Category: செய்திகள்
சுயலாப அரசியலுக்காக சங்கு சின்னத்துக்கு எதிராக முன்வைக்கப்படும் கருத்துக்கள்
ஒரு சில சமூக கட்டமைப்பை சேர்ந்தவர்கள் சுயலாபத்திற்காக சங்கு சின்னத்துக்கு எதிராக முன்வைக்கும் கருத்துக்கள் பொய்யானவை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற வேட்பாளர் சுரேன் குருசாமி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (16) அவர் நடத்திய ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ” எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய பொதுக்கப்பட்டமைப்பானது பங்குபற்றவில்லை என அறிவித்ததன் பின்னர், சங்கு சின்னம் சமபங்காளிகளாக இருந்த எங்களுக்கு உரித்தாகியது.
எனவே, சட்ட ரீதியாக தேர்தலில் போட்டியிட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கமைய பொதுக்கப்பட்டமைப்பின் அனுமதியுடன் சங்கு சின்னத்தை நாங்கள் பெற்று கொண்டுள்ளோம். அதில் எந்தவிதமான குளறுபடிகளும் இல்லை.
இந்நிலையில், ஒரு சில சமூக கட்டமைப்பை சேர்ந்தவர்கள் தங்களுடைய சுயலாப அரசியலுக்காக, சங்கு சின்னத்தில் போட்டியிட கூடாது என கருத்து முன்வைக்கப்பட்டதாக பொய்யாக கூறி வருகின்றனர்” என குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழரசுக் கட்சியில் குழப்ப நிலை ஏற்பட காரணம்: வன்னி மாவட்ட வேட்பாளர் விளக்கம்!
சில தன்னிச்சையான நடவடிக்கைகள் காரணமாகவே தமிழரசுக் கட்சியில் குழப்ப நிலை காணப்படுவதாக அக்கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று புதன்கிழமை (16) மதியம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இடம்பெறுகின்ற தேர்தல்களில் இளைஞர்கள் போட்டியிட வேண்டும், மாற்றம் ஒன்றை கொண்டு வர வேண்டும் என அனைவரும் கூறுகின்றீர்கள்.
அரசியலில் இளைஞர்கள்
வன்னி தேர்தல் தொகுதியில் பிற மாவட்டங்களுடன் ஒப்பிடுகின்ற போது, பல மாற்றங்கள் தென்படுகின்றது. தென்பகுதி மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பிய பின்னர் எமது பிரதேச மக்களிடமும் மாற்றம் ஒன்று வேண்டும்.
இளைஞர்கள் அரசியலில் குதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் உள்ளனர்” எனக் கூறியுள்ளார்.
கோட்டாபயவின் பொருளாதார ஆலோசகருக்கு அநுர அரசாங்கம் வழங்கிய பதவி!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தில் பொருளாதார ஆலோசகர்களில் ஒருவராக கடமையாற்றிய துமிந்த ஹுலங்கமுவ புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கத்தில் சிரேஸ்ட பொருளாதார ஆலோகராக நியமிக்கப்பட்டுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மக்கள் போராட்ட முன்னணி என்ற கட்சியின் சார்பில் பொலனறுவை மாவட்டத்தில் போட்டியிடும் தலைமை வேட்பாளர் இந்ரானந்த டி சில்வா இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
மெதிரிகிரிய பிரதேசத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
13 நாட்களில் அரசாங்கம் 41900 கோடி ரூபா கடன்
குற்றச்சாட்டு
கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் ஆலோசனை குழுவின் பெயர் பட்டியலில் 12ஆம் இடத்தில் இருப்பவர்தான் இந்த துமிந்த என அவர் தெரிவித்துள்ளார்.
கோட்டாபயவை சுற்றியிருந்து, நாட்டையும் விவசாயிகளையும் நெருக்கடிக்குள் தள்ளிய ஊதாரிகளுக்கு அநுர அரசாங்கத்தில் முக்கிய பதவிகள் வழங்கப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
துமிந்த ஹுலங்கமுவ இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவராக கடமையாற்றி வருகின்றார்.
கோட்டாவின் அரசாங்கத்தின் பொருளாதார ஆலோசகராக பதவி வகித்த ஹுலங்கமுவ, அநுர அரசாங்கத்தில் சிரேஸ்ட பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என இந்ரானந்த டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
13 நாட்களில் அரசாங்கம் 41900 கோடி ரூபா கடன்!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் 13 நாட்களில் 41900 கோடி ரூபா கடன் பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரட்ன இந்த குற்றச்சாட்டை நேற்று தம்புள்ள பிரதேசத்தில் வைத்து முன்வைத்துள்ளார்.
அரசாங்கம் தொடர்ச்சியாக வரையின்றி கடன் பெற்றுக்கொள்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அநுர அரசாங்கத்தை விமர்சிக்கும் மொட்டுவின் வேட்பாளர்
அநுர அரசாங்கத்தை விமர்சிக்கும் மொட்டுவின் வேட்பாளர்
ஓய்வூதியம்
எனினும், நாட்டு மக்களுக்கு எவ்வித உணரக்கூடிய நிவாரணங்களும் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்க ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வு வழங்கப்பட முடியாது என்பது தெளிவாகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஓய்வூதியம் பெற்றுக்கொள்வோருக்கான 3000 ரூபாவினை இன்னமும் செலுத்த முடியாத நிலைமை உருவாகியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2ஆம் திகதி, 9ஆம் திகதி, 11ஆம் திகதி மற்றும் 15ஆம் திகதிகளில் அரசாங்கம் பெருந்தொகை பணத்தை கடனாக பெற்றுக்கொண்டுள்ளது எனவும் இதன் மொத்த தொகை 41900 கோடி ரூபா எனவும் தெரிவித்துள்ளார்.
இதன்படி, புதிய அரசாங்கம் மணித்தியாலத்திற்கு 134.9 கோடி ரூபா என்ற அடிப்படையில் கடன் பெற்றுக்கொண்டுள்ளது என ரோஹினி கவிரட்ன தெரிவித்துள்ளார்.
அதிகாரப் பகிர்வை மறுத்தால் கோத்தாவிற்கு நடந்ததே அநுரவுக்கும் நடக்கும் – சபா குகதாஸ் எச்சரிக்கை!
ஜெனத்தா விமுக்தி பெரமுன என்ற அடிப்படை சிங்கள இனவாதத்தில் வளர்க்கப்பட்டு இன்று தேசிய மக்கள் சக்தி என்ற பெயருடன் ஜனாதிபதிக் கதிரையில் அமர்ந்து கொண்ட அநுர அரசு கோட்டாபயவின் தம்பியர்கள் என்பதை தமிழர் விவகாரத்தில் காட்ட முனைந்தால் ஆட்சிக் கதிரையில் இருந்து வெளியேறுவதற்கான நாட்களை எண்ணும் நிலைமை உருவாகும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் எச்சரித்துள்ளார்.
அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
முன்னாள் ஜனாதிபதி கோத்தா தமிழர்களுக்கு பொருளாதாரப் பிரச்சினை மட்டும் தான் உள்ளது அதிகாரப்பகிர்வு தேவையற்றது 13 ஆம் திருத்தம் நீக்கப்பட வேண்டும் என கூறிக் கொண்டு அதனை நீக்க புதிய அரசியலமைப்பு குழுவை தன்னிச்சையாக நியமித்த விழைவை எப்படி அனுபவித்தார் என்பதை நாடே அறியும்.
கோத்தாவின் வெளியேற்றத்தை சாதகமாக பயன்படுத்தி ஜனாதிபதிக் கதிரைக்கு வந்து விட்டு கோத்தா தமிழர் விவகாரத்தில் கொண்டிருந்த நிலைப்பாட்டை அநுர கையில் எடுப்பதாக இருந்தால் கோத்தா சந்தித்த அதே நிலையை எதிர் கொள்ள வேண்டி வரும்.
தமிழர் விவகாரத்தை இனவாதமாக கையில் எடுப்பதான வெளிப்பாடுகள் தான் தொடர்ச்சியாக அநுர அரசின் பிரதிநிதிகள் அனைவரும் வெளிப்படுத்தி வருவதை அவதானிக்க முடிகிறது இப்படியான வெளிப்பாடு நாட்டின் மாற்றத்திற்கு ஆரோக்கியமாக அமையமாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அம்பாறை – சங்குச் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்பாளர்கள் அறிமுகம்
அம்பாறை – சங்குச் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்பாளர்கள் அறிமுகம் இன்று (16) இடம் பெற்றது!
சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் இன்று (16) காரைதீவு கலாசார மண்டபத்தில் இடம் பெற்றது.
இதில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ரெலோ , ஈ.பி.ஆர்.எல்.எப், புளட், ஈரோஸ் ஜனநாயக முன்னணி ,ஜனநாயக போராளிகள் அமைப்பு ஆகிய கட்சிகளின் அம்பாறை மாவட்ட தலைவர்கள் ,முக்கியஸ்த்தர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
அம்பாறை இணைப்பாளர் கென்றி மகேந்திரன் தலைமையில் இடம் பெற்ற இக் கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுகம் இடம் பெற்றதுடன் ,வேட்பாளர்கள் கட்சி முக்கியஸ்த்தர்களின் உரைகளும் இடம் பெற்றன.
வேட்பாளர்களும் இலக்கங்களும்
இலக்கம் – 01 கதிர்காமத்தம்பி வேலுப்பிள்ளை
இலக்கம் 02 கிருஸ்ணபிள்ளை லிங்கேஸ்வரன்
இலக்கம் 03 தியாகராசா கார்த்திக்
இலக்கம் 04 பாலசுந்தரம் பரமேஸ்வரன்
இலக்கம் 05 ராஜகுமார் பிரகாஜ்
இலக்கம் 06 சபாபதி நேசராசா
இலக்கம் 07 சிந்தாத்துரை துரைசிங்கம்
இலக்கம் 08 சுப்ரமணியம் தவமணி
இலக்கம் 09 செல்லத்தம்பி புகனேஸ்வரி
இலக்கம் 10 சோமசுந்தரம் புஸ்ப்பராசா
மட்டக்களப்பு மாவட்டத்தில் 49 வேட்பு மனுக்கள் ஏற்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் உட்பட 56 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில் ஒரு கட்சி 6 சுயேச்சைகுழுக்கள் உட்பட 7 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், 22 கட்சிகள் 27 சுயேச்சைக்குழுக்கள் உட்பட 49 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், 392 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக மட்டு அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமானஜே.ஜே. முரளிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பழைய கச்சேரி மண்டபத்தில் நேற்று (11) வெள்ளிக்கிழமை தேர்தல் வேட்புமனு தொடர்பாக இடம் பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 449,686 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் 442 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறும்.
இந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை பாரம் எடுக்கப்பட்டது. இதில் 23 கட்சிகள் 33 சுயேச்சைக்குழுக்கள் உட்பட 56 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவற்றில் 1 கட்சி 6 சுயேச்சைக்குழு உட்பட 7 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதுடன் 22 கட்சிகள் 27 சுயேச்சைக் குழுக்கள் உட்பட 49 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது என அவர் தெரிவித்தார்.
இதேவேளை கடந்த 2020 ஆம் ஆண்டு தேர்தலில் மாவட்டத்தில் 5 பிரதிநிதிகளை தேரந்தெடுப்பதற்கு 16 கட்சிகளும் 22 சுயேச்சைக்குழுக்களைச் சேர்ந்த 304 வேட்பாளர்கள் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
2024 பொதுத் தேர்தல் : தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட அறிவிப்பு!
எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள 2024 பொதுத் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களில் 690 குழுக்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில்74 நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதிக எண்ணிக்கையிலான அரசியல் குழுக்கள்
ஏதேனும் அநீதிகள் இடம்பெற்றுள்ளதாக உணர்ந்தால் அந்த குழுக்கள் நீதிமன்றத்திற்கு செல்ல முடியும் .
திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான அரசியல் குழுக்கள் போட்டியிடுவதுடன், அதன் எண்ணிக்கை 64 ஆகும். மொனராகலை மற்றும் பொலன்னறுவை தேர்தல் மாவட்டங்களில் குறைந்த எண்ணிக்கையிலான அணிகள் போட்டியிடுவதுடன், அங்கு தலா 15 அணிகள் போட்டியிடுகின்றன.
2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று (11) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தது.
எதிர்காலத்தில் விருப்பு வாக்கு இலக்கங்கள் வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரவிற்கு சமந்தா பவர் அளித்த உறுதிமொழி!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்தின் நிருவாகி சமந்தா பவருக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (11) இணைய தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்றது.
பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதி மற்றும் சமந்தா பவர் ஆகியோருக்கு இடையில் கருத்துப் பரிமாறப்பட்டதுடன், எதிர்காலத்தில் இலங்கைக்கும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அரசாங்கம் முன்வைத்த கொள்கை அறிக்கைக்கும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்தின் கொள்கைகளுக்கும் இடையிலான ஒற்றுமையை இதன்போது சுட்டிக்காட்டிய சமந்தா பவர், மக்கள் நலனுக்காக மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு ஐக்கிய அமெரிக்க முகவர் நிலையத்தின் முழு ஆதரவு வழங்கப்படும் என்றும் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.
இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளை விரிவுபடுத்தவும் அதேபோன்று சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கும் இந்தச் செயற்பாடுகள் உதவும் எனவும் சமந்தா பவர் மேலும் சுட்டிக்காட்டினார்.