சர்வதேச உதவியை நாடினால் விளைவுகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் – கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை

சர்வதேச உதவியை நாடினால், இலங்கை அனுபவிக்க வேண்டிய விளைவுகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை எச்சரிக்கை விடுத்துள்ளார்.வத்திக்கானுடன் இணைந்து ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நீதியை பெற்றுக்கொள்ள இலங்கை கத்தோலிக்க திருச்சபை நடவடிக்கை எடுத்துவருகின்றது.குறித்த நடவடிக்கை மூடிய கதவுகளுக்குப் பின்னால் இடம்பெறுவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் கடமைகள் அரசியல்வாதிகளை திருப்திப்படுத்துவது அல்ல என்றும் ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு அவர் கண்டனம் வெளியிட்டார்.

அரசியல் குறிக்கோள்களில் வித்தியாசமில்லை: அவற்றை அடையும் மார்க்கம் பற்றியே தமிழ் கட்சிகளுக்குள் முரண்பாடு – சி.வி.

அரசியல் குறிக்கோள்களில் வித்தியாசமில்லை என்றும் அவற்றை அடையும் மார்க்கம் பற்றியே தமிழ் கட்சிகளுக்குள் முரண்பாடு உள்ளதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சென்ற வாரம் இந்தியப் பத்திரிகையொன்றின் இலத்திரனியல் ஊடகத்திற்கு ஒரு பேட்டி அளித்தேன். அங்கு நான் கூறிய ஒரு விடயம் பத்திரிகைகளில் வெளிவரவில்லை. அதனை இப்பொழுது
உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

இதுகாறும் பிரிந்து நின்ற ஆறு கட்சிகளும் எவ்வாறு ஒருமித்து அந்தக் கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுத முடிந்தது என்று செவ்விகண்டவர் என்னிடம் கேட்டார்.

அதற்கு நான், எமது அரசியல் குறிக்கோள்களைப் பொறுத்தவரையில் எமக்குள் அதிகம் வித்தியாசம் இல்லை என்றேன். அவற்றை அடையும் மார்க்கம் பற்றியே எமக்குள் முரண்பாடுகள் உண்டு என்றேன். அதை விளக்குமாறு கோரப்பட்ட போது, நான், எமது தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்துமே ‘ஒற்றையாட்சி வேண்டாம் சமஷ்டி ஆட்சி முறையே வேண்டும்’ என்று தான் கோரி வருகின்றோம் என்றேன்.

எமது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஒருபடி மேலே போய் கூட்டு சமஷ்டியை எமது குறிக்கோளாகக் குறிப்பிட்டுள்ளோம் என்றேன். ஆகவே எமது குறிக்கோள் ஒன்றே அதனை அடையும் விதத்தில் எமக்குள் வேற்றுமைகள், வித்தியாசங்கள், முரண்பாடுகள் உண்டு என்றேன். நான் அங்கு கூறியதை இங்குள்ள அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகின்றேன். ஏதோ காரணத்திற்காக செவ்வி கண்டவர் இக்கேள்வியையும் பதிலையும் தணிக்கை செய்துவிட்டார்.

ஆகவே முக்கியமான ஒரே குறிக்கோளை வைத்திருக்கும் எமது ஆறு கட்சிகளும் இன்று இந்த கருத்தரங்கத்தை ஒருமித்து நடத்துவதில் வியப்பொன்றுமில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

புதிய அரசியலமைப்பில் மாகாண சபை முறைமைகள் இருக்காது – சுரேஸ்

புதிய அரசியலமைப்பில் மாகாண சபை முறைமைகள் இருக்காது எனவே தாம் எதிர்பார்ப்பதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற அனைத்து தமிழ் கட்சிக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எம்மிடம் இருக்கின்ற சிலவற்றை காப்பாற்ற நினைக்கும்போது அரசாங்கம் தமிழ் மக்களிடம் உள்ள எல்லாவற்றையும் பறிக்க முயற்சி செய்கின்றது என குற்றம் சாட்டினார்.

இதன் காரணமாகவே 13 ஆவது திருத்தம் வேண்டும் என இந்தியாவிடம் தமிழ் கட்சிகள் ஒன்றாக இணைந்து கோரிக்கை விடுத்தன என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

ஆகவே, இருப்பை தக்க வைப்பதற்கு 13வது திருத்தம் அவசியமே அன்றி அது ஒருபோதும் தீர்வாகாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

இரண்டு அரசியல் கட்சி சின்னங்களை நீக்கியது தேர்தல்கள் ஆணைக்குழு !

அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்படாத சின்னங்களின் பட்டியலில் இருந்து இரண்டு சின்னங்கள் நீக்கப்பட்டுள்ளன.

மேற்படி பட்டியலில் இருந்து கிரீடம் மற்றும் விவசாயி ஆகிய சின்னங்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது.

இரண்டு சின்னங்களும் தேசிய சின்னங்களுக்கு ஒத்ததாக இருப்பதால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதனை அரசியல் கட்சிக்கு சின்னமாக ஒதுக்க கூடாது என்றும், எதிர்காலத்தில் எந்த அரசியல் கட்சியும் இதனை பயன்படுத்த அனுமதிக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மாபெரும் போராட்டத்திற்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் அழைப்பு!

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் எதிர்வரும் 20ஆம் திகதி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

கிளிநொச்சியில் இன்று (புதன்கிழமை) காலை 11.30 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “வடக்கு – கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டத்தினை ஆரம்பித்து எதிர்வரும் 20ஆம் திகதி ஐந்து ஆண்டுகள் ஆகின்றது. இலங்கை அரசிடம் தீர்வு கோரி கிடைக்காத நிலையில் சர்வதேசத்திடம் நீதி கேட்டு நாங்கள் போராடி வருகின்றோம்.

இந்த நிலையில் குறித்த நாளன்று மாபெரும் பேரணி ஒன்றினை மேற்கொள்வதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அன்றைய தினம் கடந்த காலங்களில் நாங்கள் போராட்டங்களை மேற்கொள்கின்றபோது இருந்த ஒத்துழைப்புக்களை போன்று கிராம மட்ட அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், தமிழ் தேசியத்தை நேசிக்கனிறவர்கள், அரசியல்வாதிகள், அரசியலிற்கு அப்பால் நின்று செயற்படுகின்றவர்கள் என அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த ஊடகங்கள் வாயிலாக முன்வைக்கின்றோம்.

வடக்கு கிழக்கில் இருக்கின்ற அனைத்து தரப்பினரும் இந்த அழைப்பினை ஏற்று குறித்த தினத்தில் இடம்பெறும் மாபெரும் பேரணியில் கலந்துகொண்டு ஆதரவினை வழங்க வேண்டும்” என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

ஐ.நா.மனித உரிமை பேரவை ஆணையாளர் சமர்ப்பித்துள்ள இலங்கை குறித்த அறிக்கையை பாராளுமன்றில் சமர்ப்பிக்கவும் – எதிர்க்கட்சி வலியுறுத்தல்

இலங்கையின் மனித உரிமைகள் குறித்து ஐக்கிய நாடுகளில் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்சல் பச்லெட் சமர்ப்பித்துள்ள அறிக்கையை அரசாங்கம் பாராளுமன்றிற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

ஆணையாளரின் அறிக்கையில் இலங்கையின் ஊடகச்சுதந்திரத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளமை அவதானத்திற்குரியது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொருளாதார ரீதியில் பொது மக்கள் எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி நிலைமை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தாமல் தேர்தலை இலக்காகக் கொண்டு செயற்படுவது முற்றிலும் வெறுக்கத்தக்கது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அண்மையில் அநுராதபுரத்தில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்களுக்கு 2500 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டதாக சமூக மட்டத்தில் பேசப்படுகிறது.

அக்கூட்டத்தின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்தரப்பினர் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என குறிப்பிட்டார், பிரதமரின் சவாலை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம்.

எத்தேர்தலில் போட்டியிடவும் ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளது.தேர்தலை நடத்த அரசாங்கம் தான் தயாராகவில்லை.

எரிபொருள் விலையேற்றம் பிரதான பிரச்சினையாக காணப்படுகிறது.

டொலர் நெருக்கடி,உலக சந்தையில் எரிபொருள் விலையேற்றம் என்ற இரு காரணிகளை குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் கண்மூடித்தனமான வகையில் எரிபொருள் விலையை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்சல் பச்லெட் சமர்ப்பித்துள்ள அறிக்கையை அரசாங்கம் பாராளுமன்றிற்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.அறிக்கையின் உள்ளடக்கம் பாராளுமன்றில் இரு நாட்களாவது விவாதிக்கப்பட வேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் அறிக்கையில் இலங்கையில் ஊடகச்சுதந்திரத்தின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

Posted in Uncategorized

தனிநாட்டுக்காகப் புலிகள் போராடவில்லை குறித்த கருத்து: மன்னிப்புக் கோரினார் கஜேந்திரன்!

தமிழீழத் தனிநாட்டுக்காகப் புலிகள் போராடவில்லை. தமிழ்த் தேசம் அங்கீகரிக்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் போராடியதாகவும். புலிகள் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் அதை வலியுறுத்தவில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரனின் கருத்துத் தெரிவித்தார்.

தற்போது அக்கருத்து தொடர்பில் மன்னிப்புக் கோரியுள்ளார்.

டன் தொலைக்காட்சி நடத்திய எது சரி எது பிழை என்ற விவாத நிகழ்ச்சியில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிறேமச்சந்திரனும், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனும் கலந்துகொண்டுனர். இதில் பேசுபொருளாக 13வது திருத்தச்சட்டம் இருந்தது. இதில் புலிகள் தொடர்பில் சுரேஷ் பிறேமச்சந்திரன் தனது கருத்தை முன்வைக்கும் போது குறுக்கீடு செய்து தமிழீழத் தனிநாட்டுக்காகப் புலிகள் போராடவில்லை. தமிழ்த் தேசம் அங்கீகரிக்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் போராடியதாகவும், புலிகள் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் அதை வலியுறுத்தவில்லை என்று கருத்தைப் பதிவிட்டார்.

இக்கருத்து தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மத்தியில் மனவுளைச்சாலையும் கவலையையும் ஏற்படுத்தியிருந்த நிலையில் ஊடகங்களும் இதை வெளிக்கொண்டுவந்த நிலையில் அவர் தான் கூறிய கருத்துக்கு மன்னிப்புக் கோரியதுடன் விளக்கத்தையும் அளித்து வருகிறார்.

இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முடிவு

இலங்கை அரசை கண்டித்தும், கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் வரும் 21ஆம் திகதி முதல் தங்கச்சி மடத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.இலங்கை கடற்படையினரின் தொடர் பிரச்சினை காரணமாக ராமேஸ்வரம், தங்கச்சிமடம், மண்டபம், பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடி தொழில் தேடி அண்டை மாநிலங்களுக்குச் சென்றதால் மீன்பிடி தொழிலாளர்கள் இன்றி விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சினை குறித்து நேற்று (திங்கட்கிழமை) தங்கச்சிமடம் சூசையப்பர் கோயில் வளாகத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள், மீன்பிடி தொழிலாளர்கள் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.இதன்போதே, எதிர்வரும் 21ஆம் திகதி தங்கச்சிமடத்தில் தொடர் உண்ணாவிரதப்போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதேவேளை நாளை முதல் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடவும் தீர்மானம் நிறைவேற்றினர்.மீனவர்களின் இந்த காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்புப் போராட்டம் காரணமாக ராமேஸ்வரத்தில் உள்ள 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரை நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

மீனவர்களின் போராட்டங்கள் காரணமாக ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் நேரடியாகவும் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மீன் பிடி சார்பு தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் தங்கச்சி மடத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

Posted in Uncategorized

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதானவர் 12 வருடங்களின் பின் விடுதலை!

12 வருடங்களுக்கு முன்னர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் – கரவெட்டியை சேர்ந்த ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் சந்திம லியனகேவினால் இவர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு கொழும்பில் நிதி சேகரித்து வழங்கிய குற்றச்சாட்டில் 2010ஆம் ஆண்டில் கந்தப்பு ராஜசேகர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமையால், அவரை விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசாங்கம் ஊடக சுதந்திரத்தின் மீது கை வைக்கக்கூடாது – ரஞ்சித் மத்தும பண்டார

அரசாங்கம் ஊடக சுதந்திரத்தின் மீது கை வைக்கக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள இராசமாணிக்கம் மண்டபத்தில் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான ஒன்றுகூடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நாட்டுக்கு ஒரு நேர்மையான அரசியல் தலைவரைத் தெரிவு செய்யவேண்டும். அரசாங்கத்தின் சொத்துக்களைச் சூறையாடுகின்றவர்களை நாங்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

நாட்டின் ஆட்சியை அமைக்கின்ற செல்வாக்கும் தகுதியும் சஜித் பிரேமதாஸவுக்குத்தான் உள்ளது. அவரால்தான் உறுதியான ஆட்சியை நிறுவ முடியும்.

இந்நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் இணைத்துக்கொண்டு புதிய திட்டங்களினூடாக பயணிப்பதற்கு எமது கட்சியின் உயர்பீடம் திட்டம் தீட்டியுள்ளது.

இதில் அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்கின்ற கொள்கை ரீதியான வேலைத்திட்டங்களை நாம் இணைத்துள்ளோம்.

நாட்டில் தற்போது ஊடகத்துறைக்கு ஒரு அச்சமான நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசு செய்யும் பிளைகளைச் சுட்டிக்காட்டுகின்றபோது ஊடகங்களைப் பயம் காட்டுகின்றார்கள். நேற்றையத்தினம் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளனார். எந்த அரசாங்கமாக இருந்தாலும் அவர்கள் விடும் தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டியது ஊடக தர்மமாகும். அதனைக் காப்பாற்ற வேண்டியது யார். தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என ஆட்சிக்கு வந்த ஜனாதிபதியால் உறுதியளிக்கப்பட்டது. அது இன்று நடைபெறவில்லை.

ஊடகவியலாளர் ஒருவர் சுதந்திரமாக செயற்பட முடியாதுள்ளது. இதனைப் பாதுகாகக்க வேண்டியுள்ளது. இவ்வாறு நடைபெறுகின்ற அனைத்து செயற்பாடுகளுக்கும் அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்.

கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட குண்டு வெடிப்புச் சம்பவங்களைக் காரணம்காட்டி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், அது தொடர்பாக நீதியான விசாரணைகளை முன்னெடுக்கத் தயங்குகின்றது.

எனவே, ஊடக சுதந்திரம் உள்ளிட்ட அனைத்தையும் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் உள்ளது. அரசாங்கம் ஊடக சுதந்திரத்தின் மீது கைவைக்கக்கூடாது” என அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.