மன்னாரில் டெங்கு காய்ச்சல் அபாயம்

மன்னார் மாவட்டத்தில் நிலவும் பலத்த மழையுடனான வானிலையுடன் தற்போது டெங்கு காய்ச்சலும் தீவிரமாக பரவி வருவதாக சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த மாதத்தில் மாத்திரம் 25 பேர் டெங்கு காய்ச்சலுடன் அடையாளங்காணப்பட்டுள்ளதாக மன்னர் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர், வைத்தியர் ரி. விநோதன் தெரிவித்துள்ளார்.

இன்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

காய்ச்சல் ஏற்பட்டவுடன் பிற சிகிச்சைகளின்றி, உடனடியாக வைத்தியசாலையை நாடுமாறும் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு நாடாளுமன்றத்தில் தமிழ் எம்.பிக்கள் கண்டனம்

முல்லைத்தீவில் செய்தி சேகரிக்கச் சென்ற  ஊடகவியலாளர் ஒருவர் இராணுவத்தினரால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் எம்.பிக்கள் சபையில் கடும் கண்டனங்களை வெளியிட்டனர்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மின்சக்தி அமைச்சு, வலுசக்தி அமைச்சு ஆகியவற்றின் நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பிக்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பியான செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் தமது கடுமையான கண்டனங்களை வெளியிட்டனர்.

கடந்த சனிக்கிழமை காலை முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளரான விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் என்பவர் முள்ளியவாய்க்கால் கிழக்கில் காலை செய்தி சேகரிப்புக்காகச் சென்று அங்கிருந்து வீடு திரும்பிய நிலையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் பெயர்ப்பலகையை ஒளிப்படம் எடுத்துள்ளபோது அந்தப் பகுதியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்ட நான்கு இராணுவத்தினர் குறிப்பிட்ட ஊடகவியலாளர் மீது முள்ளுக்கம்பி சுற்றப்பட்ட பச்சைப் பனை மட்டையால் தாக்குதல் நடத்தியமை மிருகத்தனமானது எனவும் இவர்கள் குற்றஞ்சாட்டினர்.

அத்துடன் தாக்குதல் நடத்திய  3 இராணுவத்தினர் கண்துடைப்புக்காகக் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில்கூட ஆஜர்செய்யப்படாது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு விட்டனர் என்று குற்றஞ்சாட்டிய தமிழ் எம்.பிக்கள், நாட்டில் இராணுவ ஆட்சி நடப்பதற்கு இந்தத் தாக்குதல் சிறந்த உதாரணம் எனவும் குறிப்பிட்டனர்.

Posted in Uncategorized

மொட்டு தம்மை புறக்கணித்துவிட்டதாக 12 சிறு அரசியல் கட்சிகள் விசனம்

அரசாங்கத்தின் வெற்றிக்காக செயற்பட்ட தாம் தற்போது புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கிய 12 சிறு அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன.

ஐக்கிய இலங்கை பொதுஜன கட்சி, அருணலு மக்கள் முன்னணி, எமது மக்கள் உரிமை கட்சி, சமூக அபிவிருத்தி கட்சி, தேசிய பொதுஜன கட்சி, மக்கள் அபிவிருத்தி கட்சி, ஹெலபிம ஜனதா கட்சி, ஐக்கிய இலங்கை மக்கள் சக்தி கட்சி, இலங்கை இந்திய பிரஜைகள் கட்சி, ஐக்கிய சுதந்திரக் கட்சி, ஐக்கிய ஜனநாயக மக்கள் கட்சி, இலங்கை ஜனநாயக தேசியக் கட்சி ஆகியன இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அரசாங்கம் தொடர்பான தமது அதிருப்தியை வௌிப்படுத்தின.

மொட்டுடன் கைகோர்த்து தற்போதுள்ள அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் உருவாக்க ஒத்துழைப்பு வழங்கிய போதும், தமது கருத்துக்கள் செவிமடுக்கப்படுவதில்லை என ஐக்கிய இலங்கை பொதுமக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ருவன் திலக்க பேதுருஆரச்சி குறிப்பிட்டார்.

