முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சிரமதானமும் கஞ்சி பரிமாறலும்

தமிழின படுகொலைகளின்போது உயிர் நீத்தவர்களையும், உணவின்றி வறுமையில் சிக்கியபோது கஞ்சியை மட்டுமே உட்கொண்டு வாழ்ந்த போர்க்கால வாழ்க்கையையும் நினைவுகூரும் வகையில், இந்த வாரம் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறல் வாரமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

அந்த வகையில், 2009ஆம் ஆண்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் இந்த ஆண்டும் நினைவேந்தல் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில், மே 12 முதல் மே 18 வரை அனுஷ்டிக்கப்பட்டு வரும் இனப்படுகொலை வாரத்தின் முதல் நாளான நேற்று (12) மாலை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மக்களும் சிவில் அமைப்பு பிரதிநிதிகளும் இணைந்து வடக்கு, கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பின் ஏற்பாட்டில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டதோடு, முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது.

 

புதிய மின்சார சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்பிப்பு

மின்சார சட்டமூலத்தை உருவாக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பதிவில் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இது சம்பந்தமான அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய மின்சார சட்டமூலத்தின் இறுதி வரைபு இம்மாத இறுதியில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதோடு பின்னர் அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

சம்பிக்க ரணவக்கவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீக்கம்

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை நீக்கி கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் தனது மகளைப் பார்ப்பதற்காக கனடா செல்ல விரும்புவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டு ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்தை தடுக்க தவறியமை மற்றும் சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் சம்பிக்க ரணவக்கவுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது.

அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலித்த உயர்நீதிமன்றம், 13 முதல் செப்டெம்பர் 23 வரை வெளிநாட்டு பயணங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டது.

சோழர் கால பழமையான இந்து ஆலயத்தை அபகரிக்க தொல்பொருள் திணைக்களம் முயற்சி

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயம் அமைந்துள்ள காணியில் தொல்பொருட்கள் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் அடையாளப்படுத்தியுள்ளது.

இந்துக்களின் பொற்காலமாகக் கருதப்படும் சோழர்காலத்தில் முற்றுமுழுதாக திராவிடக் கட்டடக் கலைமரபை பின்பற்றி உருத்திரபுரீஸ்வரர் சிவாலயம் கட்டப்பட்டது.

வரலாற்றுத் தொன்மையும், பழமையும் வாய்ந்த சிவாலயத்தை அபகரிப்பதற்கான முயற்சிகள் தொல்பொருளியல் திணைக்களத்தினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் உருத்திரபுரஸ்வரபுரம் ஆலயம் அமைந்துள்ள காணியில் புராதன தொல்லியல் சின்னங்கள் அமைந்துள்ளதாக தொல்லியல் திணைக்களம் கூறியுள்ளது.

ஆகவே குறித்த நிலப்பரப்பினை எல்லைப்படுத்தும் நடவடிக்கையை எதிர்வரும் 18 ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானித்து கரைச்சி பிரதேச சபையினால் அறிக்கையொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

பதவி விலக மறுக்கும் ஆளுனர்களுக்கு எதிராக விரைவில் முறைகேடு விசாரணை?

ஜனாதிபதி செயலகத்தினால் பதவி விலகுமாறு கோரப்பட்டுள்ள நான்கு மாகாண ஆளுநர்களும் தமது பதவிகளில் இருந்து இராஜினாமா செய்ய மறுத்தால், அவர்களை ஜனாதிபதியின் பிரதிநிதிகளாக கருத வேண்டாம் என அரச அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படும் என ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமல்லாமல், இந்த ஆளுநர்களின் முறைகேடுகள் தொடர்பாக நீதிபதி தலைமையில் ஒரு குழுவை நியமித்து, குற்றச்சாட்டுகளில் ஆளுநர்களைக் குற்றவாளிகள் என்று பெயரிட்டு அவர்களை நீக்கவும், ஆளுநர் பதவிக்கு வேறு நபர்களை நியமிப்பது மற்றும் பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்ட ஆளுநர்களுக்கு பணம் வழங்காமல் இருப்பது குறித்தும் ஜனாதிபதி செயலகம் கவனம் செலுத்தியுள்ளது.

பதவிவிலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட ஆளுநர்கள் பதவி விலகத் தயாரில்லை, எனவே எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக ஜனாதிபதி அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு, வடக்கு, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி பதவி விலகி புதிய ஜனாதிபதி நியமிக்கப்படும் போது ஆளுநர்கள் பதவி விலகுவது வழமையான மரபு எனவும், பிரதமர் பதவி விலகும் போது அமைச்சரவையை கலைப்பது போன்றது எனவும் ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர் மேற்படி சம்பிரதாயத்திற்கு அமைவாக ஆளுநர்கள் பதவி விலகாததால், அவர்கள் தாமாக முன்வந்து பதவி விலகுவதற்கு ஜனாதிபதி சிறிது காலம் காத்திருந்ததாக ஜனாதிபதி அலுவலக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சிசபை தேர்தலை தள்ளிவைக்க வேண்டுமென்ற ஜனாதிபதியின் விருப்பத்துக்கு சாதகமாக செயற்பட்ட முன்னாள் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பி.எஸ்.எம்.சாள்ஸூம் புதிய ஆளுனராக நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

திருக்கோணமலையில் புத்தர் சிலை வைப்பதற்கு தடை ஏற்படுத்தினால் பாரிய அழிவுகள் ஏற்படும் – சரத் வீரசேகர

தொல்பொருள் திணைக்களத்தின் தூபி சின்னத்தை மாற்ற முடியாது. ஏனெனில், இலங்கை பௌத்த சிங்கள நாடு. பௌத்த சின்னங்களை அழித்து, அதன் மீது சிவலிங்கம், திரிசூலம் ஆகியவற்றை பிரதிஷ்டை செய்து, அதனை கோவிலாக திரிபுபடுத்துவோர் தண்டிக்கப்பட வேண்டும்.

திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள சியாம் நிகாய பௌத்த வழிபாட்டுக்கு கூட்டமைப்பினர் தடையினை ஏற்படுத்தினால் பாரிய அழிவு ஏற்படும் என ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது:

நாட்டின் கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் கடல் வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை. இன்றும் இதன் தாக்கம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கப்பலில் எசிட் இரசாயன பதார்த்தக் கசிவு ஏற்பட்டுள்ளதை மறைத்தே கொழும்பு துறைமுகத்தின் கடற்பரப்பில் இந்த கப்பல் நங்கூரமிடப்பட்டுள்ளது.

இந்த கப்பல் 2021.05.20ஆம் திகதி முதல் தீ விபத்துக்குள்ளாகி, 2021.06.02ஆம் திகதி கடலில் முழுமையாக மூழ்கியது. இந்த கப்பலில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த இரசாயன பதார்த்தங்களினால் கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்தன. ஆகவே, ஏற்பட்ட பாதிப்புக்கு நட்டஈடு கோரி சிங்கப்பூர் நாட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படும்.

அத்தோடு, தொல்பொருள் திணைக்களத்தின் சின்னத்தை மாற்ற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தொல்பொருள் திணைக்களத்தின் இலட்சினையாக தூபி காணப்படுகிறது. ஏனெனில், இலங்கை ஒரு பௌத்த நாடு. ஆகவே, எக்காரணிகளுக்காகவும் தொல்பொருள் சின்னத்தை மாற்றியமைக்கப் போவதில்லை.

புராதன தொல்பொருள்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு சகல இனங்களுக்கும் உண்டு. இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு. ஆகவே, நாட்டு மக்கள் அனைவரும் புராதன தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்க வேண்டும்.

பௌத்த சின்னங்களை அழித்து, அதன் மீது சிவலிங்கம், திரிசூலம் ஆகியவற்றை அமைத்து கோயிலை கட்டுவது முறையற்றது. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

விடுதலைப்புலிகள் அமைப்பு அப்பாவி தமிழ் மக்களை யுத்த பகடைக்காயாக கொண்டு செயற்பட்டபோது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உட்பட தமிழ் பிரிவினை அரசியல்வாதிகள் கொழும்பில் பாதுகாப்பாக வாழ்ந்தார்கள்.

தமிழ் மக்கள் தொடர்பில் அப்போது கரிசனை கொள்ளவில்லை. யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இவர்கள் தமிழர்களின் நலன் விரும்பிகள் போல் கருத்துரைக்கிறார்கள்.

சுமந்திரன் உட்பட பிரிவினைவாத தமிழ் அரசியல்வாதிகள் பௌத்த சின்னங்களை அழிக்க ஒத்துழைப்பு வழங்கிவிட்டு, வெறுப்பு பேச்சுக்களை வடக்கில் குறிப்பிட்டுவிட்டு கொழும்பில் பாதுகாப்பாக வாழ்கிறார்கள்.

இலங்கை சிங்கள பௌத்த நாடு என்ற காரணத்தினால் இவ்வாறானவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். பிற நாடுகள் இவ்வாறு செயற்பட்டால் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது.

பௌத்த மதத்தின் மேன்மை பொருந்திய சியாம் நிகாயவின் 270ஆவது வருட நிறைவு திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி சிறப்பான மத அனுஷ்டானமாக கொண்டாடப்படவுள்ளது.

இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இது முறையற்றது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த மத அனுஷ்டானத்துக்கு கூட்டமைப்பினர் தடை ஏற்படுத்தினால் பாரிய அழிவுகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்பதை கூட்டமைப்பினர் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

வரவு- செலவு திட்டத்தின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நாணயம் அச்சிட அரசாங்கம் தீர்மானம் – சம்பிக்க

கோட்டாபய – கப்ரால் சென்ற தவறான பாதையில் தற்போதைய அரசாங்கமும் செல்கிறது. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டத்தின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நாணயம் அச்சிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடன் பெறல், நாணயம் அச்சிடல் இதனை தவிர்த்து எந்த திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் 43 ஆவது படையணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற அஸ்வெசும நலன்புரி நன்மைகள் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

மொத்த தேசிய உற்பத்தியை அதிகரித்தால் மாத்திரமே நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

திறைசேரி முறிகள் தொடர்பான சட்டமூலத்தை தற்போது அவசரமாக கொண்டு வந்துள்ளனர். இது முறையாக கலந்துரையாடப்படாது கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அரசாங்கமும் முன்னாள் அரசாங்கம் போன்றே செயற்படுகின்றது.

கோட்டாபய ராஜபக்‌ஷ. அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்டோர் சென்ற பாதையிலேயே தற்போதைய ஆட்சியாளர்கள்செல்கின்றனர்.

இவர்களால்தான் அதிகளவில் பணத்தை அச்சிடவும், அதிக வட்டி வீதத்தையும் அறவிட நேர்ந்தது. வரவு செலவுத் திட்டத்தின் பற்றாக்குறையையும் கடந்து நாங்கள் செல்கின்றோம். வருமானத்தை விடவும் செலவு அதிகரித்து மீண்டும் விழப் போகின்றோம்.

மத்திய வங்கி சட்டமூலத்தை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாமல் பிற்போடப்பட்டது.மத்திய வங்கி சுயாதீனப்படுத்தப்பட்டால் அரசாங்கத்தின் விருப்பத்துக்கு அமைய திறைசேரி உண்டியல் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள முடியாது. ஆகவே அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகள் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய அரச மற்றும் தேசிய கடன்களை மறுசீரமைக்கும் போது சமூக கட்டமைப்பில் பாரிய பிரச்சினைகள் தோற்றம் பெறும். ஆகவே சமூக கட்டமைப்பின் தோற்றம் பெறும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

பாண் தயாரிப்பில் முதலிடத்தை வென்ற ஈழத் தமிழருக்கு பாரிஸ் மேயர் பாராட்டு

பாரிஸ் நகரின் மிகச் சிறந்த பாணைத் தயாரித்து சாதனை படைத்த ஈழத் தமிழ் இளைஞர் தர்சன் செல்வராஜாவின் வெதுப்பகத்தில் பாண் வாங்குவதற்குப் பலரும் முண்டியடிக்கின்றனர்.

“நான் எப்போதும் வேறு கடைகளில் பாண் வாங்குவேன். இந்தச் செய்தி அறிந்த பிறகு இடத்தை மாற்றிக் கொண்டேன். இங்கே கிடைக்கின்ற பாண் மொறு மொறு என்று மிகச் சுவையாக இருக்கிறது. வாய்க்கு இதமாக இருக்கிறது – என்று பாரிஸ்வாசி ஒருவர் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் கூறினார்.

பாரிஸ் நகரின் சிறந்த பாணைத் தயாரிக்கின்ற பேக்கரியாளரைத் தெரிவு செய்வதற்காகப் பாரிஸ் நகரசபையால் ஆண்டு தோறும் நடத்தப்படுகின்ற போட்டியில் நகரின் 20 ஆவது நிர்வாகப் பிரிவில் அமைந்துள்ள “Au levain des Pyrénées” என்ற வெதுப்பகம் முதல் இடத்தை வென்றுள்ளது. அதன் உரிமையாளரே தர்சன் செல்வராஜா.

பாரிஸ் நகர மேயர் ஆன் கிடல்கோ தனது ருவீற்றர் பதிவு ஒன்றில் அவருக்கும் அவரது வெதுப்பகத்துக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான போட்டிக்கு நடுவர்கள் சபையால் மொத்தம் 175 வெதுப்பகங்களின் பாண்கள் பெறப்பட்டிருந்தன. அவற்றில் சரியான நிறை மற்றும் அளவுகளைக் கொண்டிராத 49 பாண்கள் போட்டியில் இருந்து விலக்கப்பட்டன. பொதுவாகப் பாண்கள் 50-55 சென்ரிமீற்றர் நீளம் மற்றும் 250 முதல் 270 கிராம் எடை என்பவற்றைக் கொண்டிருத்தல் வேண்டும். 126 பேக்கரிகளது பாண்கள் பிரபல சமையலாளர்களை உள்ளடக்கிய தெரிவுக் குழுவினரால் சுவைத்துப் பரீட்சிக்கப்பட்டன.

அவற்றில் மிகச் சிறந்த பாண் என்ற தரத்தை “Aulevain des Pyrénées” வெதுப்பகம் வென்றது. அதன் உரிமையாளருக்கு 4 ஆயிரம் யூரோக்கள் பணப் பரிசையும் பாராட்டுப் பத்திரத்தையும் பாரிஸ் நகரசபை வழங்கவுள்ளது. அத்துடன் அவரது வெதுப்பகம் அடுத்த ஓராண்டு காலம் நாட்டின் அதிபர் மக்ரோனின் வசிப்பிடமாகிய எலிஸே மாளிகையின் சமையலறைக்கும் பாரிஸ் நகரசபை மண்டபத்துக்கும் தினமும் பாணை விநியோகிக்கின்ற பெரும் வாய்ப்பையும் பெறுகிறது.

உப்பின் அளவு முதற் கொண்டு அதன் சுவை, தரம், பாரம்பரிய தயாரிப்பு முறை எனப் பல்வேறு அளவீடுகளில் சிறந்த பாண் தெரிவு செய்யப்பட்டது. பாணைக் கத்தியால் வெட்டும் போது அது எழுப்பும் ஒலியும் கூட கவனத்தில் கொள்ளப்பட்டது என்று நடுவர் ஒருவர் கூறுகிறார்.

தர்சன் செல்வராஜா இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து 2006 ஆம் ஆண்டு பிரான்ஸ் வந்தவர். இத்தாலி உணவகம் ஒன்றில் பணியாற்றியவர். அங்கே ஏற்பட்ட ஓர் அறிமுகம் காரணமாகத் தனது உணவகத் தொழிலைக் கைவிட்டுச் சுயமாக வெதுப்பகம் ஒன்றைப் பொறுப்பேற்று நடத்தி இந்தச் சாதனையை நிலைநாட்டியுள்ளார். “வெற்றிச் செய்தியை அறிந்தவுடன் அழுதுவிட் டேன்” என்று அவர் பாரிஸ் செய்தி ஊடகம் ஒன்றிடம் கூறியிருக்கிறார்.

“நாங்கள் ஆண்டு தோறும் போட்டியில் பங்குபற்றி வந்தோம். இந்த முறை வெற்றிக்காகக் காத்திருந்தோம். ஆச்சரியமாக உள்ளது. எங்கள் பாண் தயாரிப்புகள் ஏற்கனவே வாடிக்கையாளர்களிடம் மிகுந்த நன்மதிப்பைப் பெற்றவை.” -என்று அவர் தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டித் தெரிவில் அவரது பேக்கறி மூன்றாவது இடத்தைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த முறை நகரசபை நடத்திய போட்டி முப்பதாவது ஆண்டுக்குரியது.

தமிழர்கள் மீதான அரச அடக்குமுறையை மேலும் இறுக்கவே திருகோணமலையில் புத்தர் சிலை

தமிழ் மக்கள் மீது இனவெறித் தாக்குதல்களை ஏதாவது ஓர் இடத்தில் ஆரம்பித்து வைக்கவும் அதனை சாட்டாக வைத்து தமிழ் பிரதேசமான வட, கிழக்கு மாகாணங்களில் அரசாங்க அடக்கு முறையை மேலும் இறுக்கிக் கொள்ளும் நோக்கத்துடனே திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கட்சி தலைவர் ந. சிறீகாந்தா சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்வரும் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை நகரில்,

கடற்கரை வீதியில், விளையாட்டு அரங்குக்கு முன்னால் காணப்படும், நான்கு அரச மரங்கள் அமைத்திருக்கும் இடத்தில், புத்த பெருமானின் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்படும் நிகழ்வு இடம்பெற உள்ளது.

தாய்லாந்தில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள, நான்கு அடி உயரமான புத்தர் சிலையுடன், இலங்கைக்கு வந்துள்ள 50 பௌத்த பிக்குகள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கின்றனர். இலங்கையில் தமிழ் மக்களின் நீண்ட வரலாற்றில் முக்கிய இடம் வகித்து வந்திருக்கும் திருகோணமலை மண்ணில், இந்த புத்தர் சிலை நாட்டப்படுவதற்கு போலியான காரணங்கள் வரலாற்றை திரிபுபடுத்தி முன்வைக்கப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக புத்தரின் சிலைகளை ஆயுதமாக பயன்படுத்தி, தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையோடு, தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்டு வந்திருக்கும் பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் நீட்சியாகவே, இந்த புத்தர் சிலை பிரதிஷ்டம் நிகழ்த்தப்பட உள்ளது.

அரசாங்கத்தின் முழுமையான ஆதரவோடு தான் இது மேற்கொள்ளப் படுகின்றது என்பதில் எந்தவொரு சந்தேகமும் இருக்க முடியாது. இந்த, இன – மத ரீதியிலான ஆக்கிரமிப்புக்கு எதிராக, தமிழர் தரப்பில் எழுப்பப்படும் குரல்களை மௌனிக்க வைக்கும் நோக்கத்தோடு, வடித்தெடுத்த இனவெறியரான அரசாங்கக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மிரட்டல் தொனியில் பாராளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். நிகழ்வை தடுத்து நிறுத்த முயன்றால், பாரிய அழிவுகள் ஏற்படும் என்றும் அவர் கர்ச்சித்திருக்கின்றார்.

அவரைப் போன்ற சிங்கள இனவெறியர்களின் மிரட்டல்கள், நீண்ட பல வருடங்களாக தமிழ் மக்களுக்கு பழகிப் போன சங்கதிகளாக இருந்தாலும் கூட, இனக் குரோதத்தை தூண்டுகின்ற இத்தகைய பேச்சுக்களை, இவரும் இவரைப் போன்றவர்களும் பாராளுமன்றத்துக்கு வெளியிலும் தொடர்ந்து நிகழ்த்தி வந்திருக்கின்றார்கள்.

ஒரு சில வாரங்களுக்கு முன்னர், 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு முன்வைக்கப்பட்டிருக்கும் தமிழ்க் கட்சிகளின் கோரிக்கை பற்றி பேசிய எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, 13வது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் கடந்த காலங்களில் இலங்கை சந்தித்த கலவரங்களை விட, மிக மேசமான கலவரம் வெடிக்கும் என, தனக்கே உரிய பாணியில் மிரட்டல் விடுத்திருந்தார். நாட்டின் அமைதியை குலைக்கக் கூடிய அபாயத்தைக் கொண்டிருக்கும் இத்தகைய இனவெறிப் பேச்சுக்கள் தொடர்பில், எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இந்த சூழ்நிலையில், திருகோணமலை மாவட்ட தமிழ் மக்கள் இந்தச் சவாலை நிதானத்தோடு எதிர்கொள்வதே உகந்தது ஆகும். தமிழ் மக்கள் மீது இனவெறித் தாக்குதல்களை, ஏதாவது ஒரு இடத்தில் ஆரம்பித்து வைக்கவும், அதனை சாட்டாக வைத்து தமிழ்ப் பிரதேசமான வட, கிழக்கு மாகாணங்களில் அரசாங்க அடக்குமுறையை மேலும் இறுக்கிக் கொள்ளவும், நிகழ்ச்சிநிரல் தீட்டப்படுவதாகவே சந்தேகிக்க வேண்டி உள்ளது. நாட்டில் நிலவிக்கொண்டிருக்கும் நெருக்கடி மிக்க சில பிரச்சினைகளுக்கு உடனடிப் பரிகாரமாகவும் இதனை சில சக்திகள் கருதக்கூடும்.

இத்தகைய பிரச்னைகளுக்கு எல்லாம் எதிர்ப்பு தெரிவித்தே சமீபத்தில் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், எதிர்ப்பு நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்பதே திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் உணர்த்தி நிற்கும் செய்தியாகும். கட்சி வேறுபாடின்றி தமிழ் மக்களை அணிதிரட்டி, பாதிக்கப்பட்டிருக்கும் முஸ்லீம் மக்களின் ஆதரவையும் கோரி, பாரிய அரசியல் போராட்டம் ஒன்றை மேற்கொள்வது என்பதே இன்றைய உடனடித் தேவையாகும்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – ஜனாதிபதியிடையேயான பேச்சு ஒத்திவைப்பு

இனப் பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று நடைபெறவிருந்த பேச்சு இரத்து செய்யப்பட்டது.

எனினும், அதிகாரப் பகிர்வு தொடர்பான இந்தப் பேச்சு நாளை மறுதினம் திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

பாராளுமன்றத்தில் நேற்று மாலை 5 மணிக்கு ‘நலன்புரி நன்மைகள் வழங்குதல்’ தொடர்பான சட்டமூலம் வாக்கெடுப்பு நடைபெறவிருந்தது.

இந்த வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் நோக்கில் பேச்சு ஒத்திவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சு நேற்று முன்தினம் ஆரம்பமானது.

நேற்று முன்தினம் நடந்த இந்தப் பேச்சில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் காணி பிரச்னை மற்றும் ஏனைய பிரச்னைகள் தொடர்பாக ஆராயப்பட்டன. நேற்றைய பேச்சில் அதிகாரப் பகிர்வு, நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக பேசப்பட இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.