பிரபாகரனின் கல்வி அறிவைப் பற்றி கதைக்கும் பொன்சேகாவிற்கு சஜித்தின் படிப்பறிவு தொடர்பாக தெரியுமா? – சிவாஜி கேள்வி

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கல்வி அறிவைப் பற்றி கதைக்கும் சரத் பொன்சேகாவிற்கு தமது கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் படிப்பறிவு தொடர்பாக தெரியுமா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பினார்.

சரத் பொன்சேகா விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பாக தெரிவித்த கருத்து குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், சரத் பொன்சேகா என்பவர் இரட்டை வேடமாக செயற்படுகின்ற ஒருவர். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்தோர் ஏனைய விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இருந்தவர்கள் படிப்பறிவு அற்றவர்கள் என்ற ஒரு கருத்தினை பதிவு செய்துள்ளார்.

நான் அவருக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால் இலங்கையினுடைய தலைவர்களாக, பிரதமராக இருந்தோர் மற்றும் ஏனையோர் எட்டாம் ஆண்டு பத்தாம் ஆண்டு படித்தவர்கள். பல்கலைக்கழகப் படிப்பு அல்லது பட்டப் படிப்பினை முடித்தவர்களல்ல. ஆனால் அனைவருமே சாதாரண மட்டத்திலிருந்து தலைவர்களாக வந்தவர்கள். எனவே இவ்வாறு பல உதாரணங்களைக் கூற முடியும்

ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தன்னுடைய 15ஆவது வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் இணைந்துவிட்டார். அவர் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்துவிட்டு தோற்றவில்லை.

அதேபோல ஏனைய இயக்கங்களினுடைய தலைவர்களையும் எடுத்துப் பார்த்தால் அவர்களும் உயர் படிப்புகளை படித்திருக்கவில்லை. ஆனால் அனுபவங்களின் மூலம் செயற்பட்டவர்கள்.

விடுதலைப் புலிகளின் தலைவர் ஒரு நடைமுறை அரசை ஒரு முப்படையினை கொண்டு வழிநடத்தியவர். குறிப்பாக ஜெயசிக்குறு ராணுவ நடவடிக்கையை ஓயாத அலை என்னும் முறியடிப்பு சமர் மூலம் முறியடித்த பெருமை பிரபாகரனையே சேரும்.

எனவே அவ்வாறான திறமைகளை புரிந்தவரை இரட்டைவேடம் போடும் பொன்சேகா போன்ற நடிகர்கள் படிக்காதவர் என்று கூறும் அளவுக்கு அவர் எளிதானவர் அல்ல.

இவருடைய கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸவின் கல்வி நிலை என்ன என்று தெரியுமா? அவருடைய கல்வி நிலை பற்றி பொன்சேகா அறிய வேண்டும். அது தொடர்பிலும் பொன்சேகா தனது கருத்தினை கூற வேண்டும்.

2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் போது சரத் பொன்சேகா இவ்வாறான கருத்துக்களை கூறி இருக்கலாமே? ஏன் அவ்வாறு கூறவில்லை. அவர் ஒரு நடிகர். இரட்டை வேடம் போடும் நபர் எனவேதான் அவர் தற்போது தென்பகுதி மக்களின் வாக்குகளை சூறையாடுவதற்காக சில கதைகளை கூறி வருகின்றார். நாங்கள் இன்று மகிழ்கின்றோம். ஏனென்றால் இவ்வாறான ஒரு வரை ஜனாதிபதியாக நியமித்திருந்தால் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்போம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதியரசர் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதியரசராக விக்கும் அதுல களுஆராச்சி இன்று (24) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் தேவிகா அபேரத்ன ஓய்வுபெற்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான விக்கும் அதுல களுஆராச்சி கொழும்பு சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்று சட்டத்துறையில் பிரவேசித்தார்.

விக்கும் அதுல களுஆராச்சி தனது 33 வருட சேவையில் 27 வருடங்கள் நீதவானாக, மாவட்ட நீதிபதியாக, குற்றவியல் மேல் நீதிமன்றம் மற்றும் சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றியுள்ளார்.

Posted in Uncategorized

வௌிநாட்டு பணியாளர்கள் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

வெளிநாட்டில் தொழில் புரிகின்ற இலங்கையர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைப் பரிசீலனையிற்கொண்டு, உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் வேறு முறைசார்ந்த வழிகள் ஊடாக அனுப்பப்பட்டு இலங்கை ரூபாவாக மாற்றப்படுகின்ற அத்தகைய வெளிநாட்டில் தொழில்புரிபவர்களினால் அனுப்பப்படும் பணத்திற்காக “தொழிலாளர்களின் உள்முகப் பணவனுப்பல்கள் மீதான ஊக்குவிப்புத் திட்டம்” என்ற திட்டத்தின் கீழ் கொடுப்பனவு செய்யப்படும் ஐ.அ.டொலர் ஒன்றிற்கான ரூ.2 இனைக் கொண்ட ஊக்குவிப்புத் தொகைக்கு மேலதிகமாக அவ்வாறு அனுப்பும் பணத்திற்காக மேலும் ரூ.8 வழங்குவதை 2022.01.31 வரை நீடிப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

2021 டிசெம்பர் காலப்பகுதியில் இதுவரையிலும் வெளிநாட்டில் தொழில்புரிபவர்களின் பணவனுப்பல்களில் அவதானிக்கப்பட்ட சாதகமான முன்னேற்றங்களுக்கு பதிலிறுத்தும் விதத்திலேயே ஐ.அ.டொலர் ஒன்றிற்கு ரூ.10 கொண்ட இம்மேலதிக ஊக்குவிப்பினை தொடர்ந்தும் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டில் தொழில்புரிகின்ற இலங்கையர்கள், பணப் பரிமாற்று நிறுவனங்கள் அத்துடன்/ அல்லது வங்கிகள் ஊடாக இலங்கைக்கு பணம் அனுப்புகின்ற போது அவர்களுக்கு ஏற்படுகின்ற பரிமாற்றுச் செலவின் வரையறை செய்யப்பட்ட மட்டமொன்று வரை ஏற்றுக்கொள்வதற்கும் இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, வெளிநாட்டில் தொழில்புரிகின்ற பாரிய எண்ணிக்கையிலானோர் எவ்விதக் கட்டணமுமின்றி தமது பணத்தை இலங்கைக்கு அனுப்பக்கூடியதாகவிருக்கும். தொடங்கும் திகதி உள்ளடங்கலாக இது தொடர்பிலான தொழிற்பாட்டு அறிவுறுத்தல்கள் இலங்கை மத்திய வங்கியினால் விரைவில் வழங்கப்படும்.

Posted in Uncategorized

சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா இல்லையா? – ஜனவரி 3 இறுதித் தீர்மானம்

நாட்டின் நிதி நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு அமைச்சரவையில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ள போதிலும், அரசாங்கத்திற்குள் ஒரு சில மாற்றுக்கருத்துகள் நிலவுகின்றன.

இதனால் எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி கூடும் அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அமைச்சரவை மட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 ஆம் திகதி கூடும் அமைச்சரவை கூட்டத்திற்கு மத்திய வங்கி ஆளுநர் மற்றும் திறைசேரி செயலாளர் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நிதி நெருக்கடி நிலைமைகள் மற்றும் டொலர் பற்றாக்குறை காரணமாக நாடு எதிர்கொண்டுவரும் சிக்கல்களை கையாள சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதே சிறந்த தீர்வாக அமையுமென பொருளாதார நிபுணர்கள், பொருளாதார நிபுணத்துவம் பெற்ற ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் வலியுறுத்தி வருகின்ற நிலையில் அரசாங்கம் இந்த விடயத்தில் உறுதியான தீர்மானமொன்றை எடுக்காது தடுமாறி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

தற்போதைய நிலைமையில் நாம் பெறவேண்டியவற்றை பேசுவதற்கான ஒரு தளம் தேவை. அதற்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வடமாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

என்னுடைய அனுபவத்தை பொறுத்தவரை மாகாணசபை கூடிப் பேசுவதற்கான ஒரு கட்டமைப்பு. மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.

வவுனியா வடக்கு பிரதேச சபை போல மாகாண சபையும் மாறலாம். புதிய அரசியல் யாப்பில் சில சமயங்களில் மாகாண சபையை இல்லாமல் செய்து முழுமையான ஒற்றையாட்சி யாப்பு உருவாகுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகிறது.

மாகாண சபை முறை தான் தீர்வென நாங்கள் கூறவில்லை. அது ஒரு அடிப்படை. ஆனால் ஒரு சிலர் மாகாணசபையை ஆரம்பப் புள்ளியாகவே ஏற்றுக்கொள்ளமாட்டோம் எனக் கூறுகின்றார்கள். தற்போதைய நிலைமையில் நாம் பெறவேண்டியவற்றை பேசுவதற்கான ஒரு தளம் தேவை. அதற்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் சீனா கால் பதிப்பது தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நிலை என்பது இந்தியாவுக்கு தெரியும். அதை கையாள வேண்டியது இந்திய தரப்பு. எங்களை பொறுத்தவரை இந்த விடயத்தை தீர்மானிக்கும் பொறுப்பில் நாங்கள் இல்லை.சீனாவின் செயற்பாட்டில் எமக்கு உடன்பாடில்லை என்பதை நாங்கள் தெளிவாக சொல்கின்றோம். அதற்கு மேலாக இது இரு நாடுகளுடன் சம்பந்தப்பட்ட விடயம் என்றார்.

Posted in Uncategorized

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில் நிச்சயம் பங்கேற்கும்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில், தமிழ்பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டத்தில் அது நிச்சயம் பங்கேற்கும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலை சி.எல்.எவ் வளாகத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ” தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டத்தில் பங்குபற்றுவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா” என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் ஜீவன் தொண்டமான் மேலும் கூறியவை வருமாறு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அதற்கு அரசியலும் காரணமாக இருக்கலாம். சம்பந்தன் ஐயா மூத்த அரசியல்வாதி. அவரை நாம் மதிக்கினறோம். மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் காலத்திலும் எமக்கு தொடர்பு இருந்தது.

எமக்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில் அந்த வேலைத்திட்டத்தில் பொதுநலன் இருப்பின் பங்கேற்போம். எமக்கு அழைப்பு விடுக்கப்படாவிட்டாலும் கூட எல்லோரும் ஓரணியில் இணைந்துள்ளமை மகிழ்ச்சி என்றார்.

Posted in Uncategorized

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் ஐ.நா.வின் தலையீட்டை முற்றாக எதிர்க்கின்றோம் – ஜீ.எல்.பீரிஸ்

ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கை சுமுகமாக பயணிக்கும். எனினும் நாட்டின் உள்ளக விவகாரங்களிலான அதன் அதிகமான தலையீடுகளை தாம் எதிர்ப்பதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

17 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவர்களை சந்தித்த போதே வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் , புதிதாக நியமனம் பெற்ற அனைத்து தூதுவர்களும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சகல நாடுகளுடனும் இலங்கை அரசாங்கம் வலுவான மற்றும் கணிசமான உறவுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு எதிர்த்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழான வெளியுறவுத் திட்டத்தின் போது, ஆபிரிக்க கண்டத்தில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என இலங்கை உணர்ந்தது.

ஆபிரிக்க நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்துவதற்காக திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் உள்ள தற்போதைய அரசாங்கம் ஆபிரிக்க நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்கி, ஆபிரிக்க ஒன்றியத்துடன் உறவுகளை ஒருங்கிணைப்பதற்கு எதிர்பார்க்கிறது.

தற்போதைய அரசாங்கத்தால் திட்டமிட்ட நாட்டின் கட்டமைப்புத் திட்டங்கள், முன்னுரிமைகள் மற்றும் கட்டமைப்புக்கள் கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்டிருப்பினும் கூட, நாடு கணிசமான வெற்றியை அடைந்துள்ளன. 30 வயதிற்குட்பட்ட 90 வீதமானோருக்கு இரண்டு தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளன. தற்போது நாட்டில் பூஸ்டர் தடுப்பூசிகளும் வழங்கப்படுகிறது என்றார்.

நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை பாதிக்காது, மக்கள் தொடர்ந்தும் தொழில் புரிவதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்தத் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட சூழலுக்கு ஏற்ப தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை உருவாக்கும் ஆடைத்தொழில் போன்ற பொருட்களின் தன்மையை மாற்றிய தனியார் துறையின் பின்னடைவு குறித்து அமைச்சர் தூதுவர்களுக்கு சுருக்கமாக விளக்கினார்.

பணம் அனுப்புதல் குறித்து குறிப்பிட்ட அமைச்சர் , வெளிநாடுகளில் வாழும் பெரும் எண்ணிக்கையிலான இலங்கையர்கள் தமது சொந்த நாட்டிற்கு திரும்பி வருவதால், பணம் அனுப்பும் நடைமுறை பாதிக்கப்பட்டுள்ளதாக ஒப்புக் கொண்டார். பல நாடுகளுடனான அரசாங்கங்களுடன் அரசாங்கம் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை 30 வருடகால மோதலினால் அழிக்கப்பட்டதாக விளக்கிய வெளிநாட்டு அமைச்சர், அத்தகைய அளவிலான மோதல்கள் எச்சங்களை விட்டுச் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டார். ஏனைய நாடுகள் மீட்சியடைய பல தசாப்தங்கள் எடுத்ததாகவும், எஞ்சிய பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக இலங்கை ஒவ்வொரு முயற்சியையும் முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மோதல்களினால் எஞ்சிய பிரச்சினைகளை சமாளிப்பதில் பணியாற்றும் காணாமல் போனோர் அலுவலகம், விசாரணை ஆணைக்குழுக்கள், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற இலங்கை அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட வழிமுறைகள் குறித்து குறிப்பிட்டார்.

அதிகாரமளித்தல் மற்றும் பாலின சமத்துவத்திற்கான இலங்கையின் உறுதிப்பாடு தொடர்பில் குறிப்பிட்ட அமைச்சர் , மனித உரிமைகள் ஆணைக்குழுவானது உயர் நீதிமன்றத்தின் முன்னாள் பெண் நீதியரசரால் தலைமை தாங்கப்படுவதாகவும், தீர்மானங்களை மேற்கொள்வதில் அதிகமான பெண் பிரதிநிதித்துவத்தை நோக்கி இலங்கை பணியாற்றுவதாகவும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கை சுமுகமாக பயணிக்கும். எனினும் நாட்டின் உள்ளக விவகாரங்களிலான அதன் அதிகமான தலையீடுகளை எதிர்த்ததாகவும் அமைச்சர் இதன் போது தெரிவித்தார். இலங்கைக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக தரவுகளை சேகரிக்க வேண்டும் என்பதே ஐ.நா. வின் ஒரே நோக்கமாதலால், அதனால் ‘விசேட வழிமுறை’ அமைக்கப்படுவதை அமைச்சர் எதிர்த்தார். இந்தக் குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கான எந்தவொரு தரவும் ஆதாரமாக அமையவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களின் புரிந்துணர்வு மற்றும் சர்வதேச மேடைகளில் இலங்கைக்கான ஆதரவு ஆகியவற்றிற்கு அமைச்சர் அழைப்பு விடுத்தார். ஒரு தனிப்பட்ட நாட்டின் கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகளை நிலைநிறுத்தும் தீர்வுகளை உருவாக்குவதற்கு உள்ளூர் நிறுவனங்களுக்கு இடமும் நேரமும் வழங்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

Posted in Uncategorized

நீதி அமைச்சர் பதவியிலிருந்து அலி சப்ரி நீக்கப்பட வேண்டும் – ஞானசார தேரர்

நீதி அமைச்சர் பதவியிலிருந்து அலி சப்ரி உடனடியாக நீக்கப்பட வேண்டும் என ஒரே நாடு – ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அலி சப்ரி நீதி அமைச்சர் பதவியில் இருக்கும் வரையில் சஹ்ரான் செய்த குற்றங்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் தலைமைத்துவம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளதுடன், நீதி அமைச்சர் உள்ளிட்ட ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள நிலையில் அதற்குப் பதில் தெரிவிக்கும்போதே ஞானசார தேரர் இவ்வாறு கூறியுள்ளார்.

Posted in Uncategorized

ஈரானுக்கு ‘தேயிலை’ கொடுத்து கடனடைக்க முஸ்தீபு

ஈரானிடம் எண்ணை பெற்ற கடன் 250 மில்லியன் டொலரை இலங்கையிலிருந்து தேயிலை ஏற்றுமதி செய்து அடைப்பதற்கு அரசு முயன்று வருகிறது.

மாதாந்தம் 55 மில்லியன் பெறுமதியான தேயிலை ஏற்றுமதி செய்து குறித்த கடனை முடிக்கவுள்ளதாக அமைச்சது ரமேஷ் பத்திரன தெரிவிக்கிறார்.

2022ம் வருடம் அரசாங்கம் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏழுமலையானை தரிசிக்க இந்தியா சென்றார் பிரதமர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, இன்று (23) முற்பகல் திருப்பதி விமான நிலையத்தை சென்றடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விஜயத்தின் போது திருப்பதி ஏழுமலையான் தரிசனத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஈடுபடவுள்ளார்.

பிரதமருடன் அவரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஸவும் இந்தியாவிற்கு சென்றுள்ளார்.

நாளை வௌ்ளிக்கிழமை வெங்கடேஸ்வர சுவாமி தரிசனத்தில் பிரதமர் ஈடுபடவுள்ளதுடன், அதற்கான ஏற்பாடுகளை திருமலை, திருப்பதி தேவசம் போர்ட் முன்னெடுத்துள்ளது.