பாடசாலைகள் இராணுவ காப்பரண்கள் அல்ல – ரெலோ கண்டனம்

எண்ணிக்கை கணக்குக்காக வேறு ஆட்களை நிறுத்துவதற்கு பாடசாலைகள் இராணுவ காப்பரண்கள் அல்ல. மக்களின் முதுகெலும்பில் ஒன்றான கல்வியையும் சீரழிக்க முற்படுகிறது அரசு என்று ரெலோ அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

அதிபர் ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பிலும் அதற்கெதிராக அரசாங்கம் எடுத்துவரும் கடுமையான நடவடிக்கைகள் குறித்தும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ ) வின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

 

தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்கள் அதிபர்களுக்கு மாற்றீடாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நியமிப்பது என்று அரசாங்கம் அறிவித்திருப்பது நாட்டின் முதுகெலும்பில் ஒன்றான கல்வியையும் சீரழிக்கின்றது என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஏற்கனவே கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையால் பாடசாலைகள் காலவரையின்றி மூடப்பட்டு இளைய சமுதாயத்தின் கல்வி பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

நாட்டினுடைய முதுகெலும்பில் ஒன்றான விவசாயத்தை ஒட்டுமொத்தமாக சீரழித்து பஞ்ச நிலைமைக்கு இட்டுச் சென்றிருக்கிறது அரசு. உர மானியத்தை கோரிய விவசாயிகளுக்கு பதிலை வழங்காது இரசாயன உரத்தை ஒட்டுமொத்தமாக தடைசெய்கிறோம் என தவறான அறிவிப்பை செய்து இயற்கை பசளையை பயன்படுத்துமாறு தடாலடியாக கூறியதன் பின்விளைவே இதுவாகும்.

சர்வதேச நாடுகளை எடுத்தெறிந்து நடந்து திறைசேரியை வங்குரோத்தாக்கி பிணை முறிகளை விற்க முடியாமல், அளவு கணக்கில்லாமல் காசு அச்சடிக்கும் நிலைமைக்கு நாட்டை தள்ளியுள்ளது அரசு. வரலாற்றில் முதல் தடவையாக அந்நியச் செலாவணி இருப்பை துடைத்து எறிந்துள்ளது இந்த அரசு.

ஜிஎஸ்பி வரிச்சலுகையை மீளப் பெறுவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. அதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மாற்று வழிகளை யோசிக்கிறோம் என்று மத்திய வங்கி ஆளுநர் உட்பட அரசு வீரவசனம் பேசிக்கொண்டிருக்கிறது. நாட்டின் இன்னொரு முதுகெலும்பான ஆடை ஏற்றுமதி தொழிலை முடக்குகின்ற அபாய நிலையை தோற்றுவித்திருக்கிறது.

தற்போது நாட்டின் முதுகெலும்பில் ஒன்றாக திகழ்கின்ற மக்களின் அடிப்படை உரிமையான கல்வியையும் சீரழிக்க முற்பட்டிருக்கிறது அரசாங்கம். அதிபர்களும் ஆசிரியர்களும் சம்பள உயர்வு கோரி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். ஜனநாயக முறைகளை பின்பற்றி அரசியல் நோக்கங்களோ கலப்படமோ இல்லாத போராட்டம். இதற்கான தீர்வு பேச்சுவார்த்தையின் மூலம் எட்டப்படவேண்டும். அதை விடுத்து வேறு அரசு அதிகாரிகளை அவர்கள் இடத்திற்கு நியமிப்போம் என்று ஏட்டிக்குப் போட்டியாக நடப்பதென்பது அரசாங்கத்தினுடைய முறை அல்ல என்பதை அரசு தெரிந்து கொள்ள வேண்டும். எண்ணிக்கை கணக்குக்காக வேறு ஆட்களை நிறுத்துவதற்கு பாடசாலைகள் ராணுவ காப்பரண்கள் அல்ல. மாறாக நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற சந்ததியை வளர்கின்ற கல்விக்கூடங்கள். இதை பயிற்றப்பட்ட ஆசிரியர்களால் தான் நடத்த முடியும். விதண்டாவாத போக்குகளின் மூலம் ஏற்கனவே நாட்டை அதலபாதாளத்தில் தள்ளி இருக்கும் அரசாங்கம் கல்வியையும் சீரழிக்க முற்படுகின்ற நடவடிக்கையாகவே இதை நாம் நோக்குகிறோம். பதிலீடாக அனுப்பப்படும் அதிகாரிகள் நாளை சம்பள உயர்வு கேட்டால் அவர்களுக்கு பதிலாக நீங்கள் யாரை கொண்டு வரப் போகிறீர்கள் என்ற கேள்வி எழுகிறது. ஒரு பிரச்சினைக்கு தீர்வு காண்பதுதான் வழியே தவிர அதற்கான மாற்றீடாக ஆட்களை நிரப்புவது தலைவலியை தீர்ப்பதற்கு தலையணையை மாற்றுவதற்கு ஒப்பாகும்.

நாட்டின் அரசியல் பிரச்சினை தீர்வுக்கு உரியவர்களுடன் பேச்சு நடத்தாமல் விதண்டாவாதமாக இழுத்தடிப்பது போல அல்லாமல் சம்பந்தப்பட்ட அதிபர்கள் ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைக்கு மதிப்பளித்து அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு ஒரு சுமுகமான முடிவை காண்பது நாட்டினுடைய எதிர்கால சந்ததியின் கல்வியை காப்பாற்றும்.