ஐ.நா. ஆணையாளர் அலுவலகத்தின் பொறுப்புக் கூறல் கருத்திட்டம் ஸ்தாபிப்பு

மனித உரிமைகள் , நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் ஆட்சேபனைகளை தெரிவித்திருந்த போதிலும் இலங்கையில் பொறுப்புக் கூறல் கருத்திட்டத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் ஸ்தாபித்துள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்து கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி இலங்கைக்கு எதிராக 46 கீழ் ஒன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்கு பாரதூரமான மனித உரிமை மீறல்களிற்கான ஆதாரங்களைச் சேகரித்துப் பாதுகாக்கும் பொறுப்பை வழங்கியுள்ளதுடன் அறிக்கையிட வேண்டிய காலக்கெடுவையும் வழங்கியது.

48 ஆவது அமர்வில் வாய்மொழி மூல அறிக்கையையும் 49ஆவது அமர்வில் எழுத்து மூல அறிக்கையையும் 51 ஆவது அமர்வில் பொறுப்புக்கூறலை மேலும் எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்த சாத்தியப்பாடுகளை உள்ளடக்கிய முழுமையான அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறும் தீர்மானம் கேட்டுக்கொண்டது.

அத்தோடு நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் முன்னேற்றம் உட்பட இலங்கையின் மனித உரிமைகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து அறிக்கையிடுமாறு மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகதிற்கு மனித உரிமைகள் பேரவை கோரிக்கை விடுத்தது.

மேலும் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையினால் 2.8 மில்லியன் டொலர் நிதியும் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் மனித உரிமைகள் பேரவையின் ஆணைக்கு இணங்க, இலங்கை தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்கு என ஜெனிவாவை தளமாக கொண்ட ஒரு புதிய விசேட இலங்கைப் பொறுப்புக்கூறல் கருத்திட்டத்தை மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் ஸ்தாபித்துள்ளது.

Posted in Uncategorized

ஊடகவியலாளர்களை விசாரணைக்கு உட்படுத்தப்படுவது கண்டிக்கத்தக்கது – ரெலோவின் தலைவர் செல்வம்

மக்களுக்காக செயற்பட்டுவரும் ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்படுவதை கண்டிப்பதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  செல்வம் அடைக்கலநாதன்   தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவரால் இன்று (23) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கு உட்பட இலங்கையின் அனைத்துப்பகுதியிலும் ஊடகத்துறையினரை அச்சுறுத்தும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

தனது புலனாய்வாளர்களை வைத்து மக்களுக்காக குரல்கொடுத்தும் தம்மாலான பணிகளை செய்துவரும் ஊடகத்துறையினரை உள ரீதியாக தாக்கத்திற்குள்ளாக்கும் செயற்பாட்டினை முன்னெடுத்துள்ள அரசாங்கம் அதற்காக பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவை பயன்படுத்துக்கின்றது.

வவுனியா மாவட்டத்தில் ஊடகத்துறையில் நீண்ட காலமாக செயற்பட்டு வரும் சிரேஸ்ட ஊடகவியலாளர் ந. கபிலநாத் ஊடகப்பணிக்கு அப்பால் தமிழ் மக்களின் தொல்லியல் தொடர்பான தேடல்கொண்ட ஒருவராகவும், மக்களின் வறுமையை போக்கவும் பல்வேறு உதவிகளை வழங்கி வருபவராகவே அறியப்பட்டவர்.

இவ்வாறு சமூக சிந்தனை கொண்ட ஊடகத்துறை சார்ந்தவர்களை தொடர்ந்தும் அச்சுறுத்தும் வகையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்குட்படுத்துவதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இலங்கையில் நடந்த ஊடகத்துறையினர் மீதானதும், ஊடக நிறுவனங்கள் மீதானதுமான தாக்குல்கள் மற்றும் அநீதிகளுக்கு இதுவரை பொறுப்பு கூற முடியாத அரசு ஊடகத்துறையினரை மௌனிக்க செய்யும் செயற்பாட்டையே தொடர்ந்தும் முன்னெடுக்கின்றது.

எனவே அரசாங்கம் தமது இயலாமையின் உச்சமாக ஊடகத்துறையினர் மீதும் தனது அழுத்தத்தினை பிரயோகிப்பதானது ஜனநாயகத்தின் மீதான சந்தேகத்தினை எழுப்புகின்றது என தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசிய கட்சிகள் கூட்டாக இணைந்து சமல் ராஜபக்சவிற்கு கடிதம்

மாகாணம் தாண்டிய எல்லை நிர்ணய மூலம் வடக்கின் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து நீர்ப்பாசன அமைச்சரும் மற்றும் உள்ளகப்பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்சவிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளனர்.

அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

ஜனாதிபதி அவர்களின் கிராமத்தினுடனான மக்கள் சந்திப்பு எனும் தொனிப்பொருளில் கடந்த 03.04.2021 இல் வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் வெடிவைத்த கல்லு கிராம அலுவலர் பிரிவில் உள்ள ” போகஸ்வெல” என தற்போது பெயர் மாற்றம் பெற்றுள்ள கொச்சியான் குளம் என்ற தமிழ் மக்களின் மரபுரிமையுடைய பூர்வீக கிராமத்தில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

இதன்போது அப்போதைய வவுனியா மாவட்ட செயலாளர் சமன் பந்துலசேன அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் வடமத்திய மாகாணத்தின் எல்லைக்குட்பட்ட கெப்பிட்டிகொலாவ பிரதேச செயலாளர் பிரிவின் கனுகாவெல கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த 600 குடும்பங்களும் பதவியா கிராம அலுவலர் பிரிவு மற்றும் கம்பிலிவெலலெதகன்ன கிராமங்களைச்சேர்ந்த 430 குடும்பங்களும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் வெடிவைத்த கல்லு கிராம அலுவலர் பிரிவுடன் இணைப்பதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அண்மையில் எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்கு வவுனியா மாவட்ட தற்போதைய அரசாங்க அதிபரினால் சமன் பந்துலசேனவின் கோரிக்கை முன்மொழிவாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு – வடமத்திய மாகாணங்களின் எல்லைகளை மாற்றி அமைப்பதன் ஊடாக வடக்கு மாகாணத்தின் இனப்பரம்பல்க் கோலத்தை மாற்றி அமைத்து அதனால் அப்பிரதேசத்தில் தமிழ் மக்களின் அரசியல் ஸ்திரத்தன்மையை கேள்விக்குறியாக்குகின்ற செயற்பாடாக இது திட்டமிடப்பட்டுள்ளது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு முரணாகவும், இன நல்லிணக்கத்தை பாதிக்கின்ற செயலாகவும், இது அமையும் என்பதால் இந்நடவடிக்கையை உடன் நிறுத்தும்படி வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் அரசின் இவ்வாறான செயல்முறைகளை வன்மையாக கண்டிப்பதுடன்,செயல்பாட்டை உடன் நிறுத்துமாறு தங்களை நாடி நிற்கிறோம்.

இவ்வாறான மறைமுக நிகழ்ச்சித் திட்டங்களூடாக முன்னெடுக்கப்பட்ட சிங்கள குடியேற்றங்களே இந்நாட்டில் 30 வருடங்களுக்கு மேல் நடந்த யுத்தத்திற்கு வித்திட்டதாகவும் இன நல்லுறவை பாதிக்கும் விடயமாக அமைந்திருப்பதையும் நினைவுபடுத்துகிறோம் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

13-ஐ முழுமையாக அமுல்செய்ய உதவுமாறு இந்தியாவிடம் கூட்டாக கோர தமிழ் கட்சிகள் ஏற்பாடு!

13ஆம் திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக, அது ஆரம்ப கட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட நிலையிலேயே, நடைமுறைப்படுத்துமாறு தமிழ் தேசிய பரப்பில் செயலாற்றும் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து இந்திய அரசாங்கத்திடம் கோருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் நவம்பர் -02 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய பரப்பில் செயலாற்றும் அனைத்து கட்சிகளையும் ஒன்றுகூட்டி இது குறித்துக் கலந்துரையாடுவதற்கு தீா்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை கட்சித்தலைவர்கள் கலந்து கொள்ளும் இணையவழியான கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், ஸ்ரீகாந்தா மற்றும் நீதியரசர் விக்னேஸ்வரன் சார்பிலே பேராசிரியர் சிவநாதன் ஆகியோர் கலந்து கொண்டு இது குறித்த முடிவை எடுத்துள்ளதாக ரெலோ ஊடகப் பேச்சாளர் கு.சுரேந்திரன் தெரிவித்தார்.

பாகிஸ்தானுடனான இராஜதந்திர உறவு இலங்கையை பாதிக்கும் – சிங்கள தேசிய ஒன்றிணைந்த கூட்டமைப்பு

ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தன்வசத்தபடுத்தியிருக்கும் தலிபான் அமைப்புடன் பாகிஸ்தான் ராஜதந்திர உறவுகளை மேற்கொள்வது தெற்காசியாவில் அமைதியின்மையை ஏற்படுத்தும்.
மேலும், இலங்கை அரசாங்கமும் பாகிஸ்தான் அரசாங்கத்துடன் இராஜ தந்திர உறவுகளை மேற்கொண்டால் அது இலங்கைக்குக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என சிங்கள தேசிய ஒன்றிணைந்த கூட்டமைப்பின் தேசிய ஏற்பாட்டாளர் சானக்க பண்டார தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தன்வசத்தபடுத்தியிருக்கும் தலிபான் அமைப்புக்கு பாகிஸ்தான் அரசு ஆதரவு தெரிவித்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிங்கள தேசிய ஒன்றிணைந்த கூட்டமைப்பு கொழும்பு மெஜெஸ்டிக் சிட்டிக்கு முன்பாக நேற்று பிற்பகல் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டிருந்தது.
இதன்போது கருத்து தெரிவித்த சானக்க பண்டார,
“தெற்காசியாவில் மத அடிப்படைவாதம் அதிவேகமாக பரவி வருவதன் காரணமாக நாம் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த தீர்மானித்தோம்.
நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதுடன், ஆப்கானிஸ்தானில் பெரும் போரட்டம் நடைபெற்றதுடன் ஜனநாயக நிலைமை இல்லாமல் போயுள்ளது.
அங்கு தலிபான் அமைப்பு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதாவது, நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி 3 நாட்கள் எனும் சிறிய காலப் பகுதிக்குள் தலிபான் அமைப்பு புரட்சி செய்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக்கொண்டனர்.
இந்த கைப்பற்றுதலைத் தொடர்ந்து, தெற்காசிய அரசியல் வலயத்தினுள் தீவிரவாத அச்சுறுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளமையை காணமுடிகிறது. 2019 ஏப்ரல் 21 ஆம் திகதியன்றும் எமக்கு தாக்குதல் நடத்தப்பட்டது. தெற்காசியாவில் இந்த இஸ்லாமிய மத அடிப்படைவாதம் பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
மேலும், பாகிஸ்தான் அரசு மத அடிப்படைவாதத்தை ஆதரித்து வருவதால் பொருளாதார, சமூக, அரசியல் மற்றும் மத ரீதியாக ஜனநாயகத் தன்மையை இழக்க நேரிடும். ஆகவே, தெற்காசியாவில் அங்கம் வகிக்கும் நாடென்ற ரீதியிலும் எமது அயல் நாடான பாகிஸ்தான், எமது தெற்காசிய வலயத்தில் சமாதானத்தையும் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கும் பாகிஸ்தானுக்கு விசேட பொறுப்பு காணப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்தும் ஆராய வேண்டுமென்பது அவசியமாகும்.
ஆகவே, சமாதானத்தை விரும்பும் தெற்காசிய மக்கள் கூட்டமொன்று எமக்கு தேவை. அடிப்படை வாதத்தை ஒழித்துக்கட்டி, சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும்.
இதனை ஏற்படுத்துவதற்கு சகல நாடுகளிலும், வலய மட்டத்திலுமாக பொதுவான பொறுப்பு இருக்க வேண்டும். சமாதானத்துடனான ஆசியாவை உருவாக்க வேண்டும். அது போலவே, முழு உலகுக்கும் சமாதானம் கிடைக்க வேண்டும்.
ஒரு நாடு, ஒரு சட்டம் என கூறும் எமது ஜனாதிபதிக்கு இந்த நாட்டை கொடுத்திருப்பது, எந்தவொருஅடிப்படைவாதமும் இந்நாட்டில் தலைதூக்காமல் இருப்பதற்காகும்.
இந்நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது மீண்டுமொரு யுத்தத்தை அல்ல. சமாதானத்தை ஆகும். இந்நாட்டில் காணப்படும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமையின் ஊடாக அடிப்படைவாதத்தை தோற்கடிப்பதற்கு முன்னிற்க வேண்டும்.
ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தன்வசத்தபடுத்தியிருக்கும் தலிபான் அமைப்புடன் பாகிஸ்தான் ராஜ தந்திர உறவுகளை மேற்கொள்வது தெற்காசியாவில் அமைதியின்மையை ஏற்படுத்தும். மேலும், இலங்கை அரசாங்கமும் பாகிஸ்தான் அரசாங்கத்துடன் இராஜ தந்திர உறவுகளை மேற்கொண்டால் அது இலங்கைக்குக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
தெற்காசியாவில் அமைதியையும், ஒற்றுமையைும் நிலைநாட்டுவதற்கு பாகிஸ்தான் முன்னின்று செயற்பட வேண்டும். இல்லையெனில், அவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு முகம் கொடுக்க நேரிடும்.
ஆகவே, எதிர்கால சந்தயினருக்கு அடிப்படைவாத அடக்க முறை நிலைமைகளை கொடுத்துவிட்டுச் செல்லாமல், ஒற்றுமையாகவும், சமாதானமாகவும் வாழும் நாட்டை கட்டி எழுப்ப அனைவரும் முன்வர வேண்டும்” என்றார்.

Posted in Uncategorized

சீன உரக் கப்பலை அனுமதிக்க வேண்டாம் – துறைமுக அதிகாரசபை அதிரடி உத்தரவு

சீனாவிலிருந்து நாட்டிற்கு வரும் கப்பலில் தீங்கு ஏற்படுத்த கூடிய சேதன பசளை உரம் உள்ளடங்கப்பட்டுள்ளது.ஆகவே அக்கப்பலை கொழும்பு துறைமுகத்திற்குள் உட்பிரவேசிப்பதை தடுக்க துறைமுக சேவையாளர்களுக்கும்,உரிய தரப்பினருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.
20ஆயிரம் மெற்றிக் தொன் சேதன பசளையுடன் குறித்த கப்பல் நேற்று மாலை நாட்டை வந்தடையும் என தேசிய தாவரங்கள்,தொற்றுநீக்கி மற்றும் தனிமைப்படுத்தல் சேவை நிலையம் கொழும்பு துறைமுகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.
கப்பலில் உள்ளடங்கியுள்ள சேதன பசளையில் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்கள் இருப்பதாக தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி,தனிமைப்படுத்தல்சேவை நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

சீனாவிலிருந்து வருகை தரும் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தரிப்பதற்கு இதுவரையில் அனுமதி கோரப்படவில்லை,அத்துடன் வருகை தருவதாகவும் குறித்த நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவுமில்லை.
இந்த கப்பலை துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதை தடுக்குமாறு துறைமுக சேவையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.அத்துடன்முன்னெடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படவுள்ளது.
பெரும்போகத்திற்கு தேவையான சேதன பசளையை சீன நாட்டின் நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்தது.அதற்கமைய சேதன பசளையை இறக்குமதி செய்வதற்கு முன்னர் அந்த உரங்களின் மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
சீன நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட சேதன பசளை மாதிரி உரத்தில் இலங்கையின் மண் வளத்திற்கும்,காலநிலைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் அடங்கியிருப்பது இரண்டு முறை முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் போது உறுதிப்படுத்தப்பட்டது.
ஆகையால்பெற்றுக் கொள்ளப்பட்ட உர மாதிரிகளை சீன நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பவும்,குறித்த நிறுவனத்திடமிருந்து உரம் இறக்குமதி செய்வதை தடை செய்யவும் விவசாயத்துறை அமைச்சு தீர்மானித்தது.

Posted in Uncategorized

இளைஞர்கள் மீது தாக்குதல் பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்

போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவரினால் இளைஞர்கள் இருவர் தாக்கப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர், ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்ப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்திற்கு இனவெறி பிம்பத்தை கொடுக்க எந்த முயற்சியும் எடுக்கக்கூடாது என்று அமைச்சர் மேலும் கூறினார்.

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் இளைஞர்கள் இருவரை தாக்கும் காணொளி வௌியாகி இருந்தது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் ஒரவரையும் பின்னால் அமர்ந்து சென்ற ஒருவரையும் போக்குவரத்து பொலிஸ் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்கும் காட்சி கைப்பேசியால் பதிவு செய்யப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு ஏறாவூர் களப்பு வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றுக்கு முன்னால் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.

வாகன விபத்து ஒன்று இடம்பெற்ற இடத்தில் கடமையில் இருந்த பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அதிக வேகத்தில் இந்த மோட்டார் சைக்கிள் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது அளவீட்டு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட நாடாவையும் இழுத்துக் கொண்டு குறித்த மோட்டார் சைக்கிள் சென்றுள்ளது.

இதன்போது, மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிஸார் கட்டளையிட்ட போதும் நிறுத்தாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டுனர் செலுத்தியுள்ளார்.

பின்னர் பொலிஸ் அதிகாரி குறித்த மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து வந்த போது உணவகம் ஒன்றுக்கு அருகில் வைத்து குறித்த மோட்டார் சைக்கிளை கண்டு பிடித்துள்ளார்.

பின்னர் அங்கிருந்த குறித்த இருவரையும் பொலிஸ் அதிகாரி தாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

வெலிக்கடை சிறை கூரையின் மீதேறி போராட்டம்

வெலிக்கடை சிறைச்சாலையின் கைதிகள் குழுவினர், கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து சிறைச்சாலை கூரையின் மீதேறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கைதிகள் அடித்து துன்புறுத்தப்படுகின்றமை மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் மோசடி செயற்பாடுகள் தொடர்பில் நாட்டின் தலைமை கண்திறக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், தமது தண்டனையை குறைக்க வேண்டும் அல்லது பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கைதிகளுடன் கலந்துரையாடியதாகவும், ஆனால் அவர்கள் கூரையிலிருந்து கீழே இறங்க மறுத்துவிட்டதாகவும் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து நிலைமையை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கட்டுக்கடங்காத முறையில் நடந்து கொண்ட பல கைதிகள் சிறைக் கூண்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், பல கைதிகள் இன்னும் சிறைச்சாலையின் கூரையில் உள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Posted in Uncategorized

அரசாங்கத்தை எச்சரிக்கும் தொழிற்சங்கங்கள்!

நாட்டின் தேசிய வளங்களை விற்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் அதற்கு எதிராக வீதியில் இறங்கத் தயார் என பெற்றோலியம், துறைமுகங்கள் மற்றும் மின்சாரத்திற்கான ஐக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அதன் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் இதனை தெரிவித்தார்.

பெற்றோலியம், துறைமுகங்கள் மற்றும் மின்சாரத்திற்கான ஐக்கிய தொழிற்சங்கக் பிரதிநிதிகள் நேற்றைய தினம் (22) பிற்பகல் பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடி இருந்தனர்.

அமெரிக்க நிறுவனங்களுடன் மேற்கொள்ளவுள்ள ஒப்பந்தங்கள் மற்றும் எதிர்கால ஒப்பந்தங்களை தயவு செய்து திரும்பப் பெறுமாறு நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

அமெரிக்காவும் இலங்கையுடம் வலுவான பங்காளிகளாக வேண்டும்- புதிய அமெரிக்க தூதுவர்

நீதி பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் அமெரிக்காவும் இலங்கையுடம் வலுவான பங்காளிகளாக விளங்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலிசங் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க செனட்டின் வெளிவிவகார குழுவின்முன் கருத்து வெளியிடுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் “இலங்கை இந்து சமுத்திரத்தின் இதயத்தில் மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. உலகளாவிய கடற்பாதைகள் மற்றும் வர்த்தக வழித்தடங்களிற்கான வழிகளை கொண்டுள்ள இலங்கையின் முக்கிய துறைமுகங்கள் சுதந்திரமான வெளிப்படையான இந்தோ பசுபிக்கிற்கு மிகவும் முக்கியமானவை.

இது அமெரிக்கா சிவில் சமூகம் தனியார் துறையினர் பொதுமக்கள் உட்பட இலங்கையுடன் ஆக்கபூர்வமான உறவினை ஏற்படுத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திநிற்கின்றது.

எனது நியமனம் உறுதி செய்யப்பட்டால் பேண்தகு சூழல் மற்றும் தொழிலாளர் தாரதங்களைகருத்தில் கொள்ளும்,வெளிப்படைத் தன்மை. சர்வதேச சட்டத்திற்கான மதிப்பு நல்லாட்சி ஆகியவற்றினை அடிப்படையாக கொண்ட உட்கட்டமைப்பு முதலீடு ஆகியவற்றிற்காக அயராது பாடுபடுவேன்.

இலங்கையில் வர்த்தகத்தில் ஈடுபடுகின்ற அமெரிக்க நிறுவனங்களிற்கு நாங்கள் ஆதரவளிக்கவேண்டும், வலுக்கட்டாயமாக கடன் வழங்குதல் இரகசியமான ஒப்பந்தங்களிற்கு மாற்றீடுகளை வழங்குவதற்கு அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி வங்கி போன்றவற்றின் மூலம் எங்களிடம் உள்ள சாதனங்களை பயன்படுத்துவோம்.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் சில மாதங்களிற்கு முன்னர் எம்விபேர்ள் என்ற கப்பல் மூழ்கியமை அதன் காரணமாக இலங்கையின் வரலாற்றில் ஏற்பட்ட மிகமோசமான பாரிய கடல்சார் அழிவு ஆகியன தராதரங்களை பேணவேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது.

அமெரிக்காவின் மனிதாபிமான உதவி அவசர சூழ்நிலைகளில் நடவடிக்கைகளை எடுப்பதற்கான திறன் மற்றும் அதன் சுற்றுசூழல் கண்காணிப்பு சாதனங்கள் இலங்கை இந்த துன்பியல் சம்பவத்தினை எதிர்கொள்ள உதவின. இலங்கை போன்ற நாடுகளின் மக்களிற்கு நாங்கள் எவ்வாறு சாதகமான உறுதியான சகாவாக விளங்கமுடியும் என்பதற்கு இது அடையாளமாக உள்ளது.

இலங்கை ஆசியாவின் பழமையான ஜனநாயக நாடு. நினைத்துப்பார்க்க முடியாத வன்முறைகள் மற்றும் மத இனரீதியான பிளவுகளை ஏற்படுத்திய உள்நாட்டு யுத்தத்தின் துயரத்திலிருந்து மீண்ட நாடு இலங்கை.

எனது நியமனம் உறுதியானால் ஜனநாயக விழுமியங்கள் மனித உரிமைகள் மற்றும் வலுவான சிவில் சமூகத்திற்கு ஆதரவாக தெளிவாகவும் தொடர்ச்சியாகவும் குரல்கொடுக்கும் அர்ப்பணிப்புடன் நான் உள்ளேன். அவை ஜனநாயகத்திற்கு அவசியமானவை மற்றும் எங்கள் வெளிவிவகார அணுகுமுறையின் மையமாக உள்ளன.

நீதி பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் நாங்கள் வலுவான பங்காளிகளாக விளங்கவேண்டும்,இதனால் அனைத்து இலங்கையர்களிற்கும் அமைதி பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியின் நன்மைகள் கிடைக்கும்.

இரு தரப்பு உறவுகளிற்கு மிகவும் பெறுமதியான பங்களிப்பை வழங்கும் அமெரிக்காவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களுடன் நாங்கள் தொடர்ந்தும் ஈடுபாட்டுடன் விளங்கவேண்டும்” என்றார்.