கோட்டாபயவின் அழைப்பை புறக்கணித்த 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

159 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருகின்றனர். இவர்களில் 107 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

கூட்டத்திற்கு சமூகமளிக்காத 52 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 20 பேர் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்பதை தெரியப்படுத்தியுள்ளனர்.

கூட்டத்தில் கலந்துகொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர்களில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர் விமல் வீரவங்ச ஆகியோரும் அடங்குகின்றனர்.

ஜனாதிபதி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் பிரச்சினைகள் பற்றி பேசிய போதிலும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச எந்த கருத்துக்களையும் வெளியிடவில்லை என கூட்டத்தில் கலந்துகொண்ட ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து கனடா செல்வோருக்காக அறிமுகமாகியுள்ள புதிய திட்டம்

வெளிநாடுகளில் இருந்து கனடாவுக்கு செல்லும் பயணிகளுக்காக புதிய திட்டமொன்றை ஏர் கனடா அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி குறித்த பயணிகள் ஏர் கனடா விமானங்களில் பயணிக்க முன் தாமாகவே கோவிட் சுயபரிசோதனை செய்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்விட்ச் ஹெல்த் என்ற திட்டத்தின் மேற்பார்வையின் கீழ் பயணிகள் சுய பரிசோதனை செய்து 45 நிமிடங்களுக்குள் பரிசோதனை முடிவின் மின்னணு அறிக்கையைப் பெறலாம் என தெரியவருகிறது.

கனடா அரசாங்கத்தின் சோதனை நுழைவுத் தேவைகளை இந்த பரிசோதனையானது பூர்த்தி செய்யும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கனடாவிற்கு செல்லும் பயணிகள் விமானத்தில் பயணிக்கும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவின் சான்றிதழை (கோவிட் தொற்று இல்லை என்பதற்கான முடிவை) சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதாபிமான அடிப்படையில் ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்பட வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர்

மனிதாபிமான அடிப்படையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு சென்று எதிர்க்கட்சித் தலைவர் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.

இதன் பின்னர் எதிர்கட்சித்தலைவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

இதன்போது, ரஞ்சன் ராமநாயக்க முதுகெலும்பு மற்றும் முழங்கால் பாதிக்கப்பட்டமையால் தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்ளதாகவும் இதற்கு மேலான முறையான சிகிச்சையை அவருக்கு வழங்க முடியும் எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

வெலிக்கடை சிறைச்சாலைக்கு அவரை மாற்றம் செய்தால், அவருக்கு முறையான சிகிச்சை வழங்க முடியும் எனவும் உயர்கல்வி நடவடிக்கையை தொடர முடியும் எனவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

அவர் அரசாங்க நிதியை பிழையாகக் கையாளவில்லை, ஊழலில் ஈடுபடவில்லை. அவரது தனிப்பட்ட சொத்துக்கள் முதற்கொண்டு மக்களுக்காக செலவிட்டுள்ளார். மனிதாபிமான அடிப்படையில் ஜனாதிபதி அவருக்கு முழுமையாக விடுதலை வழங்குவார் என எதிர்பார்க்கிறேன் என சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

மக்கள் விடுதலை முன்னணி எழுத்தாணை மனு தாக்கல்

கெரவலபிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்கு சொந்தமான பங்குகளில் 40 வீதமானவற்றை அமெரிக்காவின் நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை வலுவிழக்க செய்யுமாறு கோரி, மக்கள் விடுதலை முன்னணியின் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் வசந்த சமரசிங்க ஆகியோரால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, அமைச்சரவை, இலங்கை மின்சார சபை, வெஸ்ற் கோர்ஸ்ற் பவர் தனியார் நிறுவனம், லக்தனவி நிறுவனம், இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உள்ளிட்ட 43 தரப்பினர் மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அமைச்சரவையால் கடந்த செப்டம்பர் மாதம் 06 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை வலுவிழக்க செய்யுமாறும் தமது மனு மீதான விசாரணையை நிறைவு செய்யும் வரை அமைச்சரவையின் தீர்மானம் குறித்து நடவடிக்கை எடுப்பதை தடுத்து, இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சவேந்திர சில்வாவிற்கு ரஷ்யாவில் இராணுவ அணிவகுப்பு மரியாதை

ரஷ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு மொஸ்கோ நகரில் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

ரஷ்யாவின் இராணுவத் தளபதி ஜெனரல் ஒலகே செலியுகோவ் மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சின் அழைப்பிற்கு ஏற்பவே இராணுவத் தளபதி இந்த விஜயத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு மொஸ்கோ நகரில் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

பின்னர் அங்குள்ள பூங்காவொன்றில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நினைவுத் தூபிக்கு இராணுவத் தளபதி மலரஞ்சலி செலுத்தினார்.

இந்த விஜயத்தின் போது இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ரஷ்யாவின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் பலரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கையின் அதிகார முன்னுரிமை தரவரிசையில் 5ஆம் இடத்துக்கு ஆளுநர் பதவி

இலங்கையின் அதிகார முன்னுரிமை பட்டியலின் 20ஆவது இடத்தில் இருந்த இலங்கை மத்திய வங்கி ஆளுநரின் பதவி 5 ஆவது இடத்துக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளது..ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், பிரதம நீதியரசர் முதல் நான்கு இடங்களிலும் எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சரவை அமைச்சர்கள், பீல்ட் மார்ஷல் ஆகியோர் ஐந்தாம் இடத்திலும் பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், இலங்கை மத்திய வங்கி ஆளுநரும் அந்த ஐந்தாம் இடத்துக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளார்.மாகாண இயல்புடைய விழாக்கள் மற்றும் சந்தர்ப்பங்களில், மத்திய வங்கியின் ஆளுநரை அடுத்து மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு உடனடி முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதுடன், இந்த முன்னுரிமை பட்டியல் அரச விழாக்களின் போது பயன்படுத்தப்பட வேண்டும்.

இதேவேளை, மத மற்றும் திருச்சபை முக்கியஸ்தர்களுக்கு உரிய மரியாதை-முன்னுரிமை வழங்கப்படும்.

முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெறாத எந்தவொரு நபர்களுக்கும் அல்லது அதிகாரிகளுக்கும் மரியாதைக்குரிய முன்னுரிமையை வழங்க தனது விருப்புரிமையை ஜனாதிபதி பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

‘டேர்மினேட்டர்’ கோட்டாபய உங்கள் நகரத்திற்கு வருகிறார்!! ஸ்கொட்லன்ட் பத்திரிகையில் விளம்பரம்!

காலநிலை மாற்றம் தொடர்பாக எதிர்வரும் 31ம் திகதி ஸ்கொட்லன்ட் தலைநகர் கிளாசோவில் ஆரம்பமாகவிருக்கும் ஐ.நா உச்சி மாநாட்டில் (United Nations Climate Change Conference) கலந்துகொள்வதற்காக வருகைதர இருக்கும் சிறிலங்கா அரசதலைவர் கோட்டாபாய ராஜபக்சவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக புலம்பெயர் தமிழர்கள் பாரிய அளவிலான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

அந்தவகையில் இன்று பிரபல ஸ்கொட்லாந்து ஆங்கில பத்திகை ஒன்றில் சிறிலங்கா அரச அதிபரின் வருகை பற்றிய ஒரு விளம்பரச் செய்தி பிரசுரமாகியிருந்தது.

ஸ்காட்லாந்து தேசத்தில் இருந்து வெளியாகும் பிரபல பத்திரிகையான, ‘த ஹெரால்’ (The Herald) என்ற பத்திரிகை, ‘இனப்படுகொலையாளி உங்கள் நகரத்திற்கு வருகிறார்’ என்ற செய்தியை முழுப் பக்கத்தில் பிரசுரித்துள்ளது. ஒரு இனத்தின் விடுதலையை நசுக்கிய இனப் படுகொலையாளி என்றும், ‘டேர்மினேட்டர்’ என்றும் அவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

ஸ்கொட்லன்ட் வருகைதரும் கோட்டாபாயவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக ஆர்பாட்டங்கள் உட்பட பல செயற்பாடுகளை புலம்பெயர் அமைப்புக்கள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானி மன்னார் விஜயம்!

இந்தியாவின் கோடீஸ்வரரும், பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவருமான அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

அதானி குழுமம் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்திக்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், அவர் இங்கு வருகை தந்துள்ளார்.

கெளதம் அதானியும் அவரின் குடும்பத்தின் சிலரும், இரண்டு தனியார் விமானங்களில் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

கௌதம் அதானியின் மகன், Adani Ports and Special Economic Zone பிரதம நிறைவேற்றதிகாரி, அதானி பசுமை எரிசக்தி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் உள்ளிட்டோரும் இலங்கைக்கு வந்துள்ளனர்.

கடந்த 7 ஆம் திகதி போர்ப்ஸ் சஞ்சிகை வௌியிட்ட இந்தியாவின் செல்வந்த வர்த்தகர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் கௌதம் அதானி உள்ளார்.

துறைமுகம், எரிசக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி செயற்றிட்டம் தொடர்பில் இலங்கையின் உயர் அதிகாரிகளுடன் கௌதம் அதானி கலந்துரையாடவுள்ளதாக த ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.

அவர், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்திய வர்த்தகர்கள் சிலர் இன்று மாலை மன்னாருக்கு சென்றுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் D.V.சானக்க, இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் சஞ்சய மொஹொட்டால ஆகியோரும் அவர்களுடன் அங்கு சென்றிருந்தார்

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 வீத பங்கை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்கும் உடன்படிக்கை கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.

West Container International Terminal எனும் புதிய கூட்டு நிறுவனமொன்றினூடாக, இந்த மேற்கு முனையத்தின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கு முன்னர், இந்தியா, ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையில் கூட்டுத் திட்டமாக கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு பிரேரிக்கப்பட்டிருந்ததுடன், தற்போதைய அரசாங்கம் அந்தத் திட்டத்தை நிறுத்தி, மேற்கு முனையத்தை அதானி குழுமம் தலைமையிலான கூட்டுத் திட்டத்திற்கு வழங்கியது.

இதனிடையே, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் (Japan International Cooperation Agency) நிறுவனம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை அரசாங்கம் இணைந்து அபிவிருத்தி செய்யும் கொழும்பு துறைமுகத்தின் நுழைவாயிலின் முதலாவது கான்கிரீட் பாலத்தை பொருத்தும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது.

புதிய களனி பாலத்திலிருந்து காலி முகத்திடல் வரை தூண்களில் நிர்மாணிக்கப்படும் இந்த வீதியில், முன்னரே பொருத்தப்பட்ட கான்கிரீட் பாலத்தின் 3,279 பகுதிகள் பொருத்தப்படவுள்ளன.

நான்கு வழிச்சாலைகளையும், 5.3 கிலோமீட்டர் நீளத்தையும் கொண்டதாக இது அமையவுள்ளது.

துறைமுக நுழைவாயிலின் அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தினால் துறைமுக வளாகத்தில் இடித்து அகற்றப்பட்ட கட்டடங்களுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒதுக்கீட்டில் 17 மாடிகளைக் கொண்ட கடல்சார் வசதி நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

சீனா நிறைவேற்றியுள்ள புதிய எல்லை பாதுகாப்பு சட்டம்

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் எல்லை தொடர்பான பிரச்சினைகள் நீடித்து வரும் நிலையில், சீனா நேற்று முன்தினம் புதிய எல்லைகளுடன் சம்பந்தப்பட்ட நிலங்கள் தொடர்பான பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

சீனாவின் இறையாண்மையை பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது என சீனா அறிவித்துள்ளது.

இந்த புதிய சட்டத்தின் படி பிராந்திய இறையாண்மை மற்றும் தனது நாட்டின் எல்லைகளை குறைத்து மதிப்பிடும் எந்த செயற்பாடாக இருந்தாலும் அதனை சீனா எதிர்க்கும் என கூறப்பட்டுள்ளது.

எல்லையை தாண்டி வந்து தாக்குதல் நடத்துவோர் மீது பதில் தாக்குதல் நடத்த இந்த சட்டத்தின் மூலம் சீனப் படையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எல்லைகளில் நடைபெறும் ஆக்கிரமிப்பு, படையெடுப்புகள் போன்ற நடவடிக்கைகளை சீனா உறுதியுடன் எதிர்க்கும். அத்துடன் நாட்டின் எல்லைப் பகுதிகளில் போக்குவரத்து, தொலைத் தொடர்பு, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பான கட்டமைப்புகள் உருவாக்கப்படவுள்ளன.

ஏற்கனவே இந்திய எல்லை கிராமங்களில் சீனா, தனது பொதுவசதிகள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளை உருவாக்கி வரும் நிலையில், அதனை வலுப்படுத்தும் வகையில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில் இந்தியா – சீனா இடையிலான எல்லைப் பிரச்சினை நீடித்து வருவதுடன் லடாக் பகுதியில் இந்திய – சீன இராணுவத்தினர் இடையில் மோதல் நடைபெற்ற வரும் சூழ்நிலையில் இந்தப் பிரிவு சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

இதனை தவிர அயல் நாடுகளுடனான எல்லைப் பிரச்சினைகளுக்கு பரஸ்பர நம்பிக்கை மற்றும் நட்பு ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்படும் எனவும் இந்த சீனா நிறைவேற்றியுள்ள சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

கனடியத் தூதரக அதிகாரிகள் யாழ் பல்கலைக்கு விஜயம்

கனடியத் தூதரக அதிகாரிகள் இன்று (25) காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

கனேடிய அரசின் நிதி அனுசரணையுடன் இலங்கையிலுள்ள நான்கு பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் திட்ட மேம்பாடு குறித்து ஆராய்வதற்காகவே கனடிய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் குழு இன்று யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டது.

தேசிய மொழிகள் சமத்துவ மேம்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் டொம் ப்றவ்ணல் தலைமையில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர். விஜயலட்சுமி, திட்ட ஆலோசகர் ஆகியோரே கனடியத் தூதரகத்தின் சார்பில் விஜயம் செய்தனர் .

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, கலைப்பீடாதிபதி கலாநிதி கே. சுதாகர், மொழிபெயர்ப்புகள் கற்றல் துறையின் தலைவர் எஸ். கண்ணதாஸ் ஆகியோரை கனடிய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் சந்தித்து திட்ட மேம்பாடு குறித்து கேட்டறிந்தனர்.