சட்டத்தரணி-அம்பிகா சற்குணநாதனுக்கு பொது அமைப்புக்கள் ஆதரவு!

மனித உரிமை மீறல்கள் தொடர்பில், மனித உரிமைகள் சட்டத்தரணி- அம்பிகா சற்குணநாதனின் கருத்துக்களுக்கு இலங்கையின் பொது அமைப்புக்கள் தமது ஆதரவை வெளியிட்டுள்ளன.

இலங்கையின் வெளியுறவு அமைச்சு, அம்பிகா சற்குணநாதனின் கருத்துக்கள் தொடர்பில் விமர்சனங்களை வெளியிட்ட நிலையிலேயே பொது அமைப்புக்கள், சற்குணநாதனுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.

161 தனிப்பட்டவர்கள் மற்றும் 47 அமைப்புக்கள் இணைந்த வலையமைப்பே இந்த ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.

அம்பிகா சற்குணநாதன், தமது சொந்தக்கருத்தையே ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் தொடர்பான ஆணைக்குழுவுக்கு வழங்கியிருந்ததாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு, தமது விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தது.

இந்தநிலையில், இலங்கை வெளியுறவு அமைச்சின் விமர்சனம், பேச்சு சுதந்திரத்துக்கு எதிரான விடயம் என்று பொது அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.

அத்துடன் பொதுதுறையினரை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடாக தாம் இதனை கருதுவதாகவும் அந்த அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

ஒரு தமிழ் ஆய்வாளரின் சுதந்திரமான வாதத்தை விடுதலைப்புலிகளின் கூற்றுக்களுடன், இலங்கையின் வெளியுறவு அமைச்சு ஒப்பிடுவது தேவையற்றது என்றும் குறித்த அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.

அதேநேரம் தொடர்ந்தும் பொது அமைப்புக்களின் மற்றும் மனித உரிமை ஆரவலர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளை அரசாங்கம் நிறுத்தவேண்டும் என்று இலங்கையின் பொது அமைப்புக்கள் கோரியுள்ளன.

வேலைநிறுத்தங்களை தடை செய்வதற்கான சட்டங்களை இயற்ற ஜனாதிபதி ஒப்புக்கொள்கிறாரா?

வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமையை அரசியலமைப்புச் சட்டத்தில் தடை செய்ய வேண்டும் என நீதியமைச்சர் கூறியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தொழிற்சங்கங்கள், அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் ஜனாதிபதி விளக்கமளிக்க வேண்டுமென கோரியுள்ளன.

தனியார் வானொலி ஒன்றின் நிகழ்ச்சி ஒன்றில் கடந்த 27ஆம் திகதி கலந்து கொண்ட நீதி அமைச்சர் அலி சப்ரி வேலைநிறுத்தங்களை தடை செய்வது தொடர்பான சட்டங்களும் ஒழுங்குகளும் அரசியலமைப்பில் இடம்பெற வேண்டும் என தெரிவித்திருந்தார்.

”தற்போதைய அரசாங்கத்தில் ஐந்து வருடங்களுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் அலி சப்ரி, தற்போதைய அரசாங்கத்தில் நீதி அமைச்சர் என்ற ரீதியில் அரசியலமைப்பினால் பாதுகாக்கப்பட வேண்டிய அரசாங்கத்தின் இறைமையைப் பாதுகாப்பது அவரது பொறுப்பு என்பதை நினைவுபடுத்துகின்றோம். ” என 21 தொழிற்சங்கங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய பொது சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் ஒரு ஒரு அறிக்கை ஊடாக தெரிவித்துள்ளது.

வேலைநிறுத்த உரிமை என்பது உழைக்கும் மக்களுக்குக் கிடைத்த ஒரு வரலாற்று ரீதியிலான உலகளாவிய வெற்றியாகும். இன்று உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள் அனுபவிக்கும் உரிமைகள் மற்றும் சலுகைகள், ஜனநாயக உரிமைகள் அனைத்தும் இரத்தம், கண்ணீர் மற்றும் வியர்வையின் மீது கிடைத்த வெற்றிகள் என இணை அழைப்பாளர்களான சில்வெஸ்டர் ஜெயக்கொடி மற்றும் ரஞ்சன் சேனாநாயக்க ஆகியோர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம், சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) 1948 இன் 87ஆவது சாசனம் மற்றும் 1949 இன் 98ஆவது சாசனம் ஆகியன, உலக உழைக்கும் மக்களின் ஒன்றுகூடும் உரிமை மற்றும் கூட்டு பேரம் பேசுவதற்கான உரிமையை அடிப்படை உரிமைகளாக உறுதிப்படுத்தியுள்ளன. 1978 இலங்கை அரசியலமைப்பின் III அத்தியாயத்தின் 14-1ஆவது பிரிவு, எந்தவொரு குடிமகனுக்கும் ஒரு தொழிற்சங்கத்தை ஒழுங்கமைப்பதற்கும் சேருவதற்கும் சுதந்திரத்தை முழுமையாக உறுதிப்படுத்துகிறது.

பொதுச் சொத்துக்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையம், 1935ஆம் ஆண்டின் தொழிற்சங்க கட்டளைச் சட்டம் தொழிற்சங்கங்களை அமைத்து செயற்படுத்துவதற்கு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதாக பொதுச் சொத்துக்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் வலியுறுத்தியுள்ளது. அமைச்சர் சப்ரியின் இந்த ‘திமிர்த்தனமான அறிக்கை’ அதிகாரத்தின் மூலம் தன்னிச்சையாகவும் கண்மூடித்தனமாகவும் செயல்படுவதையே காட்டுகிறது.

ஜனநாயகத்தின் பெயரால் அதை அகற்ற வேண்டுமென தொழிற்சங்கத் தலைவர்கள் கோருகின்றனர். இந்த அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோருவதோடு, மக்களின் இறையாண்மையை துஷ்பிரயோகம் செய்ய முற்படும் இத்தகைய அமைச்சர்கள் உள்ளிட்ட பிற்போக்கு சக்திகளை முறியடிக்க முற்போக்கு சக்திகள் ஒன்றுபட வேண்டுமென பொதுச் சொத்துக்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் கேட்டுக்கொள்கிறது.

இலங்கை வங்கி ஊழியர் சங்கம், இலங்கை வர்த்தக கைத்தொழில் மற்றும் பொது ஊழியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம், தபால் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர் சங்கம், தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அனைத்து ஊழியர் சங்கம், தொலைத்தொடர்பு பொறியியல் டிப்ளோமாதாரிகள் சங்கம், அகில இலங்கை தொலைத்தொடர்பு தொழிற்சங்கம், ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பு, வணிக மற்றும் தொழில்துறை தொழிலாளர் சங்கம், ஊடக தொழிலாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு, ஐக்கிய பொது பணியாளர்கள் சங்கம், சுயேட்சை தொழிலாளர் சங்கம், ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு, காப்பீட்டு தொழிலாளர் சங்கம், உணவு மற்றும் புகையிலை தொழிலாளர்கள் சங்கம், அரசு அச்சுப்பொறியாளர்கள் சங்கம், பொதுச் சொத்துக்கள் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நிலையம், ஊடகவியலாளர்கள் சங்கம், பெண் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம், நிலம் மற்றும் விவசாயச் சீர்திருத்த இயக்கம் மற்றும் பாதுகாப்புச் சங்கம் உள்ளிட்ட 21 சங்கங்களை பொதுச் சொத்துக்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

Posted in Uncategorized

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட 8 பேருக்கு வவுனியா நீதிமன்றம் பிணை

வெடி பொருட்களை தம் வசம் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தில் 2019 ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 பேருக்கு வவுனியா நீதிமன்றம் இன்று (07) பிணை வழங்கியுள்ளது.

2019 ஆம் ஆண்டு முதலாம் மாதம் 5 ஆம் திகதி புளியங்குளம் காவல்துறையினரால் கிளைமோர் குண்டை வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 3 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இதில் 9 ஆவது சந்தேக நபரான ஆனந்தராஜா என்பவர் கைது செய்யப்படாத நிலையில் திறந்த பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த 8 பேருக்கும் ஆதரவாக சி எச் ஆர் டி நிறுவனம் சட்ட உதவியை வழங்கியிருந்தது.

