இலங்கை பட்ஜெட் 2022: நீங்கள் அறிய வேண்டிய 10 முக்கிய தகவல்கள்

இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தாக்கல் செய்த 2022ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், மதுபானம், சிகரெட்டுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்தால் மட்டுமே அவர்களுக்கான ஓய்வூதியத்தை பெறலாம் என யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.

இலங்கையின் 76ஆம் வரவு செலவு திட்ட அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று (12) தாக்கல் செய்யப்பட்டது. இதையொட்டி 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார்.

இதன்படி, 2022ஆம் ஆண்டுக்கான எதிர்பார்க்கப்படும் முழுமையான வருமானமாக ரூ. 2,284 பில்லியன் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்பார்க்கப்படும் செலவீனமாக 3,912 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட துண்டு விழும் தொகையாக 1,628 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இன்றைய தினம் சமர்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை முதல் 7 தினங்களுக்கு இடம்பெற்று, 22ம் தேதி வாக்கெடுப்பு நடைபெறும்.

அதனைத் தொடர்ந்தும், 3ம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்று, இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 10ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டங்களில், இது மிக முக்கியமானதொரு வரவு செலவுத்திட்டமாக கருதப்படுகின்றது.

2019ம் ஆண்டு முதல் இலங்கை தொடர்ச்சியாக பல்வேறு பிரச்னைகளை எதிர்நோக்கி வருவதுடன் ஊடாக, பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது.

2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலின் ஊடாக இலங்கையின் சுற்றுலாத்துறை முழுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அந்த பாதிப்பிலிருந்து மீண்டெழ முயற்சிக்கும் தருணத்திலேயே, கோவிட்-19 பெரும் தொற்று இலங்கையையும் பாதித்து, அனைத்து துறைகளிலும் தாக்கத்தை செலுத்தியது.

இவ்வாறான பாதிப்புக்களுக்கு மத்தியில், 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று (நவம்பர் 12) சமர்பிக்கப்பட்டது. அதன் 10 முக்கிய அம்சங்களை இங்கே தொகுத்தளிக்கிறோம்.

1. காணாமல் போனோருக்கான நட்டஈட்டை வழங்குவதற்காக 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2. 3 வருடங்களில் மலையக மக்கள் வாழும் லயின் வீடுகளை இல்லாது செய்வதற்கான திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த ஆண்டிற்காக தனி வீடுகளை அமைப்பதற்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

3. கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

4. கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள பஸ் உரிமையாளர்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள், பாடசாலை வேன் மற்றும் பேருந்து உரிமையாளர்களுக்கும் நிவாரணம் வழங்க நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

5. சுமார் 2 தசாப்தங்களுக்கு அதிகமாக காணப்பட்ட அதிபர் – ஆசிரியர் சம்பள முரண்பாட்டை ஒரே தடவையில் தீர்க்கும் வகையில், மேலதிகமாக 30,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

6. 2015ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் ஆட்சி செய்த அரசாங்கத்தினால் அரசியல் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கான நட்டஈட்டை வழங்குவதற்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

7. நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு அதிவிரைவு இணைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

8. நாடு முழுவதும் உள்ள 7 லட்சத்திற்கும் அதிகமான முச்சக்கரவண்டி சாரதிகளை பாதுகாக்கும் நோக்கில், முச்சக்கரவண்டி அதிகார சபையொன்றை ஸ்தாபிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

9. மதுபானத்திற்கான வரி அதிகரிக்கப்படவுள்ளதுடன், சிகரட்டிற்கான விலையும் உடன் அமலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளது.

10. விபத்துக்குள்ளாகும் வாகன சாரதிகளிடமிருந்து நட்டஈட்டு தொகையொன்றை அறவிடுவதற்கான யோசனையும், எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக முன்மொழியப்பட்டுள்ளது. வாகன விபத்துக்களை குறைத்துக்கொள்ளும் நோக்குடன் இந்த திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.

இந்த பட்ஜெட் உரையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து வருடங்கள் தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் இருந்தால் மாத்திரமே ஓய்வூதியம் கிடைக்கும் என்ற சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அந்த கால எல்லையை 10 வருடங்கள் வரை அதிகரிப்பதற்கான யோசனையும் முன்மொழியப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவு, நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு கொடுத்தல், உரப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை மையப்படுத்தி கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை வெள்ளிக்கிழமை (12 ) நடத்தியது.

மக்களின் கண்ணீர் வடிப்பதை அறியாத மோசமான இந்த அராசங்கத்தை இல்லாதொழித்து மக்களின் துயர் துடைக்கும், சர்வதேச ரீதியில் நல்லுறவை பேணும் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி அதிகாரம் மீண்டும் மலர வேண்டுமென்றும் இதில் கலந்துகொண்ட ஐ.தே.க. ஆதரவாளர்கள் கோஷப் எழுப்பியும், பதாகைகளைத் தாங்கியும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

மேலும், எமது நாட்டு விவசாயிகளுக்கு உரம் இல்லை, பட்டினிச் சாவில் மரணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, அரிசியின் விலையை நிர்ணயிப்பது டட்லி சிறிசேனவா? அதிகரித்துச்செல்லும் வாழ்க்கை செலவு, நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்காதே, குறைந்து செல்லும் டொலர் கையிருப்பு, கெரவலப்பிட்டி மின் நிலைய பங்குகள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் தாங்கிய பாதாகைகளை தாங்கி இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

விகாரமாதேவி பூங்காவுக்கு அருகில் ஆரம்பமாகி லிப்டன் சுற்றுவரை வந்த இந்த இந்த ஆர்ப்பாட்ட ‍ பேரணியில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார, கட்சியின் உப தலைவர் ருவன் விஜேவர்தன, கட்சியின் உறுப்பினர்களான நவீன் திசாநாயக்க, சாகல ரத்நாயக்க , கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க, உள்ளூராட்சி மன்றத்தின் முன்னாள் மற்றும் இந்நாள் உறுப்பினர்கள் கட்சியின் உறுப்பினர்கள் , தொழிற்சங்கவாதிகள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார,

“ராஜபக்ச குடும்பத்தின் மற்றுமொரு உறுப்பினரான ஏழு அறிவுடையக் கொண்ட பஷில் ராஜபக்சவின் வரவு செலவுத் திட்டம் இன்று (‍நேற்று) வாசிக்கப்பட்டது. இந்த வரவு செலவுத் திட்டமானது வேதனையில் துன்புறும் மக்களுக்கு உலக்கையால் அடித்தது போல் உள்ளது. ஒரு சில மணித்தியாலங்களுக்குக் கூற நிற்க முடியாத ஒருவரால் எப்படி நாட்டை கட்டியெழுப்ப முடியும் என நான் கேட்கிறேன். இந்த வரவு செலவுத் திட்டத்தால் துன்புறும் மக்கள் மென்பேலும் அழுத்தத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

விவசாயத்தை செய்வதற்கு முறையான திட்டமில்லை, பொருளாதாரத்தை கட்டியெழுப்பு திட்டமில்லை, சுகாதாரத் துறையை மேம்படுத்த தெரியவில்லை , அரச ஊழியர்கனை பலப்படுத்த திட்டமில்லை, வியாபாரத்தை கட்டியெழுப்ப திட்டமில்லை, வர்த்தகர்களை பாதுகாக்க திட்டமில்லை. இவற்றுக்கு முறையான செயற்திட்டங்கள் எதுவும் இல்லாமல் மணிக் கணக்கான மக்களின் நேரத்தை வீணாக செலவழித்த ஓர் வரவு செலவுத் திட்டமாகவே பார்க்கிறோம்.

ஆகவே, ராஜபக்ச குடும்பத்துக்கு இந்த நாட்டை கொண்டு ‍செல்வதற்கு முடியாமல் போயுள்ளது. இந்த நாட்டை கட்டியெழுப்பக் கூடிய ஒரே கட்சி ஐக்கிய தேசிய கட்சியாகும்.

2001 மற்றும் 2015 ஆம் ஆண்டு ஆகிய இரண்டு சந்தர்ப்பங்களில் வீழ்ந்து கிடந்த இந்த நாட்டை நாம் முன்னேற்றியிருந்தோம். 2001 இல் வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரத்தை நாம் கட்டியெழுப்பினோம். 2015 இல் அரசியல் ரீதியாக வீழ்ந்திருந்த நாட்டை கட்டி எழுப்பினோம். ஆகவே, நாட்டை கட்டி எழுப்பக்கூடிய கட்சிக்கு ஆட்சியைக் கொடுத்துவிட்டு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பஷில் ராஜபக்ச வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என கூறினர். ஆம், பஷிலுக்கும் அவரது குடும்பத்துக்கும் எல்லா நன்றாக அமைந்துவிட்டது. ஆனால், நாட்டு மக்களுக்கு பட்டினி சாவில் இறக்கும் நிலையே ஏற்பட்டுள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் மக்கள் மேலும் பட்டினிச் சாவை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.

மன்னார் மாவட்ட மீனவர்கள் சீரற்ற காலநிலையினால் பாதிப்பு!

தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்ட மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடல் பகுதியில் வீசி வரும் அதீத காற்று காரணமாக மூன்றாவது நாளாக அதிகளவான மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளை தவிர்த்து வருகின்றனர்.

மன்னார் தீவக பகுதிகளை சூழ்ந்த கடல் பரப்பின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகின்ற மையினாலும் கடல் பகுதியில் அதீத காற்று வீசுவதனாலும் மீன்பிடி நடவடிக்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் உள்ளூர் மீனவர்களுடைய படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு கடற்கரையினை அண்மித்த பகுதிகளில் அடையவிடப்பட்டுள்ளமையும் காணக்கூடியதாக உள்ளது.

யாழ்ப்பாணத்தில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிப்பு

நாட்டில் நிலவிய பலத்த மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்படும் நிவாரணப் பயணம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

நேற்றும் இன்றும் யாழ். மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் சக்தி குழுவினர் நிவாரணப் பொருட்களை பகிர்ந்தளித்தனர்.

யாழ். மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொட்டும் மழையிலும் நிவாரணப்பொருட்கள் இன்று பகிர்ந்தளிக்கப்பட்டன.

மக்கள் சக்தியின் நிவாரணப் பயணத்தினூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

யாழ். ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட J/58, நாரந்தனை தெற்கு கிராம சேவையாளர் பிரிவில் மழை வெள்ளத்தினால் பாதிப்படைந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரணப்பொருட்கள் இன்று பகிர்ந்தளிக்கப்பட்டன.

இதனிடையே தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் J – 222, இளவாலை வடமேற்கு கிராம சேவையாளர் பிரிவின் சேந்தாங்குளம் கிராமத்தில் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் நேற்று நள்ளிரவு பகிர்ந்தளிக்கப்பட்டன.

தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவின் J /213 கிராம சேவையாளர் பிரிவிலுள்ள மல்லாகம் நீதவான் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள மக்களும் இம்முறை வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

குறித்த மக்களுக்கான நிவாரணப் பொருட்களும் மக்கள் சக்தி குழுவினரால் நேற்று பகிர்ந்தளிக்கப்பட்டன.

யாழ். சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்லுண்டாய் குடியிருப்பு பகுதியிலும், வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பொருட்கள் மக்கள் சக்தி குழாத்தினரால் நேற்று நள்ளிரவு வழங்கப்பட்டன.

Posted in Uncategorized

கூட்டமைப்பை அமெரிக்கா அழைக்கவில்லை : வெடித்தது புதிய சர்ச்சை – ரெலோ ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன்

அமெரிக்க அதிகாரிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைக்கவில்லை, அங்கிருக்கக் கூடிய சட்டவல்லுனர்களை சந்திப்பதற்கான தனிப்பட்ட பயணமாகவே இதனை கருத முடியும் என ரெலோ அமைப்பின் உத்தியோகப்பூர்வ பேச்சாளரும் சர்வதேச தொடர்பாளருமான சுரேன் குருசாமி தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியலில் தமிழர்கள் விவகாரம் அண்மைக்காலங்களில் பேசுபொருளாக மாறியிருக்கின்றது. ஆனால் தமிழர்கள் மத்தியில் இருக்கின்ற அடிப்படை சிக்கல்கள் தொடர்பில் தீர்வு நோக்கிய பயணத்தில் தமிழ் தலைமைகள் தடுமாறுகின்றனரா? அல்லது தென்னிலங்கை தலைமைகள் தமிழ் தரப்புக்களை பயன்படுத்துகின்றதா? என்ற கேள்விகள் இருக்கின்றன.

இந்த நிலையில் நாளைய தமிழ் சமூகம் எதை நோக்கி பயணிக்கப் போகின்றது என்பது தொடர்பான உண்மைத் தன்மைகளை விமர்சன ரீதியாக ஆராய்கிறது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி.

இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சியல் எம்மோடு இணைந்து மேலும் பல தகவல்களை வழங்குகிறார் சுரேன் குருசாமி அவர்கள்.

அவருடனான முழு நேர்காணல் இதோ,

Posted in Uncategorized

வெள்ளத்தில் மூழ்கிய கரையோர மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள்! ரெலோ யாழ் மாவட்ட பிரதி தலைவரும் யாழ் மாநகர பிரதி மேயர் கோரிக்கை

யாழ்ப்பாணம் கடற்கரையோரமாக உள்ள பகுதிகள் தொடர்ந்தும் பள்ளத்தில் காணப்படுவதால் அப்பகுதி மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்க முன்வருமாறு,ரெலோ யாழ் மாவட்ட பிரதி தலைவரும் யாழ் மாநகர பிரதி முதல்வரும் ஆன ஈசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் குடாநாட்டில் பெய்த அடைமழை காரணமாக கரையோரப் பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது.

பல குடும்பங்கள் இடம்பெயர்ந்த நிலையில் பலர் தமது வீடுகளில் கட்டில்கள் வாங்குதல் என அதற்கு மேல் இருக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே வெள்ளம் அற்ற பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் என அவர் தெரிவித்தார்.

நீதியமைச்சு, நிதியமைச்சு, பிரதமர் அலுவலகம் முன்பாக காணாமல்போனோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்

அடுத்த ஆண்டிற்கான வரவு, செலவுத்திட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு மாதாந்தம் 6,000 ரூபா இடைக்காலக்கொடுப்பனவை வழங்குவதற்கு அவசியமான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை காணாமல்போனோரின் குடும்ப ஒன்றியத்தினால் பிரதமர் நீதியமைச்சு, நிதியமைச்சு மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகியவற்றுக்கு முன்பாகக் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான வரவு, செலவுத்திட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு மாதாந்தம் தலா 6,000 ரூபா வீதம் வழங்குவதற்காக 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து ‘காணவில்லை’ என்பதை உறுதிப்படுத்தும் வகையிலான சான்றிதழ் கிடைக்கப்பெற்ற குடும்பங்கள் மற்றும் 2010 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க மரணப்பதிவுச்சட்டத்தின் 2 ஆவது சரத்திற்கு அமைவாக மரணத்திற்கான காரணமாக ‘நீண்டகாலமாகக் காணவில்லை’ என்று குறிப்பிடப்பட்ட சான்றிதழைத் தம்வசம் கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு 6,000 ரூபா இடைக்காலக்கொடுப்பனவை வழங்குவதற்கான அமைச்சரவை யோசனைக்குக் கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் திகதி அனுமதியளிக்கப்பட்டது.

அதன்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட 500 மில்லியன் ரூபாவில் இடைக்காலக்கொடுப்பனவாக 153 குடும்பங்களுக்கு தலா 6,000 ரூபா வீதம் 11 மில்லியன் ரூபா செலுத்தப்பட்ட நிலையில், மேலும் 489 மில்லியன் ரூபா எஞ்சியுள்ளது.

எனவே நாளைய தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கின்ற அடுத்த ஆண்டிற்கான வரவு, செலவுத்திட்டத்தின் ஊடாக எஞ்சியுள்ள 489 மில்லியன் ரூபாவைப் பயன்படுத்தி காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா இடைக்காலக்கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் மேலும் தேவையானளவு நிதியை ஒதுக்கீடு செய்யுமாறும் வலியுறுத்தி காணாமல்போனோரின் குடும்ப ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இன்றையதினம் நீதியமைச்சு, நிதியமைச்சு மற்றும் பிரதமர் அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு முன்பாக அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Posted in Uncategorized

சீன கப்பல் மீண்டும் பயணிக்க நிபந்தனைகள் முன்வைப்பு

சீனாவின் உரம் ஏற்றிய கப்பல் தற்போது இலங்கையின் நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்ட 12 கடல் மைல் தொலைவில் களுத்துறை கடற்பரப்பிற்கு அருகில் இலங்கை கடலில் நங்கூரமிட்டுள்ளது.

கப்பல் திரும்பி செல்ல வேண்டுமாக இருந்தால், Qingdao Seawin Biotech Company அரசாங்கத்திற்கு சில நிபந்தனைகள் முன்வைத்துள்ளதாக குறித்த உரத்தின் இறக்குமதியாளரான அரச உர நிறுவனம் தெரிவித்தது.

தாவரவியல் தனிமைப்படுத்தல் சேவையின் அனுமதி இன்றி வருகை தந்தமை மாத்திரமே கப்பல் மீண்டும் திரும்பி செல்வதற்கு காரணம் என ஊடகங்களுக்கு கருத்து வௌியிடுவது அதன் பிரதான விடயமாகும்.

கப்பல் மீண்டும் வருவதற்கு தேவைப்படும் நாட்களுக்கான நட்டத்தை செலுத்த வேண்டும் எனவும் சீனாவின் நிறுவனம் முன்வைத்துள்ள நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், கப்பலுக்கு எவ்வித கொடுப்பனவும் செலுத்தப்படாது என விவசாய அமைச்சு தெரிவித்தது.

அறிவிக்கப்படாத பொருளுக்கான கட்டணத்தை செலுத்துவதற்கு சட்டத்தின் பிரகாரம் அவசியம் இல்லை எனவும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் கே. ஜயசிங்க தெரிவித்தார்.

31 அரசியல் கட்சிகளுடன் மைத்திரி கலந்துரையாடல்

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத 31 அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையில் இன்று (11) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு டார்லி வீதியில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

Posted in Uncategorized

ஈஸ்டர் தாக்குதலில் சிரியாவில் பயிற்சி பெற்ற எவரும் பங்குபற்றவில்லை – ரணில்

ஈஸ்டர் தாக்குதலில் சிரியாவில் ISIS பயிற்சி பெற்ற முஸ்லிம் இளைஞர்கள் எவரும் பங்குபற்றவில்லை என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நான் இங்கு ஒன்றைக் கூற வேண்டும். சிரியாவுக்குச் சென்று ஐ.எஸ். பயங்கரவாதப் பயிற்சிப் பெற்ற எந்தவொரு நபராலும் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த விடயத்தை யாரும் அரசியல் மயப்படுத்தக்கூடாது. விசாரணை அறிக்கைகளை ஏன் நாடாளுமன்றுக்கு சமர்ப்பிக்கவில்லை என்பதுவே எமது கேள்வியாகும்.

சாதாரணமாக எந்தவொரு ஆணைக்குழுவில் விசாரணைகள் நடக்கும்போதும் சாட்சிகளின் வாக்குமூலம் உள்ளிட்டவற்றின் அறிக்கைகளை வெளிப்படுத்திக்கொண்டுதான் வருகிறோம்.

இவற்றை சபையில் இருந்து மறைக்க முடியாது. அவ்வாறு விசாரணைகளை மறைப்பது எமது வரப்பிரசாதங்களை மீறும் செயற்படாகும்.

தாக்குதல் இடம்பெற்ற உடனனேயே, பொலிஸாரும் சி.ஐ.டியினரும் இணைந்துதான் பொரளை உள்ளிட்ட பகுதிகளில் பதுங்கியிருந்த சூத்திரதாரிகளை கைது செய்தார்கள். மாறாக புலனாய்வுப் பிரிவினர் அல்ல என்பதையும் நான் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.