கச்சத்தீவு அந்தோனியார் தேவாலய விழாவுக்கு இந்திய யாத்திரிகர்களை அனுமதிக்க முடியாது – இலங்கை

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கச்சத்தீவு அந்தோனியார் தேவாலய விழாவுக்கு, இந்திய யாத்திரிகர்களை அனுமதிக்காதிருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பரவிவரும் கோவிட் ஒமிக்ரோன் தொற்று மற்றும் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு ஆகியவற்றை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இதன்படி, சுமார் 500 வரையான மட்டுப்படுத்தப்பட்ட இலங்கை யாத்திரிகர்களுடன் இம்முறை விழா நடத்தப்படவுள்ளது.

இலங்கை சுகாதார அதிகாரிகளினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவம் இம்முறை மார்ச் மாதம் 11 மற்றும் 12ம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே நேரம், கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் தமிழ்நாடு மீனவர்களையும் அனுமதிக்க வேண்டும் என இராமேஸ்வரம் விசைப்படகு உரிமையாளர் சங்கத் தலைவர் யேசுராயா கோரிக்கை விடுத்தார்.

கச்சதீவு அந்தோனியாருக்கு கோரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள் திருவிழா இடம்பெறவுள்ளது. இந்த திருவிழாவில் வருடாந்தம் 10 ஆயிரம் பேர் பங்குகொண்டாலும் இம்முறை 500 பேராக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு இடம்பெறும் இந்த திருவிழாவிற்கு தமிழ்நாடு மீனவர்களும் பங்குகொண்டு வழிபட விரும்புகின்றோம். மத வழிபாட்டை ஏற்று எமது மீனவர்களிற்கும் குறைந்த பட்சம் 200 பேர் பங்குகொள்ள யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இறைவனை மன்றாடுகின்றோம்.

கொரோனா அச்சம் இருப்பின் புறப்படும் சமயம் பரிசோதனை மேற்கொண்டு கொரோனா இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழுடன் பயணிக்க முடியும். ஏனெனில் தற்போது இந்தியாவில் இருந்து தினமும் ஆயிரக் கணக்கானோர் விமானம் மூலம் இலங்கைக்கு பயணிக்க முடியும் என்றால் ஏன் கச்சதீவிற்கு பயணிக்க கூடாது என்ற கேள்வி மீனவர்களிடத்தில் உள்ளது.

இதனால் இந்த விடயத்தை அவச்மாக தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு சென்று மத்திய அரசின் ஊடாக இலங்கை அரசைகோரவுள்ளோம் என்றார்.

மோடிக்கு கடிதம் அனுப்பிய 6 கட்சித் தலைவர்கள் நாளை அவசர ஊடக மாநாடு

மோடிக்கு கடிதம் அனுப்பிய 6 கட்சித் தலைவர்கள்: இந்தியப் பிரதமருக்கான கடிதத்தில் ஒப்பமிட்ட ஆறு கட்சிகளின் தலைவர்களும் இணைந்து நாளைய தினம் ஓர் ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் சட்டத்தில் தற்போதுள்ள விடயத்தையும் நடைமுறைப்படுத்துமாறு கோரிய விடயத்தை அதனையே தீர்வாக கோருகின்றோம் என மற்றுமோர் கட்சி தவறாக பிரச்சாரப்படுத்துவது தொடர்பிலேயே இந்த ஊடகவியலாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

நாளை காலை 10 மணிக்கு யு.எஸ் விடுதியில் இந்தச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்தார் அமைச்சர் பீரீஸ்!

இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய முன்முயற்சிகள் குறித்து வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்துள்ளார்.

புதிய ஆண்டின் முதலாவது இராஜதந்திர மாநாடு நேற்று, வெளிநாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தற்போதைய முன்னேற்றங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக அமைச்சினால் ஒழுங்கமைக்கப்பட்ட வழக்கமான விளக்கங்களின் தொடர்ச்சியாக, முழு இராஜதந்திரப் படையினரையும் சந்திப்பதற்கான வாய்ப்பை வெளிநாட்டு அமைச்சர் பாராட்டினார்.

பெப்ரவரி இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் 49ஆவது கூட்டத் தொடருக்கு முன்னதாக மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான முன்னேற்றம் தொடர்பான தகவல்களைப் பகிர்வதே இன்றைய மாநாட்டின் நோக்கமாகும்.

மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் 2021 அமர்வில், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும், மனித உரிமைகள் பேரவை உட்பட ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்ந்தும் ஈடுபடுவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியதை அமைச்சர் நினைவு கூர்ந்தார். இந்த சூழலில், சர்வதேச சமூகத்துடனான ஒத்துழைப்பு மற்றும் உரையாடல் சார்ந்த உணர்வுடனான ஆக்கபூர்வமான ஈடுபாட்டை அமைச்சர் குறிப்பிட்டார்.

பொறுப்புக்கூறல், நீதி மறுசீரமைப்பு மற்றும் அர்த்தமுள்ள நல்லிணக்கம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு உள்நாட்டு நிறுவனங்களின் செயற்பாடுகளினூடாக இலங்கை அரசாங்கம் கணிசமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்த வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ், தற்போது ஏற்பட்டுள்ள உறுதியான முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளிக்குமாறு இந்த நிறுவனங்களின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அதற்கிணங்க, கடந்த வருடத்தில் உள்நாட்டு நிறுவனங்களால் ஏற்படுத்தப்பட்ட முன்னேற்றங்கள் தொடர்பான விளக்கங்கள் இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் தலைவி திருமதி தாரா விஜயதிலக, நிலையான அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் நாயகம் திருமதி சாமிந்திரி சப்பரமாது, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. தீப்தி லமாஹேவா, காணாமல் போனோர் அலுவலகத்தின் சட்டப் பிரிவின் தலைவர் திரு. த. தப்பரன் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆய்வு மற்றும் கண்காணிப்புக்கான பணிப்பாளர் திரு. நிஹால் சந்திரசிறி ஆகியோரினால் வழங்கப்பட்டன.

43 வருடங்களின் பின்னர் சர்வதேச நியதிகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டுவரும் நோக்கத்துடன் திருத்தப்பட்டு வருவதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். உத்தேசத் திருத்தங்கள் அடங்கிய சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் இறுதி அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சட்டமூலத்தை சமர்பிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட நீண்ட கலந்துரையாடலின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தப்பட்டு வருவதாக அமைச்சர் விளக்கமளித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் முக்கிய திருத்தங்களில் தடுப்புக் காவல் உத்தரவு, கட்டுப்பாட்டு உத்தரவு, நீதித்துறை மீளாய்வு உத்தரவுகளை வெளிப்படையாக அங்கீகரித்தல் தொடர்பான பிரிவுகளில் திருத்தங்களை மேற்கொள்ளுதல், நீண்ட கால தடுப்புக் காவலில் வைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்குகளை விரைவாகத் தீர்த்தல், சுதந்திரத்துக்கு இடையூறு விளைவிக்கும் பிரிவுகளை இரத்துச் செய்தல், நீதிவான்கள் மற்றும் நீதித்துறை மருத்துவ அதிகாரிகளை அணுகுவதற்கான விதிகளை வெளிப்படுத்துதல் மற்றும் அறிமுகப்படுத்துதல், தடுப்புக் காவலில் உள்ள காலத்தில் துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதைகளைத் தடுத்தல், குடும்பத்துடன் தொடர்புகொள்வதற்கான உரிமை, நீண்ட கால கைதிகளுக்கு பிணை வழங்குதல் மற்றும் வழக்குகளை நாளாந்தம் விசாரணை செய்தல் போன்ற பிரிவுகளிலான திருத்தங்கள் உள்ளடங்கும்.

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 13ஆவது பிரிவின் கீழ் ஆலோசனை சபையொன்றை ஸ்தாபிப்பதையும் அமைச்சர் குறிப்பிட்டார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவல் உத்தரவு அல்லது கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட எவருக்கும் அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோருவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தண்டனை அனுபவித்து வந்த 16 விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டதுடன், பயங்கரவாதச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டின் கீழ் நீண்டகாலமாக நீதிமன்றக் காவலில் உள்ள கைதிகளை விடுதலை செய்வதற்கான சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 2022 ஜனவரி 13 நிலவரப்படி மேலும் 13 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள திரு. ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பான வழக்கின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்தும் வெளிநாட்டு அமைச்சர் குறிப்பிட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்குவதை எதிர்க்கப் போவதில்லை என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிவித்துள்ளார். தொல்பொருள் பாரம்பரிய முகாமைத்துவம் தொடர்பான ஜனாதிபதி செயலணி தொடர்பில், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் பிரதிநிதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கு தான் மேற்கொண்ட விஜயங்கள் மற்றும் இலங்கையின் வடமாகாணத்திற்கான தனது எதிர்வரும் விஜயம் ஆகியன நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்காக அரசாங்கம் ஏற்கனவே முன்னெடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் குறித்து கலந்துரையாடி கருத்துக்களைப் பெறுவதற்காக, அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள், புத்திஜீவிகள் மற்றும் கல்வியியலாளர்கள், அடிமட்டத்தில் உள்ள சிவில் சமூக அமைப்புக்களின் உறுப்பினர்கள் உட்பட பல்வேறு தரப்பினருடன் ஆலோசனையில் ஈடுபடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தூதரகத் தலைவர்களுக்கு வெளிநாட்டு அமைச்சர் அறிவித்தார்.

நிலைமாறுகால நீதி, நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைதல் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்கள் ஆகிய துறைகளில் சம்பந்தப்பட்ட தேசிய நிறுவனங்கள் ஆற்றிய பணிகளை ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி பாராட்டினார். மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக இலங்கையுடன் இணைந்து செயற்படும் சர்வதேச சமூகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த எகிப்தின் தூதுவர் மகேத் மொஸ்லே, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதிலும் அதன் பின்விளைவுகளைக் கையாள்வதிலும் இலங்கை அடைந்துள்ள அற்புதமான சாதனைகளை சுட்டிக்காட்டினார்.

அரசின் பத்து பங்காளி கட்சி தலைவர்கள் எடுத்துள்ள தீர்மானம்

தற்போது இலங்கை எதிர்கொண்டுள்ள பாரிய நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு உதவும் வகையில் அரசாங்கத்திடம் பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க அரசாங்கத்துடன் இணைந்துள்ள பத்து கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

இலங்கையில் உள்ள இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிசி) தலைமையகத்தில் நடைபெற்ற அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணையை நாளையதினம் அரசதலைவர் மற்றும் பிரதமரிடம் கையளித்த பின்னர் அதனை பகிரங்கப்படுத்தவும் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

நாட்டின் உண்மை நிலையை மக்களிடம் மறைக்காமல் மக்களுக்கு உணர்த்த வேண்டும் எனவும் கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

அத்துரலிய ரத்ன தேரர், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில , வாசுதேவ நாணயக்கார , அமைச்சர்களான வீரசுமண வீரசிங்க , டிரான் அலஸ் , கெவிந்து குமாரதுங்க , இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி ஜி.வீரசிங்க  ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Posted in Uncategorized

நல்லாட்சிக் காலத்தில் திருடர்கள் பாதுகாக்கப்பட்டார்களா? கடும் கோபத்திற்குள்ளாகி வெளியேறிச் சென்ற ரணில்!

பிணை முறி விவகாரத்தில் அரசாங்கத்தின் பணம் கொள்ளையிடப்படவில்லை என நீதிமன்றம் கூறியுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சிங்கள ஊடகத்தின் வலையொளித் தளம் ஒன்றின் செய்தியாளரால் கேட்கப்பட்ட கேள்வியால் ரணில் கடும் கோபமடைந்து செய்தியாளர் சந்திப்பை இடைநடுவில் நிறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நடந்த ஊழல், மோசடிகள் சம்பந்தமாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் எழுப்பப்பட்ட கேள்வியால் கோபத்திற்கு உள்ளான அவர், நேர்காணலை இடையில் நிறுத்தி விட்டு எழுந்து சென்றுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் திருடர்களைப் பாதுகாப்பதமை தொடர்பாகவும் இவர்கள் அனைவரும் நண்பர்கள், இவர்கள் திருடர்களை பிடிக்க மாட்டார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கூறியிருந்தமை தொடர்பிலும் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து கோபத்திற்கு உள்ளான ரணில், தான் திருடன் இல்லை என ஏற்றுக்கொள்ளுமாறு செய்தியாளரிடம் கோரியுள்ளார். சிக்கிக்கொண்ட இடத்தில் தொடர்ந்தும் சிக்க வேண்டாம்.

நேர்காணலை முன்னெடுப்பது என்றால், நாம் வேறு பிரச்சினைகள் பற்றி பேசுவோம் எனவும் கோபமாகத் தெரிவித்துள்ளார். திருடன் என்றால் திருடன் என்று சொல்லுங்கள். இல்லை என்றால் இல்லை என்று கூறுங்கள் இரண்டில் ஒன்றை செய்வோம் அல்லது ஊடக சந்திப்பை நிறுத்துவோம் என தெரிவித்துள்ளார்.

எனினும் தொடர்ந்தும் அந்த கேள்வி தொடுக்கப்பட்டதால், இல்லை இதனை நிறுத்துவோம். நீங்கள் படித்து விட்டு மனதை மாற்றிக்கொண்டு வேறு ஒரு நாள் வாருங்கள் எனக் கூறி விட்டு எழுந்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இந்த நேர்காணலில் இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பாகவும் செய்தியாளர் கேள்வி எழுப்பி இருந்தார், இதற்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்க, அது அரச பணம் அல்ல என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எனக்கும் அதில் தொடர்பில்லை என அரச தலைவர் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தெரிவுக்குழுவிலும் நான் அதில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized

இந்தியாவை நோக்கிய தமிழரின் ஒருமித்த கோரிக்கையை எதிர்க்கும் அரச கைக்கூலிகளுக்கு இடமளியாதீர்கள்

இந்தியாவை நோக்கிய தமிழரின் ஒருமித்த கோரிக்கையை எதிர்க்கும் அரச கைக்கூலிகளுக்கு இடமளியாதீர்கள்

தமிழ் மக்களிடம் ரெலோ கோரிக்கை

இந்தியாவை நோக்கிய கோரிக்கையின் வழியாக இலங்கை அரசின் இனவழிப்புக்கு எதிராக தந்திரோபாய நகர்வை தமிழர் தரப்பு ஒருமித்த பலத்துடன் மேற்கொண்டுள்ளது.

இதற்கு எதிராக போராட்டத்தை நடத்தி தமிழர் தரப்பை காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையில் ஈடு படும் அரசின் கைக்கூலிகளின் நடவடிக்கைகளுக்கு இடம் அளிக்காதீர்கள்.

மாகாண சபை முறைமையை முற்றுமுழுதாக நீக்கி தமிழர்களை பலம் அற்றவர்களாக ஆக்குவோம் என்ற சபதத்தோடு அரசகட்டளை ஏறியவர் இன்றைய ஜனாதிபதி. புதிய அரசியல் யாப்பின் மூலம் அதை நிறைவேற்ற தயாராகி வருகிறார்.

ஒரு நாடு ஒரு சட்டம் என்ற செயலணியின் தலைவர் ஞானசார தேரர் மாகாணசபை முறையை அழித்து ஒழித்து தமிழர்களுக்கு இருக்கும் ஆகக்குறைந்த அதிகார முறைமையை நீக்குவோம் என்ற செயற்பாட்டை முன்னெடுத்து வருகிறார்.

அமைச்சரவை அந்தஸ்துடன் இந்தியாவிற்கான தூதுவராக சென்ற மிலிந்த மொரகொட தமிழர்கள் அரசியல் தீர்வை கோரவில்லை, அன்றாட வாழ்க்கை பிரச்சினைகளை தீர்க்க கோருகிறார்கள் என்று கூறி வருகிறார். மாகாண சபை முறைமை ஒரு வெள்ளை யானைக்கு ஒப்பானது என்று இந்தியாவிலே தெரிவித்து வருகிறார்.

வியாத்மக என்ற சிங்களப் புத்திஜீவிகள் அமைப்பு மாகாண சபை முறைமையை ஒழித்துக்கட்டி தமிழர்களை எமது தாயக பூமியிலேயே அரசியல் பலம் அற்றவர்களாக ஆக்க முயற்சி செய்கிறார்கள். மகா சங்க பவுத்த பிக்குகள் இதே திசையிலே பயணிக்கிறார்கள்.

13வது திருத்த சட்டம் எமது அரசியல் தீர்வு அல்ல என்பதை நாம் தெட்டத் தெளிவாக கூறியுள்ளோம். நிரந்தரமான அரசியல் தீர்வை நாம் எட்டும் வரையும் மாகாண சபை முறைமை அரசியல் யாப்பில் இருப்பது அவசியமாகும். இதை நீக்கிவிட்டாலோ அல்லது பலவீனமாக்கினாலோ தமிழர் இருப்பே இந்த நாட்டில் கேள்விக்குறியாகிவிடும்.
இதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

மாகாணசபையின் அடித்தளமாக இருக்கும் 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதே இதற்கு ஒரே வழி என்ற வகையில் பேரினவாத தென்னிலங்கை சிங்கள அரசு பிரச்சாரத்தை முன்னெடுத்து வெற்றியும் கண்டு வருகிறார்கள்.

இதற்கு வலுசேர்க்கும் விதமாக எமது தமிழ் இனத்திலேயே தேசியவாதிகள் என்ற போர்வையோடு இயங்கும் அரச கைக்கூலிகள் 13 எதிர்ப்பு என்று ஒரு போராட்டத்தை அரசின் கனவுகளை நிறைவேற்றுவதற்கு சாதகமாக செயற்படுகிறார்கள். இவர்களை தமிழ் மக்கள் அடையாளம் கண்டு நிராகரிக்க வேண்டும்.

தமது அரசியல் கொள்கைக்கான எந்தப் பாதையையும் வகுக்க முடியாதவர்கள் இதுவரையும் எந்த நகர்வையும் மேற்கொள்ளாதவர்கள் தமிழர்கள் ஒருமித்து முன்னெடுக்கும் செயற்பாடுகளை விமர்சிப்பதையே அரசியலாக கொண்டுள்ளார்கள்.

ஒற்றையாட்சியை எதிர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு அதன் கீழுள்ள பிரதேச சபைகளில் பதவிகளை பெற்றுக் கொண்டவர்கள். ஒற்றை ஆட்சியை ஏற்று சத்தியப் பிரமாணம் செய்து பாராளுமன்ற பதவிகளை அலங்கரித்துக் கொண்டவர்கள். எதிர்க்கிறோம் என கூறும் 13-இல் உள்ள மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட தயாராகி வருபவர்கள் . இரட்டைவேடம் போடும் இவர்களை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

இவர்களால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான தீர்வையோ விடிவையோ பெற்றுத்தர முடியாது. தமது அரசியல் கையாலாகாத நிலையை மக்கள் அடையாளம் கண்டுவிட்டார்கள் என்பதால் வெற்று கோசங்களின் மூலம் எம்மக்களை ஏமாற்ற முயலுகிறார்கள். போராட்டத்துக்காக ஒரு துளி வியர்வை கூட சிந்தாதவர்கள் உயிரிழந்த போராளிகளையும் மக்களையும் தமது ஈனச் செயல்களுக்கு பயன்படுத்துகிறார்கள். அந்த புனித ஆத்மாக்களின் தியாகங்களை தமது சுயலாப அரசியலுக்காக விலைபேசுகிறார்கள்.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வேண்டி போராட வேண்டிய தேசியவாதிகள் என்று கூறிக் கொள்பவர்கள் தமிழர்களுக்கு எதிராகவே ஒரு போராட்டத்தை தாயக பூமியில் நடத்துவதற்கு தமிழ் மக்கள் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

ஏற்கனவே அரசின் முகவர்கள் பலர் சிறு குழுக்களாக நின்று தேசியத்துக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருவதை நீங்கள் அறிவீர்கள். அதே பாதையில் தேசியவாதிகள் என்ற போர்வையை போர்த்திக்கொண்டு தமிழின எதிர்ப்பு என்னும் அரசின் நிகழ்ச்சி நிரலை சிரமேற்கொண்டு அரசின் கனவுகளை நிறைவேற்றும் இந்த கைக்கூலிகளை நிராகரித்து தமிழரின் ஒற்றுமையை பேரினவாத அரசுக்கும் சர்வதேசத்துக்கு தெரிவிக்குமாறு தமிழ் மக்களை வேண்டிக் கொள்கிறோம்.

ஊடக வாரியம்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் -ரெலோ
தமிழ் தேசியக் கூட்டமைப்பு

சம்பூரில் சூரிய சக்தி மின் நிலையம்! இந்தியாவுடன் ஒப்பந்தத்துக்கு திட்டம்

சம்பூரில் சூரிய சக்தி மின் நிலையம் ஒன்றை நிறுவுவதற்கு இந்தியாவின் அரச நிறுவனமான என். ரி. பி. சி. எனப்படும் நஷனல் தெர்மல் பவர் கோப்ரேஷன் லிமிற்றெட் நிறுவனத்துடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாக இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொறகொட தெரிவித்துள்ளார்.

என். ரி. பி. சி. நிறுவனம் இந்தியாவில் 60 ஆயிரம் மெகா வாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்வதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். இலங்கையின் மொத்த மின் உற்பத்தி 4,300 மெகாவாட்ஸை விடஅதிகரிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மன்னாரில் 5,000 மெகாவாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பது தொடர்பிலும் இரு தரப்பினரும் ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மின்சாரத்தை ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்குள்ள இயலுமை தொடர்பிலும் சுட்டிக்காட்டியுள்ள இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர், இரு நாடுகளுக்கும் இடையிலான மின் சக்தி கட்டமைப் பொன்றை ஏற்படுத்துவது பெரிய விடயமாக அமையாது எனவும் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கை விவகாரத்தை கையாள இந்தியா விசேட பிரதிநிதியாக கர்தீப் சிங் பூரி?

இலங்கை விவகாரத்தை கையாள இந்தியா விசேட பிரதிநிதியாக கர்தீப் சிங் பூரி நியமிக்கப்படலாம் எனத்  தெரிவிக்கப்படுகின்றது.

பூரி 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் திறைவேற்றப்பட்டபோது இலங்கைக்கான தூதுவராக இருந்த கே.என்.டிக்சிற்றிற்கு உதவியாக இருந்தவர். தற்போது இந்தியாவில் உள்ள அதிகாரிகளில் இலங்கை விடயத்தை முழுமையாகத் தெரிந்த சிலரில் இவரும் ஓருவர். மூத்த  இராஜதந்திரியுமாவார்.

தற்போது இந்திய மத்திய அரசில் ப.ஜ.க அரசின்  அமைச்சில் பெற்றோலிய, எரிவாயு  நகர கட்டமைப்பு,  அமைச்சராகவும் தற்போது செயல்படுகின்றார்.

இதேநேரம் இலங்கை இந்திய ஒப்பந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சுதுமலையில் இருந்து உலங்கு வானூர்தியில் ஏற்றிச் சென்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருந்தபோதும் இச் செய்தியை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை

Posted in Uncategorized

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலகத்திற்குள் நுழைய முற்பட்டதால் பதற்றம்

வவுனியாவில் நீதி அமைச்சின் நடமாடும் சேவைக்கு எதிராக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விசாரணை உள்ளடங்களாக நீதி அமைச்சின் நடமாடும் சேவை வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (26.01) காலை இடம்பெற்றது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக ஒன்று கூடிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், “ நீதி அமைச்சினால் நீதி கிடைப்பதில்லை, கால அவகாசம் வேண்டாம் நீதி தான் வேண்டும், செயல் திறன அற்ற ஓ எம் பி யை நம்பி காலத்தை கடத்தாது இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் பாரப்படுத்துங்கள்” என எழுதப்பட்ட பதாதைகளையும், காணாமல் ஆக்கப்பட்டோரின் புகைப்படங்களையும் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது நீதி அமைச்சின் நடமாடும் சேவை நடைபெற்ற மாவட்ட செயலக வளாகத்திற்குள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நுழைய முற்பட்ட போது காவல்துறையினர் அதனை தடுத்து நிறுத்தினர். இதனால் இரு பகுதியினருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டதுடன், காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் பதற்ற நிலை ஏற்பட்டது.

கொழும்பில் இடம்பெற்ற இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினம்

இந்தியாவின் 73 வது குடியரசு தினம் இன்று 2022.01.26 ஆம் திகதி கொழும்பில் அமைந்துள்ள உயர்ஸ்தானிகராலயத்தால் கொண்டாடப்பட்டது.

உலகின் பாரிய எழுதப்பட்ட அரசியலமைப்பு 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் திகதி இன்று நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில். கொவிட்-19 சுகாதார நெறிமுறைகளை மிகவும் இறுக்கமாக கடைப்பிடித்த நிலையில் உயர் ஸ்தானிகராலயத்தால் பல்வேறு நிகழ்வுகள்ஒழுங்கமைக்கப்பட்டிருந்தனஃ

இதன்போது உயிர் தியாகம் செய்த இந்திய அமைதிகாக்கும் படையினருக்கு இந்திய அமைதி காக்கும் படையினரின் நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்திய பின்னர் இந்திய உயர் ஸ்தானிகர் வாசஸ்தலமான இந்திய இல்லத்தில் உயர் ஸ்தானிகர் பால் பாக்லே இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையையும் பார்வையிட்டார்.

இந்திய ஜனாதிபதியின் செய்தியின் முக்கிய குறிப்புக்களும் உயர் ஸ்தானிகரால், இச்சந்தர்ப்பத்தில் வாசிக்கப்பட்டது. மேலும், வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரின் விசேட காணொளி செய்தி ஒன்றும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த சபையோர் மத்தியில் திரையிடப்பட்டது.

தொடர்ந்து, இலங்கை கடற்படையினரின் இசை குழுவினரால் பாடல்கள் இசைக்கப்பட்டதுடன் உயர் ஸ்தானிகராலயத்தின் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் ஒழுங்கமைத்திருந்த கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றிருந்தன.

கிட்டத்தட்ட 10 இந்திய மாணவர்கள் கல்வி கற்றுவரும் இரத்மலானை பரம தம்ம சைத்திய பிரிவேனாவில் நடைபெறவிருக்கும் குடியரசு தின நிகழ்வுகளிலும் இந்நாளில் உயர் ஸ்தானிகர் கலந்துகொள்ளவுள்ளார். அந்நிகழ்வுகளின்போது புத்த பெருமானின் அருளாசிகளைப் பெற்றுக் கொள்வதற்காக சங்கைக்குரிய மகா சங்கத்தினரால் விசேட பிரார்த்தனைகளும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் நண்பர்களுக்காக மாலை விசேட வரவேற்பு உபசாரம் ஒன்றும் இந்திய இல்லத்தில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

உலகளவில், இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடும் அசாதி கா ஆம்ரித் மஹோற்சவ் கொண்டாட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் 73வது குடியரசு தின நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.

அசாதி கா ஆம்ரித் மஹோற்சவ்வை முன்னிட்டு இன்று முதல் 2022 பெப்ரவரி 4ஆம் திகதி வரையில் உயர் ஸ்தானிகராலயத்தால் பல்வேறு விசேட நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

பாரிய கலாசார நிகழ்வு, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பாளி வளாகத்தில் இரவீந்திரநாத் தாகூரின் சிலையினை திறந்து வைத்தல், வர்த்தக ஊக்குவிப்பு செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இத்தருணத்தில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்பாந்தோட்டை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் உள்ள கொன்சுலேட் ஜெனரல் அலுவலகங்களும் கண்டியிலுள்ள துணை உயர் ஸ்தானிகராலயமும் பல்வேறு விசேட நிகழ்வுகளை ஒழுங்கமைத்து இந்தியாவின் 73வது குடியரசு தினத்தை அனுஷ்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized