வரிச் சட்டங்கள் சிலவற்றை திருத்த அமைச்சரவை அனுமதி!

அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்கும் வகையில் வரிச் சட்டங்கள் சிலவற்றில் திருந்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் பிரதமர் முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி 2017 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க உள்நாட்டு வருவாய் சட்டம், VAT வரி சட்டம், 2002 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க தொலைத்தொடர்பு வரிச்சட்டத்தில் மாற்றத்தை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு 2011 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க பந்தயம் மற்றும் சூதாட்ட. விதிப்பனவுச் சட்டம், 1988 ஆம் ஆண்டு 40 ஆவது இலக்க நிதி மேலாண்மைச் சட்டதின் 2003 இன் 3 ஆம் பிரிவை மாற்ற பிரதமர் முன்மொழிந்துள்ளார்.

இவ்வாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதேவேளை 695 பில்லியனுக்கான இடைக்கால கணக்கறிக்கையை பாராளுமன்றத்தில் முன்வைக்க நிதி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த தீர்மானத்திற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Posted in Uncategorized

”தோட்டங்களில் பட்டினி சாவை தடுக்க தரிசு நிலங்களை பிரித்து வழங்குங்கள்”: பிரதமருக்கு மனோ கடிதம்!

தோட்டங்களில் பட்டினி சாவை தடுக்க தரிசு காணிகளை உடன் பிரித்து தொழிலாளருக்கு வழங்குங்கள். உணவுப்பயிர் விளைவித்து வீட்டுக்கும், நாட்டுக்கும் வழங்குவார்கள் என்று  தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கடிதமொன்றை அனுப்பி வைத்து பிரதமரிடம் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
தோட்ட பிரதேசங்களில் நிலவும் வரலாறு காணாத அசாத்திய வறுமை காரணமாக அங்கே தங்களது ஆட்சியின் கீழ் பட்டினி சாவுகள் நிகழ முன்னர் இதை நீங்கள் செய்வீர்களாயின் மிகவும் நன்றி உடையவனாக இருப்பேன்.
உரம் இல்லாததால், நெல் விளைச்சல் இல்லை. உள்நாட்டு நெல் விளைச்சல் இல்லாததால் அரிசி இல்லை. அதேபோல், உரப்பிரச்சினை தேயிலை உற்பத்தியையும் பாதித்துள்ளது. தோட்டங்களில் வேலை இல்லை. ஆகவே வருமானம் இல்லை.
உணவுக்காக, அரிசி, கோதுமை வாங்க பணமுமில்லை. கடைகளில் பொருளுமில்லை.
நுவரெலியா, கொழும்பின் அவிசாவளை, பதுளை, இரத்தினபுரி, கண்டி, கேகாலை, மாத்தளை, களுத்துறை, காலி, மாத்தறை, மொனராகலை, குருநாகலை ஆகிய மாவட்ட பெருந்தோட்டங்களில் வாழும் உழைக்கும் மக்கள் வருமானமின்றி நிர்க்கதி நிலையில்,நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடியினால், இன்னமும் சில மாதங்களில், உண்ண உணவின்றி, பட்டினி சாவை சந்திக்க கூடியவர்களாக இருப்போர் இவர்களே.
தோட்டங்களில் அடாத்தாக கிடக்கும் தரிசு காணிகளை பிரித்து, தோட்டங்களில் நிரந்தரமாக உழைக்கும் மக்களுக்கு வழங்கும்படி நான் உங்களை வேண்டுகிறேன். இந்த நிலங்களில் குறுகிய காலத்தில் பயன் தரும் விளைபயிர்களை உழைப்பாளிகளான இந்த உழைக்கும் மக்கள் பயிரிட்டு தங்கள் வீட்டு தேவைகளுக்கு பெற்றுக்கொள்வார்கள். அதேபோல் நாட்டின் உணவு தேவைக்கும் இந்த பயிரிடல் கணிசமான பங்களிப்பை வழங்க முடியும்.
விவசாய அமைச்சின் அனுசரணையும் வழங்க பணிப்புரை விடுக்கும்படி கோருகிறேன். அவ்வாராயின் குறுகிய காலத்தில் பயன் தரும் உணவு பயிர்களை பயிரிட உரிய ஆலோசனைகளையும், ஒத்தாசைகளையும் அவர்களால் பெற முடியும்.
நான் மேலே குறிப்பிட்ட மாவட்டங்களுக்குள் வரும் பிரதேச செயலாளர்களை அழைத்து அவசர கலந்தாலோசனையை ஏற்பாடுமாறு செய்யுமாறு கோருகிறேன்.
“தொழிலாளர்கள்” என்ற அடையாளத்தால் இவர்களுக்கு முறையாக சமுர்த்தி கொடுப்பனவுகளும் கிடைப்பதில்லை. கிடைக்காத சம்பள கணக்குகள் காரணமாக இவர்கள் வறுமை கோட்டுக்கு கீழே இல்லை என்ற போலி புள்ளி விபரங்கள் காரணமாக இவர்களுக்கு நியாயம் எப்போதும் கிடைப்பதில்லை.
உண்மையில் கீழே ஒதுக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் இந்த மக்களே வறுமை கோட்டுக்கு வாழ்கிறார்கள். மானிய விலையில், கோதுமை மாவு தருகிறோம், மண்ணெண்ணெய் தருகிறோம் என்று காலத்துக்கு காலம் சொல்லப்பட்டாலும் கூட எதுவும் உருப்படியாக கிடைப்பதில்லை.
இதனால் ஏற்கனவே வாழ்வாதாரம் இல்லாமல் மிகவும் நலிவடைந்த நிலையில் இருக்கும் தோட்டங்களில் வாழும் மக்கள் மத்தியில் உணவு பஞ்சம் ஏற்படலாம். இன்னமும் சில மாதங்களில் பட்டினி சாவு வரலாம். இதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக வங்கியிடம் இருந்து இலங்கைக்கு உதவி

கொழும்பில் உள்ள உலக வங்கியின் நாட்டிற்கான முகாமையாளர் சியோ காந்தா, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 மே 27 அன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.

சர்வதேச நாணய நிதியம், ஏனைய சர்வதேச நிறுவனங்கள் மற்றும் நன்கொடை வழங்கும் நாடுகள் ஆகியவற்றிடமிருந்து நீண்டகால உதவிகள் கிடைக்கும் வரை உலக வங்கியிடம் அமைச்சர் பீரிஸ் உதவி கோரினார். எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் பாதீட்டு பற்றாக்குறையைக் குறைப்பதில் உள்ள சவால்களின் தீவிரமான தன்மையை அமைச்சர் எடுத்துரைத்தார். நிலையான தீர்வுகள் கிடைக்கும் வரை உலக வங்கியின் குறுகிய கால நிதி உதவி பாராட்டத்தக்கதாக அமையும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் ஐ.நா. அலுவலகம் போன்ற ஏனைய நிறுவனங்களுடன் தனது அலுவலகம் இணைந்து செயற்படுவதாகவும், இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக அவை ஏற்கனவே அர்ப்பணித்துள்ள திட்டங்களை ´மீண்டும் செயற்படுத்துமாறு´ ஊக்குவிப்பதாகவும் உலக வங்கியின் நாட்டிற்கான முகாமையாளர் மேலும் குறிப்பிட்டார். அடுத்த சில மாதங்களுக்குள் உலக வங்கி சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கும் என அவர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் கட்சிகளிடையே வெவ்வேறு நிலைப்பாடுகள்

அரசியலமைப்பின் 21ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரத்திற்குள் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலில் அரசியலமைப்பின் 21ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பிலான கருத்துக்கள் மற்றும் யோசனைகளை பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, 21ஆவது திருத்தம் தொடர்பில் அடுத்த வாரத்திற்குள் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு தரப்பினரின் யோசனைகள், எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முன்வைக்கப்படும் திருத்தங்கள் என்பவற்றை உள்ளடக்கி 21ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்திற்கு ஆதரவளிப்பதா, இல்லையா என்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடிய பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற குழு கூட்டத்தை ஜனாதிபதி நாளை(30) கூட்டவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் நாளை(30) மாலை 5 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 21ஆவது திருத்தம் குறித்து ஆராய்வதற்காக சட்டத்தரணிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு தமது கட்சி தீர்மானித்துள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பான தமது கட்சியின் யோசனைகளை நீதி அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

இதேவேளை, அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக சட்டத்தரணிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

உபுல் ஜயசூரிய, ஶ்ரீநாத் பெரேரா மற்றும் திசத் விஜேகுணவர்தன உள்ளிட்ட ஜனாதிபதி சட்டத்தரணிகள் இந்தக் குழுவில் அங்கம் வகிப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

எனவே, இந்த திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு தமது கட்சியால் இணங்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், 21ஆவது திருத்தத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு முன்வைக்கப்படும் சட்டமூலத்திற்கு கட்சியின் ஆதரவை வழங்குவது தொடர்பில் ஆராயப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, தற்போதைய 21ஆவது திருத்தச் சட்டமூலத்தை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் தயாரிக்கப்படவுள்ள புதிய வரைவுக்கான முன்மொழிவுகளை சமர்பிப்பதற்கு தமது கட்சி எதிர்பார்ப்பதாக அதன் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் தமது கட்சி பங்கேற்காது எனவும் அவர் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

எமக்கான நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்போம் – காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்

எமக்கான நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்போம் என காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்தனர்.

எமக்கான நீதியினை எந்த அரசாங்கமும் வழங்கவில்லை. அரசு மீது நம்பிக்கை இழந்த நாம் சர்வதேசத்திடம் எமக்கான நீதியை வேண்டி தொடர்ச்சியாக போராடிவருகின்றோம்.எமது உறவுகளை தருமாறே நாம் போராட்டங்களை முன்னெடுக்கின்றோம். நாம் வேறு எதனையும் இந்த அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்கவில்லை.

எனவே எமக்கான நீதி கிடைக்கும் வரையில் நாம் இந்த போராட்டங்களை இடைநிறுத்தாமல் தொடர்ந்து முன்னெடுப்போம். எமது பிரச்சனையை தீர்ப்பதற்கு இனியாவது சர்வதேசம் முன்வர வேண்டும்.எமது உறவுகளின் உண்மை நிலையை வலியுறுத்தி 13 வருடங்களாக நாம் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் என வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.(

Posted in Uncategorized

தமிழக அரசின் நிவாரண பொதிகள் யாழில் விநியோக நடவடிக்கை ஆரம்பம்

தமிழக அரசினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் இன்றைய (30) தினம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டு சம்பிரதாய பூர்வமாக விநியோகிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன.

இன்று காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு வந்த நிவாரணப் பொதிகள் சம்பிரதாயபூர்வமாக பொதுமக்களுக்கும் விநியோகிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் சம்பிரதாயபூர்வமாக நிவாரணப் பொதியை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ் மாவட்ட செயலக அதிகாரிகள், இந்திய துணை தூதரக அதிகாரிகள், பிரதேச செயலர்கள் கிராம சேவகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Posted in Uncategorized

எடின்பரோ மரதன் ஓட்டத்தை வெற்றிகரமாக ஓடிமுடித்தேன் -வைத்தியர் சத்தியமூர்த்தி

எடின்பரோ மரதன் ஓட்டத்தை வெற்றிகரமாக ஓடிமுடித்தேன்.ஆதரவு அளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பின் கல்விக்கான நிதி பங்களிப்பு செய்த அனைவருக்கும் பாராட்டுக்கள் என வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் ஓட்ட நிகழ்வு சமகாலத்தில் நடைபெற்றமை இரட்டிப்பு மகிழ்ச்சி.இலண்டன் கிளிநொச்சி மக்கள் அமைப்பு மிக சிறப்பாக ஒருங்கினைப்பை செய்தார்கள். என்னுடன் பல மைல்கள் பயணித்து நிகழ்வில் என்னை ஊக்கவித்தமை மிக்க மகிழ்ச்சி.

கிளிநொச்சியை சேர்ந்த உதயன் பல மரதன் ஓட்டங்களை முடித்தவர். இன்று அவருடன் சேர்ந்து எடின்பரோ மரதன் ஓடியமை மகிழ்ச்சியான விடயம்.உடல், உள, மற்றும் ஆத்மா ஒருங்கிணைந்த பயிற்சியில் மரதன் ஓட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

சுகதேகியாக ஒருவர் தன்னை பாதுகாத்துக் கொள்ள முயற்சிப்பது தற்காலத்தில் கைக்கொள்ள வேண்டிய ஒரு விடயம்.குறிப்பாக பொருளாதார புயலில் சிக்கி தவிக்கும் இலங்கையில் இலவச மருத்துவ சேவை நலிவுற்றிருக்கும் இக் காலத்தில் ஒவ்வொருவரும் தங்களை பாதுகாக்க வேண்டியமை காலத்தின் தேவை என மேலும் தெரிவித்துள்ளார்.

கச்சதீவு விவகாரம் – தமிழரசுக் கட்சியும் அதீத கவனம் செலுத்துவதாக மாவை தெரிவிப்பு

கடற்தொழிலாளர்களின் கருத்துக்களை அறிந்துகொண்ட பின்னரே கச்சதீவு விடயம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் எனக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

தமிழகத்துக்கு விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கச்சதீவை மீட்பதற்குரிய பொருத்தமான நேரம் இதுவெனக் கோரிக்கை விடுத்திருந்தார். எனவே, இது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் மாவை சேனாதிராஜா கருத்து தெரிவிக்கையில்,“இது இரண்டு நாடுகளின் உடன்படிக்கை. இந்தநிலையில், கச்சதீவு எங்களுடைய கடற்தொழிலாளர்களின் நலன்களுக்குச் சாதகமாக இருக்குமானால் எங்களுடைய கடற்தொழிலாளர்களின் நலன்களுக்காக இந்திய அரசுடன் பேச வேண்டும்.

அதற்கு முன்னதாக கச்சதீவை இந்தியா பொறுப்பேற்க வேண்டும் என்ற தமிழக முதலமைச்சரின் கருத்து தொடர்பில் முதலில் எமது கடற்தொழிலாளர்களின் கருத்துக்களை அறியவேண்டும்.

அவர்களின் கருத்துக்களை வைத்தே எங்கள் முடிவுகள் அமையும். அதற்கு முன்னதாக எழுந்தமானமாகக் கருத்துக்களைக் கூறமுடியாது.

அத்தோடு இலங்கை – இந்திய கடற்தொழிலாளர்களின் இழுவைப் படகு பிரச்சினை தீர்க்கப்படாதுள்ளது.

எனவே, அது தொடர்பில் இந்திய அரசுடன் பேசும்போது கச்சதீவு விடயம் பற்றியும் பேசவேண்டும். இதுவொரு இராஜதந்திர ரீதியான நடவடிக்கை” – என்றார்.

Posted in Uncategorized

இலங்கை அரசாங்கத்தின் திட்டங்களில் இளைஞர்களை இணைக்க ரணில் யோசனை

பாராளுமன்றத்தின் நடவடிக்கைகளுக்கான தெரிவுக்குழுக்கள் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் புதிதாக நியமிக்கப்பட்டு, அதில் இளைஞர்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.

நேற்று  விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பில் அவர் தன்னுரையில்,

இன்று எமது நாட்டின் பிரதான பிரச்னைகள், பொருளாதாரத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக இல்லை. அதேபோன்று, அரசியல் துறையில் இரண்டு பிரதான பிரச்னைகள் காணப்படுகின்றன. அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை மீண்டும் செயற்படுத்துவது முதலாவது பிரச்னை.

அதற்கு தீர்வாக, கட்சித் தலைவர்கள் என்ற விதத்தில் நாம், 21வது திருத்தத்தைத் தயாரித்து வருகின்றோம். இரண்டாவது பிரச்னை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது. அதற்கான கால எல்லை மற்றும் நடைமுறைகள் தொடர்பில் கட்சித் தலைவர்கள் தீர்மானிக்க முடியும். இதற்கு மேலதிகமாக பாராளுமன்றம் தொடர்பில் பிரச்னை ஒன்று உள்ளது.

20வது திருத்தத்தின் ஊடாக பாராளுமன்றம் வலுவிழக்கச் செய்யப்பட்டு, அதிகளவிலான அதிகாரங்களை நிறைவேற்று அதிகாரம் தன்வசப்படுத்திக் கொண்டமையின் ஊடாக பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பித்துள்ளன.

மேலும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில்  பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அந்த நிறுவனங்கள் வலுவிழந்துள்ளன. அவற்றை வலுவடைய செய்ய வேண்டுமாயின், அது குறித்து அறிக்கையிட புறம்பாக குழுவொன்று தேவைப்படுகின்றது. அதனால், வங்கி மற்றும் நிதி சேவைகள் தொடர்பிலான தெரிவுக்குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எமது நிலையியற் கட்டளை 111ன் கீழ், எமக்கு கண்காணிப்பு குழுக்களை நியமிக்க முடியும். கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்படவில்லை.

அதனால், 10 கண்காணிப்பு குழுக்களை நியமிக்குமாறு நான் யோசனையொன்றை முன்வைக்கின்றேன். இந்த கண்காணிப்பு குழுக்களுக்கு அரசாங்கத்தில் இருக்கின்ற விடயதானங்களை பகிர்ந்தளிக்க முடியும். அந்த கண்காணிப்பு குழுக்களின் ஊடாக அறிக்கைகளை பெற்றுக்கொள்ள முடியும். கொள்கைகள் தொடர்பிலும் நாடாளுமன்றத்திற்கு அறிக்கைகளை சமர்ப்பிக்க முடியும். இது தொடர்பில் நாடாளுமன்றம் செயற்பட வேண்டும்.

இந்த நிதி செயற்குழுக்களிலும், கண்காணிப்பு குழுக்களிலும் தலைவராக பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுவார்கள். அமைச்சர்கள் இல்லை. அமைச்சர்களுக்கு சுயாதீனமாக செயற்படுவதற்கான இயலுமை எமக்கு கிடைக்கும். இந்த இடத்தில் விசேட விடயமொன்று குறித்து நாம் அவதானம் செலுத்த வேண்டும். இளைஞர்களுக்கு தற்போதுள்ள நடைமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்கின்றார்கள்.

பிரச்னைகளை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். இந்த 15 தெரிவுக்குழுக்களுக்கும் தலா 4 இளைஞர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதில் ஒருவர் இளையோர் பாராளுமன்றத்திலிருந்து தெரிவு செய்யப்பட வேண்டும். மற்ற மூவரும் போராட்டக் குழுக்கள் மற்றும் பிற ஆர்வலர் குழுக்களைச் சேர்ந்தவர்கள். இந்த நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறையை இளைஞர் அமைப்புகளே தீர்மானிக்க முடியும்.

அத்துடன், குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்தலாம் என்று நம்புகிறோம். இப்பணியின் மூலம் இளைஞர்கள் தாங்களாகவே பிரச்னைகளை அறிந்து அதற்கான தீர்வுகளை வழங்க முடியும். அவர்கள் விரும்பினால் தேர்தலில் போட்டியிட முடியும்” என ரணில் மேலும் தெரிவித்துள்ளார்.

21ம் திருத்தம் என்று சொல்லி மாகாணசபைகளையும், தேர்தல் முறையையும் மாற்ற பார்க்கிறார்கள்- மனோ கணேசன்

21ம் திருத்தம் என்று சொல்லி மாகாணசபைகளையும், தேர்தல் முறையையும் மாற்ற பார்க்கிறார்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

“மாகாணசபை முழுமையான அதிகார பரவலாக்கல் தீர்வல்ல. ஆனால், குறைந்தபட்சமாக இருக்கும் அதையும் வெட்டிக்குறைக்க வேண்டுமென சிங்கள கட்சிகள் கூறுகின்றன. அதேபோல் குறைந்தபட்சமாக தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை பாராளுமன்றம், மாகாணசபைகள் ஆகியவற்றுக்கு செல்ல வழிகாட்டும் விகிதாசார தேர்தல் முறைமையையும் மாற்ற வேண்டும் என்ற குரல்கள் தெற்கில் எழுகின்றன.

இது தொடர்பில் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் விழிப்பாக இருக்க வேண்டும்” என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் அனைத்து தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கும் அறைகூவல் விடுத்துள்ளார்.

மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

21ம் திருத்தம் என்று சொல்லி, நிறைவேற்று ஜனாதிபதி முறையை அகற்றினால், 13ம் திருத்தம், தேர்தல் முறை ஆகியவையும் மாற வேண்டும் என இங்கே பலர் சொல்ல தொடங்கி உள்ளார்கள்.

தென்னிலங்கை சிவில் சமூகத்துக்கு நல்லாட்சி, சுயாதீன குழுக்கள், நீதிமன்ற சுதந்திரம், ஊடக சுதந்திரம், ஊழல் எதிர்ப்பு போன்ற பல்வேறு முன்னுரிமை பிரச்சினைகள் தொடர்பாக தேசிய கோரிக்கைகள் உள்ளன.

இவற்றை நாங்களும் கடுமையாக ஆதரிக்கின்றோம். அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.ஆனால், எங்களது முன்னுரிமை பிரச்சினைகள் வேறு.

ஒரே நாட்டுக்குள் வடக்கு, கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு அதிகார பகிர்வு, மலையகத்தில் அதிகார பகிர்வு, தோட்ட குடியிருப்புகளை தேசிய நிர்வாக வலையமைப்புக்குள் கொண்டு வரல், மொழி உரிமை, மத வழிபாட்டு உரிமை, அகழ்வாராய்ச்சி, வனம் மற்றும் வனஜீவி திணைக்களங்கள், மகாவலி அதிகாரசபை ஆகியவற்றின் மூலம் வட-கிழக்கில் காணி பிடிப்பு, பெளத்த மயமாக்கல், பயங்கரவாத தடுப்பு சட்டம், அரசியல் கைதிகள், காணாமல் போனோர்… என்று பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.

தேசிய கோரிக்கைகளை ஆதரிக்கும் அதேவேளை எமது பிரச்சினைகளையும் நாம் களத்துக்கு கொண்டுவர வேண்டும்.எமது பிரச்சினைகளுக்கு நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

எனவேதான், ஜனாதிபதி முறைமையை முழுமையாக அகற்றுகிறீர்களோ, இல்லையோ, 13ம் திருத்தம், தேர்தல் முறை இவற்றில் கைவைக்க ஒருபோதும் இணங்க மாட்டோம். இருப்பதையும் இழக்க இணங்க மாட்டோம்.

பழைய பிரச்சினையை தீர்க்க போய், புது பிரச்சினைகளை உருவாக்காதீர்கள் என்று நேற்று நான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் உரக்க கூறினேன்.

இந்த நிலைப்பாட்டுடன் உடன்படும்படி, அனைத்து தமிழ், முஸ்லிம் கட்சிகளையும், அக்கட்சி தலைவர்களையும், எம்பீகளையும் தமிழ், முஸ்லிம் அரசியல் ஆய்வாளர்களும், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களும், கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்த வேண்டும்” என்றார்.