வருகையை பிற்போடுமாறு கோரிய பின்னரும் ஹம்பாந்தோட்டை நோக்கி வேகமாக பயணிக்கும் சீன கப்பல்

வருகையை பிற்போடுமாறு வௌிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்திருந்தாலும் சீனாவின் அதி தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல் தற்போது வேகத்தை அதிகரித்துக்கொண்டு ஹம்பாந்தோட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது.

கப்பல் எதிர்வரும் வியாழக்கிழமை (11) ஹம்பாந்தோட்டையை அடையவுள்ளது.

செய்மதிகள் மற்றும் ஏவுகணைகளை கண்காணிக்க முடியுமான வசதிகள் கொண்ட சீனாவின் Yuan Wang 5 கப்பல் இன்று பிற்பகல் இலங்கையில் இருந்து 680 கடல் மைல் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்தது. மணித்தியாலத்திற்கு 14 கடல் மைல் வேகத்தில் அந்நேரத்தில் கப்பல் பயணித்துக்கொண்டிருந்தது. இதற்கு முன்னர் இந்த கப்பல் மணித்தியாலத்திற்கு 10 முதல் 13 கடல் மைல் வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்தது.

தமது பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் நிலவுவதாக தெரிவித்து சீனாவின் இந்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு பயணிப்பதை இந்தியா கடுமையாக எதிர்த்ததுடன் இந்த கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு நேற்று வௌிவிவகார அமைச்சு சீனாவிற்கு அறிவித்திருந்தது.

இந்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளதாக சீனா ஜூன் 28 ஆம் திகதி அறிவித்ததுடன், ஜூலை 12 ஆம் திகதி வௌிவிவகார அமைச்சு அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி, ஜூலை 14 ஆம் திகதி இந்த கப்பல் அங்கிருந்து புறப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏவுகணை கண்காணிப்புகளை மேற்கொள்ள முடியுமான சீனாவின் உற்பத்தியான பாகிஸ்தானின் யுத்த கப்பல் ஒன்றும் 12 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

PNS Taimur என்ற இந்த யுத்த கப்பல் தனது கன்னிப் பயணத்தில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே கொழும்பிற்கு வரவுள்ளது.

கம்போடியா மற்றும் மலேசியாவிற்கு அண்மித்த பகுதியில் யுத்த பயிற்சிகளில் ஈடுபட்ட பின்னரே இந்த கப்பல் வருகைதரவுள்ளது.

பாகிஸ்தானின் கப்பல் இந்தியாவிற்கு மிக அண்மித்த நாடான பங்களாதேஷின் சிட்டகாங் துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி கோரியிருந்த போதிலும் அவர்கள் அதற்கு அனுமதி வழங்கியிருக்கவில்லை.

பங்களாதேஷ் பிரதமர் சேக் ஹசீனாவின் தந்தை பாகிஸ்தானின் உதவியுடன் செயற்படுத்தப்பட்ட குழு ஒன்றினால் 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொலை செய்யப்பட்டமையே பங்களாதேஷ் இதனை நிராகரித்தமைக்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆகஸ்ட் மாதம் முழுவதும் அங்கு துக்க மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் அதி தொழில்நுட்ப ஆய்வு மற்றும் கண்காணிப்புக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கும் சீனாவின் உற்பத்தியான பாகிஸ்தானின் யுத்த கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கும் ஒரே நேரத்தில் வந்தடையவுள்ளது.

இலங்கையின் பூகோள அமைவிடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனினும், நாட்டை நிர்வகித்தவர்கள் எடுத்த தவறான தீர்மானங்கள் காரணமாக இன்று நாடு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

காலத்திற்கு காலம் எடுத்த சந்தர்ப்பவாத தவறான தீர்மானங்கள் காரணமாக உலகில் அரசியலில் பலம் பொருந்திய இரண்டு நாடுகளுக்கு இடையில் சிக்கியுள்ளது.

