மஹிந்தானந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை? எதிரணி எம்.பி வெளியிட்ட தகவல்

விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே  தொடர்ந்தும் உர பிரச்சினையை தீர்க்க தவறினால், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க, பிரதான எதிர்க்கட்சியாக, ஐக்கிய மக்கள் சக்தி விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கத் தவறியமை பாரிய அநீதியான ஒன்றெனவும் அவர் கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,

”இலங்கை இன்று எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை, உரப் பிரச்சனை. இதனால் நெற் செய்கை மாத்திரமல்லாமல் அனைத்து விவசாயம் சார்ந்த செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடவில்லை, தமது செய்கைக்கு போதுமான உரம் வழங்க வேண்டும் எனறே கோருகின்றனர்.

விவசாயிகளின் குறைகளை நிவர்த்தி செய்ய அதிகமான காலஅவகாசம் எடுக்கப்பட்டுள்ளது. ஆகையினால், விவசாயிகளின் இந்தப் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும்.

அத்துடன் விவசாய அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான எதிர்கால நடவடிக்கையை தீர்மானிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு ஒன்றுகூடி ஆராயும்.

நம்பிக்கையில்லா பிரேரணையை தாக்கல் செய்வதன் மூலம் அரசாங்கத்திற்கு ஒரு செய்தியை அனுப்ப கட்சி முயற்சிக்கும் என திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.

அரசாங்கத்தை மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளும் அமைச்சர் -வெளிவந்த தகவல்

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவால் அரசாங்கம் மீண்டும் சிரமத்திற்குள்ளாவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க  இம்முறை இந்த நெருக்கடிக்கு முகம் கொடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, கொவிட் நெருக்கடி அதிகரித்தபோது, ​​பிலியந்தல நகரம் முடக்கப்பட்டது. எனினும் அமைச்சர் லொக்குகே தலையிட்டு 24 மணி நேரத்திற்குள் முடக்கலை நீக்கினார். அந்த நேரத்தில், சுகாதார அதிகாரிகளுக்கும் அமைச்சர் லொக்குகேவுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் எழுந்தன.

அதன் பின்னர், கொழும்பு மாவட்ட பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்குமார, அமைச்சர் காமினி லொக்குகே பாதுக்கா காவல் நிலையத்தின் ஓஐசியை நியமிப்பதில் தேவையற்ற அழுத்தம் கொடுத்ததாக குற்றம் சாட்டினார். இருதரப்புக்கும் இடையிலான மோதல்கள் பல வாரங்கள் நீடித்தது மற்றும் இது தொடர்பில் பொதுஜன பெரமுனவின் தலைவர்களும் தலையிட வேண்டியிருந்தது.

இந்த முறை வனஜீவராசிகள் துறைக்கு சொந்தமான பிலியந்தலை பகுதியில் 72 ஏக்கர் நிலம் தொடர்பாக அமைச்சர் லொக்குகே மற்றும் இராஜாங்கஅமைச்சர் விமலவீர திசாநாயக்க இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

பொது அறங்காவலர் துறையின் கீழ் இருந்த இந்த நிலம் தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் செயல்பாடுகளுக்கு பயன்படுத்த வனஜீவராசிகள் துறைக்கு மாற்றப்பட்டது. அந்த நிலத்தில் கால்நடை மருத்துவமனை மற்றும் கால்நடை தீவனத் தொழிற்சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அமைச்சர் காமினி லொக்குகே இப்பகுதியில் ஒரு வெளிப்புற மிருகக்காட்சிசாலையைத் திறக்க திட்டமிட்டுள்ளார். அங்கு ஒரு வெளிப்புற மிருகக்காட்சிசாலை கட்டப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க பிரதமரிடம் முறைப்பாடு செய்துள்ளார், லொக்குகேயின் நடவடிக்கைகளால் அரசாங்கம் மீண்டும் ஒரு பெரிய பிரச்சனையை சந்திக்க நேரிடும் என்று இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 13 ஆம் திகதி பிரதமர் தலைமையில் கலந்துரையாடல் நடத்தப்பட்டதாகவும் ஆனால் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மிருகக்காட்சிசாலையின் தொழிலாளர்கள் ஏற்கனவே தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர் மற்றும் தெஹிவளை உயிரியல் பூங்காவிற்கு அருகில் மற்றொரு மிருகக்காட்சிசாலையை கட்டுவது பயனற்றது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் நடவடிக்கைகளுக்காக தற்போது தயாரிக்கப்பட்ட திட்டங்களின்படி தொடர்புடைய நிலத்தைப் பயன்படுத்துவது மிகவும் பொருத்தமானது என்றும் ஊழியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Posted in Uncategorized

நிருபமா ராஜபக்ஷவின் சொத்துவிபரங்களை வெளியிடுமாறு ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் கோரிக்கை!

பண்டேரா பேப்பர்ஸ் சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் சொத்து விபரங்களை வெளிப்படுத்துமாறு ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு 3 தகவல் அறியும் உரிமை விண்ணப்பப்படிவங்களைத் தாக்கல் செய்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு, நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்திற்கே இவை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

1975 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடன சட்டத்திற்கு அமைவாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட பதவி வகிக்கும் அரச அதிகாரிகள் தமது வாழ்க்கைத் துணை மற்றும் அவரைச் சார்ந்துள்ள பிள்ளைகளின் சொத்துக்கள், பொறுப்புக்கள் உள்ளடங்கலான சொத்து மற்றும் பொறுப்புக்களின் வருடாந்த பிரகடனங்களை சமர்ப்பிக்க வேண்டும் என ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், இவ்விடயத்தில் பணத்தூயதாக்கல் இடம்பெற்றிருக்கக்கூடுமா என்பது குறித்து உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் நிதிக்குற்றவிசாரணைப்பிரிவிற்கும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

எனது அரசியல் வாழ்வின் சோக நிகழ்வு – மைத்திரிபால சிறிசேன

2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறுதினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் தனது அரசியல் வாழ்க்கையில் மிகவும் சோகமான நிகழ்வாக உள்ளது என்று  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலன்னறுவையில் இன்று (17) காலை இடம்பெற்ற நிகழ்சியின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்விடயத்தை அவர் தெரிவித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் என்பது சிக்கலான விடயம், அது பற்றி விரிவாக விவாதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த அவர்,  மாவட்ட நீதிமன்றங்கள் உட்பட ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பான சுமார் 20 வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றன என்றும் குறிப்பிட்டார்.

அனைவருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் இருப்பதாகத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, கத்தோலிக்க சமூகத்தின் மீது, தான், மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருப்பதாகவும் அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

உர விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், அரசாங்கம் இரசாயன உர இறக்குமதியை நிறுத்த தீர்மானித்த போது, ​​அதன் எதிர்கால விளைவுகள் குறித்து ஜனாதிபதி உட்பட அரசாங்கத்துக்கு பல சந்தர்ப்பங்களில் தெரிவிக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டினார்.

விவசாயிகள் இப்போது ஆதரவற்றவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Posted in Uncategorized

களத்தில் குதிக்கத் தயாராக இருக்கிறேன் -க.வி.விக்னேஸ்வரன் (பா.உ)

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணைய வேண்டும், “நீங்கள் வரவேண்டும்” எனக் கேட்டால் என்னுடைய கடமை என ஏற்று களத்தில் குதிக்கத் தயாராக இருக்கிறேன் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தேர்தல் சம்பந்தமாக எந்த வித பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. எல்லா கட்சிகளும் இணைந்து சில விடயங்களை அரசாங்கத்துடன் பேச முடியுமா என்பது தொடர்பாகவே ஆராயப்பட்டு வருகின்றது. அதில் தேர்தல் சம்பந்தமான பேச்சுக்கள் இதுவரை எழவில்லை. என்னை பொறுத்த வரையிலே மாகாண சபை தேர்தலை அரசாங்கம் தற்போதைக்கு நடத்தாது என்பதே என்னுடைய கருத்து. அரசாங்கத்திடம் பணமில்லை. கருத்துகணிப்பு மூலமாக அரசாங்கம் தனக்குள்ள ஆதரவு குறைந்ததை உணர்ந்துள்ளது.

ஆகவே மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் பிரச்சினை ஆகிவிடும் என்கிற அடிப்படையில் அவர்கள் தேர்தலை தள்ளி வைக்கவே விரும்புவார்கள்.

அரசாங்கத்திற்கு மாகாணசபையை தொடர்ந்தும் வைத்திருக்க கூடாது என்ற எண்ணமே இருக்கிறது. புதிய அரசியல் யாப்பின் மூலம் மாகாணசபை முறையை நீக்கி முற்றிலும் சிங்கள பௌத்த அரசியலமைப்பை கொண்டு வருவார்களோ என்பது எனது சந்தேகம்.

தற்போது மாகாணசபை தேர்தலை நடாத்துவது அரசாங்கத்திற்கு நன்மையைத் தராது தீமையையே தரும் என்ற அடிப்படையிலே மாகாணசபைத் தேர்தல் நடைபெறாது என்பதே என்னுடைய கருத்து.

மாகாணசபைத் தேர்தல் நடைபெற்றால் நீங்கள் முதலமைச்சர் வேட்பாளராக களம் இறங்குவீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது, என்னை அரசியலுக்குள் கொண்டு வருவதற்கு கட்சிகளின் தலைவர்கள் பலர் சேர்ந்து எத்தனையோ முறை அழைத்ததன் பேரில் தான் இறுதியாக உடன்பட்டேன். இப்பொழுதும் எங்கள் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து நீங்கள் வரவேண்டும் எனக் கேட்டால் என்னுடைய கடமை என ஏற்று களத்தில் குதிக்கத் தயாராக இருக்கிறேன்” என்றார்.

Posted in Uncategorized

மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினராக இந்தியா மீண்டும் தெரிவு !

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2022 முதல் 2024 ஆம் ஆண்டுகளுக்கான உறுப்பினர் பதவிக்கு இந்தியா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

3 ஆண்டுகள் பதவிக் காலம் கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் பொறுப்புக்கான தெரிவு 76 ஆவது ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் நடைபெற்றது.

2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரை நீடிக்கவிருக்கும் அந்தப் பொறுப்புக்கு 18 புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

193 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா. பொது சபையில், இந்தியாவுக்கு ஆதரவாக 184 வாக்குகள் கிடைத்த நிலையில் பெருவாரியான வாக்குகள் பெற்று இந்தியா மீண்டும் தெரிவாகியுள்ளது.

இதேவேளை மூன்று ஆண்டுகளின் பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா மீள இணைந்துள்ளது.

இதன்போது 193 நாடுகளில் 168 நாடுகள், மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா மீள இணைவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

Posted in Uncategorized

அரசாங்கம் நாட்டு மக்களை நடு வீதிக்கு கொண்டு வந்து விட்டுள்ளது – மனோ

ராஜபக்ச அரசாங்கம் நாட்டு மக்களை நடு வீதிக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. இயலாமையுடன் செயற்படும் இந்த அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு மக்கள் தயாராகிவிட்டனர்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக தலவாக்கலை நகரில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ” தோட்டத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மீனவர்கள், விவசாயிகள் என அனைவரையும் ராஜபக்ச அரசாங்கம் நடுவீதிக்கு கொண்டுவந்துவிட்டது. ஏற்கனவே பொருளாதார பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களே தற்போதைய விலை உயர்விலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்காக எவரும் குரல் எழுப்புவதில்லை. தமிழ் முற்போக்கு கூட்டணியே குரல் எழுப்புகின்றது. இன்று தலவாக்கலையில் நடைபெறும் போராட்டம் மலையகம் எங்கும் முன்னெடுக்கப்படும்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்படும் எனக்கூறி ஏமாற்றியுள்ளனர். இன்று தோட்டங்கள் கம்பனிகளிடம் அடகுவைக்கப்பட்டுள்ளன. இந்த அரசாங்கத்தால் முடியாது. முடியாதவர்கள் வீட்டுக்கு செல்வதே நல்லது.” -என்றார்.

Posted in Uncategorized

புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சு – ஜனாதிபதி : தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் பேச்சில்லை – அரசாங்கம்

நாட்டில் தடை செய்யப்பட்ட நாடு கடந்த தமிழ் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தப்போவதில்லை என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

உள்நாட்டுப் பிரச்சனைகள் உள்ளக பொறிமுறையின் ஊடாக தீர்க்கப்பட வேண்டும் என்றும் இது தொடர்பாக புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தப் போவதாகவும் ஐ.நா. பொதுச் செயலாளரிடம் ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில் உலக தமிழர் பேரவை போன்ற தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளுடன் நேரடி பேச்சுவார்த்தைகள் இருக்காது என வெளிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் நல்லிணக்க செயன்முறையின் ஒரு பகுதியாக அரசு சார்பற்ற அமைப்புக்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் புலம்பெயர் உறுப்பினர்களுடன் கலந்துரையாட தயாராக இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

அந்தவகையில் 2021 ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாட்டில் இருந்து நாடு திரும்பியதும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்திப்பர் என ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

உலக தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழ் காங்கிரஸ், அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரஸ், கனேடிய தமிழ் தேசிய கவுன்சில், தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஆகியன தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை திறப்புகளை பலவந்தமாக பெற பொலிஸார் முயற்சி: ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள அதிபர்களிடமிருந்து பலவந்தமாக பாடசாலை திறப்புகளை பெறுவதற்கு அரசியல்வாதிகள் முயன்று வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

அமைச்சர் காமினி லொக்குகே உள்ளிட்ட சில அரசியல்வாதிகள் அதிபர்களுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்ததாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

200-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளின் அதிபர்களை பொலிஸார் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டுள்ளமை அபாயகரமான விடயம் என அவர் சுட்டிக்காட்டினார்.

பொலிஸாருக்கு பொறுப்பாகவுள்ள பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, பொலிஸார் மூலம் தொலைபேசியில் அழைத்து அச்சுறுத்தல் விடுப்பதாக ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு முன்வைத்தார்.

காலி முகத்திடலுக்கு எம்மை அழைத்துச் சென்று ஆப்பு வைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டிஆரச்சி கூறியுள்ளார். இந்த நாட்டின் பிள்ளைகளுக்கு இரண்டு வருடங்களாக கல்வியை வழங்குவதில் தோல்வி கண்டுள்ள அரசாங்கத்திற்கு நீங்கள் வழங்கும் தண்டனை என்னவென அவரிடம் நான் கேட்கின்றேன் என ஜோசப் ஸ்டாலின் வினவினார்.

இந்தியா சலுகைக் காலம் வழங்க வேண்டும்: சுப்ரமணிய சுவாமி ட்விட்டரில் பதிவு

இலங்கை இன்னும் 5 வருடங்களின் பின்னர் கடனை செலுத்துவதற்கு இந்தியாவினால் சலுகைக் காலம் வழங்கப்பட வேண்டும் என இந்திய மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வௌிவிவகார கொள்கையை புதுப்பிப்பதற்கான தருணம் உதயமாகியுள்ளதாகவும் சுப்ரமணியன் சுவாமி தமது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

இந்திய வௌியுறவு செயலாளர் மற்றும் வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் ஆகியோர் இலங்கைக்கு வருகை தந்து, இந்திய இலங்கை வௌியுறவுத் தொடர்பை பாதிப்படையச் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வௌியுறவு செயலாளரின் விஜயத்தின் பின்னர் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் தேவை தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் சுட்டிக்காட்டியது.

இவ்வாறான பின்புலத்திலேயே, தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் பசில் ராஜபக்ஸ, மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

Posted in Uncategorized