத்துக்கு இரசாயன உரம் கிடைக்குமா என்பதிலேயே மக்கள் தங்கியிருக்கிறார்கள். நேற்றைய தினம் விவசாய அமைச்சர் இந்திய உதவித்திட்டத்திலே 65ஆயிரம் மெக்றிக் தொன் உரம் ஒரு மாதத்துக்குள் கிடைத்துவிடும் என்று கூறினார். நாங்கள் இந்திய அரசாங்கத்திற்கு உண்மையிலேயே நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறோம். இன்றைய நெருக்கடி நிலையில் எரிபொருளாக இருந்தாலும் சரி, எரி வாயுவாக இருந்தாலும் சரி உணவுப்பண்டங்களாக இருந்தாலும் சரி, தற்போது விவசாயிகளுக்காக யூரியா உரத்தையும் இந்தியாவே கொடுக்கின்றது. அந்த வகையில் இந்திய அரசாங்கத்திற்கு நன்றியுடையவர்களாக இருக்கின்றோம்.
உரத்தினை மானிய அடிப்படையில் நீங்கள் வழங்காவிட்டாலும், சாதாரண விலையிலாவது விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். 40- 45 ஆயிரம் ரூபாவுக்கு ஒரு அந்தர் யூரியாவை எடுத்து சிறு விவசாயிகள், வேளாண்மை செய்வோர், மரக்கறி செய்வோர் , மலையகத் தொழிலாளர்கள் எப்படி அவர்களது விவசாயத்தை முன்னெடுப்பது.
பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமென்கின்றோம். உள்ளுர் உற்பத்தியை விளைவிக்கக் கூடிய அளவிற்கு இரசாயன உரம் இன்றி எப்படி அந்த விளைச்சல் உருவாகும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இன்று நாங்கள் எரிபொருளுக்காகவும், எரிவாயுவுக்காகவும், வரிசையில் நின்று கொண்டிருக்கின்றோம். ஓரளவுக்கு எரிபொருளும், எரிவுயுவும் கிடைக்கின்றது. ஆனாலும் வரிசைகள் மாத்திரம் குறையவில்லை. பெற்றோலுக்கும் டீசலுக்கும் மக்கள் பெரும் ஏக்கத்தில் இருக்கின்றார்கள். ளரிவாயு மேல்மாகாணத்தில் கொடுக்கப்படுகின்றது. மேல்மாகாணம் தவிர்ந்து ஏனைய மாகாணங்களில் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் மண்ணெ;ணணை கூட தட்டுப்பாடாக இருக்கின்றது. இன்று மண்ணெண்ணை இல்லாமல் சிறு விவசாயிகள் மரக்கறித் தோட்டம் செய்பவர்கள் தங்களது நீர் இறைக்கும் இயந்திரங்களை இயக்க முடியாமல் இருக்கின்றார்கள். கடலுக்குச் செல்பவர்கள் தொழிலுக்குச் செல்ல முடியாமலிருக்கின்றார்கள்.
இன்று நாடு பொருளாதார ரீதியில் அதள பாதாளத்தில் இருக்கின்ற நிலையில் கட்டுப்பாடற்ற விலைகள் நாட்டில் இருக்கின்ற பொது சிறு வியாபாரிகள் கூடு நினைத்தபடி பொருள்களை விற்பனை செய்து கொண்டிருக்கும் போது அரசாங்க உத்தியோகத்தர்களால், மாதாந்த வருமானம் பெறுபவர்களால் தங்களது வாழ்க்கையை நடத்த முடியாமல் இருக்கின்றார்கள். இவ்வாறான நேரத்தில் கமம் செய்பவர்கள்,
கடலுக்குச் செல்பவர்கள், மீன்பிடித் தொழிலாளர்கள் தங்களது தொழிலைக் கூட செய்ய முடியாமலிருக்கின்றார்கள். எனவே பெற்றோலிய அமைச்சர் அமைச்சர் அவர்கள் கிராமப்புறங்களுக்கு மண்ணெண்ணையையாவது கொடுக்க வேண்டும் என்பது எங்களது பணிவான வேண்டுகோளாக இருக்கின்றது. எரிவாயுவைப் பெறமுடியாவிட்டால் மண்ணெண்ணையிலாவது தங்களது அடுப்புக்கள் எரியவேண்டும் என்று ஏக்கமாக இருக்கிறார்கள்.
இன்றைய சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு கட்டுப்பாடற்ற விலையைப் பயன்படுத்திக் கொண்டு பெரும் முதலாளிகள் முதல் சிறுவியாபாரிகள் வரை தாங்கள் நினைத்தபடி  விலைகளைத் தீர்மானிக்கின்றார்கள் இதற்கும் ஒரு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த வேண்டும்.