Posted in Uncategorized

StAR திட்டத்தை ஆரம்பிக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கை அரசிடம் கோரிக்கை

திருடப்பட்ட சொத்துகளை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கான (Stolen Asset Recovery – StAR) திட்டத்தை ஆரம்பிக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

மோசடி மூலம் பெறப்பட்ட பணத்தை தேடுவதற்கான சர்வதேச முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகளின் கூட்டுடன் இலங்கை இணைய வேண்டும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின் அடிப்படையில், அவ்வாறு செயற்படுவதற்கு முன்நிற்க வேண்டுமென நியூயோர்க்கை தலைமையகமாகக் கொண்ட சர்வதேச மனித உரிமை அமைப்புகளில் ஒன்றான மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கு ஆறு யோசனைகளை அந்த அமைப்பு முன்வைத்துள்ளது.

அனைத்து இலங்கையர்களினதும் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க தமது நிர்வாகம் செயற்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளிக்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அவசரகால சட்டம் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படுகின்றமைக்கு ஐ.நா அதிகாரிகள் கண்டனம்

இலங்கையில் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்காக அவசரகால சட்டத்தை பயன்படுத்துகின்றமைக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை தொடர்பான அதிகாரிகள் கண்டனம் வௌியிட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை இன்று வௌியிட்டுள்ள ஒன்றிணைந்த அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அறவழி போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் துன்பங்களை வௌிப்படுத்துவதை தடுப்பதற்கும் இலங்கையிலுள்ள அதிகாரிகளால் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் திகதி அவசரகால சட்டம் மீள அமுல்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஜூலை 15 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டை விட்டு வௌியேறி பதவியை இராஜிநாமா செய்ததுடன், அதற்காக நாடு முழுவதும் பல மாதங்களாக பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதை நினைவுகூர்ந்துள்ள மனித உரிமை தொடர்பாக செயற்படும் குழுவினர், தொடர்ந்து வந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 17 ஜூலை 2022 அன்று போராடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கையை எடுப்பதற்காக அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

அன்று முதல் இலங்கை பாராளுமன்றம் 2022 ஜூலை 27 ஆம் திகதி மேலும் ஒரு மாதத்திற்கு தற்போதைய அவசரகால சட்டத்தை நீடிக்கவும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்கவும் இராணுவத்திற்கு தேவையான அதிகாரங்களை வழங்கவும் தீர்மானித்ததாக ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் அதிகாரம் இன்றி போராட்டக்காரர்ளைத் தடுத்து வைக்கவும் தனியார் சொத்துகளை சோதனை செய்யவும் இதன் மூலம் வழியேற்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவசர கால சட்டம் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படுகின்றமை தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட போதிலும் அது பலனளிக்கவில்லை என மனித உரிமை தொடர்பாக செயற்படும் குழுவினரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமை மற்றும் கருத்து சுதந்திரம் மீறப்பட்டுள்ளமை கண்டிக்கத்தக்கது எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச சட்டத்தின் கீழ் அவசரகால சட்டத்தை பயன்படுத்துகின்றமை தொடர்பிலான கரிசனையினையும் மனித உரிமை தொடர்பில் செயலாற்றும் குழுவினர் கருத்தில் கொண்டுள்ளனர்.

சிவில் செயற்பாட்டாளர்கள் , ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் அமைதி வழி போராட்டப் பின்னணியில் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அதற்காக அவர்கள் குற்றவியல் பொறுப்புக்கூறலை எதிர்கொள்ளக்கூடாது எனவும் அவர்கள் அரசாங்கத்திற்கு தமது கரிசனையை வௌியிட்டுள்ளனர்.

அமைதியாக ஒன்று கூடுவதற்கும் சங்கங்களின் சுதந்திரத்திற்கான உரிமைகளுக்காகவும் செயற்படும் விசேட அறிக்கையாளர் கிளமென்ட் நியோல்டெசி வில்லே, வௌிநாட்டு கடன்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சுயாதீன நிபுணர் அத்திய வாரிஸ்,
நீதி, சமத்துவம், இழப்பீடுகளை வழங்குதல், மீள நிகழாமையை உறுதிப்படுத்தி மேம்படுத்தல் தொடர்பான விசேட அறிக்கையாளர் பேபியன் செல்வியோலி, அபிவிருத்திக்கான உரிமை தொடர்பான விசேட அறிக்கையாளர் சாத் அல்பாராகி, ஜனநாயகம் மற்றும் சமத்துவத்திற்கான சர்வதேச திட்டத்தை ஊக்குவிப்பது தொடர்பான சுயாதீன விசேட நிபுணரான லிவிங்ஸ்டன் சேவன்யான் ஆகியோர் இந்த அறிக்கையை வௌியிட்டுள்ளனர்.

