“ பிரதமர் மஹிந்தவை பாதுகாப்போம் ” : அலரி மாளிகை முன் ஆர்ப்பாட்டம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் இன்று காலை அலரிமாளிகையில் கூடியுள்ளனர்.

இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்து ‘பிரதமர் மஹிந்தவை பாதுகாப்போம்’என பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் தற்போது அலரிமாளிகை முன்பாக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

பொருளாதார பிரச்சனைக்கு பிரதமரால் மாத்திரமே தீர்வு காண முடியும் எனவும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் நோக்கம் வெற்றிபெற இடமளிக்க முடியாது எனவும் பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

“கோட்டா கோ கம ” வுக்கு ஒரு மாதம் : உடுக்கு அடித்து மாடன் பத்திரகாளி பூஜை, மரணச்சடங்கு என பல பரிணாமங்களில் போராட்டங்கள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவியில் இருந்து விலகுமாறு கோரி மக்களால் ஆரம்பிக்கப்பட்ட “கோட்டா கோ கம” எழுச்சிப் போராட்டத்திற்கு இன்று ஒரு மாதம் நிறைவடைகின்றது.

குறித்த போராட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கொழும்பு காலிமுகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து போராட்டத்தின் தன்மை பல்வேறு பரிமாணம் எடுத்தது.

இதன்படி மே மாதம் 7 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8 மணிக்கு உடுக்கு அடித்து மொடன் பத்திரகாளி பூஜை இடம்பெற்றது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமது நோய்பிணிகளை அகற்றுவதற்கு தனது எதிரிகளை வெல்வதற்கு, தக்கெதிரான அநியாயங்களை , வன்முறைகளை தடுப்பதற்கு உடுக்கு அடித்து அருளாடி மனிதருள் மொடன் – காளி உருவேறி தீர் சொல்லும் தெய்வீக சம்பிரதாயம் காலாகலமாக மலையகத்தில் இடம்பெற்ற வருகின்றது. அதனையொத்த பூஜையே இடம்பெற்றது.

உடுக்கு, பறை இசை முழங்க இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதேவேளை, நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவு அலரி மாளிகைக்கு முன்னால் இடம்பெறும் மைனா கோ கமவுக்கு முன்னால் சிங்கள முறைப்படி மரணச் சடங்கு நிறைவேற்றும் நிகழ்வு இடம்பெற்றது.

ஆரம்பத்தில் பொது மக்கள் மாத்திரம் இந்த அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் , பின்னர் மதத் தலைவர்கள் , சட்டத்தரணிகள், நிபுணர்கள் உள்ளிட்ட பல தரப்பினராலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் பல நிறுவனங்கள் மற்றும் தொழில்சார் வல்லுனர்களும் போராட்டத்தில் இணைந்துகொண்டனர்.

‘பக்க சார்பற்ற மக்கள் எழுச்சிப் போராட்டம்’ என்ற கருப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் பொது மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் கடந்த ஒரு மாத காலமாக இடைவிடாது கொட்டும் மழைக்கு மத்தியிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த போராட்டம் உலகளாவிய ரீதியில் பலரை ஈர்த்த ஒரு ஜனநாயக வழிப் போராட்டமாக அமைந்ததோடு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் சிந்தனைகளும் பாராட்டப்பட்டு வருகின்றது.

நாடளாவிய ரீதியில் வியாபித்த கோட்டா கோ கம போராட்டம் கண்டி, காலி, மாத்தறை, வடக்கு, மலையகம், கிழக்கு போன்ற பல பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இலங்கையில் முன்னெடுக்கப்படும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் வெளிநாடுகளிலுள்ள இலங்கை பிரஜைகளும் அந்நாடுகளில் தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதற்மைய இத்தாலி, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, சுவிற்சர்லாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகைக்கு முன்னால் “ மைனா கோ கம ” என்றும் பாராளுமன்ற பகுதியில் “ஹொரு கோ கம” என்ற தொனிப்பொருளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பிரதமரின் அநுராதபுர விஜயத்தின் போது மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அநுராதபுர விஜயத்தின் போது பொதுமக்கள் ஒன்றினைந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பிரதமரே இன்று நற்செய்தியை எதிர்பார்த்துள்ளோம், இதுவரை செய்தது போது பதவி விலகுங்கள் என ஒருவர் பிரதமரை நோக்கி குறிப்பிட்டார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை அநுராதபுரத்தில் உள்ள ஜெயஸ்ரீ மஹா விகாரை,ருவென்வெலிசாய விகாரை ஆகிவற்றில் மத வழிபாடுகளில் ஈடுப்பட்hர்.

முதலாவதாக ஜெயஸ்ரீ மகா விகாரைக்கு வருகை தரும் போது அங்கு கூடியிருந்த மக்கள் பிரதமரிடம் நலன் விசாரித்தார்கள்.நாட்டை பாதுகாத்த தலைவர் நீங்கள்,தற்போதைய நிலைமையில் நாட்டை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் என குறிப்பிட்டனர்

அவர்களே நீங்கள் இதுவரை செய்தது,போதும் பதவி விலகுங்கள் இன்று நற்செய்தி உள்ளது தானே என அங்கு கூடியிருந்தவரில் ஒருவர் பிரதமர் முன்பாக வந்து பிரமரிடமே வினவினார்.

பிரதமர் ஜெயஸ்ரீ மகா விகாரையில் மத வழிபாடுகளில் ஈடுப்பட்டதன் பின்னர் வெளியேறும் போது பொது மக்கள் ஜனாதிபதி,பிரதமர் உட்பட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி,கோ ஹோம் கோடா,கோ ஹோம் மஹிந்த,கோ ஹோம் ராஜபக்ஷ என பதாதைகளை ஏந்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்,

அதனை தொடர்ந்து பிரதமர் ருவன்வெலிசாய விகாரையில் மத வழிபாட்டினை மேற்கொண்டு வெளியேறுகையில் அங்கு கூடியிருந்த மக்கள் பிரதமருக்கும்,அரசாங்கத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அதனை தொடர்ந்து பிரதமர் மிரிசவெடிய தாதுகோபுரத்தில் மத வழிபாடுகளில் ஈடுப்பட்டதன் பின்னர் அங்கிருந்து வெளியேறுகையில் அங்கு கூடியிருந்த பொது மக்கள் பிரதமருக்கு எதிராகவும்,அரசாங்கத்திற்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Posted in Uncategorized

அவசரகால நிலைக்கு PUCSL எதிர்ப்பு

பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் திகதி 2278/22  இலக்க அதிவிசேட வர்த்தமானி  மூலம் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பில்  இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) எதிர்ப்பைத் தெரிவிக்கிறது.

ஐந்து வாரங்களில் இரண்டாவது முறையாக அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மின்சாரம் மற்றும் பெற்றோலிய தொழிற்துறைக்கான ஒழுங்குறுத்தல் நிறுவனம் என்ற வகையில் 7.3 மில்லியன் மின்சார நுகர்வோர்கள் மற்றும் 21 மில்லியனுக்கும் அதிகமான சிறு குழந்தை முதல் வயதான நோயாளிகள் வரையான மின்சார நுகர்வோர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முதன்மை பொறுப்பும் பணியும் ஆகும்.

போதிய மின் விநியோகம் இல்லாத காரணத்தால் முன்னெடுக்கப்படும் தொடர் மின்வெட்டு தற்போதைய ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுமக்களிடையே அமைதியின்மையை அதிகரித்துள்ளது என எதிர்பார்க்கிறோம். நுகர்வோரின் நலன்களைப் பாதிக்கும் விடயங்கள் குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) பொறுப்பாகும். இச்சந்தர்ப்பத்தில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவது தற்போதைய பொருளாதார பிரச்சினைகளை மேலும் மோசமடைய செய்வதால்  அத்தகைய அவசர நிலையின் போது நுகர்வோர் மற்றும் பங்குதாரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பொறுப்பை நிறைவேற்றுவதில்  தடைகள் ஏற்படும் என்பதால் அவசரகால நிலையை பிரகடனப்படுத்துவதை தவிர்க்குமாறு  இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

எமது இந்த ஆலோசனைகள் மற்றும் அது தொடர்பான விடயங்கள் குறித்து தீவிர கவனம் செலுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்பார்க்கிறது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்படுவார்கள் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என பொதுமக்கள்பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள வீதியில் இடம்பெற்றது போல ஆர்ப்பாட்டக்காரர்கள் பல மணிநேரம் முக்கிய வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களிற்கும் நாடாளுமன்றம் செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தவேண்டியது எங்கள் கடமை என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொலிஸார் படையினர் பிரதேச செயலாளர்களின் உதவியுடன் அவசரகாலநிலையை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்தின் பின்னர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தனியாக அதிகாரிகளை சந்தித்தார் என அவர் தெரிவித்துள்ளார்.

நிலைமை கட்டுப்பாட்டை மீறி செல்வதை தவிர்ப்பதற்காகவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் அவசரகாலநிலை அறிவிக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

அமைதியான போராட்டங்களில் கண்ணீர்ப்புகை,வன்முறை -மருத்துவ சங்கம் கண்டனம்

அமைதியான போராட்டக்காரர்கள் மற்றும் சக குடிமக்களுக்கு எதிராக சட்ட அமலாக்க அதிகாரிகள் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மற்றும் வன்முறையைப் பயன்படுத்துவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். என மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.

கண்ணீர்ப்புகையில் உள்ள இரசாயனங்கள் சுவாசக் கோளாறுகள், கண்கள் மற்றும் தோலில் எரிச்சல் மற்றும் குறிப்பிடத்தக்க உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகின்றன. இந்த மோசமான நிலைமை குறித்து மிகவும் கவலையடைவதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இத்தகைய சூழலில் இலங்கை மருத்துவ சங்கம் சுகாதார நிபுணர்கள் குழுவின் உறுப்பினர்கள் பின்வரும் பரிந்துரைகளை வழங்கினர்:

அரசாங்கத்தின் அவசரநிலைப் பிரகடனம் குறித்து இலங்கை மருத்துவ சங்கம் மிகவும் அக்கறை கொண்டுள்ளது.

இத்தகைய நடவடிக்கையானது மனிதனின் வன்முறை வடிவங்களைத் தூண்டும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

இது ஏற்கனவே கொந்தளிப்பான சூழ்நிலையை சீர்குலைக்க வழிவகுக்கும் மற்றும் அப்பாவி குடிமக்களின் நல்வாழ்வுக்கு தீங்கு விளைவிக்கும், இத்தகைய நிகழ்வு சீர்செய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும் என்பதால், அவசரகாலச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

பொதுமக்களின் குரலுக்கு செவிசாய்த்து, நமது அன்புக்குரிய தாய்நாட்டின் நலனுக்கான விரைவான தீர்வை நோக்கிச் செயல்படுமாறு இலங்கை மருத்துவ சங்கம் கேட்டுக்கொள்கிறது. என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்துக்கெதிராக மூன்று கிராமங்கள்?

நிலாந்தன்

முன்னாள் ஜனாதிபதி மறைந்த ரணசிங்க பிரேமதாசவின் அரசியல் சாதனைகளில் ஒன்றாக காட்டப்படுவது அவருடைய கிராம எழுச்சித் திட்டமாகும். சிங்களத்தில் கிராமோதய என்றழைக்கப்பட்ட அத்திட்டத்தின் மகுட வாசகம் தமிழில் பின்வருமாறு அமையும்…”2000வது ஆண்டில் அனைவருக்கும் புகலிடம்”.அது தமிழில் பிழையாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்றும், அனைவருக்கும் வசிப்பிடம் என்றுதான் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்றும் சிங்களம் தெரிந்த ஒரு நண்பர் கூறுவார். மேலும் அவர் பகிடியாக செல்வார் அந்த வாசகத்தில் ஒரு தீர்க்கதரிசனம் உண்டு என்று. தமிழ் மக்களில் அனேகமானவர்கள் குறிப்பிட்ட ஆண்டுக்குள் அகதிகளாக்கப்பட்டு விடுவார்கள்.அதனால் அவர்களுக்கு புகலிடம் தேவை என்பதை அது முன்னறிவிக்கிறது என்று அதை விளங்கிக் கொள்ளலாம் என்பது எனது நண்பரின் வியாக்கியானம்.

இவ்வாறு அரசாங்கத்தால் கிராமங்கள் புதிதாகக் கட்டிக் கொடுக்கப்படும் ஓர் அரசியல் பாரம்பரியத்தில், குறிப்பாக ஆயுத மோதல்களுக்கு பின்னர் படைத்தரப்பினால் நல்லிணக்க கிராமங்கள் கட்டிக் கொடுக்கப்படும் ஓர் அரசியல் பாரம்பரியத்தில்,அரசாங்கத்துக்கு எதிராகப் போராடும் மக்கள் கிராமங்களை உருவாக்குவது என்பது ஒரு சுவாரசியமான முரண்தான்.

அரசாங்கத்துக்கு எதிராக போராடத் தொடங்கிய ஒரு புதிய தலைமுறை காலிமுகத்திடலில் “கோட்டா கோகம” என்ற ஒரு போராட்டக் கிராமத்தை உருவாக்கியது.அது பின்னர் பிரதமரின் அலரி மாளிகைக்கு முன் “மைனா கோகம” என்ற பெயரில் ஒரு புதிய கிராமத்தை குட்டி போட்டது. அதன்பின் கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்ற வாசலுக்கு அருகே மேலும் ஒரு குட்டிக் கிராமம் பிறந்திருக்கிறது. அதன் பெயர் ” ஹொரு கோகம ” ஆகும்.

இதில் மைனா கோகமவில் வரும் மைனா ஒரு பறவை என்று நாம் நினைக்கக்கூடும்.ஆனால் சிங்களத்தில் அதற்கு ஆபாசமான வியாக்கியானங்கள் உண்டு என்று சிங்களம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். அப்படித்தான் சில நாட்களுக்கு முன் நாடாளுமன்றத்துக்கு முன் உருவாக்கப்பட்ட கிராமத்தில் உள்ள “ஹொரு” என்ற சொல் கள்வர்களைக் குறிக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது கள்ளர்களே வீட்டுக்கு போங்கள் என்று பொருள்.

முதலில் கோட்டாவை வீட்டுக்குப் போ என்று கேட்டார்கள்.அதன்பின் மஹிந்தவை வீட்டுக்கு போ என்று கேட்டார்கள்.இப்பொழுது நாடாளுமன்றத்தில் இருக்கும் கள்ளர்களை வீட்டுக்குப் போ என்று கேட்கிறார்கள். இவ்வாறு ஒருபுறம் அரசியல்வாதிகளை வீட்டுக்குப் போ என்று கேட்டு மக்கள் சுமார் 30 நாட்களுக்கு மேலாக ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அரசியல்வாதிகளோ குறிப்பாக ராஜபக்ச குடும்பமோ அவ்வாறு வீட்டுக்குப் போகத் தயார் இல்லை என்பதைத்தான் இந்த வாரம் நாடாளுமன்றத்தில் நடந்தவை நமக்கு உணர்த்துகின்றன.

பௌத்த மகா சங்கம் தலையிட்டு ஒரு இடைக்கால ஏற்பாட்டுக்கு போகுமாறு அழுத்தங்களை பிரயோகித்த போதிலும், மகா சங்கத்தை மக்கள் பிரதிநிதிகள் பொருட்படுத்தவில்லை என்பதையும் கடந்த சில நாள் நாட்டு நடப்பு நமக்கு உணர்த்துகிறது.மகா நாயக்கர்கள் வலியுறுத்தியது போல ஒரு புதிய இடைக்கால அரசாங்கத்தை உருவாக்கும் பொருட்டு மகிந்த ராஜபக்ச பதவி விலகத் தயாரில்லை என்று தெரிகிறது. அவர் ஒரு பழுத்த அரசியல்வாதி. தன் பலம் எதிரியின் பலம் அனைத்தும் தெரிந்தவர்.எனவே தன்னை நாடாளுமன்றத்தில் அசைக்க முடியாது என்றும் நம்புகிறார். அப்படி எதுவும் நடந்தால் எதிர்க் கட்சிகளின் வரிசையில் போய் அமரவும் தயார் என்று கூறுகிறார். அண்மையில் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனிடம் அவர் அவ்வாறு கூறியிருக்கிறார். இதன் மூலம் எதிர்க் கட்சிகளின் மத்தியில் இருந்து கொண்டு அவர் எப்படிப்பட்ட குழப்பங்களை செய்வார் என்பது ஆளும் கட்சிக்கும் தெரியும், அவருடைய சகோதரருக்கும் தெரியும். தென்னிலங்கையில் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் குழப்பங்களை எதிர்க்கட்சிகளால் கெட்டித்தனமாகக் கையாள முடியவில்லை என்பதனை சுட்டிக்காட்டும் விமர்சகர்கள் இப்பொழுது சஜித் இருக்கும் இடத்தில் மஹிந்த இருப்பாராக இருந்தால் நிலைமை எப்பொழுதோ தலைகீழாக மாறியிருக்கும் என்று கூறுவார்கள்.

அதே சமயம்,ஆர்ப்பாட்டக்காரர்களை வீட்டுக்கு அனுப்புவது என்றால் ஒரு ராஜபக்சவை பதவியிலிருந்து இறக்கத்தான் வேண்டும் என்று மகாசங்கம் கருதுவதாக ஒரு தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதன்மூலம் மற்றொரு ராஜபக்சவை அதாவது சிங்கள பௌத்த அதிகாரத்தைப் பாதுகாத்த யுத்த வெற்றி நாயகர்களில் ஒருவரையாவது தொடர்ந்தும் பதவியில் வைத்திருக்கலாம் என்று மகாசங்கம் திட்டமிட்டது.யாப்பின்படி கோட்டாபயவை இலகுவாக அகற்ற முடியாது என்பதும் மகா சங்கத்துக்கு தெரிகிறது. அதனால்தான் மஹிந்தவை பதவியில் இருந்து இறக்கும் ஒரு புதிய ஏற்பாட்டை குறித்து மகாசங்கம் அறிவுறுத்தியது.

ஆனால் மஹிந்த அவ்வாறு பதவி துறக்கத் தயார் இல்லை. சில நாட்களுக்கு முன் அவருக்கு நெருக்கமான ஒருவரிடம் கதைக்கும் பொழுது சேர் ஜோன் கொத்தலாவல பல தசாப்தங்களுக்கு முன் பண்டாரநாயக்கவுக்குக் கூறிய ஒரு வாசகத்தை நினைவூட்டியிருக்கிறார். “கட்டப்பட்டிருந்த நாய்களை அவிழ்த்து விட்டு விட்டாய்” என்று கொத்தலாவல பண்டாரநாயக்கவுக்கு கூறியிருக்கிறார். அவர் மறைமுகமாக குறிப்பிட்டது பௌத்த பிக்குகளை என்றும் கருதப்படுகிறது. இப்பொழுது மஹிந்த அதை நினைவூட்டுகிறார். அவர் மகா நாயக்கர்களின் அழுத்தத்துக்கு பணிந்து பதவியை துறக்கத் தயாரில்லை என்று தெரிகிறது.

அப்படியானால் அடுத்த கட்டம் என்ன? இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் அரசியல் சங்கீதக் கதிரை விளையாட்டுதான் இனிமேலும் நடக்க போகின்றதா?

 

ஆனால் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லையென்றால் ஐ.எம்.எப் போன்ற அமைப்புகள் உதவ முன்வராது. இந்தியா மற்றும் ஐஎம்எப் உள்ளிட்ட வெளித் தரப்புகளின் உதவியோடு இப்போது நிலவும் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்த்து விட்டால் ஆர்ப்பாட்டக்காரர்கள் அடங்கி விடுவார்கள் என்று மஹிந்தவும் அவருடைய அணியும் நம்புகின்றது. அவர் அதைத்தான் அண்மையில் மனோ கணேசனிடம் தெரிவித்திருக்கிறார். இது ஐ.எம்.எப்.இற்கும் தெரிகிறது. அதனால்தான் உதவிகள் உடனடியாக வழங்கப்படாமல் கால இழுத்தடிப்பு செய்யப்படுகிறதா என்ற சந்தேகமும் ஒரு பகுதி விமர்சகர்கள் மத்தியில் உண்டு. அதாவது அரசாங்கம் ஐஎம்எப் இடமிருந்து பெறும் உதவிகளின் மூலம் இப்போதிருக்கும் நெருக்கடிகளில் இருந்து தப்பிவிடக்கூடாது என்று மேற்கு நாடுகள் கருதுவதாகவும் எடுத்துக்கொள்ளலாம் என்று மேற்படி விமர்சகர்கள் நம்புகிறார்கள். ஆனால் ஐஎம்எப், உலக வங்கி போன்றன உதவிகளை வழங்கும் பொழுது வழமையாக குறுகிய காலத்துக்குள் வழங்குவதில்லை என்பது சுட்டிக்காட்டப்படுகிறது.

எதுவாயினும் அரசியல் ஸ்திரத்தன்மை என்பது வெளி உதவிகளுக்கு ஒரு முக்கிய முன்நிபந்தனை ஆகும். ஆனால் அவ்வாறு ஒரு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த நாடாளுமன்றத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளாலும் முடியவில்லை. அவர்கள் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கும் போராட்டக்காரர்களாலும் முடியவில்லை, மகா சங்கத்தாலும் முடியவில்லை என்பதைத்தான் கடந்த வாரம் பிரதி சபாநாயகருக்கான வாக்கெடுப்பின் பின்னரான நிலைமைகள் நமக்கு உணர்த்துகின்றன.

இதில் மகா சங்கத்தின் பரிந்துரைகூட ஒரு விதத்தில் அரசியல் சங்கீதக் கதிரை விளையாட்டை மஹிந்தவை நீக்கிவிட்டு விளையாடுவதுதான். ஆனால் மூன்று கிராமங்களை அமைத்துப் போராடும் புதிய தலைமுறையானது அவ்வாறான சங்கீதக் கதிரை விளையாட்டுக்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. கிராமங்கள் புதிது புதிதாக உருவாக்கப்படுவது அதைத்தான் காட்டுகிறது. இக்கட்டுரை பிரசுரிக்கப்படும் நாளில் அவர்களுடைய போராட்டம் முப்பது நாட்களை அடைந்துவிட்டது.ஆனால் அரசியல்வாதிகளின் மீது எதிர்பார்த்த அளவுக்கு அழுத்தங்களை பிரயோகிக்க முடியவில்லை என்பதைத்தான் சில நாட்களுக்கு முன் நடந்த பிரதி சபாநாயகருக்கான வாக்கெடுப்பு காட்டுகிறது. அதாவது தெருவில் இறங்கிப் போராடும் மக்களின் எதிர்ப்பை கண்டு அவர்கள் அஞ்சவில்லை என்று தெரிகிறது. அப்படியெ ன்றால் அடுத்த கட்டம் என்ன? இதைவிட ஆக்ரோஷமாக அறவழியில் போராட வேண்டியிருக்கும். நாடாளுமன்றத்தின் முன் அமைக்கப்பட்டிருந்த கிராமத்தை அரசாங்கம் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் மற்றும் நீர்த் துப்பாக்கிகளின் மூலம் விரட்ட முயற்சித்தது. இவ்வாறான ஒடுக்கும் நடவடிக்கைகள் மேலும் புதிய கிராமங்களைப் பிறப்பிக்கும்.

ஹொருகோகம கிராமத்தில் சிந்தன தர்மதாச என்ற படைப்பாளி தனது எதிர்ப்பை வித்தியாசமாகக் காட்டினார். தனது உள்ளாடையை கழட்டிப் பொலிசாரின் தடுப்பு வேலியில் தொங்கவிட்டார்.அதைத்தொடர்ந்து உள்ளாடைகளில் எதிர்ப்பு வாசகங்களை எழுதி பொலிஸ் தடுப்பில் தொங்கவிடும் ஒரு புதிய போராட்டமுறை அங்கே தொடங்கப்பட்டது. அதைப்போலவே வேறு ஒர் ஆர்ப்பாட்டக்காரர் போலீசாரின் தடுப்பு வேலிகளுக்கு முன்னின்று கலை ஆடுகிறார். உருவேறியவராக போலீசாரை நோக்கி சாபங்களைப் பொழிகிறார். ஊடகவியலாளரின் கமராக்கள் அவரைச் சுற்றி சுற்றி படம் எடுக்கின்றன. அதாவது மந்திர மாயாஜாலங்களை நம்பும் ஒரு குடும்பத்துக்கு எதிராக, ஞானாக்கா போன்ற குறி சொல்வோர் மந்திரித்து கொடுக்கும் தாயத்துகளை பகிரங்கமாக கைகளில் அணிந்திருக்கின்ற ஒரு குடும்பத்துக்கு எதிராக, மகாநாயக்கர்களை காலில் விழுந்து வணங்கி தமது அரசியலை தொடங்கும் ஒர் அரசியல் பாரம்பரியத்துக்கு எதிராக, உருக் கொண்டு ஆடுவதன் மூலமாவது தமது எதிர்ப்பை காட்டலாமா என்று மக்கள் சிந்திக்கும் அளவுக்கு நிலைமை வந்துவிட்டது. ஆனால் புதிது புதிதாக கிராமங்கள் முளைப்பதைக் கண்டு அல்லது, புத்தாக்க திறன்மிக்க மிக்க வினோதமான எதிர்ப்புகளைக் கண்டு, அல்லது மகா நாயக்கர்களின் புறக்கணிப்பை கண்டு, பயப்படாத மக்கள் பிரதிநிதிகளின் முன் ஒரு புதிய தலைமுறை மேலும் ஒரு புதிய அறவழிப் போராட்ட வடிவத்தை கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.இது ஒன்றும் நூதனமானது அல்ல. இது ஒரு பழைய கதைதான்.தமிழ்க் கதைத்தான்.

வவுனியாவை கடந்து தமிழ்ப் பகுதிகளுக்குள் வந்தால் அப்பழைய கதையை வாசிக்கலாம். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக வீதியோரங்களில் குடில்களை அமைத்துப் போராடும் முதிய பெற்றோரைச் சந்திக்கலாம். அவர்களுள் 130க்கும் குறையாதவர்கள் நீதி கிடைக்காது என்ற அவநம்பிக்கையோடு இறந்துவிட்டார்கள்.ஆம். தமிழ் மக்களைப் பொறுத்தவரை இது ஒன்றும் புதியது அல்ல. கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக முதிய தமிழ் அன்னையர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் அரசாங்கம் அவர்களைப் பொருட்படுத்தவில்லை. அம்முதிய அம்மாக்களின் கண்ணீருக்கும் சாபங்களுக்கும் பயப்படாத ஒரு அரசியல் பாரம்பரியம், இப்பொழுது உள்ளாடைகளைக் காட்டினால் மட்டும் பயப்படுமா? அல்லது,அது கலையாடிக் காளி பூசை செய்து கலைக்கக்கூடிய ஒரு பேயா?

புதிய பிரதமராக கரு ஜயசூரியவை நியமிக்க யோசனை!

புதிய பிரதமராக கரு ஜயசூரியவை நியமிக்க சிலர் யோசனைகளை முன்வைத்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி இடைக்கால அரசாங்கத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளபோதும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பொதுவான ஒருவராக கருஜயசூரியவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

இதன்படி கருஜய சூரிய இணங்கினால் அவர் பாராளுமன்றம் வரும் வகையில், தான் எனது தேசியப் பட்டியல் ஆசனத்தை அவருக்காக விட்டுக்கொடுக்க தயார் என்று ஹரீன் பெர்ணான்டோ கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Posted in Uncategorized

”அவசரகால சட்டம் பிரச்சனைகளுக்கு தீர்வாகாது”: ஐநா பிரதிநிதி!

போராட்டத்திற்கு காரணமான விடயங்களை தீர்க்க முயல வேண்டும் எனவும், அதனை விடுத்து அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவது பிரச்சனைகளுக்கு தீர்வாகாது என்றும் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

நாட்டின் நெருக்கடிகளை தீர்ப்பதற்கு அவசரகால சட்டம் நிச்சயமாக உதவாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை தெற்காசியாவின் பழமையான ஜனநாயக நாட்டில் இலங்கை பிரஜைகள் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை எவ்வாறு முழுமையாக அனுபவிக்கிறார்கள் என்பதை ஒரு மாத கால அமைதியான ஆர்ப்பாட்டங்கள் எடுத்துக்காட்டியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உரிமைகள் மற்றும் கருத்து சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் – சாரா ஹல்டன்

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால பிரகடனத்திற்கு எதிராக கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தற்போதைய சவால்களைத் தீர்ப்பதற்கு ஜனநாயக மற்றும் அமைதியான அணுகுமுறை அவசியம் என சாரா ஹல்டன் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் அனைத்து அடிப்படை உரிமைகளுடன் அமைதியான போராட்டத்திற்கான உரிமைகள் மற்றும் கருத்து சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அந்த உரிமைகளைக் கட்டுப்படுத்தும் அவசரச் சட்டங்கள் ஜனநாயக கருத்து சுதந்திரம் மற்றும் தீர்வுகளுக்கு எதிராகச் செயல்படுகின்றன என்றும் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized