இலங்கைக்கு கடன் உதவி கொடுக்கும் போது இந்தியா நிபந்தனை விதிக்க வேண்டும் – ராமதாஸ்

இலங்கைக்கு ரூ.18,090 கோடி கடன் வழங்கும் இந்தியா நிபந்தனை விதிக்க வேண்டும் என வலியறுத்தியுள்ள பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் எஸ்.ராமதாஸ், அதற்கான சில விடயங்களையும் பட்டியலிட்டுள்ளார்.

இது தொடர்பில் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

“வரலாறு காணாத கடன் மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உணவு மற்றும் எரிபொருள் வாங்குவதற்காக ரூ.18,090 கோடி கடன் வசதியை இந்திய அரசு வழங்கியிருக்கிறது. மத்திய அரசின் இம்முடிவு இராஜதந்திர நடவடிக்கை என்றாலும் கூட, இலங்கை அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் செய்வதற்கான சிறந்த வாய்ப்பாக இதை இந்திய அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சீனாவின் பக்கம் சாய்ந்து கொண்டிருந்த இலங்கை அரசை இந்தியாவின் பக்கம் திருப்புவதற்கான இராஜதந்திர நடவடிக்கையாகவே இந்த கடனுதவி பார்க்கப்படுகிறது. ஆனால், கச்சத்தீவு உள்ளிட்ட நிலப்பரப்பையும், கோடிக்கணக்கில் நிதியுதவியையும் பெற்றுக் கொண்டு, பல்வேறு தருணங்களில் இந்தியாவுக்கு துரோகம் செய்த இலங்கை அரசு, இம்முறையாவது நமது உதவியை பெற்றுக் கொண்டு ஆதரவாக இருக்குமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இந்தியாவின் பாதுகாப்பு சார்ந்த இந்த அம்சத்தைக் கருத்தில் கொண்டு, இலங்கையை சீனாவிடம் இருந்து பிரிக்கும் நோக்குடன் கடனுதவி வழங்கும் அதே நேரத்தில், இந்தியாவுக்கு ஆதரவான இலங்கைத் தமிழர்களை அரசியல் ரீதியாக வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ள வேண்டும்” எனவும் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

Posted in Uncategorized

13 ஆம் திருத்தத்தை தமிழ் மக்களின் அரசியல் தீர்வாக ஏற்கவில்லை! ஏற்றுவிட்டதாக அரசியல்கட்சியொன்று மக்களை குழப்புவதாக ரெலோ குற்ச்சாட்டு

தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக 13வது திருத்தச்சட்டத்தை ஏற்றறு விட்டோம் என தமிழ் கட்சி ஒன்று மக்களை தவறாக வழிநடத்த முற்படுவதாக டெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் யாழ் ரெலோ அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ஒரே நிலைப்பாட்டில் உள்ள தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து 13ஐ ஏற்றுவிட்டார்கள் ஒற்றையாடசிக்குள் தமிழர்களை அடகு வைத்து விட்டார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி மக்களை குழப்ப முற்படுகிறது.

தமிழர்களுடைய இனப்பிரச்சனை அரசியல் தீர்வு விடயங்களில் ஒரே நிலைப்பாட்டில் உள்ள தமிழ் கட்சிகளின் தலைவர்கள் தெளிவான கொள்கையுடன் இருக்கிறார்கள்.

நாம் கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து இந்தியாவுக்கு அனுப்பிய அறிக்கையில் 13 அரசியல் தீர்வாக ஏற்கவில்லை இதை மக்களுக்கு தெளிவாகக் கூறுகிறேன்.

சமஸ்டி அடிப்படையிலான வடக்கு கிழக்கு இணைந்த அதிகாரமே தமிழ் மக்களுடைய இனப் பிரச்சனைக்குத் தீர்வாக நாம் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறோம் இப்போதும் அதையே கூறுகிறோம்.

இலங்கையில் அரசியல் யாப்பில் புறப்பட்ட 13வது திருத்தச் சட்டம் நடைமுறை அற்றுக் காணப்படும் நிலையில் அதனை செயற்படுத்து மாறு இந்தியாவுக்கு அழுத்தத்தை வழங்கவே நாம் கூடி முடிவெடுத்தோம்.

13வது திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மாகாணசபை அதன் கீழ் வருகின்ற அதிகாரங்களாக காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் இன்று வரை வழங்கப்படவில்லை.

அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியா பிரதமர் நரேந்திர மோடியிடம் 13க்கு அப்பால் தமிழர்களுக்கு தீர்வு வழங்குவேன் என உறுதி அளித்திருந்தார்.

இந்தியாவுக்கு 13 தொடர்பில் நாம் அழுத்தங்களை வழங்காது இருப்பது இலங்கை அரசாங்கத்துக்கு சாதகமாகி விடும்.

அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள 13 ஐ நடைமுறைப்படுத்துமாறு இந்தியாவுக்கு ஒரே நிலைப்பாட்டில் இருக்கின்ற தமிழ் தேசிய தலைவர்கள் ஒன்றிணைந்து கடிதத்தை அனுப்பி யுள்ளோம்.

இதை சரியாக விளங்கிக் கொண்ட தமிழ் கட்சி ஒன்று தமிழ் மக்களின் அரசியல் தீர்வாக 13ஐ ஏற்று விட்டோம் என கூறி எதிராக மக்களை போராடு வருமாறு ஊடக சந்திப்புகளை நடத்தி வருகின்றனர்.

தமிழ் தேசியம் சார்ந்த தலைவர்கள் ஓரணியில் நிற்கும்போது அழைத்த ஒரு கட்சி மட்டும் வெளியில் நின்று கொண்டு முரண்பட்ட கருத்துக்களைக் கூறுவது ஏதோ ஒரு நிகழ்ச்சி நிரலை செயற்படுத்த முனைகிறார்களா என்ற சந்தேகம் தோன்றுகிறது.

நாம் எமது நிலைப்பாட்டை தெளிவாக கூறுகிறோம் 13வது திருத்தச்சட்டம் தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக அமையாத நிலையில் இருக்கின்ற அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டு முன்னோக்கி செல்வதே எமது நிலைப்பாடாகும்.

ஆகவே தமிழ் மக்களுக்காக கடந்த காலங்களில் வரலாற்றுத் தவறுகளை விட்டவர்கள் மீண்டும் ஒரு தவறை விடாது ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமானால் ஜனாதிபதி மனதை மாற்றிக்கொள்ள வேண்டும் – சிறிதரன்

இராணுவ சிந்தனையிலும், தான் வைத்திருந்த துப்பாக்கி முனைகளிலும்   மட்டும்தான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவின் சிந்தனை இருப்பதாகவும்,  இந்த நாடு நியாயமான அல்லது நீதியான பாதையில் செல்வதற்கு தயாரில்லை என்பதனைத்தான் ஜனாதிபதியினுடைய உரை குறிப்பிட்டுள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் சபையில் தெரிவித்தார்.

இந்த நாடு ஒரு சீரான பாதையில் நேர்த்தியாக செல்ல வேண்டுமென்றால் இந்த நாட்டினுடைய மிக முக்கியமான இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமானால்  முதலில் ஜனாதிபதி தன்னுடைய மனதை  மாற்ற வேண்டும்.

அப்போதுதான்  ஏனைய இனங்களும் மதிக்கப்படும். அவர்களுடைய சுதந்திரமும் பேணப்படும்.

நாடாளுமன்றத்தில் 20 ஆம் திகதி வியாழக்கிழமை  இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான இரண்டாம்  நாள் சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

2019-11-18  ஆம் திகதி  ஜனாதிபதி அனுராதபுரத்திலே முதல் முதலாக தனது பதவியை ஏற்றிருந்தார்.

இந்த நாட்டினுடைய ஜனாதிபதி ,இந்த நாட்டிலே வாழ்கின்ற பல்லின மக்கள்,  குறிப்பாக தமிழர்கள் என்ற ஒரு தேசிய இனத்தினுடையை அடிப்படைகளை தூக்கி கடாசிவிட்டு தன்னுடைய மனதில் கூட அதனை சொல்ல முடியாத ஒரு தலைவராக இருக்கின்றார்.

இந்த நாட்டினுடைய ஜனாதிபதியின் உரை என்பது சகல இன  மக்களையும் அணைத்து செல்கின்ற ,அந்த மக்களை ஒன்றிணைத்து செல்கின்ற,  இலங்கை என்ற நாட்டை கட்டி எழுப்புகின்ற ஒரு மனிதனுடைய,ஒரு தலைவருடைய  உரையாக அது  அமையவில்லை.

மீண்டும் தன்னுடைய இராணுவ சிந்தனை வாதத்துக்குள் ,தான் வைத்திருந்த துப்பாக்கி முனைகளில் மட்டும்தான் அவருடைய சிந்தனை இருப்பதாகவே ஜனாதிபதியின்  பேச்சு அமைந்துள்ளது.

ஆகவே இந்த நாடு  நியாயமான அல்லது நீதியான  பாதையில் செல்வதற்கு தயாரில்லை என்பதனைத்தான் ஜனாதிபதியினுடைய உரை குறிப்பிட்டுள்ளது.

இங்கு எமக்கு பேச நேரம் தருவதில்லை. எமது கருத்துக்களைக்கூற முடியாதுள்ளது .அவ்வாறான ஒரு கொடூரமான அரசுக்குள் தான் நாம் இருக்கின்றோமா என்ற எண்ணம் எமக்கு தோன்றுகின்றது என்றார்.

அத்துடன் தென்னாபிரிக்காவின் கேப்டன் முன்னாள் பேராயர் டெஸ்மன்  டுட்டு,தென்னாபிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலா போன்றவர்களையும்  தென்னிலங்கையர்கள் அறிந்து கொள்ள வேண்டும் .ஆட்சியாளர்கள் அவர்கள் வழி நடக்க வேண்டும் எனவரும் வலியுறுத்தினார்.

‘ஜனாதிபதியின் உரை யானை விழுங்கிய விளாம்பழம் போன்றது’

ஜனாதிபதியின்  உரை யானை விழுங்கிய விளாம்பழம் போன்றது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (20) நடைபெற்ற, ஜனாதிபதியின் அக்கிராசன உரையின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு  உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் ,

நாட்டின் இக்கட்டான சூழ்நிலையில் பாராளுமன்றத்தை ஒத்திவைத்து பாராளுமன்ற நடவடிக்கைகளை நிறுத்தி வைத்த ஜனாதிபதி தனது கொள்கை அறிக்கையில் ஏன் பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார்  என்பதை தெளிவு படுத்துவார்  என எதிர்பார்த்தால் அவர் தனது பழையே கதைகளையே மீண்டும் கூறி சென்றார்.

அவரின் உரை யானை விழுங்கிய விளாம்பழம் போன்றே இருந்தது.அதில் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு இல்லை.

சமையல் எரிவாயு சிலிண்டரை பெற்றுக்கொள்வதற்கான, வரிசை நீண்டுகொண்டே போகிறது.  பால்மா வரிசை நகராமல் நிற்கிறது.  சீமெந்தின் விலை ஆகாயத்தை தொடுகிறது.  அரிசி இப்போது இருநூறு ரூபாய் இன்னும் சில மாதங்களில் 500 ரூபாவைத் தாண்டுமென கணிக்கப்படுகிறது.  மரக்கறிகள் மருந்துப்பொருட்கள் என அனைத்துக்கும் தட்டுப்பாடு, விலைஉயர்வு  ஏன் பலாக்காய்க்கு கூட சிறந்த விலையை இந்த அரசாங்கமே பெற்றுக்கொடுத்துள்ளது.  தொடர்ச்சியான மின்சார துண்டிப்பும் செய்யப்படுகின்றது என்றார்.

இன்னும் சில நாட்களில் கையிருப்பில் உள்ள எரிபொருளும் தீர்ந்துவிட்டால் எரிபொருள் வரிசை ஒன்றையும் எதிர்பார்க்கலாம்.இப்படி நாடே அதாள பாதாளத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கும் போது ஜனாதிபதி சுபீட்சத்தை பற்றி  பேசிக்கொண்டிருக்கிறார் எனத் தெரிவித்த அவர்,  ஜனாதிபதி கூறும் சுபீட்சம் மக்களுக்கானதல்ல அது ராஜபக்ஷ சகோதரர்களுக்கும் அவர்களை சுற்றியுள்ள ராஜ தோழர்களுக்குமான சுபீட்சமாகும் என்றார்.

இந்த பிரட்சினைகளை எல்லாம் எதிர்க்கட்சியான நாம் சுட்டிக்காட்டினால் ஜனாதிபதி கோபம் கொள்கிறார்.  அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் அவரின் ஆட்சியிலேயே நெல்லை  90 க்கு மேல் வாங்கியதாக கூறினார்.  முப்பதாயிரம் ரூபாவுக்கு யூரியா வாங்கி விவசாயம் செய்ததை அவர் மறந்துவிட்டார்  என்றும் கூறினார்.

90 ரூபாய்க்கு நெல்லை விற்ற விவசாயி யாரும் அந்த பணத்தில் மாடி கட்டவில்லை நெல்லை விற்றதும்  அந்த விவசாயியும், சமையல் எரிவாயு, பால்மா வரிசையிலேயே நிற்கிறான் . இதுதான் இப்போது எமது நாட்டு மக்களின் நிலை.

இதை ஜனாதிபதி புரிந்துகொள்ள வேண்டும்.  தமது இயலாமையை மறைக்க பலவீனமானவரே குறைகளை சுட்டி காட்டுபவர்களிடம் கோபம் கொள்வார்கள்.

ஜனாதிபதியால் இந்த இரண்டரை வருடங்களாக முடியவில்லை அவரின் செயற்பாடுகளை பார்த்தல் எஞ்சிய இரண்டரை வருடத்துக்கும் அவரால் முடியாது.  அவர் மொத்தமாக பெயில் என தெரிவித்தார்.

Posted in Uncategorized

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு என்ன? பெப்ரவரிக்கு முன் தெரியப்படுத்துங்கள்; அரசிடம் கோருகிறார் ரணில்

நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதா, அல்லது வேறு ஏதுவும் முறையான தீர்வு உள்ளதா என்பதனை பெப்ரவரி மாதத்துக்குள் அரசு பாராளுமன்றத்துக்கு அறிவிக்கவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற, ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான சபை ஒத்திவைப்புவேளை இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் முன்னர் ஜீ.எஸ்.ரி. மற்றும் வற் வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் ஒரே பொருட்கள் சேவைகள் மீது அறவிடுகின்றனர். ஏதாவது ஒன்றையே அறவிடவேண்டும். அதேவேளை அனைத்து வரிகளையும் அரச வருமான வரி திணைக்களமே அறவிடவேண்டும். ஆனால் இப்போது நிதி அமைச்சு அதனை அறவிடுவது ஏன்?

இன்று பொருளாதாரத்தை பார்த்தால் பாரிய நெருக்கடிகள் உள்ளன. சிறிய வர்த்தகர்கள், குறைந்த வருமானம் உடையவர்களே இதனால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் அரச கடனை பார்த்தால் 2019 ஆம் ஆண்டில் 13,000 பில்லியன் ரூபாவாக இருந்தது. ஆனால் 2021 ஜனவரி முதல் செப்டம்பர் வரையில் அது 17,000 பில்லியனாக அதிகரித்துள்ளது. இரண்டு வருடங்களில் எவ்வாறு 4 ரில்லியனால் அதிகரித்தது என்று கேட்கின்றோம். இந்த இடத்தில் பிரச்சனைகளை பார்க்க முடிகின்றது. அதேபோன்று மொத்த தேசிய உற்பத்தியில் 10 வீதம் கடனாக இருக்கின்றது.

இதேவேளை, அந்நிய செலாவணி மூலம் கடனுக்காக எதிர்வரும் 6 வருடங்களுக்கு ஒவ்வொரு வருடத்திற்கும் 6 பில்லியன் டொலர்களை செலுத்த வேண்டியுள்ளது. பெப்ரவரி மாதத்துக்கு முன்னர் இது தொடர்பில் நிதி அமைச்சர் அறிவிக்கவேண்டும். நாங்கள் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா? அல்லது ஏற்றுக்கொள்ளக் கூடிய மாற்று வழிகளுக்கு செல்வதா? என்று கேட்கின்றேன். இந்தப் பிரச்சனையை தொடர விட முடியாது. இது தொடர்பாக அமைச்சரவையும் தீர்மானத்தை எடுத்து இந்த பாராளுமன்றத்துக்கு அறிவிக்கவேண்டும்.

பல வருடங்களாக இருந்த முறைமைகளை நீக்கியமையால் டொலர் நெருக்கடிகள் ஏற்பட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இலங்கை மீதான நம்பிக்கை இல்லாது போயுள்ளது. இதற்கு குறுகியகால, மத்திய கால மற்றும் நீண்ட கால தீர்வுகள் வேண்டும்” என்றார்.

Posted in Uncategorized

வடக்கு – கிழக்கு எம்.பிக்களின் ஆதரவு ஜனாதிபதிக்கு ஒருபோதும் கிடையாது- கஜேந்திரகுமார் எம்.பி.

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இனவாத நிகழ்ச்சி நிரலுக்கு வடக்கு-கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ஆதரவு தரமாட்டார்கள்” என குறிப்பிட்டார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

ஜனாதிபதி கோட்டாபய, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற 69 லட்சம் வாக்குகளை காட்டிலும் வடக்கு – கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்துள்ள உறுப் பினர்கள், தமிழ் மக்களின் அதிக வாக்குகளை பெற்றுள்ளார்கள் என் றும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில்   உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்- கடந்த தேர்தலில் ஜனாதிபதி கோட் டாபய ராஜபக்ஷ பெற்ற தென்னிலங்கை யின் வாக்குகளை பொறுத்தவரை, அது மொத்த வாக்குகளில் 60 சதவீதமாகும். எனினும் வடக்கு-கிழக்கில் தமிழ் மக் களின் சமஷ்டி தீர்வுடன் கூடிய தமிழ் தேசத்துக்காக தமிழ்க் கட்சிகள் பெற்ற வாக்குகள் 75 சதவீதத்துக்கும் அதிகமான தாகும். அதிலும் வடக்கு-கிழக்கில் தெரிவாகி, அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஐந்து பேரில் மூன்று பேர் தமிழ்த் தேசத்தின் உரிமைகளுக் காகவே வாக்குகளை கேட் டனர்.

இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந் தாவின் ஒவ்வொரு தேர்தல் சுவரொட்டி யிலும் தமிழ் மக்களுக்கான உரிமைகள் தொடர்பான கோரிக்கைகள் அடங்கியி ருந்தன. எனவே பல்லாயிரக்கணக்கான மக்க ளின் உயிர்களை இழந்த நிலையில் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமிழ் மக்கள் அளித்த ஆணையை கைவிட்டு, கோட்டாபயவின் இனவாத நிகழ்ச்சி நிர லுக்கு வடக்கு-கிழக்கின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ஆதரவு தரமாட் டார்கள். இந்தநிலையில் ஜனாதிபதியும், தமிழ் மக்களின் ஆணையை கைவிட்டு அரசாங் கத்தின் இனவாத கொள்கைக்கு ஆதரவளிப்பார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது” என்றார்.

நியாயமான தீர்வை பெற்றுத் தருவது பிரிட்டன் கடமை; அந்த நாட்டின் அமைச்சரிடம் சம்பந்தன் தெரிவிப்பு

“இந்த இலங்கைத் தீவில் தமிழர்கள் தமது தாயகத்தில் தனித்துவ இறைமையுடைய இனமாக வாழ்ந்தார்கள். அந்தத் தமிழர் தேசத்தை சிங்கள தேசத்துடன் இணைத்தவர்கள் பிரிட்டிஷ் கொலனித்துவ ஆட்சியாளர்கள்தான். ஆகவே, அந்த இணைப்பால் ஏற்பட்ட தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு நின்று, நிலைத்து, நீடிக்கக் கூடிய, நியாயமான தீர்வு ஒன்றைப் பெற்றுத்தருவது பிரிட்டனின் கடமையும் பொறுப்புமாகும்”

இவ்வாறு கொழும்புக்கு வருகை தந்திருக்கும் பிரிட்டனின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான அமைச் சர் தாரிக் அஹமட் பிரவுவிடம் நேரில் தெரிவித்திருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

இரா.சம்பந்தனும்,   எம்.ஏ.சுமந்திரனும் நேற்று கொழும்பில் அவரைச் சந்தித்து விரிவான பேச்சுக்களில் ஈடுபட்டனர். அப்போதே இந்தக் கருத்தை சம்பந்தன் வலியுறுத்திக் கூறினார். நடந்த சம்பவங்களுக்கான பொறுப்புக் கூறல், தற்போதைய மனித உரிமைகள் நிலைமை, அரசியல் தீர்வு ஆகிய மூன்று அம்சங்கள் குறித்தே சம்பந்தன் இந்தச் சந்திப்பில் அதிகம் வலியுறுத்தினார்.

இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களுடனான சந்திப்புக ளில் தாமும் இந்த மூன்றையுமே வலியுறுத்தினார் என்றும் – அவற்றை ஆக்கபூர்வாக அணுகுவதற்குத் தாங்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று அவர்கள் கூறியமையைத் தாம் வரவேற்றார் என்றும் – கொழும்புக்கு வருகை தந்த பிரிட்டிஷ் அமைச்சர் தாரிக் அஹமட் பிரபு சம்பந்தனிடம் தெரிவித்தார்.

இந்த விடயங்களில் முன்னேற்றகர மான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ப டும் என்ற கொழும்பின் வாக்குறுதி சொல்லிலும், செயலிலும் ஒரே மாதிரியாக நடை முறைப்படுத்தப்படுவதைத் தாங்கள் பார்த்திருக்கின்றார்கள் என்று தாம் இலங் கைத் தலைவர்களிடம் கூறினார் எனவும் அமைச்சர் தாரிக் அஹமட் பிரபு, சம்பந்தன் – சுமந்திரன் குழுவிடம் குறிப்பிட்டார்.

கொழும்பு – 07 இல் உள்ள பிரிட்டிஷ் தூதுவரின் இல்லத்தில் நடைபெற்ற இந் தச் சந்திப்பின்போது இலங்கைக்கான பிரட்டிஷ் தூதுவர் சாரா ஹூல்டன் அம்மை யாரும் பங்குபற்றினார்

Posted in Uncategorized

எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு எடுக்க வேண்டும் – எம்.கே.சிவாஜிலிங்கம்

2025 இலும் சிம்மாசன உரை பற்றி கதைத்துக் கொண்டிருக்கப் போகின்றோம் என்றால் எங்களை போன்ற மடையர்கள் இருக்க முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ் ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடைய சிம்மாசன உரை சம்பந்தமாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பலர் பலவாறு விமர்சித்திருந்தார்கள். இதை நாங்கள் எத்தனை நாளைக்கு கூறிக் கொண்டிருக்க போகின்றோம். எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு எடுக்க வேண்டும்.

அதிலே சில விடயங்களை பொதுவாக நாட்டுக்கு சொல்லியிருக்கின்றார். நாடு பூராகவும் எழும்பிய கொந்தளிப்பு காரணமாக முதல் தடவையாக தனக்கு வாக்களிக்காத மக்களுக்கும் வேலை செய்ய வேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார் என்றே நாங்கள் கூற வேண்டும்.

இதை விட தொழில்நுட்பம், நீர்ப்பாசனம் பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவர் கூறியிருந்தார். காணாமல் போனோர் விவகாரம் எல்லோருக்கும் பொதுவானது என்று கூற விழைகின்றார்.

படையினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் நீதி கிடைக்க வேண்டும். ஆனால் அவற்றுக்கான நீதியை இலங்கை அரசாங்கத்தால் வழங்க முடியாது. ஆகவே இலங்கை அரசாங்கம் இதனை ஏற்றுக் கொண்டு சர்வதேச நீதி விசாரணையை நடாத்த வேண்டும். அதை விடுத்து திருப்பித் திருப்பி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது.

பொருளாதார ரீதியாக சில விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்கிறார். எத்தனை பேர் ஒத்துழைத்தாலும் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்வி எழுகின்றது. இதுவரை ஒத்துழைத்தவர்களால் எதை சாதிக்க முடிந்தது.

