காவல்துறையினரின் செயல் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்-இலங்கை மருத்துவ வல்லுநர்கள் கண்டனம்

கடந்த 09 ஆம் திகதி காலி முகத்திடல் மைதானத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தின் போது  காவல்துறை  அதிகாரிகளின் செயற்பாடுகளை அமைப்பு மாற்றத்திற்கான இலங்கை மருத்துவ வல்லுநர்கள் கண்டித்துள்ளனர்.

மருத்துவ நிபுணர்கள் குழு இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

சில காவல்துறை உத்தியோகத்தர்கள் மனிதாபிமானமற்ற முறையில் கூட்டத்தைக் கையாளுவது சிறுவர்கள் உட்பட எமது குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனடியாக பாரபட்சமற்ற விசாரணையை நடத்தி, இவ்வாறு சட்டவிரோதமான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் நடந்து கொண்ட காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு எதிராகவும், தண்டனையின்றி செயற்படுவதற்கு வகை செய்யும் கட்டளைகளை பிறப்பித்தவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்குமாறும் குழு வலியுறுத்தியுள்ளது.

அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அவர்களின் நடத்தையின் உளவியல் மற்றும் நெறிமுறை அம்சங்கள் குறித்து தெளிவான மற்றும் புதுப்பித்த பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் மருத்துவ வல்லுநர்கள் கடுமையாக பரிந்துரைத்துள்ளனர்.

வெளிநாடுகளிலிலிருந்து அரிசியினை இறக்குமதிசெய்ய அரசாங்கம் முயற்சி- ஜனா

அரசாங்கம் வெளிநாடுகளிலிலிருந்து அரிசியினை இறக்குமதிசெய்யும் முயற்சிகளை முன்னெடுத்துவருவதாக  பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான  கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு,மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் பெரும்போக நெற்செய்கையினை முன்னெடுப்பது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் நேற்று (புதன்கிழமை) கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்  பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், மண்முனை தென் மேற்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் திருமதி தட்சனகௌரி தினேஸ், மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.ஜெகன்நாத், மாவட்ட விவசாய பிரதிப்பணிப்பாளர், பிரதேச நீர்பாசன பொறியியலாளர் சுபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தின்போது விவசாய பிரதேசங்களின் திட்ட முகாமைத்துவக் குழுக்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய வயற்காணி உழுதல், விதைப்பு ஆரம்பித்தல், வேலி அடைத்தல், கால்நடைகள் அகற்றல், நீர் முகாமைத்துவம் உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கான தீரமானங்களும் இதன்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் போது வங்கி கடன்கள், கால்நடைப்பிரச்சனை, யானைப்பிரச்சனைகள், காடுகள் அழிப்பு, கடந்த சிறுபோகத்தில் விவசாயிகள் எதிர்கொண்ட பிரச்சனைகள், பெரும்போகத்தில் விவசாயிகள் எதிர்நோக்கவுள்ள பிரச்சனைகள், விவசாயிகளுக்கான மேம்பாட்டுத்திட்டங்கள், நீர்ப்பாசனம், நெல் கொள்வனவு, உரத்தின் விலையை நிர்ணயித்தல், சேதனைப்பசளை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள்  விரிவாக ஆராயப்பட்டன.

இந்நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே சிறுபோகத்தில் அறுவடைசெய்த நெல்லை கொள்வனவு செய்யமுடியாத நிலையில் நெல்சந்தைப்படுத்தும் சபை உள்ள நிலையில் அரசாங்கம் வெளிநாடுகளிலிலிருந்து அரிசியினை இறக்குமதிசெய்யும் முயற்சிகளை முன்னெடுத்துவருவதாக  பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாத் தீர்மானம் 2022 : தமிழ் அரசியலின் இயலாமை?

