துப்பாக்கி முனையில் கைதிகள் அச்சுறுத்தல்: விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு

அனுராதபுர சிறைச்சாலை சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க பொலிஸ்மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, இரண்டு கைதிகளை மண்டியிடுமாறு துப்பாக்கி முனையில் அச்சுறுத்தினார்.

இந்த சம்பவம் தொடர்பாக 08 கைதிகள் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்குவந்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முன்னதாக, சட்டமா அதிபரின் ஆலோசனையுடன் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.

ஆகவே கடந்த உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை குறித்த அறிக்கையை எதிர்வரும் ஆவணி 9 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டமா அதிபரும் அரச ஊழியரே, அரச கைக்கூலி அல்ல – பொலிஸார் மற்றும் சட்டமா அதிபரை கடுமையாக சாடிய பேராயர்

அரசாங்கத்தின் சதிச் செயலை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்களை மிரட்டி உண்மைகளை நசுக்கும் முயற்சிகளுக்கு உரிய நேரத்தில் மக்கள் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

கைது தொடர்பான விடயத்தை சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க வெளிப்படுத்தி இருக்கவிட்டால் அவர் வெள்ளை வானில் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டதை நாடு ஒருபோதும் அறிந்திருக்காது என்றும் சுட்டிக்காட்டினார்.

பொதுமக்களை கைது செய்வதில் பொலிஸாரின் நடத்தை குறித்து கடுமையாக சாடிய கொழும்பு பேராயர், ஷெஹான் மாலக்கவின் கைது பட்டப்பகலில் நடந்த கடத்தல் என்றும் குற்றம் சாட்டினார்.

இத்தகைய செயற்பாடுகள் நாகரீகமற்றது மற்றும் ஒழுக்கக்கேடானது என குறிப்பிட்ட கொழும்பு பேராயர், சட்டமா அதிபரும் அரச ஊழியரே அன்றி அரச கைக்கூலி அல்ல என்றும் சாடினார்.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அவர் கடமைப்பட்டுள்ளார்.

ஆனால் பயங்கரவாத தாக்குதல்களுக்கு நீதி கோரி குரல் கொடுப்பவர்களை கைது செய்வதற்கான முயற்சிகளை சட்டமா அதிபர் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் பிரச்சினைகளை தீர்க்க முடியாவிட்டால், சர்வதேசத்திடம் சென்று தீர்வை பெற்றுக்கொள்ள தயங்கமாட்டேன் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

Posted in Uncategorized

அரசாங்கம் வடக்கு மக்களுக்கும் மானியமுறையில் அரிசி, கோதுமை வழங்க வேண்டும்- சபா.குகதாஸ்.

வடக்கு மாகாணத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை இழப்பீட்டு நிதி வழங்கப்படாத நிலையில் மானிய அடிப்படையிலாவது உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய அரிசி , கோதுமை மா , சீனி, மண்ணெண்ணை வழங்க ஐனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான சபா குகதாஸ்  தெரிவித்துள்ளார்.

இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

வடக்கு மாகாணத்தில் விவசாயத்தையும் கடற்தொழிலையும் இவை சார்ந்த கூலித் தொழிலையும் வாழ்வாதாரமாக கொண்டு வாழுகின்ற ஒரு லட்சத்திற்கு அதிகமான அதிகமான குடும்பங்கள் வருமானங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.

சீர் அற்ற காலநிலையாலும் இரசாயன உரம் இன்மையாலும் விவசாயிகள் நெல் விழைவு இல்லாது கடனாளிகளாகவும் சட்டவிரோத மீன்பிடி காரணமாகவும் எரிபொருள்(மண்ணெண்ணை) விலை ஏற்றம் காரணமாகவும் மீனவர்கள் வருமானம் இழந்துள்ளனர். இதனால் இத் தொழில்கள் சார்ந்த கூலித் தொழிலாளர்களும் வருமானம் இழந்துள்ளனர்.

ஆகவே வடக்கு மாகாணத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை இழப்பீட்டு நிதி வழங்கப்படாத நிலையில் மானிய அடிப்படையிலாவது உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய அரிசி , கோதுமை மா , சீனி, மண்ணெண்ணை வழங்க ஐனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அத்துடன் மாவட்ட செயலாளர்களும் அரசாங்கத்தின் கவனத்திற்கு விரைந்து கொண்டு செல்ல வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராக வேண்டும் – இராதாகிருஷ்ணன்

இந்த ஆட்சி தொடரும்வரை நாட்டில் பிரச்சினைகளும் தொடரும். எனவே, ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராக வேண்டும்.” என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், ” நாட்டு மக்கள் தற்போது சொல்லொணாத் துயரங்களை அனுபவித்துவருகின்றனர். இதற்கு கொரோனா காரணம் அல்ல. ஏனெனில் எமது நாட்டில் மட்டும் கொரோனா பரவவில்லை. கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்ட அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பொருளாதாரம் மேம்பட்டுள்ளது. ஊழல் ஆட்சி மற்றும் முறையற்ற முகாமைத்துவம் காரணமாகவே எமது நாடு முன்னேறாமல் உள்ளது.

குறிப்பாக சேதனை பசளையை நோக்கி நகரும் முடிவு ஓரிரவில் எடுக்கப்பட்டதாகும். இவ்வாறான முடிவுகள் நீண்டகாலத்தை அடிப்படையாகக்கொண்டு முறையாக எடுத்திருக்க வேண்டும். ஆனால் இங்கு என்ன நடந்தது? உலக சந்தையில் உர விலை குறைந்திருந்த சமயம், உர இறக்குமதிக்கு தடை செய்யப்பட்டது. தற்போது விலை அதிகரித்துள்ளது.  இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கம்பனிகள் இலாபம் அடைந்துள்ளன.

கொரோனா பெருந்தொற்று காலத்திலும் எமது தோட்ட மக்கள் தொழிலுக்குச்சென்றனர். பொருளாதாரத்துக்கு பங்களிப்புச்செய்தனர். ஆனால் பட்ஜட்டிலோ, ஜனாதிபதியின் சிம்மாசன உரையிலோ  எமது மக்களுக்கு எந்த அறிவிப்பும் விடுக்கப்படவில்லை. மானிய நிலையில் கோதுமை மாவ வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. தற்போது அதுவும் இல்லை.

இந்த அரசு தொடரும்வரை துன்பமும் தொடரும். இன்று ஈபிஎவ், ஈடிஎவ்பில் கை வைத்துள்ளனர். எனவே, மக்கள் இந்த அரசை விரட்டியடிக்க தயாராக வேண்டும். அப்போதுதான் நாட்டுக்கு விடிவு பிறக்கும்.” என்றார்.

Posted in Uncategorized

பலாலியில் இறங்கவுள்ள மோடி!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கையில் இடம்பெறும் ‘பீம்ஸ்ரெக்’ BIMSTEC உச்சி மாநாட்டில் பங்கேற்க இலங்கைக்கு பயணம் செய்யக்கூடும் என்ற ஊகங்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் இருந்து நேரடியாகவே விமானம் மூலம் பலாலிக்கு அவர் செல்ல திட்டமிடுவதான செய்திகளும் வெளிவந்துள்ளன.

முதலில் யாழ்ப்பாணத்துக்கு சென்று அங்கு இந்திய உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட தமிழ் கலாசார நிலையத்தை திறந்து வைத்த பின்னர் அங்கிருந்து கொழும்புக்கு செல்வதற்கு இந்திய அதிகாரிகள் திட்டமிடுவதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

பீம்ஸ்ரெக் BIMSTEC உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தாலும் பிரதமர் மோடியின் இந்தப்பயணம் குறித்த இந்தியத் தரப்பு இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்புக்கள் எதனையும் வெளியிடவில்லை.

Posted in Uncategorized

தமிழக மீனவர்களை நாம் விரோதியாக பார்க்க கூடாது – சிவாஜிலிங்கம்

தமிழ் நாட்டு மீனவர்களும் இலங்கை மீனவர்களும் அடிபட்டு சாக வேண்டும் என்பதற்காகவே இலங்கை அரசாங்கம் மீனவர்களின் பிரச்சினைகளை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கின்றனது, என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

ஊரைக் கொளுத்தும் ராஜாவுக்கு கொள்ளிக்கட்டை கொடுக்கும் மந்திரி போல இங்கு ஒரு அமைச்சர் இருக்கின்றார், அவர் தான் டக்ளஸ் தேவானந்தா.

அவர் வருவார், என்ன செய்ய வேண்டுமென்றே அவருக்கு தெரியாது, அவர் கதைப்பதும் விளங்காது.

இந்த நிலைமையில் தான் நாம் இருக்கின்றோம். ஆகவே 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு படகு ஒழுங்குபடுத்தல் சட்டம் மற்றும் இழுவை மடி தடைச் சட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழக மீனவர்களை நாம் விரோதியாக பார்க்க கூடாது, ஒரு பிரச்சினைக்கு ஒரு தீர்வு உண்டு. அதை பயன்படுத்தி தீர்வைக் காண வேண்டும்.

எமக்கும் தமிழகத்துக்குமான உறவை அறுத்து விட அதிக எண்ணிக்கையான ஆட்கள் உள்ளனர்.

அன்று சந்திரிகா அம்மையார் கடலுக்குள் மீனவர்களை இறங்குவதற்கு தடை விதித்தார்.

அப்போது நான் மருத்துவமனையில் இருந்துஇ மாவை சேனாதிராஜா உள்ளிட்டோர் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்து வெற்றி பெற்றோம்.

டக்ளஸ் தேவானந்தா அண்மையில் யாழில் இடம்பெற்ற போராட்டத்தில் ஆவேசமாக செயற்பட்டார். அது கண்டிக்கத்தக்கது.

இதனால் யாழ்.கச்சேரிக்கு முன்பாக இடம்பெற்ற போராட்டம் மதியத்துடன் நிறைவுக்கு வந்தது.

இப்படி போராட்டங்கள் பல வழிகளிலும் குழப்புவதற்கு இப்படி போராட்டங்கள் பல வழிகளிலும் குழப்புவதற்கு முயற்சித்தனர்.

இதற்கு எதிராக நாம் தெளிவாக செயற்பட வேண்டும். திருமண வீட்டில் நான் தான் மாப்பிளை,  இறப்பு வீட்டில் நான் தான் பிணம் என்று திரிபவர் தான் டக்ளஸ் தேவானந்தா, என்றார்.

Posted in Uncategorized

ஜெனிவாவில் மற்றொரு பிரேரணைக்கு பிரித்தானியா திட்டம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் மற்றுமொரு கடுமையான பிரேரணையைக் கொண்டு வருவதற்கு பிரித்தானியா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் பிரேரணையை இறுதிக்கட்ட போரில் இடம்பெற்றவை எனக் கூறப்படுகின்ற பாரதூர மான மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச் சாட்டுகளுக்கான பொறுப்புக்கூறலின் தாமத நிலை மற்றும் அண்மைய கால உரிமைகள் மீறல்கள் பற்றிய விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என கொழும்பு இராஜதந்திர மட்டத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

பிரித்தானியா கொண்டு வரவுள்ள இந்த புதிய பிரேரணைக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பலவும் மேற்குலக நாடுகள் சிலவும் ஆதரவை தெரிவித்துள்ளன எனவும் அந்தத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இவ்வாறானதொரு நிலையில் ஜெனிவாவில் ஏற்பட கூடிய நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றது.

இதனடிப்படையில் ஜெனிவா அமர்விற்கு முன்னர் முக்கிய சில ஐரோப்பிய நாடுகளுடன் கலந்துரையாடலை முன்னெடுக்க வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தீர்மானித்துள்ளார். இந்த கலந்துரையாடல்களுக்கு சில நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன என வெளிவிவகார அமைச்சின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட் டார்.

அண்மைய இந்திய விஜயத்தினை போன்று குறிப்பிட்ட சில ஐரோப்பிய நாடுகளுக்கு ஜெனிவா அமர்வுக்கு முன்னர் விஜயம் செய்தல் அல்லது மார்ச் மாதம் 3 ஆம் திகதி இலங்கை குறித்த அறிக்கை சமர்பிக்கப்படுவதற்கு முன்னர் குறித்த நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ளல் போன்ற வழிமுறைகள் குறித்து இலங்கையின் இராஜதந்திர பணிக் குழாம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

அதே சமயம் வெளிவிவகார அமைச் சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ள ஐக் கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக ஜெனிவா செல்லவுள்ளார்.

மார்ச் 3 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை குறித்த எழுத்து மூலமான அறிக்கை சமர்பிக்கப்படஉள்ளது. இந்த அறிக்கையானது இலங்கைக்கு சவால் மிக்கதாகவே அமையும் எனவும் கருதப்படுகின்றது.

Posted in Uncategorized

கடன் ஒப்பந்தத்தை இறுதி செய்ய மீண்டும் இந்தியாவிற்கு செல்கின்றார் பசில் !

இந்தியாவினால் வழங்கப்படும் நிதியுதவி தொடர்பான ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மீண்டும் இந்தியாவிற்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதியமைச்சர் அண்மையில் இந்தியாவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியமை வெற்றியளித்துள்ளது என்றும் நாட்டிற்கு பயனுள்ள முடிவுகளை வழங்கியது என்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கைக்கு 2.4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இந்தியா உறுதி வழங்கியுள்ளது என்றும், அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது கடந்த விஜயத்தின் போது இதற்கான அடித்தளத்தை உருவாக்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்காக இலங்கை முதலில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியாவிடம் இருந்து கடனாகப் பெறும் என ஜி.எல்.பீரிஸ் கூறினார்.

எனவே குறித்த கடன் தொடர்பான இறுதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மீண்டும் புதுடெல்லிக்கு செல்வார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கு திட்டம்

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், ஆங்கிலம், அரபு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளுடன், ப்ரான்ஸ், ஸ்பெய்ன், ஜேர்மன், இத்தாலி, சீன மற்றும் ஜப்பான் முதலான நாடுகளின் மொழிகளைக் கற்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு ஏற்படுவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இணையவழி முறைமையில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் நிலைமை மிக மோசமாகிவிட்டது, ஆட்சி மாற்றமே உடனடி தேவை என்கின்றார் சந்திரிக்கா

இலங்கையின் இன்றைய நிலைமை மிகவும் மோசமான கட்டத்தில் உள்ளது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.

மக்கள் அனைவரும் பொறுமை இழந்துள்ளனர் எனவும், நாட்டில் அடுத்து என்ன நடக்கும் என்று தன்னால் கூற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய ஆட்சியால் நாடு சீரழிந்துள்ளது என்றும் நாடு மீண்டு எழ முடியாத நிலையில் நாட்டின் பொருளாதாரம் அதாள பாதாளத்தில் சென்றுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

ஆட்சி மாற்றமே தற்போதைய உடனடித் தேவை என குறிப்பிட்ட சந்திரிகா குமாரதுங்க, ஜனநாயகத்தை நேசிக்கும் பிரதிநிதிகள் ஓரணியில் திரள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

அவ்வாறு இணையாவிட்டால் உலக வரைபடத்தில் இலங்கை இல்லாமல் போகும் நிலைமைதான் ஏற்படும் என்றும் சந்திரிகா குமாரதுங்க எச்சரித்தார்.

Posted in Uncategorized