இந்த நிலை தொடர்ந்தால் அரசாங்கமும் நாடும் நாட்டு மக்களும் கஷ்டத்தில் வீழ்வார்கள் என அவர் குறிப்பிட்டார்.

இது நாட்டு மக்களின் துரதிர்ஷ்டம் என கூறி மெளமாக இருக்க தாம் தயாரில்லை என கூறிய ருவன் திலக்க, சரியான பாதையில் பயணிக்க முடியாவிட்டால் அரசுடனான நட்புறவை கைவிட வேண்டிய நிலை தமக்கு ஏற்படும் என கூறினார்.

Posted in Uncategorized

உகாண்டாவின் நிலை இலங்கைக்கு ஏற்படும்: சரத் பொன்சேகா

உகாண்டாவை போலவே சீனாவின் கடன் இலங்கையை விழுங்கிக்கொண்டிருப்பதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

சீனாவிடமிருந்து பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாமையால் உகாண்டாவிலுள்ள ஒரேயொரு சர்வதேச விமான நிலையத்தையும் சீனா கையகப்படுத்தியதாக ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

தேசிய திட்டமிடலொன்று இல்லாமல் சீனாவிடமிருந்து பாரியளவில் கடன் வாங்கும் ஊழலுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் முறையற்ற முடிவு இதுவென்பதே சரத் பொன்சேகாவின் நிலைப்பாடாகும்.

இதனிடையே, மேற்குலகின் கடன் வலையிலிருந்து இலங்கையை சீனா காப்பாற்றியுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்து, அத்தியாவசிய டொலர்களை திரட்ட அரசாங்கம் தீர்மானித்ததாகவும், அந்த பணம் சீனாவின் EXIM வங்கிக்கு திருப்பி செலுத்துவதற்கு பயன்படுத்தப்படவில்லை எனவும் சர்வதேச இறையாண்மை பத்திரங்களை திருப்பி செலுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டது எனவும் சீன தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Posted in Uncategorized

அரசியல் கைதிகளை வாழ விடுங்கள் அல்லது வழியை விடுங்கள் -அருட்தந்தை மா.சத்திவேல்

அரசியல் கைதிகளாக நீண்ட நாட்கள் தடுப்புக் காவலில் இருந்து விடுதலையானவர்களை வாழவிடுங்கள் அல்லது வழியை விடுங்கள் என அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகளாக நீண்ட நாட்கள் தடுப்புக் காவலில் இருந்து விடுதலையானவர்களையும், ஒட்டு மொத்த தமிழர்களையும் வாழ விடுங்கள் அல்லது வழியை விடுங்கள் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு நாடு என பிரகடனப்படுத் தப்பட்டுள்ளது. அனைத்து மக்களுக்கும் கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், நடமாடும் சுதந்திரம் என்பன உண்டு. இதனை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கும் , அரசு அதிகாரிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும், பொலிசாருக்கும் உள்ளது. இத்தகைய சுதந்திரமும், பாதுகாப்பும் அரசியல் கைதிகளாக சிறையில் இருந்து விடுதலை பெற்றவர்களுக்கும் முழுமையாக கிடைக்க வேண்டும்.

இதனை விடுத்து விசாரணை என அழைப்பு விடுப்பது, தங்களை இரகசிய பொலிசாரும், புலனாய்வாளர்களும் பின்தொடர்கிறார்கள் என்று உணரச் செய்வதும் அடிப்படை உரிமை மீறல் ஆகும். இது தொடரக்கூடாது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு ஆட்சியாளரிடம் வேண்டுகோள் விடுக்கின்றது.

முன்னாள் அரசியல் கைதியான வவுனியாவை சேரந்த செல்வநாயகம் ஆனந்தவர்ணன் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் எதிர்வரும் டிசம்பர் மாதம் 1ம் திகதி விசாரணைக்கென கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார். இது அரசியல் கைதியாக இருந்து விடுதலை பெற்றவர்களுக்கு பின்னால் புலனாய்வாளர்கள் கழுகு கண்களோடு உள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

அரசியல் கைதிகளை வாழ விடுங்கள் அல்லது வழியை விடுங்கள் -அருட்தந்தை மா.சத்திவேல்அரசியல் கைதிகளாக நீண்ட காலம் சிறை வாழ்க்கையை அனுபவித்த பின்னர் விடுதலையானோர் தன் குடும்ப உறவுகளோடு சந்தோஷமாகவும், சுதந்திரமாகவும் நடமாடி விடுதலையை முழுமையாக அனுபவிக்க வேண்டும். நாம் தொடர்ந்தும் கண்காணிக்கப்படுகின்றோம் எனும் உணர்வுக்குள் அவர்களை தள்ளுவதும், விசாரணைக்கு அழைப்பதும் அவர்களின் மகிழ்வை இல்லாதொழித்து திறந்தவெளி சிறைக்குள் நாம் இருக்கின்றோம் எனும் மனநிலையை தோற்றுவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

புலிப் பயங்கரவாதிகளை தோற்கடித்து விட்டோம், பயங்கரவாதத்தை இல்லாதொழித்து விட்டோம் என வெற்றிவிழா எடுப்பவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் அரசியல் கைதிகள் தன் குடும்ப உறவுகளோடு வாழ்வை தொடர அனுமதிக்க வேண்டும். இது மறுக்கப்பட்டு நாம் அடிமை நிலையில் இருக்கின்றோம் என உணர்வு தூண்டப்படுமாயின் அது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என ஆட்சியாளர்கள் உணரத் தவறுவது ஏன்? போர் வெற்றி என்பது மக்களை அடிமையாக்குவதல்ல.

மக்களது சுதந்திரமானதும், கௌரவமானதுமான வாழ்வை உறுதி செய்வதாகும். அது இன்றும் முன்னாள் அரசியல் கைதிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் கிடைக்கவில்லை என்பதனையே விசாரணைக்கான அழைப்பு வெளிப்படுத்துகின்றது.

அரசியல் கைதிகளாக நீண்ட நாட்கள் தடுப்புக் காவலில் இருந்து விடுதலையானவர்களையும், ஒட்டு மொத்த தமிழர்களையும் வாழ விடுங்கள் அல்லது வழியை விடுங்கள் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வேண்டுகோள் விடுப்பதோடு சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் ஐநா மனித உரிமை ஆணையகம் வருடாந்த திருவிழாவை நடத்துவதோடு நின்றுவிடாமல் அடிப்படை மனித உரிமைகளை பாதுகாக்க முனைப்பு காட்ட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றது.

Posted in Uncategorized

அரசியல் தலைமைகளின் ஒற்றுமை முயற்சிக்கு ஒத்துழைக்கவும் – பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன்

அரசியல் தலைமைகளின் ஒற்றுமை முயற்சிக்கு, ஏனைய கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தலைமைகளின் ஒற்றுமை முயற்சிக்கு, பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும் என, தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளமை தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, த.சித்தார்த்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர்,  தாம் தொடர்ச்சியாக அரசியல் தலைமைகளின் ஒற்றுமைக்கு முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும் தனிப்பட்ட ரீதியாகவும் மற்றவர்களுடன் பேசி பல முயற்சிகளை எடுத்து வருவதாகவும் கூறினார்.

தமிழ்த் தேசிய பரப்பில் உள்ள அனைத்து கட்சிகளும்  ஒற்றமைபட்டு ஒன்றுபடுவோமாக இருந்தால், அடுத்த கட்டமாக ஒரு பலமான தேசிய அரசியல் அமைப்பாக வந்து, தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை முன்னெடுப்பதற்கு வசதியாக இருக்கும் எனவும், அவர் தெரிவித்தார்.

ஆகவே மாவை,  சுரேஷ், செல்வம் போன்ற அனைவரும் இணைந்து, இந்த முயற்சியை எடுக்க வேண்டும் என்பதே எனது  கோரிக்கை எனவும், சித்தார்த்தன் கூறினார்.

Posted in Uncategorized

பாதீடு தோல்வி: வல்வெட்டித்துறை நகர சபை தவிசாளரின் பதவி பறிபோகும்?

வல்வெட்டித்துறை நகர சபையின் வரவு-செலவுத் திட்டம், இரண்டாம் முறையும் இன்றைய தினமும் (30) ஒரு வாக்கால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகர சபை வரவு-செலவுத் திட்டம் கூட்டம், இன்றைய தினம், தவிசாளர் என். செல்வேந்திரா தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, கடந்த 17ஆம் திகதி, சபையில் முன்வைக்கப்பட்ட வரவு-செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் திருத்தங்களுடன் சபையில் முன்வைக்கப்பட்ட போது, அதுவும் தோற்கடிக்கப்பட்டு உள்ளது. வாக்களிப்பின் போது முன்னரைப் போல எதிராக ஒன்பது வாக்குகளும் ஆதரவாக எட்டு  வாக்குகளும் கிடைத்தன.

இதனால் ஒரு வாக்கினால்  வரவு – செலவுத் திட்டம்  மீண்டும்  தோல்வி அடைந்தது.

இதனையடுத்து சபைக்கு புதிய தவிசாளர், உபதவிசாளர் தெரிவு  செய்யப்பட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தவிசாளார் கே. கருணாந்தராசா (வயது 76) கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, கடந்த ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதியன்று உயிரிழந்தார்.

அதனை அடுத்து, புதிய தவிசாளராக என். செல்வேந்திரா, கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதியன்று, ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

இந்நிலையில் அவரால் முன்வைக்கப்பட்ட இரு வரவு-செலவுத் திட்டமும் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

எரிவாயு பிரச்சினைகள் குறித்து பாராளுமன்ற சிறப்பு ஆலோசனைக் குழு

உள்நாட்டு எரிவாயு தொடர்பாக தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிக்க பாராளுமன்ற சிறப்பு ஆலோசனைக் குழு ஒன்று கூட்டப்பட்டுள்ளது.

நாளை (01) காலை 9.00 மணிக்கு பாராளுமன்றத்தில் இந்த கூட்டம் கூடவுள்ளது.  பாராளுமன்றத்தில் இன்று (30) உரையாற்றும் போதே சபாநாயகர் இதனை தெரிவித்தார்.

இதே நேரம்,  நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்று வரும் எரிவாயு விபத்துக்கள் தொடர்பான அறிக்கைகளை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை முன்வைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குழுவொன்றை நியமித்துள்ளார்.

வர்த்தக மற்றும் விற்பனை நிலையங்களில் எரிவாயு (LPG) சிலிண்டர் தீ விபத்துக்கு உள்ளாகின்றமை,​ைவெடிப்புகள் ஏற்படுகின்றமைக்கான காரணங்களை ஆராய்ந்து தீர்வுகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி குறித்த குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளார்.

வரலாற்றின் முதல் தடவையாக யாழ் மாநகரசபையில் செங்கோல்

வரலாற்றின் முதல் தடவையாக யாழ் மாநகரசபை அமர்வு செங்கோலுடன் மாநகர முதல்வர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது

மாநகர முதல்வர் வி. மணிவண்ணனின் வேண்டுகோளுக்கு அமைய அண்மையில் குகபதமடைந்த நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானம் யாழ்.மாநகர சபைக்கு செங்கோல் ஒன்றினை வழங்கியது.

நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 11ஆவது நிர்வாக அதிகாரி குமரேஷ் சயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட செங்கோலுடன் வரலாற்றில் முதல் தடவையாக இன்றைய மாநகர அமர்வு மாநகர முதல்வர் தலைமையில் நடைபெற்றது.

மின்சாரத் தடை – விரைவில் மின்சாரம் வழங்கப்படும்…!

நாட்டின் பல பகுதிகளுக்கு மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொத்மலை மின் உற்பத்தி நிலையம் முதல் பியகம வரையான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு இதற்கு காரணம் எனவும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மாத்தறை, காலி, இரத்மலானை, குருநாகல், அதுருகிரிய, பியகம, ஹபரணை, பன்னிப்பிட்டிய உள்ளிட்ட பல பிரதேசங்களில் மின்சாரத் தடை இவ்வாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் மக்கள் பெரும் அசௌகரியத்துக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.

இந்நிலையில் மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized