எதிர்க்கட்சித் தலைவருக்கும் 10 கட்சிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு – நம்பிக்கையில்லா தீர்மானம் விரைவில்!

அரசாங்கத்தில் தற்போது அங்கம் வகிக்கும் 10 சுயாதினமாக செயற்படும் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் இன்று (08) பிற்பகல் நடைபெற்றது.

10 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, திரன் அலஸ் மற்றும் ஜயந்த சமரவீர ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நாட்டில் நிலவும் அராஜகத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான உடனடி அரசியல் நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக உள்ளக ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஜனாதிபதி பதவி விலகாவிட்டால் அரசாங்கம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு சமகி ஜன பலவேகய கட்சி கையெழுத்து சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் மீண்டும் முன்னோக்கிச் செல்லும் வகையில் அனைவரும் தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும் நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க தமிழ்க் கட்சிகள் ஏகமனதாக கோரிக்கை

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பாக பிரதான தமிழ் கட்சிகளின் ஐந்து தலைவர்களும் நேற்று யாழ்ப்பாணத்தில் கூடி கலந்துரையாடினர்.

இதன்போது நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஏகமனதாக விடுக்கப்பட்டது.

குறித்த சந்திப்பில் டெலோ, புளொட், தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப். மற்றும் தமிழ் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை ஒற்றைக் கோரிக்கையை முன்னிறுத்தும் கூட்டறிக்கை ஒன்றினை தமிழ் மக்கள் சார்பில் வெளியிடுவது பற்றியும் பேசப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் அவர் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

இருப்பினும் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து வெளியிடவுள்ள கூட்டறிக்கையில் மாவை சேனாதிராஜாவும் கையொப்பமிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கைக்கு உதவி வழங்குவதை ஆராயும் கூட்டத்தை ஒத்திவைத்தது ஐஎம்எவ்

இலங்கைக்கு உதவி வழங்குவது தொடர்பில் ஆராய சர்வதேச நாணய நிதியம் எதிர்வரும் 11 ஆம் திகதி வொஷிங்டனில் நடத்தவிருந்த கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனை மத்திய வங்கியின் புதிய ஆளுனர் நந்தலால் வீரசிங்கவிடம் சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியே இதற்கான காரணமென தெரியவருகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புக்களைப் பெற தேவையான மாற்றங்களை தாமதமின்றி செயற்படுத்துங்கள் – ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பினைப் பெறுவதற்குத் தேவையான மாற்றங்களை இலங்கை தாமதமின்றி செயற்படுத்த வேண்டும் என்று உறுப்பு நாடுகளின் கூட்டு அறிக்கையூடாக ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

அத்தோடு இலங்கை மக்களைப் பாதித்துள்ள தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஆக்கபூர்வமான மற்றும் ஜனநாயக வழிமுறைகளை ஆராயுமாறு அனைத்துத் தரப்பினருக்கும் நாம் அழைப்பு விடுப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளாக ஜேர்மன், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ருமேனியா மற்றும் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, நோர்வே, சுவிட்சர்லாந்து , ஐக்கிய இராச்சியம் என்பவற்றுடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஒன்று கூடும் சுதந்திரமும் , கருத்து சுதந்திரமும் அமைதியாக இடம்பெறும் சந்தர்ப்பத்தில் , அவை எந்தவொரு ஜனநாயக சமூகத்தினதும் தூண்களாகும்.

எனவே அனைத்து தரப்பினரும் நிதானத்துடன் தொடர்ந்து செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றோம். அத்துடன் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதை ஒரு நேர்மையான முன்னெடுப்பாகக் கருதுகின்றோம்.

இலங்கை மக்களைப் பாதித்துள்ள தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஆக்கபூர்வமான மற்றும் ஜனநாய வழிமுறைகளை ஆராயுமாறு அனைத்துத் தரப்பினருக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.

இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் நிலையான பாதைக்கு கொண்டு வருவதற்கு தேவையான சீர் திருத்தங்கள் குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன், உரிய அதிகாரிகள் தீர்க்கமான கலந்துரையாடல்களை ஆரம்பிக்க வேண்டிய நிலைமையின் தீவிரத்தன்மையை நாம் வலியுறுத்துகின்றோம் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நிலவரம் தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்த பீரிஸ்!

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, இலங்கையில் நிலவும் நிலைமை குறித்து இதன்போது அமைச்சர், இராஜதந்திரிகளுக்கு விளக்கியுள்ளார்.

கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில்   இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு, அத்தியாவசிய மருந்துப் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளுக்கு மக்கள் முகம்கொடுத்துள்ளமை தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ள அமைச்சர் பீரிஸ், மக்களின் கஷ்டங்களையும் அதன் அளவையும் இலங்கை அரசாங்கம் முழுமையாக புரிந்துக்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் இதன்படி கூடிய விரைவில் தீர்வுகள் கிடைக்கும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

கோட்டாபய பதவி விலக வாய்ப்பு உள்ளதா? முன்னாள் தேர்தல் ஆணையாளர் கருத்து

இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரும்பினால் தனது பதவியில் இருந்து விலகும் வாய்ப்பு உள்ளது என்று அந்நாட்டின் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலின் போது அவர் மேலும் தெரிவித்து உள்ளதாவது:

1953 ஆம் ஆண்டு பணிப் புறக்கணிப்பு போராட்டத்துக்குப் பின்னர் 69 வருடங்களில் தென்பகுதியில் பாரிய மக்கள் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

மக்களின் அழுத்தத்திற்கு அமைய ஜனாதிபதி பதவி விலகினால் செயற்படுவதற்கு ஏதுவாக ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்படுவார். பாராளுமன்றத்தினால் ஒருவர் நியமிக்கப்படும் வரை பிரதமரே ஜனாதிபதியாக செயற்பட முடியும்.

இரண்டு தடவை ஜனாதிபதி பதவி வகித்து- தற்போது பிரதமராக பதவி வகிக்கும் மகிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியுமா? என்பது குறித்தும் சிக்கல் உள்ளது.

மீண்டும் அவர் ஜனாதிபதி பதவிக்கு வர முடியாது என்றால் சபாநாயகருக்கு ஜனாதிபதி பதவியை ஏற்கும் அதிகாரம் உள்ளது என்றார் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய.

Posted in Uncategorized

பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்கவேண்டும்- மட்டக்களப்பு மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்

மட்டக்களப்பு மாநகரசபையில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கவேண்டும் என்ற பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர சபையின் 59வது அமர்வுக்கான (49வது பொதுக் கூட்டம்) நேற்று மட்டக்களப்பு மாநகர சபையில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் சபை அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.

இதன் போது பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கவேண்டும் என்று கோரும் பிரேரணை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களினால் சபைக்கு கொண்டுவரப்பட்டதுடன் குறித்த பிரேரணை எதிர்ப்புகளுக்கு மத்தியில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

புதிய மத்திய வங்கி ஆளுநர் நியமனம்

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்கவும், நிதி அமைச்சின் புதிய செயலாளராக கே.எம்.எம் சிறிவர்தனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நியமனக் கடிதங்கள் நேற்று, (07) பிற்பகல் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.

நிதித் துறையில் அனுபவமிக்க கலாநிதி வீரசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளர், இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுப் பணிப்பாளர், துணை ஆளுநர் மற்றும் சிரேஷ்ட பிரதி ஆளுநர் பதவிகளை வகித்துள்ளார்.

நந்தலால் வீரசிங்க, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் முதுமானி பட்டப் பாடநெறிக்கான வருகைதரு விரிவுரையாளராகவும் மலேசியாவின் சியசன் மத்திய நிலையத்தின் வருகைதரு ஆராய்ச்சி பொருளியலாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

அவர் அவுஸ்திரேலியாவின் தேசிய பல்கலைக்கழகத்தின் க்ரோஃபர்ட் இல் பொதுக்கொள்கை, பிரயோகப் பேரினப் பொருளியல் பகுப்பாய்வு மையத்தின் ஆலோசகர் குழு உறுப்பினராகவும் உள்ளார்.

கே.எம்.எம். சிறிவர்தன, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுக்கான மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளராக பணிபுரிந்துள்ளார்.

நிதி அமைச்சின் அரச நிதி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாகவும் கடமை புரிந்துள்ளார்.

சிறிவர்தன அவர்கள், பேரினப் பொருளாதார முகாமைத்துவம், பேரினப் பொருளாதார முன்கணிப்பு, நிதிக் கொள்கை, மத்திய வங்கியியல், அரச நிதி மேலாண்மை, அரச கடன் முகாமைத்துவம், நிதி செயற்பாட்டியல் போன்ற பல்வேறு துறைகள் தொடர்பாக சர்வதேசப் பயிற்சியைப் பெற்றுள்ளார்.

Posted in Uncategorized

இனம் மதம், அரசியல் பேதங்களை மறந்துதான் மக்கள் இன்று வீதிக்கு இறங்கியுள்ளனர் – சஜித் பிரேமதாச

வங்குரோத்தடைந்த சில அரசியல்வாதிகள், தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காக மீண்டும் இனவாதத்தையும், மதவாதத்தையும் கையில் எடுத்துள்ளனர். இனம் மதம், அரசியல் பேதங்களை மறந்துதான் மக்கள் இன்று வீதிக்கு இறங்கியுள்ளனர். எனினும், மக்களின் போராட்டத்துக்கு முத்திரை குத்தப்படுகின்றது. எனவே, இனவாதத்தையும், மதவாதத்தையும் தோற்றுவிப்பவர்களை, தோற்கடிப்பதற்காக நாம் அறவழியில் எழுந்து நிற்போம் என தலவாக்கலையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது எமது நாடு, நாட்டு வளங்களை, சொத்துகளை காக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. எனவே, தேசிய சொத்துகளுக்கு சேதம் விளைவிக்காத வகையிலேயே போராட்டங்கள் இடம்பெற வேண்டும். ஒழுக்கம் உள்ள மக்கள் என்ற வகையில் போராட்டத்தில் பங்கேற்பவர்கள் அதனை பின்பற்றுகின்றனர் என உறுதியாக நம்புகின்றேன்.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள், சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்படுவார்கள். பயிரிடப்படாத நிலங்கள் பகிர்ந்தளிக்கப்படும். சிறு தேயிலை தோட்டங்கள் அதிகரிக்கும் பட்சத்தில், ஏற்றுமதி அதிகரிக்கும், ஏற்றுமதி அவ்வாறு அதிகரித்தால் வருமானம் கூடும். அந்த வழிமுறையை நாம் கையாள்வோம். அதேபோல லயன் யுகத்துக்கும் முடிவு கட்டப்படும். மலையக மக்களின் எழுச்சிக்காக தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து காத்திரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்ற யோசனையை நாம் முன்வைத்துள்ளோம். தனி நபரிடம் அதிகாரம் இருக்ககூடாது. சர்வாதிகார ஆட்சியும் வேண்டாம். எனவே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை இல்லாதொழிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, தொடர் மின்வெட்டு, பொருட்கள் விலையேற்றம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்நிலைமையை உருவாக்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொருளாதார வீழ்ச்சியாக மாறிய பொருளாதார வளர்ச்சி-ஆசிய அபிவிருத்தி வங்கி

2022 இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2.4% ஆக குறையும் என ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) கணித்துள்ளது.

இது கடந்த ஆண்டை விட 1.3 சதவீதம் குறைவு. 2021ல் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.7 சதவீதமாக இருக்கும். கடன், குறைந்த அன்னிய கையிருப்பு மற்றும் கொரோனா தொற்று ஆகியவை சரிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) அடுத்த ஆண்டு 2.5% சிறிதளவு முன்னேற்றம் இருக்கும் என்று கணித்துள்ளது