தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் குழப்பம்; தற்காலிக நிர்வாகம் தெரிவு!

தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் குழப்பகரமான நிலைமையொன்று தோன்றியுள்ளதாக அக்கட்சியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று(8)தமிழர் விடுதலைக் கூட்டணியினுடைய கூட்டமொன்று கிளிநொச்சியிலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன் போது கட்சியினுடைய செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி உட்பட கட்சியினுடைய உறுப்பினர்கள் பலரும் கலந்துரையாடிபோது இடைநடுவே வீ.ஆனந்தசங்கரி வெளியேறியதாகவும் அதன் பின்னர் அங்கு கூடியிருந்த ஏனைய உறுப்பினர்கள் புதிதாக ஒரு தற்காலிகமான ஒரு நிர்வாகத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக இன்று மாலை 6 மணியளவில் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கட்சியின் ஒரு பிரிவினர் கட்சிக்கு தற்காலிகமாக புதிய நிர்வாகத்தை தெரிவு செய்ததாக தெரிவித்தனர்.

இதன்போது பங்கேற்று கருத்து தெரிவித்த அக்கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் ச.அரவிந்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தற்காலிகமான நிர்வாக செயலாளர் க.கௌரிகாந்தனும் செயலாளர் நாயகமாக க.யோகராஜாவும் புதிய பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று தமிழர் விடுதலைக் கூட்டணியினுடைய விசேட பொதுச்சபைக் கூட்டம் கிளிநொச்சியிலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது.

2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கட்சி தலைமைத்துவத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் கட்சியினுடைய நிர்வாக நடவடிக்கையை சரியான முறையில் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதும் அதற்கு முட்டுக்கட்டையாக செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி செயற்பட்டதன் காரணமாக அந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் இருந்தது.

2020ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலின் பின்னர் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் பொதுக்கூட்டத்தை கூட்டி கட்சியில் புதிய நிர்வாக மாற்றங்களைக் கொண்டுவந்து கட்சியை தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்து கொண்டு முன் கொண்டு செல்ல வேண்டுமென நாங்கள் எடுத்த முயற்சியை இரண்டு ஆண்டுகளாக கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தை நடத்தாமல் பலவிதமான முட்டுக்கட்டைகளை போட்டு கொண்டு இன்றுவரை பல இடர்பாடுகளை தோற்றுவித்தார்.

தற்காலிகமான நிர்வாக செயலாளர் க.கௌரிகாந்தனும் செயலாளர் நாயகமாக க.யோகராஜாவும் புதிய பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் ஜனவரி 29ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி தீர்க்கமான முடிவை எடுப்போம் என்றார்.

இது தொடர்பில் கட்சியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரியை தொடர்பு கொண்ட பொழுது புதிதாக தெரிவானதாக கூறப்படும் நிர்வாகம் தொடர்பில் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்தியப் பிரதமரின் கடித முயற்சிக்கு மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளின் பேராதரவுக்கு நன்றி கூறுகிறோம் சுரேந்திரன்

தமிழ் பேசும் மக்களின் கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்திய பிரதமருக்கு அரசியலமைப்பிலுள்ள 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்தக் கோருவதன் மூலம் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை பகிர்ந்து மக்கள் முகம் கொடுத்திருக்கும் தற்போதைய பிரச்சினைகளில் இருந்து, மீட்கும் முயற்சியை மேற்கொண்டிருந்தோம்.

வடக்கு கிழக்கை மையப்படுத்திய கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டில் அந்த முயற்சியை முன்னெடுத்திருந்த பொழுது, மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவையும் பலத்தையும் கோரி நின்றோம். எவ்வித தயக்கமும் இல்லாது எமது முயற்சிக்கு நலமும் பலமும் சேர்க்கும் வகையில் நம்மோடு தோளோடு தோள் நின்று பயணிக்க முன் வந்தமைக்கு நன்றி கூறுகிறோம். இதனால் எமக்கு உத்வேகம் தந்துள்ளீர்கள்.

அனைத்து தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளையும் பிரதிபலிக்கும் வகையான வரைபை தயாரிக்க முற்பட்ட போதும் எமது அடிப்படை கோரிக்கைகளான தாயகம், சுயநிர்ணய உரிமை, சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு என்பவற்றில் நம்மால் விட்டுக்கொடுக்க முடியாத சூழ்நிலையை நீங்கள் புரிந்து கொண்டீர்கள். அதேநேரம் அதில் உங்களால் கையொப்பமிட முடியாத இக்கட்டான நிலையையும் நாங்களும் விளங்கிக் கொண்டோம். இருப்பினும் உங்களால் முன்வைக்கப்பட்ட மலையக மக்களின் கரிசனைகளையும் பிரதிபலித்துள்ளோம் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.

எமது மக்கள் எதிர்கொண்டிருக்கும் அரசியல் இக்கட்டிலிருந்து எம் மக்களை மீட்க நாம் முற்பட்ட பொழுது எமது தரப்பிலிருந்து எம்மை விமர்சித்தும், எதிர்ப்புகளை வெளியிட்டும், கருத்துக்களை பதிவிட்டும் தடுக்கும் முயற்சியிலும் சுயவிளம்பரங்களை தேடுவதிலும் ஈடுபட்டிருந்த வேளையில் உங்களது நாகரீகமான நடைமுறை அவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்று நம்புகிறோம்.

உங்களது அனைத்து முயற்சிகளிலும் எங்கள் ஆதரவு என்றும்போல் தொடர்ந்தும் இருக்கும் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். அதே வேளை எம்மக்களின் விடிவிற்கான தொடர் பயணத்தில் நீங்கள் தொடர்ந்தும் எம்முடன் பயணிக்க விருப்புடன் கோரி நிற்கிறோம்.

சுரேந்திரன்
ஊடகப்பேச்சாளர்- ரெலோ
தமிழ் தேசியக் கூட்டமைப்பு
கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர்

செய்ய வேண்டிய பணிகளை விட்டுவிட்டு வேறு விடயங்களை ஆளுநர் வடக்கில் செய்கிறார்! ரெலோ யாழ். மாவட்ட அமைப்பாளர் நிரோஷ் குறற்ச்சாட்டு

நாட்டில் 13 ஆவது திருத்தத்தால் செய்ய வேண்டிய பணிகள் அதிகம் உள்ளது, அதை விட்டுவிட்டு ஆளுநர் அரசின் அழுத்தத்தால் பல்வேறு விடயங்களை வடக்கில் செய்கிறார் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தி.நிரோஷ் தெரிவித்தார்.

யாழ் ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசு இப்போது என்ன செய்கிறது என்றால், மாகாண சபைகளுக்கு சில அதிகாரங்களை கிள்ளி எறிந்து அதையும் மத்தியின் கீழ் தந்திரமாக எவ்வாறு கையகப்படுத்தலாம் என்று செயற்பட்டு வருகிறது. அதற்கு அவர்கள் பயன்படுத்தி வரும் ஆயுதம் தான் உள்ளூராட்சி சபைகள்.

உள்ளூராட்சி சபைகளின் கீழ் உள்ள பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கு கூட நாம் மத்தியில் தங்கி நிற்கும் நிலையில், வடக்கு மாகாணத்தில் ஆளுநரை பயன்படுத்தி இப்போது புதிய நாடகங்கள் இங்கு நடைபெறுகிறது.

ஆரியகுளத்தில் மத நல்லிணக்கத்தை இல்லாமல் செய்வது, அரசியலமைப்பை மீறுகிறது என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். ஆகவே ஆரிய குளம் யாருடைய சொத்து உள்ளிட்ட பல கேள்விகளை ஆளுநர் இப்போது முன்வைத்துள்ளார்.

நாங்கள் இங்கு கேட்கின்றோம் இலங்கை போன்ற நாட்டிலே மத நல்லிணக்க பிரச்சினை காணப்படுகிறது. ஆகவே அதனை பகுத்தாராய வேண்டிய தேவை உள்ளது. அந்த வகையில் மத ரீதியான ஆக்கிரமிப்புக்கள் குருந்தூர் மலையில் இடம்பெற்றுள்ளது. அதே போன்று நாவற்குழியில் விகாரை அமைக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் ஆரிய குளத்தில் மத ரீதியான குழப்பங்களை அரசு ஏற்படுத்துவதை நாங்கள் நிராகரிக்கின்றோம்.

வடக்கு மாகாண ஆளுநருக்கு அரசு கொடுக்கும் அழுத்தம் காரணமாகவே இது நடக்கிறது. முன்னரும் கூட குளத்தின் நடுவில் மத நல்லிணக்க மண்டபத்தை கட்டுவதற்கு தேரர் ஒருவர் மாநகர சபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அரசியல் அமைப்பில் உள்ளதை இதற்கு மட்டுமே பயன்படுத்து நோக்கில் ஆளுநர் செயற்பட்டு வருகின்றார்.

வேண்டும் என்றால் பகிரங்க வாக்கெடுப்பை எடுக்கட்டும்.இங்கு என்ன செய்வது இப்படி ஒரு மத நல்லிணக்கம் வேண்டுமா என்று.

பொது மக்களுக்கு தேவை நிம்மதி. அவர்களுக்கு சிங்கள பௌத்த மயமாக்கல் தேவை இல்லை என்றார்.

Posted in Uncategorized

பயத்தினால் நாய் போல மாறியுள்ள வீரவன்ச, கம்மன்பிலவின் ஆடையும் அவிழ்ந்து போயுள்ளதாக தகவல்

சுசில் பிரேமஜயந்தவின் வாயை அடைத்த பின்னர், அரசாங்கத்திற்குள் சிங்கம் போல் இருந்த மேலும் சிலர் நாய் குட்டிகளின் நிலைமைக்கு சென்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி (Chaminda Wijesri) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (07) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

சுசில் பிரேமஜயந்தவின் வாய் அடைக்கப்பட்ட பின்னர் விமல் வீரவங்ச போன்றவர்கள், அரசாங்கத்தின் அனுமதியுடனேயே பேசுகின்றனர். அண்மையில் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் காதருகே சென்று நான் எதாவது கூறினால் சிக்கலாகுமா என்று வீரவங்ச கேட்டதை பார்க்க முடிந்தது.

சிங்கம் போல் இருந்து விமல் வீரவங்ச போன்றவர்கள் நாய் குட்டிகள் போல் மாறியுள்ளனர். நாட்டில் இனவாதம், தேசப்பற்று பற்றி பேசிய வீரவங்ச போன்றவர்கள் அமைச்சு பதவி பறிப்போய்விடும் என்ற அச்சத்தில் நாய் போல் மாறியுள்ளனர்.

அரசாங்கத்தின் கொள்கை, மோசடிகளை கூற முடியாது இவர்கள் தவிக்கும் போது அருவருப்பாக உள்ளது. அத்துடன் நாட்டின் ஒரு அங்குல நிலத்தை கூட வெளிநாட்டவர்களுக்கு வழங்க போவதில்லை என உதய கம்மன்பில கூறினார்.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை 50 வருடங்களுக்கு இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கும் தீர்மானத்துடன் அமைச்சர் உதய கம்மன்பிலவின் தேசப்பற்றாளர் என்ற ஆடை அவிழ்ந்து போயுள்ளது.

எது எப்படி இருந்த போதிலும் டொலருக்கான அரசாங்கம் நாட்டின் வளங்களை விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும் எனவும் சமிந்த விஜேசிறி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் – தமிழக முதலமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 56 மீனவர்களையும் விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க. ஸ்ராலின் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் தமிழக மீனவர்களின் 75 படகுகளும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

எனவே எதிர்வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்னர் அவர்களை விடுவித்து அவர்களது வாழ்வாதாரமாக உள்ள படகுகளையும் விடுவிக்குமாறு அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கை தொடர்பில் இந்தியா அளித்த உறுதிமொழி

கடினமான காலகட்டத்தை எதிர்கொள்ளும் இலங்கைக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது என அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்  தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்க இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன்  தொலைபேசியில் உரையாடியதாகவும், இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு உதவ தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டதாகவும் அவர் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை எண்ணெய் தாங்கி வளாகத்தை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளுக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தம் இருதரப்பு எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கூறினார். இலங்கைக்கான கடனுதவியை நீடிப்பது தொடர்பாக மேலும் ஆலோசித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

‘அண்டை நாடுகளின் முன்னுரிமை’ கொள்கையின் கீழ் இலங்கையை முக்கியமான பங்காளியாக இந்தியா ஆதரிக்கும் என புதுடெல்லியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

இந்தியப் பிரதமருக்கு அனுப்பப்படுவது தமிழீழத்துக்கான வரைவா? கேள்வி எழுப்பும் அமைச்சர் தினேஷ் குணவர்தன

லையக மற்றும் முஸ்லிம் கட்சிகளைத் தவிர்த்து வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகள் மாத்திரம் கையொப்பமிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆவணம் அனுப்பப்படுமாக இருந்தால் அது விடுதலைப் புலிகளின் கனவான தமிழீழத்துக்கான வரைவாகவே இருக்கும் என்று கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைப்பதற்காகத் தமிழ்பேசும் தரப் புக்களின் பொது நிலைப்பாட்டைப் பிரதி பலிக்கும் ஆவணத்தில் வடக்கு, கிழக்கு தமிழர்களின் கட்சிகளின் தலைவர்கள் மாத்திரம் நேற்று ஒப்பமிட்டனர். இதில் மலையக, முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் எவரும் ஒப்பமிடவில்லை.

இது தொடர்பில் நேற்றிரவு ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-

தமிழ்பேசும் கட்சிகளுக்கிடையில் – அதன் தலைவர்களுக்கிடையில் பொது வான இணக்கப்பாடு இல்லை; ஒற்றுமை இல்லை. இந்தியப் பிரதமருக்கான பொது ஆவண விவகாரம் இதை வெளிக்காட் டுகின்றது. வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் தமிழ்பேசும் கட்சிகளோ அல்லது இந்தியா உள்ளிட்ட நாடுகளோ ஒருபோதும் அரசியல் தீர்வை வழங்காது. இலங்கை எனும் எமது நாட்டில் உள் ளகப் பிரச்சினைகளில் தலையிட வெளிநாடுகளுக்கு அனுமதி இல்லை.

நாட்டின் அரசுதான் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கும். தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கும் நடவடிக்கையில் எமது அரசு ஈடுபட்டுள்ளது. ஆனால், தமிழ்பேசும் கட்சிகளின் தலைவர்கள் எம்மை நாடாமல் சர்வதேசத்தை நாடுவதுதான் விசித்திரமாகவுள்ளது” என்றார்.

Posted in Uncategorized

திருமலை எண்ணெய் குதங்கள்; கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஒப்பந்தம் நேற்று கைச்சாத்து

திருமலை எண்ணெய் குதங்கள்: திருமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் நேற்று மாலை கைச்சாத்திடப்பட்டது.

திறைசேரி செயலாளர், காணி ஆணையாளர் நாயகம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம், மற்றும் ட்ரிங்கோ பெற்றோலியம் ரேமினல் லிமிட்டெட் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச் சாத்திட்டுள்ளனர்.

திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்திய நிறுவனத்துக்கு வழங்குவதற்கு கடும் எதிர்ப்பை தொழிற்சங்கங்கள் வெளியிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

திருகோணமலை பெரியகுளம் பகுதியில் விகாரை அமைப்பதற்கு முயற்சி- மக்கள் ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை பெரியகுளம் பகுதியில் விகாரை ஒன்றினை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த பகுதி மக்களால் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை பெரியகுளம் பகுதியில் விகாரை ஒன்றினை அமைப்பதற்காக அப்பகுதியில் அமைந்துள்ள கடைகளை அகற்றித்தருமாறு உப்புவெளி காவல் நிலையத்தில் பௌத்த துறவி ஒருவரால் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த பகுதிக்கு வருகைதந்திருந்த காவல் துறையினர் அக்கடைகளை அகற்றுமாறு அறிவுருத்தியிருந்த நிலையில் ஒன்று திரண்ட அப்பகுதி வாசிகளால் குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.குறித்த போராட்டத்தில் பொதுமக்களோடு இணைந்து பாராளுமன்ற உருப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

நாடு இக்கட்டான சூழ்நிலையில் காணப்படும் இக்காலகட்டத்தில் அரசு இவ்வாறான திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுவுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதை அவதானிக்கக்கூடியதாக இருப்பதுடன். தமிழ்மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் பரவலான பெரும்பான்மையினக் குடியேற்றங்களை நிறுவுவதற்காக அரசால் முன்னெடுக்கபடும் இவ்வாறான செயற்பாடுகளை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்ததுடன் பாராளுமன்ற உருப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.

இலங்கையுடனான நிதி வர்த்தக நடவடிக்கைகள் குறித்து இந்திய வங்கிகள் மிகுந்த எச்சரிக்கை

இலங்கையுடனான நிதி வர்த்தக நடவடிக்கைகள் குறித்து இந்திய வங்கிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் காணப்படுவதாக இந்தியாவின் எகனமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை அந்நிய செலாவணிநெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் இந்தியாவின் முக்கிய வங்கிகள் இலங்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவது குறித்து எச்சரிக்கையுடன் செயற்படுகின்றனர் மிகவும் அவதானமாக தங்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

கடன்பத்திரத்தை ஏற்றுக்கொள்வதில் வங்கிகள் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்படுகின்றன என தெரிவித்துள்ள இந்திய ஊடகம் ஏனைய வங்கிகள் ஏற்றுமதியாளர்களின் நிலை தொகை கடன்காலம் மற்றும் கடன்பத்திரங்களை வழங்கும் வங்கிகளின்நிலை ஆகியவற்றை அடிப்படையாகவைத்து கடன்பத்திரத்தை வழங்குகின்றன எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கையால் தற்போது உருவாகியுள்ள நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் என வங்கியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். டிசம்பர் மாத இறுதியில் இலங்கையின் அந்நிய செலாவணி ஒரு மாத இறக்குமதிக்கு போதுமானதாக காணப்பட்டது என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான ஏற்றுமதியாளர்களின் ஆவணங்கள் மீது நாங்கள் முழுமையான தடையை விதிக்கவில்லை கடன்பத்திரத்தை வழங்கும் வங்கிகளின் நிலைமையை அடிப்படையாக வைத்து இதனை முன்னெடுக்கின்றோம் என ஸ்டேட் பாங் ஓவ் இந்தியாவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய வங்கிகளில் எச்டிஎவ்சி வங்கி இலங்கைக்கான ஏற்றுமதி கடன்பத்திரங்களை கையாள்வதில் அவதானமாக செயற்படுகின்றது. இலங்கைக்கான பல ஏற்றுமதிகளிற்கு நிதி வழங்கிய அக்சிஸ் மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில்இந்த விவகாரத்தை கையாள்கின்றது.

இலங்கை வங்கிகளில் எந்த தவறும் இல்லை ஆனால் கொடுப்பனவுகள் தாமதமாகும் போது அந்த நாட்டின் அந்நிய செலாவணி சந்தையில் போதிய அளவு டொலர்கள் கையிருப்பில் இருக்காது என வங்கியாளர் ஒருவர்தெரிவித்துள்ளார். 2020இல் இலங்கைக்கான இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 3.2 பில்லியனாடொலராக காணப்பட்டது.