இதனைத் தவிர உணவு தொடர்பான உரிமைக்கான விசேட செய்தியாளர் மைக்கல் பெக்ரி, மிரியம் எஸ்டிராடோ கெஸ்டிலோ,
மும்பா மலீலா, எலீனா ஸ்டேனர்டே பிரியா கோபாலன், மத்தியூ கிளட், பிரான்சிஸ் கொக்கலிசே, கருத்துச் சுதந்திரம் தொடர்பான விசேட அறிக்கையாளர் அய்ரின் கன்சா மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு நிலை தொடர்பான விசேட அறிக்கையாளர் மேரி லாலர் ஆகியோர் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

Posted in Uncategorized

இறுதி நேரத்தில் ஜனாதிபதியுடனான சந்திப்பை நிராகரித்தது ஜே.வி.பி

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பான கலந்துரையாடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விடுக்கப்பட்டிருந்த அழைப்பினை நிராகரிப்பதாகவும் , ஜனாதிபதியுடன் சந்திப்பில் ஈடுபடப்போவதில்லை என்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) இறுதி நேரத்தில் அறிவித்தது.

இன்று செவ்வாய்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் , ஜே.வி.பி. உறுப்பினர்களுக்குமிடையில் சர்வகட்சி அரசாங்கம் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவிருந்தது.

சர்வகட்சி அரசாங்கத்தில் தாம் பங்கேற்கப் போவதில்லை என்பதையும் , சர்கட்சி அரசாங்கம் குறித்த தமது யோசனைகளையும் முன்வைப்பதற்காகவும் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொள்வோம் என்று ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அறிவித்திருந்தார்.

எவ்வாறிருப்பினும் சந்திப்பில் யார் கலந்து கொள்வார்கள் என்பது குறித்து தீர்மானிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். எனினும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க டுவிட்டர் பதிவொன்றின் மூலம் தாம் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

பிமல் ரத்நாயக்க தனது டுவிட்டர் பதிவில் , ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலில் ஜே.வி.பி. பங்கேற்காது. ரணில் விக்கிரமசிங்க – மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் முறையற்றது என்பதை ஜே.வி.பி. ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த முறைகேடான ஆட்சியை தோற்கடித்து மக்களின் இறையாண்மையை நிலைநாட்டுவதே தற்போதுள்ள பிரச்சினைகளுக்க ஒரே தீர்வு’ என்று குறிப்பிட்டுள்ளார்

Posted in Uncategorized

நல்லூரில் 1000 ரூபாய் போலி நாணயத்தாள்கள்!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் உள்ள கடைகளில் போலி ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களினை வழங்கி பொருள்கள் வாங்கிய ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 2 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களுடம் 3 கடைகளில் வழங்கிய 3 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா இடம்பெற்று வருகிறது.

ஆலய திருவிழாவின் முதல் மூன்று நாள்களில் மூன்று வெவ்வேறு கடைகளுக்குச் சென்ற ஒருவர், போலி ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களை வழங்கி கச்சான், பழங்களை 200 ரூபாய்க்குள் வாங்கி மிகுதி பணத்தை பெற்றுச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன.

அவை தொடர்பில் யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலாற மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

நல்லூரடியைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் விசாரணைகளின் பின் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

சந்தேக நபருக்கு போலி நாணயத்தாள்களை அச்சிட்டு வழங்கியவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் கூறினர்.

