பயணத்தடை மேலும் நீடிப்பு

மாகாணங்களுக்கு இடையில் அமுலில் இருக்கும் பயணத்தடை எதிர்வரும் 21ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைமுறையில் இருக்கும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை, இம்மாதம் 21ஆம் திகதி வியாழக்கிழமை வரை கடுமையாகக் கடைபிடிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

இம்மாதம் 19 மற்றும் 20ஆம் திகதிகள் விடுமுறை தினங்களாக அமையப்பெற்று நீண்ட விடுமுறையுடன் கூடிய வார இறுதி அமையப்பெறவுள்ளமையால், அனைத்து மாகாண எல்லைகளிலும் போக்குவரத்து நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  , பாதுகாப்புத் துறையினருக்குப் பணிப்புரை விடுத்தார்.

வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக நேற்று  முற்பகல், இடம்பெற்ற கொவிட் ஒழிப்பு ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தின் போதே, ஜனாதிபதி  மேற்கண்ட பணிப்புரையை விடுத்தார்.

கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களான 18 – 19 வயதுக்கு இடைப்பட்டோருக்கான தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கைகள், இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன  தெரிவித்தார்.

அத்துடன், ஏனைய மாவட்டங்களிலுள்ள மேற்படி வயதுப் பிரிவைச் சேர்ந்த அனைத்துப் பிள்ளைகளுக்கும், இம்மாதம் 21ஆம் திகதி முதல், பாடசாலைகள் மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் ஊடாகத் தடுப்பூசி ஏற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சுகாதாரத் துறையினரின் பரிந்துரைகளுக்கு அமைவாக, பாடசாலை மாணவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசியும் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்படவுள்ளன.

பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பின்னர், சுகாதாரப் பரிந்துரைகளுக்கமைய, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கான மூன்றாவது டோஸ் (Booster) தடுப்பூச்சியைச் செலுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமையன்று, மேலும் 6 இலட்சம் ஃபைசர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளன என்றும் கோரப்பட்டிருந்த தடுப்பூசிகள் தொடர்ந்த கிடைத்துக்கொண்டு இருக்கின்றன என்றும், கொவிட் தடுப்புச் செயலணியின் உறுப்பினரும் விசேட வைத்திய நிபுணருமான பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

கொவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை மேலும் குறைத்துக் கொள்வதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆய்வு செய்யப்பட வேண்டுமென்றும் தொற்றுக்கு இலக்காகும் நோயாளிகள் தற்போது கண்டறியப்படும் பிரதேசங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி, அவ்விடங்களைத் தனிமைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி  எடுத்துரைத்தார்.

கொவிட் ஒழிப்புக்காக சுகாதாரத் தரப்பினர் பின்பற்றிய வீட்டுத் தனிமைப்படுத்தல் வேலைத்திட்டமானது, உலக சுகாதார ஸ்தாபனத்தின் விசேட பாராட்டைப் பெற்றுள்ளது என, விசேட வைத்திய நிபுணர் அநுருத்த பாதெனிய   கொவிட் ஒழிப்புச் செயலணிக் கூட்டத்தின் போது அறிவித்தார்.

Posted in Uncategorized

வெளிநாடு செல்ல வேண்டாம் என சுற்றறிக்கை

வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி முதல் வரவு செலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பு இடம்பெறும் டிசெம்பர் 10ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அதிகாரபூர்வ அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காகவும் வெளிநாடு செல்ல வேண்டாம் என்று ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

அனைத்து அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கே இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தை வெற்றிகரமாக ஆக்குவதற்கு அனைத்து தரப்பினரும் முடிந்தவரை பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற காரணத்துக்காக ஜனாதிபதியின் செயலாளர் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஆண்டுக்கான (2022) அரசாங்க வரவு செலவுத்திட்ட முன்மொழிவை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அடுத்த மாதம் 12 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.

அன்றிலிருந்து வரவு செலவுத்திட்ட விவாதம் நடைபெற்று இறுதி வாக்கெடுப்பு டிசெம்பர் 10 அன்று நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஒன்லைன் விளையாட்டுக்களை தடை செய்யுமாறு கோரிக்கை

இலங்கையில்  ஒன்லைன் விளையாட்டுக்களில் இருந்து சிறுவர்களை பாதுகாப்பதற்காக தலையீடு செலுத்துமாறு ´லக்மவ தியநியோ´ அமைப்பு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை காலை குறித்த கடிதத்தை ஒப்படைத்துள்ளதாக குறித்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்கால தலைமுறையை ஒன்லைன் விளையாட்டுக்களில் இருந்து மீட்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் பண்டாரகம, ரைகம பகுதியில் ஒன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி இருந்த 16 வயது சிறுவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டிருதமை குறிப்பிடத்தக்கது.

மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட் இலங்கை தொடர்பில் பிரஸ்தாபிப்பு

இலங்கையில் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் உள்ளடங்கலாக பல்வேறு விடயங்களிலும் நிலைமாறுகால நீதியை உறுதிப்படுத்துவதற்கும் பொறுப்புக்கூறல் சார்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற்குமான நடவடிக்கைகள் தமது அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சமூக, மனிதாபிமான மற்றும் கலாசாரம் தொடர்பான குழுவின் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதன்போது சிறுவர், முதியோர் மற்றும் வறுமைக்கோட்டின்கீழ் வாழ்வோரின் பாதுகாப்பு தொடர்பில் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த பிரதிநிதிகளால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இலங்கை தொடர்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அத்தோடு இலங்கை, மெக்ஸிகோ மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் இடம்பெற்ற வலிந்துகாணாமலாக்கப்படல்கள் மற்றும் காணாமல்போனோர் விவகாரம் உள்ளடங்கலாக நிலைமாறுகால நீதியை உறுதிசெய்வதற்காகத் தமது அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட் விபரித்தார்.
அதுமாத்திரமன்றி மத்திய ஆபிரிக்கக்குடியரசு, கொலம்பியா, மாலி மற்றும் காம்பியா ஆகிய நாடுகளில் உண்மையைக் கண்டறிவதற்கான ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டமை குறித்தும் சுட்டிக்காட்டினார்.
மேலும் கருத்துவெளியிட்ட அவர், ‘ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைத் தொடர்ந்து பெலாரஸில் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஆராய்வதற்கும் இலங்கையினால் முன்னெடுக்கப்படும் பொறுப்புக்கூறலுடன் தொடர்புடைய செயற்பாடுகளையும் கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்டன’ என்றும் குறிப்பிட்டார்.
அதுமாத்திரமன்றி மனித உரிமைகளை வலுப்படுத்துவதற்கு அவசியமான அனைத்துவிதமான ஒத்துழைப்புக்களையும் தமது அலுவலகம் பல்வேறு நாடுகளுக்கும் தொடர்ந்து வழங்கிவந்திருப்பதாகவும் அவர் இதன்போது எடுத்துரைத்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

கொவிட் வைரஸின் தோற்றத்தை ஆராய புதிய குழுவைநியமித்தது உலக சுகாதார ஸ்தாபனம்!

கொவிட் வைரஸின் தோற்றத்தை தீர்மானிக்க தமக்கு கிடைத்துள்ள “கடைசி வாய்ப்பு” இது என்று உலக சுகாதார ஸ்தாபனம்புதன்கிழமை (14) தெரிவித்தது.

இதற்காக கொவிட் தொற்று தொடர்பான முதலாவது தொற்றாளரின் தகவல்களை வழங்குமாறு சீனாவை உலக சுகாதார ஸ்தாபனம்வலியுறுத்தியுள்ளது.

கொவிட் வைரஸின் தோற்றம் பற்றி ஆராய்வதற்கான புதிய அறிவியல் ஆலோசனைக் குழுவின் 26 உறுப்பினர்களை உலக சுகாதாரஸ்தாபனம் புதன்கிழமை பெயரிட்டது.

இந்த குழுவில் வுகானில் நடந்த கூட்டு விசாரணையில் பங்கேற்ற மரியன் கூப்மன்ஸ், தியா ஃபிஷர், ஹங் நுயென் மற்றும் சீன விலங்குசுகாதார நிபுணர் யாங் யுங்குய் ஆகியோர் அடங்குகின்றனர்.

இதன் போது பேசிய உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸ், கொவிட் வைரஸ்தோற்றம் தொடர்பான முதல் நாட்களின் மூல தரவு பற்றாக்குறையால் விசாரணை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வக தணிக்கைக்குஅழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்தார்.

கொவிட் வைரஸ் தொடர்பான உலக சுகாதார ஸ்தாபனத்தின் தொழில்நுட்ப குழுவின் அதிகாரியான மரியா வான் கெர்கோவ், வைரஸ்விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு எவ்வாறு பரவியது என்பதை அறிய இன்னும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றுகூறினார்.

இதனிடையே ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான சீனாவின் தூதுவர் சென் சூ, ஒரு செய்தியாளர் மாநாட்டில் கூட்டு ஆய்வின் முடிவுகள்“மிகவும் தெளிவாக உள்ளன” என தெரிவித்தார்.

கொவிட் தொற்றுக்குள்ளான முதல் நபர் மத்திய சீன நகரமான வுஹானில் டிசம்பர் 2019 இல் பதிவாகியது.

சீனாவின் ஆய்வகங்களில் ஒன்றிலிருந்து வைரஸ் கசிந்தது என்று கோட்பாடுகளை சீனா மீண்டும் மீண்டும் நிராகரித்து வருகின்றது. மேலும் ஆய்வுகளை நடத்துவதற்கு சர்வதேச விஞ்ஞானிகளுடன் ஒத்துழைக்க சீனா மறுத்து வருகின்றது.

Posted in Uncategorized

தொலைபேசி சேவை வழங்கல் வலையமைப்பை மாற்றுவதற்கு அனுமதி

எந்தவொரு தொலைபேசி வலையமைப்பில் இருந்தும் பாவனையார்களுக்கு வேறு ஒரு தொலைபேசி வலையமைப்பிற்கு தங்களது இலக்கத்தை மாற்றிக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொலைபேசி பாவனையாளர்கள் அனைவருக்கும் தமது தொலைபேசி எண்ணை வேறொரு தொலைபேசி சேவை வழங்கல் வலையமைப்புக்கு மாற்றுவதற்கு அனுமதிக்கும் சேவைக்கு  (Number Portability)  சட்ட அனுமதி கிடைத்துள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்னாயக்க ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

தமிழ் இளைஞர்கள் புலனாய்வு அச்சுறுத்தலால் நாட்டைவிட்டு வெளியேற முயற்சிக்கின்றார்கள் – சிறீதரன்

தமிழ் இளைஞர்கள் புலனாய்வு அச்சுறுத்தலால் நாட்டைவிட்டு வெளியேற எத்தனிக்கின்றார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்   உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இலங்கைக்கான கனேடியத் தூதுவரிடம் தெரிவித்தார்.

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினான் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின்  காரியாலயத்தில் நேற்று (வியாழக்கிழமை) சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களால் தமிழர்கள் தற்போது அரச இயந்திரங்களால் நசுக்கப்படும் முறை தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது

தமிழர்கள் தமது உணர்வுபூர்வமான நினைவுகளை மேற்கொள்வதற்கு இப்போது இருக்கும் அரசாங்கம் கொரோனாவை காரணம் காட்டி தடைகள் விதிப்பது தொடர்பாகவும் அதனை மீறி நினைவேந்தல்கள் இடம்பெற்றால் புலனாய்வாளர்கள் மூலமாக நினைவேந்தலில் கலந்து கொண்டவர்களை அச்சுறுத்துவது தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டதுடன் இதேவேளை அரசாங்கம் பாரிய விழாக்களை எந்தவித தடைகளும் இன்றி நடாத்துவது குறித்தும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலாலும் தமிழ் இளைஞர்களிற்கு வேலைவாய்ப்பு கொடுப்பதில் உள்ள பின்னடைவாலும் இலங்கையில் வட பகுதியில் உள்ள தமிழ் இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன் தொல்பொருள் என்ற போர்வையில் தமிழர்களின் பூர்விக நிலங்கள் அபகரிக்கப்படுவது தொடர்பாகவும் தமிழர்களின் பூர்விக அடையாளங்களை அழித்து பௌத்த சிங்கள அடையாளங்களை திணிப்பது தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதேவேளை மாகாண சபைகளினுடைய அதிகாரத்திற்குள் இருக்கின்ற பாடசாலைகள், வைத்தியசாலைகளின் அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றது.

அத்துடன் வெளியில் காணி அதிகாரம்  பொலிஸ் அதிகாரம் மட்டும் பேசிக்கொண்டு இருக்கும் போது இருக்கின்ற அதிகாரத்தினையும் இலங்கை அரசு மாகாணங்களிடம் இருந்து பறித்துக்கொண்டு இருக்கிறார்கள் எனவும் இதுவரை மாகாண அரசின் அதிகாரத்திற்குட்பட்ட வடக்கு மாகணங்களில் உள்ள மாவட்ட வைத்தியசாலைகளின் கட்டுப்பாடுகளை இலங்கை அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதுடன் மாகாண பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக ஆக்குவதன் ஊடாகவும் தமிழர்களின் அதிகாரம் பறிக்கப்படுகிறது எனவும் கனேடியத் தூதுவருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன்,

கனேடிய தேசிய விழாவில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதற்கும் ஜெனிவா தீர்மானங்களில் கனடிய அரசாங்கம் மேற்கொண்டுவரும் ஒத்துழைப்புகளுக்கும் கனேடிய அரசிற்கும் நன்றி தெரிவித்தார்.

கனடிய அரசாங்கம் மனிதாபிமானத்துடனும் பக்கர்ச்சார்வபு இன்றியும் தொடர்ந்தும் ஜெனிவா தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு தருவோம் எனவும் கனடிய தூதுவர் Decide Mckinnon இன் உறுதிமொழி வழங்கியுள்ளார்.

முருந்தெட்டுவே ஆனந்த தேரர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள அவசர கடிதம்

பன்டோரா ஆவணத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள சகல இலங்கையர்கள் தொடர்பிலும் பக்கசார்பற்றதும் நியாயமானதுமான விசாரணைகளை முன்னெடுத்து சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி நாட்டை பாதுகாக்கும் மக்கள் குரல் அமைப்பின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
அத்தோடு திருக்குமார் நடேசன் தொடர்பில் மாத்திரமின்றி, பன்டோரா ஆவணத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள ஏனைய நபர்கள் தொடர்பிலும், 2016 இல் சர்வதேச ஊடகவியலாளர் அமைப்பொன்றினால் வெளியிடப்பட்ட ஆவணத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவரால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

பன்டோரா ஆவணம் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது.
எனினும் பத்திரிகையொன்றில் பன்டோரா ஆவணத்தில் 93 இலங்கையர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எனவே இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணைகள் ஒருவருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக அன்றி பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அனைவர் தொடர்பிலும் இடம்பெற வேண்டும் என்று நீங்கள் ஆலோசனை வழங்கவேண்டும்.
இந்த விசாரணைகள் சுயாதீனமாகவும் நியாயமான முறையிலும் முன்னெடுக்கப்பட்டு, தவறிழைத்தவர்களுக்கு பாரபட்சமின்றி தண்டனை வழங்கப்படவேண்டும் என்பதே அனைத்து மக்களதும் எதிர்பார்ப்பாகும்.
இதேபோன்று 2016 ஆம் ஆண்டு சர்வதேச ஊடகவியலாளர் அமைப்பொன்றினால் வெளியிடப்பட்ட ஆவணத்தில் 65 இலங்கையர்களது பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
இவ்வாறு பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் தொடர்பில் இலங்கையிலுள்ள பிரபல ஆங்கில பத்திரிகையொன்று 2016.05.10 ஆம் திகதி தகவல்களை வெளியிட்டுள்ளது.
எனவே இவ்வாறு சட்ட விரோதமாக வெளிநாடுகளில் சொத்துக்களை மற்றும் வங்கி கணக்குகள் தொடர்பில் பெயர்குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து இலங்கையர்கள் தொடர்பிலும் பக்கச்சார்பற்ற நியாயமான விசாரணைகளை முன்னெடுக்குமாறு நாம் வலியுறுத்துகின்றோம்.
அதற்கமைய ஒரு நபருக்கு எதிராக மாத்திரமின்றி இவ்வாறு செயற்படும் அனைவருக்கு எதிராகவும் விசாரணைகளை முன்னெடுத்து சட்டத்தை நடைமுறைப்படுத்தி, சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை நிரூபிக்குமாறு வலியுறுத்துகின்றோம்.
இதன்மூலம் எந்தவொரு நபரும் இவ்வாறு சட்ட விரோதமாக வெளிநாடுகளில் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகளை பேண முற்படல் மற்றும் ஊழல் – மோசடிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் இல்லாமலாக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

பன்டோரா விவகாரம்; சிறப்பு விசாரணை ஆரம்பம்

சர்வதேச ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்திய, பன்டோரா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் மீது உள்நாட்டு இறைவரித் திணைக்களம் சிறப்பு விசாரணையை ஆரம்பித்துள்ளதாக அறியமுடிகிறது.

பன்டோரா  ஆவணங்களில் உள்ள இலங்கையர்களின் வரி செலுத்துதல் தொடர்பான வரி கோப்புகள் பரிசோதிக்கப்பட்டு ஏதேனும் வரி ஏய்ப்பு உள்ளதா என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் கோரிக்கை தொடர்பில் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் விளக்கம்

மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் எங்களுடைய கோரிக்கை பிரதானமானதாக உள்ளது. எனினும் 13 வது திருத்தச்சட்டத்தில் கூறப்படுகின்ற அனைத்து விடயங்களையும் நடை முறைப்படுத்துகின்ற ஒரு வழியை கையாளுகின்ற முறைமையை இந்தியா செய்ய வைக்க வேண்டும் என்பது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கோரிக்கை என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று (14) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் திட்டமிடப்படாத செயற்பாட்டினால் இன்று போராட்டங்கள் இடம் பெற்று வருகிறது. குறிப்பாக விவசாயிகளின் நிலைமை மோசமான சூழலில் காணப்படுகின்றது. நாட்டிற்கே உணவை வழங்குகின்ற விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சாமானிய விவசாயிகள் தமது நிலங்களில் விவசாயம் செய்வது ஒரு பக்கம். குத்தகை என்ற அடிப்படையில் நிலத்தை பெற்று விவசாயம் செய்கின்ற நிலையும் காணப்படுகிறது. மேலும் தமது தங்க நகைகளை அடகு வைத்தும், வங்கிக் கடன்களை பெற்றும் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர்.

தற்போது விவசாயிகளுக்கு உரம் வழங்கப்படாமையால் மிக மோசமான ஒரு நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் தமது உணவுக்கான பிரச்சினையையும் எதிர் நோக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. திட்டமிடப்படாத செயற்பாடு என கூறியமைக்கு காரணம் விவசாயிகளை இயற்கையான பசளைக்கு மாற்ற வேண்டும் என்றால் அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். உடனடியாக செயற்கை உரத்தை நிறுத்தி இயற்கை உரங்களுக்கு மாறுங்கள் என்று கூறினால் விவசாயிகளால் என்ன செய்ய முடியும்? வேடிக்கையாக உள்ளது.

எனவே விவசாயிகளுக்கு செயற்கை உரங்களை வழங்கிக் கொண்டு இயற்கையான உரத்திற்கு மாறுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். ஆனால் அரசாங்கம் படு மோசமான நிலமையை ஏற்படுத்தி, இன்று வெளியில் இருந்து பசளையை கொண்டு வர உள்ளதாக கூறுகின்றனர்.

விவசாயிகள் தற்போது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் காலமாக உள்ளது. ஆனால் உரம் இல்லை, மருந்து இல்லை. இவ்வாறான சூழ்நிலையில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய நடவடிக்கைகளுக்காக அடகு வைக்கின்ற தங்க நகைகளை மீட்கவும், பெற்றுக் கொண்ட கடனை மீளச் செலுத்தவும் விவசாயிகள் திண்டாடுகின்றனர்.

இதனால் இலங்கை பாரிய பஞ்சத்தை எதிர்நோக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எங்களுடைய விவசாயிகளுக்கு உரத்த வழங்கி விவசாயத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளுடனும், விவசாய அமைப்புக்களுடனும் கலந்துரையாடி வருகிறோம்.என தெரிவித்தார்.

மேலும் மாகாண சபை தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், இந்தியாவின் அழுத்தம் காரணமாக மாகாண சபை தேர்தலை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாறி மாறி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவிக்கிறார்கள்.

அரசியல் சாசனம் திருத்தம் செய்யப்பட்டதன் பின்னர் தான் தேர்தல் இடம்பெறும் என கூறுகிறார்கள்.

அடுத்த வருடம் தேர்தலை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கின்றார்கள். புதிய தேர்தல் முறையில் தான் தேர்தல் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கின்றார்கள்.

13 ஆவது திருத்தச் சட்டம் என்று டெல்லியில் சென்று பிரதமர் அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போது தன் அதிகாரங்களை பிளஸ் என்று சொல்லி வெளியில் வந்த பின் 13 ஐ கொடுக்க முடியாது என்று சொல்லி பேசுகின்ற சந்தர்ப்பங்கள் போல் உள்ளது.

எனவே மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் எங்களுடைய கோரிக்கை பிரதானமானதாக உள்ளது.

அதே நேரத்தில் 13 வது திருத்தச்சட்டத்தில் கூறப்படுகின்ற அனைத்து விடயங்களையும் நடை முறைப் படுத்துகின்ற ஒரு வழியை கையாளுகின்ற முறைமையை இந்தியா செய்ய வைக்க வேண்டும் என்பது எமது கோரிக்கை.

அதிகாரம் இல்லாத மாகாண சபையை நாங்கள் ஏற்றுக் கொண்டு அதனூடாக எங்களது நிலங்களை பாதுகாப்பது மற்றும் எமது பிரச்சனைகளை கையாள்வது என்பது மிக ஒரு கேளித்தனமான விடயமாக நாங்கள் பார்க்கின்றோம்.

எனவே 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்தியதன் பின்னர் மாகாண சபை தேர்தலை நடத்துவது என்பது தான் சிறந்ததாக அமையும். இந்தியா இவ்விடயத்தில் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன் என தெரிவித்தார்.

மேலும் இந்திய மீனவர்களின் அத்து மீறிய பிரவேசம் கட்டுப்படுத்தப்பட்ட வேண்டும். மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமது மீனவர்களை காப்பாற்ற வேண்டிய நடவடிக்கையில் இறங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைளை அவர் எடுக்கும் போது அவருடன் சேர்ந்து செயல்பட தயாராக இருக்கிறோம். பாதிக்கப்பட்ட எமது மீனவர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும்.

எனவே எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாமல் இருக்க திட்டத்தை வகுத்து செயல்படுவதே சாலச் சிறந்தது. என அவர் தெரிவித்தார்.

இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை தான் ஏற்க தயார் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் வினவினர்.

இதன் போது அவர் கருத்து தெரிவிக்கையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைவராக உள்ள பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனுக்கு பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை என்பது கூட்டுத்தலைமையாக இருக்கும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை யை தான் ஏற்க தயார் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து அவரின் தனிப்பட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.

அதை ஏற்பதா? இல்லையா? என்பதை தமிழ் தேசியக்கூட்டமைப்பு முடிவெடுக்கும்.

சம்பந்தனின் காலத்தின் பின் கூட்டுத்தலைமையாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு செயல்படும். அவரின் தனிப்பட்ட கருத்தை பெரிய விடயமாக பார்க்கத் தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized