சர்வதேச நீதிமன்றின் முன் இலங்கையை பாரப்படுத்த வேண்டும்! சுரேந்திரன் ரெலோ

தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறல் மற்றும் அட்டூழிய குற்றங்களுக்கான நீதியைக் கோரி இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன் பாரப்படுத்துமாறு மனித உரிமைப் பேரவையின் பிரதான அங்கத்துவ நாடுகளுக்கும் மனித உரிமை உயர்ஸ்தானிகருக்கும் ஐநா பாதுகாப்புச் சபையை தூண்டுமாறு கையெழுத்திட்ட கோரிக்கையை அனுப்பி வைத்துள்ளோம் என ரெலோ அமைப்பின் தேசிய அமைப்பாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது இன்று நேற்றல்ல, எமது தொடர்ச்சியான நிலைப்பாடு. சர்வதேச நீதிப் பொறிமுறை, சர்வதேச விசாரணை என்பவற்றிற்கு குறைவான எந்த விடயங்களும் தமிழ் மக்களுக்கு தீர்வைத் தராது என்பதில் நாம் தொடர்ந்தும் உறுதியாக இருப்பதோடு மாத்திரமல்ல அதற்காக அர்ப்பணிப்போடு உழைத்து வருகிறோம் என்பதை அனைத்து தமிழ் மக்களும் நன்கு அறிவர் எனவும் அவர் கூறினார்.

உறுதியுடனான தொடர் பயணம்

அதேபோன்று ஐநா விடயங்களில் மாத்திரமல்லாமல் அன்றாட விடயங்களிலும் தமிழ் மக்கள் எதிர்கொண்டிருக்கும் அவசர அவசியமான பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் நாங்கள் அக்கறையோடும் செயலாற்றுவோம்.

பத்திரிகை அறிக்கைகளைத் தாண்டி மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வைப் பெற செயல் வடிவம் கொடுப்பதே அர்த்தமுள்ளதாக அமையும் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டவர்கள்.

தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்காக பல வழிகளிலும் போராடி வரும் வரலாற்றைக் கொண்ட எமது கட்சி தொடர்ந்தும் உறுதியுடன் பயணிக்கும் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அனர்த்தங்களுக்கு முகம்கொடுக்க தயாராக இருக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை!

அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்னர் தேவையான முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் நேரடியாக உத்தரவு பிறப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி, 25 மாவட்டங்களையும் உள்ளடக்கி, மாவட்டச் செயலகங்களின் தலைமையில், மாவட்ட நிர்வாக ஒருங்கிணைப்புப் பிரிவுகள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்கும் புவிச் சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம், வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை செயற்படும்.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவுகள் மற்றும் பிரதேச செயலக மட்டத்தில் உள்ள நிவாரண சேவை அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வழங்கும்.

அனர்த்தங்கள் ஏற்படுவதைத் தவிர்த்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்காக தேவையான நடவடிக்கைகள் மற்றும் அவசரகால பேரிடர் சூழ்நிலை ஏற்பட்டால், அதற்காக எடுக்க வேண்டிய துரிதமான நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அப்பணிகளின் செயல்திறனை உயர் மட்டத்தில் பேணி, தேவையான நிவாரணத் திட்டத்தை அவசரமாக நடைமுறைப்படுத்துவதற்கான தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும் அனைத்து துறைசார் அமைச்சுகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசரநிலை தொடர்பில் முறையிடுவதற்கு 117 என்ற தொலைபேசி எண், 24 மணிநேரமும் செயல்படுத்தப்படுகிறது. அனர்த்த நிவாரண சேவை நிலையத்தை (NDRSC) 24 மணிநேரமும் செயற்படுத்த அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் பிற வசதிகள் இதன் மூலம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேசிய பாதுகாப்பு தொடர்பாக சட்ட முறைமையை அறிமுகப்படுத்தத் தீர்மானம்!

தேசிய பாதுகாப்பு தொடர்பாக சட்ட முறைமையை அறிமுகப்படுத்தத் அரசாங்கம் தீர்மனித்துள்ளது.

பயங்கரவாதம் மற்றும் வன்முறையான தீவிரவாதத்தின் புதிய வடிவங்கள் தொடர்பான ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்காக தற்போது காணப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சடடங்களிலுள்ள பலவீனங்களை தவிர்ப்பதற்கும், அவ்வாறான செயற்பாடுகளை எதிர்கொள்வதற்கும், சட்ட வலுவாக்கம் செய்வதற்கும், விசாரணை மற்றும் புலனாய்வு செயற்கருவிகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் விரிவான தேசிய பாதுகாப்பு சட்ட முறைமையொன்று அறிமுகப்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் சர்வதேச தரநியமங்கள் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு தேசிய பாதுகாப்பு தொடர்பாக முழுமையான சட்ட முறைமையொன்றுக்கான அடிப்படைச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியல்மைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளரின் தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி அவர்கள்: நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியல்மைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்: மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Posted in Uncategorized

இலங்கையிலிருந்து ஜெனீவாவிற்கு புறப்பட்ட குழு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ள

இந்நிலையில், குறித்த அமர்வில் பங்கேற்பதற்காக அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினர் இன்று ஜெனிவாவிற்கு பயணமாகியுள்ளனர்.

அதன்படி, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நிதீ அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குறித்த குழுவில் உள்ளடங்குதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

இந்தியா இலங்கைக்கு 4 பில்லியன் டொலர் உதவிகளை வழங்கியுள்ளது – ஐநாவில் இந்தியா

மனிதனை மையமாக கொண்ட உலகமயமாக்கலில் தனது ஆக்கபூர்வமான பங்களிப்பு குறித்து ஐநாவில் கருத்து தெரிவித்துள்ள இந்தியா இலங்கைக்கு உணவு மற்றும் நிதியுதவியாக கிட்டத்தட்ட 4 பில்லியன் டொலர்களை வழங்கியதாக தெரிவித்துள்ளது.

சமாதானத்தை ஏற்படுத்தும் ஆணைக்குழு தொடர்பான ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் வருடாந்த கூட்டு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய இந்தியாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ருச்சிரகம்போஜ் இதனை தெரிவித்துள்ளார்.

எங்களின் நெருங்கிய அயலில் உணவுப்பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடந்த சில மாதங்களாக 4 பில்லியன் டொலர் உணவு மற்றும் நிதியை வழங்குவதன் மூலம் எங்களின் சிறந்த நண்பரும் அயலருவமான இலங்கைக்கு உதவுகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மோதல் ஆரம்பித்தது முதல் உணவு மற்றும் பொருட்விநியோக சங்கிலி அழிக்கப்பட்டதால் ஏற்பட்ட மோசமான விளைவுகளிற்கு தீர்வை காண்பதற்காக நிதி உதவி தேவைப்படும் நாடுகளிற்கு இந்தியா உதவிகளை வழங்குகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

22ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதால் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரங்கள் பகிரப்படும் – அலி சப்ரி

அரசியலமைப்பின் 22வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரங்கள் பகிரப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய அவர்,

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட பெரும்பாலான கட்டமைப்புகள் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் நிறைவேற்றப்படும் போது மீண்டும் திரும்பும் என தெரிவித்தார்.

முன்னர் திட்டமிடப்பட்ட இடைக்கால ஏற்பாட்டை தக்கவைக்க தற்போதைய ஜனாதிபதி விரும்பவில்லை என்றும் 19ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவே அவர் விரும்புவதாகவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

சர்வதேச மற்றும் பிராந்திய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாக தேசிய பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் மனித சுதந்திரத்தை சமநிலைப்படுத்துவதற்கும், சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டத்தை தயாரிப்பதற்கும் இலங்கை தயாராகி வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வெறிபிடித்தவர்களே உள்ளனர் – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது எந்தக் கொள்கையையும் கொண்டிருக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இல்லை என்றும் கட்சியில் கொள்கைகளோ, ஆட்களோ இல்லை என்றும் பெயர் பலகை மட்டுமே உள்ளது என்றும் தற்போது கட்சியில் வெறிபிடித்தவர்களே உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையில் பெரிய ஜனநாயகக் கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இருந்ததாகவும், தற்போது அது அழிக்கப்பட்டுள்ளதாகவும் தனக்கு கட்சி முக்கியமல்ல என்றும் கட்சியின் கொள்கைகளும் மக்களும் தான் முக்கியம் என்றும், எனவே மக்களுக்காகவும் கட்சியின் கொள்கைகளுக்காகவும் தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்

Posted in Uncategorized

இங்கிலாந்து பிரதமராக லிஸ் டிரஸ் தெரிவு!

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து, புதிய பிரதமராகும் வாய்ப்பை லிஸ் டிரஸ் பெற்றுள்ளார்.

ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 2 ஆம் திகதி முடிவடைந்தது.

இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக்குக்கும், தற்போதைய வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

புதிய தலைவரை தேர்வு செய்ய கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் சுமார் 1.60 லட்சம் பேர் தபால் மற்றும் ஆன்லைன் மூலமாக வாக்களித்தனர். வாக்குகள் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஆளும் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் லிஸ் டிரஸ் வெற்றி பெற்றார்.

இதையடுத்து, இங்கிலாந்தின் அரசியலமைப்பு சட்டப்படி ஆளும் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படும் நபரே நாட்டின் பிரதமராக நியமிக்கப்படுவார். நாளை இங்கிலாந்து ராணியை சந்தித்து ஆசி பெற்ற பின்னர் பிரதமராக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு திருப்பியழைக்க ஜனாதிபதி நடவடிக்கை

இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கையர்களை, நாட்டுக்கு திருப்பியழைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.இதற்கமைய, புகலிடம்கோரி அகதிகளாக இந்தியாவுக்கு சென்ற இலங்கையர்களை நாட்டுக்கு திருப்பி அழைப்பதற்கான வசதிகளை முன்னெடுப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்க நாயக்கவினால் இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் ஊடகப்பிரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது

குமார வெல்கம தலைமையில் புதிய அரசியல் கட்சி

பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் கட்சித் தலைமையகம் பத்தரமுல்லையில் இன்று(05) திறந்துவைக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் இன்றைய நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, சந்திம வீரக்கொடி மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.