அரச தலைவரின் கரங்களுக்கு செல்கிறது அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான வரைபு

இம்மாத இறுதிக்குள் புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான வரைபினை, அதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் வழங்குவதற்கு திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

1978ஆம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட இலங்கையின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பானது இதுவரை 20 தடவை திருத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச புதிய அரசியலமைப்பொன்றைத் தயாரிப்பதற்கான வரைபை உருவாக்க நிபுணர்கள் குழுவொன்றை நியமித்தார்.

அரச தலைவர் சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தலைமையிலான இந்தக் குழுவில் அரச தலைவர் சட்டத்தரணிகளான காமினி மாரப்பன, மனோகரா டி சில்வா, சஞ்ஜீவ ஜயவர்தன, சமன் ரத்வத்த ஆகியோரும், பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ், பேராசிரியர் நசீமா கமுர்தீன், கலாநிதி சர்வேஸ்வரன், பேராசிரியர் வசந்த செனவிரத்ன ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர்.

இந்தக் குழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதுடன், குறித்த நிபுணர்கள் குழு பல்வேறு தரப்புக்களிடமிருந்து யோசனைகளைப் பெற்று புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான வரைபினை இறுதி செய்துள்ளதாக அறியமுடிகிறது.

கொரோனா நெருக்கடிகளுக்கு மத்தியில் சுமார் ஒருவருடத்திற்கும் மேலாக நடைபெற்ற செயற்பாடுகளின் அடிப்படையில் தற்போது இக்குழுவானது தனது வரைபினை இறுதி செய்துள்ளது.

இந்த வரைபில் அரசியல் கட்சிகளினால் முன்னொழியப்பட்ட விடயங்கள் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட விடயங்கள் ஆகியன உள்ளடக்கத்தில் உள்ளதாக அறிய முடிகின்றது.

தமிழர் தரப்பின் நகர்வுகள் சாதாரணமானவை அல்ல!! அரசாங்கத்திற்கு ஆலோசனை

தமிழர் தரப்பின் பிரச்சினைகளை செவிமடுத்து அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன் பியதாச கூறியுள்ளார்.

இலங்கையின் அரசியல் முரண்பாடுகள் குறித்து கருத்து வெளியிட்ட அவர், இனியும் தவறான கொள்கையில் அரசாங்கம் பயணித்தால் ஒட்டுமொத்த நாடும் அதளபாதாளத்தில் விழும் எனக் கூறியுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர், “ 13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல் மற்றும் 1987 ஆம் ஆண்டு வாக்குறுதிகளை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழர் தரப்பு வலியுறுத்தியுள்ளமை, வழமை போன்ற செயற்பாடாக இருந்தாலும் இப்போது இதனை சாதாரணமாக கருத முடியாது.

பூகோள அரசியல் போட்டியில் இலங்கை சிக்கிக்கொண்டுள்ளது. இதில் தமிழர் தரப்பின் நகர்வுகள் அவதானிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

வெவ்வேறு நாடுகளுடன் நாம் பகுதி பகுதியாக இணைய நினைப்பது ஆரோக்கியமான விடயமாக இருக்காது. நாடாக ஒரே கொள்கையில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதற்காக முதலில் தேசிய மட்டத்தில் சகல தரப்பையும் ஒன்றிணைத்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும்” – என்றார்.

Posted in Uncategorized

பேரறிவாளனுக்கு 9-வது முறையாக பரோல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் 30 ஆண்டுகளுக்கு மேலாகசிறை தண்டனை அனுபவித்து வருகிறார். சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவருக்கு பரோல் வழங்குமாறு அவரது தாய் அற்புதம்மாள் கடந்த மே மாதம் முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அனுப்பினார். முதல்வர் இதை பரிசீலித்து,பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டார்.

பேரறிவாளன் கடந்த மே 28-ம் தேதி ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு பரோலில் சென்றார். பின்னர், மருத்துவர்களின் ஆலோசனைப்படி, வேலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்றுசிகிச்சை பெற்று வந்தார். அவ்வப்போது விடுக்கப்பட்ட கோரிக்கையின் பேரில், அவருக்கு 8 முறை பரோல் நீட்டிக்கப்பட்டது.

அவரது பரோல் நாளையுடன் (ஜன.24) முடிவடையும் நிலையில், 9-வது முறையாக மேலும் 30 நாட்கள் பரோல் வழங்கி அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.

Posted in Uncategorized

சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியை அரசாங்கம் நிராகரிக்காது- டலஸ் அழகப்பெரும

உலகளாவிய நிதி நிறுவனமான சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியை அரசாங்கம் என்றென்றும் நிராகரிக்காது. ஆனால் தற்போது இலங்கை தனது கடன் சேவையை வேறு முறையின் கீழ் மறுசீரமைக்க எதிர்பார்க்கிறது என வெகுஜன ஊடக அமைச்சரான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் நெருங்கிய உறவைப் பேணுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

1950 ஆம் ஆண்டு முதல் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை 16 தடவைகள் பெற்றுள்ளது. சமீப காலங்களில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 2016 ஆம் ஆண்டு 1.1 பில்லியன் அமெரிக்க டொலரும் 2008 ஆம் ஆண்டு 2.5 பில்லியன் அமெரிக்க டொலரும் கடனாகப் பெற்றுள்ளோம்.

எதிர்காலத்தில் உதவிக்காக சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் எந்த நேரத்திலும் நிராகரிக்கவில்லை.

இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவி பெறும் உறுப்பு நாடாகும். எனவே சர்வதேச நிதி நிறுவனம் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை சேதப்படுத்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பற்றி அரசாங்கம் கிட்டத்தட்ட அனைத்து பங்குதாரர்களுடனும் விவாதித்துள்ளதாகவும் இப்போதைக்கு சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல வேண்டாம் என முடிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

‘பென்டோரா பேப்பர்ஸ்’: ரஞ்சன் ராமநாயக்கவிடம் விசாரணை!

சர்சைக்குறிய பென்டோரா போப்பர்ஸ் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

நீதிமன்ற அவவமதிப்பு வழங்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவின் கோரிக்கைக்கு அமையவே இந்த வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பன்டோரா பேப்பரில் நிருபமா ராஜபக்ஸ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோரிடம் பெயர்கள் காணப்பட்ட நிலையில் அது தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அவர்களிடம் வாக்குமூலங்களை பெற்றுள்ளன.

இந்த விசாரணைகளுக்காக உள்நாட்டு வணிக வங்கிகள், அரச வங்கிகள் மற்றும் வரி வருமான திணைக்களத்திடம் ஆவணங்கள் கோரப்பட்டுள்ளன.

இந்நிலையில் இது குறித்து தன்னிடமும் தகவல்கள் இருப்பதாக ரஞ்சன் ராமநாயக்க கூறியுள்ள நிலையில், அது தொடர்பில் அவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

Posted in Uncategorized

மீண்டும் செயற்பாட்டு அரசியலுக்குள் சந்திரிகா? கோட்டாபயவால் பதவி நீக்கப்பட்ட பிரமுகருடன் கூட்டணி?

பொதுஜன ஐக்கிய முன்னணியை மீண்டும் உயிர்ப்பித்து, அதன் தலைமையில் வேறு கட்சியை இணைத்து கூட்டணியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நாற்காலி சின்னத்தில் தேர்தல்களில் போட்டியிட்ட பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு மீண்டும் உயிரூட்டும் திட்டங்கள் நடந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் அண்மையில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால், ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுசில் பிரேமஜயந்தவும் இந்த திட்டத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவரை தவிர அனுர பிரியதர்ஷன யாப்பா, சந்திம வீரக்கொடி ஆகியோரும், பொதுஜன ஐக்கிய முன்னணியை மீளமைக்கும் பணியில் இணைந்துள்ளனர். அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் இந்த புதிய கூட்டணியில் இணையவுள்ளார்.

இது சம்பந்தமாக முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா, குமார வெல்கமவுடன் சில சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக தெரியவருகிறது. இதனிடையே அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் உள்ள பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

அதேவேளை கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை மீள் உருவாக்கம் செய்ய போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அண்மையில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் சுயசரிதை நூல் அண்மையில் கொழும்பில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில், கலைஞர்கள், அரசியல்வாதிகள், தொழில்சார் நிபுணர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் கலந்துக்கொண்டனர்.

முன்னாள் அரச தலைவர் மீண்டும் செயற்பாட்டு ரீதியான அரசியலுக்குள் வருவதே இந்த நூல் வெளியீட்டு நடவடிக்கையின் பின்னணியில் இருக்கும் நோக்கம் எனவும் பேசப்படுகிறது.

Posted in Uncategorized

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கை தொடர்பில் இலங்கை பதில்!

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ‘உலக அறிக்கை 2022’ இன் இலங்கை தொடர்பான பிரிவில் நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைமையை மிகைப்படுத்தப்பட்ட மற்றும் தேவையற்ற எதிர்மறையான வகையில் சித்தரிப்பதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மனித உரிமைகள் தொடர்பான விடயங்களில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் உட்பட சர்வதேச சமூகத்துடன் ஆக்கபூர்வமாக ஈடுபடுவதற்கான கொள்கையை இலங்கை பின்பற்றுகின்றது.

எவ்வாறாயினும், குறிப்பாக சவாலான உலகளாவிய பொருளாதார மற்றும் சமூக சூழலின் போது பரபரப்பான மற்றும் பக்கச்சார்பான அறிக்கையிடல் உள்நாட்டு முரண்பாடுகளை தீவிரப்படுத்தி மோசமான நிலைமையைத் தோற்றுவிக்கின்றது. பொறுப்பான, சமநிலையான மற்றும் பாரபட்சமற்ற அறிக்கையிடலின் முக்கியத்துவத்தை நாங்கள் முன்னிலைப்படுத்துகின்றோம்.

உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட மற்றும் நிறைவேற்றப்பட்ட நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயன்முறையின் மூலம் நிலையான சமாதானத்தை நிலைநாட்டுவதில் இலங்கை ஈடுபட்டுள்ளதாக கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையில் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். எமது சொந்த அரசியலமைப்பு மற்றும் எமது சர்வதேசக் கடமைகளுக்கு இணங்க மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் இலங்கை தனது நீண்டகால அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

2022 ஜனவரி 18ஆந் திகதி இலங்கைப் பாராளுமன்றத்தின் 9ஆவது கூட்டத் தொடரின் தொடக்கத்தில் அதிமேதகு ஜனாதிபதியினால் அண்மையில் இந்தச் செய்தி மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

இலங்கை அரசாங்கம் பொருளாதார, சமூக மற்றும் மனித அபிவிருத்தி மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைதல் உட்பட அனைத்து துறைகளிலும் தனது ஆணையை நிறைவேற்றுவதில் அதன் மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும். அதே நேரத்தில், கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட செயற்பாட்டு, பொருளாதார மற்றும் மனிதத் தடைகள் இருந்தபோதிலும், இலங்கை மக்களின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட மற்றும் சர்வதேச ரீதியாக வலியுறுத்தப்பட்ட போருக்குப் பிந்தைய நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை வழங்குவதில் அரசாங்கம் முக்கியமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

சுதந்திரமான உள்நாட்டு நிறுவனங்கள், காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீடுகள் அலுவலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் மற்றும் இலங்கையின் நிலைபேறான அபிவிருத்தி சபை ஆகியன இந்த முயற்சிக்கு முக்கிய உறுதுணையாக உள்ளன.

இந்த நிறுவனங்களின் சுதந்திரமான சட்டபூர்வ ஆணைகளை நிறைவேற்றுவதற்காக நிதி மற்றும் ஏனைய ஆதரவுடன் நாங்கள் அதிகாரம் பெற்றுள்ளோம். மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் குறித்த உள்நாட்டு செயன்முறைகளின் மூலம் ஏற்பட்ட முன்னேற்றம் தொடர்பான வழக்கமான புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவையிலான இலங்கையின் அறிக்கைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்கு நாங்கள் அளித்த பதிலில், பயங்கரவாத தடைச் சட்டத்திலான திருத்தம், பொறுப்புக்கூறல், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதிகளை விடுவித்தல், ஒன்று கூடுவதற்கான சுதந்திரம், கோவிட் தொற்றுநோய் மற்றும் முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் போன்ற பல துறைகள் தொடர்பான சமீபத்திய மாதங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நாங்கள் முன்னிலைப்படுத்தியுள்ளோம்.

சர்வதேச செயற்பாட்டாளர்களைப் பொறுத்தமட்டில், எமது சர்வதேச பங்காளிகளான ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உள்ளூர் மற்றும் சர்வதேசத் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நல்லெண்ணம் மற்றும் ஆலோசனைகளை அரசாங்கம் பெரிதும் மதிப்பதாக நாம் குறிப்பிட்டுள்ளோம். அவர்களுடனான எமது தொடர்ச்சியான தொடர்புகளைத் தொடர்ந்துள்ள அதே வேளையில், இலங்கையுடனான அவர்களது வழக்கமான ஈடுபாட்டையும் ஊக்குவித்துள்ளோம். விஜயங்களை மேற்கொள்ளும் இருதரப்பு உயரதிகாரிகள், ஐக்கிய நாடுகள் சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் விஷேட ஆணையுடையவர்கள் உட்பட பல பரிமாற்றங்களின் போது, நாம் அனைத்து வகையான உள்நாட்டு உரையாடல்களையும் அணுகுவதற்கு வசதிகளை ஏற்படுத்தி, அவர்களது ஊக்கம், ஆலோசனை மற்றும் கரிசனைகளுக்கு திறந்த நிலையில் இடமளித்துள்ளோம்.

அபிவிருத்தி நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பல விடயங்களில் நிறுவப்பட்ட தொடர்பு மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் எமது உள்நாட்டு சிவில் சமூகப் பங்காளிகளுடனான எமது தொடர்புகளை நாம் குறிப்பாக மதிக்கின்றோம். நிலையான அபிவிருத்தி இலக்குகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விடயங்களை அடைந்து கொள்வதற்கான எமது முயற்சிகளில் அவர்களை ஈடுபடுத்தியுள்ளோம். ஒரு பரந்த முனையில், நாம் முன்னோக்கிச் செல்லும்போது எம்முடன் பங்காளியாக ஈடுபடுவதற்காக இலங்கையின் புலம்பெயர் குழுக்களுக்கும் நாம் அழிப்பு விடுத்துள்ளோம்.

மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் நிலைப்பாடு தொடர்பாக, 2021 செப்டெம்பர் மாத சபை அமர்வில் நாம் குறிப்பிட்டது போல, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பொறிமுறைகள் மற்றும் சபையுடன் இலங்கை தனது நீண்டகால ஒத்துழைப்பைத் தொடரும். உள்நாட்டு செயன்முறைகள் மற்றும் நிறுவனங்களின் மூலம் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதற்கான எமது உறுதிப்பாட்டை நாம் வழங்குகின்றோம்.

வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் குறிப்பிட்டது போல, ‘எமது சவால்களை ஒப்புக்கொள்வதில் நாங்கள் திறந்த நிலையில் காணப்படும் அதே வேளை, பொறுப்பான மற்றும் ஜனநாயக அரசாங்கம் என்ற வகையில், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமைகள், சமாதானம் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான முழு அளவிலான பிரச்சினைகளிலும் உறுதியான முன்னேற்றத்தை அடைந்து கொள்வதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம்’.

தீர்மானம் 46/1 இல் உள்ள சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறையானது சபையில் பிளவுக்கு வழிவகுத்தமையானது தேவையற்றதும், உதவியற்றதும் மற்றும் இலங்கையில் அரசியல்மயமாக்கல் மற்றும் துருவமுனைப்புக்கு வழிவகுக்கும் என இலங்கை கருதுகின்றது.

Posted in Uncategorized

முல்லைத்தீவில் 7 ஆயிரம் ஹெக்ரயர் காணியை சுவீகரிக்க முயற்சி-சார்ள்ஸ் நிர்மலநாதன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின் விவசாய மற்றும் பூர்வீக நிலங்களாகவுள்ள 7,092 ஹெக்ரயர் காணியை சுவீகரிக்க முயற்சி செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட வன இலாகா திணைக்களம் முயற்சிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றம்சாட்டியதுடன் இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு வனசீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் சீ.பீ.ரத்நாயக்கவிடம் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற, ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு கோரிக்கை விடுத்த அவர் மேலும் கூறுகையில்,

வன இலாகா திணைக்களம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலங்களை அபகரிக்கின்ற முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக வடக்கு, கிழக்கில் இருக்கின்ற நிலங்களை குறி வைத்து அரசும் வன இலாகவும் மோசமாக செயற்படுகின்றன. இதன் ஒரு நடவடிக்கையாக வன இலாகா திணைக்களத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் 2,749 ஹெக்ரயரும் கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 2,275 ஹெக்ரயரும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 1,764ஹெக்ரயரும் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 530 ஹெக்ரயரும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 286 ஹெக்ரயரும் வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 14 ஹெக்ரயரும்என மொத்தமாக 7,092ஹெக்ரயர் மக்களுடைய விவசாய நிலங்களை, அவர்களின் பூர்விக நிலங்களை சுவீகரிக்க வர்த்தமானி அறிவித்தல் விட முயற்சி எடுக்கப்படுகின்றது.

எனவே இந்த முயற்சியை உடனடியாகநிறுத்த வேண்டுமென வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் சீ.பி. ரத்நாயக்கவிடம் கோரிக்கை விடுக்கின்றேன்’’ எனவும் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிலித்தார்.

Posted in Uncategorized

மட்டக்களப்பில் அமைக்கப்படும் தொழிற்சாலைக்கு சூழலியலாளர்கள் எதிர்ப்பு

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்கைக்குடா பகுதியில் அமைக்கப்படும் தொழிற்சாலை மூலம் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகளை மட்டக்களப்பு மக்கள் எதிர்நோக்கும் நிலையேற்படும் என சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னைக்குடா பகுதியில் ஆடைத் தொழிற்சாலைகளுக்கான நூல் சாயமிடும் தொழிற்சாலைகள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முதலீட்டு வலயம் என்ற பெயரில் இந்திய நிறுவனம் ஒன்றின் மூலம் இந்த சாயமிடும் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது. இந்த தொழிற்சாலை இந்தியாவிலேயே அமைப்பதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கையின் பல பகுதிக்கும் கொண்டுசெல்லப்பட்டு அங்கும் அமைப்பதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் இறுதியாக மட்டக்களப்பில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் பல்வேறு தகவல்கள் ஊடகங்கள் வாயிலாக வெளிவருகின்றபோதிலும் அவையனைத்தையும் தாண்டிய பாரிய ஆபத்துகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்காலத்தில் முகங்கொடுக்க வேண்டிய நிலையேற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக இந்த தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டாலும் சாயத்தினை சுத்திகரிக்கமுடியாது கடலுடன் கலக்கும் நிலையேற்படும் என சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கடற்பரப்பு முற்றாக பாதிக்கப்படும் நிலையேற்படுவதுடன் மீனவர்கள் தொழில் இழக்கும் நிலையேற்படும் எனவும் தெரிவிக்கின்றனர்.

இதற்கு தேவையான நீர் உன்னிச்சை குளத்திலிருந்தே பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் ஏற்கனவே மட்;டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகள் குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் இவ்வாறான தொழிற்சாலைகளுக்கு நீர் வழங்கப்படும் போது பாரிய குடிநீர் தட்டுப்பாட்டை மாவட்டம் எதிர்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இந்த தொழிற்சாலை கழிவுகள் குடிநீரையும் மாசுபடுத்தும் நிலையேற்படுவதுடன் எதிர்காலத்தில் புற்றுநோய் போன்ற நோய்களுக்கும் இப்பகுதி மக்கள் உள்ளாகும் நிலையேற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

மாகாண சபைத் தேர்தல்கள் இந்த வருடம் நடத்தப்படும் – அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா

மாகாண சபைத் தேர்தல்கள் இந்த வருடம் நடத்தப்பட வேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். விரைவில் தேர்தலை நடத்தி ஜனநாயக உரிமைகளை வெளிப்படுத்துவதற்கான தளம் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை மீதான ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுக் கூட்டத்தின்போது இது குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. தேர்தல்கள் ஆணைக்குழு, சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் குறிப்பிட்ட சில சரத்துக்களை உள்ளடக்குமாறு கோரியுள்ளன.

இந்த சந்திப்பின்போது தேர்தல் செலவினங்களைக் குறைப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்’ என்றார்.