Posted in Uncategorized

கூட்டமைப்பினுள் கறுப்பாடுகளை அனுமதிக்க முடியாது – ரெலோவின் தலைவர் செல்வம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாக இருந்தது இருக்கின்றது. ஆனால் இரண்டு மூன்று கறுப்பாடுகளுடைய செயல்பாடுகளால் மக்களினுடைய மனதில் இருந்து அது குறைந்து வருகின்றது. இதனை அனுமதிக்க முடியாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) பத்தாவது தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே செல்வம் அடைக்கலநாதன் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

விடுதலைப்புலிகள் உட்பட ஆயுதப் போராட்ட இயக்கங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். தனிக்கட்சிகளுடைய எந்தவொரு நாட்டாமைத்தனத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்படவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையேல் தமிழ் மக்களை நாம் காப்பாற்ற முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படாவிட்டால் அது இல்லாமல் போகும்.

வெறும் உதட்டளவிலேயே தமிழ் மக்களின் விடுதலை தொடர்பில் தற்போது பேசப்படுகிறது. உளப்பூர்வமான விடுதலையை தொடர்பாக பேசவில்லை என்பதை இந்த சந்தர்ப்பத்தில் நான் சுட்டிக்காட்ட வேண்டும். மக்களை ஏமாற்றக் கூடாது. தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் அண்ணன் தம்பி என்று நாட்டாமைத்தனம் வேண்டாம். எங்கள் மக்கள் தற்போது இக்கட்டான சூழலில் இருக்கின்றார்கள்

அவன் பிழை இவன் பிழை என நாம் கூறுகின்றோம். மக்களின் கஷ்டங்களை போக்குகின்ற இனத்தை விடுதலை செய்கின்ற விடயங்களில் நாங்கள் ஒற்றுமையாக இருக்கின்றோமா? ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலே அனுபவம் மிக்க தலைவர்கள் இருக்கின்றார்கள். அவர்களது ஆலோசனைகளை பெறுவதற்கான வாய்ப்பை உண்டு பண்ண வேண்டும். தற்போது வந்தவர்கள் தமிழரசு கட்சியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும்

இல்லாதொழிக்கின்ற செயலை செய்கின்றனர். இதனை ஒரு காலம் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

22 இல் இருந்து தற்போது 10 ஆக நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மாறி உள்ளது.

ரணில் விக்ரமசிங்க பற்றி உங்களுக்கு தெரியும். விடுதலைப் புலிகளை உடைத்தவர். அவருடைய ராஜதந்திரத்தை பற்றி சொல்கின்ற போது நரித் தந்திரம் என்பார்கள். அந்த தந்திரமே விடுதலைப்புலிகளையும் பிரித்தாண்டது. அந்த தந்திரத்தையே நாங்கள் அண்மையில் பேசுகின்ற போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையாண்டார். கூட்டமைப்பில் சிலர் தனக்கு வாக்களித்தார்கள் என கூறினர். சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரன் ஆகியோர் அதனை எதிர்த்து கதைத்தார்கள்.

வெளியில் வந்த போது ரணில் இவ்வாறு கூறியதாக ஒரு செய்தி வெளியானது. ரணிலின் கருத்தை வலுப்படுத்துகின்ற வகையிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்துகின்ற வகையிலும் ஒரு சிலரின் கருத்துக்கள் இருந்தது.

அதனால் யாருக்கு வெற்றி என்று சொன்னால் அது ரணிலுக்கே வெற்றி. நாகரீகம் கருதி நான் யாருடைய பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. மாநாடு என்பதால் நான் பெயரைச் சொல்லி விரும்பவில்லை. இது யாருக்கு நட்டம்.

ஜனாதிபதி சரியாக காயை நகர்த்தி இருக்கின்றார். அதனை நாங்கள் தூக்கிப் பிடித்துக் கொண்டு எங்களுடைய மக்கள் மத்தியில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றோம்.

ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாக இருந்தது. இருக்கின்றது. இரண்டு மூன்று கறுப்பாடுகளுடைய செயல்பாடுகளால் மக்களினுடைய மனதில் இருந்து அது குறைந்து வருகின்றது. இதனை அனுமதிக்க முடியாது. பலமாக 22 ஆசனங்களை கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிலிருந்து வீழ்ச்சியடைந்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் இணைய வேண்டும். விடுதலைப்புலிகள் உட்பட ஆயுதப் போராட்ட இயக்கங்கள் ஜனநாயக நீரோட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலே இணைந்து செயல்படுகின்ற சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டும் என்றார்.

இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் கனிமொழியுடன் சந்திப்பு

இந்தியாவிற்கான இலங்கை  தூதுவர் மிலிந்த மொரகொட, தூத்துக்குடி தொகுதி  மக்களவை பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியை புது தில்லியில் வைத்து சந்தித்துள்ளதாக, புது டில்லியிலுள்ள, இந்தியாவுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மாநிலத்துடனான ஈடுபாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், ஜூன் மாத தொடக்கத்தில் அதன் முதலமைச்சருடனான சந்திப்பின் தொடர்ச்சியாகவும், கடந்த  வியாழக்கிழமை (04) இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது,

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமையை நிர்வகிப்பதற்கு உதவுவதற்காக தமிழ் நாடு மக்கள் வழங்கி வரும் மனிதாபிமான உதவிகளுக்கு மிலிந்த மொரகொட, தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு இடையிலான மிக நெருக்கமான இன, மத, கலாச்சார தொடர்புகள் குறித்து கருத்துக்களை  இருவரும் பரிமாறிக்கொண்டதுடன், அவற்றை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடினர்.

Posted in Uncategorized

இராணுவத்தினரின் தன்னிச்சையான நடவடிக்கை-உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல்

இலங்கையின் காவல்துறை மற்றும் இராணுவத்தினரின் தன்னிச்சையான நடவடிக்கைகளை ஆட்சேபித்து மனித உரிமை ஆரவலர்கள் இருவர், உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சத்குணநாதன் மற்றும் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் முன்னாள் ஆணையாளர் மிராக் ரஹீம் ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

அரசியலமைப்பு சட்டத்தின் ஆட்சி மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் விதிமுறைகளுக்கு மாறாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்களை தற்காலிகமாக இரகசிய காவலில் வைத்திருப்பதற்கான நிர்வாக நடைமுறையின் சட்டபூர்வ தன்மையை மனுதார்கள் சவாலுக்கு உட்படுத்தியுள்ளார்கள்.

பொலிஸ்மா அதிபர், நீதி அமைச்சர், பொது பாதுகாப்பு அமைச்சர், இராணுவத் தளபதி, வான் படைத் தளபதி, கடற்படைத் தளபதி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். .

தமது அடையாளத்தை காட்டாத, காவல்துறையினருக்கு சொந்தமானது என அடையாளம் காணப்படாத வாகனங்களில் போராட்டக்காரர்கள் அழைத்துச் செல்லப்படுவதுடன் சில நேரங்களில் நீதிவான் ஒருவர் முன் முன்னிலைப்படுத்தப்படாமல் பல மணி நேரம் அடையாளம் தெரியாத இடங்களில் போராட்டக்காரர்கள் தடுத்து வைக்கப்படுவதாகவும் மனுதாரர்கள் கூறியுள்ளனர்.

ஜனாதிபதியை சந்திக்கிறது ஜே.வி.பி!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கு ஜே.வி.பி தீர்மானித்துள்ளது.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

அந்த வகையில் பல்வேறு கட்சிகள் கடந்த வாரங்களில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளன.

இந்நிலையில் தாமும் நாளைய தினத்தில் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் சர்வகட்சி தமது கட்சி எவ்வித ஆதரவையும் வழங்காது என அந்தக் கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

ஆனால் ஜனாதிபதியிடம் இருந்து கிடைத்த அழைப்பின் பிரகாரம் நாளை பிற்பகல் ஜனாதிபதியுடன் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்தவர்களின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டனர்!

காலிமுகத்திடல் போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த சம்பவத்துடன் தொடர்புடைய பலரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

அதனுடன் தெதாடர்புடைய சந்தேக நபர்கள் பலரின் படங்களை பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் 0718 591559, 0718 085585, 0112 2391358 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கோ அல்லது 1997 என்ற இலக்கத்திற்கோ தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.