நிலாந்தன் –

மற்றோரு ஜெனீவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.பொறுப்புக்கூறலை ஜெனீவாவுக்கு வெளியே கொண்டுபோக வேண்டும் என்று தமிழ்க்கட்சிகள் கேட்டது சரி என்பதை இப்புதிய தீர்மானம் நிரூபித்திருக்கிறது.கடந்த ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட மூன்று கட்சிகள் இணைந்து ஜெனீவாவுக்கு ஒரு கூட்டுக்கடிதத்தை அனுப்பின.அதில் பொறுப்புக்கூறலை ஜெனீவாவுக்கு வெளியே கொண்டு போகவேண்டும் என்ற கோரிக்கையை இணைத்தது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிதான்.இதுநடந்து 20மாதங்களாகிவிட்டன.பொறுப்புக்குகூறலை ஜெனீவாவுக்கு வெளியே கொண்டு போகும் முயற்சியில் மூன்று கட்சிகளும் எதுவரை முன்னேறியுள்ளன?

நடந்து முடிந்த ஜெனிவாக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் அங்கு போயிருந்தார்.அங்கிருந்து அவர் வழங்கிய நேர்காணல்களில் அவர் ஒரு விடயத்தை திரும்பத்திரும்ப சுட்டிக்காட்டுகின்றார். அது என்னவெனில், கூட்டமைப்பும் சில புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளும் தொடர்ந்தும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை பலவீனப்படுத்தி வருகின்றன என்பதே அது.அதாவது ஜெனிவா தீர்மானத்தை முன் கொண்டுவரும் நாடுகளை நோக்கி கூட்டமைப்பு தமிழ்மக்களின் கோரிக்கையை வலிமையாக முன்வைக்கவில்லை என்பது அவருடைய முதலாவது குற்றச்சாட்டு.இரண்டாவது குற்றச்சாட்டு, பிரித்தானியா,ஆவுஸ்ரேலியா,கனடா ஆகிய நாடுகளை மையமாகக் கொண்டியங்கும் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகள் சில தொடர்ந்து தத்தமது நாடுகளின் அரசாங்கங்களுடைய விருப்பங்களுக்கு ஏற்ப செயல்பட்டு வருகின்றன என்பது.அதாவது மேற்படி நாடுகள் ஜெனிவாவில் தமிழ்மக்களின் கோரிக்கைகளை தமது பூகோள அரசியல் இலக்குகளுக்காக நீர்த்துப்போகச் செய்யும்பொழுது அதுவிடயத்தில் மேற்படி புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகள் அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களுக்கு விசுவாசமாக கீழ்படிவாக செயல்படுகின்றன என்ற தொனிப்பட அவர் குற்றம் சாட்டுகிறார்.

ரணில் விக்ரமசிங்கவின் முன்னைய ஆட்சிக்காலத்தில்,2015ஆம் ஆண்டு நிலைமாறுகால நீதிக்குரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பொழுது தமிழ்த்தரப்பில் கூட்டமைப்பு அந்த தீர்மானத்தை ஆதரித்தது.அது நிலைமாறுகால நீதியின் பங்காளியாக மாறியது.அவ்வாறே புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் சிலவும் நிலைமாறு கால நீதியை ஏற்றுக்கொண்டன.அதே சமயம் இன்னொரு பகுதி புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளும் தாயகத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போன்ற கட்சிகளும் நிலைமாறுகால நீதியை ஏற்றுக்கொள்ளவில்லை.அவை இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியைக் கேட்டன.

எனினும்,கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஐநாவுக்கு அனுப்பிய கூட்டுக் கடிதத்தில் கூட்டமைப்பு எனைய இரண்டு கட்சிகளோடு இணைந்து பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போகவேண்டும் என்று கேட்டிருந்தது. இலங்கை அரசாங்கத்தை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்த வேண்டும் என்று அக்கடிதம் கேட்டிருந்தது.நிலைமாறுகால நீதியைப் பரிசோதித்தோம் அதில் தோல்வியுற்றுவிட்டோம் என்று சுமந்திரன் வவுனியாவில் வைத்துச் சொன்னார்.ஆனால் ஜெனீவாத் தீர்மானத்தின் சீரோ டிராப்ட் வெளிவந்த பொழுது கூட்டமைப்பு தலைகீழாகி நின்றது.இப்பொழுதும் கூட்டமைப்பு பொறுப்புக்கூறலை ஜெனீவாவுக்கு வெளியே கொண்டுபோக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கருக்குழு நாடுகளின்மீது அழுத்தத்தை பிரயோகிக்கவில்லை என்று கஜேந்திரன் குற்றஞ்சாட்டுகிறார். அதுபோலவே அவர் குற்றஞ்சாட்டும் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளும் பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போகவேண்டும் என்ற விடயத்தை வலியுறுத்துவதில்லை என்ற தொனிப்பட அவருடைய குற்றச்சாட்டு அமைகிறது.

இக்குற்றச்சாட்டுகளை தமிழில் அரசியல் விமர்சனக் கட்டுரைகளை எழுதும் பலரும் கூட்டமைப்புக்கு எதிராக முன்வைத்து வருகிறார்கள்.குடிமக்கள் சமூகங்கள் மத்தியிலும் அவ்வாறான குற்றச்சாட்டுகள் உண்டு.தவிர காணாமல் போனவர்களுக்கான அமைப்புகள் உட்பட பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்புகளும் கூட்டமைப்பின் மீது விமர்சனங்களைத் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றன. இந்த விமர்சனங்களின் விளைவாகத்தான் கடந்த பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு அதன் ஆசனங்களில் ஆறை இழந்தது.அதன் ஏகபோகம் சரிந்தது.

ஆனால் அவ்வாறு இழந்த ஆறு ஆசனங்களையும் யார் பெற்றார்கள்?மூன்றே மூன்று ஆசனங்களைத்தான் மாற்று அணி பெற்றது.எனைய மூன்று ஆசனங்களும் தமிழ்த்தேசியப் பரப்புக்கு வெளியே போயின.அவ்வாறு மூன்று ஆசனங்கள் தமிழ்தேசிய பரப்புக்கு வெளியே போனதற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் கூட்டுப் பொறுப்பை ஏற்கவேண்டும்.ஒரு பலமான மாற்று அணியைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற அரசியல் தரிசனம் அக்கட்சியிடம் இன்றுவரை இல்லை.எப்பொழுதும் ஏனைய கட்சிகளை குறைகூறி ஏனைய கட்சிகளில் குற்றம் கண்டுபிடித்து தங்களைப் பரிசுத்தர்களாக காட்டிக் கொள்ளும் ஒரு போக்குதான் அக்கட்சியிடம் இன்றுவரை உண்டு. அண்மையில் திலீபனின் நினைவுத்தூபி அவமதிக்கப்பட்ட போதும் அக்கட்சி தன் அரசியல் எதிரிகளைத்தான் குற்றஞ்சாட்டியது.

தன் உள் அரசியல் எதிரிகளை குற்றச்சாட்டுவது என்பது தேர்தல்மைய அரசியலின் ஒரு பகுதிதான்.ஆனால் ஈழத்தமிழ் நோக்கு நிலையிலிருந்து பார்த்தால் அதுமட்டுமே தேச நிர்மாணத்தின் பிரதான பகுதியாக அமைய முடியாது.ஈழத்தமிழர்கள் தொடர்ச்சியான இனப்படுகொலையால் நீர்த்துப்போன ஒரு மக்கள் கூட்டம். புலப்பெயற்சி, தோல்வி, கூட்டு காயங்கள், காட்டிக் கொடுப்புகள் போன்றவற்றால் தொடர்ந்தும் சிதறிப் போயிருக்கும் ஒரு மக்கள் கூட்டம். எனவே இந்த மக்கள் கூட்டத்தின் மத்தியில் தேர்தல் அரசியலை முன்னெடுக்கும் கட்சிகள் தமது அரசியல் எதிரிகளை திட்டிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது.அதைவிட முக்கியமாக தாம் சரியெனக் கருதும் ஓர் அரசியல் இலக்கை நோக்கி மக்களைத் திரட்டவேண்டும்.ஒரு தேசத் திரட்சியைக் கட்டியெழுப்ப வேண்டும். அதாவது தேர்தல்மைய அரசியலை எப்படி ஒரு தேச நிர்மாணத்தின் பகுதியாக மாற்றலாம் என்று சிந்திக்க வேண்டும்.ஆனால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் உட்பட கூட்டமைப்பை விமர்சிக்கும் பலரிடமும் அவ்வாறான அரசியல் தரிசனம் உண்டா? என்ற கேள்வியை கடந்த 13 ஆண்டு கால அனுபவம் கேட்க வைக்கின்றது.

கடந்த 13 ஆண்டுகளாக தமிழ் மக்களின் அரசியலானது புரோஅக்டிவ் – proactive- ஆக, அதாவது தானாக ஒன்றைக் கட்டியெழுப்பும் அரசியலாக இல்லை.அது ரியாக்டிவ்- reactive- ஆகத்தான் அதாவது பதில் வினையாற்றும் அரசியலாகத் தான் காணப்படுகிறது.அதாவது தேசத்தை நிர்மாணித்தல் என்பது எதிர் தரப்புக்கு எதிர்வினை ஆற்றும் தற்காப்பு நிலை அரசியலாகதான் மாறியிருக்கிறது.மாறாக தேசத்தை நிர்மாணிப்பதற்கான நிறுவனங்களை உருவாக்கி அதனூடாக தன் உள் அரசியல் எதிரியையும் வெளி எதிரிகளையும் எப்படித் தோற்கடிக்கலாம் என்ற சிந்தனை கூட்டமைப்பிடமும் இல்லை.கூட்டமைப்பின் எதிரிகளிடமும் இல்லை.

கூட்டமைப்பின் அரசியல் தவறுகள் காரணமாகத்தான் கடந்த பொதுத் தேர்தலில் அக்கட்சி ஏகபோகத்தை இழந்தது.ஆனால் அந்த தோல்வியை தன்னுடைய முழுமையான வெற்றியாக மாற்றிக் கொள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் முடியவில்லை.எனைய தமிழ்த்தேசிய கட்சிகளாலும் முடியவில்லை.இதனால் தமிழ் வாக்குகள் மேலும் சிதறி,தமிழ்மக்களின் பேரபலம் சிதைந்தது. அதாவது தேசத் திரட்சி பலவீனமடைந்தது.

இப்பொழுதும் ஜெனிவா விவகாரத்தில் கூட்டமைப்பு செய்வது பிழை என்றால் ஏனைய கட்சிகள் அதை தோற்கடிக்க வேண்டும்.அதற்கு வேண்டிய மக்கள் ஆணையை முதலில் பெற வேண்டும். அந்த மக்கள் ஆணையை பெறுவதற்கு ஒரு பலமான மாற்று அணியை கட்டி எழுப்ப வேண்டும். மக்களாணையை பெற்ற பின் பொருத்தமான வெளியுறவு கொள்கை ஒன்றை வகுத்து வெளியுறவு கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி அதனூடாக ஜெனிவாவையும் இந்தியாவையும் எனைய தரப்புகளையும் அணுக வேண்டும். ஆனால் அப்படியான சிந்தனைகளையோ செயற்பாடுகளையோ தமிழ் அரசியலில் மிகக் குறைவாகவே காணமுடிகிறது.ஒப்பிட்டுளவில் அதிக ஆசனங்களைப் பெற்ற கூட்டமைப்போடுதான் வெளியுலகம் பேசும்.

 

தன் உள் அரசியல் எதிரியைத் திட்டித் தீர்ப்பதிலேயே தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் சக்தி பெருமளவுக்கு விரயம் செய்யப்படுகிறது.இது ஒரு விதத்தில் நெகட்டிவ் ஆனது. மாறாக பொசிட்டிவாக தனக்கு சரி என்று தோன்றும் ஓர் அரசியல் இலக்கை முன்வைத்து தேசத்தைக் கட்டியெழுப்ப இந்த கட்சிகளால் முடியவில்லை.இதனால்தான் கடந்த 13 ஆண்டுகளாக பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டு போக முடியவில்லை. பேராசிரியர் ஜூட் லால் கூறுவது போல தமிழ்மக்கள் கடந்த 13 ஆண்டுகளாக குறிப்பிட்டுச் செல்லக்கூடிய வெற்றிகள் எதையும் பெற்ற முடியவில்லை.வேண்டுமானால் நெருப்பை அணையாமல் பாதுகாத்தோம் என்று கூறித் திருப்திப்படலாம்.

தனது உள் அரசியல் எதிரிகளைப் பற்றியே எப்பொழுதும் சிந்தித்து அவர்களுக்கு எதிரான வியூகங்களை வகுப்பதிலேயே தமிழ்ச் சக்தி வீணாகிக் கொண்டிருக்கிறது.மாறாக,ஆக்கபூர்வமான விதத்தில் பொசிட்டிவாக, புரோஅக்டிவாக,ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு வேண்டிய வழி வரைபடத்தை தயாரித்து முன் செல்லும்போது அரசியல் எதிரிகள் படிப்படியாக உதிர்ந்து போய் விடுவார்கள்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மூன்று கட்சிகளும் கூட்டாக கடிதமெழுதி கிட்டத்தட்ட 20 மாதங்கள் கழிந்துவிட்டன.இந்த 20 மாதங்களிலும் தாம் ஜெனிவாவை நோக்கி முன்வைத்த கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக இக்கட்சிகள் என்னென்ன செய்திருக்கின்றன?கூட்டமைப்பு தொடர்ந்து வாக்காளர்களை ஏமாற்றுகிறது என்று சொன்னால்,அவ்வாறு ஏமாற்றாத ஏனைய கட்சிகள் கடந்த 20மாதங்களாக என்ன செய்திருக்கின்றன? கூட்டமைப்பு ஏமாற்றுகிறது என்று சொன்னால் மட்டும் போதாது.தாங்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்றும் சொல்லவேண்டும்.பொறுப்புக்கூறலை ஜெனிவாவுக்கு வெளியே கொண்டுபோகும் விடயத்தில் இவர்கள் இதுவரை சாதித்தவை என்ன? மிகக்குறிப்பாக அந்த விடயத்தை நோக்கி அவர்கள் கட்டியெழுப்பி வைத்திருக்கும் கட்டமைப்புகள் எத்தனை?

பன்னாட்டு நீதிமன்றத்தை நோக்கிச் செல்லும் வழியில் கடந்த 20 மாத காலத்தில் எதுவரை முன்னேறி இருக்கிறோம் என்பதனை மூன்று கட்சிகளும் தமிழ்மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.ஜெனிவாவில் இலங்கை அரசாங்கத்தை பொறுப்புக்கூற வேண்டும் என்று கேட்கும் மேற்படி கட்சிகள் தமது வாக்குறுதிகளுக்கும் அதை நம்பும் தமது மக்களுக்கும் பொறுப்பு கூறவேண்டும்.

காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகள் மட்டக்களப்பு காணாமல்போனோரின் உறவினர்களிடம் விசாரணை

காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகள் மட்டக்களப்பு காணாமல்போனோரின் உறவினர்களிடம் விசாரணைகளை இன்று புதன்கிழமை மேற்கொண்டுள்ளனர்.மாவட்டத்தில் மொத்தமாக 450 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள செங்கலடி, மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலகங்களில் 5 நாட்கள் இவ்வாறு காணாமல்போன உறவினர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, முறைப்பாடுகள் பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் கலந்து கொண்டு தமது முறைப்பாடுகளைப் பதிவு செய்தனர்.மண்முனை தென் எருவில் பற்று, களுவாஞ்சிகுடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இவ்விசாரணையில் கொழும்பிலிருந்தும் மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த அதிகாரிகள் இதன்போது கலந்து கொண்டு விசாரணைகளை மேற்கொண்டு முறைப்பாடுகளைப் பதிவு செய்தனர்.காணாமல் போனவர்களின் உறவினர்கள் முன்வைக்கும் கோரிக்கைக்கு இணங்க அவர்களுக்குத் தேவையான உதவிகளை மேற்கொள்வதற்கு காணாமல்போனோர் பற்றிய அலுவலலகம் பரிந்துரை செய்யும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.(

”நாடு இராணுவ ரீதியாக மட்டுமன்றி உணவு மற்றும் பொருளாதார ரீதியிலும் பாதுகாக்கப்பட வேண்டும்”

ஒரு நாடு இராணுவ ரீதியாக மட்டுமன்றி உணவு மற்றும் பொருளாதார ரீதியிலும் பாதுகாக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி தெரிவிப்பு.
நாட்டின் பாதுகாப்பு இராணுவத்தில் மட்டுமன்றி உணவு மற்றும் பொருளாதார பாதுகாப்பிலும் தங்கியிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் போஷணையை உறுதி செய்யம் நிகழ்ச்சி தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
உணவு பாதுகாப்பு மற்றும் போஷணையை உறுதி செய்யும் நிகழ்ச்சியை நடைமுறைப்படுத்தும்போது அரச பொறிமுறையில் ஏற்பட்ட வீழ்ச்சிக் காரணமாக ஏதேனும் பிரச்சினைகள் உருவாகுமாயின் அதனை சரிசெய்வதற்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் தலையிடுவதற்குத் தயார் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சித் திட்டத்திற்கூடாக விவசாயத்தை நவீனமயப்படுத்தல் மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை இயற்ற வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
“எந்தவொரு பிரஜையும் உணவின்றி பசியால் வாடக்கூடாது” என்ற தொனிப்பொருளில் உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதி செய்வதற்கு கிராமிய பொருளாதார மேம்பாட்டு மையத்தை பலப்படுத்தும் பல் துறைகளின் ஒன்றிணைந்த பொறிமுறையொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரையின்பேரில் அண்மையில் நாடுபூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அவ்வேலை திட்டத்தின் மாவட்ட மட்ட முன்னேற்றம் தொடர்பில்
இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் கிராம மட்டத்தில் கிராமிய பொருளாதார மேம்பாட்டுக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும், உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதி செய்வதற்கு பல்வேறு வேலைதிட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஏற்ற வகையில் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்ளும்போது ஏற்படும் தடைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதன்போது, எரிபொருள் மற்றும் தேவையான உரத்தை பெற்றுக் கொள்வது தொடர்பிலும், காணிப்பிரச்சினை, விதைப் பற்றாக்குறை, வனவிலங்குகளால் ஏற்படும் சேதங்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் மாவட்டச் செயலாளர்களால் முன்வைக்கப்பட்ட முன்னேற்றங்கள் குறித்து அவதானம் செலுத்திய ஜனாதிபதி, உணவுப் பாதுகாப்பை உருவாக்குவதற்கும், கிராம மட்டத்தில் மேற்கொள்ளப்படும் பயிர்ச் செய்கைகளை தனித்தனியாக இனங்காணுவதற்குமென உணவுப் பற்றாக்குறை நிலவுகின்ற பிரதேசங்களை இனங்கண்டு அது தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவித்தார்.
இந்தத் தகவல்களின் அடிப்படையில் மாவட்டந்தோறும் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் உணவு வங்கி (food bank) மற்றும் சமூக சமையலறை (Comunity kitchen) ஆகிய வேலைத்திட்டங்களை செயல்படுத்த திட்டமிடுமாறும் தெரிவிக்கப்பட்டது.
அரச சேவையில் தற்போது தேவைக்கு அதிகமானவர்கள் இருப்பதால் அவர்கள் அனைவரையும் இந்த வேலைத்திட்டத்தில் இணைத்துக் கொள்வது தொடர்பில் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, முப்படை வீர்ர்கள், சிவில் பாதுகாப்புப் படையினர், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்பையும் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.
2023 ஆம் ஆண்டு வரை இத்திட்டத்தை தொடர்ந்து அமுல்படுத்துமாறும். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உலகப் பொருளாதார நெருக்கடிக்குத் தயாராகுவதற்கும் மக்களின் போஷாக்கு தேவையை உறுதிப்படுத்துவதற்கும் இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
மூன்று வாரங்களின் பின்னர், வாரத்திற்கு ஒருமுறை இவ்வேலைத் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் அமைச்சரவைக்கு அறிக்கையொன்றை சமர்பிக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இங்கு கருத்து தெரிவித்த பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள், புதிதாக பயிர்ச்செய்கையில் ஈடுபடுகின்றவர்களுக்கு காணிகள் வழங்குவதனை துரிதப்படுத்தல் மற்றும் அதற்காக முறையான பொறிமுறையொன்றை பின்பற்றுவதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று எதிர்வரும் மழைக்காலம் புதிய பயிர்ச் செய்கைக்கு பொருத்தமாக உள்ளதனால், தாமதமின்றி பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதற்கு கிராம மட்ட்த்தில் மக்களை தெளிவூட்டுவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் பிரதமர் இங்கு விளக்கமளித்தார்.
அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி. சுரேன் படகொட மற்றும் துறைசார் அமைச்சுகளின் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
Posted in Uncategorized

எரிக்சொல்ஹெய்மை தனது சர்வதேச காலநிலை ஆலோசகராக ஜனாதிபதி ரணில் நியமனம்

நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்மை தனது சர்வதேச காலநிலை ஆலோசகராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இன்று காலை இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பு மிகவும் சிறப்பு மிக்கது என எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

மேலும் பசுமைப் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் இலங்கையின் காலநிலை தொடர்பான தலைமைத்துவத்திற்கான தொலைநோக்கு பார்வை, ஜனாதிபதிக்கு உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.“ இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சிறந்த சந்திப்பை முன்னெடுத்தோம். பசுமைப் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் இலங்கையின் காலநிலைத் தலைமைத்துவத்திற்கான சிறந்த தொலைநோக்குடையவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. அவரது சர்வதேச காலநிலை ஆலோசகராக நியமிக்கப்பட்டதில் பெருமிதம் கொள்கிறேன் எரிக் சொல்ஹெய்ம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் என குறிப்பிட்டுள்ளார்.(

Posted in Uncategorized

முட்டாள்தனமான அரசாங்கம் நாட்டை அழித்து வருகின்றது

இந்த முட்டாள்தனமான அரசாங்கம் நாட்டை அழித்து வருவதாகவும், தேர்தலொன்று இல்லாமல் முன்னேற்றமொன்று இல்லை எனவும், அரசாங்கம் தேர்தலை நடத்தாவிட்டால் வீதியில் இறங்கி அதற்காக போராடுவோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அன்று வரிசையில் நின்று மக்கள் செத்து மடியும் போது அழுவதை மறந்த அரசாங்க தரப்பு,உரமின்றி விவசாயிகள் பெருமூச்சு விடும் போது அழுவதை மறந்த அரசாங்க தரப்பு, எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து உயிர் இழந்தது போது அழுவதை மறந்த அரசாங்க தரப்பு, இன்று புலம்பிய வன்னம் கதறி அழுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உடுதும்பர தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் இன்று (10) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி சனத் பண்டார அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் பெரும்திரளான ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அமைதியான போராட்டங்களைக் கண்டும் அரசாங்கம் அச்சமடைந்துள்ளதாகவும், காலி முகத்திடல் வளாகத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நேற்றைய தினம் அடக்குமுறை மேற்கொள்ளப்பட்டதும் இதன் பிரகாரமே எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தாயும் மகனும் கைகோர்த்து நடத்தும் அமைதியான ஆர்ப்பாட்டத்தை கூட அரசாங்கத்தால் பொறுத்துக்கொள்ள முடியாது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,மகனிடமிருந்து தாயை பறித்துச் சென்று ஜீப்பில் ஏற்றிச் செல்லும் காட்சிகளைக் கூட பார்க்கக்கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அமைதியான போராட்டங்களில் ஈடுபடும், ஜனநாயக சுதந்திரத்தை அனுபவிப்பவர்களுக்கு எதிராக செயல்படும் அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இழப்பீடு வழங்க வேண்டிவரும் எனவும் அவர் தெரிவித்தார்.

அரச பயங்கரவாதத்துக்கும் அரச வன்முறைக்கும் நீண்ட கால ஆயுள் இல்லை என தெரிவித்த எதிர்கட்சித் தலைவர்,இதற்கு வரலாற்றில் பல படிப்பினைகள் உள்ளன எனவும் தெரிவித்தார்.

இந்த அரசாங்கம் தேர்தலுக்கு முற்றாக அஞ்சுவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,தேர்தலை பிற்போடவே முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

உடனடியாக தேர்தலொன்றை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுவதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், முடிந்தால் ஜனாதிபதி தேர்தலையும் நடத்துங்கள் எனவும் சவால் விடுத்தார்.

தேர்தலை ஒத்திவைக்க பல்வேறு சூழ்ச்சிகளை பயன்படுத்துவதை விடுத்து, முடிந்தால் மொட்டு விரும்பும் எந்தத்தேர்தலையும் நடத்துங்கள் என்றும் சவால் விடுத்தார்.

IMF அதிகாரிகளினால் அமைச்சரவைக்கு தௌிவூட்டல்

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதி வசதி தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (10) பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக பங்குபற்றிய சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இதனை அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் டொலர் நிதி வசதியை வழங்க பூர்வாங்க ஒப்பந்தத்தை எட்டியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நிதி பங்களிப்பு தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவித்ததுடன் அமைச்சர்களும் தமது பிரச்சினைகளை முன்வைக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

இதேவேளை, நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினை மற்றும் அதற்கு வழங்கக்கூடிய தீர்வுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கும் வேலைத்திட்டம் அடுத்த வாரம் அமுல்படுத்தப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு தொகை அதிகரிப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவுகளுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த ஒரு இலட்சம் ரூபாய் இழப்பீடு தொகையை இரண்டு இலட்சம் ரூபாயாக அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதென அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும்  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்றார்.

Posted in Uncategorized

ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையில் கார்பன் வளர்ச்சி தொடர்பான கூட்டு கடன் பொறிமுறை உடன்படிக்கை

ஜப்பானும் இலங்கையும் குறைந்த கார்பன் வளர்ச்சி பங்காளித்துவத்திற்கான கூட்டு கடன் பொறிமுறை (JCM) தொடர்பான ஒத்துழைப்பு உடன்படிக்கையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கைச்சாத்திட்டன.

இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இதனையடுத்து, ஜப்பானிய தூதுவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

புவி வெப்பமடைவதற்கு காரணமான பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைப்பதற்காக உலகளாவிய ரீதியில் ‘கியோத்தோ’ அமைப்பு நிறுவப்பட்டது. இந்த அமைப்பின் இரண்டாவது பதவிக் காலத்தின் போது (2013-2020) ஜப்பான் அந்த அமைப்பிலிருந்து விலகிக் கொண்டது.

அதனைத்தொடர்ந்து உலகளாவிய பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் பங்களிப்புச் செலுத்துவதற்காக 2013 ஆம் ஆண்டளவில் காபன் அளவைக் குறைக்கும் இருதரப்பு கூட்டுப் பொறிமுறையொன்றை ஜப்பான் அறிமுகம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் ருவன் விஜேவர்தன உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Posted in Uncategorized