குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதில்லையென முடிவு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நாட்டை மூடுமாறு கோரிஇ அரசாங்கத்தின் பத்து பங்காளிக் கட்சிகளின் தலைவர்களால் அனுப்பப்பட்ட கடிதத்தில் கையெழுத்திட்ட மூன்று அமைச்சரவை அமைச்சர்கள், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதில்லையென தீர்மானித்துள்ளனர் என்று அறியமுடிகிறது.

கடந்த வியாழக்கிழமை (26) இரவு அமைச்சர் விமல் வீரவன்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இவ்விடயம் தொடர்பான சந்திப்பொன்று அரசாங்கத்தின் பத்து பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கிடையில் நடைபெற்றுள்ளது. இதன் போது, பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் முன்வைத்த நாட்டு முடக்கம் தொடர்பான கடிதம் குறித்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

நாட்டை மூட வேண்டாம் என்று அமைச்சரவை முடிவு எடுத்த போதிலும், நாட்டை மூடக் கோரி மூன்று அமைச்சர்களின் கையொப்பங்களுடன் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியதன் பின்னணியில் சதி இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் கடந்த வாரம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதேவேளை, ஆளும் கட்சியின் உதவி அமைப்பாளராக செயற்படும் ஸ்ரீலங்கா மகஜன கட்சியின் தலைவர் அசங்க நவரத்ன அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

2021ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்படாதவர்கள் இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, 18 வயது நிரம்பிய அல்லது இதுவரை பதிவு செய்யாதவர்கள் www.elections.gov.lk என்ற இணையதளத்தைப் பார்வையிட்டு, வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம்.

மேலும் குறித்த இணையதளத்தைப் பார்வையிடுவதன் ஊடாக ஒருவர் 2021 ஆம் ஆண்டிற்கான வாக்காளராகப் பதிவு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளாரா என்பதையும் சரிபார்த்துக்கொள்ள முடியும்.

இதேவேளை, நீங்கள் முன்பு 2020 வாக்காளர் பட்டியலில் பதிவு செய்திருந்தால், 2021 ஆம் ஆண்டுக்கு மீண்டும் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலை தொடர்ந்து காணப்படுகின்றமையினால், 2021 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் எண்ணும் மாதிரிகளை வீட்டுக்கு வீடு விநியோகம் செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

யாழ்.பல்கலைக்கழகத்தில் நால்வர் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இரண்டு இணைப் பேராசிரியர்கள் உட்பட நான்கு பேரைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று சனிக்கிழமை(28.08.2021) பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்ற போதே இவ்வாறு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தாவரவியல் துறைத் தலைவரும், இணைப் பேராசிரியருமான இ.கபிலன் தாவரவியலில் பேராசிரியராகவும், இரசாயனவியல் துறையின் முன்னாள் தலைவரும், இணைப் பேராசிரியருமான திருமதி மீனா செந்தில்நந்தனன் இரசாயனவியலில் பேராசிரியராகவும், தொழிநுட்ப பீடத்தின் பீடாதிபதியும், விவசாய பீடத்தின் முன்னாள் பீடாதிபதியுமான கலாநிதி.சிவமதி சிவச்சந்திரன் பயிரியல் பேராசிரியராகவும், பௌதிகவியல் துறையின் முன்னாள் தலைவர் கலாநிதி க.விக்னரூபன் பௌதிகவியல் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்படுவதற்கே பேரவை ஒப்புதல் அளித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

மீண்டும் உச்சத்தை தொட்ட கொரோனா மரணங்கள்!

நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 214 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,371 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 416,182 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 353,191 ஆக அதிகரித்துள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதிவரை நீடிப்பு

நாடளாவிய ரீதியில் தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

COVID ஒழிப்பு குழுவின் இன்றைய கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்தார்.

கடந்த 20 ஆம் திகதி இரவு 10 மணி தொடக்கம் ஆகஸ்ட் 30 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை ஏற்கனவே தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், மேலும் 06 நாட்களுக்கு நீடித்து செப்டம்பர் 06 ஆம் திகதி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமுல்படுத்த இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகள், ஔடத உற்பத்தி, விநியோகம், ஏற்றுமதி, விவசாயம் மற்றும் ஆடை கைத்தொழில் உள்ளிட்ட பிரிவுகள் எவ்வித இடையூறுமின்று சேவைகளை முன்னெடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

தமிழக முதல்வருக்கு ரெலோவின் தலைவர் நன்றி தெரிவிப்பு

ஈழத் தமிழர் சார்பில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்றைய தினம் நடைபெற்ற விவாதத்தின் போது இலங்கைத் தமிழர்களுக்கு நல திட்டங்களை அறிவித்தமைக்கு நன்றி தெரிவித்து அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரது கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இந்தியாவில் தமிழ்நாட்டில் வாழும் ஈழத்தமிழ் அகதிகளுக்காக தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.
நீண்டகாலமாக தமிழ்நாட்டின் அகதி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழ் உறவுகளுக்கு நிரந்தரமாக வதிவிட வசதிகளையும், அவர்களுடைய எதிர்கால நலன் கருதிய வளர்ச்சித் திட்டங்களையும், நம்முடைய சந்ததிகளின் உயர்கல்விக்காக உதவித் திட்டத்தையும் மற்றும் இலங்கையில் மீள குடியமர விரும்புகின்றவர்களிற்கான குழுவினையும் அமைத்து ஆக்கபூர்வமாக நடவடிக்கையை நீங்கள் முன்னெடுத்திருக்கிறீர்கள்.
முதன்முறையாக தமிழ்நாடு சட்டசபையில் ஒரு முதல்வர் இப்படியான திட்டங்களை அறிவித்ததோடு அதற்காக நிதி ஒதுக்கீட்டையும் வழங்கி ஆக்கபூர்வமான செயல் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தி இருப்பதற்கு தங்களுக்கு எமது மக்கள் சார்பாக உளம் கனிந்த நன்றியையும் தங்களது நல்லாட்சி தொடர்வதற்கு வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றேன் என்று குறிப்பிடப்பட்டள்ளது.

Posted in Uncategorized

இலங்கைத் தமிழர்களுக்கு நல திட்டங்கள் – தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

இலங்கைத் தமிழர்களுக்கு விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவை விதி எண்-110-ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசினார்.

“1983-ம் ஆண்டு முதல் தற்போது வரை 3,4,269 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகத் தமிழகத்துக்கு வந்துள்ளனர். இவர்களில், 18,944 குடும்பங்களைச் சேர்ந்த 58,822 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தமிழகத்தில் 29 மாவட்டங்களில் அமைந்துள்ள 2 சிறப்பு முகாம்கள் உட்பட 108 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 13,540 குடும்பங்களைச் சேர்ந்த 34,087 நபர்கள் காவல் நிலையங்களில் பதிவு செய்து வெளிப்பதிவில் வசித்து வருகிறார்கள் என்றார்.

Posted in Uncategorized

அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதே இன நல்லிணக்க ஆரம்பம் – ரெலோ இளைஞர் அணி தலைவர்

அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதே இன நல்லிணக்கத்தின் ஆரம்பம் என்று ரெலோ இளைஞர் அணி தலைவரும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள அவர்,

சர்வதேச நெருக்கடிகளில் இருந்து தம்மைப் பாதுகாக்க இலங்கை ஐனாதிபதி கோட்டாபய தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற் கொள்ள ஓய்வு நிலை நீதிபதி அசோக டீ சில்வா தலைமையில் ஒரு குழுவை நியமித்துள்ளார்.

ஐனாதிபதி நாட்டின் மிக நெருக்கடியான நிலையில் சர்வதேச நாடுகளின் உதவிகளை பெற முயற்சிப்பதற்கு போலியாக நடிப்பதாகவே தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது. அதனால் ஐனாதிபதி நியமிக்கும் எந்தக் குழுக்களையும் ஆணைக்குழுக்களையும் நம்பத் தயார் இல்லை. காரணம் கடந்த காலத்தில் ஆணைக்குழு அறிக்கைகள் யாவும் காலத்தைக் கடத்துவனவாகவும் பாதிக்கப்பட்ட தரப்புக்கு நீதியை நீர்த்துப் போகச் செய்வதாக அமைந்ததையும் பாதிக்கப்பட்டவர்கள் மறக்கமாட்டார்கள். இது தமிழ் மக்களுக்கு மிகவும் கசப்பான உண்மை.

நாட்டில் இனங்களிடையே ஒரு சிறந்த நல்லெண்ண வெளிப்பாடு உருவாக ஐனாதிபதி கோட்டாபயாவால் முடியும் அதற்கான சர்வ அதிகாரம் அவரது கையில் உள்ளது அதனைப் பயன்படுத்தி முதலில் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதாகி தண்டனைக் காலத்தைக் கடந்து சிறையில் இருக்கும் அரசியல் கைதிகள் அனைவரையும் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும். இதனை பாதிக்கப்பட்ட மக்களும் கைதிகளும் தொடர்ச்சியாக கோரிக்கையாக முன்வைத்து வருகின்றனர் இக் கோரிக்கையை தமிழ் அரசியல் கட்சிகளும் கோரிவருகின்றனர். இதனை சர்வதேச நாடுகளும் அழுத்தங்களை கொடுத்து இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வழி ஏற்படுத்த வேண்டும்.

அரசியல் கைதிகளின் பொது மன்னிப்பின் பின்பே பயங்கரவாத தடைச்சட்டத்தின் திருத்தம் தொடர்பான உண்மையை ஒரளவு நம்ப முடியும் ஆனால் இந்த நாட்டின் நிலையான இன நல்லிணக்கத்திற்கு ஒரே வழி பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதே ஆகும் இதுவே பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கை.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தற்காலிக வழிகளை போலியாக கையாள்வதை அரசாங்கம் நிறுத்தி நிலையான தீர்வுக்கு இதய சுத்தியுடன் இன நல்லிணக்கத்தின் ஆரம்ப முயற்சிகளை நிறைவேற்றுவதே நாட்டிற்கும் மக்களிற்கும் ஆரோக்கியமானதாகும்.

Posted in Uncategorized

கொவிட் 19 தற்காலிக ஏற்பாடுகள் சட்டம் அமலுக்கு வருகிறது

2019 கொரோனா வைரஸ் நோய் (கொவிட் -19) (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலம் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்க அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி குறித்த சட்டமூலம், வாக்கெடுப்பின்றி பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

கொவிட் 19 நிலைமை காரணமாக சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட சில செயல்களை தனிநபர்களால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் செய்ய முடியாத நிகழ்வுகள் குறித்தும் அதேபோன்று கொவிட் சூழ்நிலையால் சில நீதிமன்றங்களுக்கு அதன் செயற்பாடுகளை தொடர முடியாத சந்தர்ப்பங்களில் மாற்று நீதிமன்றங்களை நியமிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், கொவிட் நிலைமையினை கட்டுப்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்துவற்காக தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீதிமன்ற நடவடிக்கைகளை நடத்திச் செல்லுதல், கொவிட் நிலைமை காரணமாக ஒப்பந்த கடமைகளை நிறைவேற்ற முடியாத சில ஒப்பந்ததாரர்களுக்கு நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட அதனுடன் தொடர்புடைய விடயங்களுக்கு தற்காலிக ஏற்பாடுகளை வழங்குவதும் இந்த சட்டத்தின் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது.

ஒரே நாளில் கொரோனாவுக்கு 209 பேர் பலி,உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,157 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 209 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,157 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 412,370 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 351,069 ஆக அதிகரித்துள்ளது.