மலையக தொழிலாளர் சம்பளத்தை அதிகரிக்கவும்-மனோ கணேசன் வலியுறுத்தல்

மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்குமாறு நாம் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம். அதேவேளை பெருந்தோட்டப் பகுதிகளில் பயன்படுத்தப்படாத காணிகளை தோட்டத் தொழிலாளர்களுக்கு விவசாயத்துக்காக வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளோம் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  மனோ கணேசன் சபையில் வலியுறுத்தியுள்ளார்.

பிரதமரிடம் நாம் முன்வைத்துள்ள வேண்டுகோளுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என்பதால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டங்களில் இனி தாம் பங்கேற்கப் போவதில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தைப் பகிஷ்கரிப்பது தொடர்பில் நேற்றைய தினம் எதிர்க்கட்சியினர் பலரும் சபையில் கருத்துக்களை முன்வைத்தனர்.

இதன்போது  உரையாற்றிய அவர்,

“மிக மோசமான பொறுப்பற்ற அரசாங்கமே தற்போது நாட்டில் உள்ளது. தான் பிரதமர் பதவியை கேட்டுப் பெறவில்லை. தன்னை அழைத்தே ஜனாதிபதியே அப் பதவியை வழங்கினாரென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்து வருகிறார்.

ஆனால் விமல் வீரவன்சவோ ரணில் பெயரை சில தரப்பினர் பெயரிட்டதாக சபையில் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ஒரே விடயத்துக்காக ஜனாதிபதியும் பிரதமரும் வேறு வேறாக அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். மிக மோசமான மடத்தனமாக அரசாங்கத்தையே அவர்கள் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

கொழும்பு மாவட்டத்தில் மக்கள் எரிபொருள், மண்ணெண்ணெய், எரிவாயு நெருக்கடி தட்டுப்பாடு காரணமாக  பெரும் கஷ்டப்படுகின்றனர். மலைநாட்டில் தோட்டத் தொழிலாளர்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்குமாறு நாம் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம். அதேவேளை பெருந்தோட்டப் பகுதிகளில் பயன்படுத்தப்படாத காணிகளை தோட்டத் தொழிலாளர்களுக்கு விவசாயத்துக்காக வழங்குங்கள் என மேலும் தெரிவித்துள்ளார்.

”சிங்கள தலைவர்களே வெட்கமாக இல்லையா?”: சபையில் கேள்வியெழுப்பிய சிறீதரன் எம்.பி!

நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத நாட்டில் எப்படி நீதியை பெற்றுக்கொள்ள முடியும்?
கருணை, காருண்யம் போதித்த புத்தபகவான், இன்று ஒரு ஆக்கிரமிப்பு கருவியாக பயன்படுத்தப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்றில் கருத்து தெரிவித்தார்.
முல்லைத்தீவு, குருந்தூர் மலையில் புத்தபகவானின் சிலை நிறுவப்பட்ட சம்பவம் மற்றும் விஸ்வமடு பகுதியில் படையினரால் பொதுமக்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் சிறீதரன் வெளியிட்ட கருத்துக்களுக்கு சரத் வீரசேகர பதிலளித்து பேசிய நிலையில், அதற்கு எதிர் கருத்து வெளியிட்ட போதே சிறீதரன் இந்த விமர்சனத்தை வெளியிட்டார்.
இலங்கையில் சிங்கள மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் தனித்தனி சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
தென்னிலங்கையில் சிங்கள இளைஞர்கள் போராடும்போது, அவர்களை தமது பிள்ளைகளாக பார்க்கும் அரசாங்கம், தமிழர்களை மாற்று முகமாக பார்ப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம் ஒன்று நல்லூர் பிரதேச சபையில் நிறைவேற்றம்! ரெலோமதுசூதன்

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையில் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சபையின் இன்றைய அமர்வின்போது, இனப்படுகொலை இடம் பெற்றது தொடர்பாக கனடிய பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பிரதேச சபையில் வரவேற்கப்பட்டுள்ளது.

