ஜெனிவாவில் இலங்கை விவகாரத்தில் சாதகமான தீர்வு எட்டப்படும் – பேராசிரியர் ஜி.எல். பீரிஷ்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடரில் ஒவ்வொரு வருடமும் இலங்கை மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை.
எதிர்வரும் மாதம் நடைப்பெறவுள்ள மனித உரிமை மற்றும் ஐ. நா. பொதுச்சபை கூட்டத்தொடரில் இலங்கை விவகாரத்தில் சாதகமான தீர்வு எட்டப்படும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஷ் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

தமிழகத்துக்குள் நுழைந்த இலங்கைக் குழு – கேரள கடல்பரப்பில் பாதுகாப்பு தீவிரம்

இலங்கையர்கள் குழுவொன்று தமிழகத்திற்கு மீன்பிடி படகுகளில் பயணம் செய்திருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலை அடுத்து கேரள கடற்கரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடலோர பொலிஸாருடன், கடலோர காவல்படையினர் இணைந்து இந்த ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தமிழகத்தை அடைந்த பிறகு, அவர்கள் சாலை வழியாக கொச்சிக்கு செல்லலாம் என்று அறிகுறிகள் உள்ளன.
அதன்பிறகு கிடைக்கப் பெற்ற தகவல்களின்படி மீன்பிடி படகுகளில் வெளிநாட்டிற்கு பயணம் செய்வது அவர்களின் நோக்காக இருக்கும் என்றும் இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

18 வரை நீடித்தால் 7500 உயிர்களைக் காக்கலாம் – உலக சுகாதார நிறுவனம்

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீடிக்கும் பட்சத்தில் 7 ஆயிரத்து 500 பேரின் உயிரை காப்பாற்ற முடியும் என உலக சுகாதார ஸ்தாபனத்தால் நியமிக்கப்பட்டுள்ள சுயாதீன தொழில்நுட்ப குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேநிலைமை எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி வரை நீடித்தால் 10 ஆயிரம் பேரை பாதுகாக்க முடியும் எனவும் குறித்த குழு பரிந்துரைத்துள்ளது.

நேற்றுடன் நிறைவடைந்த கடந்த 7 நாட்களில், இலங்கையில் மரண வீதம் 5.52 வீதமாக காணப்படுவதாக குறித்த குழு குறிப்பிட்டுள்ளது.

டெல்டா தொற்று வேகமாக பரவியதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

இலங்கை தாங்காது – இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால்

இலங்கை போன்ற ஒரு நாட்டை மூடுவதால் ஏற்படும் பொருளாதார தாக்கம் சிறியதல்ல என்று குறிப்பிட்டுள்ள நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் நாட்டை மேலும் மூடி வைப்பதை இலங்கையால் தாங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

மக்கள் தொகையில் பாதி பேரைப் பூட்டுவதால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்வது கடினம் என்று தெரிவித்த அவர், இது நாட்டில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர வணிகத் துறையில் 4.5 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.

நாடு பூட்டப்பட்டதால் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் நாளாந்த இழப்பு ரூ .15 பில்லியனுக்கும் அதிகமாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை போன்ற ஒரு நாட்டை மூடுவதால் ஏற்படும் பொருளாதார தாக்கம் சிறியதல்ல என்றும், முடக்கத்தைக் குறைக்க அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மறைந்த தமிழ் ஈழ விடுதலை இயக்க ரெலோ தலைவர் சிறி சபாரத்தினம் அவர்களின் 69 வது பிறந்த தினம்

மறைந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ தலைவர் சிறி சபாரத்தினம் அவர்களின் 69 வது பிறந்த தினம் இன்றைய தினமாகும் 28.08.1952.

ஈழ விடுதலை என்பது இந்தியாவின் பாதுகாப்புடன் பின்னிப் பிணைந்துள்ளது என்ற தீர்க்க தரிசனத்துடன் விடுதலை போராட்டத்தை முன்னெடுத்த மாபெரும் தலைவ‌ர்.

அத்தகைய தலைவரின் (69) பிறந்த தினத்தை உலகெங்கும் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள் நினைவு கூறுகிறார்கள்.

தமிழ் ஈழ விடுதலை இயக்க உறுப்பினர்கள் மற்றும் மக்கள் சார்பான பிறந்த நாள் வாழ்த்துக்களுடன் அஞ்சலிகளை செலுத்துகிறோம்.

Posted in Uncategorized

குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதில்லையென முடிவு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நாட்டை மூடுமாறு கோரிஇ அரசாங்கத்தின் பத்து பங்காளிக் கட்சிகளின் தலைவர்களால் அனுப்பப்பட்ட கடிதத்தில் கையெழுத்திட்ட மூன்று அமைச்சரவை அமைச்சர்கள், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதில்லையென தீர்மானித்துள்ளனர் என்று அறியமுடிகிறது.

கடந்த வியாழக்கிழமை (26) இரவு அமைச்சர் விமல் வீரவன்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இவ்விடயம் தொடர்பான சந்திப்பொன்று அரசாங்கத்தின் பத்து பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கிடையில் நடைபெற்றுள்ளது. இதன் போது, பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் முன்வைத்த நாட்டு முடக்கம் தொடர்பான கடிதம் குறித்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

நாட்டை மூட வேண்டாம் என்று அமைச்சரவை முடிவு எடுத்த போதிலும், நாட்டை மூடக் கோரி மூன்று அமைச்சர்களின் கையொப்பங்களுடன் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியதன் பின்னணியில் சதி இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் கடந்த வாரம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதேவேளை, ஆளும் கட்சியின் உதவி அமைப்பாளராக செயற்படும் ஸ்ரீலங்கா மகஜன கட்சியின் தலைவர் அசங்க நவரத்ன அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

2021ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்படாதவர்கள் இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, 18 வயது நிரம்பிய அல்லது இதுவரை பதிவு செய்யாதவர்கள் www.elections.gov.lk என்ற இணையதளத்தைப் பார்வையிட்டு, வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம்.

மேலும் குறித்த இணையதளத்தைப் பார்வையிடுவதன் ஊடாக ஒருவர் 2021 ஆம் ஆண்டிற்கான வாக்காளராகப் பதிவு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளாரா என்பதையும் சரிபார்த்துக்கொள்ள முடியும்.

இதேவேளை, நீங்கள் முன்பு 2020 வாக்காளர் பட்டியலில் பதிவு செய்திருந்தால், 2021 ஆம் ஆண்டுக்கு மீண்டும் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலை தொடர்ந்து காணப்படுகின்றமையினால், 2021 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் எண்ணும் மாதிரிகளை வீட்டுக்கு வீடு விநியோகம் செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் நால்வர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இரண்டு இணைப் பேராசிரியர்கள் உட்பட நான்கு பேரைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று சனிக்கிழமை(28.08.2021) பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்ற போதே இவ்வாறு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தாவரவியல் துறைத் தலைவரும், இணைப் பேராசிரியருமான இ.கபிலன் தாவரவியலில் பேராசிரியராகவும், இரசாயனவியல் துறையின் முன்னாள் தலைவரும், இணைப் பேராசிரியருமான திருமதி மீனா செந்தில்நந்தனன் இரசாயனவியலில் பேராசிரியராகவும், தொழிநுட்ப பீடத்தின் பீடாதிபதியும், விவசாய பீடத்தின் முன்னாள் பீடாதிபதியுமான கலாநிதி.சிவமதி சிவச்சந்திரன் பயிரியல் பேராசிரியராகவும், பௌதிகவியல் துறையின் முன்னாள் தலைவர் கலாநிதி க.விக்னரூபன் பௌதிகவியல் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்படுவதற்கே பேரவை ஒப்புதல் அளித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மீண்டும் உச்சத்தை தொட்ட கொரோனா மரணங்கள்!

நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 214 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,371 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 416,182 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 353,191 ஆக அதிகரித்துள்ளது.

Posted in Uncategorized

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதிவரை நீடிப்பு

நாடளாவிய ரீதியில் தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

COVID ஒழிப்பு குழுவின் இன்றைய கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்தார்.

கடந்த 20 ஆம் திகதி இரவு 10 மணி தொடக்கம் ஆகஸ்ட் 30 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை ஏற்கனவே தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், மேலும் 06 நாட்களுக்கு நீடித்து செப்டம்பர் 06 ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமுல்படுத்த இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகள், ஔடத உற்பத்தி, விநியோகம், ஏற்றுமதி, விவசாயம் மற்றும் ஆடை கைத்தொழில் உள்ளிட்ட பிரிவுகள் எவ்வித இடையூறுமின்று சேவைகளை முன்னெடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.