புதிய பிரதமராக கரு ஜயசூரியவை நியமிக்க யோசனை!

புதிய பிரதமராக கரு ஜயசூரியவை நியமிக்க சிலர் யோசனைகளை முன்வைத்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி இடைக்கால அரசாங்கத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளபோதும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பொதுவான ஒருவராக கருஜயசூரியவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று சிலர் கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

இதன்படி கருஜய சூரிய இணங்கினால் அவர் பாராளுமன்றம் வரும் வகையில், தான் எனது தேசியப் பட்டியல் ஆசனத்தை அவருக்காக விட்டுக்கொடுக்க தயார் என்று ஹரீன் பெர்ணான்டோ கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

”அவசரகால சட்டம் பிரச்சனைகளுக்கு தீர்வாகாது”: ஐநா பிரதிநிதி!

போராட்டத்திற்கு காரணமான விடயங்களை தீர்க்க முயல வேண்டும் எனவும், அதனை விடுத்து அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவது பிரச்சனைகளுக்கு தீர்வாகாது என்றும் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

நாட்டின் நெருக்கடிகளை தீர்ப்பதற்கு அவசரகால சட்டம் நிச்சயமாக உதவாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை தெற்காசியாவின் பழமையான ஜனநாயக நாட்டில் இலங்கை பிரஜைகள் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை எவ்வாறு முழுமையாக அனுபவிக்கிறார்கள் என்பதை ஒரு மாத கால அமைதியான ஆர்ப்பாட்டங்கள் எடுத்துக்காட்டியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உரிமைகள் மற்றும் கருத்து சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் – சாரா ஹல்டன்

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால பிரகடனத்திற்கு எதிராக கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தற்போதைய சவால்களைத் தீர்ப்பதற்கு ஜனநாயக மற்றும் அமைதியான அணுகுமுறை அவசியம் என சாரா ஹல்டன் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் அனைத்து அடிப்படை உரிமைகளுடன் அமைதியான போராட்டத்திற்கான உரிமைகள் மற்றும் கருத்து சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அந்த உரிமைகளைக் கட்டுப்படுத்தும் அவசரச் சட்டங்கள் ஜனநாயக கருத்து சுதந்திரம் மற்றும் தீர்வுகளுக்கு எதிராகச் செயல்படுகின்றன என்றும் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இடைக்கால அரசாங்கத்தை அமைக்க ஐக்கிய மக்கள் சக்தி இணக்கம்

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இணங்கியுள்ளது.
நாட்டில் நிலவும் பாரிய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள யோசனைகளின் அடிப்படையில் தேசிய வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) 15 அமைச்சரவை அமைச்சர்களைக் கொண்ட இடைக்கால அரசாங்கத்தை அமைக்க முன்மொழிந்துள்ளது.
அதேநேரம்  பிரதமர் மற்றும் அமைச்சரவை இராஜினாமா செய்த பின்னர் ஆட்சி அமைக்க ஐக்கிய மக்கள் சக்தி முன்வராவிட்டால் இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பை ஏற்க அரசாங்கத்தில் இருந்து விலகிய சுயேச்சை குழு எம்.பிக்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (07) பிற்பகல் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சுயேச்சைக் குழு ஒன்று கூடி இவ்விடயம் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடியதாக தெரியவருகிறது.
ஐக்கிய மக்கள் சக்தி, ஆட்சியைக் கைப்பற்றும் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டால், நாட்டை அராஜகமாக்க விடமாட்டோம் என்றும், மேலும் பல கட்சிகளுடன் இணைந்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சித் தலைவர்களால் உருவாக்கப்படும் தேசிய சபையில் இருந்து புதிய பிரதமரை தெரிவு செய்ய முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இடைக்கால அரசாங்கத்திற்கு இடமளித்து அரசாங்கம் பதவி விலக வேண்டும் – சந்திரிக்கா

இடைக்கால அரசாங்கத்திற்கு இடமளித்து அரசாங்கம் பதவி விலக வேண்டும் அல்லது அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இடைக்கால அரசாங்கத்திற்கு தயாராக இல்லை என்றால் பாராளுமன்ற தேர்தலுக்கு செல்ல வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இன்று ( சனிக்கிழமை ) தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் “மக்கள் தங்கள் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிகாரம் வழங்குகிறார்கள். மக்கள் கொடுக்கும் அதிகாரம் வாழ்நாள் முழுவதும் அல்ல தற்காலிகமானது என்பதை அவர்கள் உணர வேண்டும்,” என்றும் கூறினார்.
பௌத்த பிக்குகள், சிவில் சமூகம் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட மதத் தலைவர்களின் வலுவான வேண்டுகோளுக்கு செவிசாய்க்காமல் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .
Posted in Uncategorized

ஜனாதிபதி செயலாளர், பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு !!

நாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவசரகால நிலைமை சட்டம்  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதன் பின்னணியில் ஜனாதிபதியின் செயலாளர் , பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோரை நாளைமறுதினம் திங்கட்கிழமை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் ரோஹிணி மாரசிங்க வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டில் அவசரகால நிலைமை சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமைக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது.

பொலிஸாரால் இலகுவாகக் கட்டுப்படுத்தப்படக் கூடியவாறு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் எதற்காக அவசரகால நிலைமை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பது நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

‘பேச்சு சுதந்திரம் மற்றும் ஒன்று கூடும் சுதந்திரம், கைது மற்றும் தடுப்புக் காவலுடன் தொடர்புடைய உரிமைகள் மற்றும் பிற அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் அவசரகால நிலைமை சட்டத்தின் போது பாதிக்கப்படாது என நம்புகிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மஹேலவிடம் இருந்து அதிரடி அறிவிப்பு..!

தயவுசெய்து அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்து விட்டு வீட்டிலேயே இருக்கவும் என இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் வாக்கெடுப்பின் மூலம் மீணடும் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட ரஞ்சில் சியம்பலாப்பிட்டிய மீண்டும் பதவி விலகுவதாக நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இது குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

“இது நகைச்சுவை என்று நினைத்தீர்களா? நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் இந்த நியமனம் முக்கியமானது போல் நேரத்தையும் பணத்தையும் வீணடித்து, மீண்டும் அவர் ராஜினாமா செய்கிறார். தயவுசெய்து அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்து விட்டு வீட்டிலேயே இருக்கவும்.” இவ்வாறு அவர் தனது ட்விட்டில் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு குறித்து வௌியான அறிவிப்பு

2022 ஆண்டு ஏப்ரல் மாதத்தின் இறுதியில் நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 1,827 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அதேபோல், வெளிநாட்டு நாணய கையிருப்பு 1,618 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என அறிக்கை ஒன்றை வௌியிட்டு மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாத இறுதியில் கையிருப்பு சொத்துக்கள் 1,917 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், வெளிநாட்டு நாணய இருப்பு 1,702 மில்லியன் டொலர்களாகவும் பராமரிக்கப்பட்டிருந்ததாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமுல்- அமெரிக்கா,கனடா கவலை

இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தீர்மானம் குறித்து கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“கடந்த வாரங்களாக, இலங்கை முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில், அமைதியான கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை அனுபவிக்கும் குடிமக்கள் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இது நாட்டின் ஜனநாயகத்திற்கு கிடைத்த பெருமையாகும். அப்படியானால், அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவது ஏன் அவசியம் என்பதைப் புரிந்துகொள்வது கடினமானது” என கனேடிய உயர்ஸ்தானிகர் ட்வீட் செய்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்கள் உடன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில், இன்று இரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதே நேரம் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தனது ட்விட்டர் பக்கத்தில் அமைதியான முறையில் போராடும் மக்களின் கோரிக்கைகள் கேட்கப்பட வேண்டும் என்றும் மீண்டும் இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது கவலை அளிப்பதாகவும் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கக்கூடாது எனக் கருத்து முன்வைப்பு

இலங்கையில் உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலத்தை அரசாங்கம் நீட்டித்திருப்பதை இரத்துச் செய்து, உடனடியாக உள்ளுராட்சி சபைகள் அனைத்தையும் கலைக்க வேண்டும் என்றும், இதன் மூலம் பல கோடி ரூபாய் நிதியை மீதப்படுத்த முடியும் எனவும் பரவலாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நாட்டில் மொத்தமாக 341 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. இவற்றுள் 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள், 276 பிரதேச சபைகள் இருக்கின்றன. இதில் 340 சபைகளுக்கான தேர்தல்கள் கடந்த 2018ஆம் ஆண்டிலும், எல்பிட்டி பிரதேச சபைக்கான தேர்தல் 2019ஆம் ஆண்டும் நடைபெற்றன.

இதற்கமைய மேற்படி உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலங்கள், கடந்த பிப்ரவரி மாதம் நிறைவுக்கு வந்தன. இதனையடுத்து 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் இந்த சபைகளின் பதவிக் காலத்தை நீட்டிப்பதாக கடந்த ஜனவரி மாதம் அரசாங்கம் அறிவித்தது.

உள்ளூராட்சி சபைகள் அனைத்திலும் மொத்தமாக 8,690 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 845 பேர் மாநகர சபை உறுப்பினர்கள், 483 பேர் நகர சபை உறுப்பினர்கள், 7,362 பேர் பிரதேச சபை உறுப்பினர்களாவர்.

நாட்டிலுள்ள உள்ளுராட்சி சபைகளில் 223 சபைகளின் அதிகாரங்களை மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சி கைப்பற்றியிருந்த நிலையில், இந்த சபைகளின் பதவிக் காலங்கள் நீடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி சபைகளின் கூட்டங்கள் சாதாரணமாக ஒவ்வொரு மாதமும் நடைபெறும், தேவையேற்படும்போது விசேட கூட்டங்களும் நடத்தப்படும். மாநகர சபை கூட்டங்களில் கலந்து கொள்ளும் அதன் உறுப்பினர்களுக்கு 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவாக வழக்கப்படுகிறது. மாநகர சபையின் முதல்வருக்கு 30 ஆயிரம் ரூபாவும் பிரதி முதல்வருக்கு 25 ஆயிரம் ரூபாவும் கொடுப்பனவாக வழங்கப்படுகிறது.

இதே வேளை நகர சபை மற்றும் பிரதேச சபைக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களுக்கு கொடுப்பனவாக 15 ஆயிரம் ரூபா வழங்கப்படுகிறது. மேலும் இவற்றின் தவிசாளர்களுக்கு (தலைவர்கள்) 25 ஆயிரம் ரூபாவும், பிரதித் தவிசாளர்களுக்கு 20 ஆயிரம் ரூபாவும் கிடைக்கின்றது.

எனவே, தற்போது நீடிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலத்தை இரத்துச் செய்து – அவற்றினைக் கலைத்து விட்டால், பதவி நீட்டிக்கப்பட்டுள்ள காலத்துக்காக அந்த சபைகளின் உறுப்பினர்களுக்கு, வழங்கப்படவேண்டிய கொடுப்பனவு கிட்டத்தட்ட 152 கோடி ரூபாயை மிச்சப்படுத்த முடியும்  எனக் கூறப்படுகின்றது.

இதேவேளை, ஒவ்வொரு சபைக் கூட்டங்களையும் நடத்துவதற்கான வேறு செலவுகள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் உள்ளூராட்சி சபைகளைக் கலைத்தால் 150 கோடி ரூபாய்க்கு மேல் மிச்சப்படுத்த முடியும் என்றும் கூறப்படுகின்றது.

நன்றி -பிபிசி தமிழ்