நாட்டை சீன காலணித்துவத்தின் கீழ் கொண்டுவருவதற்கு எதிர்ப்பு – முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

நாட்டை சீனாவின் காலணித்துவத்தின் கீழ் கொண்டுவருவதை எதிர்ப்பதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகர வேலைத்திட்டம் தொடர்பில் தௌிவூட்டுவதற்காக இன்று (15) விசேட ஊடக சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாரஹேன்பிட்ட அபயாராம விகாரையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இதனைத் தெரிவித்தார்.

Posted in Uncategorized

புலம்பெயர் அமைப்புக்களுடன் தொடர்பாடலை தொடர்ந்து பேணுவோம் – அமெரிக்கா

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த அமைப்புக்களுடன் தமது நாடு தொடர்ந்தும் ஈடுபாட்டை – தொடர்பாடலை கொண்டிருக்கும் என அமெரிக்கா அறிவித்திருக்கின்றது. புலம்பெயர்ந்த அமைப்புக்கள் பலவற்றின் மீது இலங்கை அரசாங்கம் கடந்த மாதம் தடை விதித்திருக்கும் நிலையில் அமெரிக்கா வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பு இராஜதந்திர வட்டாரங்களில் பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கை அரசுக்கும் இது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “தெற்காசியப் பிராந்தியத்துடனான எமது தொடர்புகளை தொடர்ந்தும் பேணுவதற்கு புலம்பெயர் சமூகத்தினர் பெறுமதி மிக்க பங்காளிகளாக உள்ளனர். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்கள் உள்பட தெற்காசிய புலம்பெயர் சமூகத்தினருடன் நாம் தொடர்ந்தும் தொடர்பாடலைக் கொண்டிருப்போம்” எனத் தெரிவித்திருக்கின்றது.

உலகத் தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, கனடிய தமிழ்க் காங்கிரஸ், அவுஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸ் உட்பட பல புலம்பெயர்ந்த அமைப்புக்கள் கடந்த மாதம் பாதுகாப்பு அமைச்சினால் தடைசெய்யப்பட்டன. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ணவின் கையொப்பத்துடன் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. இதனைவிட, பிரிட்டன், ஜேர்மனி, இத்தாலி, மலேஷியா உட்பட பல நாடுகளில் வசிக்கும் செயற்பாட்டாளர்கள் பலருக்கும் தடை விதிக்கப்பட்டு கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டனர்.

ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் முடிவுக்கு வந்தவுடன் இந்தத் தடை அறிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட புலம்பெயர் அமைப்புக்கள் ஜெனைிவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் முக்கியமான பங்களிப்பை வழங்கியதாகக் கருதப்படும் நிலையில்தான் அவற்றின் மீது தடை விதிக்கப்பட்டது. இந்த அமைப்புக்களுடன் தொடர்புகளை வைத்திருப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் பின்னணியிலேயே புலம்பெயர்ந்த அமைப்புக்களுடன் தமது நாடு தொடர்ந்தும் ஈடுபாட்டை – தொடர்பாடல்களைக் கொண்டிருக்கும் எனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்திருக்கின்றது. பரஸ்பரம் நலன்தரும் விடயங்களிலான பேச்சுக்கள் தொடரும் எனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்திருக்கின்றது.

இலங்கை ரூபாவின் பெறுமதி 204.62 ரூபாவாக மீண்டும் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கை மத்திய வங்கியின் நாணய மாற்று வீதத்திற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 204.62 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மலரும் சித்திரை தமிழ் புத்தாண்டில் ஈழத்திலும் புலம்பெயர் தேசத்திலுமுள்ள தமிழர் எமக்கு அமைதி மலரட்டும் ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

மலர்ந்துள்ள தமிழ் புத்தாண்டில் ஈழத்திலும் புலம்பெயர் தேசமெங்கும் அமைதியும் சமாதானமும் மலர தாங்கள் ஆசிப்பதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

இன்று சர்வதேச அரங்கில் சமவுரிமை ஐக்கியம்,சமாதானம் ஆகியன பெரிதும் தேவையானவைகளாக காணப்படுகிறது.

எமது முன்னோர்களின் பண்பாடான விட்டுக்கொடுப்பு ,சகிப்புத்தன்மை ஆகிய அறங்களை எமது இளைய தலைமுறையினருக்கு கொடையாக்கி எமது வருங்கால சந்ததியினரை நாம் பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டில் உள்ளோம்.

எம்மை சுற்றி கொரோணா அபாயமும் இன்னும் தீராத நிலையில் நாம் இந்த புத்தாண்டை மிக நிதானமாக சுகாதார வழிமுறைகளையும் பேணி கொண்டாடுமாறு உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் எமது பாரம்பரியங்களையும், மரபுவழிமுறைகளையும், கலாச்சார பண்புகளையும் பேணி அன்பு இரக்கம் ஆகியவற்றோடு ஆசித்தவர்களாக எமது தாயக தேசமும், நாமும் சிறக்க இந்த புதுவருடத்தில் உறுதி கொள்வோமாக.

என்றும் அன்புடன்.

கெளரவ செல்வம் அடைக்கலநாதன்
தலைவர்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்

Posted in Uncategorized

தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தமிழ், கேரளா, பெங்காலி, நேபாளி உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், வைஷாகி, நவராத்திரி, சாங்ரன் மற்றும் வரும் வாரத்தில் புத்தாண்டு கொண்டாடும் தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய சமூக மக்களுக்கு நானும் ஜில்லும் (பைடனின் மனைவி) வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இனிய பெங்காலி, கம்போடியன், லியோ, மியான்மரிஸ், நேபாளி, சின்ஹலிசி, தமிழ், தாய் (தாய்லாந்து), விஷூ புத்தாண்டு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

Posted in Uncategorized

11 இஸ்லாமிய அடைப்படவாத அமைப்புகளுக்கு தடை விதிப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியானது

ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா உட்பட பதினொரு இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை நேற்று (புதன்கிழமை, அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

குறித்த அமைப்புகளை தடைசெய்வதற்கான அனுமதியினை சட்ட மா அதிபர் கடந்த சில வழங்கியிருந்தார்.

இந்நிலையில் தற்போது அந்த அமைப்புகளை தடைசெய்யும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொழுத்துடன் வெளியாகியுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ், 11 அமைப்புகளும் தடை செய்யப்படுவதாக, குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தௌஹீத் ஜமாத்

சிலோன் தௌஹீத் ஜமாத்

ஶ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்

அகில இலங்கை தௌஹீத் ஜமாத்

ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா

தாறுல் அதர்

ஶ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம்

இராக் மற்றும் சிரியா இஸ்லாமிய அரசு

அல்கய்தா அமைப்பு

சேவ் த பேர்ள்ஸ் அமைப்பு

சுப்பர் முஸ்லிம் அமைப்பு

ஆகிய அமைப்புகள் நேற்று (13) நள்ளிரவு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தடைசெய்யப்பட்டுள்ளன.

சீருடையை, உடையை, சின்னத்தை, தனிக்குறியை அல்லது கொடியை அணிதலோ, வெளிக்காட்டுதலோ, ஏந்துதலோ அல்லது உடைமையில் வைத்திருத்தலோ ஆகாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் நாசகாரி ஐ.என்.எஸ் ரன்விஜய் கப்பல் இலங்கைக்குப் பயணம்

ஐந்தாவது ராஐ்புத் வகை நாசகாரி ஐ.என்.எஸ் ரன்விஜய் கப்பல் கடந்த திங்கட்கிழமை கொழும்புக்கான நல்லெண்ண விஜய் ஒன்றைமேற்கொண்டுள்ளது.

இலங்கை – இந்தியா ஆகிய நட்பு நாடுகள் மத்தியில் கடல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பினை விருத்தி செய்யும் செயற்பாடுகளில் மற்றொரு படியாக இந்தக் கப்பலின் விஜயம் அமைகின்றது என்று கொழுப்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ச்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“புதுவருட கொண்டாட்டங்கள் நடைபெறும் தருணத்தில் இலங்கை மக்களுக்கான பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கான வாழ்த்துக்களுடன் கூட்டொருமைப்பாடு மற்றும் ஐக்கியம் ஆகிய செய்தியினையும் குறித்து நிற்பதாக குறித்த இந்திய கடற்படைக் கப்பலின் வருகை அமைகின்றது.

இக் கப்பல் கப்டன் நாராணன் ஹரிஹரனின் கட்டளையின் கீழியங்குவதுடன் மேற்கு கடற்பிராந்திய கட்டளை தளபதி சுதர்ஷனவையும் கப்டன் நாராயணன் சந்திக்கவுள்ளார்.

அத்துடன் நாளை இந்திய அமைதிப்படையினரின் நினைவுத்துாபியில் அவர் அஞ்சலி செலுத்தவுள்ளார். பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கையில் இலங்கையும் இந்தியாவும் மிகவும் நெருக்கமான ஒத்துழைப்பினை பராம்பரிய ரீதியாக பகிர்ந்து வருகின்றன.

பயிற்சி மற்றும் ஆளுமை விருத்தி செயற்பாடுகளில் பரஸ்பரம் நன்மை தரும் வகையில் இரு கடற்படையினரும் ஒத்துழைப்பினை வழங்கி செயற்பட்டு வருகின்றனர்.

மிகவும் நெருங்கிய நட்பு நாடுகள் மத்தியில் கடல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பினை விருத்தி செய்யும் செயற்பாடுகளில் மற்றொரு படியாக இந்த கப்பலின் விஜயம் அமைகிறது.

நீர் மூழ்கி எதிர்ப்பு வசதியினைக் கொண்டிருக்கும் இந்த ஏவுகனை எதிர்ப்பு கப்பலானது சுதேசிய முறையில் சுயமாக தயாரிக்கப்பட்ட பிரமோஸ் சுப்பர் சொனிக் ஏவுகணை வசதிகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

அரசாங்கத்துடன் பேசுவதால் எந்த தீர்வையும் காணமுடியாது : அமெரிக்காவின் தலையீட்டை கோருகின்றோம் – காணாமல் போனோரின் உறவுகள்

தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமெரிக்காவின் தலையீட்டை பகிரங்கமாக கோருவதாக, வவுனியாவில் கடந்த 1515 ஆவது நாளாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

வருடப்பிறப்பான இன்று அவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,

கடந்த 2009 முதல் காணாமல் ஆக்கப்பட்ட ஒரு குழந்தையை கூட நாங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதன் மூலம் எந்தவொரு தீர்வையும் காணமுடியாது என்பதை நாங்கள் நிச்சயமாக கண்டறிந்துள்ளோம்.

எந்தவொரு தீர்வையும் அடைய தமிழர்களுக்கு மூன்று தடுப்புக்கள் உள்ளன. முதலாவது புத்த மதகுருக்கள், இரண்டாவது சிங்கள அரசியல்வாதிகள், இறுதியாக சிங்கள பொதுமக்கள் அவர்கள் எப்போதும் இனவெறி அரசியல்வாதிகளையே பதவிக்கு தேர்ந்தெடுக்கிறார்கள்.

பெப்ரவரி 2017 முதல், எங்கள் போராட்டத்தில் இலங்கையில் அமெரிக்காவின் ஈடுபாட்டைக் கேட்டு வருகிறோம். இலங்கைக்கான அமெரிக்க அழைப்பை பெரும்பாலான அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் சிந்தனையாளர்கள் அனைவரும் நிராகரித்தனர். இப்போது, அனைத்து தமிழ் அரசியல் வாதிகளும், சிந்தனையாளர்களும் ஐ.நா.வில் அமெரிக்காவின் தலையீடு முக்கியமானது என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள்.

எனவே அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் தமிழர்களுக்கு அரசியல் ரீதியாக உதவவும், காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் அன்புக்குரியவர்களை கண்டுபிடிப்பதற்கும் அமெரிக்க உதவியை பகிரங்கமாக கேட்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த நாளில், இனப்படுகொலை மற்றும் ஒடுக்கு முறையிலிருந்து தமிழர்களை மீட்க அமெரிக்க உதவியை நாம் அனைவரும் கூட்டாக அழைக்கிறோம்.

இலங்கையில் அமெரிக்க தலையீட்டை கேட்டு, ஆயிரக்கணக்கான அமெரிக்க கொடிகளுடன் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மற்றொரு பெரிய ஆர்ப்பாட்டம் தேவை என்பதை தமிழ் தலைவர்கள் உணரவேண்டும்.

இல்லையெனில், இந்த தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழர்களுக்கு அல்ல, மாறாக அவர்களின் சுகபோக நல்வாழ்வுக்கும் அவர்களின் அதிகாரத்துக்கும் மட்டுமே. என்றனர்.

சீனாவின் மாநிலமாக மாறும் துறைமுக நகரம் – அனுரகுமார திஸாநாயக்க

துறைமுக நகரத்தை சீனாவின் மாநிலமாக மாற்றும் அதிகாரத்தை வழங்கி, ஆணைக்குழு சட்டமூலம் ஒன்றை ஜனாதிபதி உருவாக்கியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு என்ற பெயரில் சட்டமூலத்தை உருவாக்கியுள்ளது.

இந்த துறைமுக நகரம் எந்த உள்ளூராட்சி நிறுவனத்தின் ஆளுகைக்கும் உட்படாது. உள்ளூராட்சி நிறுவனங்கள் அந்த பிரதேசத்திற்கு உட்பட்ட மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் ஆளப்படுகிறது.

எனினும் ஜனாதிபதியால், நியமிக்கப்படும் ஆணைக்குழுவின் உறுப்பினர்களே துறைமுக நகரத்தை ஆட்சி செய்வார்கள். அத்துடன் இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் எதனை செய்தாலும் செய்ய தவறினாலும் அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது சிறப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் கோப் உட்பட நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு இந்த சீன மாநிலத்தை அழைக்க முடியாது. அதேபோல் வெளிநாட்டவர்களுக்கு மாத்திரமே துறைமுக நகரில் முதலீடு செய்ய முடியும். துறைமுக நகரில் தொழில் புரியும் நபர்களுக்கு சீனாவின் யுவான் நாணயம் மூலமே சம்பளம் வழங்கப்படும்.

வருமான வரியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால், நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள முக்கியமான சட்டங்களை துறைமுக நகரில் அமுல்படுத்த முடியாது. இப்படியான பல பாரதூரமான விடயங்கள் இதன் மூலம் நடக்கும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

கொரோனா தொற்றினால் பதிவாகிய இறப்பு எண்ணிக்கை 600 ஐ கடந்தது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பதிவாகிய இறப்பு எண்ணிக்கை 600 ஐ கடந்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

மேலும் 04 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 602 ஆக உயர்ந்துள்ளது என இன்று (செவ்வாய்க்கிழமை) அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலியைச் சேர்ந்த 45 வயது ஆண் ஒருவரும் அக்குரஸவில் வசிக்கும் 71 வயது பெண் ஒருவரும் நேற்றைய தினம் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாரஹன்பிட்டவைச் சேர்ந்த 74 வயது பெண் நேற்று காலமானார் என்றும் அதே நேரத்தில் மகரகமவைச் சேர்ந்த 76 வயது ஆண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை காலமானார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிமோனியா மற்றும் முன்பே பிற நோய்களினால் அவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் பின்னர் கொரோனா தொற்று உறுதியாகி நால்வரும் உயிரிழந்துள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.