அமெரிக்க தூதுக்குழு இலங்கை வருகை

அமெரிக்க அரசியல் வி வ கா ர ங் க ளு க் கா ன துணைச் செயலாளர் விக் டோரியா நுலண்ட் உட்பட ஐந்து பேர் கொண்ட தூதுக் குழுவினர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தடைந்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இந்தத் தூதுக்குழுவினர் நேற்று மாலை நாட்டை வந்தடைந்தனர். இவர்கள் இங்கு முக்கிய சந்திப்புக் களில் ஈடுபடவுள்ளனர்.

Posted in Uncategorized

கோட்டாவின் சூழ்ச்சித் திட்டத்தை தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்கு அவசர அவசரமாக நாள் குறித்து நேரம் தீர்மானித்து கோட்டாபய ராஜபக்ச விரித்துள்ள சூழ்ச்சித் திட்டத்தை தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும் என்பதை அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை உரிமையுடன் வலியுறுத்திக்கொள்கின்றோம்.

சிறிலங்காவின் சனாதிபதி அழைத்தவுடன் வரிந்து கட்டிக்கொண்டு செல்வதற்கு இந்த விடயமானது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகளின் குடும்ப விவகாரம் அல்ல. இலங்கையில் இருந்து வெள்ளையர்கள் வெளியேறிய காலத்தல் இருந்து திட்டமிட்ட ஒடுக்கு முறைகளைத் தொடர்ச்சியாக அனுபவித்து வரும் ஒரு தேசிய இனத்தின் இருப்புச் சம்பந்தமான பிரச்சினை.

தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளையும், நீதிக்கான கோரிக்கைகளையும் எதேச்சதிகார மனப்போக்கில் ஒட்டுமொத்தமாகவே நிராகரிப்பதுடன் நின்றுவிடாது திட்டமிட்ட இனவழிப்பு யுத்தத்தை ஆட்சி-அதிகார துணையுடன் வடக்கு, கிழக்கில் முழுவீச்சுடன் தொடர்ந்துவருவதுடன், தன்னை பௌத்த – சிங்கள மக்களின் தலைவனாகவே பகிரங்கமாக பிரகடனப்படுத்திவரும் இலங்கையின் இன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சூழ்ச்சித் திட்டமே பேச்சுக்கான அழைப்பாகும்.

அனைத்துலக ரீதியாக எழுந்துவரும் நேரடி, மறைமுக அழுத்தங்களில் இருந்து தப்பிக்கும் சூழ்ச்சித் திட்டதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஈழத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கும் தலைமைகள் அனைவரும் ஒன்றுபட்டு ஓரணியாக செயற்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் மற்றும் கோரிக்கைகள் யாதென கோட்டா அன் கோவுக்கு நன்றாகவே தெரியும். அதனை எடுத்துச் சொல்வதற்காக இந்த சந்தரப்பத்தை பயன்படுத்த உள்ளோம் என்ற பேரில் கோட்டாவுடனான சந்திப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நியாயப்படுத்த முனைவது வாக்களித்த மக்களை ஏமாற்றி கழுத்தறுக்கும்செயலாகும்.

ஈழத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வை நோக்கிய முன்னெடுப்பு எதுவாக இருப்பினும், ஈழத்தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே அரசியல் செய்வதாக கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் செயற்பட்டுவரும் அனைவரும் ஓரணியாக செயற்படுவதன் மூலமே அவர்களது கூற்றை அர்த்தப்படுத்த முடியும்.

ஆகவே, அனைத்துலக அழுத்தங்கள், நெருக்கடிகளில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ளும் ஒரே நோக்கத்திற்காக கோட்டா விடுத்துள்ள பேச்சுக்கான அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடனடியாக மறுக்க வேண்டும் என்பதுடன், ஈழத் தமிழ் மக்களின் தீர்வு விடயம் தொடர்பான எந்த பேச்சுவார்தைகளாக இருந்தாலும் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகளுடனும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் அமைப்புகளுடனும் இணைந்ததாகவே அமையவேண்டும். கல்லோயா குடியேற்றத் திட்டம் முதல் இன்றுவரை வரலாறு கற்றுத்தந்த பெரும் படிப்பினையூடாக சம்பந்தனும் சுமந்திரனும் இன்னும் கற்றுக்கொளவில்லை என்றால் இவர்கள் தங்கள் இருப்பிற்காக ஈழத்தமிழர்களை சிங்களத்திடம் அடகுவைக்கிறார்கள் என்பதே நிதர்சனம்.

பௌத்த – சிங்கள மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றவும், அவர்களது உரிமைகளை பாதுகாக்கவுமாக பகிரங்க பிரகடனம் செய்துள்ள கோட்டாபய ராஜபக்சவிடம் தமிழ் மக்களுக்கான தீர்வை எதிர்பார்ப்பது கேலிக்கூத்தான விடயம்  என்பதுடன் எங்களை நாங்களே ஏமாற்றும் செயலாகும். இன்று வரை ஒரு நல்லெண்ண சமிக்ஞையைக் கூட காட்டாமல் தொடர்ச்சியாக தமிழர் பூர்வீக பிரதேசங்களில் புத்தமயமாக்கலைத் தொடரும் பேரினவாத சிங்கள அரசுடன் என்றுமே பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்வு காணமுடியாது.

இலங்கைத் தீவின் ஆதி குடிகள் என்ற உரித்தின் அடிப்படையில் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஏற்றுக் கொண்டு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்கு தயாராக உள்ளமையை வெளிப்படுத்தும் சமிக்ஞைகளை செயற்பாட்டு ரீதியாக கோட்டாபய அரசு காட்டிய பின்னரே தமிழ்த் தரப்பு பேச்சு தொடர்பில் சிந்திக்க முடியும் என்ற செய்தியை இடித்துரைத்து கோட்டாவின் சூழ்ச்சித் திட்டத்தை முறியடிக்குமாறு அன்புரிமையுடன் கேட்டுநிற்கின்றோம்.

Posted in Uncategorized

ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி மாநாடு இன்று!

பொருளாதார நெருக்கடி தொடர்பான சர்வ கட்சி மாநாடு இன்று(23) கொழும்பில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில், ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சில கட்சிகள் இதில் கலந்துகொள்வதில்லை என அறிவித்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளே மாநாட்டில் பங்கேற்பதில்லை என அறிவித்துள்ளன.

எனினும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பன கலந்துகொள்ளும்.

இதனிடையே, ஜனாதிபதி தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று(22) நடைபெற்றது.

இந்தியா வழங்கிய கடனை தேர்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தத் திட்டம்?

இலங்கைக்கு இந்தியா வழங்கிய கடனை தொகையை ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரசாரங்களுக்கு பயன்படுத்தும் ஆயத்தம் இடம்பெறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினார்.

14,000 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு, ‘ஹோம் சொப்’ என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி, அதற்காக 8 இலட்சம் ரூபாவை வழங்கி, பொதுஜன முன்னணி உறுப்பினர்களுக்கு 2000 ரூபா கூப்பன் மூலம் இந்தியாவினால் வழங்கப்பட்ட ஒரு பில்லியன் கடனை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தும் திட்டமொன்று உள்ளதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி – மேலும் 10 பேர் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு இடம்பெயர்வு

பட்டினிச்சாவுக்குப் பயந்து நடுக்கடலில் சுமார் 37 மணிநேரம் உயிருக்குப் போராடி குழந்தைகளுடன் வவுனியாவிலிருந்து தனுஷ்கோடியில் பலர் அகதிகளாய் தஞ்சமடைந்துள்ளனர்.இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களான குழந்தைகளுக்கான பால்மா, அரிசி, பருப்பு, கோதுமை, மண்ணெய், டீசல், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகாளக செல்லத் தொடங்கியுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை காலை ஒன்பது மணியளவில் மன்னார் மாவட்ட கடற்கரையில் இருந்து தனது சொந்த பைபர் படகில் ஐந்து குழந்தைகள், மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள் என இரண்டு குடும்பத்தை சேர்ந்த 10 பேர் தனுஷ்கோடிக்கு சென்றுள்ளனர்.நடுக்கடலில் படகின் இஞ்சினில் ஏற்பட்ட பழுது காரணமாக கடும் வெயிலில் உணவு, தண்ணீர் இன்றி சுமார் 37 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தைகளுடன் நடுக்கடலில் தத்தளித்தளித்த நிலையில் பல மணி நேர முயற்சிக்குப் பின் இஞ்சின் சரி செய்து நேற்று இரவு எட்டு மணியளவில் தனுஷ்கோடி வடக்குப் பாலம் மீன்பிடி துறைமுகத்தை அடைந்தனர்.

தற்போது உணவு பஞ்சத்தால் பட்டினிசாவுக்கு பயந்து குழந்தைகளோடு மீண்டும் இரண்டாவது முறையாக அகதிகளாக தனுஸ்கோடி வந்துள்ளதாகவும், இலங்கையில் தற்போது உள்ள சூழ்நிலையில் இலங்கை தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கானோர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைய உள்ளதாகவும், எரிபொருள் தட்டுபாட்டால் வரமுடியாமல் அவதியுற்று வருவதாக் தமிழக்ததிற்கு அகதிகளாக சென்றவர்கள் தெரிவித்தனர்.தொடர்ந்து நேற்று காலை முதல் இரவு வரை 16 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு சென்றுள்ளனர்.

இதேவேளை யுத்தத்தால் உயிர்க்கு பயந்து அகதிகளாக தமிழகத்தில் தஞ்சமடைந்த நிலையில், தற்போது பட்டிணிச்சாவுக்கு பயந்து நடுக்கடலில் சுமார் 37 மணி நேரம் உயிருக்கு போராடி குழந்தைகளுடன் தனுஸ்கோடிக்கு வந்துள்ளதாக வவுனியாவிலிருந்து அகதிகளாய் சென்றுள்ளவர்கள் தெரிவித்தனர்.

Posted in Uncategorized

சர்வக்கட்சி மாநாடு! – ஹக்கீம், ரிசாத் புறக்கணிப்பு

நாளை இடம்பெறும் சர்வ கட்சி மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என்ற தீர்மானத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று எடுத்துள்ளது.

இன்று இரவு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அதியுயர்பீடக் கூட்டம் இடம்பெற்றபோதே இந்தத்தீர்மானம் எடுக்கப்பட்டது. Zoom தொழில்நுட்பத்தினூடாகவே இந்த உயர்பீடக் கூட்டம் இடம்பெற்றதாக கட்சியின் செயலாளர் நாயகம் எஸ். சுபைர்தீன் தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் கடந்த காலங்களில் சர்வகட்சி மாநாட்டின் அவசியம் தொடர்பில் இந்த அரசாங்கத்திற்கு சிறுபான்மைக் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுருத்தி வந்த போதும் இந்த அரசாங்கம் இது தொடர்பில் எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அரசாங்கம் தன்னுடைய பிரச்சினைகளை இந்த சந்தர்ப்பத்தில் மூடி மறைத்துக்கொள்வதற்காகவே இந்த சர்வகட்சி மாநாட்டை கூட்டுவதற்கு முனைந்திருப்பது தொடர்பிலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் நாளைய கூட்டத்தில் கலந்துகொள்வதில்லை என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எஸ். சுபைர்தீன் தெரிவித்தார்.

இதேவேளை, நாளை (23) நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் தமது கட்சிகள் கலந்து கொள்ளாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் அறிவித்துள்ளார்.

அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலண்ட் உள்ளிட்ட குழுவினர் இலங்கை வருகை

இலங்கை அரசாங்கத்துடனும் அதேபோல், வர்த்தக மற்றும் சிவில் சமூகத் தலைவர்களுடனுமான சந்திப்புகளின் நிமித்தம் அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் விக்டோரியா நூலண்ட் பல்வேறு முகவரமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய தூதுக்குழுவொன்றுடன் கொழும்பை வந்தடைந்துள்ளார்.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ, இந்தோ- பசுபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான முதன்மை பிரதி உதவி பாதுகாப்பு செயலாளர் அமண்டா டோரி உள்ளிட்டோர் இந்த தூதுக்குழுவின் ஏனைய சிரேஷ்ட உறுப்பினர்களில் அடங்குகின்றனர்.

ஜனநாயக நிறுவனங்களை பலப்படுத்தல், மனித உரிமைகள், நிலையான பொருளாதார அபிவிருத்தி, காலநிலை மாற்றத்தைத் தணித்தல், வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்தல், பிராந்திய பாதுகாப்பு, மற்றும் கல்வி சம்பந்தமான கூட்டுறவு போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தவுள்ள நான்காவது அமெரிக்க – இலங்கை பங்காண்மை உரையாடலுக்கு (U.S.-Sri Lanka Partnership Dialogue) துணை இராஜாங்க செயலாளர் நூலண்டும் இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் காமினி லக்ஷ்மன் பிரிஸும் இணை- தலைமை வழங்கவுள்ளனர்.

உலகளாவிய தொற்றுப்பரவலால் ஏற்பட்டுள்ள சவால்கள் பற்றியும் அமெரிக்க – இலங்கை பங்காண்மையை பலப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் கலந்துரையாடும் நிமித்தம் துணை இராஜாங்க செயலாளர் நூலண்ட், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே. சங் மற்றும் அமெரிக்க தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளனர்.

அனைத்து இலங்கையர்களும் செழிப்படையக்கூடிய சூழலொன்றை உருவாக்குவதில் சிவில் சமூக மற்றும் தனியார்துறை பிரதிநிதிகளின் முக்கிய வகிபாகங்கள் குறித்து கலந்துரையாடும் நிமித்தம் அவர்களையும் துணை இராஜாங்க செயலாளர் நூலண்ட் உள்ளிட்ட அமெரிக்க தூதுக் குழுவினர் சந்தித்து பேசவுள்ளனர்.

Posted in Uncategorized

பயங்கரவாதத் தடை தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலம் நிறைவேறியது – பிள்ளையான், திலீபன் ஆதரவு !!

சிவநேசதுரை சந்திரகாந்தன், திலீபன் ஆகியோரின் ஆதரவுடன் பயங்கரவாதத் தடை தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு திருத்தங்களுடன் நிறைவேறியது.

குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 86 வாக்குகளும் எதிராக 35 வாக்குகளும் நாடாளுமன்றில் கிடைத்தன.

இதனை அடுத்து பயங்கரவாதத் தடை தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 51 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்ததுடன் அச்சட்டம் குறித்து இன்று நாடாளுமன்றில் கடும் அதிருப்தியும் வெளியிட்டன.

இதனையடுத்து குழுநிலை அமர்வின்போது திருத்தங்கள் செய்யப்பட்ட நிலையில் திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதாக பிரதி சபாநாயகர் அறிவித்தார்.

கொண்டு வரப்பட்ட திருத்தம் போதுமானதல்ல, அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டம் ரத்துச்செய்யப்படவேண்டும் என்ற அடிப்படையில் திருத்தத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பன வாக்கெடுப்பை கோரின.

இதனையடுத்து பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டார்.

இருப்பினும் குறித்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பங்குபற்றவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி போராடிய ரெலோ யாழ் மாவட்ட தலைவர் விசாரணைக்கு அழைப்பு

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தினை திறந்து வைத்த நிலையில், அங்கு காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார்களுடன் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் மற்றும் சாவகச்சேரி பிரதேச சபையின் உப தவிசாளர் செல்வரட்ணம் மயூரன் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தமக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் நாளை மறுதினம் வியாழக்கிழமை (24 ஆம் திகதி) காலை 9 மணிக்கு நுணாவிலில் உள்ள சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைகளுக்காக சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் யாழ். விஜயத்தின் போது காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக மட்டுவில் பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.

அவ்வாறாக வருகை தந்த தாய்மாரை பொலிசாரும் இராணுவத்தினரும் கடுமையாக தாக்குவதை அறிந்து அப் பகுதிக்குச் சென்ற வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் நிரோஷ் உள்ளிட்டவர்கள், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினருடன் இணைந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதிகோரியும் தாய்மார் தாக்கப்பட்டதை கண்டித்தும் பொருளாதார மத்திய நிலைய வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் அங்கு பதாதைகள் எரிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பொலிசாரினால் வலி. கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் நிரோஷ் உள்ளிட்டவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் கண்காணிப்பு பணியில் இராணுவத்தினர் – இலங்கையில் தொடரும் இராணுவமயமாக்கல்!

எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கருகில் இராணுவத்தினரை கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன் அதிருப்பதி வெளியிட்டுள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கருகில் இராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிலாந்த பிரேமரத்ன இன்று தெரிவித்திருந்தார்.

அதற்கமைய ஒவ்வொரு எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கருகில் இரு இராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் கூறியிருந்தார்.

இந்நிலையில் நாட்டில் இராணுவமயமாக்கல் என்பது பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான இந்த அரசாங்கத்தின் உத்தி என அம்பிகா சற்குணநாதன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“போருக்குப் பிந்தைய இராணுவமயமாக்கல், குறிப்பாக 1வது ராஜபக்ச ஆட்சியின் போது வடக்கு மற்றும் கிழக்கில் அதிகரித்தது. யஹபாலன அரசாங்கத்தின் போது 2019 நவம்பருக்குப் பின்னர் இராணுவமயமாக்கல் தீவிரப்படுத்தப்படவில்லை.

தற்போது, பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12வது பிரிவின் மூலம் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாக்க ஆயுதப் படைகளுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் ஜனாதிபதி ஒவ்வொரு மாதமும் வர்த்தமானியை வெளியிட்டு வருகிறார்.

கடைசியாக 21 மார்ச் 2022 இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சிறைச்சாலைகள் மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாடு, தடுப்புக்காவல் & புனர்வாழ்வு ஆகியவற்றின் இராணுவமயமாக்கலையும் நாங்கள் கண்டுள்ளோம், இவை அனைத்தும் உரிமை மீறல்களில் விளைந்துள்ளன.” என அவர் கூறியுள்ளார்.