IMF கடன் மறுசீரமைப்பின் கீழ் சுமார் 6 இலட்சம் அரச ஊழியர்கள் வேலை இழக்கலாம்

IMF கடன் மறுசீரமைப்பின் கீழ் சுமார் 6 இலட்சம் அரச ஊழியர்கள் வேலை இழக்கலாம். முடிவில் நடுத்தர வர்க்கம் என்ற ஒன்று இல்லாமல் போகும்..!

பெரும்பாலும் எல்லா பெட்ரோலிய பொருட்களின் விலைகளும் சுமார் 30% வீதத்தால் இரவில் அதிகரிக்கப்பட்டிருக்குறது.

வாழ்ந்தால் வாழுங்கள் இல்லையேல் செத்து மடியுங்கள் என்பது போலதான் இருக்குறது இந்த அதிகரிப்பு. இந்த விலை அதிகரிப்பின் தொடர்ச்சியாக மற்ற எல்லா பொருட்களும் சேவைகளும் மேலும் விலை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. மின்சார கட்டணம் 100 வீதம் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது.

இந்த விலையேற்றங்கள் மொத்த சனத்தொகையின் சுமார் 70-80 வீதமான மக்களை நேரடியாக பாதிக்கும் அவர்களால் வயிற்றுப்பசி, தொழிலுக்கு சென்றுவரும் செலவு என்பவற்றை தவிர வேறு எதனையும் சிந்திக்க முடியாத நிலைக்கு தள்ளிவிடும்.

உண்மை என்னவெனில், இந்த விலையேற்றங்கள் எதனையும் கட்டுப்படுத்தும் நிலையில் அரசாங்கம் இல்லை. IMF உடனான பேச்சுவார்த்தைகள், அதிகாரிகள் மட்டத்தை தாண்டவில்லை. இந்த பேச்சுவார்த்தைகள் ஒரு நம்பிக்கை தரும் அளவுக்கு வர 6-8 மாதங்கள் எடுக்கலாம். இந்த கால பகுதியில் அரசாங்கம் எந்தவித விலை கட்டுப்பாடுகளையும் கொண்டிருக்க முடியாது, அது பொதுவாக IMF உடன் ஒரு பேச்சுவார்த்தையை தொடங்க முன் இருக்கும் ஆரம்ப நிபந்தனையாகும், அதனைத்தான் அரசாங்கம் இப்போது செயல்படுத்துகிறது.

IMF அனுசரணையில் கடன் மீளமைப்பு பேச்சுக்களை தொடங்க சட்ட உதவிக்காக Clifford Chance என்ற நிறுவனத்தை இலங்கை அரசாங்கம் தெரிவுசெய்துள்ளது. நிதித்துறை ஆலோசனை உதவிகளை வழங்க பிரெஞ்சு நிறுவனமான Lazard நியமிக்கப்பட்டுள்ளது.

பேச்சுக்களை தொடங்க முன் நிபந்தனையாக எரிபொருட்களுக்கான எல்லா சலுகலைகளையும் நீக்குமாறு இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொள்ளப்படும் என்று இது தொடர்பாக ரொய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதற்க்கு மேலதிகமாக அரச ஊழியர்களின் எண்ணிக்கையை அரைவாசியாக குறைக்கும் நிலை ஏற்படலாம்.

அரச செலவீனத்தை கடுமையாக குறைக்காமல் எந்தவொரு நீடித்து நிலைக்கும் கடன் மீளமைப்பும் இலங்கையில் சாத்தியமில்லை என்று முன்னதாக IMF தெரிவித்து இருந்தது. எரிபொருள் சேமிப்பை காரணம் காட்டி அத்தியாவசிய ஊழியர்களை மட்டும் வேலைக்கு அழைத்தல் என்பது ஒரு பாரிய வேலைநீக்க திட்டத்தின் முதல் கட்டம் என்பது தெளிவாக தெரிகிறது.

கல்வி துறை , சுகாதார சிற்றூழியர்கள் மட்டும் இன்றி – குறிப்பாக மின்சார சபை, பெட்ரோலிய கூட்டுத்தாபனம் போன்ற அரச நிறுவனங்களில் பாரிய வேலை நீக்கங்கள் காத்திருக்கியன்றன.

2017 ஆம் ஆண்டு சுமார் 1.49 மில்லியனாக இருந்த அரச ஊழியர்கள் 2021 இல் 2 மில்லியனயாக அதிகதித்தது -இதில் பெரும் எண்ணிக்கை அரசியல் காரணங்களுக்காக வழங்கப்பட்ட நியமனங்கள்.

@24Tamil News

இலங்கையின் ஏற்படும் சமூக கொந்தளிப்பு IMF உடனான பேச்சுக்களை தாமதப்படுத்தலாம் – பாதுகாப்பு செலவீனங்களை குறைத்து-ராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்குமாறு கோரப்பட்டால் மொத்த பேச்சுவார்த்தையும் தரை மட்டம் ஆகும் ம்வாய்ப்பு கூட இருக்குறது. -ராணுவ செலவீனத்தில் கைவைக்க கோத்தபாய விரும்பப்போவதில்லை-அதேநேரம் யுத்தம் இல்லாத ஒரு வாங்கறோத்து நாடு 3-4 லட்சம் ராணுவத்துக்கு கொழுத்த சம்பளத்தை வழங்க IMF கடன் கொடுக்கப்போவதும் இல்லை.

ஆனால் ஒரு நாடு கடனில் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து -சுவரில் முதுகு வரை அழுத்தப்படும் ஒரு நிலைக்கு வந்ததும் ( “Governments are often willing to do the things that are required when their backs are completely against the wall.”) அரசாங்கங்கள் பொதுவாக கடினமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளும்” என்று இப்படியான கடன் மீளமைப்புக்கள் தொடர்பில் ஆராயும் Gramercy’s என்ற அமைப்பின் ஆராய்ச்சியாளர் Petar Atanasov முன்னதாக ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்து இருந்தார்.

இந்திய கடனுதவி முடிவுக்கு வரும் நிலையில் இலங்கை அரசாங்கத்துக்கு அடுத்து வரும் மாதங்களை கொண்டு நடத்த கடைசியாக ஒரு வாசல் மட்டுமே மீதமுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி -உலகவங்கி ஆகிய அமைப்புக்கள் ஏற்கனவே இலங்கையில் அனுமதித்த அபிவிருத்தி திட்டங்களுக்காக வழங்கப்பட்ட சுமார் 1100 மில்லியன் டொலர் நிதி இலங்கையின் கைவசம் இருக்குறது.

இந்த நிதி சட்ட ரீதியில் குறிப்பிட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு அல்லாமல் அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்த முடியாது, ஆனால் இந்த நெருக்கடியை கருத்தில் கொண்டு சில கொள்கை ரீதியிலான தளர்வுகளை மேற்கொள்ள இந்த இரண்டு வங்கிகளும் உடன்பாடு தெரிவிக்கலாம் என்று நம்பப்படுகிறது . ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது ஆனாலும் இந்த பணத்தை எரிபொருள் இறக்குமதிக்கு பயன்படுத்த முடியாது என்று திட்டவட்டமாக கூறப்பட்டுள்ள நிலையில், மருந்து மற்றும் உணவுக்ககாக அது பயன்படலாம்.

மிகவும் சிக்கல் நிறைந்த ஒரு கடன் மீளமைப்பு பேச்சுக்களுக்கு பின்னர் IMF ன் நேரடி நிதி உதவி கிடைக்க நீண்ட காலம் எடுக்கலாம். சீனா ஏற்கனவே தனது கடனை IMF திட்டத்தின் கீழ் மீளமைப்பதை கடுமையாக எதிர்க்கும் நிலையில் இலங்கையின் கடன் மறு சீரமைப்பு என்பது கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இல்லை. இலங்கையை விட சிக்கல் குறைந்த ஒரு கடன் மறுசீரமைப்பை அன்மையில் ஆபிரிக்க நாடான கம்பியா மேற்கொண்டது – கம்பியா ஒரு ஒப்பந்தம் வரை செல்ல 2 ஆண்டுகள் எடுத்தன.

இந்த பேச்சுவார்த்தைகள் முடியும் போது உணவுக்கு வழியில்லாத கடுமையான ஏழைகள் என்று ஒரு பகுதியும், அரசியலோடும் பெரும் முதலாளித்துவ வர்த்தகத்தோடும் தொடர்பு பட்ட ஒரு பணக்கார சமூகமுமாக, இலங்கை தெளிவான இரண்டு கோடுகளால் பிரிக்கப்பட்டிருக்கும் -நடுத்தர வர்க்கம் என்ற ஒன்று இருக்காது- பொதுவாகவே இப்படியான எல்லையற்ற ஊழல் -கடன் மற்றும் மூலதன சுரண்டல்களின் முடிவு அப்படிதான் அமையும் என்பதை வரலாறு திரும்ப திரும்ப சொல்கிறது.

நன்றி-உண்மை உரைகல்

இலங்கை ரூபாயில் கடனுதவி வழங்க இணக்கம் தெரிவித்த இந்தியா

இலங்கைக்கு மருந்து கொள்வனவிற்காக வழங்கப்பட்ட கடனுதவியை இலங்கை ரூபாயில் செலுத்த இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்களை அடுத்து, இந்த கடனுதவியை இலங்கை ரூபாவில் செலுத்த இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடிக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டிற்கான குறுங்கால மற்றும் மத்திய கால தீர்வுகள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (மே 25) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு கிடைத்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்து வகைகளை கொள்வனவு செய்வதற்கு காணப்படும் டொலர் தட்டுப்பாடு காரணமாக, அந்த தொகையை இலங்கை ரூபாவில் செலுத்த இந்தியாவுடனான கலந்துரையாடலில் இணக்கம் எட்டப்பட்டதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்ப்பு

கடந்த நாட்களில், நிதியமைச்சர் பதவிக்காக முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனாலும், இதுவரை எவரும் தீர்க்கமான ஒரு முடிவை அறிவிக்காமையால் பதவி விவகாரம் நீண்ட இழுபறியில் இருந்து வந்தது.

இந்நிலையில் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார்.இன்று புதன்கிழமை காலை கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

Posted in Uncategorized

31ஆம் திகதிக்கு பின்னர் கட்டுநாயக்க உட்பட அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இம்மாதம் 31ஆம் திகதி வரை மட்டுமே விமானங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பதாக விமான நிலைய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இலங்கையில் தரையிறக்கப்பட்ட பல விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக சென்னைக்கு திரும்பியுள்ளதாகவும் விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இம்மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் கட்டுநாயக்க உட்பட அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் உள்ளதாக தெரியவருகின்றது.இதேவேளை எரிபொருள் பறக்குறையே இதற்கு காரணம் என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்ற போதும் இதனை அதிகாரிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை

Posted in Uncategorized

அரச நிறுவனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஊழியர்களை பணிக்கு அழைக்க சுற்றுநிருபம்!

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையில் அரச நிறுவனங்களில் செலவுகளைக் குறைப்பதற்காக மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களை மாத்திரம் பணிகளுக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொது நிர்வாக அமைச்சினால் சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 4 முக்கிய விடயங்களின் கீழ் ஊழியர்களை அழைப்பதை குறைக்குமாறு அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாணங்களின் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

”இலங்கைக்கு உதவ முடியாது”: கைவிரிக்கும் உலக வங்கி!

முறையான பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை நடைமுறைப்படுத்தும் வரை இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்க எவ்வித திட்டமும் இல்லை என உலக வங்கி அறிவித்துள்ளது.

இலங்கை தொடர்பான உலக வங்கியின் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு உதவுவதற்காக சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய அபிவிருத்தி பங்காளிகளுடன் ஒருங்கிணைத்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கான தெளிவான கொள்கை கட்டமைப்பை இலங்கை வகுக்க வேண்டும் என உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட சில நிதித் திட்டங்களை மதிப்பாய்வு செய்துள்ளதாகவும், இலங்கைக்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதற்கும், ஏழைகள், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு புதிய கடன் வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கு உலக வங்கி தயாராவதாக, அண்மைக் காலமாக பல ஊடக அறிக்கைகள் தவறான செய்திகளை வௌியிட்டிருந்ததாக உலக வங்கி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

நிதி அமைச்சராக பதவியேற்கிறார் பிரதமர் ரணில்?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சராக பதவியேற்கவுள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரொருவர் நியமிக்கப்படும் வரை பதில் நிதியமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, செயற்படுவார் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான கஞ்சன விஜேசேகர, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

முன்னாள் நிதியமைச்சர் அலி சப்ரி மீண்டும் நிதியமைச்சராக நியமிக்கப்படுவதற்கான அழைப்பை நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான கலாநிதி ஹர்ஷ டி சில்வாவும் நிதியமைச்சை பொறுப்பேற்க விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்தாக தெரியவருகிறது.

23 அமைச்சரவை அமைச்சர்கள் இதுவரை நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கான செயலாளர்களும் இன்றையதினம் நியமனக் கடிதங்களை பெற்றுள்ளனர்.

ஆனால் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இதுவரை நிதியமைச்சர் ஒருவர் நியமிக்கப்படவில்லை என்று சர்வதேசம் உட்பட பல்வேறு தரப்பினராலும் விசனம் தெரிவிக்கப்படுகிறது.

இந் நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அந்த அமைச்சை பொறுப்பேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

நிதியமைச்சர் நியமனம், நாளை (25) இடம்பெறலாம் என்று அரசாங்க வட்டாரங்களின் மூலம் அறிய முடிகிறது.

Posted in Uncategorized

மட்டக்களப்பிற்கான தமிழக நிவாரண பொதிகள்!

இந்தியாவின் தமிழ்நாட்டு அரசினால் வழங்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகளில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 50 ஆயிரம் பொதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்

இந்திய நிவாரணப் பொதிகள் தொடர்பாக கருத்து தெரிவத்த மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தியாவின் தமிழ்நாட்டு அரசினால் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரண பொருட்கள் இலங்கையில் வறுமையில் வாடும் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர்களை இணையவழியில் சந்திப்பு நடத்திய உயர் அதிகாரிகள், மாவட்டத்தில் வறுமையில் உள்ள மக்களின் புள்ளி விபரங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளதுடன், மாவட்டத்திற்கான உலர் உணவு பொதிகளின் எண்ணிக்கையை கேட்டறிந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 84 ஆயிரம் குடும்பங்களுக்கு இதில் முதற்கட்டமாக தலா 10 கிலோ நிறை கொண்ட 50 ஆயிரம் நிவாரண பொதிகள் கிடைக்கவுள்ளதுடன் அதனை வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு குடும்பம் ஒன்றிற்கு தலா ஒரு பொதி வழங்கவுள்ளதுடன் அதன் பின்னர் வரும் நிவாரணப் பொதிகள் ஏனையவர்களுக்கு வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எரிபொருள் இன்மையால் தடைப்பட்ட காரைநகர்- ஊர்காவற்துறைப் பாதைச் சேவை!

யாழ். காரைநகருக்கும் ஊர்காவற்துறைக்கும் இடையே பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பாதைப் படகு கடந்த ஒரு வாரகாலமாக சேவையில் ஈடுபடுத்தப்படாமையால் அரச உத்தியோகத்தர்களும், பொதுமக்களும் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.

மண்ணெண்ணெய் இன்மையாலேயே மேற்படி சேவை இடம்பெறவில்லை என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணியாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பாதைச் சேவையை நடத்துவதில் வீதி அபிவிருத்தி அதிகார சபை தொடர்ந்தும் அசமந்தப் போக்கையே கடைப்பிடித்து வருகின்றது என இதனூடாகப் பயணிப்போர் குற்றம் சாட்டுகின்றனர்.

பொறுப்புடைய ஒரு அரச நிறுவனம் மண்ணெண்ணெயைத் தேவைக்கு ஏற்ப பெற்று வைத்திருந்து மக்களுக்குச் சீரான சேவையை வழங்க வேண்டும். இதை விடுத்துக் கடல் கடந்து போக்குவரத்துச் செய்யும் அரச பணியாளர்களைச் சிரமத்திற்கு உள்ளாக்குகின்றமை குறித்து அரச பணியாளர்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

பாதைச் சேவை இடம்பெறாமையால் தனியார் படகுகளில் மோட்டார்ச் சைக்கிள்களை ஏற்றும்போது அவை சேதமடைகின்றன எனவும், உதிரிப்பாகங்களை அதிக விலைக்குப் பெற்றுச் சீர் செய்தாலும் அவை மீண்டும் சேதமடைகின்றன எனவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த விடயத்தில் யாழ்.அரசாங்க அதிபர் உடனடிக் கவனம் செலுத்திப் பாதைச் சேவை இடம்பெறுவதை உறுதிப்படுத்துமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீன நாட்டுத் தூதுவர் கிழக்கு ஆளுநரை சந்தித்து பேச்சு

சீன மக்கள் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் QI Zenhong இன்று (24) காலை திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தை சந்தித்தார்.

அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஆளுநருக்கும் சீனத் தூதுவருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது ஆளுநரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கிழக்கு மாகாணத்திற்கான விஜயத்தையும் அவர் மேற்கொண்டுள்ளார்.

ஆளுநர் அலுவலகத்திற்கு வந்த சீன தூதுவருக்கு உற்சாக வரவேற்பேற்களிக்கப்பட்டது .

அதனைத் தொடர்ந்து சீனத் தூதரகத்தினால் கிழக்கு மாகாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 உலர் உணவுப் பொதிகளை தூதுவர் உத்தியோகபூர்வமாக விநியோகித்தார்.

பின்னர் கிழக்கு மாகாணத்தில் புதிய முதலீடுகள் மூலம் அபிவிருத்தி செய்யக்கூடிய வளங்கள் குறித்து சீனத் தூதுவர் மற்றும் அவரது குழுவினருக்கு விளக்கமளித்தார். மேலும், புதிய முதலீடுகளை மேற்கொள்ளக்கூடியதுமான மாகாணத்தின் வளங்கள் தொடர்பான விசேட கையேட்டை ஆளுநர் அவர்கள் தூதுவரிடம் இதன் போது வழங்கினார்.

இதில் திருகோணமலை மாவட்ட செயலாளர் உட்பட பல உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Posted in Uncategorized