நினைவேந்தல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கையில் ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மை அல்லது உள்நாட்டுக் கலவரம் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூறுவது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

சிரேஷ்ட பேராசிரியர் ஜகத் வீரசிங்க, கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழக பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர, யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் டி. சனாதனன், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பர்ஸானா ஹனீபா, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் துஷாரி சூரியாராச்சி, நகர அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மஹிந்த விதானராச்சி ஆகியோர் உள்ளடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது.

22-05-2023 ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டது.

1983-2009 காலகட்டத்தில் இலங்கையில் நடந்த ஆயுத மோதல்கள், அரசியல் அமைதியின்மை அல்லது உள்நாட்டுக் கலவரங்கள் என்பவற்றினால் உயிரிழந்த பொதுமக்கள், ஆயுதப்படை உறுப்பினர்கள், பொலிஸார், முன்னாள் போராளிகள் உட்பட அனைவரையும் நினைவுகூரும் வகையில் ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாக நினைவிடமொன்றை அமைப்பது குறித்து இந்தக் குழு ஆய்வு செய்தது.

இதற்காக, நிபுணர் குழு கடந்த நாட்களில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் அமர்வுகளை நடத்தியதுடன், ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் தொடர்பான நிபுணர்களுடன் ஆலோசனைகளையும் நடத்தியது.

இந்த பொதுமக்கள் அமர்வுகள் அந்தந்த பகுதிகளில் பணியாற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தேசிய ஒருங்கிணைப்பு அதிகாரிகளினால் ஒருங்கிணைக்கப்பட்டன. பங்குபற்றிய மக்களுக்கு தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்கத்திற்கான தமது அபிலாஷைகள், யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை வெளிப்படையாகவும் சுதந்திரமாகவும் முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

நினைவேந்தல் செய்வதற்கான மக்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று குழு வலியுறுத்தியதோடு பல்வேறு குழுக்களும் தனிநபர்களும் நினைவேந்தல் மற்றும் நல்லிணக்க நிகழ்வுகளை வெவ்வேறு வழிகளில் முன்னெடுப்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. வளமான அறிவுக் கட்டமைப்பையே இது வெளிப்படுத்துவதாக சுட்டிக்காட்டியுள்ள நிபுணர் குழு, நாட்டின் மோதல்கள் தொடர்பான கடந்த காலத்தைப் பற்றி அறிக்கையிடவோ, கருத்துத் தெரிவிக்கவோ அல்லது வேறுவிதமாகக் கையாளும் முயற்சியின் போது இந்தப் பங்களிப்புகளைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த சந்திப்புகளின் போது முன்வைக்கப்பட்ட பரந்த அளவிலான யோசனைகளை பரிசீலித்த பின்னர் இந்தக் குழு பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இலங்கையின் மோதல்கள் மற்றும் நல்லிணக்க முயற்சிகளுடன் உருவான கலை மற்றும் கலாச்சார வெளிப்பாடுகளை பாதுகாத்து வைக்கும் குறியீட்டு ரீதியிலான கட்டடமொன்றை அமைக்கவும் குழு பரிந்துரைத்துள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காக கூட்டு அர்ப்பணிப்பை உறுதி செய்வதும் அனைத்து இலங்கையர்களிடையே நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும்.

குழுவின் அறிக்கையைக் கையளித்த போது ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் உடன் இருந்தார்.

13ஐ அமுல்படுத்துவது தொடர்பில் வட்டமேசை மாநாட்டைக் கூட்டுமாறு முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய கோரிக்கை

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுலாக்குவது குறித்து அரசியல் தலைவர்களும், புலம்பெயர் தமிழர்களும் நேர்மறையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள நிலையில் தாமதமின்றி வட்டமேசை மாநாட்டைக் கூட்டி தீர்வை எட்டுமாறு சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,

“வடக்கு மற்றும் தெற்கின் பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தவும், இனம் மற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்ட மோதல்கள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதற்கும், அனைத்து பிரஜைகளுக்கும் கண்ணியத்துடன் வாழக்கூடிய உரிமையை வழங்குவதும், இந்தப் பிரச்சினைகளை எதிர்கால தலைமுறைகளுக்கு விட்டு வைக்காமல் இருப்பதும் எமக்குள்ள பாரிய கடமையாகும்.

ஆகையால் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி அதற்கான தலையீடுகளை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் மேற்கொள்ள வேண்டும் என்பது எமது நம்பிக்கையாகும். மேலும் 9 ஆவது நாடாளுமன்றத்தின் கால எல்லை தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி உள்ளிட்ட ஆளும் கட்சிக்கும், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதின் முக்கியத்துவம் தொடர்பில் அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளதுடன், இவ்விடயம் தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், மக்கள் விடுதலை முன்னணி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தற்போது நாடாளுமன்றத்தில் சுயேட்சையாக செயற்பட்டு வரும் அதிக அளவிலான உறுப்பினர்களும் எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிட எண்ணி இருக்கும் ஜனாதிபதி வேட்பாளர்களும் இந்தக் கருத்தில் உறுதியாக இருப்பது எமக்குத் தெரியும்.

இது போன்ற முற்போக்கான அபிலாஷைகளைப் பாராட்டபட வேண்டும். இந்த அனைத்து விடயங்களையும் கருத்தில் கொள்கையில் தற்போது நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து தாமதமின்றி வட்டமேசை மாநாட்டைக் கூட்டி இவ்விடயங்களை தெளிவுபடுத்திக் கொள்ளுமாறு மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகின்றோம்.

தமிழ் புலம்பெயர்ந்த தரப்பினரில் குறிப்பிடத்தக்க குழுவினர் இதற்கு ஆதரவு தெரிவித்து இருப்பதும் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். இவ்விடயத்துக்கு நாட்டின் முதன்மை தரப்புகள் ஆதரவு தெரிவித்திருப்பது பாராட்டத்தக்கது.

இந்தப் பேச்சுகளைப் புறக்கணிக்காமல் இருப்பதற்கான கடமை தமிழ் அரசியல் கட்சிகளுக்கு போன்றே அனைத்து கட்சிகளுக்கும் உள்ளது. குறுகிய அரசியல் காரணங்களுக்காக இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் துரோகிகள் என்று எதிர்காலச் சந்ததியினர் குற்றஞ்சாட்ட வழிவகுக்கும். ஆகையால் ஜனாதிபதி உள்ளிட நாடாளுமன்றம் உன்னத நோக்கத்துடன் தலையிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றுள்ளது.

13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தும் எதிர்க்கட்சித்தலைவரின் கூற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சியில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை மீள அமுல்படுத்துவது குறித்து எதிர்க்கட்சித் தலைவரின் கூற்றுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று (13) காலை ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை பிரிவினைக்கு எதிரான கூட்டமைப்பு, தேசிய அமைப்புகளின் ஒற்றுமை, தேசப்பற்றுள்ள தேசியப் படை, இரண்டாம் தலைமுறை, யாழ். சிவில் சமூக மையம், அகில இலங்கை அமைப்பு, பிரஜை அதிகாரத்திற்கு எதிரான இலஞ்சம் மற்றும் ஊழல் அமைப்பு, பூகோள இலங்கை சங்கம், நீதி மற்றும் இறைமைக்கான மக்கள் குரல், தேசப்பற்றுள்ள அறிஞர் சங்கம் என்பன கலந்து கொண்டனர்.

இதன் போது எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சி இல்லாததால் அலுவலகப் பிரதிநிதி ஒருவரிடம் போராட்டக்காரர்கள் கடிதம் ஒன்றை கையளித்தனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் வெற்றிக்கு ரெலோ தலைவர் செல்வம் வாழ்த்து

மாண்புமிகு நரேந்திர மோடி
தலைவர் பாரதீய ஜனதா கட்சி
பிரதம மந்திரி
இந்தியா

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துக்கள்

இந்திய நாட்டின் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுடைய கட்சி நாடு தழுவிய ரீதியில் பெற்ற வெற்றிக்கு எமது வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.

தங்களின் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி தொடர்ந்தும் மூன்றாவது தடவையும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை பெற்று ஆட்சி அமைப்பது தங்கள் மீது மக்கள் கொண்டுள்ள அதீத நம்பிக்கையை பறை சாற்றுகிறது.

தங்களது இந்த வெற்றிக்கு எமது ஈழ மக்கள் சார்பாகவும் நமது கட்சி சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைகிறேன். தங்கள் அரசியல் பணி தொடர்ந்து சிறக்க எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

செல்வம் அடைக்கலநாதன் பா.உ
தலைவர் – தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Posted in Uncategorized

திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் வெற்றிக்கு ரெலோ தலைவர் செல்வம் வாழ்த்து

மாண்புமிகு மு க ஸ்டாலின்
தலைவர், திராவிட முன்னேற்றக் கழகம்
முதலமைச்சர்
தமிழ்நாடு

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துக்கள்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுடைய அரசியல் இயக்கம் பெற்ற மாபெரும் வெற்றிக்கு எமது உளம் நிறைந்த வாழ்த்துக்கள்.

தாங்கள் இந்த மாபெரும் இயக்கத்தின் தலைமையை ஏற்று பயணிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்து மாநிலங்கள் அவை தேர்தலிலும் அபரிதமான வெற்றியை ஈட்டியதோடு நாடாளுமன்றத் தேர்தலிலும் வரலாறு காணாத வெற்றியை பெற்றிருப்பது தங்களுடைய ஆளுமையையும் தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்தி நிற்கிறது.

தாங்கள் ஈட்டிய இந்த மாபெரும் வெற்றிக்கு எமது ஈழ மக்கள் சார்பாகவும் எமது கட்சி சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.

தங்கள் அரசியல் பணி தொடர்ந்து சிறக்கவும் மக்கள் மனதில் இன்று போல் என்றும் இடம்பெற்றிருக்கவும் வாழ்த்துகிறேன்.

அன்புடன் செல்வம் அடைக்கலநாதன் பா.உ
தலைவர் – தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Posted in Uncategorized

இராணுவத்தினால் அழிக்கப்பட்ட தியாகி பொன் சிவகுமாரனின் சிலையில் அஞ்சலி

பொன் சிவகுமாரனின் 50 ஆவது நினைவேந்தல் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்பட்ட பொன் சிவகுமாரனின் திருவுருவச்சிலையில் தமிழ்த் தேசியவாதிகளால் இன்று காலை உணர்வுபூர்வமாக அஞ்சலிக்கப்பட்டது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ரெலோ தலைமை குழு உறுப்பினருமான தியாகராஜா நிரோஸ் மற்றும் அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் ஈஸ்வரன, அதன் செயலாளா தனுபன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு அகவணக்கம் செலுத்தியதுடன் திருவுருவச் சிலைக்கு தீபமேற்றி மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

உயிர் தமிழுக்கு உடல் மண்ணிற்கு என்ற இலட்சியத்துடன் தமிழ் மக்களின் விடுதலைக்காக தன்னுயிர்த் தியாகம் செய்த தியாகி பொன் சிவகுமாரன் அவர்களது உருவச்சிலை 05 யூன் 1975 ஆம் ஆண்டு சிறைமீண்ட இளைஞன் முத்துக்குமாரசுவாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினராலும் இராணுவத்துடன் சேர்ந்தியங்கிய தரப்புக்களாலும் அச் சிலை பலதடவைகள் உடைத்து நொருக்கப்பட்டு உரும்பிராய் சந்தை வளாகத்தில் வீசப்பட்டு புதையுண்டு கிடந்த நிலையில் அதனை தமிழ் மீள எடுத்து சிவகுமாரனின் சிலை அமைத்த வளாகத்தில்; மீள சிலை வளாகத்தின் ஒருபகுதியில் முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ரெலோ தலைமை குழு உறுப்பினருமான தியாகராஜா நிரோஸ் பிரதியிஸ்டை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

தமிழர்களின் அரசியல் அபிலாசைக்கான வழிகாட்டி பொன் சிவகுமாரன் ரெலோ தலைமை குழு உறுப்பினர் நிரோஷ்

போராட்டப் பயணப்பாதையில் இனத்திற்கான மாணவர் எழுச்சியின் வடிவமாக சிவகுமாரனின் எழுச்சியையும் தியாகத்தினையும் என்றும் நினைவில் கொள்கின்றோம் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தியாகி பொன் சிவகுமாரனின் 50 ஆவது ஆண்டு நினைவு நாளான இன்று நாம் தமிழ்த் தேசியவாதிகளால் நிர்மாணிக்கப்பட்டு இராணுவத்தினராலும் இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கியவர்களினாலும் தகர்க்கப்பட்ட நிலையில் என்னால் மீள பிரதிஸ்டை செய்யப்பட்ட திருவுருவச்சிலையில் அஞ்சலித்து உறுதிபுணுகின்றோம்.

உயிர் தமிழுக்கு உடல் மண்ணிற்கு என்ற இலட்சியத்துடன் தமிழ் மக்களின் விடுதலைக்காக தன்னுயிர்த் தியாகம் செய்த தியாகி பொன் சிவகுமாரன் அவர்களது உருவச்சிலை 05 யூன் 1975 ஆம் ஆண்டு சிறைமீண்ட இளைஞன் முத்துக்குமாரசுவாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினராலும் இராணுவத்துடன் சேர்ந்தியங்கிய தரப்புக்களாலும் இச் சிலை பலதடவைகள் உடைத்து நொருக்கப்பட்டு உரும்பிராய் சந்தை வளாகத்தில் வீசப்பட்டு புதையுண்டு கிடந்த நிலையில் அதனை தமிழ் மீள எடுத்து சிவகுமாரனின் சிலை அமைத்த வளாகத்தின் நான் தவிசாளராக பதவி வகித்தபோது பிரதிஸ்டை செய்தேன். எமது இனவிடுதலைக்கான வரலாறுகளை வழிகாட்டியாக நாம் கைக்கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களுக்கு எதிரான அரச அடக்கு முறை இன்றும் நீட்சியாக காணப்படுகின்றது. எமது உரிமைகளுக்காக தன்னுயிரைத் தியாகம் செய்த சிவகுமாரனின் அர்ப்பணிப்பினை ஒட்டுமொத்த தமிழ் இனமும் நினைவுகூர்கின்றது.

அரச அடக்குமுறைக்கும் வன்முறைக்கும் அகிம்சை வழிலான அணுகுமுறைகள் பயனற்றுப் போன சூழ்நிலையில் அரச அடக்குமுறையை எதிர்கொண்டாக வேண்டும் என்ற ஓர் நிர்ப்பந்தத்தில் மக்களின் மனநிலை நின்ற விடுதலைப்போராட்ட வீரனாகவே பொன். சிவகுமாரன் செயற்பட்டார்.

பொன் சிவகுமாரன் இனத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராக ஓர் இளையவனாக மாணவர் விடுதலைப் போராட்டத்தின் முன்னேடியாக கட்சி அரசியல் விடயங்களுக்கு அப்பாற்பட்டு தமிழ்த் தேசிய விடுதலையை இலக்காகக் கொண்டு போராட்ட அமைப்புக்கள் நிறுவனமயப்படுத்தப்படாத காலகட்டத்தில் தனது தியாகத்தினை நிலைநாட்டியுள்ளார். எதிரியிடம் விடுதலைப்போராளிகள் உயிருடன் அகப்பட்டுவிடக்கூடாது என்ற அடிப்படையில் தன் இன்னுயிரை சயனைட் அருந்தி மாய்த்துள்ளார்.

விடுதலைப்போராட்டம் ஒடுக்குமுறைகளுக்கு எதிரானது என்ற நியாயபூர்வமான யதார்த்தத்தினை பொன். சிவகுமாரன் அவர்களது தியாகம் என்றும் பறைசாற்றுகின்றது. தமிழ் மாணவர்களுக்கு எதிராகத் திட்டமிட்டு கொண்டுவரப்பட்ட கல்வி ரீதியிலான தரப்படுத்தல்கள், உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் என நீண்டு செல்லும் இனத்திற்கு எதிரான அநீதிகளிற்கு எதிராக பொன். சிவகுமாரன் போராடியுள்ளார். எமது போராட்டங்களின் முன்னோடியாக தியாகி சிவகுமாரனை என்றும் நினைவில் கொள்கின்றோம். இவ்வாறு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ரெலோ தலைமை குழு உறுப்பினருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

பொது வேட்பாளர் என்ற கோரிக்கைக்கு ரெலோ ஆதரவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது பற்றிய விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.

கடந்த கால எமது அனுபவங்களின் அடிப்படையில் தமிழ் மக்கள் மத்தியில் பொது வேட்பாளர் என்ற நிலைப்பாடு எழுந்துள்ள சூழ்நிலையிலும் காலத்தின் தேவை மற்றும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டும் பொது வேட்பாளர் என்ற கோரிக்கைக்கு ஆதரவு நிலைப்பாட்டை எமது கட்சியின் தலைமை குழு எடுத்திருக்கிறது.

இந்தக் கோரிக்கையானது வெற்றியளிப்பதற்கு தமிழ் தேசிய தரப்பில் இருக்கும் அனைவரும் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை முன் நிறுத்த வேண்டிய அவசியத்தையும் நாம் வலியுறுத்துகிறோம்.

அனைத்து தமிழ் தரப்பினர்களையும் ஒருங்கிணைக்கும் தற்போதைய முயற்சிக்கு நமது பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் தீர்மானித்துள்ளோம்.

தலைமைக்குழு
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்

தமிழ் பொது வேட்பாளர் காலத்தின் தேவை – சித்தார்த்தன் எம்.பி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பு சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவது இன்றைய காலகட்டத்தின் தேவை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்றையதினம்(30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்ற தேர்தலாக இருந்தால் என்ன ஜனாதிபதி தேர்தலாக இருந்தால் என்ன அந்த காலத்திற்கு தேர்தல் நடாத்தப்பட வேண்டும்.

தேர்தலை பிற்போட்டு தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் தான் விரும்பியபடி ஜனநாயகத்தை மறுக்கின்ற செயற்பாட்டை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது .

எனவே, அமெரிக்க அரசியலமைப்பு போல இலங்கையிலும் தேர்தலை பிற்போடுகின்ற அதிகாரமற்ற அரசியலமைப்பு இங்கும் உருவாக்கப்பட வேண்டும். அப்பொழுது இங்கே ஜனநாயகம் சிறக்கும் .

பொதுவேட்பாளர் விடயத்தில் அது இன்றைய காலகட்டத்தின் தேவை என உண்ர்ந்து தமிழ் தரப்புக்கள், அனைவரையும் இயன்றவரை இணைத்து இந்த ஜனாதிபதி தேர்தலை ஒன்றுபடுத்த முடியும் என நாம் கூறிவருகின்றோம்.

பொதுவேட்பாளர் ஒருவரை கொண்டு வருவதன் மூலம் சரியான நிலைப்பாட்டை எடுக்கூடிய அரசியல் சக்திகளுக்கும் தென்னிலங்கைக்கும் சர்வதேசத்திற்கும் எடுத்து கூற முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் இணக்க அரசியல் வேண்டாம் – திடசித்தத்துடன் முன் நகர்வோம் – யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை

பேரம் பேசும் இணக்க அரசியல் வேண்டாம் – திடசித்தத்துடன் முன் நகர்வோம் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சிறிலங்காவின் அரச தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் தொடர்பான பேச்சுக்கள் முனைப்புப் பெற்றுள்ள நிலையில், கட்டமைக்கப்பட்ட இனவழிப்புப் பொறிமுறைகளிற்குள் (Structural Genocide) சிக்குண்டு இனவிடுதலை வேண்டி நிற்கும் ஈழத்தமிழ் மக்கள் தமது அரசியல் விடுதலைப்பயணத்தில் இத்தேர்தல் களத்தினை தங்கள் நலன்சார்ந்து எவ்வாறானதாகக் கையாள வேண்டும் என்பதில் கடந்த கால அனுபவங்களைப் பரிசீலனை செய்து இனியாவது சுதாகரித்து முன்நகர வேண்டிய அவசிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

2009 இற்குப் பின்னரான 15 ஆண்டுகள் காலத்தில் சாணக்கியம், ராஜதந்திரம் என்னும் பெயரில் வெற்று வாக்குறுதிகளை மாத்திரமே நம்பி தமிழ்த் தரப்புக்களால் முன்னெடுக்கப்படும் பேரம் பேசும் இணக்க அரசியலினால் தமிழினவழிப்பிலிருந்து தாயகத்தின் ஒரு அங்குல நிலத்தையேனும் காப்பாற்ற முடியவில்லை என்பதோடு, தமிழ் மக்களும் தமிழ்த் தேசிய அரசியற்கட்சிகளும் உதிரிகளாக்கப்பட்டுள்ளமையும் அது உளவியல்ரீதியில் தோல்வி மற்றும் அடிமைத்துவ மனநிலையினை மக்களிடையே விதைப்பதிலுமே வெற்றியடைந்துள்ளது.

1. ஈழத்தமிழ் மக்களை அரசியற்படுத்தி அணிதிரட்டுதல்.

2. போரிற்குப் பின் மக்களிடையே உள்ள தோல்வி மனோநிலையினை அகற்றுதல்.

3. வடக்கு – கிழக்கிற்கான பொருளாதாரக் கட்டமைப்பை நிறுவுதல்.

4. அரசற்ற தரப்பாக பன்னாடுகளைக் கையாள்வதற்கான வெளிவிவகாரக் கொள்கை மற்றும் கட்டமைப்பை உருவாக்குதல்.

5. பன்னாட்டுச் சமூகத்தில் கூட்டாகத் தமிழரின் குரலை முன்வைத்தல்.

6. வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் தொடர்ச்சியான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பினை தடுத்துநிறுத்துதல்.

7. அதிகாரப்பகிர்வோடு எவ்விதத்திலும் தொடர்பற்ற சிறிலங்கா ஒற்றையாட்சி அரசியலமைப்பிற்குட்பட்ட 13ஆம் திருத்தத்திற்கு அப்பால் தமிழ் அரசியலை நகர்த்துதல்.

ஓர் அரசற்ற தரப்பாக எமது தமிழ்ச் சமூகத்தினால் அடைந்து கொள்ளப்பட்டிருக்க வேண்டிய மேற்குறிப்பிட்ட விடயங்களெதனையும் சாதித்திராத தமிழ் அரசியற் தரப்புக்கள் தொடர்ந்தும் பேரம் பேசும் அரசியலால் இனியும் எதையாவது சாதிக்கும் என்பதில் நம்பிக்கையில்லை. தமிழ் அரசியற்கட்சிகளும், குடிமக்கள் சமூகத்தினரும் (Civil Societies) தமிழ் மக்களின் பின்நோக்கிய இந்நிலையிலாவது தம்மைச் சுதாகரித்துக் கொண்டு தமிழ் அரசியலின் பாதையினை மீளச் சரிவர தகவமைத்துக் கொள்ள வேண்டும்.

கடந்த 2010, 2015, 2019 ஆண்டுகளில் நடைபெற்ற சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தல்களில் இனப்படுகொலைப் பொறுப்பாளிகளான ஒரு தரப்பினரை எதிர்ப்பதாகக் கூறி, இனப்படுகொலைக் குற்றத்தைப் புரிந்த சிறிலங்காவின் இராணுவத் தளபதி, பதில் பாதுகாப்பு அமைச்சர், போர்க்குற்றம் புரிந்த பெருமளவான இராணுவத்தினரின் ஆதரவினைப் பெற்ற நபர்களுக்கே வாக்களிப்பதற்குப் பரிகார நீதி கோரக்கூடிய தமிழ் மக்கள் தவறாக வழிநடாத்தப்பட்டோம்.

இனியாவது ஏமாற்று கபட அரசியலிற்குப் பலியாகாமல், தமிழ் மக்களின் வாக்குகள் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் முகவர்களுக்கோ, வெளித்தரப்புக்களுக்கோ சென்றுசேர்வதைத் தவிர்த்து, தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களைப் பிரதிபலிக்கும் தீர்மானங்களை தமிழ் அரசியற் தரப்புக்கள் மேற்கொள்ளத் தவறுமேயானால் நாம் அரசியல் பிழைத்த மக்களாக்களாக்கப்படுவோம்.

சமகால அரசியற் களச்சூழலில் தமிழ் மக்களின் முன்னால் உள்ள தெரிவுகள்,

1. சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தலைப் புறக்கணித்தல்.

2. சிறிலங்காவின் அரச தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் தற்போது எதிர்பார்க்கப்படும் தேர்தலை நிராகரித்து, அத்தேர்தலை நடைமுறையில் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான அறைகூவல் விடுக்கும் பொதுவாக்கெடுப்பாகக் கைளாளும் வகையில் தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்துதல்.

சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தலைப் புறக்கணித்தல் மற்றும் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துதல் இரண்டும் ஒரே கருத்தியலின் இருவேறுபட்ட பிரயோக வடிவங்களே! தமிழர்களால் அளிக்கப்படாத வாக்குகள் மற்றும் பொதுவேட்பாளருக்கு வழங்கப்படும் வாக்குகள் என இரண்டுமே சிங்கள – பௌத்த பெருந்தேசியவாதத்தின் முகவர்களை நிராகரிக்கும் வாக்குகளேயாகும்.

பொதுவேட்பாளர் தொடர்பில் தீர்க்கமான முடிவுகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில், பின்வரும் விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்த தமிழ் மக்கள் உள்ளிட்ட தொடர்புபட்ட தரப்புக்கள் அனைவரையும் வலியுறுத்துகின்றோம்.

1. சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தலைப் புறக்கணிப்பதனாலோ, தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்துவதனாலோ சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் முகவர் எவர் வென்றுவிடக் கூடும் எனும் கேள்வி பொதுவில் அனைவரிடமும் எழக்கூடியதொன்று. ஆனால், அரசியல் விடுதலை வேண்டும் சமூகமாக எமக்கு எது தேவை? எமது நிலைப்பாடு என்ன? என்பதுவே நாம் அக்கறை கொள்ளவேண்டியது. அதன் பக்க விளைவுகளைப் பற்றியல்ல.

2. பொதுவேட்பாளரை நிறுத்துதல் என்பது எதிர்வரும் சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தலைத் தமிழ் மக்களின் வேணவாக்களைப் பிரதிபலிக்கும் தேர்தல் ஒன்றாக மாற்றுவதேயாகும். ஆகவே, பொதுவேட்பாளர் எனும் எண்ணக்கரு நடைமுறையில் வெற்றி – தோல்விகளுக்கு அப்பாற்பட்டதாகும்.

3. பொதுவேட்பாளர் தமிழ் மக்களின் இதுவரைகால வேணவாக்களை பிரதிபலிக்க வேண்டுமேயன்றி, குறிப்பிட்ட சில தரப்புக்களின் அரசியல் நலன்களையல்ல.

4. பொதுவேட்பாளர் தமிழ் மக்களின் குறியீடாக நிறுத்தப்பட வேண்டும். முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை அடையாளப்படுத்தும் வகையில் கிழக்கிலிருந்து வேட்பாளர் தேர்வு நடைபெற வேண்டும். அவ்வேட்பாளர் பெண்ணொருவாராக இருப்பின் உத்தமம்.

5. தமிழ்மக்களின் வாக்குகள் என்பது அவர்தம் வேணவாக்களைச் உறுதிபடச் சொல்வதற்கேயன்றி பேரங்கள் பேசுவதற்கல்ல. ஆகவே இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்குகள் என்ற பேச்சுக்களுக்கே இடமளித்தல் கூடாது.

6. பொதுவேட்பாளராக நிறுத்தப்படும் நபர் அரசியல்வாதியல்லாதவராக இருப்பதோடு, தேர்தலின் பின்னர் அந்நபர் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணைந்து செயற்படுவதோ, தேர்தல் அரசியலில் ஈடுபடுவதோ தவிர்க்கப்பட வேண்டும் என்பது முன்நிபந்தனையாக்கப்பட வேண்டும்.

மேற்படி விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழ்மக்களின் வாக்குகள் இத்தேர்தலிலாவது அவர்களின் உரிமைக்குரலாகப் பிரயோகிக்கப்பட வேண்டும். மேற்கண்ட தெரிவுகளில் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் குடிமக்கள் சமூகத்தினர் உள்ளிட்ட அனைவரும் இணைந்து கூட்டாகத் தீர்மானமொன்றினை மேற்கொள்ளும் பட்சத்தில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரிப்பதற்கும் இணைந்து பயணிப்பதற்குமான எமது உடன்பாட்டினை மாணவர் சமூகமாக நாம் வெளிப்படுத்துகின்றோம்.

தமிழ் மக்களின் வாக்குகள் சிங்கள – பௌத்த பேரினவாதத்தின் முகவர்களுடனான பேரம் பேசலுக்காகப் பலியாக்கப்படாது. தமிழ்மக்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு, தமிழ் அரசியற்கட்சிகள் மற்றும் குடிமக்கள் சமூகத்தினர் ஒன்றுபட்டுத் தீர்க்கமான முடிவொன்றினைத் திடசித்தத்துடன் மேற்கொள்வதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் சமூகமாக வலியுறுத்தி நிற்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.