இந் நிறுவனத்தின் ஊடாக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கலும் செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஆலோசனை சபை குறித்த விடயம் விசாரணைக்காக பாரப்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இதன் பலனாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் 7/1 பிரிவின் பிரகாரம் சட்டமா அதிபரினால் பிணையில் விடுவிப்பதற்கான சம்மத கடிதம் நீதிமன்றத்திற்கு அனுப்பட்டிருந்தது.

இந்நிலையில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் சார்பில் வவுனியா நீதிமன்றத்தில் சட்டத்தரணி செ. கேதீஸ்வரன் ஆஜராகி குறித்த கடிதம் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதன் பிரகாரம் 8 பேரும் இன்று பதில் நீதிபதி க. தயாபரனால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

Posted in Uncategorized

கிழக்கு மாகாண பிரதம செயலாளராக, துசித்த பி. வனிகசிங்க நியமனம்

கிழக்கு மாகாண பிரதம செயலாளராக, துசித்த பி. வனிகசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து அவர் நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

இலங்கை நிர்வாகச் சேவையின் சிரேஷ்ட அதிகாரியான துசித்த பி. வனிகசிங்க, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களின் செயலாளராகக் கடமையாற்றியுள்ளதுடன், அரச நிறுவனங்கள் பலவற்றிலும் பல்வேறு பதவிநிலைகளை வகித்தவராவார்.

இதற்கு முன்னர் 2019 டிசெம்பர் மாதத்தில், கிழக்கு மாகாண பிரதம செயலாளராக அவர் பதவியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கை – இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துரையாடல்

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

புது டெல்லியில் இன்று இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது இலங்கையில் இந்தியாவின் பொருளாதார மற்றும் முதலீட்டு முயற்சிகள் குறித்தும், எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மீனவர்கள் விவகாரம் குறித்தும், இருதரப்பு பொறிமுறைகளை முன்கூட்டியே மேற்கொள்வது தொடர்பாகவும் இச்சந்திப்பில் பேசப்பட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, வெளிவிவகார அமைச்சர் பீரிஸுடன், இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் டெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

Posted in Uncategorized

47 உறுப்பு நாடுகளிற்கான கடிதத்தில் 13ஐ கோராமை சம்பந்தனின் பெருந்தவறு என்கின்றார் ஜயதிலக்க

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அதில் 13 ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தாது பெருந்தவறிழைத்து விட்டார் என்று கலாநிதி.தயான் ஜயத்திலக்க வீரகேசரியிடம் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

13 ஆவது திருத்தச்சட்டத்தினை மையப்படுத்தி பிரதமர் மோடிக்கு ஆறு தமிழ்க் கட்சிகளின் ஏழு தலைவர்கள் இணைந்து கடிதம் அனுப்பி சொற்ப நாட்களில் இவ்விதமாக சம்பந்தன் செயற்பட்டுள்ளமையானது முரண்நகையாக உள்ளதாக சுட்டிக்காட்டியதோடு இதனால் 13 ஆவது திருத்தச்சட்டத்தினை அரசாங்கம் புதிய அரசியலமைப்பினை பயன்படுத்தி ஒழிக்கும்போது தடுக்க முடியாத நிலைமைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது போகும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், தோற்கடிக்கப்பட்டாலும் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்ச்சியாக இருந்து வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியதோடு அவ்விதமான விடயத்தினை குறிப்பிடாது கடிதமொன்றை அனுப்புவது பயனற்றதாகும் என்றும் கூறியுள்ளார்.

துமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு கடிதம் அனுப்பியமை தொடர்பில் தாயன் ஜயத்திலக்க மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளுக்கும் கடிதமொன்றை அனுப்புவதை நான் தவறு என்று கூறவில்லை. அந்தச் செயற்பாட்டினை தமிழ் மக்களின் தலைவராக அவர் செய்வது மிகவும் பொருத்தமானதொரு விடயமாகும்.

ஆனால், அவர் யதார்த்தமானதொரு விடயத்தினை தவிர்த்து விட்டிருக்கின்றார். 2009ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவான தீர்மானம் வெற்றி பெற்றது. அப்போதும் தீர்மானத்தில் 13ஆவது திருத்தச்சட்டம் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்பின்னர் 2012, 2013, 2014, 2015 (இலங்கைஇணைஅனுசரனை வழங்கியது), 2021 ஆகிய ஆண்டுகளில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் போதும் 13ஆவது திருத்தச்சட்டம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு 13 ஆவது திருத்தச்சட்டம் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் ஆறு தீர்மானங்களில் காணப்படுகின்றது. அந்த ஆறுதீர்மானங்களில் ஒன்று மட்டும் இலங்கைக்கு ஆதரவானது. ஏனையவை எதிரானவை. ஆனால் தொடர்ச்சியாக தீர்மானங்கள் ஆதரவாக வந்தாலும் சரி எதிராக இருந்தாலும் சரி 13ஆவது திருத்தச்சட்ட விடயம் தொடர்ச்சியாக இருந்து வருகின்றது.

அவ்விதமானதொரு விடயத்தினை கவனத்தில் கொள்ளாது விடுவது பொருத்தமற்றது. அதேநேரம், சம்பந்தன் இம்முறை அனுப்பிய கடிதத்திலாவது 13ஆவது திருத்த விடயத்தினை கவனமாக கையாண்டிருக்க வேண்டும். ஏனென்றால் அவர் உள்ளிட்ட ஏழு தமிழ்த் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு 13 ஆவது திருத்தச்சட்டத்தினை வலியுறுத்தி கடிதமொன்றையும் அனுப்பியுள்ளார்கள்.

அவ்விதமாக கடிதம் அனுப்பிய பின்னரும் ஐ.நா.வுக்கு அனுப்பிய கடிதத்தில் 13ஐ குறிப்பிடாது விடுவது பொருத்தமற்றது. ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களில் இந்தியாவின் முயற்சியால் தான் 13ஆவது திருத்தச்சட்டம் உட்புகுத்தப்பட்டுள்ளது என்பதை சம்பந்தன் அறியாதவர் அல்லர். ஆகவே அந்த விடயத்தினை அவர் குறிப்பிடாது விடுகின்றமையானது பாரதூரமான விடயமாகும்.

இதனைவிடவும், தற்போது இந்தியா இலங்கை அரசாங்கத்துக்கு பொருளாதார நிதி உதவிகளை வழங்கியுள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடிகள் மேலும் ஏற்படுகின்றபோது இந்தியாவின் பங்களிப்பு நிச்சயமாக இருக்கப்போகின்றது. இது இலங்கை இந்திய இருதரப்பு உறவுகள் சார்ந்த விடயம்.

ஆனால், இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட போன்றவர்கள் இந்திய அரசாங்கம் கோரும் முதலீட்டு மற்றும் அபிவிருத்தி திட்டங்களை வழங்குவதன் ஊடாக 13ஆவது திருத்தம், அரசியல் தீர்வு உள்ளிட்ட இந்தியாவின் கோரிக்கைகளை நீர்த்துப்போகச் செய்யலாம் என்று கணக்குப்போட்டிருக்கின்றார்கள்.

அதேநேரம், ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் புதிய அரசியலமைப்பில் மாகாண சபை முறைமைகளை நீக்கியுள்ளதாக தெரியவருகின்றது. அவ்வாறான நிலையில் புதிய அரசியலமைப்பில் 13 ஒழிக்கப்பட்டிருக்குமாக இருந்தால் அதன் பின்னர் தமிழர்களுக்கு கிடைக்கப்போவது என்ன ? ஐ.நா.தீர்மானத்தில் 13 குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதனை தமிழ்த் தரப்புக்களே கோராதபோது இலங்கை அரசாங்கம் அதுபற்றி கரிசனை கொள்ளும் என்று கூறவும் முடியாது.

ஆகவே 13 ஆவது திருத்தச்சட்ட விடயத்தினை சம்பந்தன் தனது கடிதத்தில் குறிப்பிடாது பெருந்தவறு இழைத்துவிட்டார். இது சந்தர்ப்பங்களை வலுவிழக்கச் செய்துள்ளது என்றார்.

Posted in Uncategorized

கச்சத்தீவுக்கு தமிழக மீனவர்களை அனுமதிக்க வேண்டும் – தமிழக முதலமைச்சர் கோரிக்கை

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய ஆண்டு திருவிழாவில் பங்கேற்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கை அரசுடன் பிரச்சினையை எடுத்துரைத்து, இவ்விழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க வழிவகை செய்யுமாறு இந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை அவர் வலியுறுத்தியுள்ளார்.

“தமிழ் மீனவர்கள் மற்றும் யாத்ரீகர்கள் கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்துடன் ஆன்மீக மற்றும் உணர்ச்சி ரீதியான தொடர்பைக் கொண்டுள்ளனர், மேலும் பல தசாப்தங்களாக இந்த பாரம்பரிய நிகழ்வில் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தமிழக மீனவர்களுக்கு நிகழ்வில் பங்கேற்க இலங்கை அதிகாரிகளின் மறுப்பு தெரிவித்துள்ளமை மாநிலத்தில் உள்ள மீனவர் சமூகத்தினரிடையே ஆழ்ந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்று வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized

மீனவர்களை மோத விடும் போக்கை இரு நாட்டு அரசுகளும் நிறுத்த வேண்டும்- தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்கம்

சிங்கள இனவாத அரசும் இந்திய அரசும் , ஈழத்தமிழ் மற்றும் தமிழக மீனவர்களை மோதவிடும் போக்கை உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்க தலைவர் ஜெ.கோசுமணி. வலியுறுத்தியுள்ளார்.

“சமீப காலங்களாக ஈழத் தமிழ் மீனவர்களை வைத்து இனவாத அரசின் அமைச்சராக இருக்கக்கூடிய டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்து தமிழ் மீனவர்களை மோதவிடும் போக்கை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்.

ஈழத் தமிழ் மீனவர்கள் மீது, தமிழக மீனவர்கள் படகு மோதி இரண்டு மீனவர்கள் இறந்ததாக சொல்லப்படுகிறது, இதை ஒட்டி இலங்கை வடபகுதி மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சிங்கள இனவாத அரசு, ஈழத்தமிழ் மற்றும் தமிழக மீனவர்களை மோதவிடும் போக்கை உடனடியாக நிறுத்த வேண்டும். இரு நாட்டிற்கும் பகை ஏற்படுத்துகின்ற வகையில் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இரண்டு மீனவர்களையும் மோதவிடும் போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார். இந்த செய்கை என்பது இரண்டு நாட்டு அரசுக்கும் சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதை டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் மீனவ சமூக மக்களை இனத்தின் பெயரால் அழிக்க நினைப்பது மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

இந்திய அரசும் இலங்கை அரசும் மீனவர்கள் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சுமுகமான தீர்வை எட்டுவதற்கான ஒரு முயற்சியை எடுக்க வேண்டுகிறேன். அதேபோன்று தமிழக மீனவர்கள் முடிந்தவரை இலங்கை கடற்பகுதியில் சென்று மீன்பிடிக்க கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். எதிர்கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவுக்கு நாம் வரவேண்டும், இவ்வாறான மோல் போக்கால் பாதிக்கப்படுவது தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழ் மீனவர்களும் இந்திய தமிழ் மீனவர்களும் தான்.

எனவே இரு நாட்டு அரசு இதில் தலையிட்டு ஒரு நிரந்தர மீன்பிடிப்பு முறையில் ஒரு சட்டபூர்வமான வழிவகையை ஏற்படுத்த வேண்டும்” என இலக்கு ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவில் தொடரும் கடத்தல், சித்திரவதைகளை குறிப்பிட தவறிய பிரித்தானிய அமைச்சர்

அண்மையில் சிறிலங்காவுக்கு விஜயம் செய்த பிரித்தானிய அமைச்சரும் பிரபுவுமாகிய அஹமட் அவர்கள், சிறிலங்காவில் தொடரும் சட்டவிரோதமான கைதுகளும் தடுத்துவைப்புக்களும் சித்திரவதைகளும் காணாமற்போதல்களும் பற்றி எந்தவித கருத்தும் தெரிவிக்க தவறியமையை கண்டித்து, தமிழ் அரசியல்வாதிகள் பலர் இணைந்து கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பில் மேலதிக ஆதாரங்களை வழங்க நேரில் சந்திப்பதற்கும் அழைப்புவிடுத்துள்ளனர்.

தெற்கு, மத்திய ஆசியா, ஐக்கிய நாடுகள், மற்றும் பொதுநலவாய நாடுகள் விவகார அமைச்சரும் மோதல்களின் பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கான பிரித்தானியப் பிரதமரின் சிறப்புப் பிரதிநிதியுமான அதி மதிப்பிற்குரிய ரரீக் அஹமட் பிரபு அவர்கள் (The Rt. Hon. Lord (Tariq) Ahmad of Wimbledon) கடந்த மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் செய்து சிறிலங்காவின் ஜனாதிபதி, அமைச்சர்கள், அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகள் என குறிப்பிட்ட சிலரை சந்தித்திருந்தார்.

தாம் எழுதிய கடிதத்தில் சிறிலங்கா காவல்துறைக்குப் பயிற்சி வழங்கும் நடவடிக்கையினை ஸ்கொட்லாந்துக் காவல்துறை நிறுத்தியதை வரவேற்றுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள், இம்முடிவில் மாற்றம் இருக்காது என்று தாம் நம்புவதாகவும் கூறியுள்ளனர். அத்துடன் அண்மையில் சிறிலங்கா காவல்துறையின் தடுப்பில் நடந்த சித்திரவதைகள் மற்றும் மரணங்கள் தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளையும் கோடிட்டுக் காட்டியுள்ளனர். அத்துடன் நாட்டில் உள்ள தமக்கு அங்கு நடக்கும் மனித உரிமைகள் மீறல்கள் பற்றி வெளிப்படையாகக் கதைப்பதற்கு சுதந்திரம் இல்லை என்றும், வெளிநாடுகளில் உள்ள ஊடகவியலாளர்களே இச்சம்பவங்கள் பற்றி அச்சமின்றி செய்திவெளியிடும் நிலைமையே இப்போது காணப்படுவதாகவும் அவர்கள் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் பாதுகாப்புப் படையினரால் தமிழர்கள் சட்டத்திற்குப் புறம்மான முறையில் கைதுசெய்யப்படுவது, கடத்தப்படுவது, சட்டத்திற்கு மாறாக தடுத்துவைக்கப்படுவது பற்றிய முறைப்பாடுகள் தொடர்ச்சியாக தமக்குக் கிடைப்பதாகவும், அது மட்டுமன்றி பல தமிழ் இளைஞர்கள் மர்மமான முறையில் காணாமல் போவதும் பின்னர் மரணமடைவதும் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல்களும் தமக்குக் கிடைப்பதாகவும் அவர்கள் அம்மடலில் தெரிவித்துள்ளார்கள்.

இவ்வாறு கைதுசெய்யப்படுகவர்களில் பலருக்கு விடுதலைப் புலிகளுடன் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை என்றும், போர் நடந்த காலத்தில் அவர்களில் பலர் பதின்மவயதைக்கூட எட்டியிருக்கவில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் றிச்சார்ட் பதியுதீனின் ட்டிவிட்டர் பதிவை மேற்கோள் காட்டிக் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் போரில் இறந்தவர்களை நினைவுகூர்ந்தமையும் எங்கள் உரிகைளுக்காக அமைதிவழி ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டமையும் சமூக ஊடகங்களில் போரில் இறந்தவர்களைப் பற்றிய பதிவுகளைப் பகிர்ந்தமையும் பலர் கைதுசெய்யப்படுவதற்கு தூண்டுதலாக அமைந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் ஊடகவியலாளர்களும் உள்ளனர் என்றும் அவர்கள் எழுதியுள்ளார்கள்.

மேலும் புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளிகள் பலரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர்கள், ஆர்ப்பாட்டங்கள் நினைவேந்தல்களில் பங்குபற்றியதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பயங்கரவாத தடுப்புப் பிரிவால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதையும், இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கைதுசெய்யப்பட்டதையும் கோடிட்டுக் காட்டியுள்ளனர்.

