நாட்டை நாசமாக்கிய பெருமை தற்போதைய ஆட்சியாளருக்கே என்கிறார் யாழ். ஆயர்.

நமது நாட்டை பிச்சைக்கார நாடாக மாற்றிய பெருமை தற்போதைய ஆட்சியாளர்களையே சேரும் என யாழ். மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனாட் ஞானபிரகாசம் தெரிவித்தார்

தற்போதைய பொருளாதார  நெருக்கடி நிலைமைகள் தொடர்பில்  கருத்து தெரிவிக்கும் போதே  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் யாழ். மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனாட் ஞானபிரகாசம் மேலும் கருத்து  தெரிவிக்கையில்,

74 ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்டவர்கள் மக்களை தம்முடைய வாக்குகளுக்காக பாவித்தார்கள். ஆனால் இந்த நாட்டிலிருந்த வளத்தை எல்லாம் சுரண்டி விட்டார்கள். ஒருவிதமாக கடைசியில் மிக பாரதூரமான சுரண்டல்களுடன் இன்று  நாடு பிச்சை எடுக்கின்ற நாடாக வந்துவிட்டது.

இந்து சமுத்திரத்தின் முத்து என்று சொல்லப்பட்ட இந்த இலங்கை  நாடு இன்று பிச்சை எடுக்கின்ற இலங்கை நாடாக மாறி உள்ளது. இதற்கு காரணமான அனைவருமே மறுமொழி சொல்ல வேண்டியவர்களாகவே  இருக்கின்றார்கள்.

ஏனென்றால் மக்களை இந்த நாட்டின் குடிமக்களாக பார்க்கவில்லை. தமது வாக்குகளிற்காக  பாவித்துள்ளார்கள். இந்த நாட்டின் பிரதிநிதிகள் என்று கூறினால் எங்களுடைய பிரச்சனை எல்லாம் தீர்ப்பதற்கு வழிமுறை உள்ளது. அவற்றைச் செய்யாமல் மக்களை வாக்குகளுக்காக அவர்கள் பாவித்து இருக்கின்றார்கள்.

மக்களை ஏமாற்றி வாக்கினை பெற்றிருக்கின்றார்கள். அவ்வாறு நாட்டு மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று நாடு  சுரண்டப்பட்டதனால்  இன்றைய நாடு இவ்வாறு படுகுழியில் போய் உள்ளது.

அண்மையில் IMF நிறுவனம் இலங்கையிடம்  பல கேள்விகளை கேட்க இருந்தது. அதேபோன்று  முன்னாள் பிரதம மந்திரியிடம் 37 கேள்விகள் ஐ.எம்.எவ்வால்  கேட்கப்பட இருந்தது. அதாவது ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பிலேயே அவர்கள் கேள்வி  கேட்க இருந்தார்கள்.

ஆனால், அவர் வைத்தியசாலையில் அனுமதி ஆகிவிட்டார். அதனால் அவர்கள் ஐ.எம்.எவ்  கேட்க வேண்டிய கேள்வியினை கேட்காது துரும்பிச்  சென்று விட்டார்கள்.

எந்த நாடும் எமக்கு உதவி செய்ய தயாராக இருக்கின்றார்கள். ஆனால் மோசடி, ஊழல் நிறைந்த இந்த நாட்டு அரசாங்கத்தை நம்பி எந்த நாடும் நமக்கு உதவுவதற்கு தயாராக இல்லை.இதனை முதலில் நிவர்த்தி செய்தால் மாத்திரமே எமக்கு ஏனைய நாடுகளின் உதவி கிடைக்கும். அதற்கு பொறுப்பானவர்கள் ஓடி ஒளிந்து விட்டார்கள். இந்த நாட்டின் தற்போதைய ஆட்சியாளர்களின் பெருந்தன்மையால் இந்த நாடு ஒரு பிச்சைக்கார நாடாக மாறிவிட்டது.- என ஆயர்  தெரிவித்தார்.

Posted in Uncategorized

எரிபொருள் நெருக்கடியிலும் கூடும் பாராளுமன்றம்!

பாராளுமன்றம் இன்று திங்கட்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு கூடவுள்ளது.

அதனடிப்படையில், இன்றும் நாளையும் (05) நாளை மறுதினம் (06) பாராளுமன்றம் கூடும் என அண்மையில் நடைபெற்ற பாராமன்ற விவகாரக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

பல்வேறு காரணங்களுக்காக பாராளுமன்றத்தில் கேட்கப்படாத 50 வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக இன்று மு.ப 10.00 மணி முதல் பி.ப 3.30 மணி வரையான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜூலை 05ஆம் திகதி மு.ப 10. 00 மணிக்குப் பாராளுமன்றம் கூடவிருப்பதுடன் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, 1979ஆம் 40ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட 2270/59 ஆம் இலக்க மற்றும் 2280/32 இலக்க வர்த்தமானி பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான இறக்குமதித் தீர்வை வரி தொடர்பான தீர்மானம், 2020ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 08ஆம் பிரிவின் கீழான கட்டளை என்பவற்றை விவாதத்தின் பின்னர் நிறைவேற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், 2007ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்டங்கள் சட்டத்தின் கீழான 6 கட்டளைகள், 1969ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ்) விதிக்கப்பட்ட 2282/21 ஆம் இலக்க மற்றும் 2282/22 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்களில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் என்பன அன்றையதினம் விவாதத்தின் பின்னர் சபையில் அனுமதிக்கப்படவுள்ளன.

இதனைத் தொடர்ந்து பிற்பகல் 4.30 மணி முதல் 4.50 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்கும், பி.ப 4.50 மணி முதல் 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதத்துக்கும் நேரத்தை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜூலை 6ஆம் திகதி மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணி வரை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக எதிர்க்கட்சி கொண்டுவரும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதம் பி.ப 4.30 மணி வரை நடைபெறவுள்ளது.

அத்துடன், தற்போது நிலவும் சிரமங்கள் காரணமாக பாராளுமன்றம் கூடாத நாட்களில் குழுக் கூட்டங்களை ஒன்லைன் மூலம் நடத்துவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், இதற்குத் தேவையான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற மேலும் 51 பேர் கைது

இலங்கை கடற்படையினரால் இன்று காலை கிழக்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கத்துடன், கடற்படையினர் கடல் மற்றும் கரையோரப் பகுதிகளை உள்ளடக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இன்று காலை திருகோணமலை கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​சந்தேகத்திற்கிடமான உள்ளூர் மீன்பிடி இழுவை படகு ஒன்றை கடற்படையினர் மடக்கிப் பிடித்துள்ளனர்.

இக்கப்பலில் பயணித்த 51 பேர் சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 41 ஆண்கள், 05 பெண்கள் மற்றும் 05 குழந்தைகள் அடங்குவர். சந்தேகநபர்களுடன், இந்த சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்தப்பட்ட மீன்பிடி கப்பலும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கம்பஹா மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். அவர்கள் திருகோணமலை துறைமுக காவல்துறையினரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இதேவேளை சட்டவிரோதமாக நாட்டை விட்டு செல்ல முயன்றவர்கள் என்ற சந்தேகத்தில் மேலும் 24 நபர்கள் நேற்று மாறவில்லை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடல் மார்க்கமாக குடிபெயர எதிர்பார்த்து அப்பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவில் 08 ஆண்கள், 06 பெண்கள் மற்றும் 10 குழந்தைகள் அடங்குவர். மேலும், அந்த குழுவிற்கு தங்குவதற்கு வசதி செய்து கொடுத்த விடுதி பொறுப்பாளரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு, வாழைச்சேனை மற்றும் சிலாபம் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மாரவில காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஐஎம்எப் உதவி கிடைக்க இலங்கை செய்ய வேண்டியவை: அமெரிக்கா அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன்னர் சில விடயங்களை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று அமெரிக்கா செனட் சபையின் வெளிவிவகார குழு அறிவித்துள்ளது.

அதன்படி முதலில் மத்திய வங்கியின் சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மோசடி மற்றும் ஊழலை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்தை இலங்கை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான சீர்திருத்தங்கள் இல்லாவிட்டால், மேலும் தோல்வியடைந்த முகாமைத்துவத்தையும் கட்டுப்படுத்த முடியாத கடன் நிலைமையையும் இலங்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அக்குழு எச்சரித்துள்ளது.

Posted in Uncategorized

இலங்கைக்கு 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிகள் -இந்திய தூதரகம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து, இலங்கைக்கு இந்தியா 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவியை வழங்கியுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் கடந்த வாரம் வெளிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்நியச் செலாவணிக்கு ஆதரவாக 2 பில்லியன் டொலர்களும், கடனுதவியாக 1.5 பில்லியன் டொலர்களுமாக மேற்படி உதவியை இந்தியா வழங்கியுள்ளது.

மேலும் 3 பில்லியன் இலங்கை ரூபா மதிப்பிலான அரிசி, பால்மா மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட மனிதாபிமான நிவாரணப் பொருட்களையும் இலங்கைக்கு இந்தியா அனுப்பியது. இவை இந்திய மக்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் 24ஆம் திகதி இந்தப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

தமிழக அரசினால் வழங்கப்படும் 40000 மெட்ரிக் டன் அரிசி, 500 மெட்ரிக் டன் பால்மா மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளடங்கிய பாரிய நிவாரணத்தின் இரண்டாம் கட்டமாக – குறித்த நிவாரணத்தொகுதி அமைந்திருந்ததாகவும் இந்திய தூதரகம் குறிப்பிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

நாடு முழுமையாக முடங்கும் நிலை!

எரிபொருள் நெருக்கடி காரணமாக அடுத்த வாரம் முதல் முழுநாடும் முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது.

தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் அத்தியாவசிய சேவைகளை கூட பேண முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால் எரிபொருள் இறக்குமதி நடக்கும் வரையில் நாட்டில் அத்தியாவசிய சேவைகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டு நாடு முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் நெருக்கடியால் சுகாதார சேவைகள், கல்வி போன்ற அத்தியாவசிய சேவைகளையும் பராமரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் மருத்துவ விநியோக சேவைகளுக்கு போதிய எரிபொருளை வழங்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

அரசாங்கம் கடந்த வாரம் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருளை வழங்கிய போதிலும், கடந்த வாரமும் பல அத்தியாவசிய சேவைகள் தடைபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

”பதவி விலகாவிட்டால் விரட்டியடிப்பதே ஒரே வழி”: எதிர்க்கட்சித் தலைவர்!

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் உடனடியாக பதவி விலகுவதை தவிர வேறு மாற்று வழியில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இந்த கொடுங்கோல் அரசாங்கத்தை அகற்றுவதற்கான மக்கள் போராட்டத்தை ஆரம்பிப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், இதற்காக கட்சி நிற பேதங்களை மறந்து முன்வருமாறும் கேட்டுக் கொண்டார்.

இத் தருணத்தில், நாட்டுக்கு எதிராக ஒரு கும்பலையோ அல்லது தனி நபரையோ பாதுகாப்பதை விடுத்து நாட்டு மக்களை பாதுகாப்பதில் தங்களை அர்ப்பணிக்குமாறு பாதுகாப்பு தரப்பினரிடமும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

இந்நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளை 5 நாட்களில் 5 மாதங்களில் உடனடியாக தீர்க்க முடியாது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இவ்வாறான பொய்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், இந்நாட்டு மக்களை தொடர்ந்தும் யாரேனும் ஏமாற்றவோ அல்லது தவறாக வழிநடத்தவோ முயற்சித்தால் அது துரதிஷ்டவசமான நிலை எனவும் அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (03) நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப குறைந்தது ஐந்து வருடங்கள் ஆகும் என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், இதற்கப்பால் இந்நாட்டை கட்டியெழுப்புவோம் எனக் கூறும் பேச்சு மாயையானது எனவும் தெரிவித்தார்.

”இலங்கை கலவரங்களின் மையமாக இருக்கும்”: மைத்திரி எச்சரிக்கை!

சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால் இலங்கை கலவரங்கள் மற்றும் போராட்டங்களின் மையமாக இருக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய அரசாங்கத்திற்கு பொருளாதார மந்தநிலையில் இருந்து இலங்கையை மீட்பதற்கு திறமையும் அறிவும் இல்லை.
இதனால் சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் கீழ் பிரதமர் பதவியை ஏற்க நான் தயாராக இல்லை.
இதனால் ஆளும்கட்சியை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் பதவி விலகுமாறு கேட்கின்றேன். அரசாங்கம் உடனடியாக இராஜினாமா செய்து அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க இராஜாங்க செயலர் அண்டனி பிளிங்கன் இலங்கை வருகிறார்

அமெரிக்க இராஜாங்க செயலர் அண்டனி பிளிங்கன் இலங்கைக்கு வியஜம் மேற்கொள்ள உள்ளார்.

இந்த விஜயமானது பெரும்பாலும் நவம்பரில் இடம்பெறலாம் எதிர்பார்க்கப்படுகின்றது.

பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ள இலங்கை நட்பு நாடுகளிடம் கூடுதல் ஒத்துழைப்புகளை கோரிவருகின்றது.

இந்நிலையில் இலங்கையின் நெருக்கடி குறித்து அமெரிக்கா கூடுதல் அவதானம் கொண்டுள்ளமையை பிரதிப்பளிக்கும் வகையில் நாட்டின் உணவு பாதுகாப்பிற்காக 20 மில்லியன் டொலர்களை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்திருந்தார்.

ஜி -20 உச்சி மாநாட்டில் கலந்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி பைடன் இந்த அறிவிப்பை விடுத்திருந்தார்.

அதே போன்று வொஷிங்டனில் உள்ள இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்கவை ஜனாதிபதி பைடன் உட்பட இராஜாங்க செயலர் அண்டனி பிளிங்கன் ஆகியோரும் சந்தித்திருந்தனர்.

அந்த சந்திப்புகளின் போது இலங்கையின் கோரிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு சாதகமான பதிலளிப்பே கிடைத்துள்ளதாக தூதுவர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அமெரிக்க திறைசேரியின் ஆசியப்பிராந்தியத்துக்கான பிரதி உதவிச்செயலர் ரொபேர்ட் கப்ரொத் மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச்செயலாளர் கெலி கெய்டெலிங் உட்பட உயர் மட்ட குழுவினர் கடந்த வாரத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு பலதரப்பட்ட சந்திப்புகளில் கலந்துக்கொண்டிருந்தனர்.

இதன் போது பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான இலங்கை – அமெரிக்கக் கூட்டுத்திட்டங்கள் மற்றும் ஒத்துழைப்புள் விஸ்தரிப்பு உள்ளிட்ட பரந்துபட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரைளாடியிருந்தனர்.

இந்த குழுவினர் தற்போது வோஷpங்டன் திரும்பியுள்ள நிலையில் இலங்கைக்கான அமெரிக்க ஒத்துழைப்புகள் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்.

இதேவேளை இராஜாங்க செயலர் அண்டனி பிளிங்கனின் இலங்கை விஜயம் தொடர்பான திகதி விபரங்களும் கூடிய விரைவில் அறிவிக்கப்படலாம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடு அன்னையின் ஆடித் திருவிழா

மன்னார் மடு அன்னையின் ஆடித் திருவிழா இன்று (2) சனிக்கிழமை காலை இடம்பெற்றது.

மடுத் திருத்தலத்தின் திருவிழா கடந்த 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

நவ நாள் ஆராதனைகளை தொடர்ந்து இன்று சனிக்கிழமை காலை திருவிழா திருப்பலி கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் யாழ் மறைமாவட்ட ஆயர் மேதகு ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் மற்றும் குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனி இடம் பெற்றதோடு, பக்தர்களுக்கு திருச்சொரூப ஆசியும் வழங்கப்பட்டது.

மடு அன்னையின் அருளைப் பெறுவதற்கு நாட்டின் பல பாகங்களிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தமையும் குறிப்பிடத்தக்கது.