புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியீடு

நவம்பர் மாதம் 16 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை அமுலுக்கு வரும் வகையிலான சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (15) வெளியிட்டார்.

கொவிட் தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த சுகாதார வழிகாட்டுதல்களைப் முறையாக பின்பற்றுமாறு பொதுமக்களிடம் வைத்தியர் அசேல குணவர்தன இதனூடாக கேட்டுக் கொண்டுள்ளார்.

இயன்றளவு வீட்டிலேயே இருக்குமாறு மக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கமைய,  * க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர மேலதிக வகுப்புகளுக்காக அந்த வகுப்புகள் நடைபெறும் இடத்தின் கொள்ளளவில் 50% வரை அனுமதிக்கப்படுகிறது.

* கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு பரீட்சைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

தடையையும் மீறி வெகுஜனப் போராட்டம் நடக்கும்

பொது மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், ஐக்கிய மக்கள் சக்தி,
நாளை செவ்வாய்கிழமை (16) தனது திட்டமிட்ட வெகுஜனப் போராட்டத்தை
முன்னெடுக்க உள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கான முதல் படியாக
இந்த போராட்டம் இருக்கும் என்றும் அவர்கள்  தெரிவித்தனர்.

தடையை மீறி செவ்வாய்க்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள போராட்டத்தை தமது
கட்சி முன்னெடுக்கும் என்று, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார
ஊடகவியலாளர் சந்திப்பில்  தெரிவித்தார்.

நாளைய போராட்டத்தை நடத்தும் திட்டத்தை நாங்கள் அறிவித்ததையடுத்து, வெகுஜன
போராட்டத்தை தடுக்கும் வகையில் அவசரமாக வர்த்தமானி அறிவித்தல்
வெளியிடப்பட்டது என்றும் சுகாதார வழிகாட்டுதல்களை நிச்சயமாகக் கடைபிடித்து
எங்கள் போராட்டத்தை நடத்துவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முகக்கவசம் அணிந்து வருமாறும், சமூக இடைவெளியை பேணுமாறும்
எதிர்ப்பாளர்களிடம் நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம்  என்று மத்தும பண்டார
தெரிவித்தார்.

இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்களை ஒன்று திரட்டுவதற்கு ஹைட் பார்க் திடல்
பயன்படுத்துவதற்கு முன்னர் வழங்கப்பட்ட அனுமதியை கொழும்பு மாநகர சபை
திரும்பப் பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன குற்றம்
சுமத்தியுள்ளார்.

கொழும்பு நகருக்குள் நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்களை ஒன்று சேர்ப்பதற்காக
முன்னர் எங்களுக்கு வழங்கப்பட்ட ஹைட் பார்க் மைதானத்தை மநகர சபையின் சுகாதார
அதிகாரிகள் திரும்பப் பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

அனர்த்தங்களால் 17 மாவட்டங்கள் பாதிப்பு

சீரற்ற வானிலையை அடுத்து ஏற்பட்ட அனர்த்தங்களால் 17 மாவட்டங்களில் 150 பிர​தேச செயலாளர் பிரிவுகளில் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், 65, 704 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து 34 ஆயிரத்து 640 ​பேர் பதிப்படைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பான 34 தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் அறிவித்துள்ளது. தெரிவித்துள்ளது.

அதேநேரம், அனர்த்தங்களில் சிக்கி 26 பேர் மரணமாகியுள்ளதுடன், ஏழு பேர் காயமடைந்துமுள்ளனர் அத்துடன், 49 வீடுகள் முழுமையாகவும் 1,574 வீடுகள் பகுதியளவிலும் ​சேதமடைந்துள்ளன.

நாட்டில் நிலவும் சீரற்ற காநிலையால் ஏற்பட்ட வெள்ளம், கொஞ்சம், கொஞ்சமாக வடிந்துகொண்டிருக்கின்றது. கடந்த நாள்களில் நிரம்பி வழிந்த குளங்கள், நீர்த்தேக்கங்களில் 90 சதவீதமானவற்றின் வான் கதவுகள் மீளவும் மூடப்பட்டுள்ளன என அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

எனினும், சீரற்ற வானிலையை அடுத்து ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமளிக்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அந்நிலையம் அறிவித்துள்ளது.

Posted in Uncategorized

தமிழ் தேசிய பரப்பில் உள்ள கட்சிகள் சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட்டாலே நிரந்தர தீர்வு காண முடியும்- ரெலோ

இனக்குடிப்பரம்பலை பேணுவதற்கு தமிழ் தேசிய பரப்பில் உள்ள கட்சிகள் இணைந்து ஒருமித்த நிலைப்பாட்டில் செயற்பட்டு சர்வதேச ஆதரவினை பெற்றாலே நிரந்தர தீர்வுகாண முடியும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் காணி அபகரிப்பு மற்றும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் இலக்கு ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில்,

‘வடக்கு, கிழக்கு தாயக பூமியிலே எங்கள் இனக்குடிபரம்பலை சிதைப்பதற்கும், எங்களுடைய பிரதிநிதித்துவங்களை குறைப்பதற்கும், எங்கள் தாயக பூமியை கூறு போடுவதற்குமான, திட்டமிட்ட காணி அபகரிப்பும், அந்த காணி அபகரிப்பின் ஊடாக, சிங்கள குடியேற்றங்களை கொண்டு வந்து, நிறுவுவதற்கான முயற்சியையும் அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

கடந்த 11ம் திகதி பாராளுமன்றத்திலே இது சம்பந்தமான எதிர்ப்புக் குரல் எழுப்பப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுவுவதற்கு எதிராக முன்னெடுக்கப்பட இருக்கின்ற போராட்டத்திற்கு, தமிழீழ விடுதலை இயக்கம் தன்னுடைய முற்றுமுழுதான ஆதரவினை வழங்கும். இந்த போராட்டத்தை நாங்கள் முன்னெடுத்து எங்கள் காணி நிலங்களை காப்பாற்ற வேண்டிய கட்டாய சூழலில் இன்று இருக்கின்றோம்.

இதைத் தாண்டி நாங்கள் பாராளுமன்றத்திலே குரல் கொடுப்பதும், தொடர்ந்து இதற்கு எதிராக போராடுவதும் என்பது நிரந்தர தீர்வாக அமையாது.

எங்களுடைய மாகாண சபை சொற்ப அதிகாரங்களோடு செயல்பட்டுக் கொண்டிருந்த போது கூட கடந்த காலங்களில் இப்படியான காணி அபகரிப்பையும், குடியேற்றங்களையும் நிறுத்தி இருந்தது.

இந்த மாகாண சபை அதிகாரங்களை எங்களுடைய அரசியல் தீர்வை எட்டும் வரைக்கும், 13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் வந்த இந்த மாகாண சபை அதிகாரங்களை, நிரந்தரமாக, மீளப் பெறப்பட முடியாத, காணி அதிகாரங்களை, பெற்றுக்கொள்வதன் மூலம் தான் இந்த பிரச்சனைக்கான நிரந்தர விடிவை நாங்கள் காணமுடியும்.

அதற்கான ஒரு பாரிய அரசியல் நகர்வு ஒன்றை நாங்கள் இப்பொழுது மேற்கொண்டிருக்கிறோம். மேலும் 13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான மாகாண சபையை, பலப்படுத்தி நிரந்தரமான அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்கான அரசியல் நகர்வினை மேற்கொண்டருக்கிறோம்.

இந்த நகர்விலே இது அரசியல் தீர்வாக அல்ல. ஆனால், எங்களுடைய இனக்குடிப்பரம்பலை பேணுவதற்கு தற்போதைய கால சூழலில் அவசியமான ஒரு விடயமாக கருதயே இதை நாங்கள் நகர்த்தியிருக்கிறோம். இதில் இணைந்து கொள்ள அனைத்து தமிழ் தேசிய பரப்பில் உள்ள கட்சிகளையும் அழைத்திருக்கிறோம்.

ஆகவே எங்களுடைய அதிகார பலத்தை நாங்கள் பெற்று கொள்வதற்கும் சர்வதேச ஆதரவினை கோருவதற்கும், இலங்கை அரசாங்கத்தினுடைய இந்த செயற்பாடுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்குமான எங்களுடைய அரசியல் நகர்வை இப்பொழுது வெற்றிகரமாக, நாங்கள் முன்னெடுத்து இருக்கிறோம்.

தொடர்ந்தும் எங்கள் தாயக பூமியை மீட்பதற்கான, காப்பாற்றுவதற்கான, போராட்டங்களை நடத்துவதோடு, அதற்கான, அதிகாரங்களை பெற்று நிரந்தரமாக இதற்கு ஒரு விடிவை காணுவதற்கான செயல்திட்டத்தை, தொடர்ந்தும் நாம் முன்னெடுப்போம்.

அதில் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கின்ற அனைத்து அரசியல் தலைவர்களும்,அரசியல் பிரதிநிதிகளும், எங்களுடைய இந்த செயற்பாட்டில் ஒன்றிணைந்து ஒருமித்த நிலைப்பாட்டிலே, நாங்கள் சர்வதேச ஆதரவினை பெற்றுக் கொள்ள வேண்டும். அதன் மூலம்தான், நிரந்தரமாக இதற்கு தீர்வு காண முடியும். என்பது எங்களுடைய நிலைப்பாடு’ என மேலும் தெரிவித்துள்ளார்.

சீன உரத்தை மூன்றாம் தரப்பினர் பரிசோதிக்க இலங்கை இணக்கம் – சீன தூதரகம்

பாதகமான நுண்ணுயிர்கள் அடங்கியுள்ளமை இரு தடவைகள் உறுதிப்படுத்தப்பட்ட சீன உரத்தை மூன்றாம் தரப்பொன்றினால் மீண்டும் பரிசோதிப்பதற்கு இலங்கை இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிரான தடையைக்கோரும் பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் சாரா

இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராகத் தடைவிதிப்பதற்கு ஆதரவளிக்குமாறு பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் சாரா ஜோன்ஸ் அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொழிற்கட்சியின் சார்பில் பிரிட்டனின் மத்திய க்ரொய்டொன் தொகுதியில் போட்டியிட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்குத் தெரிவான சாரா ஜோன்ஸ், தன்னுடைய தொகுதியில் வசிக்கும் தமிழ் சமூகத்தினர் மத்தியில் இலங்கையில் இடம்பெற்ற போரின் வடுக்கள் இன்னமும் இருப்பதை உணரமுடிவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி உலகில் பல்வேறு பகுதிகளிலும் வாழும் இலங்கைத்தமிழர்கள் தொடர்பில் நீதியும் பொறுப்புக்கூறலும் உறுதிசெய்யப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

‘இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவைத் தடைசெய்யுங்கள்’ என்ற வாசகத்துடனான பதாகையுடன் சாரா ஜோன்ஸ் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

‘மனித உரிமைகள் உறுதிசெய்யப்படுவதற்கான தலைமைத்துவத்தை பிரிட்டன் வழங்கவேண்டும். நாம் நீதிக்காகப் போராடவேண்டும். பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான செயல்வடிவிலான நடவடிக்கைகளே தற்போதைய தேவையாக இருக்கின்றன.

இலங்கையிலும் உலகம் முழுவதிலும் வாழும் தமிழர்களுக்காக நாம் அதனைத் தொடர்ந்து வலியுறுத்தவேண்டும்’ என்று சாரா ஜோன்ஸ் அக்காணொளியில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

மன்னார் பிரதேச சபை தவிசாளர் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வட மாகாண ஆளுநரால் இரத்து

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் ஹமீது முகம்மது முஜாஹிரை பதவி நீக்கி ஏற்கனவே விடுக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானியை வட மாகாண ஆளுநர் இரத்து செய்துள்ளார்.

இதற்கான அதிவிசேட வர்த்தமானி வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் வௌியிடப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் ஹமீது முகம்மது முஜாஹிர், தவிசாளர் மற்றும் உறுப்பினர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டிருந்தது.

முன்னாள் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டது.

இந்நிலையிலேயே ஏற்கனவே வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வதாக வட மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.

கச்சா எண்ணெய் இல்லை! மூடப்படுகிறது சப்புகஸ்கந்தை சுத்திகரிப்பு ஆலை!

கச்சா எண்ணெய் கையிருப்பில் இல்லாத காரணத்தினால், சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நாளைய தினம் முதல் தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆலையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கச்சா எண்ணெய் கையிருப்பில் இல்லாத காரணத்தினால், சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மூடப்படுவது இதுவே முதல் முறை.

இது சம்பந்தமாக நாளைய தினம் பிற்பகல் செய்தியாளர் சந்திப்பை நடத்தி உத்தியோகபூர்வமாக அறிவிக்க உள்ளதாக எரி சக்தி அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

கச்சா எண்ணெயை ஏற்றிய கப்பல் எதிர்வரும் டிசம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் இலங்கையை வந்தடையவுள்ளது.

அதுவரை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை மூட நேரிட்டுள்ளதாக சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் தொழிற்சங்க தலைவர் அசோக ரத்வல தெரிவித்துள்ளார்.

டிசம்பர் மாதம் வரும் கப்பலில் 90 ஆயிரம் மெற்றி தென் கச்சா எண்ணெயே கொண்டு வரப்படுவதாகவும் அது 15 நாட்களுக்கு மாத்திரமே போதுமானது என்பதால், ஜனவரி மாத நடுப் பகுதியில் மீண்டும் ஆலையை மூட நேரிடும் எனவும் தெரியவந்துள்ளது.

பட்ஜட்டுக்கு ஆதரவா..? எதிர்ப்பா..?? கம்மன்பில வீட்டில் 11 கட்சிகள் மந்திராலோசனை

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளிப்பதா – அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் நாளை -15- ஆலோசனை , அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும்11 சிறு கட்சிகள் நாளை 15ம் திகதி அமைச்சர் உதய கம்மன்பில வீட்டில் மீண்டும் சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் சமர்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் குறித்து ஆராயவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்ற தீர்மானமும் இக்கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது

மாவீரர் மாதத்தின் புனிதத்தை பேணுவோம் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

தமிழின விடுதலைக்காக வித்தாகிப்போன வீரமறவர்கள், தமிழர் தாயகக் கனவோடு துயில்கொள்வதாகக் கருதி, தமிழினத்தின் விடுதலை இலக்கு திசை மாறாமல் செல்ல, தமிழ்த் தேச மக்கள் சபதம் செய்யும், தமிழ்த் தேசியப் போராட்டத்தின் ஆணிவேரான நாட்களாகும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

மாவீரர் மாதத்தின் புனிதத்தை பேணுவதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் கோருகின்றோம் என்ற தலைப்பிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களது அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 27 திகதிவரையான காலப்பகுதி தமிழ் மக்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் முக்கியமான வாரமாகும். அக்காலப்பகுதி தமிழ் மக்களின் விடிவுக்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரச் செல்வங்களை நினைவு கூரும் நாட்களாகும்.

இந்நாட்கள் தமிழ்த் தேசிய அரசியலிலிருந்து மறைக்கப்படமுடியாததும், திசைதிருப்பப்பட முடியாததுமாக கடைப்பிடிக்கப்பட வேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாட்களாகும். இனவிடுதலை நோக்கிய, ஆயுதப் போராட்டம் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டதன் பின்னணியையும், தமிழ் மக்கள் ஆயுதமேந்தியதன் நியாயத்தன்மைகளையும், அதிலிருந்த தியாகங்களையும், அடுத்த சந்ததியினரும் தேடிப்பார்க்கக்கூடியவாறு வரலாற்றுக் கடத்திகளாகவும் இருக்கக் கூடிய நாட்களாகும்.

இந்நாட்கள் இறந்தவர்களை நினைவுகூருகின்ற சாதாரண நாட்களுமல்ல. தமிழின விடுதலைக்காக வித்தாகிப்போன வீரமறவர்கள், தமிழர் தாயகக் கனவோடு துயில்கொள்வதாகக் கருதி, தமிழினத்தின் விடுதலை இலக்கு திசை மாறாமல் செல்ல, தமிழ்த் தேச மக்கள் சபதம் செய்யும், தமிழ்த் தேசியப் போராட்டத்தின் ஆணிவேரான நாட்களாகும்.

எனவே இறந்தவர்களை நினைவு கூருவது என்கின்ற சொல்லாடல் ஊடாகவும், வேறுநாட்களைக் குறிப்பிட்டும், சாதாரண மரணங்களோடு, தமிழின விடுதலைக்காக வித்தாகிப் போனவர்களின் தியாகங்களையும் இணைத்து, வட கிழக்கு கத்தோலிக்க ஆயர்கள் மன்றம் மதிப்பீடு செய்து பொதுமைப்படுத்துவதென்பது, மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், தமிழ்த் தேசிய தாகம் கொண்டவர்களிடத்தில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்திய செயற்பாடாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

தமிழ்த் தேசிய அரசியலுக்காக தம்மைத் தியாகம் செய்த ஆயர்கள், குருக்களை உருவாக்கித் தந்த கத்தோலிக்க திருச்சபை இறந்தவர்களை நினைவு கூரும் நாட்களாக நவம்பர் 20ம் திகதியை பொதுமைப்படுத்தும் வகையில் மேற்கொண்ட முடிவு ஆரோக்கியமானதல்ல என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். கெடுபிடிகள் நிறைந்த சிறிலங்கா அரச இயந்திரத்தால், மாவீரர்களை நினைவுகூர்வதற்கு பல்வேறு வழிகளிலும் தடைகளை ஏற்படுத்த முற்படும் வேளையில், தமிழின தாயக விடுதலைக்காக வித்தாகிப்போன மாவீரர்களின் வாரத்தை, நவம்பர் 21-27 திகதிவரை நினைவிருத்தும்வகையிலும், வடக்குக் கிழக்குத் தழிழர் தாயகமெங்கும் நவம்பர் 27ஆம் திகதி மாலை 6.05 மணிக்கு அனைத்து ஆலயங்களிலும் மணியொலி எழுப்பி வரலாற்றைக் கடத்துவதுமே வரவேற்கத்தக்க விடயமாக அமையும் என்பதையும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் வடக்கு கிழக்கு ஆயர் மன்றத்தினரிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

எனவே ஆயர்மன்றமானது தமது முடிவை பரிசீலனைசெய்து அறிவித்தலை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உரிமையுடனும் பணிவன்புடனும் கேட்டுக்கொள்கின்றோம்.