இனப்படுகொலை

கனடிய பாராளுமன்றத்தில் இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை தான். அதற்கு நீதி கிடைக்க வேண்டும் மற்றும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரேரணை

இதற்கமைய, நல்லூர் பிரதேச சபையின் அமர்வில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ வின் நல்லூர் தொகுதி அமைப்பாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினருமான  அ.மதுசூதன் குறித்த தீர்மானத்தை சபையில் கொண்டு வந்துள்ளார்.

இதனையடுத்து அவரால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டதுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

இந்தியாவிற்கான கப்பல் போக்குவரத்து சேவையை விரைவில் ஆரம்பிக்க வேண்டும்! ரெலோ விந்தன் கோரிக்கை

இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையேயும் படகு போக்குவரத்து சேவையையும் தூத்துக்குடி மற்றும் காங்கேசன்துறை இடையேயும் வர்த்தக சரக்கு கப்பல் சேவையையும் மேற்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார்.

யாழ் ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், மைத்திரி ரணில் நல்லாட்சி அரசாங்க காலத்தில் யாழ்ப்பாணத்துக்கான சர்வதேச விமான நிலையம் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்டு விமான போக்குவரத்து சேவைகள் சுமுகமாக நடைபெற்று வந்த சூழ்நிலையில் கொரோனாவை காரணம் காட்டியும் அரசியல் காரணங்களாலும் அது இடைநிறுத்தப்பட்டது.

தற்போது மீண்டும் இதனுடாக போக்குவரத்தை தொடங்குவது என்பது வரவேற்க்ககூடிய விடயம். அத்துடன்
1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் ராமேஸ்வரம் தலைமன்னாரிடையே படகுப் போக்குவரத்து சேவை இடம்பெற்றதுடன் தூத்துக்குடி மற்றும் காங்கேசன்துறை இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து சேவையும் இடம்பெற்றது.

ஆகவே இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையேயும் படகு போக்குவரத்து சேவையையும் தூத்துக்குடி மற்றும் காங்கேசன்துறை இடையேயும் வர்த்தக சரக்கு கப்பல் சேவையை மேற்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனை ஆரம்பித்தால் தான் தற்போது நாட்டின் பொருளாதாரம்
உயர்வடைவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது. வெறுமனே வந்த விமான போக்குவரத்து அமைச்சர் புதிதாக தானே இந்த விமான சேவையை ஆரம்பிப்பது போல சித்தரிக்ககூடாது என்றார்.

மேலும் தெரிவிக்கையில்
வடக்கு கிழக்கு மக்கள் 2019ஆம் ஆண்டு தேர்தலில் தற்போதைய அரசாங்கத்தை நிராகரித்து விட்டார்கள். ஆனால் தற்போது தென்னிலங்கை மக்கள் ராஜபக்ஷ குடும்ப அரசாங்கத்தை நிராகரித்த போதும் கரத்த களரி நிலை ஏற்பட்டபோதும் அரசாங்கம் தனது பதவியை விட்டு விலகாமல் உள்ளது. ஆகவே அரசாங்கம் மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும் என்றார்.

சிங்கள மக்களின் பொறுமைக்கு எல்லை உண்டு – கூட்டமைப்பினரை பகிரங்கமாக எச்சரித்தார் சரத் வீரசேகர

இலங்கையில் சிங்கள மக்களின் பொறுமைக்கு எல்லை இருப்பதாகவும், அதனை கேலிக்குட்படுத்தவேண்டாம் எனவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(21) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர், முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு எதிர்ப்பு வெளியிட்டமையை தாம் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பிரபாகரனின் கட்சி எனவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கோணகல கிராமத்தில் 54 சிங்களவர்கள் கொல்லப்பட்டபோது, கொழும்பில் இந்து மத வேல் திருவிழா இடம்பெற்றிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் வடக்கில் பௌத்த நடைமுறைகளுக்கு கௌரவம் வழங்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அண்மையில் நாகவிஹாரையில் புத்த பெருமான் சிலையை நிறுவுவதற்கும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

இந்தநிலையில், குருந்தூர் மலையில் கண்டெடுக்கப்பட்ட சின்னங்கள் பல நூற்றாண்டுளுக்கு முற்பட்ட பௌத்த சின்னங்களாகும்.

கடந்த 9ஆம் திகதி குருந்தூர் மலையில் புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன் மற்றும் வினோநோகராதலிங்கம் ஆகியோர் பாரிய தடைகளை ஏற்படுத்தினர்.

இவர்களால், அழைத்து வரப்பட்டவர்கள் கிராம மக்கள் அல்லர் என குற்றம் சுமத்திய அவர், அவர்கள் ஏனைய பகுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்டவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை – தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி

இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“ஐக்கிய நாடுகளின் பொது அவையில் 2000-ஆம் ஆண்டில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில், ஆண்டுதோறும் ஜூன் 20-ஆம் நாள், உலக அகதிகள் தினம் எனக் கடைப்பிடிக்கப்படுகிறது. ‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்!’ என்பதே தமிழர் வாழ்வியல் மரபு.

உலகெங்கும் அகதிகளாக வாழ்பவர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டிய நிலையில், தாய்த் தமிழ்நாட்டை நாடி வந்த இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களின் வாழ்க்கை மேம்பட நமது அரசு உறுதியான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

உத்தேச 21 ஆவது திருத்தத்தின் பல பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை – நீதிமன்றம்

ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த அரசியலமைப்பின் உத்தேச 21 ஆவது திருத்தத்தின் பல பிரிவுகள் அரசியலமைப்பின் பல ஏற்பாடுகளிற்கு முரணானவை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் சர்வஜன வாக்கெடுப்பின் பின்னர் இந்த பாராளுமன்றத்தின் விசேட பெரும்பான்மை மூலம் நிறைவேற்ற முடியும் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

பொருளாதார நெருக்கடியால் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களை அகதிகளாக அறிவிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

பொருளாதார நெருக்கடியால் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு சென்றுள்ள தமிழர்களை அகதிகளாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியினால் கடந்த 3 மாதங்களில் 90 ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அவர்களை அகதிகளாக அறிவிக்காமல், சட்டவிரோத குடியேறிகளாகக் கருதி அடைத்து வைத்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தமிழகத்தின் மறுவாழ்வு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமை – குடியுரிமை சார்ந்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

”யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்பதே தமிழர் வாழ்வியல் மரபு என தமிழக முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாய் தமிழ்நாட்டை நாடி வந்த இலங்கைத் தமிழ் சொந்தங்களின் வாழ்க்கை மேம்பட தமிழக அரசு உறுதியான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அகதிகள் முகாம் என்ற பெயரை ‘இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்’ என மாற்றம் செய்துள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணிப்பதாக சஜித், அநுர அறிவிப்பு

மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இவ்வார பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன தீர்மானித்துள்ளன.

இந்த தீர்மானத்தை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் பாராளுமன்றத்தில் அறிவித்தனர்.

பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவிக்கையில்,

இந்நாட்டின் துன்பப்படும் மக்களின் அபிலாஷைகளையோ அல்லது இந்நாட்டின் பாரதூரமான வீழ்ச்சியைத் தடுக்கவோ, அல்லது இந்நாட்டை கட்டியெழுப்பவே எந்த திட்டமும் இல்லாத அரசாங்கத்தைக் கொண்ட பாராளுமன்றத்தை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (21) காலை பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

வரிசையில் நிற்கும் மக்கள் படும் துன்பகளை புரிந்து கொள்ளாத, பால் மா இன்றி தவிக்கும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் துயரங்களை புரிந்து கொள்ளாத, திருடுவதற்கும் சுரண்டுவதற்கும் கை தூக்கும் பாராளுமன்றம் வெறும் கதையாடல் கடை மாத்திரமே எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் நிராகரிப்பு

பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்வதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட 5 அடிப்படை உரிமை மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேராவின் பெயர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டு வர்த்தமானி வௌியிடப்பட்டது.

இந்நிலையில், அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்வதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி 5 அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அடிப்படை உரிமை மனு தொடர்பான தீர்ப்பு கிடைக்கும் வரை, பாராளுமன்ற உறுப்பினராகவோ, அமைச்சராகவோ தாம் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளப்போவதில்லை என வர்த்தகரான தம்மிக்க பெரேரா உயர் நீதிமன்றத்தில் நேற்று உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.