புதிய அரசமைப்பு தொடர்பில் கவனமாக இருங்கள் – கூட்டமைப்புக்கு ஜெய்சங்கர் எச்சரிக்கை!

புதிய அரசமைப்பு விடயத்தில் கவனமாக இருக்கவேண்டும் – எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்”, என்று தம்மை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர்.

மேலும், “13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியப் பிரதமரிடம் கடிதம் மூலம் கோரிய 6 தமிழ்த் தேசியக் கட்சிகளின் விடயத்தையும் இந்தியா அங்கீகரிக்க வேண்டும்” என்று இதன்போது செல்வம் அடைக்கலநாதன் எம். பி. வலியுறுத்தினார் என்றும் ஈழநாடுவுக்கு அறியவந்தது.

இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று சந்தித்தபோதே மேற்கண்ட விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.

கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்திருந்தது. இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா. சம்பந்தன், பங்காளிக் கட்சிகளான புளொட்டின் தலைவர் த. சித்தார்த்தன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்திய தரப்பில் வெளிவிவகார அமைச்சருடன், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, அரசியல் விவகாரங்களுக்கான செயலர் பானு ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

சந்திப்பின் ஆரம்பத்திலேயே ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் கேட்டார்.

சந்திப்பு விடயங்களை விளக்கிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் 13ஆவது திருத்தத்தைக்கூட முழுமையாக நடைமுறைப்படுத்த அரச தரப்பு பின்னடிக்கிறது என்று சுட்டிக்காட்டினார். அத்துடன், சுமந்திரனை அது தொடர்பில் விளக்கமளிக்குமாறும் கூறினார்.

ஜனாதிபதியுடனான பேச்சின் அடிப்படை அம்சங்களான வடக்கு, கிழக்கு காணிகள் அபகரிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, அரசமைப்பு மூலமான தீர்வு, காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் விவகாரம், புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகள் என 5 விடயங்களையும் விவரித்தார்.

இதைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர், “புதிய அரசமைப்பு விடயத்தில் கவனமாக இருங்கள். அதற்காகக் காத்திருக்காதீர்கள். அது முன்னரைப்போன்று இல்லாமலும்கூட இருக்கலாம். அத்துடன், புதிய அரசமைப்பு மூலம் தீர்வு காண முடியாத சூழல் கூட உருவாகலாம்”, என்று அறிவுறுத்தினார்.

இதன்போது கருத்து வெளியிட்ட சித்தார்த்தன் எம். பி., “புதிய அரசமைப்பு உருவாகும் என்று நம்பவில்லை. அப்படியே வந்தாலும் அது பழையதை விட மோசமாகவே இருக்கும். ஆனால், அரசியல் கைதிகள் விடுதலை, காணி அபகரிப்பு விடயங்கள் சாத்தியமாகும் என்று நம்புகிறோம். இதைத் தொடர்ந்து அடுத்த கட்ட விடயங்களை தொடர்ந்து முன்னெடுப்போம்”, என்றார்.

“இதுவே சரியான முறைமை”, என்று கூறி ஜெய்சங்கர் அதை ஆமோதித்தார்.

தொடர்ந்து செல்வம் அடைக்கலநாதன் எம். பி.“13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியப் பிரதமரிடம் கடிதம் மூலம் கோரிய 6 தமிழ்த் தேசியக் கட்சிகளையும் இந்தியா அங்கீகரிக்க வேண்டும். இது தொடர்பாக இந்தியா இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை. எனவே, இதற்கு தகுந்த பதிலை வழங்கி ஆறு கட்சிகளுக்கும் அங்கீகாரம் வழங்கும் பட்சத்திலேயே, அவை தொடர்ச்சியாக ஒற்றுமையாக பயணிக்க முடியும் – இது தொடர்பில் அரசாங்கத்துக்கும் அழுத்தம் உருவாகும்”, என்று கூறினார்.

“இந்த விடயத்தில் அவதானம் செலுத்தப்படும்”, என்று ஜெய்சங்கர் இதன்போது உறுதியளித்தார்.

Posted in Uncategorized

13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்போம் – இந்திய வெளிவிவகார அமைச்சர் கூட்டமைப்பிடம் தெரிவிப்பு

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் என முழுமையான நம்பிக்கை வைக்க வேண்டாம், ஆனால் 13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தாம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்போம் என இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளார்.

பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் திங்கட்கிழமை (28) பிற்பகல் தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

பிற்பகல் 4.30 மணிக்கு கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

சுமார் அரைமணிநேரம் இடம்பெற்ற சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சளார் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கூட்டமைப்பின் சார்பில் கலந்துகொண்டனர்.

இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை குறித்து முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.

புதிய அரசியல் அமைப்பு உருவாக்க விடயங்களில் தாம் கூடிய அக்கறை செலுத்துவதாகவும், அதேபோல் அரசியல் அமைப்பு உருவாக்கம் தவிர்ந்து, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் விடயங்களில் உண்மையை கண்டறிதல், வடக்கு கிழக்கு பகுதிகளில் காணி விடுவிப்பு மற்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்தும் அரச தரப்புடன் பேசியதாகவும் இது குறித்து கூடிய கவனம் செலுத்த வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்தியதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் எம்.பி ஆகியோர் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அதேபோல் 13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனவும், ஆனால் நீண்ட காலமாக அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகள் மீறப்பட்டு வருவதாகவும் சம்பந்தன் அவர்கள் எடுத்துக்கூறியுள்ளார்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய பிரதமருக்கு வழங்கிய கடிதம் தொடர்பில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் எனவும், அதற்கு பதில் தெரிவிக்க வேண்டும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் குறித்து எம்மத்தியிலும் நம்பிக்கை இல்லை எனவும், ஆனால் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், ஒரு சில அரசியல் கைதிகள் விரைவில் விடுவிக்கப்படலாம் எனவும் தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி கூறியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்துகொண்ட இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர், திங்கட்கிழமை காலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவை சந்தித்த வேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்து ஜனாதிபதி முழுமையாக தெளிவுபடுத்தியதாக சம்பந்தன் தரப்பிடம் தெரிவித்ததுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பும் இப்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு நகர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் கூடிய நம்பிக்கை வைக்க வேண்டாம் எனவும், புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் என்ற நம்பிக்கை தமக்கும் இல்லையெனவும், 13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தாம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்போம் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் தெரிவித்ததாக தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி வீரகேசரிக்கு தெரிவித்தார்.

அதேபோல் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்திலும் சில மாற்றங்கள் ஏற்படும் என்பது தமக்கும் தெரிவதாக கூறியுள்ள வெளிவிவகாரத்துறை அமைச்சர், தமிழர் தரப்பு இந்தியாவிற்கு அனுப்பிய கடிதம் குறித்து கேட்டறிந்துகொண்ட போதிலும் அதற்கு பதில் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

தமிழர் பகுதிகளில் தொடர்ந்தும் நிலஅபகரிப்பு முயற்சிகள் – ஜனாதிபதி கூட்டமைப்பிற்கு வழங்கிய உறுதிமொழி பொய்யா? என மக்கள் கேள்வி?

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன்பகுதியில்வனஜீவராசிகள் திணைக்களத்தினர் காணிகளை அபகரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அம்பன் கிராம சேவகரால் அம்பன் மக்களை காலை 9.30 மணிக்கு தங்களது காணிகளுக்கான உறுதிகளுடன் சமூகமளிக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எனது எல்லை பரப்பிற்குள் வருகின்ற மக்களின் காணிகளை வனஜீவராசிகள் திணைக்களம் பார்வையிட்டு மக்களின்காணிகளை தவிர்த்து தமது எல்லையினை வகுப்பதற்காக இன்று வருகை தரவுள்ளது என என கிராமசேவகர் அறிவித்துள்ளார்.
எனவே வைத்தியசாலை முன்பக்கம் தொடக்கம் தங்கராசா என்பவரது வீடு வரை உள்ள வயல் காணி உரிமையாளர்கள் காலை 8.30 மணிக்கு ஆவணங்களுடன் தயார் நிலையில் வருமாறு கேட்டுக்கொள்கின்றேன் என அவர் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது காணி அபகரிப்பில் ஈடுபடமாட்டோம் என உறுதிமொழி வழங்கப்பட்டதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்திருந்த நிலையி;ல் இன்று இவ் நில அபகரிப்பு இடம்பெறுவது மக்;கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளைதிருகோணமலை மூதூர் பிரதேசசெயலகபிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி முத்துமாரியம்;;பாள் ஆலயத்திற்கு சொந்தமான காணியை தொல்பொருள் திணைக்களம் அளவை செய்யசென்றதால் நேற்று திங்கட்கிழமை அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.
இந்த கோயிலுக்கு சொந்தமான 20பேர்ச் காணியை தொல்பொருள் திணைக்களமும் நில அளவை திணைக்களமும் இணைந்து அளவீடு செய்யசென்றதால் மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பிரதிசெயலாளர் கலாநிதி ஸ்ரீஞானேஸ்வரன் அங்கு சென்று மக்களுடன் இணைந்து இதனை தடுத்து நிறுத்தினார்.
இந்தப்போராட்டத்தை தொடர்ந்து தொல்பொருள் திணைக்களத்தினர் அவ்விடத்திலிருந்து சென்றனர்.

கால்நடைகளுக்கான மேச்சல் தரையை வனவளத்திணைக்களத்தினர் வேலி போட்டு அடைப்பதாக தெரிவித்து வவுனியா மதுராநகர் மற்றும் இத்திக்குளம் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வவுனியா மதுராநகர் கிராமத்தின் பின்புறமாக உள்ள வனவளத்திணைக்களத்தினருக்கு உரிய காணியில் குறித்த பகுதியை சேர்ந்த 6 கிராமங்களை சேர்ந்த மக்களின் கால்நடைகள் மேச்சலுக்காக சென்று வரும் நிலையில் கடந்த சில நாட்களாக வனவளத்திணைக்களத்தினர் குறித்த பகுதிக்குள் கால்நடைகள் வருவதை தடை செய்யும் வகையில் வேலி அமைத்து கால்நடை வளர்ப்பாளர்களையும் அச்சுறுத்தி வந்துள்ளனர்.

இதன் காரணமாக தமது கால்நடைகளுக்கு உணவு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த பகுதிக்குள் காணப்படும் குளத்தின் நீரேந்து பிரதேசத்திலேயே கால்நடைகள் நீரை பருகுவதால் தற்போது அதுவும் தடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த கிராம மக்கள் தமது கால்நடைகளை மேய்ப்பதற்கான இடத்தினை வேலி போட்டு அடைப்பதனை வனவளத்திணைக்களத்தினர் நிறுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்திக்குளம் காட்டு அம்மன் ஆலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுமார் 6 கிராமங்களை சேர்ந்த 2000 கால்நடைகளின் மேச்சல் தரை இல்லாமல் போவதாகவும் தாம் கால்நடை வளர்ப்பை கைவிட்டு கிராமத்தினை விட்டு இடம்பெயர வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த நிலையில் ஊர்வலமாக சுமார் 3 கிலோ மீற்றர் சென்று மதுராநகர் கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு முன்பாக மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு வருகை தந்த வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான கு. திலீபனிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது பிரச்சனைகளை தெரிவித்தததை அடுத்து குறித்த பகுதிக்கு வனவளத்திணைக்களத்தினரை வருமாறு பாராளுமன்ற உறுப்பினர் பணித்திருந்தார்.

இதனையடுத்து அங்கு வந்த வனவளத்திணைக்களத்தினரிடம் குறித்த வேலி அமைக்கும் பணியை தற்காலிகமாக கைவிடுமாறும் மக்கள் கால்நடைகளை மேய்ப்பதற்கு தடை ஏற்படுத்த வேண்டாம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

எனினும் வனவளத்திணைக்களத்தினர் குறித்த பகுதியில் வனம் உருவாக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்திருந்தனர்.

எனினும் எதிர்வரும் புதன்கிழமை அரசாங்க அதிபர் தலைமையில் வனவளத்திணைக்களத்தினர் கிராம மக்கள் சந்தித்து குறித்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் எனவும் அதுவரை வனவளத்திணைக்களத்தினர் பொதுமக்கள் கால்நடைகளை குறித்த பகுதிக்குள் மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல அனுமதிக்குமாறு தெரிவித்திருந்தார்.

இதற்கு சம்மதம் தெரிவித்த வனவளத்திணைக்களத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களும் குறித்த பகுதியில் இருந்து கலைந்து சென்றிருந்தனர்.

இப்படியும் நடக்கிறது…! ஊர்க்குருவி

நேற்றைய தினம் இந்தப் பத்தியில் ஜனாதிபதி – கூட்ட மைப்பினருக்கிடையே நடைபெற்ற பேச்சு வரவேற்கப் படவேண்டிய ஒன்று என்ற கருத்தில் எழுதியிருந்தேன்.
அதனைப் படித்துவிட்டு, ஊர்க்குருவியின் தீவிர வாசகர்களில் ஒருவர், அரசியல்வாதி மாத்திரமல்ல, சிரேஷ்ட சட்டத்தரணிகளில் ஒருவர், தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

‘சந்திப்பின் மூலம் தமிழ் மக்களுக்கு நல்லது நடந்தால், நல்லதுதான். ஆனால், அது நடக்கும் முன்னர் இப்படி எழுதி நம்பிக்கையை வளர்க்காதீர்கள். நம்பிக்கைகள் பின் னர் தகர்ந்து கொட்டும்போது அதன் வலி இன்னும் அதிகமாகும்” என்று எச்சரித்தார்.

ஜனாதிபதி முன்னர் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்திலிருந்து அவரை அறிந்த ஒருவர், அவரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்.

அவர் சொன்னது, நம்பிக்கை தருவதாக இருந்தது. அதுதான் அந்த நம்பிக்கை என்று விளக்கம் தந்தேன்.

‘பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாப யவுக்கும் ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் எத்தனை வித்தியாசம். அவரின் உடல்மொழியே மாறியிருந்தது’ என்று அந்த பிரமுகர் சொல்லியிருந்தார்.

‘சந்திப்பில் பல விடயங்கள் பேசப்பட்டன. சம்பந்தன் மேசையில் தட்டி பொங்கி எழுந்தார் என்று நீங்கள் மாத்திரமல்ல, எல்லா ஊடகங்களுமே வர்ணித்திருந்
தனவே” என்ற அவர், எதற்காக அவர் அவ்வாறு ஆத்திரமடைந்தார் என்பதை கவனித்தீர்களா? என்று கேட்டார்.

பதின்மூன்றை முழுமையாக நடைமுறைப்படுத்த அவர் கோரியபோது, அதில் சில பிரச்னைகள் இருக்கின்றன என்று வெளிவிவகார அமைச்சர் போராசிரியர் பீரிஸ், மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் விளக்க மளித்தபோது அவர் கோபமடைந்தது நியாயமான துதானே – என்றேன்.
நியாயமானதுதான், ஆனால், பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் என்பவற்றை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக அவர்கள் சொன்னபோதுதான் சம்பந் தனுக்கு கோபம் வந்திருக்கின்றது. இதில் ஏன் அவருக்கு கோபம் வந்தது?

இதை அன்றுதான் முதன்முதலாக ஆளும்தரப்பு சொன் னதா என்ன? இதைத்தானே முப்பது ஆண்டுகளுக்கும் மோலாக சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இப்போது மட்டும் ஏன் அவருக்கு கோபம் வந்தது?

நல்லாட்சி அரசாங்கம் இருந்த காலத்தில், புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருகின்றோம் என்று ஐந்து ஆண்டுகளை காலம்கடத்திய சம்பந்தன், அப்போதுஅதுவும் மைத்திரி பதவியேற்ற உடன் அந்த நூறுநாள் ஆட்சிக் காலத்திலேயே பதின்மூன்றை முழுமையாக நடைமுறைப்படுத்த அழுத்தம் கொத்திருக்கலாமே. அப் போதெல்லாம் இதனைக் கண்டுகொள்ளாத சம்பந்தன், இப்போது மாத்திரம் பொங்கி எழுவது ஏன் என்பதை யுமல்லவா ஊடகங்கள் கேள்விக்கு உட்படுத்த வேண்டும் என்று அந்த சட்டத்தரணி கேட்டபோது, அதற்கு இந்த ஊர்க்குருவியிடம் பதில் இருக்கவில்லை.

அது மாத்திமரமல்ல, மேசையில் ஓங்கி தட்டி, ‘எங் களை நாய்கள் என்று நினைக்கிறீர்களா? அப்படியெனில் நாங்கள் தனியாகச் செல்லவேண்டிவரும்’ என்று எச்சரிக்கை விடுத்தபோது, முன்னால் இருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அதுக்கென்ன போறதெண்டால் போகவேண்டியதுதானே என்பதுபோல சம்பந்தனைப் பார்த்தது அவருக்கு புரிந்திருக்குமோ என்னவோ?

அதுசரி, அது என்ன தனியாகச் செல்லவேண்டிவரும்? அப்படியெனில் தனியாகச் செல்லக்கூடிய நிலைமை இருந்தும், அவர் அப்படி தனியாக செல்லாமல் இப்போது இருந்துகொண்டிருக்கிறாரோ? என்று கேட்டுவிட்டு அந்தச் சட்டத்தரணி விடைபெற்றார்.
விடைபெற முன்னர், அவர் கேட்டதும் நியாயமானது தான், மிருசுவிலில் எட்டு தமிழர்களை படுகொலை செய்த இராணுவ சிப்பாயை பொதுமன்னிப்பில் விடுதலை செய்த ஜனாதிபதி, ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவரையாவது உடன் பொதுமன்னிப்பில் விடுதலை செய்து தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கூட்டமைப்பினர் கேட்டிருக்கலாமே என்று கேட்டார். இப்படியும் நடக்கிறது…!

Posted in Uncategorized

இந்திய வெளிவிவகார அமைச்சர் கூட்டமைப்பு சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் அவர்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று பிற்பகல் இந்திய இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளது.

இதன் போது சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது

Posted in Uncategorized

தமிழரசுக்கட்சி , புளொட் – கோட்டாபய சந்திப்பின் உள்ளே வெடித்தது சர்ச்சை! பேசுவதற்கு அனுமதியில்லை

கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சு வார்த்தையின் போது அரசாங்கத்தினை சார்ந்தவர்கள் கூட்டமைப்பின் தலைவருக்கும், சுமந்திரனுக்கும் மாத்திரம் கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தினை வழங்கியிருந்ததுடன்,ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் தமிழரசுக்கட்சி வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான பல விரிவான தகவல்களுடன் வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,

ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சில விடயங்களை கூட்டத்தில் தெரிவித்து பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஏனைய விடயங்கள் தொடர்பில் கருத்து தெரிவிப்பார் என்று கூறிய கருத்தினை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் கருத்து தெரிவிப்பார்கள் என்றே தெரிவித்திருக்க வேண்டும்.

கூட்டத்தில் தனிநபரொருவரின் பெயரை மாத்திரம் குறிப்பிட்டமையானது கூட்டத்தில் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கம் குறித்து தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து ஒரு குழப்பமான சூழலை ஏற்படுத்த கூடும் என்பதற்காகவே இவ்வாறு செயற்பட்டதாகவே நான் கருதுகின்றேன்.

இதன்போது தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கருத்து தெரிவிக்க முற்பட்ட வேளையிலும் கூட ஒலிவாங்கி கொடுக்கப்படவில்லை,ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்க முற்படும் போது அதற்கு சுமந்திரன் தடை விதித்திருந்தமை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

பதவி விலகும் எண்ணமில்லை – மஹிந்த பகிரங்க அறிவிப்பு!

தாம் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக சமூக வலைத்தளங்களில் தற்போது பரப்பப்படும் பிரச்சாரம் உண்மைக்குப் புறம்பானது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு பதவியை இராஜினாமா செய்யவோ அல்லது மாற்றவோ தேவையில்லை என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள், அரசாங்கத்தின் மீது கடுமையான விரக்தியில் உள்ளனர்.

போராட்டங்களை முன்னெடுத்துள்ள மக்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகுமாறு கோரியுள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக போவதாக செய்திகள் பரப்பப்பட்டன.

இதனிடையே, மஹிந்த ராஜபக்ஷவே அடுத்த பிரதமராக வர வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

மார்ச் 24ஆம் திகதி ரணில் விக்ரமசிங்கவின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனாதிபதி தொலைபேசியில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்திருந்த நிலையில் அதனைத் தொடர்புபடுத்தி குறித்த செய்திகள் பரப்பப்பட்டன.

Posted in Uncategorized

யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் எளிமையான முறையில் திறந்து வைப்பு!

இலங்கை – இந்திய நட்புறவின் சின்னமாக இந்திய அரசின் 1.6 பில்லியன் நிதியுதவியில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் இன்று எளிமையான முறையில் திறந்து
வைக்கப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரால் பிற்பகல் ஒரு மணியளவில் காணொளி முறையில் திறந்து வைக்கப்பட்டது.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாண பண்பாட்டு மையத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர்கள் மதகுருமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண பண்பாட்டு மையம் வெகுவிமரிசையாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்பட்ட பின்னரே பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவிடம் இருந்து மேலும் ஒரு பில்லியன் டொலர் கடன்?

அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இலங்கை அரசாங்கம் மேலும் ஒரு பில்லியன் டொலர் கடனாக இந்தியாவிடம் கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விடயம் இரண்டு தரப்பினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ரெய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனவரி 2020 முதல் இன்று வரை, இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு சுமார் 70% குறைந்துள்ளது.

இதனால், டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்து வருகிறது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்தார்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் (S. Jaishankar) இன்று (28) முற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்தித்தார்.

கொழும்பில் இன்று தொடங்கும் ஐந்தாவது பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக திரு.ஜெய்சங்கர் இலங்கை வந்துள்ளார்.

ஜெய்சங்கரின் வருகை தொடர்பில் மகிழ்ச்சியை தெரிவித்த ஜனாதிபதி, உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார்.

இந்த ஆண்டு, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நினைவு நாணயம் மற்றும் நினைவு முத்திரை வெளியீடு உட்பட பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.