13 ஆவது திருத்தத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்குவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சம்பந்தன்

“அரசமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வோர் தமிழ் மக்களின் நன்மை கருதிச் செயற்பட வேண்டும்.

தமது சுயலாப அரசியலுக்காகத் தமிழ் மக்களை நட்டாற்றில் விடும் வகையில் அவர்கள் செயற்படக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

13 ஆவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது படுமுட்டாள்தனமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“அரசமைப்பில் முதன்முறையாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதைத் தேசிய இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வாக ஏற்க முடியாது. இதைத் தீர்வுக்கான முதல் படியாக வைத்துக்கொண்டு நாங்கள் முன்னோக்கி நகர்ந்து வருகின்றோம்.

இந்நிலையில், 13ஆவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது படுமுட்டாள்தனமானது.

இப்படியான செயற்பாடு, இருப்பதையும் இழப்பதற்குச் சமமானது. அதனால் தான் 13ஆவது திருத்தச் சட்டத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரி வருகின்றோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இந்தியாவை ஏமாற்றுவதற்கான மற்றுமொரு நகர்வே பீரிஸின் புதுடில்லிக்கான விஜயம்-கருத்து வெளியிட்டார் விக்னேஸ்வரன்

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் புதுடில்லிக்கான விஜயம் இந்தியாவை ஏமாற்றுவதற்கான மற்றொரு நகர்வாகவே உள்ளது என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கட்சியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் தற்போதைய இந்திய விஜயம் தொடர்பாக ‘ரைம்ஸ் எப் இந்தியா’வுக்கு கருத்துவெளியிட்ட போதே விக்;னேஸ்வரன் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தெரிவித்தவை வருமாறு:

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் புதுடில்லிக்கான விஜயம் இந்தியாவை ஏமாற்றுவதற்கான மற்றொரு நகர்வாகவே உள்ளது. இந்தியா தமது நட்பு நாடு என அவர்கள் நடிப்பார்கள். தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு விடயத்தில் இந்தியா தலையிடாமலிருப்பதை உறுதிப்படுத்துவதற்காக போலியான வாக்குறுதிகளை அவர்கள் வழங்குவார்கள்.

தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குவது உட்பட, இந்தியாவுக்கு கடந்த காலங்களில் கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில்லை. இந்திரா காந்திக்குப் பின்னர் இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கை தோல்வியையே சந்தித்திருக்கின்றது. அதன் விளைவாகத்தான் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்திருக்கின்றது.

இருந்த போதிலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியில் நான் நம்பிக்கை வைத்துள்ளேன். அவரை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். அவர் குஜாராத் முதலமைச்சராக இருந்த போது நான் அங்கு சென்றிருக்கின்றேன். அவர் இலங்கையின் போலி வாக்குறுதிகளை நம்பாமல் இலங்கை தொடர்பில் மிகவும் அவதானமாக இருந்து, தீர்க்கமான செயற்பாடுகளை முன்னெடுப்பார் என நான் நம்புகின்றேன்.

தமிழ் மக்களுடைய சட்டரீதியான உரிமைகளை உறுதிப்படுத்தவும், அவர்களுடைய தொடர்ச்சியான இருப்பை உறுதிப்படுத்தவும் இந்தியப் பிரதமர் துணிச்சலாகச் செயற்படுவார் என இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். எம்மை வலுப்படுத்துவதற்காக இந்தியா எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் இந்தியாவின் பாதுகாப்புக்கும் உகந்ததாக இருக்கும். ஆக, பேராசிரியர் பீரிஸின் பேச்சுவன்மையில் இந்தியா ஏமாற்றுப்பட்டுவிடக்கூடாது என்பதுதான் என்னுடைய ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது.

கடலில் இறப்புக்கள் நடைபெறுவதற்கு கடற்படையே காரணம் – சார்ள்ஸ் எம்பி

இறப்புக்கள் நடைபெறுவதற்கு கடற்படையே காரணம்: இந்திய பிரதமருக்கு தமிழ் கட்சிகளால் கடிதங்கள் கொடுத்ததன் பிற்பாடுதான் கடலில் இறப்புக்கள் நடைபெறுகிறது. இது இலங்கை அரசாங்கத்தின் ராஜதந்திர நடவடிக்கையாகவே பார்க்கின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இந்தியா பதின்மூன்றாம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது அதிகார பகிர்வு வேண்டும் என்று தமிழ் கட்சிகளால் கொடுக்கப்பட்ட கடிதங்களின் பின்னணியில் சம்பவங்கள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா இருக்கிறது. இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள்தான் எங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். ஆகவே கடிதம் கொடுத்ததன் பிற்பாடு இந்திய மத்திய அரசாங்கம் இலங்கையில் ஒரு அழுத்தத்தை மேற்கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் இலங்கை, இந்திய ஒப்பந்தத்தை உருவாக்கியது இந்தியா. இந்தியாவுக்கு பொறுப்பு இருக்கிறது.

எங்களுடைய தாய்நாடு இந்தியா, ஆகவே இலங்கையில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட எல்லா பிரதிநிதிகளும் இணைந்து ஒரு விடயத்தை முன்வைக்கின்ற போது அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஒரு கடப்பாடு இந்தியாவுக்கு இருக்கிறது.

ஆனால் தற்போது தமிழ்நாட்டையும், இலங்கை தமிழர்களையும் முரண்படுகின்ற வகையில் இலங்கை அரசாங்கம் தந்திரோபாய திட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகிறது. அதாவது வடபகுதியில் இருக்கின்ற மீனவர்களுக்கும், இந்திய மீனவர்களுக்கும் இடையில் தற்போது ஒரு முரண்பட்ட நிலையை இலங்கை அரசாங்கம் உருவாக்கி இருக்கிறது.

இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி எங்களுடைய மக்களை தங்களுடைய சொந்த நிலங்களில், சொந்த கடலில் மீன் பிடிப்பதற்கு ஏற்ற நிலைமையை உருவாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது.

ஆனால் தற்போது வடக்கு கடலில், இந்திய மீனவர்களும், இலங்கை மீனவர்களும் முரண்பட்டு மரணிக்கும் சம்பவங்கள் நடைபெறுகிறது.

அண்மையில் நான்கு உயிர்கள் பறிபோயிருக்கிறது. இதில் சந்தேகம் இருக்கிறது. இந்திய பிரதமருக்கு கடிதங்கள் கொடுத்ததன் பிற்பாடுதான் இந்த சம்பவங்கள் கடலில் நடைபெறுகிறது. ஆனால் கடலில் இந்திய மீனவர்களும், இலங்கை மீனவர்களும் சண்டை பிடித்தார்கள் என்பதற்கு எந்த விதமான ஒரு ஆதாரமும் இல்லை. ஆனால் அவர்கள் இறக்கிறார்கள். எப்படி இறக்கிறார்கள்?

என்னை பொறுத்தவரையில், இது இலங்கை அரசாங்கத்தினுடைய ஒரு ராஜதந்திர நகர்வாக கடற்படையினுடைய செயற்பாடாக இருக்க வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.

இனப்பாரபட்சம் காட்டிவிட்டு அம்பிகாவை சாடுவது ஏன்? மனோ கணேசன் எம்பி

எங்கள் ஆட்சியின் போது, 29 ஒக்டோபர் 2019ம் வருடம் வெளியிடப்பட்ட அரசாங்க வர்த்தமானியின்படி, நுவரெலியா, காலி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பழைய பிரதேச செயலகங்கள் பிரிக்கப்பட்டோ, தரமுயர்தப்பட்டோ புதிய முழுமையான பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதே அரசாங்க முடிவு.

இதன்படி புதிதாக வந்த இந்த ஆட்சியில், காலியின் பழைய உப பிரதேச செயலகங்கள், புதிய முழு பிரதேச செயலகங்களாக தரமுயர்த்தப்பட்டு கோலாகலமாக திறந்தும் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அதே அரசாங்க வர்த்தமானியில் கூறப்பட்டுள்ள நுவரெலியா மாவட்டத்திற்கான ஐந்து மேலதிக முழு பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்பதை உதாசீனம் செய்து விட்டு, இரண்டு உப பிரதேச செயலகங்களை மாத்திரம் பெயரளவில் இந்த அரசாங்கம் திறந்து வைத்துள்ளது.

காலிக்கு வெள்ளிக்கரண்டி; நுவரேலியாவுக்கு தகரம். இது இன பாரபட்சமில்லையா? அப்புறம் ஏன் மனித உரிமை செயற்பாட்டாளர் அம்பிகா சற்குருநாதன் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கிய சாட்சியத்தில் இந்நாட்டில் இன பாரபட்சம் இருப்பதாக கூறியது கண்டு வெளிநாட்டு அமைச்சர் ஜி. எல். பீரிஸ், இந்த வயதான வேளையில், பூமிக்கும், வானத்துக்குமாக குதிக்கிறார்? என தமிழ் முற்போக்கு கூட்டணி-ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுபற்றி எம்பி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

மனித உரிமை செயற்பாட்டாளர் அம்பிகா ஒரு நீண்ட கால மனித உரிமை போராளி. அவரை பான் 2005ம் வருடம் முதல் அறிவேன். கொழும்பில் வெள்ளை வேன் கடத்தல்களுக்கு எதிராக எமது மக்கள் கண்காணிப்பு குழு ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் அவர் எம்முடன் இணைந்து செயற்பட்டார். அவர் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கிய சாட்சியத்தில் இந்த பிரதேச செயலகங்கள் பற்றி கூறினாரோ என எனக்கு தெரியாது. ஆனால் இந்நாட்டு இன பாரபட்ச நடப்பில் இது ஒரு சிறிய உதாரணம்.

கடந்த 74 வருட காலமாக இந்நாட்டில் தமிழ் மக்களுக்கு உரிமை பகிர்வு, அபிவிருத்தி இரண்டிலும், பித்தளை, தகர கரண்டிகள்தான் காட்டப்பட்டுள்ளன. அத்தனைக்கும் காலியை விட, நுவரேலியாவில்தான் இந்த பிரதேச செயலக பிரிவில் ஜனத்தொகை அதிகம். நீண்டகாலமாக அங்கே பிரதேச சபைகளே போதுமானளவு இல்லாமல் இருந்து அவற்றை நாமே பிரித்து பெற்றுக்கொடுத்தோம். இப்போது அவற்றுக்கு சமாந்திரமாக பிரதேச செயலகங்களை கேட்டால் கிடைக்கவில்லை. அமைச்சரவை தீர்மானம் எடுத்து வர்த்தமானி பிரகடனம் செய்தாலும் கிடைக்கவில்லை.

ஆனால், அதே வர்த்தமானியில் நுவரேலியாவுடன் சேர்ந்து அறிவிக்கப்பட்ட காலிக்கு கொடுக்கிறீர்கள். நுவரேலியாவில் தமிழர் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். ஒருவேளை நுவரேலியாவில் தமிழர் வாழாவிட்டால் கிடைத்திருக்கும். அப்படியானால், இதுதானே இன பாரபட்சம்?

அரசாங்க உடன்பாடு ஏற்பட்டு வர்த்தமானியில் பிரகடனம் செய்யப்படுவதுதான், இதில் மிக முக்கிய அங்கம். அதை நாம் செய்து முடித்து விட்டோம். ஆட்சி முன்கூட்டியே கலைக்கப்பட்டது. இன்றைய ஆட்சி நாம் விட்ட இடத்தில் இருந்து முன் கொண்டு செல்ல வேண்டும். காலிக்கு மாத்திரம் முன்கொண்டு செல்கிறார்கள். நுவரேலியாவுக்கு இல்லை. அப்படியானால், இந்நாட்டில் நாம் மாற்றாந்தாய் மக்கள். இதுதான் பாரபட்சம்.