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதி மூச்சும் விட்டு இருக்கவில்லை. மூச்சு விட்டிருந்தால் தான் நாம் ஆச்சரியப்பட்டு இருக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி பேச ஆயத்தமாக இருப்பதாக கூறப்படுகிறது.

புதிய அரசியலமைப்புக்கான குழுவை ஜனாதிபதி நியமித்து இருந்தார். அந்த குழுவுக்கு அரசியல் கட்சிகள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை சமர்ப்பித்திருந்தார். ஏறக்குறைய அது சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு சென்று வருமா வராதா என்ற நிலையில் காணப்படுகின்றது. இதுவே நல்லாட்சியிலும் நடந்தது. இதற்கு முதலில் அல்லவா தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும். இனிமேல் அழைத்து என்ன பேசப் போகிறீர்கள்.

பிரதான தமிழ் தேசிய மூன்று அணிகளில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கூட்டணி கூட்டு இணைப்பாட்சியையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சமஸ்டியையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சமஸ்டியையும் கோருகின்றது.

ஆளால் புதிய அரசியலமைப்பை கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை அறவே இல்லை. இந்தச் சூழ்நிலையில் இனப்படுகொலை உட்பட போர்க்குற்றங்களுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக தீர்வு காணப்பட வேண்டும்.

இதற்கு மூலவேரான தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பல நாடுகளில் நடைபெற்றது போல பொதுசன வாக்கெடுப்பு நடத்த வேண்டியது கட்டாயம்.

இதை விடுத்து 2025இலும் சிம்மாசன உரை பற்றி கதைத்துக் கொண்டிருக்கப் போகின்றோம் என்றால் எங்களை போன்ற மடையர்கள் இருக்க முடியாது என்றார்.

ஒரு வளத்தினைக் கொண்டுவந்து இன்னுமொரு வளத்தினை அழிப்பதை அனுமதிக்க மாட்டோம் -ரெலோ செயலாளர் ஜனா

‘தொழிற்சாலைகள் வருவதை நாங்கள் ஒருபோதும் எதிர்க்க மாட்டோம். ஆனால் ஒரு வளத்தினைக் கொண்டு வந்து இன்னுமொரு வளத்தினை அழிப்பதை அனுமதிக்க மாட்டோம்’ என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தம் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு –ஏறாவூர் புன்னக்குடாவில் அமைக்கப்படவுள்ள தொழிற்சாலை தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பிக் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் சென்றிருந்தார்.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் குறித்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருவது குறித்தான தகவல்கள் அங்கு கிடைத்ததுடன் அது தொடர்பில் உயர் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு கலந்துரையாடினார்.

குறித்த இடத்தில் வரவிருக்கும் தொழிற்சாலையின் கழிவினை சுத்திகரித்து கடலினுள் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவே இக் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அதனால் சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லையெனவும் அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டது. எனினும் குறித்த தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டாலும் கடலுடன் கலக்குமானால் கடல்வளம் பாதிக்கப்படும் சூழ்நிலையேற்படும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம், “மட்டக்களப்பு புன்னக்குடா கடற்பகுதியில் மர்ம குழாய்கள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் மர்மம் விளங்கவில்லையென ஓரிரு நாட்களில் செய்திகளில் பார்த்தோம்.அதனை நேரடியாக கண்காணிப்பதற்காக இந்த பகுதிக்கு விஜயம்செய்தேன்.நாங்கள் இதற்குள் நுழையும் நுழைவாயிலில் இராணுவமுகாம் ஒன்று அமைக்கப்படுகின்றது.

குழாய்கள் கடலுக்குள் சுமார் 200மீற்றர் தூரத்திற்கு புதைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் அதிகாரிகளுடன் பேசினேன். தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பெயர்ப்பலகை இடப்பட்டுள்ளது.சுமார் 13கோடிரூபா பெறுமதியான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புன்னக்குடா பகுதியில் சுமார் 200ஏக்கருக்கு அதிகமான பகுதி முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஆடைத்தொழிற்சாலைக்கு மேலாக நூல்களுக்கு வர்ணம் சேர்க்கும் தொழிற்சாலையொன்றும் நிர்மாணிக்கப்பட வுள்ளதாக அறியமுடிகின்றது.

இது தொடர்பில் பிரதேச செயலாளரிடம் கேட்டபோது அவரும் இதனை உறுதிப்படுத்தினார். தொழிற்சாலைகள் வருவதை நாங்கள் வரவேற்கின்றோம்.அந்த தொழிற்சாலைகள் இன்னொரு வளத்தினை கொடுத்து ஒரு வளத்தினை அழிப்பதாகயிருக்ககூடாது.மட்டக்களப்பு மாவட்டத்தில் பனை அபிவிருத்திசபை மற்றும் பனை உற்பத்தியாளர்களுக்கான பனை மூலப்பொருட்களை வழங்கும் முக்கிய பகுதியா இதுவுள்ளது.அதிகளவான பனைமரங்களைக்கொண்ட பகுதி.அந்த பனை மரங்கள் அழிக்கப்படக்கூடாது” என்றார்.

Posted in Uncategorized

போர் முடிந்துவிட்டது உண்மைதான் ஆனால் சமாதானம் பிறக்கவில்லை! சித்தார்த்தன்

” 2009 இல் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதும் – சமாதானம் மலர்ந்துவிட்டதாக ஜனாதிபதி கூறினார். ஆம். போர் முடிந்துவிட்டது உண்மைதான். ஆனால் சமாதானம் பிறக்கவில்லை. அதேபோல போர் ஏற்பட்ட காரணமாக அமைந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படவில்லை. இந்நாட்டில் நிலையான சமாதானமும், பொருளாதார வளர்ச்சியும் ஏற்பட வேண்டுமெனில் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு கௌரவமானதொரு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான த. சித்தார்த்தன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கை விளக்கஉரை தொடர்பான சபைஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையில் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினை சம்பந்தமாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. கொள்கைகளை ஓரமாக வைத்துவிட்டு தமது செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருந்தார். எமது கொள்கையென்பது எங்கள் மக்களின் அபிலாஷைகளையே பிரதிபலிக்கின்றது.

இனப்பிரச்சினைக்கு நியாயமானதொரு அரசியல் தீர்வு வேண்டும், அந்த தீர்வு சமஷ்டி அடிப்படையில் அமைய வேண்டும் என எமது மக்கள் தெளிவாக எடுத்துரைத்துவருகின்றனர். நாடு சுதந்திரம் பெற்ற காலம் முதல் அதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு ஆணை வழங்கிவருகின்றனர். எனவே, இது ஓரங்கட்டக்கூடிய விடயம் அல்ல.

எமது பகுதிகளுக்கு அபிவிருத்தி என்பதும் அவசியம். அந்த விடயத்தை நாம் மறுக்கவில்லை. அதைவிடவும் அரசியல் தீர்வே அடிப்படையாக உள்ளது.

கொரோனாவால் பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக கூறுகின்றனர். இதற்கு கொரோனாவும் ஓர் காரணம். ஆனால் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமையும், அதனால் ஏற்பட்ட யுத்தம் உள்ளிட்ட காரணங்களால்தான் இந்நாட்டில் பொருளாதாரம் மேம்படவில்லை. பொருளாதார பின்னடைவுக்கு மூலக்காரணியே இந்த இனப்பிரச்சினைதான். பண்டா – செல்வா காலம் தொட்டு பல பேச்சுகள், போராட்டங்கள் என பல விடயங்கள் இடம்பெற்றுள்ளன. இருந்தும் நியாயமான தீர்வு இல்லை. அந்த தீர்வை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்.

போர் முடிவடைந்திருந்தாலும் சமாதானம் வந்துவிட்டதாக கூறமுடியாது. போர் ஏற்படுவதற்கு வழிசமைத்த காரணிகள் இன்னும் அவ்வாறே உள்ளன. இதற்கு சரியான பரிகாரம் தேட வேண்டும். புதிய அரசமைப்பு இயற்றப்படும் என ஜனாதிபதி சொல்கின்றார். அதன் ஊடாகவேனும் நிலையான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்.” – என்றார்.