இணையதள பாதுகாப்பு சட்டத்தை வகுப்பதற்கு அமைச்சரவைஅனுமதி

இலங்கையில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இணையதள பாதுகாப்பு சட்டத்தை வகுப்பதற்கான சட்டமூலமொன்றைத்தயாரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் சமர்ப்பித்த யோசனைக்கு அமைய இரண்டுசட்டமூலங்களைத் தயாரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முப்படையினர், பொலிஸ் மற்றும் ஏனைய பிரதிநிதித்துவ நிறுவனங்கள் தற்போது தத்தமது நிறுவன மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளஇணையதள பாதுகாப்பு அலகின் மூலம் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனாக மேற்கொள்வதற்கு இயலுமானவகையில் தேவையான ஏற்பாடுகளை உள்வாங்கி, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அனைத்துத் துறைகளையும்உள்ளடக்கியதாக புதிய சட்டமொன்று வகுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, தேசிய பாதுகாப்புக்கு ஏற்புடைய விடயங்கள் தவிர்ந்த தேசிய தகவல்கள் மற்றும் இணையத்தள பாதுகாப்பு மூலோபாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒழுங்குபடுத்தல் சட்டம்மொன்றை தயாரிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலத்திரனியல் தொடர்பாடல்களின் வளர்ச்சியால் தீவிரவாதக் குழுக்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் பயங்கரவாத செயற்பாடுகள், திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் சமூக விரோதச் செயல்களுக்காக இணையவெளி மற்றும் இலத்திரனியல் தொடர்பாடல்களைப் பயன்படுத்துவதற்கு தூண்டப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மாகாணசபை உருவான போதிருந்த அதிகாரங்களை வழங்கி தேர்தலை நடாத்த வேண்டும் – ரெலோவின் செயலாளர் நாயகம் ஜனா

எந்தெந்த அதிகாரங்கள் 13 வது திருத்தச் சட்டத்தினூடாக மாகாணசபைக்கு வழங்கப்பட்டதோ, அந்த அந்த அதிகாரங்கள் அனைத்தும் வழங்கி மாகாணசபைத் தேர்தலை நடாத்த வேண்டும் என்பது எமது உறுத்தியான நிலைப்பாடு. ஏனெனில் அனைத்து அதிகாரங்களையும் பறித்துவிட்டு வெறும் கோதாக மாகாணசபையை நடத்துவதென்பது அது முடியாத காரியம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின்மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தினுள் கடினப்பந்து விளையாடுவது தொடர்பில் எழுந்த பிரச்சனைக்குத் தீர்வுகாணும் முகமாக ஞாயிற்றுக்கிழமை(10) மாலை பெரியகல்லாறுக்கு விஜயம் செய்து அங்குள்ள விளையாட்டுக் கழகங்களுடன் கலந்துரையாடி விட்டு ஊடகங்களுக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….

மாகாணசபைத் தேர்தல் நடைபெறவேண்டும் என்பத்தில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. மாகாணசபை முறைமை வந்ததோ வடக்கு கிழக்கிலே இருந்த இனப்பிரச்சனைக்கு, ஒரு தீர்வைக் காண்பதற்கு. இந்த மாகாணசபை முறைமை இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலமாக ஏற்படுத்தப்பட்ட 13 வது திருத்தச் சட்டத்திற்கு, உடன்பட்டு இந்த மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. அதுவும் இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்டத்தை, தமிழ் மக்களுக்கு இருந்த இனப்பிரச்சனைக்கு, ஒரு தீர்வைக் காண்பதற்கதாக இந்திய அரசினால், இலங்கை அரசு அப்போதிருந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களின், கையை முறுக்கினத்தான் இந்த இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டுத்தப்பட்டது. என்பது பலருக்குத் தெரியுமோ தெரியாது. அந்த நேரத்தில் களத்திலே நின்ற எனக்குத் தெரியும். அந்த வகையில் மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டு மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தது. 1990 ஆம் ஆண்டு காலங்களிலே, பிரதேச செயலகங்கள்கூட மாகாண சபைக்குட்பட்டிருந்தது. பிரேமதாஸவின் காலத்தில் பிரதேச செயலகங்கள் விடுவிக்கப்பட்டது. தொடற்சியாக அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. காணி அதிகாரங்கள், பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன, அவை நடைமுறைப் படுத்தப்படவில்லை.

2015 இற்கு முன்பு மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் ஆட்சியில் திவிநெகும எனும் சட்டத்தின்கீழ் உள்ளுர் அதிகாரங்கள் எல்லாம் பறிக்கப்பட்டிருக்கின்றன. மாகாணசபையை நடாத்த வேண்டிய தேவை இந்த அரசிற்கு இருக்கின்றது. அந்த அளவிற்கு குறிப்பாக இந்தியாவின் அழுத்தம் இருக்கின்றது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் நாங்கள் வேண்டிக் கொள்வது மாகாணசபை உருவாக்கப்பட்டபோது, எந்த எந்த அதிகாரங்கள் 13 வது திருத்தச் சட்டத்தினூடாக மாகாணசபைக்கு வழங்கப்பட்டதோ, அந்த அதிகாரங்கள் அனைத்தும் வழங்கி மாகாணசபைத் தேர்தலை நடாத்த வேண்டும் என்பது எமது உறுத்தியான நிலைப்பாடு. ஏனெனில் அனைத்து அதிகாரங்களையும் பறித்துவிட்டு வெறும் கோது ஆக மாகாணசபையை நடாத்துவதென்பது அது முடியாத காரியம்.

எனவே 2009இலே போராட்டம் முடிவுக்கு வரும்போது, அப்போதைய ஜனாதிபதி இந்தியாவிடமும், சர்வதேசத்திடமும் 13 வது திருத்தச்சட்டம் தமிழ் மக்களின் இனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்குப் போதாது, 13 பிளஸ், பிளஸ் நான் கொடுப்பேன் என கூறியிருந்தார். தற்போது அந்த 13 பிளஸ், பிளஸாக இல்லாமல் 13 மைனஸ் மைனஸ், மைனஸாக இருக்கின்றது. தமிழ் மக்கள்கூட 13 வது திருத்தச் சட்டத்தை ஒரு நிரந்தரத் தீர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தும் இந்த மாகாண சபை முறைமையை இனப்பிரச்சனைக்கு ஒரு ஆரம்ப புள்ளியாக ஏற்றுக் கொள்வோம் என்ற அடிப்படையில் நாங்கள் ஏற்றிருந்தோம்.

அந்த வகையல் மாகாணசபைக்கு அது உருவாகும் போது உள்ளடக்கப்பட்ட அனைத்து அதிகாரங்களும், உள்ளடக்கப்பட்டு மாகாணசபைத் தேர்தல் மிகவிரைவாக நடக்கவேண்டும். இல்லையேல் ஜனாதிபதியின் பிரதிநிதிகளாகவுள்ள ஆளுனர்கள் குட்டி ஜனாதிபதிகளாக மாகாணத்தை ஆண்டு கொண்டிருப்பது மட்டுமல்லமல், மாகாணத்தின் வளங்களை அழிப்பவர்களாக இருக்கின்றார்கள். இந்த நிலை தொடர்ந்தால் மாகாணத்தையே கூறுபோட்டு விற்று விடுவார்கள்.

கிழக்கு மாகாணத்தைப் பெறுத்தவரையில் இன விகிதாசார அடிப்படையில் தமிழர் மாத்திரமல்ல எந்த ஒரு இனத்தவரும், தனித்து நின்று அந்த இனம் சார்ந்து முதலமைச்சரைப் பெற்றுக்காள்ள முடியாத நிலைதான் இருக்கின்றது. மாகாணசபைத் தேர்தல் வரும்போது, அதற்குரிய வியூகங்களை அமைத்து ஒரு தமிழ் நபர் ஒருவரை முதலமைச்சராக கொண்டு வரவேண்டும் என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு.

2015 ஆம் ஆண்டிலே இந்த நாட்டிலே நல்லாட்சி என்று சொல்லப்பட்டது, ஆனால் அது நல்லாட்சி அல்ல. அவர்களின் ஆட்சிமாற்றத்தினூடாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பெருமனதுடன் கிழக்கில் ஒரு முஸ்லிம் நபரை முதலமைச்சராக்கியது. அந்த வகையில் நாங்;கள் புதிதாக வியூகங்களை அமைத்து, பேசக்கூடியவர்களுடன்பேசி தமிழ் மக்கன் ஒருவரை கிழக்கில் முதலமைச்சராக கொண்டு வரவேண்டும் என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒற்றுமையில்லை என்பது ஒரு வெளிப்படையான உண்மை. அது வெளியுலகிற்குத் தெரிந்து கொண்டிருக்கின்றது. அந்த ஒற்றுமையீனம் நீங்க வேண்டும் என்பது தமிழீழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) எண்ணப்பாடு அதன்பிரகாரம். நாங்கள் சில ஒற்றுமை முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கள் தற்போது 3 கட்சிகள்தான் இருக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து தமிழ் தேசியக் பரப்பிலே இருக்கின்ற கட்சிகளையும் ஒற்றுமைப்படுத்தி நாங்கள் ஒரு கூட்டாக 2001 ஆண்டு எவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலமாக இருந்ததோ, அவ்வாறு பலமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருக்க வேண்டும் என்பது எமது எண்ணம். இந்நிலையில மாகாணசபை தேர்தல் அறிவிக்கப்படாமலேயே இவர்தான், அல்லது அவர்தான் முதலமைச்சர் வேட்பாளர் என கூறுவது, பக்குவமடைந்த அரசியல்வாதிகள் கூறும் கருத்தல்ல. கூட்டமைப்புக்கென்று தர்மம் உள்ளது. அதற்கு ஒரு ஒருங்கிணைப்புக்குழு உள்ளது. அந்த ஒருங்கிணைப்புக்குழு கூடி கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர்யார் என்பதை தெரிவிக்கும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

 

 

Posted in Uncategorized

பாராளுமன்றம் 21, 22 ஆம் திகதிகளில் கூடவுள்ளது

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த 07 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய எதிர்வரும் 21 ஆம் திகதி மற்றும் 22 ஆம் திகதிகளில் பாராளுமன்றம் கூடவுள்ளது.

இதற்கமைய பாராளுமன்றம் இத்தினங்களில் 10 மணிக்குக் கூடவிருப்பதுடன், முற்பகல் 11 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருக்கும்.

ஒக்டோபர் 21 ஆம் திகதி முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையின் கீழ் ஒழுங்குவிதிகள், இளந்தவறாளர்கள் (பயிற்சிப் பாடசாலைகள்) (திருத்தச்) சட்டமூலம், தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் என்பன விவாதத்தின் பின்னர் நிறைவேற்றப்படவுள்ளன.

அத்துடன் பிற்பகல் 3 மணி முதல் பிற்பகல் 6 மணி வரை எதிர்க்கட்சியினர் கொண்டுவரும் பிரேரணைக்கு அமைய உர பயன்பாடு தொடர்பில் தற்போதைய பிரச்சினைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறவுள்ளது.

ஒக்டோபர் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணி முதல் நண்பகல் 12 செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான மூன்று கட்டளைகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இதன் பின்னர் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய 2021.03.10 ஆம் திகதி மற்றும் 2021.04.06 ஆகிய திகதிகளில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) அறிக்கைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறும்.

அத்துடன், நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவினால் நிலையியற் கட்டளை தொடர்பில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு உறுப்பினர்கள் அறிந்துகொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டதுடன், எதிர்காலத்தில் இது பற்றிக் கலந்துரையாடவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக முற்பகல் 11 மணி வரை ஒதுக்குவது மற்றும் 27 (2) நிலையியற் கட்டளைக்கான கேள்விக்காக ஒதுக்கப்படும் காலத்தை மு.ப 11.15 மணியுடன் முடிவுக்குக் கொண்டுவருவதன் அவசியம் குறித்தும் இக்குழுவில் கலந்துரையாடப்பட்டது.

பாராளுமன்ற பொதுமக்கள் கலரியைத் திறப்பதற்கான வாய்ப்புக்கள் குறித்தும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதுடன், தற்பொழுது நிலவும் கொவிட்-19 சூழல் மேலும் குறைவடைந்ததும் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பொதுமக்கள் கலரியை திறப்பது குறித்து ஆராயமுடியும் என்றும் தீர்மானிக்கப்படது.

இலங்கை வந்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி இன்று (12) நாட்டை வந்தடைந்தார்.

நவராத்திரி விழாவில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ விடுத்த அழைப்பை ஏற்றே அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இன்று முற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் சுப்ரமணியன் சுவாமியை இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க மற்றும் பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர் வரவேற்றனர்.

இதேவேளை, இலங்கைக்கு விமானத்தில் வந்துகொண்டிருந்தபோது சுப்ரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவொன்றை இட்டிருந்தார்.

ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக பிரகடனப்படுத்துவதில் பிரதமருக்கு உள்ள தடைகள் என்னவென அவர் அந்த பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இராமர் பாலம் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட வேண்டும் எனவும் அது உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம்பெற வேண்டும் எனவும் இந்தியாவின் மத்திய கலாசார மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகலாத் பட்டேல் கடந்த ஜூன் மாதம் Times of India நாளிதழுக்கு தெரிவித்திருந்தார்.

இராமர் பாலம் தொடர்பாக மேலும் விரிவான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

தமிழகத்தின் இராமேஸ்வரம் மற்றும் இலங்கையின் மன்னார் தீவுகளுக்கு இடையே உள்ள ஆழமற்ற திட்டு போன்ற பகுதியே இராமர் பாலம் என அழைக்கப்படுகிறது.

இராமர் இலங்கை வந்த போது வானர படைகளின் உதவியோடு கடலில் பாலம் அமைக்கப்பட்டதாக இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சேது சமுத்திர திட்டத்தை செயற்படுத்தி, இராமர் பாலம் வழியாக கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்க வேண்டும் என இந்தியாவில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும், இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இராமர் பாலம் சேதமடைந்து விடும் என பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

மன்னாரிலுள்ள இராமர் சேது பகுதிக்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்டவர்கள் கடந்த மார்ச் மாதம் விஜயம் செய்திருந்தனர். இதன்போது, உயர்ஸ்தானிகர் விசேட பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தார்.

இதனிடையே, யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி தலைமன்னாரிலுள்ள ராம சேது பகுதிக்கு சென்றிருந்தனர்.

புனித பிரதேசமாக ராம சேதுவில் பூஜை வழிபாடுகளில் அவர்கள் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

10 நாடுகளுக்கான பயணக் கட்டுப்பாட்டை நீக்கியது தாய்லாந்து

குறைந்த பாதிப்புக்களை கொண்ட 10 நாடுகளை சேர்ந்த இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்களுக்கான தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு தாய்லாந்து தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் முதலாம் திகதி முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் குறித்து அந்த நாட்டு மக்களுக்குக் கருத்துரைத்த தாய்லாந்து பிரதமர் பிரயுத் (ச்)சன் ஒச்சா நாட்டின் வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புதவதற்கு இது உதவும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்த ஆபத்தில் காணப்படும் 10 நாடுகளில் சீனா, ஜேர்மன், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அடங்குவதாக தாய்லாந்து பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த நாடுகளிலிருந்து வருகின்ற பயணிகள் கொவிட்-19 பரிசோதனை அறிக்கை சமர்;ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவர்களுக்குத் தாய்லாந்தில் மற்றுமொரு பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

குறித்த பரிசோதனை அறிக்கைகளின் முடிவுகளுக்கு அமைய நாட்டின் சுற்றுலா நடவடிக்கைகளுக்கு அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தாய்லாந்து அறிவித்துள்ளது.

இதேவேளை எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் பல பொதுஇடங்களை மீளத் திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த தாய்லாந்து பிரதமர், இதனையடுத்து பல நாட்டு மக்களுக்கும் தாய்லாந்துக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

இந்திய இராணுவத் தளபதி இலங்கை வருகை

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாராவன 5 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (12) இலங்கை வந்துள்ளார்.

பாதுகாப்பு படைகளின் தளபதி, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் அழைப்பினை ஏற்று அவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, பாதுபாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் முப்படைகளின் தளபதி ஆகியோரை இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் சந்திக்கவுள்ளார்.

இதேவேளை, இந்திய இராணுவத் தளபதி இந்திய – இலங்கை மித்ரசக்தி இராணுவ பயிற்சியின் இறுதி பயிற்சியையும் கண்காணிக்கவுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கை அரசு விழாவில் மீண்டும் புறக்கணிக்கப்பட்ட தமிழ் மொழி – என்ன நடந்தது?

இலங்கையில் தமிழ் மொழி புறக்கணிப்பு தொடர்பிலான பிரச்னை முடிவின்றி, இன்றும் தொடர்ந்து வருகிறது.

அண்மைக் காலமாக அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வீதி சமிக்ஞைகள், பெயர் பலகைகள் என அனைத்து இடங்களிலும் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட பல சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

அத்துடன், இலங்கையிலுள்ள சீன தூதரகத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, சீன மொழி உள்வாங்கப்பட்ட சம்பவங்களும் கடந்த காலங்களில் அவ்வப்போது பதிவாகியிருந்தன.

சீனாவினால் நிர்மாணிக்கப்படும் கொழும்பு துறைமுக நகர் மற்றும் சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தின் பெயர் பலகை ஆகியவற்றில் தமிழ் மொழி முழுமையாக புறக்கணிக்கப்பட்டு, சீன மொழி உள்வாங்கப்பட்டிருந்தன.

தமிழ் மொழி புறக்கணிப்பு தொடர்பில் சமூக வலைத்தளங்களில் எழுந்த எதிர்ப்புக்களை அடுத்தே, தமிழ் மொழி மீண்டும் உள்வாங்கப்பட்டது.

இவ்வாறான நிலையில், தற்போது மீண்டும் அதே பிரச்னை பேசு பொருளாக மாறியுள்ளது.

இலங்கையின் முதல் பிரஜையான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அநுராதபுரம் – சாலியபுர கஜபா படையணியில் கிரிக்கெட் மைதானமொன்று திறந்து வைக்கப்பட்டது.

கோட்டாபய ராஜபக்ஷ கிரிக்கெட் மைதானம் என பெயரிடப்பட்டுள்ள இந்த மைதானத்தின் திறப்பு பலகையை, ஜனாதிபதி நேற்று திறந்து வைத்தார்.

திறப்பு பலகையில், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் மாத்திரம் காணப்படுகின்றமை, தமிழ் சமூகம் மத்தியில் பாரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சிங்களம், தமிழ் – ஆட்சி மொழி

நாட்டின் முதல் பிரஜை, அரசியலமைப்பின் மொழி கொள்கையை பின்பற்ற வேண்டும் என முன்னாள் அரச கரும மொழிகள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

அரசியலமைப்பை ஒவ்வொரு பிரஜையும் மதிக்க வேண்டும் என்பதே, ஜனநாயக நாடொன்றின் அடிப்படையான விடயம் என அவர் கூறுகின்றார்.

நாட்டின் அரச கரும மொழிகள் சட்டத்தையும், அரசியலமைப்பையும் ஜனாதிபதி மீறியுள்ளதாகவும், இது முதல் தடவை கிடையாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

சிங்கள் மற்றும் தமிழ் ஆகிய ஆட்சி மொழிகளையும், இணைப்பு மொழியாகவுள்ள ஆங்கில மொழியையும் கொண்ட நாட்டின் மும்மொழி கொள்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முதலில் கடைபிடிக்க வேண்டும் என தான் பிரார்த்திப்பதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மொழி தொடர்பிலான அமைச்சு இல்லாமை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, முன்னாள் மொழி அமைச்சரான மனோ கணேசன் பதிலளித்தார்.

தனது அரச கரும மொழிகள் அமைச்சின் கீழ், அரச கரும மொழிகள் ஆணைக்குழு, அரச கரும மொழிகள் திணைக்களம், தேசிய மொழி கல்வி பயிற்சி நிறுவனம் ஆகியவை செயற்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.

தனது அமைச்சின் கீழ் செயற்பட்ட நிறுவனங்கள் தற்போது வெவ்வேறு அமைச்சுக்களின் கீழ் பிளவுப்படுத்தப்பட்டு, செயற்படுத்தப்படாத வகையில் காணப்படுவதாகவும் அவர் கவலை வெளியிடுகின்றார்.

மொழி தொடர்பிலான அமைச்சு இல்லாமையானது, இந்த அரசாங்கத்தின் உதாசீனத்தை எடுத்து காட்டுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவிக்கின்றார்.

இலங்கை அரசின் பதிலென்ன?

இந்த மைதானம் அமைந்துள்ள வளாகம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ளமையினால், அதற்கான பொறுப்பு பாதுகாப்பு அமைச்சு வசமானது என ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.ராணுவத்தினால் இந்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இந்த மைதானத்தை திறந்தது மாத்திரமே ஜனாதிபதி என அவர் குறிப்பிட்டார்.

ராணுவத்தின் பதிலை அறிய பிபிசி தமிழ் தொடர்புகொண்டது. ஆனால் அலுவல்பூர்வமான பதில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இலங்கை ராணுவம் பிபிசி தமிழிடம் இதற்கு பதில் அளித்தால், அது இந்தப் பக்கத்தில் சேர்க்கப்படும்.

Posted in Uncategorized

குட்டி ஜனாதிபதிகளாக மாகாணங்களை ஆட்சி செய்யும் ஆளுநர்கள் -ரெலோவின் செயலாளர் நாயகம் ஜனா

எந்தெந்த அதிகாரங்கள் 13வது திருத்தச் சட்டத்தினூடாக மாகாணசபைக்கு வழங்கப்பட்டதோ, அந்த அந்த அதிகாரங்கள் அனைத்தும் வழங்கி மாகாணசபைத் தேர்தலை நடாத்த வேண்டும் என்பது எமது உறுதியான நிலைப்பாடு.

ஏனெனில் அனைத்து அதிகாரங்களையும் பறித்துவிட்டு வெறும் கோதாக மாகாணசபையை நடாத்துவதென்பது அது முடியாத காரியம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தினுள் கடினப்பந்து விளையாடுவது தொடர்பில் எழுந்த பிரச்சனைக்குத் தீர்வுகாணும் முகமாக இன்று(10) மாலை பெரியகல்லாறுக்கு விஜயம் செய்து அங்குள்ள விளையாட்டுக் கழகங்களுடன் கலந்துரையாடி விட்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மாகாணசபைத் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. வடக்கு கிழக்கிலே இருந்த இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காண்பதற்குத் தான் மாகாணசபை முறைமை வந்தது. இந்த மாகாணசபை முறைமை இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலமாக ஏற்படுத்தப்பட்ட 13வது திருத்தச் சட்டத்திற்கு, உடன்பட்டு இந்த மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.

அதுவும் இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்டத்தை, தமிழ் மக்களுக்கு இருந்த இனப்பிரச்சினைக்கு, ஒரு தீர்வைக் காண்பதற்காக இந்திய அரசினால், இலங்கை அரசு அப்போதிருந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின், கையை முறுக்கித்தான் இந்த இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது என்பது பலருக்குத் தெரியுமோ தெரியாது.

அந்த நேரத்தில் களத்திலே நின்ற எனக்குத் தெரியும். அந்த வகையில் மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டு மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தது. 1990 ஆம் ஆண்டு காலங்களிலே, பிரதேச செயலகங்கள்கூட மாகாண சபைக்குப்பட்டிருந்தது. பிரேமதாஸவின் காலத்தில் பிரதேச செயலகங்கள் விடுவிக்கப்பட்டது. தொடர்ச்சியாக அதிகாரங்கள் பறிக்கப்பட்டன.

காணி அதிகாரங்கள், பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன, அவை நடைமுறைப் படுத்தப்படவில்லை. 2015 இற்கு முன்பு மகிந்த ராஜபக்ச ஆட்சியில் திவிநெகும எனும் சட்டத்தின்கீழ் உள்ளூர் அதிகாரங்கள் எல்லாம் பறிக்கப்பட்டிருக்கின்றன.

மாகாணசபையை நடாத்த வேண்டிய தேவை இந்த அரசிற்கு இருக்கின்றது. அந்த அளவிற்குக் குறிப்பாக இந்தியாவின் அழுத்தம் இருக்கின்றது என்பது எங்களுக்குத் தெரியும்.

ஆனால் நாங்கள் வேண்டிக் கொள்வது மாகாணசபை உருவாக்கப்பட்டபோது, எந்த எந்த அதிகாரங்கள் 13வது திருத்தச் சட்டத்தினூடாக மாகாணசபைக்கு வழங்கப்பட்டதோ, அந்த அதிகாரங்கள் அனைத்தும் வழங்கி மாகாணசபைத் தேர்தலை நடாத்த வேண்டும் என்பது எமது உறுதியான நிலைப்பாடு.

ஏனெனில் அனைத்து அதிகாரங்களையும் பறித்துவிட்டு வெறும் கோது ஆக மாகாணசபையை நடாத்துவதென்பது அது முடியாத காரியம். எனவே 2009இலே போராட்டம் முடிவுக்கு வரும்போது, அப்போதைய ஜனாதிபதி இந்தியாவிடமும், சர்வதேசத்திடமும் 13வது திருத்தச்சட்டம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் போதாது, 13 பிளஸ், பிளஸ் நான் கொடுப்பேன் எனக் கூறியிருந்தார்.

தற்போது அந்த 13 பிளஸ், பிளஸாக இல்லாமல் 13, மைனஸாக இருக்கின்றது. தமிழ் மக்கள்கூட 13வது திருத்தச் சட்டத்தை ஒரு நிரந்தரத் தீர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தும் இந்த மாகாண சபை முறைமையை இனப்பிரச்சினைக்கு ஒரு ஆரம்பப்புள்ளியாக ஏற்றுக் கொள்வோம் என்ற அடிப்படையில் நாங்கள் ஏற்றிருந்தோம்.

அந்த வகையில் மாகாணசபைக்கு அது உருவாகும் போது உள்ளடக்கப்பட்ட அனைத்து அதிகாரங்களும், உள்ளடக்கப்பட்டு மாகாணசபைத் தேர்தல் மிக விரைவாக நடக்கவேண்டும். இல்லையேல் ஜனாதிபதியின் பிரதிநிதிகளாகவுள்ள ஆளுநர்கள் குட்டி ஜனாதிபதிகளாக மாகாணத்தை ஆண்டு கொண்டிருப்பது மட்டுமல்லாமல், மாகாணத்தின் வளங்களை அழிப்பவர்களாக இருக்கின்றார்கள். இந்த நிலை தொடர்ந்தால் மாகாணத்தையே கூறுபோட்டு விற்று விடுவார்கள்.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் இன விகிதாச்சார அடிப்படையில் தமிழர் மாத்திரமல்ல எந்த ஒரு இனத்தவரும், தனித்து நின்று அந்த இனம் சார்ந்து முதலமைச்சரைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலைதான் இருக்கின்றது.

மாகாணசபைத் தேர்தல் வரும்போது, அதற்குரிய வியூகங்களை அமைத்து ஒரு தமிழ் நபர் ஒருவரை முதலமைச்சராகக் கொண்டு வரவேண்டும் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு.

2015 ஆம் ஆண்டிலே இந்த நாட்டிலே நல்லாட்சி என்று சொல்லப்பட்டது, ஆனால் அது நல்லாட்சி அல்ல. அவர்களின் ஆட்சி மாற்றத்தினூடாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பெருமனதுடன் கிழக்கில் ஒரு முஸ்லிம் நபரை முதலமைச்சராக்கியது.

அந்த வகையில் நாங்கள் புதிதாக வியூகங்களை அமைத்து, பேசக்கூடியவர்களுடன் பேசி தமிழ் மக்கன் ஒருவரைக் கிழக்கில் முதலமைச்சராகக் கொண்டு வரவேண்டும் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒற்றுமையில்லை என்பது ஒரு வெளிப்படையான உண்மை. அது வெளியுலகிற்குத் தெரிந்து கொண்டிருக்கின்றது. அந்த ஒற்றுமையீனம் நீங்க வேண்டும் என்பது தமிழீழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) எண்ணப்பாடு.

அதன்பிரகாரம் நாங்கள் சில ஒற்றுமை முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கள் தற்போது 3 கட்சிகள்தான் இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து தமிழ் தேசிய பரப்பிலே இருக்கின்ற கட்சிகளையும் ஒற்றுமைப்படுத்தி நாங்கள் ஒரு கூட்டாக 2001 ஆண்டு எவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமாக இருந்ததோ, அவ்வாறு பலமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருக்க வேண்டும் என்பது எமது எண்ணம்.

இந்நிலையில் மாகாணசபை தேர்தல் அறிவிக்கப்படாமலேயே இவர்தான், அல்லது அவர்தான் முதலமைச்சர் வேட்பாளர் எனக் கூறுவது, பக்குவமடைந்த அரசியல்வாதிகள் கூறும் கருத்தல்ல. கூட்டமைப்புக்கென்று தர்மம் உள்ளது. அதற்கு ஒரு ஒருங்கிணைப்புக்குழு உள்ளது. அந்த ஒருங்கிணைப்புக்குழு கூடி கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதைத் தெரிவிக்கும் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவியேற்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவியேற்றுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரராக இருந்த அவர் கடந்த வாரம் அந்த பதவியில் இருந்து இராஜினாமா செய்திருந்தார்.

மனிதாபிமான அமைப்புக்களின் கூட்டமைப்பின் நிறைவேற்று பணிப்பாளராகவும் ஜீவன் தியாகராஜா கடமையாற்றியுள்ளார்.

இதுவரை காலமும் வட மாகாண ஆளுநராக பீ.எஸ்.எம். சார்ள்ஸ் கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றினால் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டு தமிழ் அரசியல் கைதி ஒருவர் விடுதலை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 12 வருடங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர், மொனராகலை நீதவான் நீதிமன்றினால் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை- அக்கரைப்பற்று,  சின்னப்பனங்காட்டை சேர்ந்த கதிரவேலு கபிலன் (வயது 29) என்பவரே இவ்வாறு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு- புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர், பீ.சி.ஆர் பரிசோதனைகளை அடுத்து நேற்று மதியம் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, உறவுகளுடன் இணைந்துள்ளதாக  குடும்பத்தினர் குரலற்றவர்களின் குரல் அமைப்பிற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இவர் கடந்த 20.05.2009 யுத்த நிறைவுக்குப் பின் விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகத்தின் பெயரில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சுமார் ஒன்றரை வருட காலம் பயங்கரவாத தடுப்புப்பிரிவினரால் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டதன் பின்னர், கடந்த 15.02.2011 அன்று மொனராகலை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு, சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

கடந்த 12 ஆண்டுகளாக அவருக்கெதிராக குற்றச்சாட்டுப் பத்திரங்கள் எதுவும் தாக்கல் செய்யப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில், சிரேஸ்ட சட்டத்தரணி பஞ்சாட்சரம் அவர்கள் நீதிமன்றில் தர்க்க நியாயங்களை சுட்டிக்காட்டி கபிலனின் விடுதலையை உறுதி செய்யுமாறு மன்றில் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம், குறித்த தமிழ் அரசியல் கைதிக்கெதிராக குற்றத்தை ஒப்புவிக்க போதிய சாட்சியாதாரங்கள் காணப்படாத காரணத்தைக்கூறி அவரை நிரபராதி என விடுதலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.