அரசாங்கத்தின் பெரும்பான்மையை இழக்கச் செய்வோம்: கம்மன்பில, விமல் வீரவன்ச மகாநாயக்க தேரர்களிடம் தெரிவிப்பு

அரசாங்கத்தின் பெரும்பான்மையை இழக்கச் செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச உள்ளிட்ட அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்கள் மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களிடம் இன்று தெரிவித்துள்ளனர்.

அதற்காக அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு மேலும் சிலர் தயாராக இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, கெவிந்து குமாரதுங்க, டிரான் அலஸ், பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச உள்ளிட்ட 11 கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று காலை தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் மல்வத்து பீட மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, இந்தியாவுடனான உடன்படிக்கையில், அமைச்சரவைக்கு அதனை சமர்ப்பிக்கும் முன்னரே கையொப்பம் இடப்பட்ட விடயத்திற்கு அதிருப்தி வௌியிட்டார்.

சர்வதேச நாணய நிதியம் தற்போது அமெரிக்க வௌிநாட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் ஆயுதமாக மாறியுள்ளதாகவும் அது தொடர்பில் தாம் அச்சமடைந்துள்ளதாகவும் திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, குறித்த குழுவினர் மல்வத்து பீட அனுநாயக்கரையும் அஸ்கிரிய பீட மகாநாயக்கரையும் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டனர்

கப்ராலின் கருத்திற்கு அதிருப்தி வெளியிட்டார் ரணில் : மன்னிப்புக் கோரினார் ஜனாதிபதி

பொருளாதார நெருக்கடிக்கு நல்லாட்சி அரசாங்கம் காரணம் என மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொருளாதார பாதிப்பிற்கு அனைத்து அரசாங்கமும் காரணம் என்று குறிப்பிடுவதாயின் விஜயன் காலத்தில் இருந்து குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டும்.

May be an image of 1 person, standing and indoor

அரசியல் நோக்கமில்லாத வகையில் தான் சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ளோம். என்பதை முதலில் தெளிவாக குறிப்பிட்டுக்கொள்ள வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அஜித் நிவார்ட் கப்ராலின் கருத்திற்கு அதிருப்தி வெளியிட்டார்.

அரசியல் காரணிகள் பற்றி பேசும் தருணம் இதுவல்ல. உண்மையான நோக்கில் சர்வகட்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநரது கருத்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்பு கோருகிறேன் என ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையில் புதன்கிழமை இடம்பெற்ற சர்வகட்சி கூட்டத்தின் போது நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து தெளிவுப்படுத்துமாறு ஜனாதிபதி மத்திய வங்கி ஆளுநரிடம் வலியுறுத்தினார்.

கொவிட் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் பொருளாதார தாக்கம் தீவிரமடைவதற்கு நல்லாட்சி அரசாங்கம் காரணம் என தரப்படுத்தல்கள் ஊடாக நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைகளை எடுத்துரைத்தார்.பொருளாதார நெருக்கடி தீவிரமடைவதற்கு கடந்த அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் குற்றஞ்சாட்டினார்.

மத்திய வங்கியின் ஆளுநரது உரையாடல் முடிவடைந்ததை தொடர்ந்து கருத்து தெரிவித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க திறந்த பொருளாதார கொள்கையினை அரசாங்கம் முறையாக செயற்படுத்தியுள்ளதா என்பதை முதலில் குறிப்பிடுங்கள்.

அரசியல் நோக்கமற்ற வகையில் சர்வகட்சி மாநாட்டில் கலந்துக்கொண்டுள்ளோம்.இவ்விடயத்தில் அரசியல் பேசுவதை முதலில் தவிர்த்துக்கொள்ளுங்கள்.பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த மாநாடு கூட்டப்பட்டுள்ளது.இவ்விடயத்தில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து விளையாடுவது பொருத்தமற்றது.

கடந்த அரசாங்கத்தினால் தான் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளது என மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளமை வருந்தத்தக்கது.அரசியல் பேசுவதற்காக இங்கு வரவில்லை.பொருளாதார நெருக்கடிக்கு இதுவரை ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கமும் பொறுப்பு கூற வேண்டுமாயின் விஜயன் காலத்தை பற்றியும் குறிப்பிட்டு குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வேண்டும்.

மத்திய வங்கி ஆளுநரின் கருத்தினை கடுமையாக விமர்சித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நோக்கி ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷஅரசியல் நோக்கிற்காக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்படவில்லை.மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்ட கருத்து ரணில் விக்ரமசிங்கவிற்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியிருக்குமாயின் அதற்கு மன்னிப்பு கோருகிறேன் என்றார்.

வங்கிக் கட்டமைப்பு அபாயத்தில்: ஹர்ஷ டி சில்வா எச்சரிக்கை

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ பாராளுமன்றம் தொடர்பில் கரிசனை கொள்ளாது செயற்படுவதாக எதிர்க்கட்சியினர் இன்றும் சபையில் குற்றம் சுமத்தினர்.

சேவைகள் பிரிவின் VAT திருத்தம் தொடர்பிலான பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் நிதி அமைச்சர் சபையில் இருக்கவில்லை.

அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும், தெரிவுக்குழுவின் தலைவர் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலும் நாணய சபை உறுப்பினர்களும் சபைக்கு சமூகமளிக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார்.

பிரச்சினைகளை மாநாடுகள் மூலம் அல்லாது பாராளுமன்றத்தில் விவாதித்தே தீர்த்துக்கொள்ள முடியும் எனவும் அதுவே நாட்டின் அரசியலமைப்பில் உள்ளதாகவும் ஹர்ஹ டி சில்வா தெரிவித்தார்.

சட்டங்களை வகுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என சுட்டிக்காட்டிய அவர், வரிகளை அதிகரிப்பதாக இருந்தாலோ, குறைப்பதாக இருந்தாலோ அதனை பாராளுமன்றத்திற்குள் மாத்திரமே செய்ய முடியும் என கூறினார்.

இன்று நிதி தெரிவுக்குழுவிற்கு நிவாட் கப்ராலும் நாணயக் குழுவினரும் வருகை தராமை, பாராளுமன்றத்தை முழுமையாக நகைப்பிற்குட்படுத்தும் செயல் எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்திற்கு நிதி அமைச்சர் வருவதும் இல்லை, கேள்விகளுக்கு பதில் அளிப்பதும் இல்லை என தெரிவித்த ஹர்ஷ டி சில்வா, பிரச்சினைகளை யாரிடம் கூறுவது எனவும் கேள்வி எழுப்பினார்.

வங்கிக் கட்டமைப்பு வீழ்ச்சியடையும் என தாம் முன்னதாகவே எச்சரிக்கை விடுத்திருந்த போதும், அது குறித்து எவரும் அக்கறைகொள்ளவில்லை எனவும் தற்போது அரச வங்கியொன்று பணத்தை மீள செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக அறியக்கிடைத்திருப்பதாகவும் உடனடியாக அது குறித்து ஆராயுமாறும் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார்.

டொலரை 200 ரூபாவிற்கு மேல் விற்க முடியாது என முட்டாள்தனமான சட்டமொன்றை பிறப்பித்திருந்தனர். வங்கிகள் 200 ரூபாவிற்கு மேல் கறுப்பு சந்தையில் அதனை கொள்வனவு செய்வதற்கும் வாய்ப்பில்லை. ஆனால், அவர்களுக்கு டொலர் தேவை. சில வங்கிகள் 200 ரூபா வீதம் அதனை கொள்வனவு செய்து, மூன்று மாதங்களில் 185 ரூபாவிற்கு அவற்றை விற்பனை செய்வதாக தெரிவித்து Swap செய்தனர். பணவீக்கம் அதிகரித்துள்ளது, இவ்வளவு பணம் அச்சிடுகின்றனர், அதனால் ரூபாவின் பெறுமதி குறைவடையும் என்பதை நாம் அறிவோம். அப்படியாயின், 200 ரூபாவிற்கு கொள்வனவு செய்யும் போது 201 ரூபா அல்லது 202 ரூபாவிற்கு விற்பனை செய்வதாகவே உடன்படிக்கை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் 185 ரூபாவிற்கு விற்பனை செய்வதாக அந்த வங்கிகள் அறிவித்தன. இதன் மூலம் ஒட்டுமொத்த வங்கிக் கட்டமைப்பும் வீழ்ச்சி காணும் அபாயம் உள்ளதாக நான் அன்றே தெரிவித்தேன்

என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இன்று பிற்பகல் நிதி அமைச்சர் பாராளுமன்றத்திற்கு சமூகமளித்திருந்தாலும் கேள்விகளுக்கு பதிலளிக்கவோ கருத்துக்களை வௌியிடவோ இல்லை.

இதேவேளை, வங்கிக் கட்டமைப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா வௌியிட்ட கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய வங்கி அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.

வங்கி கட்டமைப்பு நிலையாக உள்ளதாகவும் அரச வங்கிகளின் செயற்பாடுகள் சுமூகமாக இடம்பெற்று வருவதாகவும் மத்திய வங்கி உறுதிப்படுத்துவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

மனோ கணேசன் தலைமையில் த.மு.கூ குழு – இந்திய தூதுவர் சந்திப்பு

பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கான, இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர் சார்பான அபிலாசை ஆவண கடிதத்தை, தமிழ் முற்போக்கு கூட்டணி, இன்று (23) கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையில் இந்திய தூதுவர் கோபால் பாக்லேயிடம் கையளித்தது.

கொழும்பு இந்திய இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் வே. ராதாகிருஷ்ணன், உதயகுமார் எம்பி, கே.டி. குருசாமி, பேராசிரியர் சோ. சந்திரசேகரம் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இந்திய தரப்பில் தூதுவர் கோபால் பாக்லே, துணை தூதர் வினோத் கே. ஜேகப், அரசியல் துறை செயலாளர் பானு பிரகாஷ் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளதாவது,

மனம் திறந்த கலந்துரையாடலுடன் இந்த சந்திப்பு மிகவும் திருப்திகரமாக அமைந்தது. இலங்கையில் வாழும் தமிழர் ஜனத்தொகையில் சுமார் சரிபாதியான இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர் தொடர்பான கூடிய அக்கறையை செலுத்த பாரத பிரதமர் நரேந்திர மோடியின் இந்திய ஒன்றிய அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாக இந்திய தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

இந்த பின்னணியில், இலங்கையின் முழுமைமிக்க குடிமக்களாக ஏனையோருடன் சமத்துவமாக வாழ விரும்பும் மலையக தமிழ் இலங்கையர் தொடர்பான இந்த அதிகாரபூர்வ ஆவணம் மிகவும் பயன்தருகிறது என அவர் மேலும் கூறினார்.

மலையக தமிழ் மக்களின் அனைத்து அபிலாசைகளையும் ஒருசேர பிரதிபலிக்கும் கோரிக்கைகள் உள்ளடங்கிய இத்தகையை ஆவணத்தை தயாரித்து முன்வைத்துள்ளமை தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு தந்து மகிழ்ச்சிகளையும், பாராட்டுகளையும் தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

இதன் அபிலாசை ஆவண கடிதத்தை உடனடியாக பாரத பிரதமர் நரேந்திர மோடியின் அவதானத்துக்கு முறைப்படி அனுப்பி வைப்பதாக தூதுவர் கோபால் பாக்லே, தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழுவுக்கு உறுதியளித்தார்.

மேலும் இனி வரும் எதிர்காலத்தில், இந்திய மற்றும் தமிழக அரசியல், சமூக, பரப்புகளில் இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர் அதிக கவனத்தை பெற வேண்டும் எனவும், அதற்கான ஒத்துழைப்புகளை இந்த அரசு சார்பில் இந்திய தூதகரம் வழங்கும் எனவும் அவர் மேலும் கூறினார்.

அடுத்த வாரம் இலங்கை வருகைதரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர், தமிழ் முற்போக்கு கூட்டணியை சந்திக்கும் போது இது தொடர்பில் மேலும் கலந்துரையாடப்படும். பிம்ஸ்டெக் (BIMSTEC) மாநாடு முடிந்த உடன், இந்த ஆவண கோரிக்கைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாட விரும்புவதாகவும் தூதுவர் கோபால் பாக்லே மேலும் தெரிவித்தார்.

கூட்டணி தலைவர் மனோ கணேசன், இந்திய தூதுவர் கோபால் பாக்லேயிடம் கூறியதாவது, இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர் தொழிலாளர்களாக, இலங்கை தீவுக்கு முதன்முதலில் 1823ம் ஆண்டு கொண்டுவரப்பட்டனர். நிதி வர்த்தகம் உட்பட ஏனைய தொழில் நடவடிக்கைகளுக்காகவும் மென்மேலும் தமிழர்கள் அதன் பின் இலங்கை வந்தனர்.

அடுத்த ஆண்டு 2023 உடன் இந்த வரலாறு, இருநூறு ஆண்டுகளை தொடுகிறது. அதை நாம் விரிவாக நினைவு கூற உள்ளோம். இந்த இருநூறு ஆண்டுகளில் ஒரு சமூகமாக நாம் பெற்றுள்ள வளர்ச்சி, பெறாத வளர்ச்சி, முகம் கொடுக்கின்ற இன்னல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து ஆவன செய்ய தமிழ் முற்போக்கு கூட்டணி திடசங்கற்பம் பூண்டுள்ளது. அதன் ஆரம்பமே இந்த ஆவணமாகும்.

1823ம் ஆண்டு வேளையில் இலங்கை, இந்தியா ஆகிய இரண்டு நாடுகளையும் ஆண்ட பிரித்தானிய அரசின் கவனத்துக்கும் இதை நாம் கொண்டுவர உள்ளோம். பிரித்தானிய அரசுக்கும் எமது மக்கள் தொடர்பில் கடப்பாடு இருக்கிறது.

1823ம் ஆண்டுக்கு, எட்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் 1815ல் கண்டி ராஜ்யத்தை ஆண்ட இந்திய வம்சாவளி மதுரை நாயக்க மன்னர் வம்சத்தின் சுமார் 300 ஆண்டுகால ஆட்சி, பிரித்தானியரால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்நாட்டில் உழைக்க மட்டுமல்ல ஆளவும் நாம் வந்துள்ளோம் என்பதை இது காட்டுகிறது.

இலங்கையில் வட கிழக்கில் வாழும் ஈழத்தமிழர்களுடன் நாம் பிரிக்க முடியாத நல்லுறவு கொண்டுள்ளோம். அவர்களின் இன்னல்களை துடைக்க இந்தியா பலதும் செய்கிறது. அது தொடர வேண்டும். அதேவேளை அதே அக்கறையை எமது மக்கள் மீதும் இந்திய உட்பட உலகம் காட்ட வேண்டிய வேளை இன்று வந்து விட்டது.

சுமார் பதினைந்து இலட்சம் இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையரில் பத்து விகிதமே தோட்ட தொழிலாளர்கள் ஆவர். ஒட்டு மொத்த மலையக தமிழ் இலங்கையரும் தோட்ட தொழிலாளர்கள் அல்ல என்பதையும், எமது சமூகத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியையும் இந்திய உட்பட உலகம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

அதேவேளை பத்து விகிதமான சுமார் ஒன்றரை இலட்சம் தோட்ட தொழிலாளர்களும் அவர்களது குடும்ப உறவுகள் மற்றும் தோட்டங்களில் இன்னமும் வாழ்பவர்கள் உள்ளிட்ட சுமார் நான்கு இலட்சம் மக்களே இலங்கையிலேயே மிகவும் பின்தங்கிய பிரிவினர்.

அவர்களை கைத்தூக்கி தேசிய மட்டத்துக்கு உயர்த்த இந்தியா, பிரிட்டன் உட்பட உலகத்துக்கு கடப்பாடு இருக்கின்றது. இதை வலியுறுத்தி உரிய செயற்பாடுகளை முன்னெடுக்க தமிழ் முற்போக்கு கூட்டணி திடசங்கற்பம் பூண்டுள்ளது. எமது உறுதிப்பாட்டை நாம் எந்த சவால்களுக்கும் முகம் கொடுத்து செய்து முடிப்போம்.

இந்தியாவின் நிதியுதவி கிடைத்தமை அதிர்ஷ்டம்! பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க

கஷ்டமான காலத்தில் இலங்கைக்கு இந் தியாவிடம் இருந்து நிதியுதவி கிடைத்தமை அதிஷ்டமானது என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்- இந்தியா இப்படியான உதவியை வழங்கியது இதுவே முதல் முறை என்பதால், அது முக்கியமானது. இதனால், அந்த உதவி பற்றி தெரிவிக்க வேண்டிய கடமை அரசாங்கத் திற்கு இருக்கின்றது.

இந்தியாவின் இந்த உதவி தொடர்பாக நாட்டில் பல கதைகள் பரவி வருகின்றன. இதனால், வெளிவிவகார அமைச்சரோ, நிதியமைச்சரோ இந்த விடயம் தொடர்பாக தெளிவுப்படுத்த வேண்டியது அவர்களின் முக்கிய கடமை.

கஷ்டமான சந்தர்ப்பத்தில் நாட்டுக்கு உதவி செய்த பங்களாதேஷ் நாட்டுக்கும் நன்றியை தெரிவிக்கிறேன் என்றார்.

Posted in Uncategorized

அமெரிக்க தூதுக்குழு இலங்கை வருகை

அமெரிக்க அரசியல் வி வ கா ர ங் க ளு க் கா ன துணைச் செயலாளர் விக் டோரியா நுலண்ட் உட்பட ஐந்து பேர் கொண்ட தூதுக் குழுவினர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தடைந்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இந்தத் தூதுக்குழுவினர் நேற்று மாலை நாட்டை வந்தடைந்தனர். இவர்கள் இங்கு முக்கிய சந்திப்புக் களில் ஈடுபடவுள்ளனர்.

Posted in Uncategorized

கோட்டாவின் சூழ்ச்சித் திட்டத்தை தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்கு அவசர அவசரமாக நாள் குறித்து நேரம் தீர்மானித்து கோட்டாபய ராஜபக்ச விரித்துள்ள சூழ்ச்சித் திட்டத்தை தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும் என்பதை அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை உரிமையுடன் வலியுறுத்திக்கொள்கின்றோம்.

சிறிலங்காவின் சனாதிபதி அழைத்தவுடன் வரிந்து கட்டிக்கொண்டு செல்வதற்கு இந்த விடயமானது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகளின் குடும்ப விவகாரம் அல்ல. இலங்கையில் இருந்து வெள்ளையர்கள் வெளியேறிய காலத்தல் இருந்து திட்டமிட்ட ஒடுக்கு முறைகளைத் தொடர்ச்சியாக அனுபவித்து வரும் ஒரு தேசிய இனத்தின் இருப்புச் சம்பந்தமான பிரச்சினை.

தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளையும், நீதிக்கான கோரிக்கைகளையும் எதேச்சதிகார மனப்போக்கில் ஒட்டுமொத்தமாகவே நிராகரிப்பதுடன் நின்றுவிடாது திட்டமிட்ட இனவழிப்பு யுத்தத்தை ஆட்சி-அதிகார துணையுடன் வடக்கு, கிழக்கில் முழுவீச்சுடன் தொடர்ந்துவருவதுடன், தன்னை பௌத்த – சிங்கள மக்களின் தலைவனாகவே பகிரங்கமாக பிரகடனப்படுத்திவரும் இலங்கையின் இன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சூழ்ச்சித் திட்டமே பேச்சுக்கான அழைப்பாகும்.

அனைத்துலக ரீதியாக எழுந்துவரும் நேரடி, மறைமுக அழுத்தங்களில் இருந்து தப்பிக்கும் சூழ்ச்சித் திட்டதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஈழத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கும் தலைமைகள் அனைவரும் ஒன்றுபட்டு ஓரணியாக செயற்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் மற்றும் கோரிக்கைகள் யாதென கோட்டா அன் கோவுக்கு நன்றாகவே தெரியும். அதனை எடுத்துச் சொல்வதற்காக இந்த சந்தரப்பத்தை பயன்படுத்த உள்ளோம் என்ற பேரில் கோட்டாவுடனான சந்திப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நியாயப்படுத்த முனைவது வாக்களித்த மக்களை ஏமாற்றி கழுத்தறுக்கும்செயலாகும்.

ஈழத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வை நோக்கிய முன்னெடுப்பு எதுவாக இருப்பினும், ஈழத்தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே அரசியல் செய்வதாக கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் செயற்பட்டுவரும் அனைவரும் ஓரணியாக செயற்படுவதன் மூலமே அவர்களது கூற்றை அர்த்தப்படுத்த முடியும்.

ஆகவே, அனைத்துலக அழுத்தங்கள், நெருக்கடிகளில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ளும் ஒரே நோக்கத்திற்காக கோட்டா விடுத்துள்ள பேச்சுக்கான அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடனடியாக மறுக்க வேண்டும் என்பதுடன், ஈழத் தமிழ் மக்களின் தீர்வு விடயம் தொடர்பான எந்த பேச்சுவார்தைகளாக இருந்தாலும் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகளுடனும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் அமைப்புகளுடனும் இணைந்ததாகவே அமையவேண்டும். கல்லோயா குடியேற்றத் திட்டம் முதல் இன்றுவரை வரலாறு கற்றுத்தந்த பெரும் படிப்பினையூடாக சம்பந்தனும் சுமந்திரனும் இன்னும் கற்றுக்கொளவில்லை என்றால் இவர்கள் தங்கள் இருப்பிற்காக ஈழத்தமிழர்களை சிங்களத்திடம் அடகுவைக்கிறார்கள் என்பதே நிதர்சனம்.

பௌத்த – சிங்கள மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றவும், அவர்களது உரிமைகளை பாதுகாக்கவுமாக பகிரங்க பிரகடனம் செய்துள்ள கோட்டாபய ராஜபக்சவிடம் தமிழ் மக்களுக்கான தீர்வை எதிர்பார்ப்பது கேலிக்கூத்தான விடயம்  என்பதுடன் எங்களை நாங்களே ஏமாற்றும் செயலாகும். இன்று வரை ஒரு நல்லெண்ண சமிக்ஞையைக் கூட காட்டாமல் தொடர்ச்சியாக தமிழர் பூர்வீக பிரதேசங்களில் புத்தமயமாக்கலைத் தொடரும் பேரினவாத சிங்கள அரசுடன் என்றுமே பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்வு காணமுடியாது.

இலங்கைத் தீவின் ஆதி குடிகள் என்ற உரித்தின் அடிப்படையில் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஏற்றுக் கொண்டு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கு தயாராக உள்ளமையை வெளிப்படுத்தும் சமிக்ஞைகளை செயற்பாட்டு ரீதியாக கோட்டாபய அரசு காட்டிய பின்னரே தமிழ்த் தரப்பு பேச்சு தொடர்பில் சிந்திக்க முடியும் என்ற செய்தியை இடித்துரைத்து கோட்டாவின் சூழ்ச்சித் திட்டத்தை முறியடிக்குமாறு அன்புரிமையுடன் கேட்டுநிற்கின்றோம்.

Posted in Uncategorized

ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி மாநாடு இன்று!

பொருளாதார நெருக்கடி தொடர்பான சர்வ கட்சி மாநாடு இன்று(23) கொழும்பில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில், ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சில கட்சிகள் இதில் கலந்துகொள்வதில்லை என அறிவித்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளே மாநாட்டில் பங்கேற்பதில்லை என அறிவித்துள்ளன.

எனினும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பன கலந்துகொள்ளும்.

இதனிடையே, ஜனாதிபதி தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று(22) நடைபெற்றது.

Posted in Uncategorized

இந்தியா வழங்கிய கடனை தேர்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தத் திட்டம்?

இலங்கைக்கு இந்தியா வழங்கிய கடனை தொகையை ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரசாரங்களுக்கு பயன்படுத்தும் ஆயத்தம் இடம்பெறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார்.

14,000 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு, ‘ஹோம் சொப்’ என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி, அதற்காக 8 இலட்சம் ரூபாவை வழங்கி, பொதுஜன முன்னணி உறுப்பினர்களுக்கு 2000 ரூபா கூப்பன் மூலம் இந்தியாவினால் வழங்கப்பட்ட ஒரு பில்லியன் கடனை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தும் திட்டமொன்று உள்ளதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி – மேலும் 10 பேர் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு இடம்பெயர்வு

பட்டினிச்சாவுக்குப் பயந்து நடுக்கடலில் சுமார் 37 மணிநேரம் உயிருக்குப் போராடி குழந்தைகளுடன் வவுனியாவிலிருந்து தனுஷ்கோடியில் பலர் அகதிகளாய் தஞ்சமடைந்துள்ளனர்.இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களான குழந்தைகளுக்கான பால்மா, அரிசி, பருப்பு, கோதுமை, மண்ணெய், டீசல், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகாளக செல்லத் தொடங்கியுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை காலை ஒன்பது மணியளவில் மன்னார் மாவட்ட கடற்கரையில் இருந்து தனது சொந்த பைபர் படகில் ஐந்து குழந்தைகள், மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள் என இரண்டு குடும்பத்தை சேர்ந்த 10 பேர் தனுஷ்கோடிக்கு சென்றுள்ளனர்.நடுக்கடலில் படகின் இஞ்சினில் ஏற்பட்ட பழுது காரணமாக கடும் வெயிலில் உணவு, தண்ணீர் இன்றி சுமார் 37 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தைகளுடன் நடுக்கடலில் தத்தளித்தளித்த நிலையில் பல மணி நேர முயற்சிக்குப் பின் இஞ்சின் சரி செய்து நேற்று இரவு எட்டு மணியளவில் தனுஷ்கோடி வடக்குப் பாலம் மீன்பிடி துறைமுகத்தை அடைந்தனர்.

தற்போது உணவு பஞ்சத்தால் பட்டினிசாவுக்கு பயந்து குழந்தைகளோடு மீண்டும் இரண்டாவது முறையாக அகதிகளாக தனுஸ்கோடி வந்துள்ளதாகவும், இலங்கையில் தற்போது உள்ள சூழ்நிலையில் இலங்கை தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கானோர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைய உள்ளதாகவும், எரிபொருள் தட்டுபாட்டால் வரமுடியாமல் அவதியுற்று வருவதாக் தமிழக்ததிற்கு அகதிகளாக சென்றவர்கள் தெரிவித்தனர்.தொடர்ந்து நேற்று காலை முதல் இரவு வரை 16 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு சென்றுள்ளனர்.

இதேவேளை யுத்தத்தால் உயிர்க்கு பயந்து அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்த நிலையில், தற்போது பட்டிணிச்சாவுக்கு பயந்து நடுக்கடலில் சுமார் 37 மணி நேரம் உயிருக்கு போராடி குழந்தைகளுடன் தனுஸ்கோடிக்கு வந்துள்ளதாக வவுனியாவிலிருந்து அகதிகளாய் சென்றுள்ளவர்கள் தெரிவித்தனர்.