முருந்தெட்டுவே ஆனந்த தேரர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள அவசர கடிதம்

பன்டோரா ஆவணத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள சகல இலங்கையர்கள் தொடர்பிலும் பக்கசார்பற்றதும் நியாயமானதுமான விசாரணைகளை முன்னெடுத்து சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி நாட்டை பாதுகாக்கும் மக்கள் குரல் அமைப்பின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
அத்தோடு திருக்குமார் நடேசன் தொடர்பில் மாத்திரமின்றி, பன்டோரா ஆவணத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள ஏனைய நபர்கள் தொடர்பிலும், 2016 இல் சர்வதேச ஊடகவியலாளர் அமைப்பொன்றினால் வெளியிடப்பட்ட ஆவணத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவரால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

பன்டோரா ஆவணம் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது.
எனினும் பத்திரிகையொன்றில் பன்டோரா ஆவணத்தில் 93 இலங்கையர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எனவே இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணைகள் ஒருவருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக அன்றி பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அனைவர் தொடர்பிலும் இடம்பெற வேண்டும் என்று நீங்கள் ஆலோசனை வழங்கவேண்டும்.
இந்த விசாரணைகள் சுயாதீனமாகவும் நியாயமான முறையிலும் முன்னெடுக்கப்பட்டு, தவறிழைத்தவர்களுக்கு பாரபட்சமின்றி தண்டனை வழங்கப்படவேண்டும் என்பதே அனைத்து மக்களதும் எதிர்பார்ப்பாகும்.
இதேபோன்று 2016 ஆம் ஆண்டு சர்வதேச ஊடகவியலாளர் அமைப்பொன்றினால் வெளியிடப்பட்ட ஆவணத்தில் 65 இலங்கையர்களது பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
இவ்வாறு பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் தொடர்பில் இலங்கையிலுள்ள பிரபல ஆங்கில பத்திரிகையொன்று 2016.05.10 ஆம் திகதி தகவல்களை வெளியிட்டுள்ளது.
எனவே இவ்வாறு சட்ட விரோதமாக வெளிநாடுகளில் சொத்துக்களை மற்றும் வங்கி கணக்குகள் தொடர்பில் பெயர்குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து இலங்கையர்கள் தொடர்பிலும் பக்கச்சார்பற்ற நியாயமான விசாரணைகளை முன்னெடுக்குமாறு நாம் வலியுறுத்துகின்றோம்.
அதற்கமைய ஒரு நபருக்கு எதிராக மாத்திரமின்றி இவ்வாறு செயற்படும் அனைவருக்கு எதிராகவும் விசாரணைகளை முன்னெடுத்து சட்டத்தை நடைமுறைப்படுத்தி, சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை நிரூபிக்குமாறு வலியுறுத்துகின்றோம்.
இதன்மூலம் எந்தவொரு நபரும் இவ்வாறு சட்ட விரோதமாக வெளிநாடுகளில் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகளை பேண முற்படல் மற்றும் ஊழல் – மோசடிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் இல்லாமலாக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

Posted in Uncategorized

பன்டோரா விவகாரம்; சிறப்பு விசாரணை ஆரம்பம்

சர்வதேச ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்திய, பன்டோரா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் மீது உள்நாட்டு இறைவரித் திணைக்களம் சிறப்பு விசாரணையை ஆரம்பித்துள்ளதாக அறியமுடிகிறது.

பன்டோரா  ஆவணங்களில் உள்ள இலங்கையர்களின் வரி செலுத்துதல் தொடர்பான வரி கோப்புகள் பரிசோதிக்கப்பட்டு ஏதேனும் வரி ஏய்ப்பு உள்ளதா என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் கோரிக்கை தொடர்பில் ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் விளக்கம்

மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் எங்களுடைய கோரிக்கை பிரதானமானதாக உள்ளது. எனினும் 13 வது திருத்தச்சட்டத்தில் கூறப்படுகின்ற அனைத்து விடயங்களையும் நடை முறைப்படுத்துகின்ற ஒரு வழியை கையாளுகின்ற முறைமையை இந்தியா செய்ய வைக்க வேண்டும் என்பது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கோரிக்கை என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று (14) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் திட்டமிடப்படாத செயற்பாட்டினால் இன்று போராட்டங்கள் இடம் பெற்று வருகிறது. குறிப்பாக விவசாயிகளின் நிலைமை மோசமான சூழலில் காணப்படுகின்றது. நாட்டிற்கே உணவை வழங்குகின்ற விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சாமானிய விவசாயிகள் தமது நிலங்களில் விவசாயம் செய்வது ஒரு பக்கம். குத்தகை என்ற அடிப்படையில் நிலத்தை பெற்று விவசாயம் செய்கின்ற நிலையும் காணப்படுகிறது. மேலும் தமது தங்க நகைகளை அடகு வைத்தும், வங்கிக் கடன்களை பெற்றும் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர்.

தற்போது விவசாயிகளுக்கு உரம் வழங்கப்படாமையால் மிக மோசமான ஒரு நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் விவசாயிகள் தமது உணவுக்கான பிரச்சினையையும் எதிர் நோக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. திட்டமிடப்படாத செயற்பாடு என கூறியமைக்கு காரணம் விவசாயிகளை இயற்கையான பசளைக்கு மாற்ற வேண்டும் என்றால் அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். உடனடியாக செயற்கை உரத்தை நிறுத்தி இயற்கை உரங்களுக்கு மாறுங்கள் என்று கூறினால் விவசாயிகளால் என்ன செய்ய முடியும்? வேடிக்கையாக உள்ளது.

எனவே விவசாயிகளுக்கு செயற்கை உரங்களை வழங்கிக் கொண்டு இயற்கையான உரத்திற்கு மாறுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். ஆனால் அரசாங்கம் படு மோசமான நிலமையை ஏற்படுத்தி, இன்று வெளியில் இருந்து பசளையை கொண்டு வர உள்ளதாக கூறுகின்றனர்.

விவசாயிகள் தற்போது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் காலமாக உள்ளது. ஆனால் உரம் இல்லை, மருந்து இல்லை. இவ்வாறான சூழ்நிலையில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய நடவடிக்கைகளுக்காக அடகு வைக்கின்ற தங்க நகைகளை மீட்கவும், பெற்றுக் கொண்ட கடனை மீளச் செலுத்தவும் விவசாயிகள் திண்டாடுகின்றனர்.

இதனால் இலங்கை பாரிய பஞ்சத்தை எதிர்நோக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எங்களுடைய விவசாயிகளுக்கு உரத்த வழங்கி விவசாயத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளுடனும், விவசாய அமைப்புக்களுடனும் கலந்துரையாடி வருகிறோம்.என தெரிவித்தார்.

மேலும் மாகாண சபை தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், இந்தியாவின் அழுத்தம் காரணமாக மாகாண சபை தேர்தலை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாறி மாறி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவிக்கிறார்கள்.

அரசியல் சாசனம் திருத்தம் செய்யப்பட்டதன் பின்னர் தான் தேர்தல் இடம்பெறும் என கூறுகிறார்கள்.

அடுத்த வருடம் தேர்தலை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கின்றார்கள். புதிய தேர்தல் முறையில் தான் தேர்தல் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கின்றார்கள்.

13 ஆவது திருத்தச் சட்டம் என்று டெல்லியில் சென்று பிரதமர் அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போது தன் அதிகாரங்களை பிளஸ் என்று சொல்லி வெளியில் வந்த பின் 13 ஐ கொடுக்க முடியாது என்று சொல்லி பேசுகின்ற சந்தர்ப்பங்கள் போல் உள்ளது.

எனவே மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் எங்களுடைய கோரிக்கை பிரதானமானதாக உள்ளது.

அதே நேரத்தில் 13 வது திருத்தச்சட்டத்தில் கூறப்படுகின்ற அனைத்து விடயங்களையும் நடை முறைப் படுத்துகின்ற ஒரு வழியை கையாளுகின்ற முறைமையை இந்தியா செய்ய வைக்க வேண்டும் என்பது எமது கோரிக்கை.

அதிகாரம் இல்லாத மாகாண சபையை நாங்கள் ஏற்றுக் கொண்டு அதனூடாக எங்களது நிலங்களை பாதுகாப்பது மற்றும் எமது பிரச்சனைகளை கையாள்வது என்பது மிக ஒரு கேளித்தனமான விடயமாக நாங்கள் பார்க்கின்றோம்.

எனவே 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்தியதன் பின்னர் மாகாண சபை தேர்தலை நடத்துவது என்பது தான் சிறந்ததாக அமையும். இந்தியா இவ்விடயத்தில் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன் என தெரிவித்தார்.

மேலும் இந்திய மீனவர்களின் அத்து மீறிய பிரவேசம் கட்டுப்படுத்தப்பட்ட வேண்டும். மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமது மீனவர்களை காப்பாற்ற வேண்டிய நடவடிக்கையில் இறங்க வேண்டும். அதற்கான நடவடிக்கைளை அவர் எடுக்கும் போது அவருடன் சேர்ந்து செயல்பட தயாராக இருக்கிறோம். பாதிக்கப்பட்ட எமது மீனவர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும்.

எனவே எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாமல் இருக்க திட்டத்தை வகுத்து செயல்படுவதே சாலச் சிறந்தது. என அவர் தெரிவித்தார்.

இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை தான் ஏற்க தயார் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் வினவினர்.

இதன் போது அவர் கருத்து தெரிவிக்கையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய தலைவராக உள்ள பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனுக்கு பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை என்பது கூட்டுத்தலைமையாக இருக்கும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை யை தான் ஏற்க தயார் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து அவரின் தனிப்பட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.

அதை ஏற்பதா? இல்லையா? என்பதை தமிழ் தேசியக்கூட்டமைப்பு முடிவெடுக்கும்.

சம்பந்தனின் காலத்தின் பின் கூட்டுத்தலைமையாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு செயல்படும். அவரின் தனிப்பட்ட கருத்தை பெரிய விடயமாக பார்க்கத் தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

மூன்று முக்கிய பொருள்களின் விலைகள் உயர்ந்தன

சீனி, பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை, அசாதாரணமாக உயர்ந்துள்ளதாக, சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் மொத்த விலை 130 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால், சந்தையில் சீனி பற்றாக்குறை ஏற்படுவதாக, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் மொத்த விலை ரூ .150 முதல் 160 வரை உள்ளது மற்றும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் சில்லறை விலை 200 ரூபாயாக உயர்ந்துள்ளது.

உள்ளூர் பெரிய வெங்காய உற்பத்தி காலம் தொடங்கியுள்ள நிலையில், வெங்காய விலை உயர்வு சாதாரணமானது என்றும் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசெம்பர் மாதங்களில், உச்சக்கட்டமாக 1 கிலோ 400 ரூபாய் வரை உயர்ந்ததாகவும் வியாபாரிகள் கூறுயுள்ளனர்.

மேலும், கொழும்பில் ஒரு கிலோகிராம் இலங்கை உருளைக்கிழங்கின் சில்லறை விலை 130 ரூபாயில் இருந்து 140 ரூபாயாகவும்,  சில்லறை விலை 200 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.

நாட்டில் ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கின் மொத்த விலை 110 முதல் 115 ரூபாய் வரை இருந்தது. தற்போது அதன் சில்லறை விலை கிலோ 160 முதல் 180 ரூபாய் வரை உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Posted in Uncategorized

விகாரை அமைக்க விவசாய காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு

மூதூர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு வீதியில் அமைந்துள்ள 64ஆம் கட்டை மலையில் அமைக்கப்படவுள்ள பௌத்த விகாரைக்காக, பொதுமக்களின் விவசாயக் காணிகளை அபகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரதேச செயலகத்துக்கு முன்னால் இன்று (14) காலை கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

பாதிக்கப்பட்ட மலையைச் சூழவுள்ள கிராம மக்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் அடங்கலாக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் பொதுமக்கள் உட்பட  முஸ்லிம், இந்து மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் ஆகியோரும்  கலந்துகொண்டிருந்தனர்.

இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “எங்கள் நிலம் எமக்கு வேண்டும், மாற்று காணி வேண்டாம்”, “அப்பாவிப் பொதுமக்களின் காணிகளை அபகரிக்கும் அநீதிக்கு பொலிஸ் துணை போகாது”, “அதிகாரங்களையும் அதிகாரிகளை வைத்து மக்களை விரட்டாதே”, “எங்கள் காணிகளில் விவசாயம் செய்வதற்கு எங்களிடம் வாடகை கேட்காதே” மற்றும்  “மூதூர் முஸ்லிம், தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதை உடன் நிறுத்து” போன்ற கோஷங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

இறுதியாக, மூதூர் பிரதேச  செயலாளரிடம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் மகஜரும் கையளிக்கப்பட்டது.

உலகளவில் கொரோனாவால் 23 கோடி பேர் பாதிப்பு

கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவதற்கு பல தசாப்தங்கள் கூட செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்குவதன் ஊடாக வைரஸ் பரவல் வேகமாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் இன்று (14) பகல் 1 மணி வரையில் பின்வருமாறு அமைகிறது.

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தற்போது பாதிக்கப்பட்டுள்ளோர் – 239,973,258

கொரோனா வைரஸ் (கொவிட் 19) பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் – 4,890,017

கொரோனாவில் இருந்து இதுவரை குணமடைந்தவர்கள் – 217,312,227

தற்போது பாதிக்கப்பட்ட நோயாளிகளர்களின் எண்ணிக்கை – 17,771,014

தீவிர சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை – 80,596

Posted in Uncategorized

திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி

புதிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைய சில கட்டுப்பாடுகளுடன் திருமண நிகழ்வுகளை நாளை (15) முதல் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மண்டபவங்களின் அளவில் 25 சதவீதம் பூர்த்தியடைய கூடிய விதத்தில் அதிகபட்சமாக 50 பேர் கலந்து கொள்ளும் அளவில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வௌிப்புற திருமணங்கள் வரவேற்கப்படுவதாகவும் அவற்றில் மது பாவனைக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மரண சடங்களில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளை முதல் 15 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் சில விளையாட்டு நிகழ்வுகளை சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறையில் தொற்று நீக்கி திரவத்தை பருகிய ஈரானிய கைதிகள் இருவர் மரணம்

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரானியர்கள் இருவர் தொற்று நீக்கியை அருந்தியதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த திரவத்தை பருகிய ஈரானிய கைதிகள் 10 பேர் சிகிச்சைகளுக்காக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்தார்.

குறித்த 12 பேரும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

காலாவதியான 60 சட்டங்களை திருத்த நடவடிக்கை

காலாவதியான 60 சட்டங்களை அடையாளம் கண்டு அவற்றை தற்போதைய காலத்துக்கு ஏற்றவாறு திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அதன்படி, நீதித்துறையில் தற்போதுள்ள குற்றவியல், வணிக மற்றும் சிவில் சட்டங்களை திருத்தியமைக்க மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்

சிறைச்சாலைகள் சீர்திருத்த மற்றும் கைதிகள் மறுவாழ்வு அமைச்சின் அதிகாரிகளுடன் இராஜகிரியவிலுள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (13)  கலந்துரையாடலிலேயே இவ்விடயத்தை அவர் தெரிவித்தார்.

நீதித்துறையில் உள்ள பிரச்சனைகளை கண்டறிந்து தேவையான தீர்வுகளை வழங்குவதற்கான அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக நீதிமன்றத்தில் சமர்ப்பணம்

லொஹான் ரத்வத்த நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக செயற்பட்டுள்ளதாகவும் இலங்கையின் குற்றவியல் சட்டத்தின் படி பாரிய குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் இன்றைய தினம் (13), மன்னார் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அரசியல் கைதி தொடர்பான வழக்கில், சிரேஷ்ட சட்டத்தரணி  கே.எஸ்.  இரத்தினவேல் சமர்ப்பணம் மேற்கொண்டிருந்தார்.

இன்றைய தினம் (13), மன்னார் மேல் நீதிமன்றத்தில் சிவசுப்பரமணியம் தில்லை ராஜா என்ற அரசியல் கைதியின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குறித்த வழக்கில்  பிரதான வழக்கை விட மேலதிக சமர்பணம் மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர்,  வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட  சிவசுப்ரமணியம் தில்லை ராஜ் என்பவர் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு விளக்கமறியலில் இருக்கின்றார். அத்துடன், அவரையும் சேர்த்து  14 ஆண்  சிறைக்கைதிகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வடக்கு, கிழக்கு, மலையகத்தை சேர்ந்த தமிழர்கள் ஆவர். இதை தவிர, நான்கு  அல்லது ஐந்து பெண் கைதிகளும் உள்ளனர் என்றார்.

“செப்டெம்பர் 12ஆம் திகதியன்று  சிறைச்சாலை சீர்திருத்தத்துக்கு பொறுப்பான  இராஜாங்க அமைச்சராக இருந்த லொஹான் ரத்வத்த, அந்த சிறைச்சாலைக்குள் அத்துமீறி புகுந்து 6 மணியளவில் அந்தச் சிறைச்சாலை அதிகாரிகளை தனது அதிகாரத்துக்கு உட்படுத்தி, அவர்களை  பல வந்தப்படுத்தி, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  தமிழ் சிறைக்கைதிகளை வெளியில் கொண்டு வரும்படி ஆணையிட்டுள்ளார்.

“அவரது உத்தரவுக்கு அடி பணிந்த சிறைச்சாலை அதிகாரிகள், பத்து கைதிகளை வெளியில் கொண்டு வந்து, அந்த முற்றத்தில் நிறுத்தி இருக்கிறார்கள். இந்த தருணத்தில், அந்த இராஜாங்க அமைச்சர் குடிபோதையில் இருந்ததாக அதனை அவதானித்த சிறைக்கைதிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் அவர்களை இராஜாங்க அமைச்சர் ஆபாச வார்த்தைகளால் பேசி அதன் பின்னர் அவர்களை முழந்தால் இட கட்டாயப்படுத்தி உள்ளார்.

“பயத்தின் நிமித்தம் தமிழ் அரசியல் கைதிகள்  முழந்தாலிட்டிருக்கின்றார்கள். அத்துடன், ஒவ்வொருவராக  அழைத்து, ‘நீ இராணுவத்தினரை கொலை செய்தாயா?’ என்று அச்சுறுத்தும் விதமாக கேட்டிருக்கின்றார் . அதே நேரம் இன்றைய  இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட  சிவசுப்பரமணியம் தில்லை ராஜா  என்பவரையும் கூப்பிட்டு, ‘நீ யாரை கொலை செய்தாய்?’ என கேட்டிருக்கிறார்.

“அவர் முதலில், ‘எனக்கு சிங்களம் தெரியாது’ என்று கூறிய நிலையில், பிறகு ஒரு மொழிபெயர்ப்பாளரை கூப்பிட்டு  மொழிபெயர்த்து சொல்லப்பட்டது. அப்போது குறித்த அரசியல் கைதி, ‘நான் கொலை ஒன்றும் செய்யவில்லை’ என்றும்  ‘எனக்கு ஒரு வழக்கு மன்னார் நீதிமன்றில் நடைபெறுகிறது’ என தெரிவித்துள்ளார். அதன் பின்னர், அவரை தூசண வார்த்தைகளால் பேசி விட்டு, இன்னும் பல கைதிகளை அச்சுறுத்தியுள்ளனர்.

“அத்துடன், இன்னோர் அரசியல் கைதியை அழைத்து அவருடைய தலையில் துப்பாக்கியை வைத்து உயிர் அச்சுறுத்தல் விடுத்திருக்கிறார். மேலும், எல்லா தமிழ் அரசியல் சிறை கைதிகளிடமும், ,’நீங்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கும் ஜெனிவாவுக்கும் முறைப்பாடுகளை அனுப்பியிருக்கிறீர்கள். ஆனால் ஒன்றும் நடக்காது நடக்க விடமாட்டோம்’ எனவும் தெரிவித்துள்ளார்.

“மேலும், ‘ஜனாதிபதி எனக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் போது, நீ தமிழ் அரசியல் கைதிகளை என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம். விடுதலை செய்யவும் முடியும், அல்லது அவர்களை ஒழித்துக் கட்டவும் முடியும். அதற்கான அதிகாரத்தை தருகிறேன் என்று சொல்லித்தான் எனக்கு அமைச்சர் பதவி வழங்கியிருக்கிறார். எனவே, உங்களை நான் எதுவும்  செய்யலாம். நீங்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கு முறைப்பாடு செய்யகூடாது’ என்றெல்லாம் சொல்லி, கடைசியில் அந்த துவக்கை தலையில்  வைத்த பொழுது சிறைச்சாலை அதிகாரிகள் தலையிட்டு, அவரை சமாதானப்படுத்தி வெளியே கொண்டு போயிருக்கிறார்கள்.

அதன் அடிப்படையில், இன்றைய தினம் (13), இத்தகைய சம்பவத்தை மன்னார் மேல் நீதிமன்றத்தில்  கூறி சமர்ப்பணம் மேற்கொள்ளப்பட்டது” என, சிரேஷ்ட சட்டத்தரணி இரத்தினவேல் தெரிவித்ததார்.

மேலும் இவ்வாறான செயற்பாட்டின் மூலம்  இராஜாங்க அமைச்சர்  லொஹான் ரத்வத்த  நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்குள்ளாகின்றார் எனவும் சமர்பணத்தில் தெரிவித்ததாக தெரிவித்துள்ளார் .

ஏனென்றால் இந்த சிறை கைதிகள் யாவரும் நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எனவே, இத்தகைய சிறைக்கைதிகளை யாராவது துன்புறுத்தினாலோ, அச்சுறுத்தினாலோ வேறு எந்த வகையில் சித்திரவதைக்கு உட்படுத்தினாலோ அவர்கள் நீதிமன்றத்தின் அதிகாரத்தை சவாலுக்கு உள்ளாக்குகிறார்கள்.

நீதிமன்றத்தை அவமதிக்கிறார்கள்  என்ற அடிப்படையில் இந்த விடயத்தை நீதிமன்றம் கையாள வேண்டும். இந்த விடயம் பற்றி ஒரு விரிவான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை ஒன்றையும்  சமர்பணத்தின் ஊடாக கோரியதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இராஜங்க அமைச்சர் அது மட்டுமல்ல  இலங்கையின் குற்றவியல்  சட்டங்களின் படி ஒரு பாரிய குற்றத்தை இழைத்திருக்கின்றார்.  ஒரு துப்பாக்கியை தலையில் வைப்பதன் மூலம் ஒருவரை கொலை செய்ய எத்தனித்தமை என்ற குற்றமும் அவர் மீது சாட்டப்படலாம்.

இந்த விடயத்தில் சாதாரண சட்டங்களை மீறினால் உண்மையில் பொலிஸ் திணைக்களமும், சட்ட மா அதிபர் திணைக்களம் தான் உடனடியாக அவரை கைது செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும்.

அதேநேரம் சிறைச்சாலை அதிகாரிகள் இந்த நீதிமன்றத்துக்கு  சட்டரீதியாக அழைக்கப்பட வேண்டும் என்பதுடன், இந்த நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தப்படும்  குற்றம் சாட்டப்பட்டவர் அவருடைய சாட்சியமும் பதிவாக்கப்பட வேண்டும் எனவும் சமர்பணத்தில் குறிப்பிட்டதாகவும், சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

எனவே, இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நான் மேல் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்ததை அடுத்து மேல் நீதிமன்ற நீதவான்  சிறைச்சாலை அத்தியட்சகர் நாயகம்  அவருக்கு ஒரு அறிவித்தல் கொடுக்கப்பட்டிருப்பதாகவும்   12ஆம் திகதி செப்டெம்பர் மாதம் அநுராதபுரத்தில் நடைபெற்ற விடயம் சம்பந்தமாக விசாரித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து, ஒரு கட்டளை நீதவான் நீதிமன்ற நீதிபதி வழங்கி இருக்கிறார் எனவும் தெரிவித்தார்.

அதே நேரம்  நவம்பர் 30 ஆம் திகதி இந்த வழக்கு மீண்டும் எடுக்கப்படும் பொழுது, அந்த சிறைச்சாலை அத்தியட்சகர் நாயகத்தின் அந்த அறிக்கையை நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட வேண்டும்.

மேலும் நீதி சட்டத்துறை அமைச்சர் அலிசப்ரி, சமீபத்தில் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்து அங்கிருந்து வெளியேறும் போது, அவர் கூறியிருக்கிறார். தான் தமிழ் அரசியல் கைதிகளை  நேரடியாக சந்தித்து பேசியதாகவும் அவர்கள் எந்த வித அச்சுறுத்தலும் தங்களுக்கு இருக்கவில்லை என்று சொன்னதாகவும் கூறியிருந்தார்.  இது ஒரு அப்பட்டமான பொய் என்றே நான் கூற வேண்டும்.

இன்று நீதிமன்றத்துக்கு வந்திருந்த அரசியல் கைதியின் கருத்தின் படியும்   சம்பவம் நிச்சயமாக நிகழ்ந்திருக்கிறது. அவர் இன்று நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க தயாராக இருந்திருக்கிறார். ஆனால் நீதிமன்றம் முதலில் அந்த சிறைச்சாலை நாயகத்திடம் இருந்து அறிக்கை பெற்ற பின்னர் அவருடைய சாட்சியத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு திட்டத்தைக் கொண்டு இருக்கிறது என்றார்.