மைத்திரி பாராளுமன்றில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படும் என முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், 20ஆவது திருத்தம் நீக்கப்பட்டு 19ஆவது திருத்தம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் தரப்பில் 44 பேர் சுயேட்சையாக செயற்படவுள்ளதாக அறிவிப்பு

ஆளும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று முதல் சுயேட்சையாக செயற்பட தீர்மானித்துள்ளனர்.

இதன்படி, விமல் வீரவங்ச, உதய பிரபாத் கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண, டிரான் அலஸ், அத்துரெலிய ரத்த தேரர், கிவிது குமாரதுங்க, வீரசுமன வீரசிங்க, அசங்க நவரத்ன, மொஹமட் முஸம்மில், நிமல் பியதிஸ்ஸ, காமினி வலேபொட, ஏ.எல்.எம்.அத்தாவுல்லா, கயாசான், ஜயந்த சமரவீர ஆகியோர் சுயேட்சையாக நாடாளுமன்றத்தில் செயற்படவுள்ளனர்.

அத்துடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜீவன் தொண்டமான் மற்றும் மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோரும் சுயேட்சையாக செயற்படவுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்திலிருந்து விலகி, சுயேட்சையாக செயற்பட தீர்மானித்துள்ளதாக கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.

பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, தயாசிறி ஜயசேகர, துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவண்ண, ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய, ஜகத் புஸ்பகுமார, சான் விஜேலால் சில்வா, சாந்த பண்டார, துஷ்மந்த மித்ரபால, சுரேன் ராகவன், அங்கஜன் ராமநாதன், ஷாமர சம்பத் தஸநாயக்க ஆகியோருடன் இணைந்து தானும் சுயேட்சையாக செயற்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய நிமல் லங்சா, அநுர பிரியதர்ஷன யாப்பா, ஜோன் செனவிரத்ன, சுசில் பிரேமஜயந்த, சந்திம வீரகொடி, நலின் பெர்னாண்டோ, சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே, பிரியங்கர ஜயரத்ன, ரோஷான் ரணசிங்க, அருந்திக்க பெர்ணான்டோ, ஜயரத்ன ஹேரத், உதித்த பிரேமரத்ன ஆகியோரும் நாடாளுமன்றத்தில் சுயேட்சையாக செயற்படவுள்ளனர்.

இதன்படி, 44 பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று முதல் சுயேட்சையாக செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

Posted in Uncategorized

பொருளாதாரத்தில் மாற்றம் வரும் என்ற நம்பிக்கை இல்லை: செல்வம் அடைக்கலநாதன்

புதியவர்கள் வந்து இந்த அரசாங்கத்தை நடத்தும் நிலைமை காணப்பட்டாலும் பொருளாதாரத்தில் ஒரு மாற்றம் வரும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான (ரெலோ) செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை மாற்றம் தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

”புதிய அமைச்சரவை என்பது பழைய தலைகள் மாற்றப்பட்டு புதிய தலைகள் வரவேண்டும். ஜனாதிபதியும் பிரதமரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள். அதே கட்சியைச் சார்ந்தவர்களையே நியமிக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கின்றது.

ஆட்சி மாற்றம் என்பது பிரதமர் மாற வேண்டும், ஜனாதிபதி மாற வேண்டும் என்பது தான் மக்களின் கோரிக்கை.

அதாவது பிரதமராவது மாறுகின்ற ஒரு நிலைகாணப்பட வேண்டும். ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலையில் புதிய தலைகள் தான் வரப்போகிறார்களே தவிர, நான் நினைக்கின்றேன் சஜித் பிரேமதாசாவின் கட்சி அதனை மறுத்துவிட்டது.

ஜேவிபியும் மறுத்து விடும் என நினைக்கின்றேன். விமல்வீரவன்ச, கம்மன்பில இந்த அமைச்சரவைக்குள் போகக்கூடிய வாய்ப்புக்கள் கூட இருக்கின்றது.

அந்தவகையில் புதியவர்கள் வந்து இந்த அரசாங்கத்தைக் கொண்டு நடாத்தும் நிலைமை தான் காணப்படுகின்றது. ஆனாலும் பொருளாதாரத்தில் ஒரு மாற்றம் வரும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை.

ஆகவே இந்த விடயத்திலே எனது கருத்து பழைய தலைகள் மாறி புதிய தலைகள் வரப்போகின்றது அவ்வளவே. இந்த ஆட்சி மாற்றத்தில் எமது பிரச்சனைகள் தீர்ந்துவிடுமா என்பது சந்தேகம் தான் ஆனால் இந்த ஆட்சி மாற்றத்தால் புதிதாக ஒன்றுமே நடைபெறப் போவதில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

பிரதி சபாநாயகர் பதவி விலகினார்

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுப் பெற்று வருகின்ற இந்த சூழ்நிலையில், பலர் அமைச்சு பொறுப்புக்கள், இராஜாங்க அமைச்சு பொறுப்புக்கள் மற்றும் உயர் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்து வருகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அரசாங்கத்திலிருந்து இன்று வெளியேறியிருந்தது.

அரசுக்கு எதிராக வலுப்பெறும் ஆர்ப்பாட்டங்கள்

அரசாங்கம் மற்றும் தற்போதைய நெருக்கடி நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(04) காலை முதல் மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சில பகுதிகளில் பிரதான வீதிகளை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்களும் இன்று(04) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று(04) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக்கழக முன்றலிலிருந்து பரமேஸ்வரா சந்திக்கு பேரணியாக சென்ற மாணவர்கள் அங்கிருந்து யாழ். நகருக்கு சென்றனர்.

இதேவேளை, கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் இன்று(04) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கொம்மாந்துறையிலிருந்து எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக நுழைவாயிலுக்கருகில் வீதியை மறித்து போராட்டத்தில ஈடுபட்டனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு தீர்வு கோரி, மாத்தளை நகரிலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாத்தளை மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பெருந்தோட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்து பொகவந்தலாவை நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக பொகவந்தலாவை நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

இதனிடையே, நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாகவும் இன்று(04) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நுவரெலியா – கண்டி பிரதான வீதியிலிருந்து பேரணியாக சென்ற மக்கள் தங்களின் எதிர்ப்பை வௌியிட்டனர்.

அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்று பண்டாரவளை நகரிலும் முன்னெடுக்கப்பட்டது.

பிரதான வீதியை மறித்து இன்று(04) காலை முதல் பண்டாரவளை நகரில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பசறை நகரிலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கண்டி – திகன நகரிலும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

மஹா நாயக்க தேரர்கள் விடுத்துள்ள கோரிக்கை!

நாட்டின் பிரதான பௌத்த பீடங்களான மல்வத்த, அஸ்கிரிய, ராமாஞ்ய, அமரபுர மஹா நிக்காயவின் சங்கைக்குரிய மஹா நாயக்க தேரர்கள் கூட்டாக ஒன்றிணைந்து கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

அமைச்சரவையை முழுமையாக கலைத்து இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கூட்டாக ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றின் ஊடாக இந்த கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

பிரதமரின் கார்ல்டன் இல்லத்தை முற்றுகையிட்ட மக்கள் : கண்ணீர் புகை, நீர் தாரை பிரயோகம்

தங்காலையிலுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கார்ல்டன் இல்லத்தை மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

இதன் போது ஆர்பாபட்டத்தில் ஈடுபட்ட மக்களை கலைக்க கண்ணீர் புகை மற்றும் நீர்த் தாரை பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டனர்.

தங்காலை – கதிர்காமம் வீதியின் கார்ல்டன் இல்லத்திற்கு அருகில் வீதியை மறித்து பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் வலுப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

அரசாங்கத்திலிருந்து ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 14 உறுப்பினர்களும் விலக தீர்மானம் – துமிந்த திசாநாயக்க

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழு இன்று(04) பிற்பகல் கூடியபோது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இராஜினாமா கடிதங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.

Posted in Uncategorized

”அமைச்சர்கள் பதவி விலகியது போலியான நாடகம்” – அரசியலமைப்பை தெளிவூட்டினார் சாலிய பீரிஸ்

அமைச்சர்கள் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி வசமே கையளிக்க வேண்டும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவிக்கின்றார்.

எனினும், அமைச்சர்கள் தமது இராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் கையளித்தமையானது, முறையற்ற செயற்பாடு என அவர் குறிப்பிடுகின்றார்.

அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதியிடமே பதவி விலகல் கடிதத்தை கையளிக்க வேண்டுமே தவிர, பிரதமரிடம் கிடையாது எனவும் அவர் கூறுகின்றார்.

அத்துடன், அரசாங்கத்திற்குள் தற்போது காணப்படுகின்ற நிலைமையை தெளிவூட்டுவது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையின் பொறுப்பு எனவும் சாலிய பீரஸ் தெரிவிக்கின்றார்.

இவ்வாறான அரசியல் நிச்சயமற்ற தன்மை நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாகப் பாதித்து வருவதாகவும், தற்போதைய கடுமையான பொருளாதார நெருக்கடியின் போது, ​​இவ்வாறான நிச்சயமற்ற நிலையை சில நாட்களுக்கு ஒத்திவைப்பது பொருத்தமான நடவடிக்கையல்ல எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்கள் அனைவரும் நேற்றைய தினம் தமது இராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் கையளித்திருந்ததாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

த.தே.கூ.வின் ஒருங்கிணைப்புக்குழுவைக் கூட்டுமாறு ரெலோ கோரிக்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையிலான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தினைக் கூட்டுமாறு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) கோரியுள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கம்த்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இதற்கான கோரிக்கையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர். சம்பந்தனுக்கு கடிதம் மூலம் இன்றைய தினம் விடுத்துள்ளார்.

அக்கடிதத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையிலான ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நீண்ட காலமாக நடைபெறவில்லை என்பதாலும், தற்போதைய அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டும் முடிந்தளவு விரைவாக நாளை 05.04.2022 இக்கூட்டத்தைக் கூட்டுமாறு கோரப்பட்டுள்ளது.

அத்துடன், அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக ஒழுங்கு செய்யுமாறும் கேட்கப்பட்டுள்ளது.