‘இலங்கையில் அடுத்த சில மாதங்களில் உணவுத் தட்டுப்பாடு’ – ஐ.நா எச்சரிக்கை

அடுத்த சில மாதங்களில் உணவுப் பாதுகாப்பில் இலங்கை மேலும் சரிவை சந்திக்கும் என்றும் உணவு கிடைப்பது குறையும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் உலக உணவுத் திட்டம் ஆகியவற்றின் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

வருமானம் குறைந்துள்ளமை மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவை குடும்பங்களின் போதுமான உணவை வாங்கும் திறனை பாதிக்கின்றன என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

உள்நாட்டு விவசாய உற்பத்தி மற்றும் சர்வதேச விலை உயர்வு ஆகியவற்றுடன் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் கடுமையான உணவுப் பற்றாக்குறை மற்றும் விலைப் பணவீக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றின் காரணமாக அடுத்த மாதங்களில் இலங்கையின் உணவுப் பாதுகாப்பு மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடி, வேலையில்லாத் திண்டாட்டத்தை உண்டாக்கி, வீட்டு வருமானத்தை பாதித்து, அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதை சிக்கலாக்கி வருவதாக அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Posted in Uncategorized

‘கோ ஹோம் கோட்டா’ என்பதை அதிகமானோர் மறந்துவிட்டனர் – சஜித் பிரேமதாச

‘கோ ஹோம் கோட்டா’ என்பதை பெரும்பாலானோர் தற்போது மறந்து விட்டார்கள் என, இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரின்போது விசேட கூற்றை வெளியிட்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் பேசுகையில், “பொருளாதார நெருக்கடியினால் நடுத்தர மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள். அறிவுள்ளோர் நாட்டை விட்டு வெளியேறும் வீதம் நாளுக்கு நாள் தீவிரமடைகிறது. திறமைசாலிகள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்க அரசாங்கம் நடைமுறைக்கு பொருத்தமான முன்னேற்ற திட்டங்களை செயற்படுத்தவில்லை.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிர்மான கட்டுமானத்துறையினர், சிறு மற்றும் நடுத்தர தொழிற் துறையினர் வங்கி கடன்களினால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

வங்கி கடனை மீள் செலுத்துவதற்கு மேலும் ஓராண்டு கால அவகாசம் வழங்கல், வட்டி அறவிடலை இடைநிறுத்தல், கடன் தவணை மறுசீரமைப்பு குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டு பாரிய டாலர் நெருக்கடியினை நாடு எதிர்கொண்டுள்ள பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி அத்தியாவசிய பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட வகையில் இடைநிறுத்தப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ரணிலின் அரசியல் சதுரங்கம் ?

யதீந்திரா

சில வாரங்கள் வரையில், ரணிலின் அரசியல் வாழ்வு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதான ஒரு அனுமானமே பரவலாக இருந்தது. ஆனால், ராஜபக்சக்களின் வீழ்ச்சி, ரணில் விக்கிரமசிங்கவை ஆறாவது பிரதமராக்கியிருக்கின்றது. இதன் மூலம், ரணில் – தனது அரசியல் எதிர்காலம் தொடர்பான அனைத்து ஆருடங்களையும் ஒரு ஆசனத்தின் மூலம் தோற்கடித்திருக்கின்றார். ரணிலின் பதவியேற்பு தொடர்பில், பலவாறான அபிப்பிராயங்கள் இருக்கின்றன. அவரது நியமனம் ஜனநாயகரீதியானதல்ல – அது முறையானதல்ல என்று கூறுவோர் உண்டு. ரணில் விக்கிரமசிங்கவின் நியமனத்தை, ஜனநாயகரீதியில் பார்க்க முடியுமென்று நான் கருதவில்லை. இது அடிப்படையில் நெருக்கடி நிலையை கையாளுவதற்கான ஒரு தந்திரோபாய நகர்வு. தந்திரோபாய நகர்வுகளுக்கும் ஜனநாயகத்திற்கும் என்ன தொடர்பு? இதில் வெளித்தெரியாத டீல்கள் இருக்கலாம். அதிகார அரசியலில் டில்கள் தவிர்க்க முடியாதவை அதையும் விட்டுவிடுவோம். இவ்வாறான எதிர் கருத்துக்களுக்கப்பால், இன்றைய சூழலில் ரணில் விக்கிரமசிங்க நிலைமைகளை சமாளிக்கக் கூடிய ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. தென்னிலங்கையில் மட்டுமல்ல, தமிழர்கள் மத்தியிலும் அவ்வாறான அப்பிராயம் பரவலாக உண்டு.

ரணில் ஒரு நரியென்னும் அப்பிராயம் தமிழ் தேசியவாதிகள் மத்தியிலுண்டு. நான் தமிழ் அரசியலில் ஈடுபட ஆரம்பித்த போது, படித்த தமிழர்கள் ரணில் விக்கிரமசிங்கவை நரியென்று கூறுவதை பரவலாக கேட்டிருக்கின்றேன். அதாவது, அவர் ஒரு தந்திரசாலி. அவரிடம் கவனமாக இருக்க வேண்டுமென்னும் அச்சத்திலிருந்தே, மேற்படி பார்வை உருவாகியது. ஜே.ஆர்.ஜெயவர்த்தன தொடர்பிலும் தமிழ் அரசியலாளர்கள் மத்தியில் இவ்வாறான பார்வையே உண்டு. ஜெயவர்த்தன வழிவந்த ஒருவர் என்பதால்தான், ரணிலையும் பலர் அவ்வாறு உச்சரிக்கின்றனர். இங்கு நரியென்னும் அடைமொழி, அரசியல் அர்தத்திலேயே பயன்படுத்தப்படுகின்றது. ஒரு தலைவன் என்பவன், நரியாகவும் இருக்க வேண்டுமென்பது, மாக்கியவல்லியின் அறிவுரை. மாக்கியவல்லியின் பார்வையில், ஒரு தலைவர் என்பவர் சிங்கமாகவும் நரியாகவும் இருக்க வேண்டும். ரணில் மாக்கியவல்லியின் கூற்றுக்கு இணையான ஒரு அரசியல்வாதி. ரணிலின் மீதுள்ள அச்சத்தின் காரணமாகவே, பிரபாகரன், தேர்தல் பகிஸ்கரிப்பின் மூலம், அவரை தோற்கடிக்கும் வியூகத்தை வகுத்திருந்தார்.

2005 தேர்தலில், தமிழ் மக்கள் பெருவாரியாக வாக்களித்திருந்தால், நிச்சயம், ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருப்பார். ரணிலின் புத்திசாதுர்யம்மிக்க வியூகங்களை எதிர்கொள்வதை விடவும், கடும்போக்குவாதியொருவரின் யுத்தத்தை எதிர்கொள்வதையே, பிரபாகரன் விரும்பினார். இறுதியில் அவரது தெரிவு அவருக்கே அழிவானது. தங்களின் வெல்ல முடியாத அரசியல் எதிரிகளை, தற்கொலை தாக்குதலின்
மூலம் வீழ்த்துவே, புலிகளின் வழமையான அரசியல் தந்திரோபாயமாகும். ரணில் விக்கிரமசிங்கவின் விடயத்தில், வழமைக்கு மாறாக, தமிழர்களின் வாக்குகளை கொண்டே, ரணிலின் அரசியல் எதிர்காலத்தை பிரபாகரன் தோற்கடித்தார்.

இப்போது அவர் பிரதமராக வந்திருக்கும் பின்னணி தொடர்பான, விமர்சனங்களுக்கு அப்பால், இன்றைய சூழலை கையாளுவதற்கு ரணிலை விடவும் வேறொரு பொருத்தமான நபர் இல்லையென்பதை பலரும் ஏற்றுக்கொள்கின்றனர். 2019 நாடாளுமன்ற தேர்தலில், படுமோசமான தோல்வியை சந்தித்திருந்த ரணில் விக்கிரமசிங்க, ஒரேயொரு ஆசனத்தின் மூலம் நாட்டின் பிரதமராக வந்திருக்கின்றார் என்றால், அது அவரது புத்திக் கூர்மையன்றி, வேறொன்றுமில்லை. ராஜபக்சக்கள் மிகவும் திட்டமிட்டு இதனை செய்திருக்கின்றனர் என்றும் சிலர் கூறுகின்றனர் – இதனை நான் சரியான கணிப்பாக பார்க்கவில்லை. ஏனெனில், ஜனாதிபதி கோட்டபாயவின் முதல் தெரிவு, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவாகவே இருந்தது. ஆனால் சந்தர்பத்தை சரியாக கையாளுவதில் துரிதமாகவும் புத்திசாலித்தனமாகவும் பிரேமதாச செயற்பட்டிருக்கவில்லை. இந்த இடைவெளியைத்தான் ரணில் பயன்படுத்திக் கொண்டார்.

இன்றைய சூழலில் மக்களின் முதன்மையான பிரச்சினை பொருளாதார சுமைதான். இதனை சரிசெய்வதில் ரணில் வெற்றிபெறுவாராக இருந்தால், அவர் மீளவும் சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள ஒரு தலைவராக வந்துவிடலாம். ஆனால் ஆட்சி மாற்றத்தின் போது, ரணிலின் மீது வைத்திருந்த நம்பிக்கையை பாதுகாப்பதில் அவர் தோல்வியடைந்திருந்தார். ரணில்-மைத்திரி ஆட்சியின் தவறுகளும் ராஜபக்சக்களின் மீளெழுச்சிக்கு ஒரு பிரதான காரணமாகும். ஆட்சி மாற்றத்தின் தோல்வியே, இறுதியில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சியின் சிதைவுக்கும் வழிவகுத்தது. எந்த ராஜபக்சக்களை வீழ்த்துவதற்காக ஆட்சி மாற்றம் ஏற்பட்டதோ, இறுதியில், ராஜபக்சக்களை பலப்படுத்துவதற்கே அது பயன்பட்டது. அந்த வகையில், ஆட்சி மாற்றத்தை தக்கவைப்பதில் ரணிலால் வெற்றிபெற முடியவில்லை.

ரணில் இன்றைய நெருக்கடி நிலையையை கையாளக் கூடியவரென்று கூறுவதற்கு பின்னாலிருக்கும் பிரதான காரணம், அவர் மேற்குலகிற்கு சார்பானவர் என்னும் பார்வையாகும். இலங்கையின் சமாதான முன்னெடுப்புகளில், அமெரிக்கா அதிக ஈடுபாடு காட்டியிருந்தது. இதற்கு, அமெரிக்காவின் அப்போதைய உதவி ராஜாங்கச் செயலர், ரிட்சர்ட் ஆமிட்ரேஜின் பிரத்தியோக ஈடுபாடும் ஒரு பிரதான காரணமாகும். இது பற்றி, அப்போது, இலங்கைக்கான, அமெரிக்க தூதுவராகவிருந்த ஜிப்ரி லுன்ஸ்டட் இவ்வாறு விபரிக்கின்றார்.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சியை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டுமென்பதில் ரிச்சர்ட் ஆமிட்ரேஜ் பிரத்தியேக ஈடுபாடு காண்பித்திருந்தார். ஜக்கிய தேசியக் கட்சி, அடிப்படையில் மேற்குசார்பான கட்சி. உலகளாவிய கொன்சவர்டிவ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில், ஜக்கிய தேசியக் கட்சியும் ஒரு அங்கத்துவ கட்சி. இந்த கூட்டமைப்பின் இணை நிறுவனர்களில், அப்போது அமெரிக்காவின் ஜனாபதியாக இருந்த, ஜோர்ஜ். எச்.டயிள்யு.புஸ்சும் ஒருவராவார். அதே வேளை, அமெரிக்காவின் குடியரசு கட்சிக்கும் ஜக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான நீண்டகால நெருக்கமிருந்தது. இப்படியான காரணங்களால், ரணில் தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்த வேண்டுமென்பதில் ஆமிட்ரேஜ் பிரத்தியேக ஈடுபாடு காண்பித்திருந்தார். அன்றைய சூழலில், அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள வட்டாரத்தில், இலங்கைக்கான அதிகாரியென்று அழைக்கப்படுமளவிற்கு, ஆமிட்ரேஜ், இலங்கை விடயங்களில் பிரத்தியே ஈடுபாட்டை காண்பித்திருந்தார். ஆனால் ஆமிட்ரேஜின் பிரத்தியேக நகர்வையே விடுதலைப் புலிகள் தோற்கடித்திருந்தனர். மேற்குலகு விடுதலைப் புலிகளுக்கு எதிராக முற்றாக திரும்பிய இடமும் இதுதான்.

ரணில் விக்கிரமசிங்க மிகவும் புத்திக் கூர்மையுள்ளவராக இருந்த போதிலும் கூட, அவரால் நிறைவேற்றதிகார கதிரையை ஒரு முறை கூட தொடமுடியவில்லை. 2005இல் விடுதலைப் புலிகளால் அந்த வாய்ப்பை இழந்து போனார். 2015இல், ஆட்சி மாற்றத்திற்கான பரந்த கூட்டணியொன்று உருவாக்ககப்பட்ட போதிலும் கூட, ரணிலுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. மைத்திரிபால சிறிசேனவிற்கு பின்னாலிருந்தே ரணில் செயற்பட வேண்டியேற்பட்டது. ஆட்சிமாற்றம், ரணில் விக்கிரமசிங்கவை மீளவும் அதிகாரமுள்ள பிரதமராக முன்னிறுத்திய போதிலும் கூட, ரணில்-மைத்திரி உள்-மோதல்களால், அவர், மீளவும் மக்கள் மத்தியில் அன்னியப்படக் கூடிய சூழலே உருவாகியது. சஜித் பிரேமதாசவின் பிளவால், இறுதியில் ஜக்கிய தேசியக் கட்சி முற்றிலுமாக சிதைந்தது. கிட்டத்தட்ட ரணில் விக்கிரமசிங்க காணாமல் போய்விட்டார் என்னும் நிலையிலிருந்துதான், அவர் தற்போது, மீளவும் பிரதமராகியிருக்கின்றார்.

எரிக் சொல்கெய்ம், சொல்வது போன்று, ரணில் விக்கிரமசிங்க ஒரு சிறந்த புத்திஜீவி ஆனால் தெருச் சண்டைக்காரரல்ல – அவரிடம் விரிவான பொருளாதார திட்டமிருந்தது – சிங்கப்பூர், தாய்வான் போன்று, இலங்கையையும் மாற்ற வேண்டுமென்று அவர் விரும்பினார். ஆனால், சிங்கள தெருச்சண்டித்தனத்திற்கு முன்னால் ரணிலின் புத்திக் கூர்மை வெற்றிபெறவில்லை. ரணிலால் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக ஒரு போதுமே நிமிரமுடியவில்லை. ஆனாலும் தனது புத்திக் கூர்மைகொண்டு, தனக்கான ஆடுகளத்தை அவர் எப்போதுமே உருவாக்கிக் கொள்கின்றார். தெருச்சண்டியர்களான ராஜபக்சக்கள் தேற்றுப்போயிருக்கும் ஆடுகளத்தில், சிங்கமாகவும் நரியாகவும் மீண்டும் ரணில், களமிறங்கியிருக்கின்றார்.

ரணில் இதற்கு முன்னர் ஆடிய அரசியல் களங்களுக்கும் இதற்கும் அடிப்படையான வேறுபாடுண்டு. மீட்பர்கள் இல்லாத இடைவெளியில், தன்னால் மீட்க முடியுமென்னும் நம்பிக்கையோடு களமிறங்கியிருக்கின்றார். இது மிகவும் சிக்கலான சவால். இந்தச் சவாலில் ரணில் வெற்றிபெற்றால், அவர், மக்கள் மத்தியில் மறக்கமுடியாதவொரு தலைவராவார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒரு விடயம் உண்மை. ரணில் இந்த ஆட்டத்தில் தோல்வியடையக் கூடாது. ஒரு வேளை ரணில் தோல்வியடைந்தால், நாடு மீள முடியாத நெருக்கடிக்குள் வீழ்வது நிச்சயம். மோசமான வனமுறையொன்றும் வெளிக்கிளம்பலாம்.

வரலாறு பல ஆச்சரியங்களை மறைத்து வைத்திருக்கும் ஆசானாகும். 2005இல், ரணிலின் தோல்விக்கு தமிழர்கள் காரணமானபோது, அது விடுதலைப் புலிகளுக்கும்; தமிழ் மக்களுக்கும் பேரழிவை கொடுத்தது. இப்போது சிங்களவர்கள் ரணிலை தோற்கடித்தால், சிங்களவர்கள் பேரழிவை சந்திக்க நேரிடும். இப்போது ரணில் தமிழர்களுக்கு தேவையோ இல்லையோ ஆனால் நிச்சயம் சிங்களவர்களுக்கு தேவை. எனது கருத்தில் அவர் தமிழர்களுக்கும் தேவைதான்.

பாராளுமன்றத்தில் சுயாதீன எம்.பியானார் சம்பிக்க!

சுயாதீன எம்.பியாக இயங்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் அவர் இன்று அதனை அறிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரான தான் இனி சுயாதீன எம்.பியாகவே இயங்குவேன் என்று அவர் அதன்போது கூறியுள்ளார்.

இதேவேளை தனக்கு அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டிய எண்ணம் இல்லை என்றும், அது தொடர்பில் வெளியாகும் செய்திகளின் உண்மையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பிரதமர் ரணில் பேச்சுவார்த்தை

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவுடன், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமை குறித்து, இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்கள் மட்டத்திலான குழு விரைவில் இலங்கைக்கு வருகை தருவதன் மூலம், பணியாளர் மட்டத்திலான உடன்படிக்கையை முடிவு செய்ய முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த பேச்சு வார்த்தையின் போது சும்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்திவதற்கான நிதி அளிப்பது (பிரிட்ஜிங் நிதி) தொடர்பான பேச்சுவார்த்தைகள், இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்கள் அளவிலான உடன்படிக்கையை நம்பியிருப்பதாகவும் பிரதமர் விளக்கமளித்துள்ளார்.

இந்த நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு உதவிகளை வழங்க தமது விருப்பத்தை சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பதவி விலகத் தயாராகும் பஸில் – அமைச்சராகும் தம்மிக்க பெரேரா!

முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ பதவி விலகுவதற்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வாரத்திற்குள் அவர் அந்த முடிவை அறிவிக்கவுள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அவரும், அவருடன் மேலும் சில எம்.பிக்களும் பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா, தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது அவருக்கு அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அஜித் நிவாட் கப்ராலுக்கு பிணை

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை 10 மில்லியன் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(07) உத்தரவிட்டது.

அரசுக்கு சொந்தமான 6.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி குறித்து நம்பிக்கையை சீர்குலைத்தமை தொடர்பான முறைப்பாட்டுக்கான விசாரணைக்காக அஜித் நிவாட் கப்ரால் மன்றில் ஆஜராகிய சந்தர்ப்பத்தில் இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized