அனைத்துப் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளும் திங்கள் முதல் ஆரம்பம்

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளும் எதிர்வரும் திங்கட்கிழமை மீளத் திறக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

அனைத்து மாகாண தலைமைச் செயலாளர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள், மாகாண மற்றும் வலய கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஏனைய தொடர்பான அதிகரிகளுக்கான வழிகாட்டலிலேயே குறித்த விடயத்தை பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

பாகிஸ்தானுடன் இலங்கை கொண்டுள்ள இராஜதந்திர உறவுக்கு எதிராக போராட்டம்

இலங்கை அரசாங்கம் பாகிஸ்தான் அரசுடன் மேற்கொள்ளும் இராஜ தந்திர உறவினை எதிர்த்து இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டம் சிங்கள தேசிய ஒன்றிணைந்த கூட்டமைப்பால் கொழும்பு மெஜெஸ்டிக் சிட்டிக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டது.

ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தன்வசத்தபடுத்தியிருக்கும் தலிபான் அமைப்புடன் பாகிஸ்தான் ராஜ தந்திர உறவுகளை மேற்கொள்வது தெற்காசியாவில் அமைதியின்மையை ஏற்படுத்துமென்றும், இலங்கை அரசாங்கமும் , பாகிஸ்தான் அரசாங்கத்துடன் இராஜ தந்திர உறவுகளை மேற்கொண்டால் அது இலங்கைக்குக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை தெரித்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மாகாண சபை தேர்தல் தொடர்பில் உறுதியான முடிவு தேவை – கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன்

மாகாண சபை தேர்தல் தொடர்பில் அரசாங்கம் அவ்வப்போது மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருவது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருவதாக, வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் துணை செயலாளருமான கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதனை தவிர்ப்பதற்கு அரசாங்கம் உறுதியான முடிவை எடுக்க வேண்டும் என அறிக்கை ஒன்றினூடாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு நான்கு ஆண்டுகளும் வடக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு மூன்று ஆண்டுகளும் கடந்துள்ள போதிலும், இதுவரை தேர்தல் பற்றிய தெளிவற்ற, குழப்பகரமான கருத்துகளை பல்வேறு அமைச்சர்களும் நாளாந்தம் தெரிவித்து வருவதாக கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

19 ஆவது திருத்தத்தின் ஊடாக குறைக்கப்பட்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் அனைத்தும் 20ஆவது திருத்தத்தின் ஊடாக மீள பெறப்பட்டுள்ளதாகவும், தேர்தல் திருத்தங்களை பொறுத்தவரை தேவைப்படும் மாற்றங்களை அரசியல் யாப்பு திருத்தத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அரசாங்கம் புதிய அரசியல் யாப்பினை அறிமுகப்படுத்த முனைவதற்கு மாகாண சபையை ஒழிப்பது அல்லது அதிகாரம் எதுவுமற்ற ஒன்றாக மாற்றுவது தவிர, வேறு எந்த உருப்படியான காரணங்களையும் காண முடியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாகவும் இந்தியாவின் ஆதரவு அரசாங்கத்திற்கு அவசியப்படுவதன் காரணமாகவும் இந்திய அரசாங்கத்தை திருப்திப்படுத்தவே அடுத்த ஆண்டில் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என்று ஓரிரு அமைச்சர்கள் கூறி வருவதாகவும் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த குழப்பகரமான நிலைப்பாட்டிற்கு ஆட்சியாளர்கள் முற்றுப்புள்ளி வைத்து, மாகாண சபை தேர்தல் தொடர்பில் உறுதியான முடிவை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் துணை செயலாளர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் தனது அறிக்கையூடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

8 தமிழ் கைதிகளுக்கு சிறை மாற்றம்

சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வளிப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த வருகைதந்த போது அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, பொலிஸ்மா அதிபருக்கு உயர்நீதிமன்றம் நேற்று (21) கட்டளையிட்டது.

அதேபோல அந்த சம்பவத்துக்கு முகங்கொடுத்த கைதிகள் எண்மரையும் வேறு சிறைக்கு உடனடியாக மாற்றுமாறும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு, உயர்நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சரான லொஹான் ரத்வத்தே, சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சராக இருந்தபோது, செப்டெம்பர் 12 ஆம் திகதி, மதுபோதையில் தனது சகாக்களுடன் அனுராதபுர சிறைச்சாலைக்குச் சென்று, அங்கிருந்த தமிழ் அரசியல் கைதிகளை அழைத்து, அதிலிருவரை முழந்தாலிடச் செய்து, தனது கைத்துப்பாக்கியை எடுத்து சுட்டுத்தள்ளிவிடுவேன் என மிரட்டினார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.

அதன்பின்னர், சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் பதவியை மட்டும் செப்டெம்பர் 15ஆம் திகதியன்று திறந்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பில், தமிழ் அரசியல் கைதிகள் எண்மரும் தங்களுடைய சட்டத்தரணியூடாக அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

அம்மனுவை, நேற்று (21) ஆராய்ந்த போதே, உயர்நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது. துப்பாக்கியை தலையில் வைத்து சுட்டுவிடுவேன் என அச்சுறுத்தியமை, அடிப்படை உரிமை மீறலாகும்.

அதற்கு நட்டஈடு கோரியுமே மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு, உயர்நீதிமன்ற நீதியரசர்களான காமினி அமரசேகர, யசந்த கோதாகொட மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய மூன்று நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், ஆராயப்பட்டது.

அனுராதபுரம் சிறைச்சாலையில் தற்போது இருக்கும் தமிழ் அரசியல் கைகளான பூபாலசிங்கம் சூரியபாலன், மனியராசன் சுலக்ஷன், கணேவன் தராஜன், கந்தப்பு க​ஜேந்திரன், ராசதுரை சின்னுராசன், மெய்யமுத்து சுனதரன், டி.கந்தரூபன் ஆகியோரே இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

அதில், இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, அனுராதபுர சிறைச்சாலையின் அதிகார் எம்.எச்.ஆர் அஜித், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயம் எச்.எம்.டி.என் உபுல்தெனிய, நீதியமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சம்பவத்துக்கு முகங்கொடுத்திருந்த கைதிகள், அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து வட மாகாணத்திலுள்ள சிறைச்சாலையொன்றுக்கு தங்களை மாற்றுவதற்கான இடைக்கால கட்டளையை பிறப்பிக்குமாறும் மனுவில் கோரியிருந்தனர்.

பெண்டோரா விவகாரம் – தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு கோரிக்கை

பெண்டோரா ஆவணம் மூலம் கடந்த தினம் வௌிப்படுத்தப்பட்ட இந்நாட்டவர்களின் வௌிநாட்டு சொத்துக்கள் தொடர்பில் ஆராய பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று (22) உரையாற்றும் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“பெண்டோரா ஆவணங்கள் தொடர்பில் பாரிய கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. கிங், நில்வளா தொடர்பில் பேசுகின்றனர். இதில் இருந்து வெளிநாடுகளுக்கு பணம் சென்றுள்ளதாக கூறுகின்றனர். நிரூபமா ராஜபக்ஷவிற்கு அல்லது திரு நடேஷனுக்கு. நான் கூறுவது என்னவென்றால், பாராளுமன்ற தெரிவுக் குழு ஒன்றை நியமியுங்கள். நியமித்து இது தொடர்பில் பேசுவோம். உள்ள யோசனைகள், கருத்துக்களை பெறுவோம். இதற்கு இவ்வாறுதான் பணம் சென்றது என யாராவது கூறுவார்களாயின் அழைத்து வந்து பேசுவோம். குறைந்தளவில் அந்த இடத்திலாவது இதனை தீர்த்துக் கொள்ள முடியும். இது எங்கேயாவது நிறைவு பெற வேண்டும். கூச்சலிட்டவர்களையும் சாட்சியுடன் வர சொல்லுங்கள்.”

இதன்போது, தயாசிறி ஜயசேகர முன்வைத்த யோசனைக்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரிஹெல்ல குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

3 அமைச்சுக்களின் செயலாளர்கள், 2 தூதுவர்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் குழு அனுமதி

மூன்று அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் இரு தூதுவர்களுக்கு இன்றைய தினம் (22) கூடிய பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.

உயர் பதவிகள் பற்றிய குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையில் கூடியபோது இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி, கமத்தொழில் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜே.எம்.உதித் கே.ஜயசிங்க, இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ்.எம்.பியதிஸ்ஸ ஆகியோருக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது.

இதேவேளை, இத்தாலி குடியரசுக்கான இலங்கைத் தூதுவராக ஜகத் வெல்லவத்த அவர்களை நியமிப்பதற்கு வெளிவிவகார அமைச்சு எடுத்த தீர்மானத்துக்கும் பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. வெல்லவத்த இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராகப் பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

அதேநேரம், நைஜீரியா கூட்டாட்சிக் குடியரசுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராகப் பதவி வகிக்கும் ஜே.எம்.ஜனக பிரியந்த பண்டார அவர்களை மியன்மார் ஒன்றியக் குடியரசுக்கான தூதுவராக நியமிப்பதற்கும் இக்குழுவில் அனுமதி வழங்கப்பட்டதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

உயர் பதவிகள் பற்றிய குழுக் கூட்டத்தில் அமைச்சர்களான நிமல் சிறிபால.டி சில்வா, டக்ளஸ் தேவானந்தா, பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான வைத்திய கலாநிதி சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, விஜித ஹேரத், ரிஷாட் பதியுதீன், தலதா அத்துகோரல ஆகியோர் கலந்துகொண்டனர்.

Posted in Uncategorized

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதம் சைகை மொழியிலும் வழங்கப்படும்

2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட விவாதத்தை செவிப்புலனற்ற நபர்களுக்காக சைகை மொழியிலும் வழங்குவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (21) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார்.

சபாநாயகரின் ஆலோசனைக்கு அமைய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு இவ்விடயத்தைக் கவனத்தில் எடுத்துக் கொண்டதுடன், இதற்கமைய வரவுசெலவுத்திட்ட விவாதம் நடைபெறும் காலப்பகுதியில் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சமாந்தரமாக சைகை மொழிக்குத் தனியானதொரு கட்டமொன்றை வழங்குவதற்கும் இங்கு அனுமதி வழங்கப்பட்டது.

கோபா குழுவின் மூன்று அறிக்கைகள் 09ஆம் திகதி விவாதத்துக்கு நவம்பர் 08ஆம் திகதி திங்கட்கிழமை முதல் டிசம்பர் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை ஞாயிறு மற்றும் அரச விடுமுறை தினங்கள் தவிர சனிக்கிழமை உள்ளிட்ட ஏனைய அனைத்து நாட்களிலும் பாராளுமன்றம் கூடும் அத்துடன், நவம்பர் 09ஆம் திகதி வியாழக்கிழமை அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) சமர்ப்பித்துள்ள அறிக்கைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

கடந்த ஜூலை 20ஆம் திகதி, ஒக்டோபர் 06 மற்றும் 07ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கைகளே இவ்வாறு விவாதத்துக்கு உள்ளாக்கப்படவுள்ளன. இந்த சபை ஒத்திவைப்பு விவாதம் முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணிவரை நடைபெறவுள்ளது.

எதிர்வரும் நவம்பர் 08ஆம் திகதி திங்கட்கிழமை விசேட பாராளுமன்ற தினமாக அமையவிருப்பதுடன், அன்றையதினம் முழுவதையும் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்குவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய கொவிட் சூழல் காரணமாக பாராளுமன்ற அமர்வுகள் வரையறுக்கப்பட்டமையால் பாராளுமன்றத்தில் கேட்கப்படாத வாய்மூல விடைக்கான 50 கேள்விகளுக்கு அன்றையதினம் முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணிவரையான காலப்பகுதியை ஒதுக்குவதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

இதற்கமைய 08,09,10,11 ஆகிய தினங்களில் பாராளுமன்றம் கூடவிருப்பதுடன், 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு 2022ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பை (வரவுசெலவுத்திட்ட உரை) நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் முன்வைப்பார். இதன் பின்னர் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரச விடுமுறை தினங்கள் தவிர டிசம்பர் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை சனிக்கிழமை தினங்கள் உள்ளடங்கலாக அனைத்துத் தினங்களிலும் வரவுசெலவுத்திட்ட விவாதம் நடைபெறும்.

நவம்பர் 10ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 10.00 மணி முதல் 10.30 மணி வரை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் மு.ப 10.30 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் மு.ப 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை 2021 நிதியாண்டுக்கான 2020ஆம் ஆண்டு 07ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள், குடிவருவோர், குடியகல்வோர் (திருத்தச்) சட்டமூலம் ஆகியன விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளன.

நவம்பர் 11ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 10.00 மணி முதல் 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் மு.ப 11.00 மணி முதல் பி.ப 4.30 மணிவரை வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம், வேலையாட்களின் குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயது தொடர்பான சட்டமூலம், பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்தல் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, காணி எடுத்தற் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

நம்பர் 10 மற்றும் 11ஆம் திகதிகளில் பிற்பகல் 4.30 மணி முதல் 4.50 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காகவும், 4.50 மணி முதல் 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதத்துக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகள் இராணுவ காப்பரண்கள் அல்ல – ரெலோ கண்டனம்

எண்ணிக்கை கணக்குக்காக வேறு ஆட்களை நிறுத்துவதற்கு பாடசாலைகள் இராணுவ காப்பரண்கள் அல்ல. மக்களின் முதுகெலும்பில் ஒன்றான கல்வியையும் சீரழிக்க முற்படுகிறது அரசு என்று ரெலோ அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

அதிபர் ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பிலும் அதற்கெதிராக அரசாங்கம் எடுத்துவரும் கடுமையான நடவடிக்கைகள் குறித்தும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ ) வின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 

தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்கள் அதிபர்களுக்கு மாற்றீடாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நியமிப்பது என்று அரசாங்கம் அறிவித்திருப்பது நாட்டின் முதுகெலும்பில் ஒன்றான கல்வியையும் சீரழிக்கின்றது என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஏற்கனவே கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையால் பாடசாலைகள் காலவரையின்றி மூடப்பட்டு இளைய சமுதாயத்தின் கல்வி பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

நாட்டினுடைய முதுகெலும்பில் ஒன்றான விவசாயத்தை ஒட்டுமொத்தமாக சீரழித்து பஞ்ச நிலைமைக்கு இட்டுச் சென்றிருக்கிறது அரசு. உர மானியத்தை கோரிய விவசாயிகளுக்கு பதிலை வழங்காது இரசாயன உரத்தை ஒட்டுமொத்தமாக தடைசெய்கிறோம் என தவறான அறிவிப்பை செய்து இயற்கை பசளையை பயன்படுத்துமாறு தடாலடியாக கூறியதன் பின்விளைவே இதுவாகும்.

சர்வதேச நாடுகளை எடுத்தெறிந்து நடந்து திறைசேரியை வங்குரோத்தாக்கி பிணை முறிகளை விற்க முடியாமல், அளவு கணக்கில்லாமல் காசு அச்சடிக்கும் நிலைமைக்கு நாட்டை தள்ளியுள்ளது அரசு. வரலாற்றில் முதல் தடவையாக அந்நியச் செலாவணி இருப்பை துடைத்து எறிந்துள்ளது இந்த அரசு.

ஜிஎஸ்பி வரிச்சலுகையை மீளப் பெறுவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. அதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மாற்று வழிகளை யோசிக்கிறோம் என்று மத்திய வங்கி ஆளுநர் உட்பட அரசு வீரவசனம் பேசிக்கொண்டிருக்கிறது. நாட்டின் இன்னொரு முதுகெலும்பான ஆடை ஏற்றுமதி தொழிலை முடக்குகின்ற அபாய நிலையை தோற்றுவித்திருக்கிறது.

தற்போது நாட்டின் முதுகெலும்பில் ஒன்றாக திகழ்கின்ற மக்களின் அடிப்படை உரிமையான கல்வியையும் சீரழிக்க முற்பட்டிருக்கிறது அரசாங்கம். அதிபர்களும் ஆசிரியர்களும் சம்பள உயர்வு கோரி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். ஜனநாயக முறைகளை பின்பற்றி அரசியல் நோக்கங்களோ கலப்படமோ இல்லாத போராட்டம். இதற்கான தீர்வு பேச்சுவார்த்தையின் மூலம் எட்டப்படவேண்டும். அதை விடுத்து வேறு அரசு அதிகாரிகளை அவர்கள் இடத்திற்கு நியமிப்போம் என்று ஏட்டிக்குப் போட்டியாக நடப்பதென்பது அரசாங்கத்தினுடைய முறை அல்ல என்பதை அரசு தெரிந்து கொள்ள வேண்டும். எண்ணிக்கை கணக்குக்காக வேறு ஆட்களை நிறுத்துவதற்கு பாடசாலைகள் ராணுவ காப்பரண்கள் அல்ல. மாறாக நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற சந்ததியை வளர்கின்ற கல்விக்கூடங்கள். இதை பயிற்றப்பட்ட ஆசிரியர்களால் தான் நடத்த முடியும். விதண்டாவாத போக்குகளின் மூலம் ஏற்கனவே நாட்டை அதலபாதாளத்தில் தள்ளி இருக்கும் அரசாங்கம் கல்வியையும் சீரழிக்க முற்படுகின்ற நடவடிக்கையாகவே இதை நாம் நோக்குகிறோம். பதிலீடாக அனுப்பப்படும் அதிகாரிகள் நாளை சம்பள உயர்வு கேட்டால் அவர்களுக்கு பதிலாக நீங்கள் யாரை கொண்டு வரப் போகிறீர்கள் என்ற கேள்வி எழுகிறது. ஒரு பிரச்சினைக்கு தீர்வு காண்பதுதான் வழியே தவிர அதற்கான மாற்றீடாக ஆட்களை நிரப்புவது தலைவலியை தீர்ப்பதற்கு தலையணையை மாற்றுவதற்கு ஒப்பாகும்.

நாட்டின் அரசியல் பிரச்சினை தீர்வுக்கு உரியவர்களுடன் பேச்சு நடத்தாமல் விதண்டாவாதமாக இழுத்தடிப்பது போல அல்லாமல் சம்பந்தப்பட்ட அதிபர்கள் ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைக்கு மதிப்பளித்து அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு ஒரு சுமுகமான முடிவை காண்பது நாட்டினுடைய எதிர்கால சந்ததியின் கல்வியை காப்பாற்றும்.

லொஹானின் செயற்பாடு தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவு!

அனுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சம்பவத்தில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் செயற்பாடு தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, சட்டமா அதிபரின் ஆலோசனையில் கீழ் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செப்டம்பர் 15 ஆம் திகதி, கைதிகளை முழந்தாழிட செய்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து சிறை நிர்வாகம் மற்றும் கைதிகளின் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளடக்கப்படாதவர்களுக்கான அறிவிப்பு

2020 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளடக்கப்படாதவர்கள், அது தொடர்பாக அறிவிப்பதற்கான சந்தர்ப்பம் இன்று (21) முதல் நவம்பர் 17 ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட காலத்திற்குள் எதிர்ப்புக்களை தெரிவிக்க முடியும்.

மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள் மற்றும் கிராம அலுவலர் அலுவலகங்களிலும் வாக்காளர் இடாப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

18 வயதைப் பூர்த்தி செய்த இளைஞர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்காக, வாக்காளர் பதிவுச் சட்டமூலம் அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை, 18 வயதைப் பூர்த்தி செய்த வாக்காளர்களின் பெயர்களைக் கொண்ட முழுமையான வாக்காளர் பட்டியல்களைத் தயாரிப்பதற்கான வாய்ப்பு இதன் மூலம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.