‘கோ ஹோம் கோட்டா’ போராட்டத்திற்கு 50 நாள்: இன்று கொழும்பில் பேரணி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் 50 நாட்கள் ஆகின்றன.

இதனையொட்டி இன்றைய தினம் கொழும்பில் பேரணியை நடத்துவதற்கு அரச எதிர்ப்பு குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த கோட்டை பொலிஸார், நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுக்கொண்டுள்ளனர்.

இன்று ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளவர்கள், கொள்ளுபிட்டி சந்தி முதல் கோட்டை நீதிவான் நீதிமன்ற அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் எவ்வித சேதத்தையும் விளைவிக்க கூடாது என கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எவ்வாறாயினும் திட்டமிட்டவாறு இன்று பிற்பகல் பேரணியை நடத்துவோம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.

Posted in Uncategorized

இலங்கை ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்படாது – ஞானசார தேரர் !

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்பட மாட்டாது என அதன் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான பரிந்துரைகளை ஏற்கனவே தயாரித்துள்ளதாகவும் அந்த அறிக்கை விரைவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஜனாதிபதி செயலணியானது 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி ஜனாதிபதியினால் ஸ்தாபிக்கப்பட்டதுடன், இந்த வருடம் பெப்ரவரி 28 ஆம் திகதி மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டது.

இதன்படி, ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் எதிர்வரும் 28ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மருத்துவ பொருட்களின் சவால்கள்-இலங்கைக்கு WHO முழு ஒத்துழைப்பு

இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்வதற்கு இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் முழுமையான ஆதரவு வழங்கப்படுமென கலாநிதி. அலகா சிங், (Dr.Alaka Singh) வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸிடம் உறுதியளித்துள்ளார்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதி கலாநிதி. அலகா சிங்கை நேற்று முன்தினம் (25)  சந்தித்து, இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள், குறிப்பாக மருந்துப் பொருட்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலின் போது, நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பல சவால்களை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சுட்டிக் காட்டியதுடன், இந்த கடினமான தருணத்தில் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதியின் அலுவலகம் முன்னெடுத்துள்ள செயலூக்கமான நடவடிக்கைகளுக்காக நன்றி தெரிவித்தார்.

இதன் போதே இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்வதற்கு இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் முழுமையான ஆதரவு வழங்கப்படுமென கலாநிதி. அலகா சிங் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

தமிழ் அகதி குடும்பத்தினரை விடுவித்த அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம்

அவுஸ்திரேலிய தாராளவாத தேசிய ஆட்சி காலக்கட்டத்தில் பல்வேறு இன்னல்களையும் பல ஆண்டுக்கால தடுப்புக் காவலையும் எதிர்கொண்ட பிரியா- நடேசலிங்கம் எனும் இலங்கைத் தமிழ் அகதி குடும்பத்தினரை தொழிற்கட்சி தலைமையிலான அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் விடுவித்திருக்கிறது.

தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் இவர்கள் முன்பு வாழ்ந்த பிலோயலா பகுதியிலேயே வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனர். புலம்பெயர்வு சட்டத்தில் உள்ள தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தி இடைக்கால உள்துறை அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் அக்குடும்பத்தினருக்கு இணைப்பு விசாக்களை வழங்கியுள்ளார்.

இதன் மூலம் அவர்கள் குடிவரவு நிலையில் உள்ள பிரச்சனை தீர்க்கப்படும் வரை அவர்கள் பிலோயலா பகுதியிலேயே சட்டரீதியாக வசிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

வன்முறைகள் தொடர்பில் ஆராய முன்னாள் படைத் தளபதிகள் தலைமையில் குழு!

மீரிஹானவில் ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடக்கம் மே 9 ஆம் திகதி நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் வரையில் ஆராய முன்னாள் படைத்தளபதிகள் மூவர் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நியமித்துள்ளார்.

கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட இந்த குழுவிற்கு தலைமை தாங்கவுள்ளார்.

ஜெனரல் தயா ரத்நாயக்க மற்றும் விமானப்படையின் ஏயார் மார்ஷலாக செயற்பட்ட ரொஷான் குணதிலக்க ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையோரிடம் நாளை முதல் விசாரணைகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

புதிய பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக ஜெனரல் ஷவேந்திர சில்வா

இதுவரை காலமும் பதில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக செயற்பட்டு வந்த ஜெனரல் ஷவேந்திர சில்வா, பாதுகாப்பு படைகளின் புதிய பிரதம அதிகாரியாக எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி பதவியேற்கவுள்ளார்.

அத்துடன் ஜெனரல் ஷவேந்திர சில்வா எதிர்வரும் 31ஆம் திகதி தமது பொறுப்பிலிருந்து விலகவுள்ளார்.

இதேவேளை, இலங்கை இராணுவத்தின் தற்போதைய பிரதம அதிகாரியான ஜெனரல் விக்கும் லியனகே, ஜூன் 01ஆம் திகதி முதல் 24ஆவது இராணுவத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக இலங்கை இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு – பிரதமர் அலுவலகம் மறுப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்படவுள்ள நிவாரணம் சார்ந்த வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களின் சம்பளம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படும் என பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததது.

இந்நிலையில் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவ்வாறான தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என தெரிவித்து அந்த அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

வரவிருக்கும் இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் கல்வித்துறை தவிர அனைத்து அமைச்சகங்களுக்கும் ஒதுக்கீடுகள் குறைக்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.

21ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

உத்தேச 21ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

அத்துடன், 21ஆவது திருத்த சட்டமூலத்திற்கு தேவையான யோசனைகளையும் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த உத்தேச வரைவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் இணக்கம் ஏற்பட்டதாக அமைச்சர் நிமல் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை 21 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விசேட கலந்துரையாடல் டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் அதன் தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை குறித்து பாரிஸ் கிளப்புடன் பிரிட்டன் பேச்சுவார்த்தை

கடன் வழங்கும் முக்கிய நாடுகளின் அதிகாரிகளை உள்ளடக்கிய பாரிஸ் கிளப் உடன் இலங்கை குறித்து பிரிட்டன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது என வெளிநாடு பொதுநலவாயம் பாராளுமன்ற விவகாரங்களிற்கான பிரிட்டனின் இராஜாங்க அமைச்சர் விக்கிபோர்ட் இதனை தெரிவித்துள்ளார்.

உணவுப் பாதுகாப்பு வாழ்வாதாரம் உட்பட இலங்கை நிலவரத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் பொருளாதார நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கு அமைதியான ஜனநாயக அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையை பின்பற்றவேண்டும் என அவர் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஏப்பிரல் மாதம் உலக வங்கி 600மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்க முன்வந்துள்ளதாகவும் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் அறிகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

உலகவங்கிக்கு நிதி வழங்கும் முக்கிய நாடு பிரிட்டன் என தெரிவித்துள்ள அவர் இலங்கையின் நிதி நிலைமை குறித்து பிரிட்டன் சர்வதேச நிதி அமைப்புகளுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தை பேண்தகுநிலைக்கு கொண்டுவருவதற்காக சர்வதேச நாணயநிதியத்துடன் ஆழமானபேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதை வரவேற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைகள் ஆறு மாதங்கள் நீடிக்கலாம்,இலங்கை சர்வதேச நாணயநிதியத்தின் ஆதரவை பெற்றுள்ளது இலங்கையின் யோசனைகள் எவையும் இதுவரை உறுப்புநாடுகளுடன் பகிர்ந்துகொள்ளப்படவில்லை அவ்வாறு பகிர்ந்து கொள்ளப்பட்டவுடன் நாங்கள் அவற்றை ஆராய்வோம்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து கிடைப்பதற்கான நிதி உதவி குறித்து பல நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன -இலங்iயின் கடன் குறித்து பாரிஸ் கிளப்புடன் பிரிட்டன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

TL

 

’யாழ்ப்பாணத்துக்கு சென்ற முதலாவது இந்திய பிரதமர்’

வணக்கம் என்று சொல்லி தனது உரையை தொடங்கினார் மோதி.

மீண்டும் தமிழ் நாட்டிற்கு வருவது என்பது எப்போதுமே அருமையாக இருக்கும் ஒன்று. இது மிகவும் சிறப்பான ஒரு பூமி. இந்த மாநிலத்தின் மக்கள், கலாசாரம், மொழி என அனைத்தும் சிறப்பானவை.

பாரதியார் அவர்கள் செந்தமிழ் நாடு எனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என மிக அழகாக பாடியுள்ளார்.

நண்பர்களே ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாட்டை சேர்ந்த யாராவது ஒருவர் தலைசிறந்து விளங்குகிறார்.

அண்மையில் காது கேளாதோருக்கான ஒலிம்பிக்ஸ் குழுவினருக்கு என் இல்லத்தில் வரவேற்பு அளித்தேன். தமிழ் மொழி நிலையானது, தமிழ் கலாசாரம் உலகம் முழுவதும் பரந்துள்ளது. சென்னை முதல் கனடா வரை, மதுரை முதல் மலேசியா வரை, நாமக்கல் முதல் நியூயார்க் வரை, சேலம் முதல் தென் ஆப்ரிக்கா வரை பொங்கல் மற்றும் புத்தாண்டு காலங்கள் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணத்தில் மேலும் ஒரு சிறப்பான அத்தியாயத்தை கொண்டாட நாம் அனைவரும் இங்கே கூடியிருக்கின்றோம். 31 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட திட்டங்கள் இங்கே ஒன்று தொடங்கி வைக்கப்பட இருக்கின்றன அல்லது அவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட இருக்கின்றன.

ஐந்து ரயில் நிலையங்கள் சீரமைக்கப்படுவது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு நவீனமயமாக்கலும் மேம்பாடும் செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் இது உள்ளூர் கலை, கலாசாரத்துக்கு ஏற்படையதாகவும் இருக்கும்.

மதுரைக்கும் தேனிக்கும் இடையேயான பாதை மாற்றம் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்.

திருவள்ளூர் முதல் பெங்களூர் வரை, எண்ணூர் முதல் செங்கல்பட்டு வரையுமான இயற்கை எரிவாயு குழாய் தொடக்கம் காரணமாக தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகம், ஆகிய மாநில மக்களுக்கு இயற்கை எரிவாயு கிடைப்பது எளிதாக இருக்கும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும், சென்னை துறைமுகத்தை பொருளாதார வளர்ச்சியின் மையமாக்கும் தொலைநோக்கு பார்வையோடும், சென்னையில் ஒரு பல்நோக்கு ஏற்பாட்டியல் பூங்காவிற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டிருக்கிறது.

உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்த நாடுகள் எல்லாம் வளரும் நாடுகள் என்ற நிலையில் இருந்து வளர்ந்த நாடுகள் என்ற நிலைக்கு உயர்ந்தன என்பதை வரலாறு நமக்கு கற்பிக்கிறது.

தலைசிறந்த தரமும் நீடித்த தன்மையும் உடைய உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் இந்திய அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. நான் உள்கட்டமைப்பு பற்றி பேசும்போது சமூக மற்றும் புற கட்டமைப்பு பற்றியே குறிப்பிடுகின்றேன்.

தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் மேலும் பிரபலப்படுத்துவதற்கு இந்திய அரசு முழு அர்ப்பணிப்போடு செயல்படுகிறது. செம்மொழி தமிழாய்வு மையத்திற்கு புதிய வளாகம் ஒன்று இந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் தொடங்கப்பட்டது. இந்த புதிய வளாகத்திற்கு முழுக்க முழுக்க மத்திய அரசே நிதி வழங்குகிறது.

பனாரஸ் பல்கலைக்கழத்தில் தமிழ் படிப்பிற்காக சுப்ரமணிய பாரதி பெயரில் ஒரு இருக்கை அண்மையில் அறிவிக்கப்பட்டது என மோதி உரையாற்றினார்.

மேலும் அவர் தனது உரையில் இலங்கை குறித்தும் குறிப்பிட்டார்.

“இலங்கை குறித்து நீங்கள் கவலை கொள்வீர்கள் என்று எனக்கு தெரியும். நட்பு ரீதியாகவும், அண்டை நாடு என்ற காரணத்தினாலும் இந்தியா, தன்னால் முடிந்த உதவிகளை செய்கிறது.” என்று தெரிவித்தார் மோதி.

இலங்கை சிரமான சூழ்நிலையை கடந்துகொண்டு இருக்கிறது எனவும் ஒரு நெருங்கிய நண்பன் என்ற வகையிலும் அண்டை நாடு என்ற ரீதியிலும் இந்தியா அனைத்துவிதமான உதவிகளையும் வழங்கிவருகிறது என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்துக்கு விஜயம் செய்த பிரதமர் நரேந்திர மோடி அங்கு நடைபெற்ற வைபவத்தில் மேலும் உரையாற்றுகையில்,

உணவு, எரிபொருள், மருந்து ஏனைய அத்தியாவசிய பொருட்கள் போன்ற உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பல இந்திய அமைப்புகளும் தனி நபர்களும் இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மக்களுக்காக உதவிகளை வழங்கியுள்ளனர்.

இலங்கைக்கு ஆதரவு வழங்குவதில் சர்வதேச அமைப்புகள் மத்தியில் இந்தியா உரக்க பேசியுள்ளது. ஜனநாயம், ஸ்திரத்தன்மை, பொருளாதார மீட்பு ஆகியவற்றுக்காக இலங்கை மக்களுக்கு இந்தியா துணை நிற்கும். யாழ்ப்பாணத்துக்கு சில ஆண்டுகளுக்குமுன் சென்றதை என்னால் மறக்கமுடியாது. யாழ்ப்பாணத்துக்கு சென்ற முதலாவது இந்திய பிரதமரும் நானே என்று தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized