ஊரடங்கை மீறிய 644 பேர் கைது

நாட்டில் நேற்று ( சனிக்கிழமை) மாலை 06 மணி முதல் ( திங்கட்கிழமை ) காலை 06 மணிவரை ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 644 பேர் மேல் மாகாணத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த நிலையில் நேற்று இரவு 10 மணிமுதல் இன்று (ஞாயிற்க்கிழமை ) காலை 06 மணிவரையான காலப்பகுதியில் இந்த கைது சம்பங்கள் இடம்பெற்றுள்ளது.

வீதி, ரயில் பாதை, பொதுப் பூங்கா, பொது மைதானம் உள்ளிட்டவற்றில் நடமாட தடை – அதிவிசேட வர்த்தமானி வெளியானது!

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் பொது இடங்களில் நடமாடுவதற்கு பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த காலப்பகுதியில் பொது வீதி, ரயில் பாதை, பொதுப் பூங்கா, பொது மைதானம் உள்ளிட்டவற்றில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பகுதிகளில் நடமாடுவதாயின், பாதுகாப்பு அமைச்சின் அல்லது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர் அல்லது அவரினால் அதிகாரமளிக்கப்பட்ட ஒருவரின் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் இன்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

அவசரகால பிரகடனத்தை இரத்து செய்யுமாறு சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை

அவசரகால பிரகடனத்தை இரத்து செய்யுமாறு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அடிப்படை உரிமைகளான அமைதியாக ஒன்றுகூடல் மற்றும் கருத்து தெரிவிக்கும் உரிமையை பாதுகாக்குமாறும் சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அவசரகால பிரகடனத்தை அமுல்படுத்துவது நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மற்றும் சங்கத்தின் செயலாளர் இசுறு பாலப்பெட்டபெந்தி ஆகியோர் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

அரசாங்கத்தில் இருந்து இ.தொ.கா வெளியேறும் – இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்

அரசாங்கத்திலிருந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வெளியேறும் என்று இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொட்டகலை சி.எல்.எப். வளாகத்தில்   நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது, ஜீவன் தொண்டமான் மேலும் கூறுகையில்,

“ இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அரசின் பங்காளிக்கட்சியாக இருந்தாலும், மக்களை பாதுகாப்பதே எமது முதன்மை நோக்கமாகும். அந்தவகையில் ஜனாதிபதியின் வீட்டுக்கு செல்லும் மிரிஹான வழியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் மக்கள்மீது நடத்திய தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.  இது தவறான செயலாகும். என்னதான் வதந்திகள் பரவினாலும், முறையான விசாரணையின்றி மக்களை கைது செய்து, துன்புறுத்துவது நியாயம் அல்ல.

சஜித் பிரேமதாச தலைமையில் தலவாக்கலையில் நாளைய தினம் போராட்டமொன்று இடம்பெறவுள்ளது. இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை . ஏனெனில் சமையல் எரிவாயு, எரிபொருள் இன்றி மக்கள் இன்று துன்பப்படுகின்றனர். இதற்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்குகின்றனர். அதன் பின்னணியில் எந்த கட்சி இருந்தாலும் நாம் ஆதரவு.

மிரிஹான போராட்டத்தின்போது ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தையும் கண்டிக்கின்றோம்.  அது நியாயமற்ற செயலாகும். மக்களுக்காக முன்னிலையான சட்டத்தரணிகளுக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அரசுக்கு எமது எதிர்ப்பை காட்டிவிட்டோம். சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணித்தோம். ஆனால் அமைச்சு பதவி கிடைக்கவில்லை என்பதால்தான் இ.தொ.கா. இப்படி செயற்பட்டது என சிலர் வதந்தி பரப்பினர்.

இராணுவத்துக்காக 10 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்கலைக்கழகம் அமையவுள்ள இடமும் உள்ளடங்குகின்றது. இதனை நாம் எதிர்த்தோம்.

மக்களுக்கு வேலை நடக்கனும், நாட்டில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.  மக்களுக்கு சார்பான முடிவையே நாம் எடுப்போம்.  மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல்போனால் அரசிலிருந்து காங்கிரஸ் வெளியேறும்.  இன்னும் ஓரிரு தினங்களில் முடிவு அறிவிக்கப்படும்.” – என்றார்.

மறுக்கும் இந்தியா

இலங்கைக்கு இந்தியா தனது படைகளை அனுப்புவதாக சில ஊடகங்களில் வெளியாகியிருக்கும் தகவல்லானது முற்றிலும் ஆதாரமற்ற அறிக்கை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.அறிக்கை ஒன்றின் மூலம் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை கருத்திற் கொண்டு இந்தியா அதன் நட்பு நாடான இலங்கையைப் பாதுகாக்கும் நோக்கில் டெல்லி இந்திய விமானப்படைத்தளத்திலிருந்து 180 இந்திய இராணுவ வீரர்களுடன் விமானங்களை அனுப்பி வைத்துள்ளது, என இணைய ஊடகங்களில் செய்தி வெளியாயிருந்தது.இந்நிலையில் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.மேலும் இவ்வாறான பொறுப்புணர்வற்ற அறிக்கைகளை உயர் ஸ்தானிகராலயம் கண்டிக்கும் அதேநேரம் சம்பந்தப்பட்டதரப்பினர் வதந்திகளை பரப்புவதை தவிர்க்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளது

Posted in Uncategorized

சமூக ஊடகங்களை முடக்கிய கோட்டா அரசாங்கம்

இலங்கையில் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது யூரியூப், வட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் செயற்படவில்லை.

அரசாங்கத்திற்கெதிரான மக்கள் போராட்டமானது மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் இன்றும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பிலான புகைப்படங்கள், காணொளிகளை பொது மக்கள் தொடர்ச்சியாக சமூக ஊடகங்களில் வெளியிட்டு அரசாங்கத்திற்கெதிரான எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

மேலும், இன்றைய தினம் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்க சமூக ஊடகங்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இலங்கை சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

மக்களின் தேவைகளைப் புறக்கணித்து பொறுப்பில்லாது உணர்வற்று சுயநலமாக செயற்படுகின்றது அரசாங்கம் – பேராயர்

நாட்டின் அரசியல் தலைவரை மாற்றி அமைத்தால் மாத்திரம் போதாது. எமது நாட்டிலுள்ள சட்ட ஏற்பாடுகள் மற்றும் வியூகங்கள், கொள்கைகள் என அனைத்தையும் மாற்றி அமைக்க வேண்டும். இதற்காக நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து புதிய பயணமொன்றை ஆரம்பிக்க வேண்டும். இல்லையென்றால் நாடு இன்று எதிர்கொண்டுள்ள தேசிய பிரச்சினைகள் மற்றும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியாது என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக பாரியளவில் சிக்குண்டு அல்லறும் மக்கள் மீது மேலும் அழுத்தங்களை திணிக்காதிருக்கும்படி அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதுடன், ஜனநாயக ரீதியாகவும் , அகிம்சை வழியிலும் தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டும் மக்களின் முயற்சிகளை ஒடுக்காமல் இருக்குமாறும் மக்களுக்கான தேவைகளை தங்களது பொறுப்புணர்ந்து அரசாங்கம் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

கொழும்பு பேராயர் இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போதே ஆண்டகை மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

“இந்நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் பலரும் துன்ப துயரங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இவ்வாறான நிலையில் எமது நிலைப்பாட்டை தெரிவிப்பது எனது தார்மீகக் கடமையாகும்.

நீண்ட காலமாக மக்களின் அடிப்படைத் தேவைகளைப் புறக்கணித்து வருகின்ற அரசாங்கமானது, பொறுப்பற்றதும் உணர்வற்றதுமான சுயநலமான விதத்தில் செயற்பட்டு வருகிறது.

மக்கள் பல்வேறு விதமான சோதனைகளையும் துன்பங்களையும் எதிர்கொண்டிருக்கின்ற இவ்வேளையில், கத்தோலிக்க திருச்சபையானது துன்பப்படுகின்ற மக்களுக்கும் ஒடுக்கப்பட்டுள்ள மக்களுக்கும் என்றென்றும் ஆதரவாக இருக்கும்.

அத்தியவசியப் பொருட்களில் விலையேற்றம் மற்றும் சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்ய முடியாது நீண்ட வரிசைகளில் மக்கள் தவித்து வருகின்றமை கவலையளிக்கிறது. இந்த துரதிஷ்ட வசமான சூழலிலும், லஞ்சம், ஊழல் என்பன தொடர்ந்து கொண்டே உள்ளன.

பொதுச் சொத்துக்கள் , தேசிய வளங்கள் கண்டுகொள்ளப்படாமல் விற்கப்படுகின்றன. மக்களிடம் கருத்துக்களைகூட கேட்பதில்லை.

பொது மக்கள் பலரும் மனச்சோர்வடைந்து வாழ்க்கைச் சிக்கல்களால் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதால், ஆட்சியாளர்கள் சூழ்நிலையை உணர்ந்து விரைவில் தீர்வொன்றை கொண்டு வர வேண்டியது அவசியமாகும்.

சுதந்திர அரச நிறுவனமான மத்திய வங்கி, அரசியல் தலைவர்களது கைக்கூலிகளாக மாறியுள்ளது. வெளிப்படைத்தன்மை இல்லாத நியாமற்ற மற்றும் தன்னிச்சையான ஆட்சியையே இன்று நாம் பார்க்கின்றோம்.

அனைத்து அரச நிறுவனங்களையும் சுதந்திரமாக இயங்கச் செய்ய வேண்டும். இதில், அரசியல்வாதிகளின் கூட்டாளிகளை அகற்றி, துறைசார் நிபுணர்களை நியமித்து அரச நிறுவனங்களை சுதந்திரமாக இயங்க செய்ய வேண்டும்.

மேலும், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல், தன்னிச்சையான துன்புறுத்தல்கள் மற்றும் பொது மக்கள் மீதான தாக்குதல்களை எதிர்க்கின்றோம். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அவர்களது கடமைகளை மேற்கொள்வதற்கு இடமளிக்க வேண்டியது அவசியமாகும் ” என்றார்.

Posted in Uncategorized

எதிர்ப்பு தெரிவிக்க இலங்கையர்களுக்கு உரிமை உண்டு: அமெரிக்க தூதுவர்

இலங்கையர்களுக்கு அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது, இது ஜனநாயக வெளிப்பாட்டிற்கு அவசியமானது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர்,

“நான் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறேன், மேலும் வரும் நாட்கள் அனைத்து தரப்பிலிருந்தும் கட்டுப்பாட்டைக் கொண்டுவரும் என்று நம்புகிறேன், அத்துடன் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைப்பது மிகவும் தேவையானது” என்று அவர் கூறியுள்ளார்.

ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் நாட்டில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள நிலையிலேயே தனது டுவிட்டர் பக்கத்தில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் இதனைத் தெரிவித்துள்ளார்.

US ambasy

Posted in Uncategorized

இலங்கையில் அவசரநிலை பிரகடனம் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவு

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி, மக்களின் தொடர் போராட்டங்களுக்கு மத்தியில், இலங்கையில் நேற்று நள்ளிரவில் அவசரநிலையை பிரகடனப்படுத்தினார் அந்நாட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. நேற்று முன்தினம் நள்ளிரவில் ஜனாதிபதி வீட்டின் முன் நடைபெற்ற மக்கள் போராட்டம் வன்முறையாக மாறிய ஒருநாளில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அவசரகால நிலைமை நிலவுவதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியைப் பாதுகாத்தல், பொதுமக்கள் வாழ்வுக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகள் என்பவற்றைப் பேணுவதற்காக இவ்வாறு செய்தல் உசிதமானது என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இலங்கையின் கடன் அதிகமாகி, அந்நியச் செலாவணி கையிருப்பு தீர்ந்துபோனதால் இலங்கை இத்தகைய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. நெருக்கடியைச் சமாளிக்க இந்தியா போன்ற நாடுகளில் கூடுதலாகக் கடன் வாங்குகிறது. சர்வதேச செலாவணி நிதியத்திடம் கடன் பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் இறக்குமதியை நம்பியிருப்பதால், அவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு கோழித் தீவனம்கூட அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. பால்மாவு, சர்க்கரை, முட்டை, பெட்ரோல், டீசல், எரிவாயு என முக்கியமான பொருள்கள் அனைத்தும் விலை உயர்ந்திருக்கின்றன.

நாட்டின் முக்கியமான மின் உற்பத்தி நிலையங்கள் டீசலில் இயங்கக் கூடியவை என்பதால், அவையும் உற்பத்தியைக் குறைத்திருக்கின்றன அல்லது மூடப்பட்டிருக்கின்றன. இதனால் நீண்ட நேர மின்வெட்டும் ஏற்படுகிறது. அதிகபட்சமாக, வியாழக்கிழமை மாலையில் டீசல் கிடைக்காததால், பெரும்பாலான இடங்களில் அதிகபட்சமாக 13 மணி நேர மின்வெட்டுக்குள்ளாயினர். இந்த நெருக்கடி காரணமாக பல நிறுவனங்கள் அவற்றின் ஊழியர்களை வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டன.

பொருளாதார நெருக்கடியைக் கண்டித்து மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், பொருளாதார நெருக்கடியைத் தடுக்கத் தவறியதாக, ஜனாதிபதி பதவி விலகக் கோரி நேற்று முன்தினம் இரவு இலங்கை நுகேகொடை − மிரிஹான பகுதியிலுள்ள ஜனாதிபதியின் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றதையடுத்து, அவர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி பிரயோகமும் செய்தனர்.

இந்த போராட்டம் தொடர்பாக ஒரு பெண் உட்பட இதுவரை 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறையில் காவல்துறை தரப்பில் ஐந்து பேர் காயமடைந்ததாகவும் காவல்துறை ஜீப் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் எரிக்கப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தையடுத்து, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு மற்றும் நுகேகொடை ஆகிய பகுதிகளுக்கு காவல்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மறு உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை இந்த கட்டுப்பாடு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தைப் பிறப்பித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. இதுகுறித்து ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனாரத் நேற்று நள்ளிரவு வெளியிட்ட அறிவிப்பில், “பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரத்திற்கான பொருட்கள் மற்றும் சேவைகளை நிர்வகிக்கவும் இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று (ஏப்ரல் 1) நள்ளிரவில் வெளியானது.

நாட்டிலுள்ள சாதாரண சட்டம், இந்த அறிவித்தலின் ஊடாக இல்லாது செய்யப்படும் என சட்டத்தரணி இளையதம்பி தம்பையா தெரிவிக்கின்றார்.

இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டதன் ஊடாக, கூட்டம் கூடுவதற்கான சுதந்திரம், ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான சுதந்திரம் இல்லாது போகும் என அவர் குறிப்பிடுகின்றார்.

அவசரகால சட்டத்தின் ஊடாக, 3 மாத காலத்திற்கு சந்தேகநபராக அடையாளம் காணப்படும் ஒருவர் தடுத்து வைக்கப்படலாம் என அவர் கூறுகின்றார்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என கருதும் பட்சத்தில், எந்தவொரு நபரையும் கைது செய்யும் அதிகாரம் இந்த சட்டத்தின் ஊடாக பாதுகாப்பு பிரிவிற்கு கிடைக்கும்.

இந்த சட்டமானது, மிகவும் பாரதூரமான சட்டம் என வழக்குரைஞர் இளையதம்பி தம்பையா தெரிவிக்கின்றார்.

இதேவேளை, பொதுமக்களுக்கான அத்தியாவசிய சேவைகள், பொதுமக்களுக்கான சேவைகளை உரிய முறையில் வழங்குவதே இந்த அறிவிப்பின் நோக்கம் என சிரேஷ்ட சட்டத்தரணியும், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான பிரதீபா மஹனாமஹேவா தெரிவிக்கின்றார்.

அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் தற்போது குறைபாடுகள் காணப்படுவதாக கூறிய அவர், அதை பெற்றுக்கொள்ள முடியாதமையினால் மக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட வாய்ப்புள்ளதாக குறிப்பிடுகின்றார்.

இதனூடாக பொது சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.

ஒரு விதத்தில் இந்த அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்டமையானது இந்த சந்தர்ப்பத்தில் சிறந்தது என அவர் குறிப்பிடுகின்றார்.

பொதுமக்களுக்கான சேவைகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில், பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை உரிய முறையில் இந்த சட்டத்தின் ஊடாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறுகின்றார்.

எனினும், இந்த சட்டத்தின் ஊடாக பொதுமக்களுக்கு ஆர்ப்பாட்டம் செய்யும் சுதந்திரம் பறிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் பட்சத்தில், உயர்நீதிமன்றத்தை நாட முடியும் என சிரேஷ்ட சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவா தெரிவிக்கின்றார்.

பிபிசி தமிழ்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் நானே: சுமந்திரனின் கருத்தை நிராகரித்தார் மாவை!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் நான். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். கூட்டமைப்பிலிருந்து எந்த கட்சியையும் வெளியேற்றுவது பற்றி நாம் சிந்திக்கவேயில்லை. மாறாக, பங்காளிக்கட்சிகள் மேலும் கூட்டாக எவ்வாறு முடிவெடுத்து செயற்படுவது என்பது தொடர்பாகவே 3 கட்சிகிளின் தலைவர்களும் பேசி வருகிறோம் என தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேறினால் மகிழ்ச்சி என, அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

கூட்டமைப்பை சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்ற நீண்ட விமர்சனங்கள் சுமந்திரன் மேல் உள்ள நிலையில், இந்த கருத்தும் வெளியாகியிருந்தது.

எனினும், அவரது கருத்தை கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா நிராகரித்திருக்கிறார்.

மாவை சேனாதிராசாவை தமிழபக்கம் தொடர்பு கொண்டு வினவியபோது,

கூட்டமைப்பிலிருந்து எந்த கட்சியும் வெளியேற வேண்டுமென நாம் எதிர்பார்க்கவில்லை. எந்த கட்சியையும் வெளியேற்ற நடவடிக்கையெடுக்கவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள மூன்று கட்சிகளும் ஒன்றுபட்டு தீர்மானங்கள் எடுக்க வேண்டுமென்றே நாம் கலந்துரையாடி வருகிறோம். இந்த விவகாரங்களை பகிரங்கமாக பேசி வீணாண சிக்கல்களை ஏற்படுத்த முனைபவர்கள் அதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் நான்தான். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். எந்த ஒரு கட்சியையும் வெளியேற்றி, கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதை பற்றி நாம் சிந்திக்கவில்லை. பேசவும் இல்லை என்றார்.