அத்துடன், போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இலங்கை அதிகாரிகள் மீது பிரித்தானியா தடை விதிப்பதுடன் அதனது உலகளாவிய நீதிஅதிகாரத்தைப் பயன்படுத்தி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், எங்களது மக்கள் பலரை நாட்டைவிட்டுத் தப்பியோடி வெளிநாடுகளில் புகலிடம் கோருவதற்குக் காணரமாக இருக்கும் தற்போதும் நடந்துகொண்டிருக்கும் மோசமான மனித உரிமை மீறல்கள் பற்றி பிரித்தானியா பேசவேண்டும் என்றும் தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் இது தொடர்பான நேரடி வாக்குமூலங்கள், மேலதிக தகவல்கள் மற்றும் கூடுதல் ஆதாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், இது தொடர்பில் பிரித்தானிய அரசு அர்த்தமுள்ள நடவடிக்கை எடுப்பதற்கு உதவுவதற்கும், தாங்கள் தயாராக இருப்பதாவும், இதற்காக ஒரு சந்திப்பை நாங்கள் கோருகிறோம் என்றும் அக்கடிதத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நீதியரசரும், முன்னாள் வடமாகாண முதலமைச்சரும், தற்போதய பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ் பாராளுமன்ற உறுப்பினராகிய, தர்மலிங்கம் சித்தார்த்தன், வன்னிமாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், நோகராதலிங்கம், சாள்ஸ் நிமலநாதன், மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் ஆகியோருடன், தமிழ்மக்கள் தேசிய கூட்டணியின் செயலாளர் நாயகமும், முன்னாள் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், வடமாகாணசபையின் முன்னாள் அமைச்சரும் ஈழத்தமிழர் சுயேட்சைக் கழகத்தின் பொதுச்செயலருமான அனந்தி சசிதரன் ஆகியோரும் இக்கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார்கள். யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினாராகிய சிவஞானம் சிறிதரன் அவர்களும் இதே கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

சிறிலங்கா காவல்துறையின் தடுப்பில் நடைபெற்ற சித்திவதைகளும் மரணங்களும், எழுந்தமானமான கைதுகள், சட்டவிரோத தடுத்துவைப்புக்கள், காணாமற்போதல்கள், மர்மச்சாவுகள் என்பன பற்றிய தொடர் அறிக்கைகள், சமீபத்தில் பாதிக்கப்பட்டவர்களது விபரங்கள், தூண்டுதலாக அமையும் காரணங்கள், முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை, இந்நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் என பல்வேறு உப தலைப்புக்களில் இக்கடிதம் விரிவான விபரங்களுடன் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு தலைப்புக்களுக்கீழும் ஊடகங்களில் வந்த சம்பவங்கள் ஆதாரமாக வழங்கப்பட்டுள்ளன.

இவை ஊடகங்களில் பதிவான ஒருசில மனித உரிமை மீறல்களுக்கான உதாரணங்கள் மட்டுமே என்றும் இதுபோல இன்னும் பல சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன என்றும் குறிப்படப்பட்டுள்ளது.

அத்துடன், நவம்பர் 2019 முதல் இன்றுவரையான காலப்பகுதியில், ஊடகங்களில் பதிவான, 809 மனித உரிமைமீறல்ச் சம்பவங்கள் ஆவணப்படுத்தப்பட்ட, 66 பக்கங்கள் கொண்ட விரிவான பட்டியலும் இணைத்து அனுப்பி வைக்கப்பட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை படைத் தளபதிகளை தடை செய்யுமாறு பிரித்தானியாவில் கோரிக்கை

இலங்கையில் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட படை அதிகாரிகள் மீது பிரித்தானியா அரசு தடைகளை கொண்டுவரவேண்டும் என்ற தீர்மானம் தெற்கு லண்டன் பகுதியில் உள்ள ரூட்டிங் நகரசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பல பத்து வருடங்களாக இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனவே இந்த குற்றங்களில் ஈடுபட்ட படை அதிகாரிகள் மீது அனைத்துல மனித உரிமைகள் மீறல் தடைச்சட்டம் -2020 இன் அடிப்படையில் பிரித்தானியா அரசு தடையை கொண்டுவர வேண்டும் என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized