அசாத் சாலிக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வௌியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் இன்று அசாத் சாலிக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கின் சாட்சி விசாரணைகளை எதிர்வரும் நவம்பர் 02 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான அறிவிப்பை விடுத்த நீதிபதி, முறைப்பாட்டின் சாட்சியாளர்களை அன்றைய தினம் மன்றில் ஆஜராகுமாறு அறிவித்தலை அனுப்புவதற்கும் உத்தரவிட்டுள்ளார்.

வழக்கின் சாட்சிப் பொருளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இறுவெட்டையும் அன்றைய தினம் மன்றில் சமர்ப்பிக்குமாறு அது குறித்து விசாரணை நடத்திய குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இறுவெட்டை பகிரங்க நீதிமன்றத்தில் ஔிபரப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மேல் நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி அமல் ரணராஜா இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Posted in Uncategorized

திரவ உர இறக்குமதி: விசாரணை நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி முறைப்பாடு

இந்தியாவிலிருந்து திரவ உர இறக்குமதியின் போது, தனியார் நிறுவனமொன்றுக்கு பணம் செலுத்திய விடயம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்ற விசாரணை திணைக்களத்தில் இன்று முறைப்பாடொன்றை முன்வைத்தனர்.

இந்தியாவிலிருந்து நனோ நைட்ரஜன் இறக்குமதிக்காக 29 கோடி ரூபா பணம் தனியார் நிறுவனமொன்றினால் கடந்த 17ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் கருத்து வௌியிட்டிருந்தார்.

அந்த பணத்தில், 09 கோடியே 20 இலட்சம் ரூபா மாத்திரம் உர இறக்குமதிக்கு செலவிடப்பட்டுள்ளதாகவும் மீதி பணம் அந்த கணக்கிலேயே வைப்பிலுள்ளதாகவும் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார்.

அருட்தந்தை சிறில் காமினிக்கு எதிராக மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே முறைப்பாடு

அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினி மற்றும் ஏனைய சிலரால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஆட்சேபித்து இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அருட்தந்தை சிறில் காமினி மற்றும் ஏனைய சிலரால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு கடுமையான எதிர்ப்பை வௌியிட்டுள்ளதுடன், அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாம் எந்தவொரு நிலைமையின் கீழும் எந்தவொரு தினத்திலும் சஹரான் ஹாசிம் அல்லது அவருடைய வழியை பின்பற்றியவர்களுடன் தொடர்புகளை பேணவில்லை என அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்குமாறு மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே தனது முறைப்பாட்டினூடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

விரைவில் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் – இராதாகிருஷ்ணன்

அரசாங்கம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கொண்டிருந்தாலும் மக்கள் மத்தியில் பெரும்பான்மை பலத்தை இழந்திருக்கின்றது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

எனவே, விரைவில் இந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்புவோம். அதுவரை ஓயமாட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக இராகலை நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “குறுகிய காலத்தில் மக்களின் அதிருப்தியை சம்பாதித்து கொண்ட ஒரு அரசாங்கம் என்றால் அது இந்த அரசாங்கமே. இன்று எதை கேட்டாலும் விலையேற்றம், தட்டுப்பாடு என்ற வார்த்தைகளே வெளிவருகின்றது.

இந்த தீபாவளி தமிழர்களுக்கு ஒரு கறுப்பு தீபாவளியைாக அமைய போகின்றது. பொருட்களின் விலையேற்றம்,வேலைக்கான உரிய சம்பளமின்மை, தொடர்ச்சியான மக்களின் போராட்டம் போன்ற காரணங்களால் இந்த தீபாவளியை மக்கள் கொண்டாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

குறிப்பாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் விசேடமாக கொண்டாடும் தீபாவளி தினத்தை துக்க தினமாக கொண்டாட வேண்டிய சூழ்நிலையை இந்த அரசாங்கம் உருவாக்கியிருக்கின்றது.

நல்லாட்சி அரசாங்கத்தில் 50 ரூபாய் சம்பள உயர்வை தோட்ட தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியாது என்று எங்களை பார்த்து கை நீட்டியவர்கள் இன்று என்ன செய்துக்கொண்டிருக்கின்றார்கள்.

வாய் மூடி மௌனிகளாக அரசாங்கத்தை வக்காளத்து வாங்கி கொண்டிருக்கின்றார்கள். தொழிலாளர்களுக்கு எதிராக நடக்கின்ற அநீதிகளுக்கு குரல் கொடுக்க முடியாமல் இருக்கின்றார்கள்.

இப்படியான ஒரு நிலையில் நல்லாட்சியை குறை சொல்ல யாருக்கும் அருகதை கிடையாது. நல்லாட்சி அரசாங்கத்தில் கணிசமான சம்பள உயர்வை வழங்கியதோடு, எந்த காரணத்திற்காகவும் அத்தியவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கபடவில்லை.

எனவே, மக்களுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கின்ற இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வரை தமிழ் முற்போக்கு கூட்டணியின் போராட்டம் தொடரும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழர்களுக்கு கிடைக்குமா தனி ஈழம்? தென்னிலங்கையில் ஆதரவுக் குரல்

தமிழர்களுக்கு தனி ஈழம் வழங்க வேண்டும் என்கிறார் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன.

இலங்கையின் வளங்கள் மற்றும் நிலங்கள் பல்வேறு நாடுகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டால் இந்த நாட்டில் பிறந்த தமிழ் மக்களுக்கு ஏன் அவர்களின் ஈழத்திற்கான உரிமை வழங்கக் கூடாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

கொழும்பு துறைமுக நகரத்தை சீனாவிற்கும், திருகோணமலையில் உள்ள எண்ணெய் கஞ்சியங்களை இந்தியாவிற்கும், கெரவலபிட்டி மின் நிலையத்தை அமெரிக்காவிற்கும் என வளங்களை வழங்கினால் – தமிழ் மக்களுக்கு அவர்கள் விரும்பும் ஈழத்தை வழங்குவது மிகவும் நியாயமானதாக இருக்கும்.

பொது வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் தமிழர்களுக்கு ஈழம் வழங்கப்பட வேண்டும். அது சர்வதேச அங்கீகாரதிற்கு வழியேற்படுத்தும் என்று விக்கிரமபாகு கருணாரத்ன கூறியுள்ளார்.

அத்தோடு, தமது ஈழ மண்ணிற்காக வடக்கில் தமிழ் இளைஞர்களால் தொடங்கப்பட்ட போராட்டம் மேற்கத்திய உலகத்தால் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized

நல்லூரின் 11ஆவது நிர்வாக அதிகாரி கடமைகளை பொறுப்பேற்பு

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பதினோராவது நிர்வாக அதிகாரியாக குமரேஷ் சயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய பத்தாவது நிர்வாக அதிகாரியான குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் கடந்த 09ஆம் திகதி இறைபாதமடைந்தார்.

அன்றைய தினம் (09.10.2021) தொடக்கம், குமரேஷ் சயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் காலம் ஆரம்பமானது.

இந்த நிலையில் இன்றைய தினம் குமரேஷ் சயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று விசேட பூஜை வழிப்பாட்டில் கலந்து கொண்டிருந்தார்.

பத்தாவது நிர்வாக அதிகாரியான குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் 1964 டிசம்பர் 15 முதல் கடந்த 09ஆம் திகதி அவர் இறைபாதமடையும் வரை அவரே நிர்வாக அதிகாரியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

கிழக்கு ஆளுநர் இனக்கலவரத்தை ஏற்படுத்த முனைகிறார் பகிரங்க குற்றச்சாட்டு

கிழக்கின் ஆளுநர் அனுராதா ஜகம்பத்  பல்லினத்திற்கான ஆளுநராக இல்லாமல் தனிப்பட்ட ஒரு இனத்தின் ஆளுநராகவே செயற்படுகின்றார்.

அவர் பெரும்பான்மை மக்களை எமது மக்களின் நிலங்கள், மேய்ச்சல் தரைகள் போன்றனவற்றில் குடியமர்த்தி இனக்கலவரத்தை ஏற்படுத்த முனைகின்றார் என்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்.

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட காரமுனை காணிப் பிரச்சினை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அவர் மூன்று விடயங்களை செய்து கொண்டிருக்கின்றார். ஒன்று, பெரும்பான்மை மக்களை எமது மக்களின் நிலங்களில் குடியமர்த்தி இனக்கலவரத்தை ஏற்படுத்த முனைகின்றார். இரண்டாவது, தமிழ் பேசும் உயர் அதிகாரிகள் ஓய்வு பெற்றுச் செல்லும் போது அந்த உயர் நிர்வாகங்களில் சிங்களவரை நியமிக்கின்றார். மூன்றாவது, ஒழுங்கான முறையில் இயங்கிக் கொண்டிருக்கும் உள்ளுராட்சி சபைகளைக் கலைப்பதற்காக தங்கள் அடிவருடிகளை இங்கு அனுப்பி அந்தச் சபைகளைக் குழப்பிக் கொண்டிருக்கின்றார்.இவற்றையே அவர் செவ்வனே செய்துகொண்டிருக்கிறார்.

நாங்கள் விழிப்பாக இல்லாது விட்டால் எங்கள் வீட்டுக் கதவுகளும் குடியேறுவதற்கு தட்டப்படும் நிலையே உருவாகும். விழிப்புடன், அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவதன் மூலம் நாங்கள் எங்கள் உரிமையைப் பாதுகாக்க முடியும்.

நாங்கள் யாருக்கும் எதிரிகள் அல்ல. எமது மண்ணைப் பாதுகாப்பதற்காகவே நாங்கள் கஸ்டப்படுகின்றோம்.

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல நாங்கள் எங்களுக்குள் பிளவு பட்டால் கூத்தாடிகள் கூரையைப் பிரித்துக் கொண்டு இங்கு குடியேறுவதற்கு வருவார்கள். எனவே இந்த விடயத்தில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Posted in Uncategorized

வட மேல் மாகாண ஆளுநர் கட்சி தலைமையிலிருந்து நீக்கம்

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தவிசாளர் ராஜா கொல்லுரே பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கட்சித் தலைமையகத்தில் இன்று (24) நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வட மேல் மாகாண ஆளுநராக பதவி வகிக்கும் ராஜா கொல்லுரேவை, கட்சியின் அரசியல் குழுவினால் கொண்டுவரப்பட்ட யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கமைய, தவிசாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர், சேவை புறக்கணிப்பில் ஈடுபடும் வடமேல் மாகாண அதிபர் மற்றும் ஆசிரியர்களின் நவம்பர் மாதம் சம்பளத்தை இடைநிறுத்தப் போவதாக ராஜா கொலுரே கூறியதுடன் அது சமூகத்தில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மக்களை துன்பத்திலும் சிரிக்க வைக்கிறார்

விலைவாசி துன்பத்தில் சிக்கி விழி பிதுங்கும் நிலைமையில் நிற்கும் இந்நாட்டு மக்களிடம், “அரிசி-பருப்பு, விலைவாசிகளை பற்றி பேச நான் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்படவில்லை” என்று கூறி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிரிப்பு காட்டியுள்ளார். கி.மு 31ல் பிறந்து, உலகை அளந்த, எங்கள் அய்யன் தெய்வப்புலவர் திருவள்ளுவர் சொல்லிச்சென்ற “இடுக்கண் வருங்கால் நகுக” என்ற வாக்கியத்துக்கு இணங்க நாமும் சிரித்து வைப்போம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.

அரிசி, பருப்பு, விலைவாசிகளை பற்றி பேச தான் பதவிக்கு வரவில்லை என்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கூற்று பற்றி மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,

கொவிட் முதல் அலையின் போது, முதன் முறையாக நாட்டு மக்களை விளித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அன்று உரையாற்றினார். அந்த உரையில் அவர் கூறிய பிரதான விடயம் ஒன்று இருந்தது. அது என்ன?

செமன் மீன் டின், பருப்பு, பால்மா ஆகிய அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பேன். அவற்றை கட்டுப்பாட்டு விலைகள் தொடர்பான வர்த்தமானியை வெளியிடுவேன், என்று தனது உரையில் ஜனாதிபதி கூறினார்.

இதனால் எந்த பயனும் ஏற்படவில்லை என்பது வேறு விடயம். அவரது வர்த்தமானி விலைகளில் சந்தையில் பொருட்களை தேடியலைந்து மக்கள் ஏமாந்து போனதுதான் மிச்சம்.

சீனிக்கு ரூ. 49-75 என்ற மிகப்பெரிய வரி குறைப்பை இந்த ஜனாதிபதி செய்தார். வரி குறைந்தது. இதனால், சுமார் ரூ.1,595 கோடி வருமானத்தை திறைசேரி இழந்தது. ஆகா, அப்படியானால் இந்த பெரும் தொகை, பாமர மக்களுக்கு விலைக் குறைப்பாக கிடைக்கும். அதாவது சீனி அரசாங்கம் சொல்லும் குறைந்த விலையில் கிடைக்கும் என நாம் எதிர்பார்த்தோம். கடைசியில், இந்த ரூ.1,595 கோடி திறைசேரிக்கும் போகவில்லை. மக்களுக்கும் கிடைக்கவில்லை. எங்கே போனது? யாருக்கு கிடைத்தது? இதுபற்றி ஜனாதிபதி இதுவரை பதில் கூறவில்லை.

இதற்கிடையில் ஜனாதிபதி அரிசி, உணவு தானிய மொத்த வியாபார புறக்கோட்டை கடைவீதிக்கும் போய் அங்கே கடைகளில் சற்று நேரம் கணக்கு பிள்ளை வேலையும் பார்த்தார். பொருட்களை தேடி கண்டு பிடிக்கிறேன் என தனது இராணுவ அதிகாரி ஒருவரையும் நியமித்தார். அவரும் ஆலைகளை பிடிப்பேன், களஞ்சிய சாலைகளை உடைப்பேன், திறப்பேன் என்றார். ஒன்றும் பிரயோஜனம் இல்லை.

கடைசியில், அரிசி விலைகள் தொடர்பில், ஜனாதிபதியின் வர்த்தமானிகளை தூக்கி கடாசி விட்டு பாரிய ஆலை அதிபர்கள்தான் விலைகளை தீர்மானித்து அறிவித்தார்கள். இப்போது அந்த இராணுவ அதிகாரியும் காணாமல் போய் விட்டார்.

சந்தை பொருளாதார நாட்டில், பொருட்களின் விலைகளை, “தேவை-விநியோகம்” (Demand & Supply) ஆகியவைதான் தீர்மானிக்க முடியும். இரண்டும் சமபலத்தில் இருக்க வேண்டும். தேவை கூடி, விநியோகம் குறைந்தால் விலை கூடும். தேவை குறைந்து, விநியோகம் கூடினால் விலை குறையும்.

இந்த பொருளாதார அறிவு என்னிடம் உண்டு. எங்களிடம் உண்டு. இவர்களிடம் இல்லை. ஆகவே, இந்த இராணுவ அதிகாரிகள் தடாலடியாக விலைகளை தீர்மானிக்க முடியாது. அரசாங்கம், குறிப்பிட்ட பொருட்களின் இறக்குமதி, உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றை அவதானித்து, வரி குறைப்பு, வரி விதிப்பு என்ற நிர்வாகத்தை மட்டுமே செய்ய வேண்டும்.

இராணுவ, சுங்க, வரி அரசாங்க அதிகாரிகளை கொண்டு வர்த்தக சமூகத்தை மிரட்டி காரியமாற்ற முடியாது. மிரட்டினால், “போதுமடா சாமி” அல்லது “போதுமடா ஆமி” என்று கூறிவிட்டு வர்த்தக சமூகம் கடைகளை மூடி விட்டு வீடுகளில் இருப்பார்கள். “வேறு வழியில்லை. சும்மா முரண்பட வேண்டாம். கொஞ்ச நாளைக்கு வீட்டில் இருங்கள்”, என என் நண்பர்களுக்கு நான் சொன்னேன்.

இந்த ராஜபக்ச அரசுக்கு அடிப்படை பொருளாதார அறிவு இல்லை. பொருளியல் விஞ்ஞான கேள்விகளுக்கான பதில்கள், அடித்து கேட்டாலும் இவர்களிடம் கிடைக்காது. தெரியாத வேலையை செய்ய போய் இப்போது இவர்கள் மூக்குடைந்து போய் இருக்கின்றனர். இன்று, வாழ்க்கை செலவு விலைவாசி விஷயம் கைமீறி போனவுடன் ஜனாதிபதி விலைவாசியை தீர்மானிக்க நான் இந்த பதவிக்கு வரவில்லை என மாற்றி போடுகிறார். ஆகவே இடுக்கண் வருங்கால் நகுக!

Posted in Uncategorized

டயஸ்போரா சிறிலங்கா அரசிடம் சோரம் போகக் கூடாது – ரெலோவின் இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ்

இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியாக நெருக்கடியை ஏற்படுத்தும் புலம்பெயர் அமைப்புக்கள் இடையே உடைவினை ஏற்படுத்த கோட்டாபய அரசாங்கம் முன்னெடுத்துள்ள வியூகமே டயஸ்போராவை சந்திக்கும் நாடகம் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் அமைப்புகளுடன் பேச்சு நடத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சி குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழர் தாயகத்தில் தேசியத்திற்கு எதிராக தன்னுடைய அரசாங்கத்தில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கும் ஐனாதிபதிக்கு டயஸ்போராவிலும் குறிக்கப்பட்ட அமைப்புக்களை பிரித்து தன்னுடன் இணைக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது காரணம் அமெரிக்க ஐரோப்பிய மேற்குலகத்தின் ஆதரவைப் வலுப்படுத்த டயஸ்போராவின் ஆதரவு அவசியமாகவுள்ளது அதனால் சோரம் போகக் கூடிய அமைப்புக்களை தங்கள் பக்கம் திருப்ப முயற்சிக்கின்றனர் இதற்கு ஒரு போதும் புலம்பெயர் அமைப்புக்கள் சோரம் போகக் கூடாது.

தமிழ மக்களை வைத்து அரசியல் செய்யும் இலங்கை அரசாங்கம் தாயகத்தில் தொடர்ந்தும் நில ஆக்கிரமிப்பையும் மாகாணங்களுக்கான அதிகாரங்களை மத்திய அரசிற்கு எடுத்தலும் முடிவில்லாத தொடர் நடவடிக்கையாக மாறியுள்ளது இவ்வாறான சூழ்நிலையில் ராஐபக்ச அரசாங்கத்தில் பலருக்கு சர்வதேச ரீதியான தடைகள் குற்றச் சாட்டுக்கள் உள்ள நிலையில் அவர்கள் மேற்குலக நாடுகளுக்கு செல்லும் போது டயஸ்போராவின் எதிர்ப்பு பெரும் பின்னடைவாக உள்ளது அதனை தடுக்க டயஸ்போராவை தங்கள் நிகழ்ச்சி நிரலுக்கு உட்படுத்த வேண்டிய தேவை இலங்கை அரசாங்கத்திற்கு அவசியமாகி உள்ளது அத்துடன் ஐ நா மனிதவுரிமைப் பேரவையின் விடையதானங்களில் புலம் பெயர் அமைப்புக்களின் உட்பிரவேசம் இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் தலையிடியாக தொடர்கிறது அதற்கு மருந்து கட்ட டயஸ்போராவை தமது பக்கம் பேச வைக்க வேண்டும்.

ஆகவே இவை எல்லாவற்றுக்குமான முன்நகர்வு தான் டயஸ்போராவை கட்டியணைக்க துடிக்கும் ராஐதந்திரம். எனவே எச் சந்தர்ப்பத்திலும் நிதானம் இழக்காது புலம் பெயர் அமைப்புக்கள் கோட்டாபய அரசாங்கத்துக்கு சோரம் போகக் கூடாது.

தமிழர் தாயகத்தில் வாழும் மக்களுக்கு தற்போதைய பலமான சக்தி டயஸ்போரா என்பதை இவ் அமைப்புக்கள் மறந்துவிடக்கூடாது ஒற்றுமையாக பலமான கோரிக்கைகளை முன்வைத்து பேரம் பேசும் பலத்தை இழந்துவிடாமல் தொடர்ந்து பேணுங்கள் .