வெள்ளி கரண்டி பெரும்பான்மை மக்களுக்கு என்றால், ஏனைய மக்களுக்கு பித்தளை கரண்டி. மலையக மக்களுக்கு பித்தளை கரண்டிகூட கிடைப்பதில்லை. வெறும் தகரம்தான். அதனால்தான் பிரதேச சபைகள் பெறுவதற்கே 1987ல் இருந்து முப்பது வருடங்கள் நமது மக்கள், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பங்காளி ஆகும்வரை காத்திருந்தார்கள். இத்தகைய இன பாரபட்சங்களைதான் அம்பிகா சற்குருநாதன் எடுத்து கூறியுள்ளார் என்பதை படித்த பேராசிரிய அமைச்சர் ஜி.எல். பீரிஸ் எடுத்து கூறுகிறேன்.

சிறீதரனும் சாள்ஸும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகருடன் சந்திப்பு

இலங்கைக்கான இந்தியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் ஜேக்கப்புக்கும், யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்றைய தினம் மாலை, கொழும்பு.3 இலுள்ள பிரதி உயர்ஸ்தானிகரின் வதிவிடத்தில் இடம்பெற்றது.

இச் சந்திப்பின் போது,

தமது வாழ்வாதாரம் சிதைக்கப்படுவதற்கும், மாதகல் மற்றும், வத்திராயன் பகுதியில் சடலங்களாக கரையொதுங்கிய மீனவர்களின் இறப்புக்கு நீதிகோரியும் வடமராட்சி, சுப்பர்மடம் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மீனவர்களின் நியாயமான கோரிக்கைக்கு கூர்நோக்குடனான நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பு மீனவர்களிடையேயும் தொடர்ச்சியாக நிலவிவரும் இம்முரண்பாடுகள் ஈழத்தமிழர்களுக்கும், தாய்த்தமிழக உறவுகளுக்குமிடையே விரிசலை ஏற்படுத்துவதைத் தவிர்க்கும் முகமாக, இலங்கை மீனவர்களின் கடல் எல்லைகளை வரையறை செய்வதற்கேனும் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்ற வேண்டுகோள் இரு பாராளுமன்ற உறுப்பினர்களாலும் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் குறித்தும், தமிழ்மக்களின் ஏகோபித்த அரசியல் அபிலாசையான நிலையான அரசியற்தீர்வைப் பெறுவதில் ஏற்படுத்தப்படும் காலதாமதமானது, தமிழர்களின் நில உரித்துக்களை வன்பறிப்புச் செய்து, தமிழர்களின் இருப்பைக் கேள்விக்குட்படுத்தும் சமநேரத்தில் இந்தியாவின் அரசியல், இராஜதந்திர நகர்வுகளிலும் தாக்கம் செலுத்தக்கூடும் என்பதால், தமிழர்களுக்கான நிரந்தர அரசியல்தீர்வில் இந்தியாவின் வகிபாகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்தும் சிறப்பாகக் கலந்துரையாடப்பட்டது.

Posted in Uncategorized

மீனவப் படகுகள் ஏலம்: தமிழக முதல்வர் பிரதமருக்கு அவசர கடிதம்!

இந்திய மீனவர்களின் படகுகளை இலங்கை அரசாங்கம் ஏலத்தில் விடும் முயற்சிளை தடுத்து நிறுத்துமாறு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 105 மீன்பிடிப் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசின் நடவடிக்கை சட்டத்திற்கு புறம்பானது என குறிப்பிட்டுள்ள தமிழக முதல்வர், கவலைக்குரிய இந்த நடவடிக்கை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென பிரதமரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழக மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை விடுவிக்கவும் பிரதமர் அவசரமாக தலையிட வேண்டுமென தமிழக முதல்வர் தமது கடிதத்தில் கோரியுள்ளார்.

ஏலத்தைத் தடுத்துநிறுத்திடவும் 2018 ஆம் ஆண்டிற்கு முன்னர் சிறைபிடிக்கப்பட்ட 125 பழுதுபார்க்க இயலாத நிலையில் உள்ள தமிழகப் படகுகள் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்பார்வையிட அதிகாரிகள் மற்றும் மீன்பிடிப் படகுகளின் உரிமையாளர்களின் உத்தேச பயணத்திற்கு இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் ஒப்புதலையும் தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Posted in Uncategorized

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பான ஒப்பந்தம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பில் லங்கா ஐஓசி நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்தள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், லங்கா ஐஓசி மற்றும் ட்ரிங்கோ பெற்றோலியம் டேர்மினல் (பிரைவெட்) லிமிட்டட் ஆகிய நிறுவனங்களுக்கு இடையில் குறித்த உடன்படிக்கை அண்மையில் கைச்சாத்திடப்பட்டது.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை மேம்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.

குறித்த ஒப்பந்தம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விளக்கம்!

வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பாராளுமன்றத்தில் இலங்கை அரசாங்கம் முன்வைக்க உத்தேசித்துள்ள தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் திருத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலமானது சட்டமாக நிறைவேற்றப்பட்டவுடன், தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டம் இயற்றப்பட்டு கிட்டத்தட்ட 43 வருடங்களின் பின்னர் அதில் திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கு வழிவகுப்பதுடன், குறித்த சட்டத்திற்கு உட்பட்ட நபர்களுக்கு அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அவர்களது அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், முன்னேற்றுவதற்குமான உறுதியான பாதுகாப்பை வழங்கும் மிகவும் முற்போக்கான நடவடிக்கையாக அமையும்.

முன்மொழியப்பட்ட சட்டமூலத்திற்கு எதிராக தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் உட்பட பல நபர்களால் உச்ச நீதிமன்றத்தில் வெளியிடப்பட்ட கடுமையான எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் மூலமாக தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் திருத்துவதற்கு கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் நிறைவேறவில்லை.

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கான திருத்தங்களை இறுதி செய்வதற்கு பின்பற்றப்பட்ட செயன்முறையானது, 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடை (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்காக அமைச்சரவை துணைக் குழுவின் நியமனம் எனத் தலைப்பிடப்பட்டு, 2021 ஜூன் மாதம் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் அதிமேதகு ஜனாதிபதி, வெளிநாட்டு அமைச்சர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு அமைச்சரவைப் பத்திரத்தை உள்ளடக்கியுள்ளது.

மேலும், தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளலாமா இல்லையா என்பதை அமைச்சரவைக்கு பரிந்துரை செய்வதற்காக, புதிய சட்டத்தை அறிமுகம் செய்து, பாதுகாப்பு, வெளிநாட்டு, நீதி மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சுக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய அதிகாரிகள் குழுவை நியமித்து, அமைச்சரவை துணைக்குழு தனது அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் அமைச்சரவைக்குப் பரிந்துரையுடன் சமர்ப்பிக்க அதிகாரம் அளித்து, அமைச்சரவை உபகுழுவை நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் அளித்து மேற்கூறிய கூட்டு அமைச்சரவைப் பத்திரத்திற்கு இணங்க 2021.06.21ஆந் திகதி அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டது.

அமைச்சரவையின் அனுமதியைத் தொடர்ந்து, நீதி, பொதுப் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு, பாதுகாப்பு அமைச்சுக்களின் அதிகாரிகள் மற்றும் பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம், சட்ட வரைஞர் மற்றும் தேசிய புலனாய்வுத் தலைவர் ஆகியோரை உள்ளடக்கிய அதிகாரிகள் குழுவொன்றை ஜனாதிபதியின் செயலாளர் ஜூன் 2021 இல் நியமித்தார்.

மேலும், அதிகாரிகள் குழுவின் சூழலில் பல்வேறு அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களிடையே விரிவான ஆலோசனைகள் நடாத்தப்பட்டதுடன், மேலதிக நிபுணத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்தாலோசிக்கும் பொருட்டு மேலதிகமான நிறுவனங்கள் அழைக்கப்பட்டன.

அதிகாரிகள் குழுவின் பரிந்துரைகளை மீளாய்வு செய்வதற்காக 2021 அக்டோபரில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு, வெளிநாட்டு அமைச்சரின் தலைமையில் இடம்பெற்றதுடன், அதிகாரிகள் குழுவின் அறிக்கை ஜனாதிபதி, அமைச்சரவை உப குழுவின் உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோருக்கு 2021.11.15ஆந் திகதி சமர்ப்பிக்கப்பட்டது.

அதிகாரிகள் குழுவின் முன்மொழிவுகளை மதிப்பாய்வு செய்த அமைச்சரவை உப குழு, தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் நிபுணர்களுடன் மேலதிக ஆலோசனைகளை நடாத்தியது. இலங்கை சட்ட ஆணைக்குழு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சிவில் சமூகக் குழுக்களுடன் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கான உத்தேசத் திருத்தங்கள் குறித்து அமைச்சரவை உபகுழுவும் கலந்துரையாடியது. வாய்மொழியாகவும் எழுத்துபூர்வ சமர்ப்பணங்கள் மூலமாகவும் பரிசீலனைக்கான முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டன.

இந்த செயன்முறையின் நிறைவில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களை அமைச்சரவை உபகுழு இறுதி செய்ததுடன், முன்மொழியப்பட்ட திருத்தங்கள் அடங்கிய சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதன்பின்னர் அதனை நாடாளுமன்றத்தில் அங்கீகாரத்திற்காக தாக்கல் செய்வதற்கும் 2022 ஜனவரி 24ஆந் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

தடுப்புக் காலத்தைக் குறைத்தல், சித்திரவதைக் குற்றச்சாட்டுகளை நிவர்த்தி செய்வதற்கும் அகற்றுவதற்கும் தடுப்புக்காவலில் உள்ள சந்தேக நபர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்குச் செல்ல நீதவானுக்கு வெளிப்படையாக அதிகாரம் வழங்குதல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீதித்துறை மீளாய்வுக்கு அங்கீகாரம் வழங்குதல், தடுப்புக்காவலில் அல்லது காவலில் வைக்கப்பட்டுள்ள ஒருவரை சட்டத்தரணிகள் அணுகுவதற்கான சட்டம் மற்றும் அவ்வாறு தடுப்புக்காவலில் அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ள நபரின் உறவினர்களுடன் தொடர்புகொள்வதற்கான உரிமை, பிரசுரங்களைத் தடை செய்வது தொடர்பான விதிகளை ரத்துச் செய்தல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான தடுப்புக் குற்றங்களுக்கு நாளாந்த அடிப்படையில் விசாரணைகளை நடாத்துதல், தடுப்புக்காவலில் அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு பிணை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல், வழக்குகளை விரைந்து தீர்ப்பதை உறுதிசெய்தல், புதிய பிரிவு 15B ஐ அறிமுகப்படுத்துவதை உறுதிப்படுத்துதல் ஆகியன அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த சட்டமூலம் 2022 ஜனவரி 27ஆந் திகதி அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. அதன்பின்னர், நாடாளுமன்றத்தில் இந்த சட்டமூலத்தை தாக்கல் செய்யுமாறு நாடாளுமன்றத்தில் உள்ள அவைத் தலைவருக்கு அமைச்சரவை உபகுழுவின் தலைவரான வெளிநாட்டு அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

1979ஆம் ஆண்டு ஜூலை 24ஆந் திகதி பாராளுமன்றத்தில் சான்றளிக்கப்பட்டதிலிருந்து 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டம் (தற்காலிக ஏற்பாடுகள்) செயற்பட்டு வருவதுடன், 1982 மற்றும் 1988ஆம் ஆண்டுகளில் சிறிய திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, பல ஆலோசனைகளுக்குப் பின்னர், மேற்கூறிய சட்டத்தின் கீழ் விசாரணை மற்றும் நீதித்துறை மீளாய்வுக்கு உட்பட்ட நபர்களின் உரிமைகளை முன்னேற்றுவதற்கும், பாதுகாப்பதற்கும் ஒரு முற்போக்கான படியாக முன்மொழியப்பட்ட திருத்தம் அமைவதுடன், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை எதிர்கொள்வதற்காக சிறந்த சர்வதேச நடைமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாகவும் அமைகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசின் நிலைப்பாடு குறித்து அரசாங்கம் விளக்கம்

உள்நாட்டு பொறிமுறை காணப்படுகின்றது அது செயற்படுகின்றது என்பதே எங்கள் நிலைப்பாடு என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சர்வதேச தரப்பு தலையிட்டால் அது உண்மையான நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் இகாயங்களை ஆற்றுவதற்கு பதில் நிலைமையை மேலும் மோசமானதாக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனோர் அலுவலகம் இழப்பீட்டு அலுவலகம் போன்றவை வலுப்படுத்தப்பட்டுள்ளன.

ஆகவே உலகிற்கு நாங்கள் இவற்றை காண்பித்து இந்த மாற்றங்கள் இடம்பெறுகின்றன என்பதை அங்கீகரிக்க வேண்டும் என கோரவுள்ளோம எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கேள்வி-? மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமை அமர்விற்காக அரசாங்கம் எவ்வாறு தயாராகின்றது? அரசாங்கம் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றது?

பதில் – பயங்கரவாத மோதலின் இறுதியை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் -முக்கியமான விவகாரங்களிற்கு நாங்கள் தீர்வு கண்டுள்ளோம். காயங்களை எவ்வாறு ஆற்றலாம் ஒருவருக்குஒருவர் முன்னோக்கி நகர்வதற்கு எவ்வாறு உதவலாம் என்பது குறித்தே நாங்கள் பார்க்க வேண்டியுள்ளது.

உள்நாட்டு பொறிமுறை காணப்படுகின்றது அது செயற்படுகின்றது என்பதே எங்கள் நிலைப்பாடு. சர்வதேச தரப்புதலையிடுவதற்கு பதில் காயங்களை ஆற்றுவதற்கு நாங்கள் இவற்றை பயன்படுத்த வேண்டும்.

சர்வதேச தரப்பு தலையிட்டால் அது உண்மையான நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் இகாயங்களை ஆற்றுவதற்கு பதில் நிலைமையை மேலும் மோசமானதாக்கும்.

ஆகவே நாங்கள் அதிகளவு முன்னேற்றத்தை அடைந்துள்ளோம் மேலும் முன்னேறுவோம் என்பதை எங்களின் நிலைப்பாடு. நாங்கள் உண்மையை தெரிவிப்போம்-வடக்குகிழக்கில் பிரச்சினைகள் உள்ளன அவற்றிற்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

காணாமல்போனோர் அலுவலகம் இழப்பீட்டு அலுவலகம் போன்றவை வலுப்படுத்தப்பட்டுள்ளனஇபேண்தகு இலக்குகள் சாத்தியமாகியுள்ளன.

ஆகவே உலகிற்கு நாங்கள் இவற்றை காண்பித்து இந்த மாற்றங்கள் இடம்பெறுகின்றன என்பதை அங்கீகரிக்கவேண்டும் என கோரவுள்ளோம்.

நாங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை மேற்கொண்டுவருகின்றோம்- நல்லாட்சி அரசாங்கத்தினால் அதனை செய்ய முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தினக்குரல்

Posted in Uncategorized

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் இந்திய விஜயத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்னும் உறுதியாகவில்லை.

இரண்டு நாள் அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அமைச்சர் பீரிஸ் நேற்று இந்தியா புறப்பட்டுச் சென்றார்.

நாளைய தினம் பிரதமர் நரேந்திர மோடியை, அமைச்சர் பீரிஸ் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் இதுவரையில் இந்த சந்திப்பு உறுதிப்படுத்தப்படவில்லை. அண்மையில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த போதும், பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடாத்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

பிரபல இந்திய பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவும் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பிற்கான நேர ஒதுக்கீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெளிவிவகார அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் அமைச்சர் பீரிஸ் முதல் தடவையாக இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

நாடு கடுமையான நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வரும் அதேவேளை, எதிர்வரும் 28ம் திகதி ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெறும் பின்னணியில் அமைச்சர் பீரிஸ் இந்திய விஜயத்தை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.