தேர்தலுக்கு அஞ்சும் கட்சி எமது கட்சி அல்ல

எந்நேரத்தில் வேண்டுமானாலும், எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தயாராகவே உள்ளது. நாவலப்பிட்டிய தொகுதியிலும் வெற்றிக்கொடி பறக்கும்.   என்று மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் ஏற்பாட்டில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாவலப்பிட்டிய தொகுதி ஆசனக் கூட்டம் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று (16)  நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மஹிந்தானந்த இவ்வாறு குறிப்பிட்டார்.

இன்று நடைபெறும்  கூட்டம் மாவட்டக் கூட்டம் அல்ல,  ஒரு தொகுதி கூட்டமாகும். ஆனாலும் மக்கள் அணிதிரண்டுள்ளனர். தாங்கள் இன்னமும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன்தான் நிற்கின்றோம் என்ற தகவலை அவர்கள் வழங்கியுள்ளனர். ஒரு சிலர் எம்மைவிட்டு சென்றிருக்கலாம். ஆனால் எமது கட்சி பலமாகவே உள்ளது.

தேர்தலுக்கு அஞ்சும் கட்சி எமது கட்சி அல்ல. எந்நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயார். கண்டி மாவட்டமும், நாவலப்பிட்டிய தொகுதியும் தயார் என்ற செய்தி இக்கூட்டம்மூலம் வழங்கப்படுகின்றது.  தேர்தல் நடத்தப்பட்டால் வெற்றி நிச்சயம் என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவருகின்றன. சவால்களை ஜனாதிபதி சிறப்பாக எதிர்கொள்கின்றார். அடுத்த இரு வருடங்களுக்கு அவருக்கு ஆதரவு வழங்கப்படும். தவறுகளை திருத்திக்கொண்டு எமது கட்சி வெற்றிநடைபோடும் என்றார்.

ஐ.நாவுக்கு அவசரக் கடிதம் எழுதினார் மனோ

பெருந்தோட்ட மக்கள் நவீன கூலி அடிமை தொழிலாளர்களாகவும், தமிழ் சிறுபான்மை இனத்தவராகவும் இலங்கையில் ஒடுக்கப்படுகிறார்கள்.  இது தொடர்பில் சம்பந்தபட்ட அனைத்து தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டுமென தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத்துறையில் காணப்படும் கூலியடிமை, இன ஒடுக்குமுறை தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, கொழும்பில் உள்ள ஐ.நா மனித உரிமை பிரதிநிதிக்கு மனோ கணேசன் எழுதியக் கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதாக மனோ கணேசன் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஐ.நா விசேட அறிக்கையாளர் டோமோயா ஒபோகாடாவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டால், அடுத்த ஐ.நா மனித உரிமை ஆணைகுழு கூட்டத்தில் இவ்விவகாரம் எடுத்தாளப்பட உரிய அவகாசம் கிடைக்கும் எனவும் மனோ தெரிவித்துள்ளார்.

“நவீன அடிமைத்தனங்கள், அதன் மூல காரணங்கள் மற்றும் தொடர் விளைவுகள் ஆகிய விவகாரங்களுக்கான, ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின்,   விசேட அறிக்கையாளர் டோமோயா ஒபோகாடா ஐ.நா மனித உரிமை ஆணைகுழுவின் கடைசி கூட்டத்துக்கு சமர்பித்த அறிக்கையின்படி பின்வரும் பாரதூரமான நிலைமைகள் பெருந்தோட்ட சமூகத்தின் மத்தியில்  காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

1)மனிதர் வாழ தகைமையற்ற வாழ்விடங்கள்,
2)அரைகுறை சுகாதார நிலைமைகள்,
3)போஷாக்கின்மை, வறுமை,
4)பெண்கள் மீதான அதீத சுமை,
5)சிறுவர் தொழிலாளர்,
6)வேலைத்தள விபத்துகளுக்கு முறையான நஷ்ட ஈடின்மை,
7)முறையற்ற வேலை நிலைமைமைகள்,
8)அதிக நேர வேலை குறை வேதனம்,
9)நவீன அடிமைத்தன வடிவங்கள்,
10)அதி சுரண்டல் பாரபட்சம்,
11)உடல்ரீதியான,
12)பேச்சுரீதியான பாலியல்ரீதியான துன்புறுத்தல்,
13)வீட்டு வேலை,
14)பாலியல் வேலை, கொத்தடிமை வேலை,
15)தனியார் நிறுவன தோட்டங்களில்,
16)அரச நிறுவன தோட்டங்களில், சிறு உடைமையாளர் தோட்டங்களில் நியாயமற்ற நாட்கூலி முறைமை,
17)தரமான கல்வி பெற வாய்ப்பின்மை,
18)மொழி பிரச்சினை,
19)அதிக தொகை பாடசாலை விடுகை,
20)உள்ளூர் தேசிய தொழில் சட்ட கண்காணிப்பு இன்மை,
21)துணைக்கு வரும் சிவில் அமைப்புகள் மீதான கண்காணிப்பு தொல்லை.

பெருந்தோட்ட சமூகம், இலங்கையில் வாழும் மலையக தமிழரில் ஒரு அங்கம். ஆகவே பெருந்தோட்ட சமூகத்தின் மீதான ஒடுக்கு முறைக்கு அவர்கள் சிறுபான்மை தமிழராக இருப்பதும் ஒரு காரணமாகும். அடுத்தது அவர்கள் மீதான நவீன கூலித்தொழில் அடிமைத்தனமாகும்.

இந்நிலையில் அரசியல் தலைமைகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள்,  அரசு தரப்பு, தோட்ட நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றுடன்  பெருந்தோட்ட துறையில் நிகழும் நவீன கூலியடிமை, இன அடிமைத்தனம் ஆகியவை தொடர்பில் கலந்துரையாடும்படி கோருகிறேன்.” எனவும் மனோ தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

மஹிந்தவுக்கு கடும் எதிர்ப்பு; சஜித் அணியைச் சேர்ந்த 10 பேர் கைது

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன “ஒன்றாக எழுவோம்” என்கிற தொனிப்பொருளில் இரண்டாவது மாநாடு நாவலபிட்டியில் இன்று (16) நடைபெறுகிறது.

இம்மாநாட்டில் கலந்துகொள்ள முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாவலபிட்டிக்கு வந்திருந்த நிலையில், மஹிந்தவுக்கு அங்குள்ள மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இதனால் அங்குப் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதால், அதிகளவானப் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த 10 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Posted in Uncategorized

இலங்கை தொடர்பில் ஆஸ்திரேலியத் தூதுவரிடம் மனோ முன்வைத்துள்ள கோரிக்கை

“நலிவுற்றோரை அடையாளம் காணும் அளவுகோல்கள் பற்றி இலங்கை அரசிடம் கேள்வி எழுப்ப வேண்டும்”என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும், மாலைதீவுக்குமான ஆஸ்திரேலியத் தூதுவர் போல் ஸ்டீபனைத் தூதுவரின் கொழும்பு இல்லத்தில் நேற்று முன்தினம் சந்தித்து உரையாடியபோதே மேற்கண்டவாறு தாம் வலியுறுத்தினார் என்று மனோ கணேசன் எம்.பி. நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,”சமீபத்தில் நான் ஆஸ்திரேலியாவுக்கு மேற்கொண்ட அதிகாரபூர்வ பயணம் தொடர்பில் உரையாடினோம்.

ஆஸ்திரேலியாவில் திகழும் பன்மைத்துவ கலாச்சாரம் பற்றிய பாடங்கள் இலங்கைக்கு அவசியம் என்பதை ஆஸ்திரேலியத் தூதுவர் போல் ஸ்டீபனுக்குத் தெரிவித்தேன்.

குறிப்பாக ஆஸ்திரேலிய அரசு மற்றும் அரசு நிலை அரசியல் பிரமுகர்கள் அங்கு வாழும், இலங்கையர்களுடன் குறிப்பாக புலம்பெயர்ந்துள்ள சிங்கள ஆஸ்திரேலியர்களுடனும், அவர்களது அமைப்புகளுடனும் தொடர்புகளை மேம்படுத்தி அவர்கள் மூலம் பன்மைத்துவ சிந்தனையை இலங்கைக்குள் கொண்டு வர உதவ வேண்டுமென வலியுறுத்தினேன்.

இலங்கையின் நெருக்கடி நிலைமையும், அதற்கான மாற்றமும் வெறுமனே பொருளாதார விடயங்களை சார்ந்தது அல்ல என்ற எமது நிலைபாட்டை அவருக்கு வலியுறுத்தினேன்.

பொருளாதார விடயங்களுக்கு அப்பால், மூல காரணமாக திகழ்வது இலங்கையில் பன்மைத்துவ கொள்கை ஏற்றுக்கொள்ளப்படாமையே என்ற தமிழ் மக்களின் எண்ணப்பாட்டை அவருக்கு சுட்டிக்காட்டினேன்.

ஆகவே, இலங்கையில் ஏற்படுகின்ற எந்தவொரு மாற்றமும் இலங்கை பன்மொழி, பன்மத, பல்லின நாடு என்ற பன்மைத்துவ கொள்கை அரசமைப்பு ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படுவதிலேயே தங்கியுள்ளது. அதுவே மாற்றத்துக்கான ஆரம்பப்புள்ளி என தெளிவுபடுத்தினேன்.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை,மலையகத் தமிழர்கள்,தோட்டத் தொழிலாளர்கள்,நடைபெற்ற அரகலய கிளர்ச்சி, எதிர்க்கட்சிகளின் உடனடித் தேர்தலுக்கான கோரிக்கை ஆகியவை பற்றியும் உரையாடினோம்.

இலங்கை சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நலிவுற்ற பிரிவினரான தோட்டத் தொழிலாளர்கள், தொழில் ரீதியாகவும், தமிழ் சிறுபான்மையினர் என்ற இன ரீதியாகவும் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை எடுத்துக் கூறினேன்.

பின்தங்கிய நலிவுற்ற பிரிவினருக்கு என ஆஸ்திரேலியா உட்பட உலக அரசுகள் வழங்கும் உதவித் தொகைகள், நன்கொடைகள் தோட்ட தொழிலாளர்களுக்கு பெரும்பாலும் கிடைப்பதில்லை.

நலிவுற்ற பிரிவினரை அடையாளம் காண்பதில் இலங்கை அரசு கடைப்பிடிக்கின்ற அளவுகோல்கள் பிழையானவை. அவை அரசியல் மற்றும் சில வேளைகளில் தவறான இன அடிப்படைகளை கொண்டவை.

இதன் காரணமாக நலிவுற்ற பிரிவினரானத் தோட்டத் தொழிலாளர்கள் நலிவுற்றோர் பட்டியலில் இடம்பெறுவதில் தவிர்க்கப்படுகிறார்கள்.

ஆகவே, இந்த நலிவுற்றோரை அடையாளம் காணும் அளவுகோல்கள் பற்றி ஆஸ்திரேலியா, இலங்கை அரசிடம் கேள்வி எழுப்ப வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளேன்.

உடனடியாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி, புதிய மக்களாணையை பெறுவதன் மூலமாகவே நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை, உலக ரீதியான ஏற்புடைமை, பொருளாதார மீட்சிக்கான வழிவரைபு ஆகியன ஒழுங்கமைக்கப்படும் எனவும் கூறினேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

மக்களுக்கு புதிய வரிச்சுமை! வெளிவரும் பண்டோரா ஆவணங்கள் பற்றிய தகவல்கள்

பெரும் இன்னல்களுக்கு மத்தியில் வாழ்க்கையை நகர்த்தும் மக்கள் மீது புதிய வரிச்சுமையை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவரின் எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டு “பிரபஞ்சம்”வேலைத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 36 ஆவது கட்டமாக மற்றுமொரு பேருந்து, காலி சித்தார்த்த தேசியப் பாடசாலைக்கு சஜித் பிரேமதாஸவால் நேற்று(14.10.2022) அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சி தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,“அரசாங்கம் பொருளாதார ரீதியாக மட்டுமன்றி கருத்தியல் ரீதியாகவும் கூட வங்குரோத்து நிலையில் உள்ளது.

மக்கள் மீது வரம்பற்ற அழுத்தத்தை ஏற்படுத்தும் விசித்திரமான வரியாக இது மாறியுள்ளது.

அரச வருமானத்தை அதிகரிப்பதற்குள்ள ஒரே வழி, வரி அதிகரிப்பு மாத்திரமல்ல. பண்டோரா ஆவணங்கள் மூலம் பெயரிடப்பட்ட நபர்கள் வைத்திருக்கும் டொலர்களையும் நாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்.”என தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

திருகோணமலை தொடர்பில் ரணில் திட்டவட்ட அறிவிப்பு

திருகோணமலை மாவட்ட மூலோபாய அபிவிருத்தித் திட்டமானது தேர்தலை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படவில்லை என்றும், இது அடுத்த சந்ததியினருக்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தில் சில அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு இந்தியாவுடன் இணைந்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இதில் துறைமுக அபிவிருத்தி மற்றும் எண்ணெய் தாங்கி மேம்பாடு ஆகியவை உள்ளடங்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டம் தொடர்பில் திருகோணமலை ஒர்ஸ் ஹில்லில்இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவுக்கு எண்ணெய் தாங்கிகளை வழங்க முற்பட்டபோது முன்வைக்கப்பட்ட எதிர்ப்புகளை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, அன்று எண்ணெய் தாங்கிகளை வழங்கியிருந்தால், இன்று நாடு எரிபொருள் நெருக்கடியை எதிர்நோக்கியிருக்காது என்றும் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடல் ஆரம்பிப்பதற்கு முன்னர், திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள பல இடங்களையும் ஜனாதிபதி ஒர்ஸ் ஹில்லில் இருந்தபடி அவதானித்துள்ளார்.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கலந்துரையாடலின்போது ஜனாதிபதி மேலும் கருத்து தெரிவிக்கையில், “திருகோணமலையில் விமான நிலையம் இருந்தாலும் அங்கே பெரிய விமானங்களை தரையிறக்க முடியாது.

எனவே, ஹிங்குரக்கொடை அல்லது வவுனியாவை சர்வதேச விமான நிலைய தலமாக உருவாக்குவதற்கான நிலைமை ஏற்படும்.

திருகோணமலை முதல் மட்டக்களப்பு வரையிலான சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது. கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்காக நாம் முழுமையான திட்டத்தை உருவாக்க வேண்டும். அதேபோன்று வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டமும் உள்ளது.

வடக்குக்கும் கிழக்குக்கும் இடையில் திருகோணமலை அமைந்துள்ளது. அதேபோன்று வடமத்திய மாகாணத்தை எடுத்துக்கொண்டால் அநுராதபுரம் மற்றும் பொலனறுவையின் பெரும் பகுதி இப்பிரதேசத்துக்கே சொந்தமாகின்றது.

இந்த கூட்டு வேலைத்திட்டத்தை 5 வருடங்களில் செய்ய முடியாது. இதனை 20 – 25 வருடங்களில் செய்யலாம். மகாவலி அபிவிருத்தித் திட்டத்தை நிறைவேற்ற 10 வருடங்கள் தேவைப்பட்டன.

எனவே, இதன் பணிகள் குறித்து கலந்தாலோசித்தப் பின்னர் அமைச்சரவையின் தீர்மானத்துடன் இந்த செயல் திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்தவுள்ளோம்”என கூறியுள்ளார்.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உட்பட பலர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.

Posted in Uncategorized

ஞானசார தேரருக்கு கொழும்பு பிரதான நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு

நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காததை தொடர்ந்து பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் கருத்து தெரிவித்த வழக்கில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அவர் ஆஜராகததை தொடர்ந்து நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் அவரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Posted in Uncategorized

மைத்திரிக்கு எதிரான வழக்கு 10 வாரங்களுக்கு ஒத்திவைப்பு!

ஈஸ்டர் தாக்குதலை தடுக்கத் தவறியதாக தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகளை 10 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பான விசாரணையை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரி மைத்திரிபால சிறிசேனவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இடைநகர்த்தல் மனுவை அடிப்படையாகக் கொண்டே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கிற்கும் தெற்கிற்கும் உறவு பாலத்தை மேம்படுத்தும் முகமாக யாழில் இருந்து 100 உள்ளூராட்சி உறுப்பினர்கள் தென்பகுதிக்கு விஐயம்

வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான உறவு பாலத்தை மேம்படுத்தும் முகமாக யாழ்ப்பாணத்திலிருந்து 100 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தென்பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பு மாநகர சபை முதல்வர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டதை போல யாழ்ப்பாணத்தில் இருந்து உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தென்பகுதிக்கு அழைத்து செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் நவம்பர் மாத முற்பகுதியில், யாழ்ப்பாண மாநகர சபை உடுவில் பிரதேச சபை மானிப்பாய் பிரதேச சபையைச் சேர்ந்த 100 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு கொழும்பில் முக்கிய இடங்களான ஜனாதிபதி செயலகம், தாமரை கோபுரம், தாமரை தடாகம் நாடாளுமன்றம் மற்றும் ஏனைய கொழும்பின் முக்கிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதோடு கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களுடன் சிநேகபூர்வமான கிரிக்கெட் சுற்றுப் போட்டி மற்றும் வடக்கு தெற்கிற்கான உறவுபாலத்தினை மேம்படுத்துவதற்காக வேலை திட்டம் கொழும்பு மாநகர முதல்வரால் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ரணிலை போன்று பொருளாதார யதார்த்தத்தை நன்கு புரிந்துகொண்ட ஒரு அரசியல்வாதியை பார்க்க முடியாது – எரிக்சொல்ஹெய்ம்

இலங்கை ஜனாதிபதியை போல பொருளாதார யதார்த்தத்தை நன்கு புரிந்துகொண்ட ஒரு அரசியல்வாதியை பார்க்க முடியாது என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமானதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இலங்கையை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கான தலைமைத்துவத்தை ரணில் விக்கிரமசிங்க வழங்குவார்.இலங்கையில் பொருளாதார நிலைமை மிக மோசமாக உள்ளது என குறிப்பிட்டுள்ள நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் ஆனால் இலங்கை மீண்டும் இயங்கத்தொடங்கியுள்ளது பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இந்திய நிறுவனங்கள் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறைகள் எலெக்ரிக் போக்குவரத்து போன்றவற்றில் முதலீடு செய்வதில் இந்திய நிறுவனங்களிற்கு முக்கிய பங்குள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.அதானி ஏற்கனவே முக்கியமான காற்றாலை மின் உற்பத்தி குறித்த முதலீடுகளை அறிவித்துவிட்டார் எனவும் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.ஒக்டோபர் 12 ம் திகதி இலங்கை ஜனாதிபதியுடனான தனது சந்திப்பை சிறந்தது என தெரிவித்துள்ள எரிக்சொல்ஹெய்ம் பசுமை பொருளாதார மீட்சி மற்றும் காலநிலை தலைமைத்துவம் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு சிறந்த தொலைநோக்கு பார்வை உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கான தலைமைத்துவத்தை ரணில் விக்கிரமசிங்க வழங்குவார் ஆனால் அவரது பணி மிகவும் கடினமானது அதற்காக அவரை எவரும் பாராட்டப்போவதில்லை ஏனென்றால் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான கடுமையான நடவடிக்கைகளே ஒரேவழி எனவும் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.எதிர்காலத்தில் அதிக வரிகள் தேவையற்ற பொதுச்செலவீன குறைப்பு போன்றவை காணப்படலாம், குறுகிய காலத்தில் வலிகள் காணப்படும்,ஆனால் நீண்ட கால அடிப்படையில் இலங்கைக்கான வாய்ப்புகள் மிகவும் சாதகமானவையாக உள்ளன என இலங்கையின் சமாதான தூதுவராக பணியாற்றிய எரிக்சொல்ஹெய்ம் ஐஎஎனஎஸ ற்க்கு தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பசுமை அபிவிருத்தி மிகவும் முக்கியமான விடயம் என குறிப்பிட்டுள்ள எரிக்சொல்ஹெய்ம் மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி எலெக்ரிக் மொபிலிட்டி மரநடுகை பசுமை விவசாயம் சுற்றுசூழலிற்கு உகந்த சுற்றுலா ஆகியவை வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார செழிப்பிற்கான பாரிய வாய்ப்புகளை வழங்குகின்றன எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இவை வெற்றிபெறும் கொள்கைகள் இவை சுற்றுசூழலிற்கும் பொருளாதாரத்திற்கும் ஒரே நேரத்தில் சிறந்தவை எனவும் தெரிவித்துள்ளார்.இலங்கை ஜனாதிபதியின் காலநிலை ஆலோசகர் என்ற அடிப்படையில் நான் அவர் தனது பணியாளர்கள் உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகத்தை கவருவதற்கான சிறந்த கொள்கைகளை உருவாக்குவதற்கு உதவுவேன் எனவும் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இலங்கை சீனா இந்தியா ஐரோப்பா மற்றும் ஏனைய உலகநாடுகளி;ல் இருந்து சிறந்த சுற்றுச்சுழல் செயற்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கான தொடர்புகளை ஏற்படுத்திக்கொடுப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.காலநிலை மாற்றம் இலங்கை இருப்பிற்கே அச்சுறுத்தலானதா என்ற கேள்விக்கு எரிக்சொல்ஹெய்ம் ஆம் என பதிலளித்துள்ளார்.இலங்கையின் வறண்ட பகுதி தொடர்ந்தும் உலர்வலயமாகவும் ஈரமான பகுதி ஈரமாகவும் காணப்படும் நாங்கள் மிக மோசமான காலநிலையையும் மண்சரிவையும் சந்திப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.சகோதார மக்களிற்கு ஆதரவளிக்கும் வெளிப்பாடாக இந்தியா இலங்கைக்கு மிக முக்கியமான உதவிகளை வழங்கியுள்ளது என எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.இந்தியாவின் ஐஏஎன்எஸ் இணையத்தளத்திற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் இலங்கையை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கான தலைமைத்துவத்தை ரணில் விக்கிரமசிங்க வழங்குவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized