இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிரான தடையைக்கோரும் பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் சாரா

இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு எதிராகத் தடைவிதிப்பதற்கு ஆதரவளிக்குமாறு பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் சாரா ஜோன்ஸ் அந்நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொழிற்கட்சியின் சார்பில் பிரிட்டனின் மத்திய க்ரொய்டொன் தொகுதியில் போட்டியிட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்குத் தெரிவான சாரா ஜோன்ஸ், தன்னுடைய தொகுதியில் வசிக்கும் தமிழ் சமூகத்தினர் மத்தியில் இலங்கையில் இடம்பெற்ற போரின் வடுக்கள் இன்னமும் இருப்பதை உணரமுடிவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி உலகில் பல்வேறு பகுதிகளிலும் வாழும் இலங்கைத்தமிழர்கள் தொடர்பில் நீதியும் பொறுப்புக்கூறலும் உறுதிசெய்யப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

‘இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவைத் தடைசெய்யுங்கள்’ என்ற வாசகத்துடனான பதாகையுடன் சாரா ஜோன்ஸ் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

‘மனித உரிமைகள் உறுதிசெய்யப்படுவதற்கான தலைமைத்துவத்தை பிரிட்டன் வழங்கவேண்டும். நாம் நீதிக்காகப் போராடவேண்டும். பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான செயல்வடிவிலான நடவடிக்கைகளே தற்போதைய தேவையாக இருக்கின்றன.

இலங்கையிலும் உலகம் முழுவதிலும் வாழும் தமிழர்களுக்காக நாம் அதனைத் தொடர்ந்து வலியுறுத்தவேண்டும்’ என்று சாரா ஜோன்ஸ் அக்காணொளியில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் பிரதேச சபை தவிசாளர் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வட மாகாண ஆளுநரால் இரத்து

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் ஹமீது முகம்மது முஜாஹிரை பதவி நீக்கி ஏற்கனவே விடுக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானியை வட மாகாண ஆளுநர் இரத்து செய்துள்ளார்.

இதற்கான அதிவிசேட வர்த்தமானி வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் வௌியிடப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் சாகுல் ஹமீது முகம்மது முஜாஹிர், தவிசாளர் மற்றும் உறுப்பினர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டிருந்தது.

முன்னாள் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டது.

இந்நிலையிலேயே ஏற்கனவே வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வதாக வட மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.

Posted in Uncategorized

கச்சா எண்ணெய் இல்லை! மூடப்படுகிறது சப்புகஸ்கந்தை சுத்திகரிப்பு ஆலை!

கச்சா எண்ணெய் கையிருப்பில் இல்லாத காரணத்தினால், சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நாளைய தினம் முதல் தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆலையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கச்சா எண்ணெய் கையிருப்பில் இல்லாத காரணத்தினால், சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மூடப்படுவது இதுவே முதல் முறை.

இது சம்பந்தமாக நாளைய தினம் பிற்பகல் செய்தியாளர் சந்திப்பை நடத்தி உத்தியோகபூர்வமாக அறிவிக்க உள்ளதாக எரி சக்தி அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

கச்சா எண்ணெயை ஏற்றிய கப்பல் எதிர்வரும் டிசம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் இலங்கையை வந்தடையவுள்ளது.

அதுவரை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை மூட நேரிட்டுள்ளதாக சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் தொழிற்சங்க தலைவர் அசோக ரத்வல தெரிவித்துள்ளார்.

டிசம்பர் மாதம் வரும் கப்பலில் 90 ஆயிரம் மெற்றி தென் கச்சா எண்ணெயே கொண்டு வரப்படுவதாகவும் அது 15 நாட்களுக்கு மாத்திரமே போதுமானது என்பதால், ஜனவரி மாத நடுப் பகுதியில் மீண்டும் ஆலையை மூட நேரிடும் எனவும் தெரியவந்துள்ளது.

Posted in Uncategorized

பட்ஜட்டுக்கு ஆதரவா..? எதிர்ப்பா..?? கம்மன்பில வீட்டில் 11 கட்சிகள் மந்திராலோசனை

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளிப்பதா – அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் நாளை -15- ஆலோசனை , அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும்11 சிறு கட்சிகள் நாளை 15ம் திகதி அமைச்சர் உதய கம்மன்பில வீட்டில் மீண்டும் சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் சமர்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் குறித்து ஆராயவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்ற தீர்மானமும் இக்கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது

மாவீரர் மாதத்தின் புனிதத்தை பேணுவோம் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

தமிழின விடுதலைக்காக வித்தாகிப்போன வீரமறவர்கள், தமிழர் தாயகக் கனவோடு துயில்கொள்வதாகக் கருதி, தமிழினத்தின் விடுதலை இலக்கு திசை மாறாமல் செல்ல, தமிழ்த் தேச மக்கள் சபதம் செய்யும், தமிழ்த் தேசியப் போராட்டத்தின் ஆணிவேரான நாட்களாகும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

மாவீரர் மாதத்தின் புனிதத்தை பேணுவதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் கோருகின்றோம் என்ற தலைப்பிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களது அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 27 திகதிவரையான காலப்பகுதி தமிழ் மக்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் முக்கியமான வாரமாகும். அக்காலப்பகுதி தமிழ் மக்களின் விடிவுக்காக தம்மை ஆகுதியாக்கிய மாவீரச் செல்வங்களை நினைவு கூரும் நாட்களாகும்.

இந்நாட்கள் தமிழ்த் தேசிய அரசியலிலிருந்து மறைக்கப்படமுடியாததும், திசைதிருப்பப்பட முடியாததுமாக கடைப்பிடிக்கப்பட வேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாட்களாகும். இனவிடுதலை நோக்கிய, ஆயுதப் போராட்டம் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டதன் பின்னணியையும், தமிழ் மக்கள் ஆயுதமேந்தியதன் நியாயத்தன்மைகளையும், அதிலிருந்த தியாகங்களையும், அடுத்த சந்ததியினரும் தேடிப்பார்க்கக்கூடியவாறு வரலாற்றுக் கடத்திகளாகவும் இருக்கக் கூடிய நாட்களாகும்.

இந்நாட்கள் இறந்தவர்களை நினைவுகூருகின்ற சாதாரண நாட்களுமல்ல. தமிழின விடுதலைக்காக வித்தாகிப்போன வீரமறவர்கள், தமிழர் தாயகக் கனவோடு துயில்கொள்வதாகக் கருதி, தமிழினத்தின் விடுதலை இலக்கு திசை மாறாமல் செல்ல, தமிழ்த் தேச மக்கள் சபதம் செய்யும், தமிழ்த் தேசியப் போராட்டத்தின் ஆணிவேரான நாட்களாகும்.

எனவே இறந்தவர்களை நினைவு கூருவது என்கின்ற சொல்லாடல் ஊடாகவும், வேறுநாட்களைக் குறிப்பிட்டும், சாதாரண மரணங்களோடு, தமிழின விடுதலைக்காக வித்தாகிப் போனவர்களின் தியாகங்களையும் இணைத்து, வட கிழக்கு கத்தோலிக்க ஆயர்கள் மன்றம் மதிப்பீடு செய்து பொதுமைப்படுத்துவதென்பது, மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், தமிழ்த் தேசிய தாகம் கொண்டவர்களிடத்தில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்திய செயற்பாடாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

தமிழ்த் தேசிய அரசியலுக்காக தம்மைத் தியாகம் செய்த ஆயர்கள், குருக்களை உருவாக்கித் தந்த கத்தோலிக்க திருச்சபை இறந்தவர்களை நினைவு கூரும் நாட்களாக நவம்பர் 20ம் திகதியை பொதுமைப்படுத்தும் வகையில் மேற்கொண்ட முடிவு ஆரோக்கியமானதல்ல என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். கெடுபிடிகள் நிறைந்த சிறிலங்கா அரச இயந்திரத்தால், மாவீரர்களை நினைவுகூர்வதற்கு பல்வேறு வழிகளிலும் தடைகளை ஏற்படுத்த முற்படும் வேளையில், தமிழின தாயக விடுதலைக்காக வித்தாகிப்போன மாவீரர்களின் வாரத்தை, நவம்பர் 21-27 திகதிவரை நினைவிருத்தும்வகையிலும், வடக்குக் கிழக்குத் தழிழர் தாயகமெங்கும் நவம்பர் 27ஆம் திகதி மாலை 6.05 மணிக்கு அனைத்து ஆலயங்களிலும் மணியொலி எழுப்பி வரலாற்றைக் கடத்துவதுமே வரவேற்கத்தக்க விடயமாக அமையும் என்பதையும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் வடக்கு கிழக்கு ஆயர் மன்றத்தினரிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

எனவே ஆயர்மன்றமானது தமது முடிவை பரிசீலனைசெய்து அறிவித்தலை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உரிமையுடனும் பணிவன்புடனும் கேட்டுக்கொள்கின்றோம்.

Posted in Uncategorized

மன்னார் மாவட்ட பொதுமக்களுக்கான முக்கிய அறிவிப்பு

இரண்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டவர்கள் மாத்திரமே, எதிர் வரும் திங்கட்கிழமை (15) முதல் வியாபார நிலையங்கள், சந்தைகள் ,பொது போக்குவரத்து வாகன சேவைகள் ஆகியவற்றை நடத்தி செல்ல அனுமதிக்கப்படுவர்கள் என்று மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது மன்னாரிலுள்ள காலநிலை வைரஸ் பரவுவதற்கு ஏற்ற சூழ் நிலையாக காணப்படுவதால் மக்கள் கட்டாயம் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பொது மக்களிடம் வைத்தியர் ரி.வினோதன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை கொரோனா தொற்று அதிகரிப்புக்கு பிரதான காரணமாக மக்கள் அதிகமாக வெளியில் நடமாடுவது சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்காது செயல்படுவது மற்றும் ஒன்று கூடல் நிகழ்வுகளில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கைக்கு மேலாக பங்குகொள்வதும் ஒரு காரணமாக இருக்கிறது. என்றும் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த வருடத்தில் இது வரை 2,635 கொரோனா தொற்றாளர்கள், மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த மாதம் மேலும் இருவர் கொரோனா தொற்றின் காரணமாக இறந்துள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் கடந்த 11 ஆம் திகதி மேலும் 50 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கடந்த 11 நாட்களில் மன்னார் மாவட்டத்தில் 240 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவர்களில் 45 தொற்றாளர்கள் ஆன்டிஜென் பரிசோதனைகள் மூலமாகவும் 05 தொற்றாளர்கள் பி.சி.ஆர் பரிசோதனை மூலமாகவும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கொரோனா மரண வீதம் மாவட்டத்தில் 0.95 ஆக காணப்படுவதாக பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் கூறினார்.

இந்த மாதம் 11 நாட்களில் 240 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சராசரியாக 21 பேர் நாள் ஒன்றிற்கு மன்னாரில் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது வரை மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 25 கொரோனா தொற்றாளர் மரணங்கள் பதிவாகி உள்ளன..

அதே வேளை நிகழ்வுகளை ஒழுங்கு செய்பவர்கள் சுகாதார அதிகாரிகளின் அனுமதியைப் பெற்றே நிகழ்வுகளை ஒழுங்கு செய்ய வேண்டிய நிலை உருவாகியிருக்கின்றது.அத்தோடு அத்துடன் தற்பொழுதுள்ள காலநிலை மழை வீழ்ச்சி காரணமாக டெங்கு தொற்று நோய் பரவும் அபாயம் மன்னார் மாவட்டத்தில் உருவாகியுள்ளது.

குறிப்பாக வீடுகள் மற்றும் வீடுகள் சூழல் உள்ள இடங்களில் வெள்ள நீர் தேங்கி காணப்படுகிறது. ஆகவே மக்கள் இவ் வியத்திலும் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்

நுளம்புகள் பெருகக்க்கூடிய இடங்களை இனம் கண்டு உடன் அவற்றை சுத்தம் செய்து நுளம்பு தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

மன்னார் மாவட்டத்தில் இதுவரை 89 சதவீதமானோர் முதலாவது தடுப்பூசிகளையும் 71.9 சதவீதமானோர் இரண்டாவது தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.

இதனைத் தவிர மொத்தமாக 5,573 பாடசாலை மாணவர்களுக்கும் 492 பேருக்கு பூசர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளன. 768 பேருக்கு பாடசாலையிலிருந்து இடை விலகிய வருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

பச்சிலைப்பள்ளி பிரதேசசபையின் தவிசாளருக்கு அழைப்பு

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளரை எதிர்வரும் 17 ஆம் திகதி கிளிநொச்சி, பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவுக்கு சமூகமளிக்குமாறு  அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபையின் உறுப்பினர்கள் பலரும் கொழும்பு 4ம் மாடியிலும், கிளிநொச்சியில் அமைந்துள்ள பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவின் அலுவலகங்களுக்கும் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டு நீண்டநேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளருக்கும் விசாரணைக்கான அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

சோமாலியா தரத்திலான வரவு செலவுத்திட்டம் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சோமாலியா தரத்திலான வரவு செலவுத்திட்டம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார்.

நாட்டு மக்கள் முற்போக்கான வரவு செலவுத்திட்டத்தை எதிர்பார்த்தனர். எனினும் கிடைத்தது வெற்று பாத்திரம். மக்கள் நலன் சார்ந்த வரவு செலவுத்திட்டத்தை மக்கள் எதிர்பார்த்தனர். எனினும் கிடைத்தது புஷ்வாணம்.

வரவு செலவுத்திட்டத்தில் எந்த வியூகங்களும் இல்லை. வரவு செலவுத்திட்டத்தில் துண்டு விழும் தொகையை குறைக்க எந்த திட்டங்களும் இல்லை. வாழ்க்கை செலவு, பணவீக்கத்தை குறைக்கும் வேலைத்திட்டங்கள் இல்லை.

மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்கள் இல்லை. விவசாயிகளை முன்னேற்றும் எந்த முறைகளும் இல்லை. வருமானத்தை பெருக்கும் வழிமுறைகள் இல்லை. சுருக்கமாக கூறுவதென்றால் இது சோமாலிய தரத்திலான வரவு செலவுத்திட்டம். ம

க்களை ஏமாற்றிய வரவு செலவுத்திட்டம். குறுகிய, மத்திய, நீண்டகால வேலைத்திட்டங்கள் இல்லாத வெற்று ஆவணம். அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் மற்றுமொரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாது அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு எவ்விதமாக சம்பள அதிகரிக்கும் வழங்கவில்லை. இது மக்களை மறந்து விட்டு, தமது சகாக்களின் தேவைக்கு அமைய உருவாக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

வயிற்று பசியை அறியாத அரசாங்கம்! – கேள்வியெழுப்பும் ஐக்கிய தேசியக்கட்சி

சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் ருவான் விஜேவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டில் மோசமான பெருந்தொற்று நிலைமை நீடித்து வரும் நிலையில் சுகாதாரத்திற்காக கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையை விடவும் இந்த ஆண்டில் 6 பில்லியன் ரூபா குறைவாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டு மக்களின் சுகாதாரம் மற்றும் அவர்களின் வயிற்றுப் பசியை அறியாத அரசாங்கம் ஒன்று எதற்கு என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களை ஏமாற்றும் ஓர் வரவு செலவுத் திட்டம் என தெரிவித்துள்ளார்.

அரிசி, சீனி என நாட்டில் முக்கியமான உணவுப் பொருட்களுக்கு தட்டுபாடு நிலவி வருவதாகவும் மக்கள் சாப்பிட முடியாதுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொய்யான வரவு செலவுத் திட்டம் ஒன்றை சமர்ப்பித்த அரசாங்கம் மக்களை ஏமாற்றியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் மதிநுட்பம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மட்டுமே உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகர்களுடன் கூட்டமைப்பினர் கலந்துரையாடல்

“ஒரே நாடு ஒரே சட்டம்” கொள்கையை முன்வைத்து உருவாக்கப்படும் புதிய அரசியல் அமைப்பினூடாக தமிழ் மக்களின் உரிமைகள், அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வுகள் பெற்றுக்கொள்ள முடியும் என்ற எண்ணம் இல்லையென்பதையும், சர்வதேச அழுத்தங்களை பிரயோகித்து மாற்று வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற தமது நிலைப்பாட்டையும், இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடனான சந்திப்பில் ஆர்.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

புதிய அரசியல் அமைப்பு உருவாக்க விடயத்தில் தமிழ் அரசியல் தரப்பினர் ஒரு அணியாக ஒன்றிணைந்து தமது நிலைப்பாடுகளை முன்வைக்க வேண்டும் எனவும், மாகாணசபை தேர்தலில் தமிழர் தரப்பு பலமான கட்டமைப்பொன்றை உருவாக்கி, வடக்கு கிழக்கின் பலத்தை நிரூபிக்கும் பட்சத்தில், அதனூடாக அரசாங்கத்தை வலியுறுத்தும் முயற்சிகளை இந்தியாவினால் முன்னெடுக்க முடியும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று பிற்பகல் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவை, தூதுவர் இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

கூட்டமைப்பின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவரும், அமெரிக்காவிற்கான தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டுள்ள காரணத்தினால் கோவிந்தன் கருணாகரன் எம்.பியும், தனிப்பட்ட காரணங்களுக்காக வினோ நோகனாதலிங்கம் எம்.பியும் நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கவில்லை.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களும், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் நேற்றைய சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர். நேற்று பிற்பகல் 5 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த பேச்சுவார்த்தை சுமார் இரண்டு மணிநேரம் இடம்பெற்றது.

இந்திய – இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கம் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இரு நாடுகளுக்கு இடையிலான பாராளுமன்ற தொடர்புகள் மற்றும் பரிமாற்றங்கள் உள்ளிட்ட துறைகளூடாக இரு நாடுகளுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள நட்புறவு குறித்தும், வழமைக்கு மாறாக இந்த நிகழ்வில் ஆளும் எதிர் தரப்பு சார்ந்து நூற்றுக்கும் அதிமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தமை குறித்தும் இந்திய தூதுவர் கூட்டமைப்பிடம் தனிப்பட்ட சில காரணிகளை எடுத்துக்கூறியுள்ளார்.

குறிப்பாக இதற்கு முன்னர் இந்த நிகழ்வுகளில் மிகக் குறைவான உறுப்பினர்கள் கலந்துகொண்ட நிலையில் இம்முறை அந்த நிலைப்பாடு முழுமையாக மாறியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

சீன சார்பு பயணமாக இலங்கையின் செயற்பாடுகளை விமர்சித்த நிலையில் இந்திய எதிர்ப்பு அற்ற அல்லது இந்தியாவின் முக்கியத்துவம் அரசாங்கத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் விளங்கியுள்ளமை வெளிப்பட்டுள்ளதாக இந்தியத்தூதுவர் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும்,வடக்கு கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் வடக்கு கிழக்கிற்கு அவசியமான முன்மொழிவுகள் குறித்தும், மாவட்ட ரீதியிலான தனித்தனியான துரித அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் நீண்டகால அபிவிருத்தி நலத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், இந்திய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட முக்கிய காரணிகள் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், இந்திய – இலங்கை மக்களுக்கு இடையிலான தொடர்பாடல், ராமேஸ்வரம் படகு சேவை, விமான நிலைய அபிவிருத்தி, காங்கேசன்துறை அபிவிருத்தி குறித்தும் முக்கியத்துவம் கொடுத்து பேசப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

அரசியல் தீர்வு விடயத்தில், நீண்டகால அரசியல் முரண்பாடுகள் தீர்க்கப்பட்டு அரசியல் தீர்வு ஒன்றினை நோக்கிய பயணத்தில் இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்புகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்பார்ப்பதாக வலியுறுத்தியிருந்த நிலையில், அரசியல் தீர்வு விடயங்களில், அதிகார பகிர்வு உள்ளிட்ட முக்கிய விடயங்களில் இந்தியாவின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் எப்போதும் வழங்கப்படும் என இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கூறுகையில்,

புதிய அரசியல் அமைப்பு உருவாக்க விடயத்தில் எமது நிலைப்பாடுகள் மற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் எமது சந்தேக கருத்துக்களை முன்வைத்தோம்.

குறிப்பாக “ஒரே நாடு -ஒரே சட்டம்” கொள்கையின் கீழ் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் குறித்த தெளிவு அவர்களிடத்தில் இருக்கவில்லை, எனவே அதனை நாம் தெளிவுபடுத்தினோம்.

புதிய அரசியல் அமைப்பினூடாக தமிழ் மக்களின் உரிமைகள், அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வுகள் பெற்றுக்கொள்ள முடியும் என்ற எண்ணம் எம்மத்தியில் இல்லை,எனவே சர்வதேச அழுத்தங்களை பிரயோகித்து மாற்று வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் நாம் தெரிவித்தோம்.

இந்த விடயத்தில் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு யோசனையை முன்வைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை அவரும் எம்மிடத்தில் தெரிவித்தார்.

அதேபோல் மாகாணசபை தேர்தலை துரிதப்படுத்தும் செயற்பாடுகள் குறித்தும் அதில் தமிழர் தரப்பின் நகர்வுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போதும் மாகாணசபை தேர்தலில் தமிழர் தரப்பு பலமான கட்டமைப்பொன்றை உருவாக்கி, வடக்கு கிழக்கின் பலத்தை நிருபிக்கும் பட்சத்தில், அதனூடாக அரசாங்கத்தை வலியுறுத்தும் முயற்சிகளை இந்தியாவினால் முன்னெடுக்க முடியும் என்ற கருத்துக்களை அவர் எம்மிடத்தில் தெரிவித்தார். இந்த விடயங்களில் தமிழர் அரசியல் தலைமைகள் ஒரு அணியாக செயற்படுவது கட்டாயமென்பதை அவரும் வலியுறுத்தினார்,

அரசியல் தீர்வு விடயத்திலும் இந்தியாவின் பங்களிப்பு தொடர்ச்சியாக இருக்கும், அதில் தமிழர் தரப்பு அதிர்ப்தியடைய வேண்டிய அவசியம் இல்லை என்ற வாக்குறுதியையும் அவர் எம்மிடத்தில் முன்வைத்தார் என்ற காரணிகளை கேசரிக்கு குறிப்பிட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் சுவிஸ் தூதுவரை சந்தித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள், அரசியல் தீர்வு விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

பல்லின சமூக கட்டமைப்பை கொண்ட சுவிஸ்லாந்து நாட்டின் அரசியல் நகர்வுகள் மற்றும் அங்கீகாரம் போன்றவை இலங்கைக்கும் அமைய வேண்டும் என்ற விடயங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.