மஹிந்த மற்றும் பசிலின் பயணத்தடை நீடிப்பு

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகிய இருவருக்கும் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இருவருக்குமான பயணத்தடையை ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரை நீடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் என குறித்த இருவர் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள காரணத்தினால் இவ்வாறு பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

ரணிலா ? அரகலயவா ? – நிலாந்தன்.

ரணில் ஜனாதிபதியாக வந்தபின் நடந்த ஒரு பெரிய மாற்றம் என்று சொன்னால் அரகலயவை அடக்கத் தொடங்கியதுதான். எந்த அரகலயவின் விளைவாக அவர் ஆட்சிக்கு வந்தாரோ, அதே அரகலயவை அவர் இப்பொழுது அடக்கப் பார்க்கிறார். எந்த ஒரு முறைமை மாற்றத்தைக் கேட்டு அரகலய போராடியதோ, அந்த முறைமை மாற்றம் நடக்கவில்லை.மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் அதே பழைய முறைமையினூடாக நிறைவேற்று அதிகாரம் பெற்ற ஜனாதிபதியாக எழுச்சி பெற்றிருக்கிறார்.

காலிமுகத்திடல் சோர்ந்துபோய் விட்டதாக அவதானிக்கப்படுகிறது. அங்கு முன்னணியில் நின்ற அரசியல் பின்னணியை கொண்ட பலரும் தலைமறைவாகிவிட்டதாகவும் கருதப்படுகிறது. தொடர்ச்சியான கைதுகள் காரணமாக முன்னணி ஏற்பாட்டாளர்கள் பலர் பின் மறைவிற்கு செல்வதாக நம்பப்படுகிறது. ஊடகவியலாளர்களின் கைபேசி அழைப்புகளுக்கு அவர்கள் பதில் கூறுவதில்லை என்றும் தெரிகிறது. ருவிற்றரில் அரகலய தொடர்பான செய்திகளை, படங்களை தொடர்ச்சியாக ஒளிபரப்பி வந்த ஒருவர் பின்வருமாறு பதிவிட்டு இருந்தார்…”நாங்கள் இந்த நாட்டுக்காக போராடியதற்காக மனம் வருந்துகிறோம்..”.

அரகலயவின் தொடக்கத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்காக நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் இலவசமாக வழக்காட முன்வந்தார்கள். இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் அவ்வாறு போராட்டக்காரர்களை விடுவிப்பதற்காக சட்டத்தரணிகள் நூற்றுக்கணக்கில் திரண்டமை என்பது அரிதான ஒன்று.அதுமட்டுமல்ல அரகலய மீது தாக்குதல்கள் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும் பொழுதெல்லாம் சட்டத்தரணிகள், மதகுருக்கள் போன்றோர் கைகளை கோர்த்தபடி மனித வேலி ஒன்றை உருவாக்கி அரசாங்கத்துக்கு சவால் விட்ட தருணங்களும் உண்டு. குறிப்பாக கோத்தா பதவி விலக முன்பு ஒருநாள் காலி வீதியில் அரகலய பகுதிக்கு அருகே போலீஸ் வாகனத் தொடரணி ஒன்று காணப்பட்டது. அது தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் கடுமையான ஆட்சேபனையைத் தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்த வாகனப் பேரணி பின்வாங்கப்பட்டது.

கோத்தா பதவி விலகும் வரையிலும் அரகலியவுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகளின் தூதரகங்கள், கொழும்பில் உள்ள ஐநா தூதரகம் போன்றன ருவிட்டரில் பதிவுகளையிட்டு வந்தன. ஆனால் இப்பொழுது நிலைமை அவ்வாறு இல்லை. ரணில் அரகலயவை முறியடிக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கிய பின்,மேற்கத்திய தூதரகங்கள் ருவிட்டரில் பதிவிடும் கருத்துக்களில் சுட்டிப்பான வார்த்தைகளால் கைது நடவடிக்கைகளை கண்டிக்கும் குறிப்புகளைப் பெருமளவுக்கு காண முடியவில்லை. இங்கே ஒரு வித்தியாசத்தை சுட்டிக்காட்ட வேண்டும். மே ஒன்பதாம் தேதி மஹிந்தவின் ஆதரவாளர்கள் அரகலயவை தாக்கியபொழுது அமெரிக்கத் தூதுவர் கண்டனம் தெரிவித்திருந்தார்.ஆனால் ரணில் பதவியேற்ற அதேநாளில் அரகலயவை தாக்கியபொழுது அமெரிக்க தூதுவர் கவலை கலந்த கரிசனைதான் தெரிவித்திருந்தார்.அதாவது ராஜபக்சக்களை அகற்றும் வரையிலும் மேற்கு நாடுகள் அரகலியவை ஆர்வத்தோடு ரசித்தன. ஆனால் இப்பொழுது கைது நடவடிக்கைகளை சுட்டிப்பான வார்த்தைகளால் கண்டிக்கும் ஒரு நிலைமையைக் காண முடியவில்லை.

இப்படி ஒரு ஆபத்தை முன்கூட்டியே எதிர்பார்த்த காரணத்தால்தான் முன்னிலை சோசலிசக் கட்சி, ஜேவிபி போன்றவற்றின் நிழல் அமைப்புகளும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் போராட்டத்தில் முன்னணிக்கு வந்து தலைமை தாங்கத் தயங்கின. இலங்கைத் தீவு ஏற்கனவே இரண்டு ஜேவிபி போராட்டங்களையும் தமிழ்மக்களின் போராட்டத்தையும் நசுக்கிய ஒரு நாடு.ஒரு நூற்றாண்டுக்குள் மூன்றுதடவைகள் தன் சொந்த மக்களின் குருதியில் குளித்த ஒரு நாடு. அந்த அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில்தான் அரகலய திட்டமிடப்பட்டது. எனினும் இப்பொழுது ரணில் அரகலியவை மேற்கிடமிருந்தும் சிங்கள நடுத்தர வர்க்கத்திடம் இருந்தும் சாதாரண சிங்கள மக்களிடமிருந்தும் தனிமைப்படுத்தும் வேலைகளை படிப்படியாக முடுக்கி விட்டுள்ளார்.

அரகலிய வெற்றிடத்தில் இருந்து தோன்றவில்லை. பொருளாதார நெருக்கடிகளின் நேரடி விளைவு அது. பொருளாதார நெருக்கடிகளை தணிப்பதுதான் அரகலயவை எதிர்கொள்வதற்கான ஒப்பிட்டுளவில் சிறந்த வழி. ஆனால் பொருளாதார நெருக்கடிகளை போதிசத்துவரே வந்தாலும் எடுத்த எடுப்பில் தீர்த்துவிட முடியாது.ரணில் விக்கிரமசிங்க வந்த பின்னரும் நிலைமை அப்படித்தான் காணப்படுகிறது.ஒப்பீட்டளவில் மின்வெட்டு நேரம் குறைந்திருக்கிறது.கொழும்பில் பெருநகரப் பகுதியில் எரிவாயு விநியோகம் ஒப்பீட்டளவில் சீராக உள்ளது..எரிபொருள் கிடைக்கும் என்ற நம்பிக்கை காரணமாக மக்கள் வரிசையில் நிற்கிறார்கள்.

அரசாங்கமும் நேரத்துக்கு நேரம் ஏதோ ஒரு முறமையை அறிமுகப்படுத்துகிறது.கடைசியாக அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது “கியூஆர் கோட்”.ஆனால் அதற்குப் பின்னரும் எரிபொருள் சீராக கிடைக்கவில்லை. முறைமைகளை மாற்றுவதன்மூலம் மக்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தலாம் என்ற உத்தியை அரசாங்கம் முன்னெடுக்கிறது.ஆனால் எரிபொருள் வழமைபோல கிடைக்காது என்பதனால்தான் இப்படியெல்லாம் முறைமைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இயல்பாக எரிபொருளைப் பெற முடியாது என்ற நிலை இப்போதைக்கு மாறப்போவதில்லை என்று தெரிகிறது.ரணில் பதவி ஏற்க முன்பு காணப்பட்ட நீண்ட வரிசைகளுக்கும் இப்பொழுது காணப்படும் நீண்ட வரிசைகளுக்கும் இடையே ஒரு துலக்கமான வேறுபாடு உண்டு.என்னவெனில், மக்கள் எரிபொருள் வருவதற்கு சில நாட்களுக்கு முன்னரே வாகனங்களை தெருவோரங்களில் அடுக்கி வைத்து விட்டு செல்கிறார்கள் என்பதுதான்.அதாவது நிலைமை இப்பொழுதும் மாறவில்லை என்று பொருள். அப்படிப் பார்த்தால் அரகலயவுக்கான காரணங்கள் அப்படியே காணப்படுகின்றன.

எனவே மக்கள் மீண்டும் தெருவுக்கு வர மாட்டார்கள் என்று எடுத்துக் கொள்ள முடியாது.அரகலயவுக்கு ஆதரவாக கடந்தவாரம் கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒப்பீட்டளவில் எழுச்சியானது அல்ல.அது போல கடந்த 29ஆம் தேதி நாடு முழுவதும் பரவலாக ஒழுங்கு செய்யப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகளும் பேரெழுச்சிகரமானவை அல்ல.எனினும் அரகலிய புதிய வடிவம் எடுக்கும் என்று அதன் ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். மஹிந்தவை அகற்றியஅரகலயவை 1.0என்றும்.பசிலை அகற்றியது 2.0 என்றும், கோத்தாவை அகற்றியது 3.0என்றும், இனி ரணிலையும் அகற்றி சிஸ்டத்தை மாற்றுவது என்பது 4.0என்றும் அவர்கள் கூறுகிறார்கள். எனினும் இப்போதுள்ள நிலவரங்களின்படி அரகலய ஒப்பீட்டளவில் தணிந்து போய் இருக்கிறது என்பதே மெய்நிலை.

ரணில் விக்கிரமசிங்கவின் முறியடிப்பு நடவடிக்கைகளின் விளைவாக தாமரை மொட்டு கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள் ஒப்பீட்டளவில் துணிச்சல் அடைந்திருப்பதாகத் தெரிகிறது.ஜேவிபியை விடுதலைப் புலிகளை கையாண்டது போல அரகலயவையும் கையாள வேண்டும் என்று அவர்களின் பலர் நம்புவதாக தெரிகிறது. அவர்கள் அப்படித்தான் நம்புவார்கள். ஏனென்றால் மேமாதம் ஒன்பதாம் திகதி கிடைத்த அனுபவம் அத்தகையது.இலங்கைத் தீவின் நவீன வரலாற்றில் ஒரு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவ்வளவு தொகையாக சொத்துக்களை இழந்தமை,நஷ்டப்பட்டமை என்பது இதுதான் முதல்தடவை.கிட்டத்தட்ட நாடாளுமன்றத்தின் மூன்றில் ஒரு பகுதியினர் அதாவது தாமரை மொட்டுக் கட்சியின் ஏறக்குறைய 40 உறுப்பினர்களின் சொத்துக்கள் அவ்வாறு எரித்தழிக்கப்பட்டன.ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையும் ஒரு பிரதேச சபைத் தலைவரையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்தே கொலை செய்துவிட்டார்கள்.

இது அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை அச்சுறுத்தலான ஒரு விடயம்.இலங்கைத்தீவின் நவீன வரலாற்றில் அரசியல்வாதிகள் அந்தளவுக்கு அச்சப்பட்டவில்லை.முன்பு ஜெவிபியின் ஆயுதப் போராட்டத்தின்போது அரசியல்வாதிகளுக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்தது.தமிழ்மக்களின் ஆயுதப் போராட்டம் காரணமாகவும் தென்னிலங்கையில் அவ்வாறான ஒரு நிலைமை இருந்தது.ஆனால் ஒரு இரவுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் எரித்து அழிக்கப்பட்டமை என்பது இதற்கு முன்னபொழுதும் நடந்ததில்லை.எனவே தமக்கு ஏற்பட்ட நட்டத்துக்கு எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்றுதான் தாமரைமொட்டுக் கட்சியை சேர்ந்தவர்கள் சிந்திப்பார்கள்.

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றதிலிருந்து அவர்களுக்கு படிப்படியாக துணிச்சல் அதிகரித்து வருகிறது. ரணில் விக்கிரமசிங்க முதலில் ராஜபக்சக்களை பாதுகாத்தார். உள்நாட்டிலும் பாதுகாக்கிறார்,வெளிநாட்டிலும் பாதுகாக்கிறார்.இரண்டாவதாக மே9 தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கானவர்களை கைது செய்தார். இப்பொழுது அடுத்தகட்டமாக ஜூலை ஒன்பதாம்திகதி அரச கட்டிடங்களை ஆக்கிரமித்தவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் பலர் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.ரணில் ஜனாதிபதியாக வந்ததும் ராஜபக்சங்களுக்கும் தாமரை மொட்டு கட்சிக்கும் துணிச்சல் கூடியிருக்கிறது. கோட்டா நாடு திரும்புவார் என்று பகிரங்கமாகக் கூறும் ஒரு நிலைமை வந்திருக்கிறது. மஹிந்த ராஜபக்ச இப்பொழுது கூறுகிறார் “நான் எப்போதும் மக்களுடன்தான் இருக்கின்றேன். நாட்டை விட்டு ஓடும் எண்ணம் எனக்குக் கிடையாது. பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுத்த நான், நாட்டைவிட்டு ஏன் ஓட வேண்டும்?” என்று. சுசில் பிரேம் ஜயந்த கூறுகிறார்…அரகலயவின் பின்னணியில் புலிகள் இயக்கத்தின் நிழல் இருக்கின்றது, ஈஸ்டர் குண்டு வெடிப்பின் நிழல் இருக்கின்றது வெளி நாட்டுச் சக்திகளின் பண உதவி இருக்கின்றது என்று.

அதாவது அரகலயவை தோற்கடிப்பதற்கு இனவாதத்தை கையில் எடுக்கிறார்கள்.ரணில் தாமரை மொட்டின் கைதியாக காணப்படும் யானை. தனிப்பட்ட முறையில் அவருடைய வீடு எரிக்கப்பட்டிருக்கிறது.அவருடைய செல்லப்பிராணியான நாய் கொல்லப்பட்டிருக்கிறது.இவற்றின் தாக்கம் அவருடைய முடிவுகளைத் தீர்மானிக்கும்.பிரதமராக தெரிவு செய்யப்பட்டதும் அவர் அரகலயவின் நண்பர் போலத் தோன்றினார். அரகலயவை கவனிப்பதற்கு என்று தனது மருமகனை நியமித்தார்.ஆனால் இப்பொழுது அவர் முழுக்க முழுக்க அரகலயவின் எதிரியாகக் காணப்படுகிறார்.

எந்த மக்கள்எழுச்சி அவருக்கு,அவருடைய அரசியல் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் புது வாழ்வைக் கொடுத்ததோ,அதே மக்கள் எழுச்சியை அவர் நசுக்க முற்படுகிறார்.இது ஏறக்குறைய பிரெஞ்சுப் புரட்சியை நினைவுபடுத்துகிறது.பிரெஞ்சுப் புரட்சியோடு அரகலயவை ஒப்பிட முடியாது என்பதை கட்டுரை ஏற்றுக்கொள்கிறது.எனினும், இப்போதுள்ள நிலைமைகளின்படி அரகலயவை சில விடயங்களில் பிரஞ்சு புரட்சியோடு ஒப்பிடலாம்.பிரெஞ்சு புரட்சியானது மன்னர்களுக்கு எதிராக தோற்றம் பெற்றது. ஆனால் அதன் வெற்றிக்கனிகள் அனைத்தையும் நெப்போலியன் சுவிகரித்துக் கொண்டார்.அது மட்டுமல்ல,அவர் தன்னை பேரரசனாகவும் பிரகடனப் படுத்திக்கொண்டார்.எந்த மன்னர் ஆட்சிக்கு எதிராக பிரெஞ்சுப்புரட்சி தோற்றம் பெற்றதோ,அதே புரட்சியின் விளைவானது ஒரு பேரரசனை உருவாக்கியது.

அப்படித்தான் இலங்கைதீவிலும். எந்த ராஜபக்ச குடும்பத்தை அகற்ற வேண்டும் என்று கேட்டு மக்கள் தெருவில் இறங்கினார்களோ,அதே ராஜபக்ச குடும்பம் ரணிலை ஒரு முன்தடுப்பாக முன்நிறுத்தி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தன்னை பாதுகாத்துக் கொண்டு விட்டது. அந்தக் குடும்பத்தின் கட்சியான தாமரை மொட்டுக்கட்சி நாடாளுமன்றத்தில் தன்னை மறுபடியும் நிலைநிறுத்திக் கொண்டு விட்டது.கடந்தகிழமை நடந்த அவசரகால சட்டத்துக்கான வாக்கெடுப்பிலும் அது தெரிந்தது. தாமரை மொட்டுக்கட்சி இப்பொழுதும் நாடாளுமன்றத்தில் பலமாகக் காணப்படுகிறது.

அரகலயக்கார்கள் சிஸ்டத்தில் மாற்றத்தை கேட்டார்கள்.ஆனால் எந்த சிஸ்டமும் மாறவில்லை. மாறாக,போராடிய செயற்பாட்டாளர்கள்தான் தலைமறைவாக வேண்டிய நிலைமை வந்திருக்கிறது.இதைப் பிழிவாகச் சொன்னால் 69 லட்சம் வாக்குகளை பெற்ற யுத்த வெற்றி நாயகர்களை துரத்திய ஒரு போராட்டத்தை,சுமார் முப்பதாயிரம் வாக்குகளைப் பெற்ற ஒருவர் தோற்கடிக்கப் பார்க்கிறார்.

இலங்கைக்கு போதிய பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை புதிதாக நிதியுதவி வழங்கத் திட்டமிடவில்லை – உலக வங்கி

போதிய பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை இலங்கைக்கு புதிதாக நிதியுதவி வழங்கத் திட்டமிடவில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது.இதேவேளை தற்போதுள்ள பிற திட்டங்கள் அடிப்படைச் சேவைகள், மருந்து மற்றும் மருத்துவப் பொருட்கள் விநியோகம், பாடசாலை உணவு மற்றும் கல்விக் கட்டணத் தள்ளுபடி போன்றவற்றிற்கும் ஆதரவை வழங்குவோம் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

தற்போதைய கடன்களின் கீழ் மருந்துகள், சமையல் எரிவாயு, உரம், மாணவர்களுக்கான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையைப் போக்க உதவுவதாக கூறியுள்ளது.இந்த நிதியில் ஏறத்தாழ 160 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வழங்கப்பட்டுள்ளதாக உலக வங்கி வெளிப்படுத்தியுள்ளது.

அத்துடன் இலங்கையின் மோசமான பொருளாதார நிலை மற்றும் அதன் தாக்கம் குறித்து குழு ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளதாக அறிக்கையொன்றில் உலக வங்கி தெரிவித்துள்ளது.(

Posted in Uncategorized

சர்வகட்சி அரசாங்கம் நகைச்சுவையாக மாறிவிட்டது என்கின்றார் பொன்சேகா

சர்வகட்சி அரசாங்கம் என்ற பேச்சுக்கள் தற்போது நகைச்சுவையாக மாறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து பிரதமருக்கு அதிகாரங்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்த நிலையில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.

இந்நிலையில் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறித்து 19 ஆவது திருத்தத்தை மீண்டும் இந்த அரசாங்கம் கொண்டுவருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சரத் பொன்சேகா கூறினார்.

ஆகவே சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்துகொள்வதில் சிக்கல் காணப்படுவதாகவும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டினார்.

தற்போதைய சூழ்நிலையில் தேர்தலை நடத்த முடியாது என்றும் அதற்கு பதிலாக புதிய சக்தி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

காலி முகத்திடலை ஆக்கிரமித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை – பொது பாதுகாப்பு அமைச்சு

காலி முகத்திடலில் போராட்டம் நடத்தும் இடங்களை இன்னமும் ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நகர அபிவிருத்தி அதிகாரசபை, துறைமுக அதிகாரசபை உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகளை அனுமதியின்றி ஆக்கிரமிப்பு செய்த குற்றச்சாட்டு அவர்கள் மீது சுமத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நிறுவனங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

அதன்பிரகாரம் பாதுகாப்பு கமரா காட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள வீடியோ காட்சிகள் மூலம் வளாகத்தை ஆக்கிரமித்துள்ளவர்களை அடையாளம் காணும் செயற்பாடு முன்னெடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

போராட்டம் தொடர்பில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் தொலைபேசி உரையாடல்கள் மற்றும் வங்கி கணக்குகளை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பொலிஸ், குற்றப் புலனாய்வு திணைக்களம் உள்ளிட்ட பல குழுக்களினால் ஜனாதிபதி செயலகம் உட்பட அடையாளம் காணப்பட்ட இடங்களில் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

”மக்கள் ஆணையுடன் புதிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும்”

மக்கள் அபிப்பிராயத்தின் ஊடான புதிய மக்கள் ஆணையை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ   தெரிவித்தார்.

220 இலட்சம் மக்கள் தனது வாழ்க்கையை இழந்துள்ள இவ்வேளையில், அரசியல் தலைகள் மாறுதல், இசை நாற்காலி போட்டிகள், அமைச்சர்கள் மாற்றம் என பேரம் பேசும் கலாசாரம் நிலவி வரும் இச்சூழ்நிலையில் இந்நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு தற்போதைய அரசாங்கத்தினால் முடியவில்லை என்றும் அரசாங்கம் தனது இருப்பைக் காக்கவே முன்னுரிமை அளிப்பதாகவும் அது தவிர நாட்டு மக்களின் வாழ்க்கையை ஸ்திரப்படுத்துவதற்கு அல்ல என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

உலக வங்கி, பிட்ச் மதிப்பீட்டு நிறுவனம், சமந்தா பவர் போன்ற பல்வேறு இராஜதந்திரிகள், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாட்டின் ஸ்திரத்தன்மை வலுவாக இருக்க வேண்டும் என்றும், பல்வகை பொருளாதாரக் கட்டமைப்பு நடைமுறையில் இருக்க வேண்டும் என்றே குறிப்பிடுகின்றனர். எனினும் இந்த கட்டமைப்பை உருவாக்குவதை விடுத்து அரசாங்கத்தின் பிரதிநிதிகள் கடந்த மாதங்களில் முன்னெடுத்த நடவடிக்கைகளில் சிக்கல் இருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையிலிருந்து நாட்டை கட்டியெழுப்ப புதிய மக்கள் ஆணையின் மூலமே முடியும் எனவும் தெரிவித்தார்.இதன்படி மரியாதைக்குரிய மகாநாயக்க தேரர்கள் மற்றும் ஏனைய சமயத் தலைவர்கள் கோரும் புதிய மக்கள் ஆணையை பெற வேண்டும் என்றும் இந்த அரசியல் சூதாட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்றும் பதவிகளை பரிமாற்றம் செய்வதினால் 220 இலட்சம் மக்களின் துயரங்களுக்கும் கண்ணீருக்கும் தீர்வு கிடைக்காது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

இலங்கை வரும் சீன ஆய்வுக் கப்பல்: இந்தியா விசேட அவதானம்!

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீனக் கப்பல் வரத் திட்டமிடப்பட்டுள்ளதை அறிந்துள்ளதாகவும், அதனை அவதானித்து வருவதாகவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“யுவான் வாங் 5” என்ற ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கப்பல் தற்போது ஹம்பாந்தோட்டை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இந்த கப்பல் ஒகஸ்ட் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில்,

“பாதுகாப்பு மற்றும் பொருளாதார விடயங்களில் இந்தியா அக்கறை கொண்டுள்ளது. என்ன நடக்கிறது என்பதை அரசு கண்காணித்து வருகிறது. பாதுகாப்பு மற்றும் பொருளாதார விடயங்களில் ஏதேனும் பாதிப்பு இருந்தால், அவற்றைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை இந்தியா எடுக்கும்.” என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தனது நாட்டின் சட்டபூர்வமான கடல்சார் நடவடிக்கைகளில் “சம்பந்தப்பட்ட தரப்பினர் தலையிட மாட்டார்கள் என சீனா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

”சர்வகட்சி அரசாங்கமே பிரச்சினைகளுக்கு தீர்வு”: கண்டி ஜனாதிபதி மாளிகையில் இருந்து ரணில்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஒரே வழி சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் இருந்து விசேட உரையொன்றை ஆற்றிய போது இதனை தெரிவித்திருந்தார்.

நீங்கள் அனைவரும் கடந்த மே 9 ஆம் திகதி முதல் எதிர்கொண்ட துன்பங்களை நான் அறிவேன். சிலருக்கு வீடு இல்லாமல் போனது. சிலருக்கு கிராமத்தில் இருந்து செல்ல வேண்டி ஏற்பட்டது. அச்சுறுத்தல் இருந்தது. அழைத்து கூறினார்கள் உங்கள் அனைவரையும் கொலை செய்வோம் என்று. அந்த காலம் தற்போது நிறைவடைந்துள்ளது. நாம் ஒன்றிணைய முயற்சிப்போம். நாம் ஒன்றிணைந்து நாட்டுக்காக உழைப்போம்.

அவ்வளவுதான் நான் கேட்கிறேன். இந்த இடத்தில் ஐக்கிய தேசிய கட்சி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இரண்டு கட்சியினரும் உள்ளனர். இந்த அரங்கில் மீதமுல்ல பகுதியும் நிரம்பி இருப்பதை பார்க்க எனக்கு விரும்பம் உள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவர்களையும் அழைத்து வரை முடியாதா?

இதை நிரப்புவோம். இதை ஐக்கிய தேசிய கட்சிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் மாத்திரம் மட்டுப்படுத்த வேண்டியதில்லை.சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதே தற்போதைய நிலைமைக்கு தீர்வு காண்பதற்கு ஒரே வழி என்று தெரிவித்துள்ளார்.

எரிபொருள் அனைத்து தரப்புக்கும் வழங்கப்பட வேண்டும்: செ.மயூரன்

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் படும் வேதனையை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று பார்வையிட வேண்டும் என தமிழ் ஈழவிடுதலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான செ.மயூரன் வலியுறுத்தியுள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்கள் சந்திக்கும் துயரங்கள் பற்றி இன்று(28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நிரப்பு நிலையங்களில் பொதுமக்கள் படுகின்ற துயரங்கள் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாதவை. பெண்கள் சிறுவர்கள் முதியவர்கள் என பலதரப்பட்டோரும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வாழ்க்கை செலவு அதிகரிப்பு, தொழிலின்மை ஆகியவற்றால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள சாதாரணமக்கள் எரிபொருளையும் பெற்றுக்கொள்ள முடியாமல் நாட்கணக்கில் வீதிகளில் கிடக்கின்றனர்.

இந்த அவலத்துக்கு மத்தியில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அவர்களின் வேதனையை நேரிலே சென்று பார்ப்பதற்க்கு சக்தியற்று போயுள்ளனர்.

தங்களை தெரிவுசெய்த மக்கள் மனித அவலத்தை எதிர் நோக்கியுள்ள நிலையில் அவர்களின் துன்பத்தில் பங்கெடுக்காமல் இருப்பது வேதனையாக இருக்கின்றது.

அங்கு நடக்கும் அராஜகங்களை மக்களுடன் நின்று தட்டி கேட்பதற்கு ஒருவருக்காவது சக்தி இருக்கின்றதா? என அவர்களிடம் கேட்க விரும்புகின்றேன்.

தெற்கில் கொலைக்களங்களாக மாறிவரும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் போல வடக்கிலும் தோன்ற வேண்டும் என்பது தானா உங்களது விருப்பம்? எத்தனை காலங்கள்தான் வேடிக்கை மனிதர்களைபோலவே இவர்கள் செயற்பட போகின்றார்கள்? மக்கள் இனியாவது இவர்களை உணர்ந்து கொள்ள வேண்டும்.

அத்துடன் நிரப்பு நிலையங்களில் பொலிஸாரின் செயற்பாடு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி நிற்கின்றது.

வரிசையில் நிற்கும் பொதுமக்களுடன் முரண்படுவது, அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவது என பொலிஸாரின் அடக்குமுறைக்கு வரைமுறையே இல்லாமல் போய்விட்டது.

எரிபொருள் அனைத்து தரப்புக்கும் வழங்கப்பட வேண்டும்: செ.மயூரன் | Fuel Should Be Provided All Parties

நாட்கணக்கில் வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் எரிபொருள் வழங்கப்படும் தினத்தில் வருகைதரும் பொலிஸாரால் முன்னுரிமை அடிப்படையில் தமது வாகனங்களில் முழுமையாக எரிபொருளினை நிரப்பி செல்கின்றனர்.

இதற்கு நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களும் உடந்தையாக செயற்படுகின்றனர். மக்களை காக்க வேண்டிய பொலிஸார் அதனை புறம் தள்ளி சட்டமும் நீதியும், சாதாரண மக்களுக்காகத்தான் என்பதுபோல அவர்களின் செயற்பாடு உள்ளது.

இவை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனமெடுக்க வேண்டும். உங்களை தெரிவுசெய்த சாதாரண மக்களின் அவலங்களை தீர்ப்பதற்கு முன்வரவேண்டும்.

எரிபொருள் என்பது அனைவருக்கும் அத்தியவசியமானது. அதனை அனைத்து தரப்புகளிற்கும் வழங்க வேண்டியது அரசின் கடமை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எந்த அரசியல் நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை-சீனா

இலங்கை சீனா ஒத்துழைப்பு எப்போதும் இலங்கை தலைமையிலான – இலங்கையின் கொள்கைகளையே பின்பற்றுகின்றது என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உட்கட்டமைப்பிற்கு வெளிப்படைத்தன்மையற்ற கடனுதவியை வழங்கியமையே இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கான முக்கிய காரணி என அமெரிக்க முகவரகத்தின் தலைவர் சமந்தா பவர் நேற்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சமந்தா பவரின் கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அனைத்து ஒத்துழைப்பு திட்டங்களும் முழுமையான விஞ்ஞான ரீதியிலான ஆராய்ச்சி மற்றும் முழுமையான மதிப்பீடுகளின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டுள்ள அவர் எந்த அரசியல் நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை – சீன ஒத்துழைப்பு இலங்கையின் பொருளாதாரத்துக்கு பங்களிப்பு செய்துள்ளது, இலங்கை மக்களுக்கு குறிப்பிடத்தக்க அனுகூலங்களை வழங்கியுள்ளது என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வெளிநாட்டுக் கடன்கள் பல கூறுகளைக் கொண்டது எனத் தெரிவித்துள்ள அவர் இலங்கையின் கடன்களுக்கான சீனாவின் பங்களிப்பு சர்வதேச மூலதனச்சந்தை பல்தரப்பு அபிவிருத்தி வங்கிகளை காட்டிலும் குறைவானது எனவும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized